அதிமுக நன்றி கூற வேண்டியது திமுகவிற்கே!
அதிமுக வெற்றி பெற்றதற்கு
“வைகோவிற்கு நன்றி கூற வேண்டும்”, “விசயகாந்திற்கு நன்றி கூற வேண்டும்”,
“இராமதாசிற்கு நன்றி கூற வேண்டும்” என்றெல்லாம் வஞ்சப்புகழ்ச்சியாகத் திமுக
அன்பர்கள் கூறி வருகின்றனர். உண்மையில், ‘அதிமுகவின் ஆ அணி’ என மக்கள்
நலக்கூட்டணியைக் கூறிவந்த திமுகதான் அதிமுக துணை அணியாகச் செயல்பட்டு அதனை
வெற்றி பெறச் செய்துள்ளது என்பது வெள்ளிடை மலை.
அதிமுக, திமுக நேரடியாக மோதிய தொகுதிகள்
172இல் அதிமுக 83 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றுள்ளது. திமுக அதைவிட 6
தொகுதிகள் கூடுதலாக மொத்தம் 89 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுகவா, அதிமுகவா என வந்தால் மக்கள் திமுகவையே நாடுகின்றனர்
என்பது தெரிகின்றது. ஆனால், காங்கிரசும் திமுக கூட்டணிக் கட்சிகளும்
போட்டியிட்ட 60 தொகுதிகளில் 51 இடங்களை அதிமுக வென்றுள்ளது. பொதுவாகத் தமிழ்நாட்டில் திமுக அல்லது அதிமுக என்பதே மக்களின் நாட்டமாக உள்ளது. எனவேதான் இரு கட்சியணிகளிலும் தோழமைக் கட்சிகள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதே நேரம், பேராயமாகிய காங்கிரசு பெரிய கட்சியாக இந்திய அளவில் உள்ளது. ஆனால், 1967 இல் அதனை விரட்டிய மக்கள் மீண்டும் அதற்கு அரியணை தர விரும்பவில்லை. அதிமுகவா காங்கிரசா என்று வரும்பொழுது காங்.கிற்கு வாக்களித்தால் திமுக – காங். கூட்டணி அரசு அமைக்க வேண்டி யிருக்கும். எனவே, பொதுவான மக்களைப்போலவே திமுகவினரும் காங். வெற்றி பெறக்கூடாது என உறுதியாக இருந்துள்ளனர்.
இந்த இடங்களில் மக்கள்நலக்கூட்டணிக்கோ பாமகவிற்கோ வாக்களித்தால்
அப்பொழுதும் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு ஏற்படும். அத்துடன், திமுக
அல்லது அதிமுக என்ற தமிழக அரசியல் சூழல் மாறும். பிற கட்சிகளை
வளர்த்துவிட்டதாக அமையும். எனவே, பிற கட்சிகளைவிட அதிமுகவே வெற்றி பெறட்டும் எனத் திமுகவினர் விரும்பியுள்ளனர்.
இதன் மூலம் அடுத்த தேர்தலில் காங்.கைச்சுமக்கும் வேலை திமுகவிற்கு
இல்லாமல் போகும்வாய்ப்பை உருவாக்குதவாக அமையும் எனவும்
எதிர்பார்த்துள்ளனர்.
பொதுவாகத் தேர்தல் போக்கைப் பார்த்த
அரசியல் நோக்கர்கள், கடைசி நேரத்தில் திமுகவும் அதிமுகவும்
மறைமுகக்கூட்டணியை வைத்துக் கொள்ளும் என்றும் கருதினர். திமுக தலைமைக்குத்
தெரியாமல் திமுகவினர் இப்படிச்செயல்பட்டனர் எனில் அவர்கள் தங்கள் தலைமைக்குக் கொடுக்கும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்தத் தொகுதிகளில் காங்.கிற்குச்
செல்வாக்கு இல்லை எனவேதான் தோற்றது எனக் கூறுதற்கில்லை. ஏனெனில், காங்.கில்
உள்ள தனிப்பட்ட சிலரின் செல்வாக்கு தவிர, நாடு முழுவதும் பரவலாகக் காங்.கிற்குச் செல்வாக்கு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே! திமுக வெற்றி பெற்ற இடங்களில் காங்.கின் வாக்குகளால் வெற்றி பெற்றது எனக் கூற இயலாது. திமுக போட்டியிட்ட தொகுதிகளில் வாக்களித்த திமுகவினர், காங்.கிற்கு வாக்களிக்காததாலேயே காங். மண்ணைக் கௌவியது.
பொது இடங்களில் திருடன், தான் பிடிபடாமல் இருக்க, வேறு யாரையாவது திருடனாகக் காட்டித் திசை திருப்புவது வழக்கம்.
அதுபோல், அதிமுகவின் துணை அணியாகச் செயல்பட்டு வாக்களித்த திமுக,
வைகோவையும் அவர் அமைத்த ம.ந.கூட்டணியையும் அதிமுகவின் ‘ஆ’ அணி எனக் கூறி்
அதற்கு வாக்களிப்பதற்கு அதிமுவிற்கே நேரடியாக வாக்களிக்கலாம் அல்லது
அதிமுக வேண்டா என்றால் திமுகவிற்கு வாக்களிக்கலாம் என்பதுபோன்ற எண்ணத்தை
விதைத்துள்ளது. யார் முதுகில் பயணம் செய்தாலும் கொலைகாரக் கட்சியை
மக்கள் குப்புறவே தள்ளிவிடுவர் என்பதை காங்.கட்சி இதன்மூலம் புரிந்து
கொண்டிருக்கும்.
எவ்வாறாயினும் அதிமுகவின் துணையணியாகச் செயல்பட்டுக் காங்.கைத் தோற்கடித்த திமுகவினருக்குப் பாராட்டுகள்!
தன் வெற்றிக்காக அதிமுக , திமுகவிற்கு நன்றி கூறுகிறதோ இல்லையோ,
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல். (திருவள்ளுவர், திருக்குறள் 830)
எனச் செயல்பட்ட திமுகவினருக்குத் தமிழ் உணர்வாளர்கள் நன்றி கூறுகின்றனர்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment