ஏழாண்டில் நூற்றாண்டை எட்டஉள்ள
கலைஞருக்குப் பிறந்தநாள் பெருமங்கல வாழ்த்து!
வைகாசி 21, 1955 / சூன் 03, 1924
அன்று தட்சிணாமூர்த்தியாகப் பிறந்து கருணாநிதியாக மலர்ந்து கலைஞராக
உயர்ந்துள்ள முதுபெரும் தலைவருக்கு அதே வைகாசி 21 / சூன் 03 இல் 93 ஆம்
பிறந்தநாள் பெருமங்கலம் வந்துள்ளது. தம் உரைகளாலும் எழுத்துகளாலும் படைப்புகளாலும் கோடிக்கணக்கான மக்களிடையே தமிழ் உணர்வை விதைத்து உரமூட்டியவர் என்ற
நன்றிக்கடனால் மக்கள் இன்றும் அவருக்கு ஆதரவு தருகின்றனர். ஆளும்
கட்சியாளராக ஆகவில்லை என்ற வருத்தமும் வலிமையான எதிர்க்கட்சியாளரான
மகிழ்ச்சியும் ஆளுங்கட்சியாளராவதற்கான எதிர்பார்ப்பும் கொண்டுள்ள
அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
இன்றைக்கு ஒரு சாரார் அவரை வாழ்த்தும்பொழுது மறுசாரார் வைதுகொண்டிருப்பர்.
அவர்களில் பெரும்பான்மையர் அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்து ஏமாற்றம்
அடைந்தவர்களே! வாழ்த்திப்பேசுவோரிடம் அவரால் உயர்ந்தோம் என்ற தன்னலம்
இருக்கலாம். ஆனால், ஏசிப் பேசுவோரிடையே தன்னலமின்றித் தமிழ்நலமே மேலோங்கியிருக்கும்.
தமிழ்ப்பற்றை ஊட்டியவர் தமிழ்க்கல்வியைத் துரத்திவிட்டாரே! என்ற வருத்தம்
இருக்கும். ‘இந்திய அமைதிப்படை’ என்ற பெயரில் ஈழம் சென்று கொல்லும்படையாகச்
செயல்பட்ட இந்தியப் படையை வரவேற்காத் துணிவையும் மானத்தமிழன் என்ற
உணர்வையும் வெளிப்படுத்தியவர், இரு நூறாயிரம் ஈழத்தமிழர்களைக் கொன்ற
இலங்கையுடன் நல்லிணக்கம் கொண்டுள்ளாரே! கொலைகாரக்கூட்டாளிக் காங்கிரசைத்
தோளில் சுமக்கிறாரே! கொலைகாரச் சிங்கள அதிபரைத் தம் மகளைக் கொண்டும் பிற
தலைவர்களைக் கொண்டும் சிறப்பித்தாரே! ஈழத்தமிழர்கள் என்று சொல்ல அஞ்சி இலங்கைத் தமிழர்கள் என்றவர், சிங்களத் தமிழ்க்குலத்தினர் என வரலாற்றைச் சிதைத்து நச்சுவிதையைப் பயிரிடுகிறாரே! மானம் தொலைத்த மாந்தனாக மாறிவிட்டாரே! என்ற வேதனை இருக்கும்!
இந்தியத் தமிழர் என்று சொல்லும்பொழுதே தமிழரின் தொன்மை வரலாறு, பண்பாட்டுச்சிறப்பு, நாகரிகமேன்மை முதலிய மறைக்கப் படுகின்றனவே என வேதனையில் இருக்கும் தமிழர்கள், சிங்களத் தமிழ்க்குலத்தினர் என்று கூறிய பின்னர் வாழ்த்த எண்ணுவரா?
சீறிப்பாய எண்ணுவரா? அதுவும் பேரவல நினைவேந்தல் முதலாமாண்டு முடிவுற்ற
உடன் சிங்களனே கூறத்துணியாததைக் கூறினார் என்றால், இதுதானே அவரது இன்றைய
முகம் என்று எள்ளிநகையாடத்தானே செய்வர்! நீங்களே எண்ணிப் பாருங்கள்.
இதற்குப் பிறகும் உங்களை வாழ்த்துகிறோம் என்றால், நமக்கு அச்சாணியாக இருந்த நம் வீட்டு முதியவர் ஏதும் தவறு செய்தால் வெறுக்க முடியாமல் போவது போன்று அமைதி காப்பதால்தான்!
எனினும் இனிவரும் வாணாளெல்லாம் தமிழ்நல வாணாளாக அமையட்டும்!
இனியாற்றும் உரைகள் யாவும் தமிழ்உரம் ஊட்டுவதாக மாற்றட்டும்!
இனி எழுதும் எழுத்துகள் யாவும் தமிழைப்புகழின் உச்சியில் ஏற்றுவதாகத்திகழட்டும்!
இனி செய்யும் பணிகள் யாவும் ஈழத்தமிழர்களைத் தங்கள் தாயமான தமிழ் ஈழக் குடிமக்களாக வாழ வழி செய்யட்டும்!
தமிழக அரசுடன் ஒத்துழைத்தும் வழிகாட்டியும் இடித்துரைத்தும் தமிழர்களின் உரிமைகளை மீட்டுத்தர நலமாக வாழ்வீர்களாக!
கடந்தவை கடந்தனவாக இருக்கட்டும்!
இனி வரும் நாளெல்லாம் தமிழ்க்கலைஞரையே எங்கள் முன் நிறுத்தட்டும்!
ஏழாண்டில் நூற்றாண்டை எட்டி, எழுச்சிமிகு தமிழகத்தின் ஏற்றமிகு தலைவராக வாழ வாழ்த்துகி்றோம்!
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று(திருவள்ளுவர், திருக்குறள் 236).
என்பதற்கேற்பத் தமிழுரிமைச் செயல்களிலும் தமிழ்நலப் பணிகளிலும் ஈடுபட்டு ஈடிலாப்புகழுடன் நீடுவாழ்க! நீடூழிவாழ்க!
No comments:
Post a Comment