Thursday, June 2, 2016

தமிழ்த்தாய்க்காகக் கதவைத் தட்டும் நீதிமன்றம்! - நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்






தமிழ்த்தாய்க்காகக் கதவைத் தட்டும் நீதிமன்றம்!

 “'மொழிக்கு எந்தப் பயனும் இல்லாமல், கோடிக்கணக்கில் செலவு செய்து, உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி என்னபயன்? தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாமல், செம்மொழி எனக் கூறுவதால் என்ன பயன்?” என, உயர் நீதிமன்ற நீதிபதி இராமசுப்பிரமணியம்,  நீதிபதி கிருபாகரன் ஆகியோர் தொடுத்துள்ள வினா, தொடர்புடையவர்கள் கண்களைத் திறக்கும் என எதிர்பார்ப்போம்.

 இந்தக் கேள்வி எழுப்பப்பட்ட சூழலை முதலில் பார்ப்போம். சுப்பிரமணிய பாரதியார் சிந்தனை மன்றம் சார்பில் செயலர் இரா.இலட்சுமி நாராயணன், தமிழ்மொழி தெரியாத இந்தியர்கள் தொலைநிலைக்கல்வி மூலம் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு 16.3.2013 அன்று  மடல் அனுப்பியுள்ளார். அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துக்குத் தமிழக அரசு உத்தரவிட்டது.  இதனை ஆராய்ந்து,  தொலைநிலைக்கல்வி மூலம் இந்தியா முழுவதும் தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்க 37,36,000 ரூபாய் செலவாகும் என்று 19.5.2014 அன்று தமிழக அரசுக்குத் தமிழ் பல்கலைக்கழகப் பதிவாளர் கருத்துரு அனுப்பினார். இதன்படி, தேவையான நிதியை வழங்க, தமிழ் வளர்ச்சித்துறை செயலாளருக்கு, இயக்குநர் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.

 ஆனால், இதுவரை நிதிஒதுக்காததால், மதுரை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.  கடந்த திசம்பர் 2015 இலேயே  தமிழக அரசிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.

 சரியான மறுமொழி இன்மையால், இப்பொழுது உயர்நீதிபதிகள் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர். (இதற்கிடையில் நீதிபதி இ்ராமசுப்பிரமணியம் தெலுங்கானா  ஆந்திரப்பிரசேத உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு ஏப்பிரல் 27, 2016 இல் பொறுப்பேற்றுக்கொண்டார்.  ஆனால் அதற்கு  முன்னதாகவே சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்கினை மாற்றிக் கொண்டு வந்துவிட்டார்கள். அக்கோப்பில் தெரிவித்த வேதனைதான் இப்பொழுது வெளியாகிறது என்கிறார்கள்.)


  வழக்கில்   தொடக்கநிலைக்கு 50 உரூபாய்   முதல்  உயர்நிலைக்கு 200 உரூபாய் வரையான குறைந்த அடையாளக் கட்டணம் பெற்று இந்தியை அஞ்சல்வழியாகக் கற்பிப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 யாருடைய பணத்தில் இவ்வாறு மத்திய அரசு இந்தியைப் பரப்புகிறது? தமிழ் முதலான அனைத்து   தேசிய மொழி  பேசும் மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் செய்கிறது. அப்படியானால், மத்திய அரசு அஞ்சல்வழிக்கான தமிழ் இயக்குநரகத்தை அமைக்க வேண்டும் என வற்புறுத்த வேண்டும். 

  தமிழக அரசிற்கு இதில் பங்கில்லையா எனக் கேட்கலாம்?  தமிழக அரசு தனக்குள்ள பெரும்பங்கைத் தட்டிக் கழிக்க முடியாது. பகுதிதோறும்  தமிழ்வழிக்கல்விக்கான கட்டணமில்லா இணையக்கூடங்களை நிறுவ வேண்டும். என்றாலும் அச்சிட்ட புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குக் கணிணித்திரை வழி படிப்பது என்பது  ஏற்றதாக அமையாது. எனவே, அரசு அஞ்சல்வழித் தமிழ்கற்பிப்புத் துறை ஒன்றை உருவாக்க வேண்டும்.
  
 மத்திய இந்தி இயக்கம் மூலம் என்னென்ன வழிகளில் எல்லாம்  இந்தி கற்பிக்கப்படுகிறதோ, இந்திபடிப்பது ஊக்கப்படுத்தப்படுகிறதோ அந்த வகைகளில் தமிழையும் பரப்ப வேண்டும்.

  
 இந்தியையும் சமற்கிருதத்தையும் பரப்ப மத்திய அரசு பெருந்தொகை செலவிடுவதுபோல்,  இந்த நாடு முழுமையும் ஒரு காலத்தில் இருந்த தமிழைப் பரப்புவும் மத்திய அரசு திட்டமிட்டுச் செயற்படுத்த  வேண்டும். 
  
 அதெல்லாம் சரி, இதெல்லாம் யாருக்காக? தமிழ்நாட்டில் தமிழுக்கு இடமில்லாச் சூழல் பெருகிக் கொண்டே போகிறது. திமுக அரசில் தமிழ்வழிக்கல்விக்கு  தொடங்கிய  மூடுவிழா அதிமுக அரசில் விரைந்து வளர்கிறது. தமிழ்படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற பெயரில் திமுக அரசு பிறப்பித்த ஆணையும் கண்துடைப்பே!

 தமிழ்நாட்டில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக ஆக்கினால்தானே தமிழ் படிக்க முன்வருவர். தமிழ்நாட்டில் வேலை பார்ப்போர் யாராயினும் தமிழ்த் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பதை நடைமுறைக்குக்கொண்டு வந்தால்தானே மாநில அரசு,  மத்திய அரசு, பன்னாட்டு நிறுவனங்கள் என்ற வேறுபாடின்றி இங்கே வேலை பார்க்கும் அனைவரும் தமிழைப் படிப்பார்கள். தமிழ்நாட்டில் தமிழுக்கே தேவையில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கிவிட்டு அஞ்சல் வழியில் தமிழ் சொல்லிக் கொடுத்து என்ன பயன்?

. எனவே, தமிழ்நாட்டில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மட்டுமே கற்பிக்கப்படவும், தமிழ்நாட்டில் பணியாற்றும் அனைவரும் தமிழ்த்தேர்வில் வெற்றிபெற்றிருக்க  வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தவும் அஞ்சல்வழித்தமிழ் இயக்குநரகத்தை உருவாக்கவும்  நடவடிக்கை எடுக்க வேண்டும்?

நீதிபதிகள் ஆதங்கம் இதற்கு வழி வகுக்குமா? தமிழ்த்தாய்க்காகக் கதவுகள் திறக்கப்படுமா?
  
 100  கோடி  உரூபாய் மதிப்பில் தமிழ்த்தாய்க்குச் சிலை எழுப்பத் திட்டமிடும் முதல்வருக்கு அதைவிடக் குறைவான செலவில் தமிழன்னையை வீடுதோறும்  வரவேற்க வழி வகுப்பது எளிதல்லவா?

இலக்குவனார் திருவள்ளுவன், - தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்

நக்கீரன் : தொகுதி 29, எண் 16 : நாள் சூன் 02 - சூன் 04, 2016
பக்கம் 35 - 36
+++


No comments:

Post a Comment

Followers

Blog Archive