அகரமுதல 137, வைகாசி 23, 2047 /சூன் 05, 2016
முனைவர் கிரண்பேடி மத்திய அரசின் முகவரே ! முதல்வரல்லர்!
புதுச்சேரியின் செயலாட்சியராக – துணை நிலை ஆளுநராகப்- பொறுப்பேற்றுள்ள முனைவர் கிரண்(பேடி)க்கு நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பல்வேறு நிலைகளில் தன் கனவுகளை நனவாக்கி வருபவர், புதுச்சேரியிலும் தன்
கனவுகளை நனவாக்கி மக்கள் பணியாற்றுவார் என எதிர்பார்க்கிறோம்.
பொதுவாக ஆளுநர் என்பது பொம்மை
அதிகாரமுடைய பதவி என்பர். மத்திய அரசின் சார்பாகச் செயல்பட்டாலும், மத்திய
அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையே இணக்கமான போக்கு இருக்கும்பொழுது மாநில
அரசிற்கு மாறான போககு இருப்பின் மாநில அரசு எண்ணினால் மாற்றப்படுபவரே!
என்றாலும் புதுச்சேரி முதலான ஒன்றியப் பகுதிகளில், சட்டமன்ற அமைப்பு பொம்மை
அமைப்பாக உள்ளதால், துணை நிலை ஆளுநர்களுக்கு மிகுதியான அதிகாரம் வந்து
விடுகிறது. எவ்வாறிருப்பினும் அவர் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குரியவரே!
புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
பொறுப்பேற்ற முனைவர் கிரண்(பேடி) அதிரடி நடடிவக்கைகளில் ஈடுபட்டும் “அப்படி
நடந்தால் இப்படிச்செய்வேன், இப்படிச் செய்தால் அப்படி நடந்து கொள்வேன்”
என்பதுபோல் பேசியும் ஊடக வெளிச்சம் தன்மீது படுவதுபோல் செயல்படுகிறார். இது சரியான செயல்பாடல்ல.
ஆளுநர்கள் மக்களால்
தேர்ந்தெடுக்கப்படாமல் நியமிக்கப்டுவதற்குக் கூறப்படும் காரணங்களில்
ஒன்று, மாநிலம் தழுவித் தேர்ந்தெடுக்கப்படும் ஆளுநர், ஒரு தொகுதியில்
இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல்வரை விட மேம்பட்டவராக எண்ணுவார்
என்பதுதான். அவ்வாறிருக்க, மக்களாட்சி முறையில் அமைக்கப்பட்ட சட்ட மன்ற
அமைப்பும் அமைச்சரவையும் இருக்கும்பொழுது இவ்வாறெல்லாம் பொதுவிடங்களில் பேசுவது முறையல்ல என்பதைச் சுட்டிக்காட்டவிரும்புகிறோம்.
தன்காலில் விழுந்தபெண்மணியிடம் அவ்வாறு
விழ வேண்டா என அறிவுரை கூறியது பாராட்டிற்குரியதுதான். மேலும், தானும் அவர்
காலில் விழுந்து, தன் எளிமையையும் காட்டியுள்ளார். எனினும் புதுதில்லிபோல்
புதுச்சேரி மாறாமல் இருக்க வேண்டும்.
இவர் வாய்ச்சொல் வீரரல்லர். அரு வினைகள்
பல ஆற்றி, இரமோன் மகசேசே விருது பெற்றும், விருப்ப ஓய்வுக்குப் பின்பு
இந்திய கையூட்டு ஒழிப்பு இயக்கத்தில் முதன்மைப் பங்கு வகித்தும் தொண்டுகள்
பல ஆற்றியவர். எனினும் பொறுப்பான பதவியில் அமர்ந்தபின்னர், பேச்சிற்கு இடமில்லையல்லவா?
சட்டம் – ஒழுங்கு, ஊழல் ஒழிப்பு முதலானவைபற்றி அவர் தன் செயல் மூலம்தான் உணர்த்தவேண்டும். அரசியல்வாதிபோல் அறிக்கை விடுவதோ பேசுவதோ கூடாது. அவர்
தில்லித் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் என்பதால் மதிப்பு
குறைந்தவரல்லர். எனினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையினரை
மதிப்பதாக இருப்பின், நியமனப் பதவியில் உள்ள அவர், அமைதி காக்க வேண்டும்.
முதல்வரிடம் அவர் தன் கருத்தைத் தெரிவிக்கலாம். “சட்டம் – ஒழுங்கு
காக்கவும் ஊழலை ஒழிக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு
தருவேன்” எனலாம். அவ்வாறில்லாத பொழுது அவரிடம் தனிப்பட்ட அலுவல் முறையில்
எச்சரிக்கலாம் ஆனால், அரசியல்வாதிபோல் முதல்வருக்கு மேம்பட்பட்டவராக வெளிப்படுத்தும் வண்ணம் பேசுவது தவறு.
புதுச்சேரிக்கு முழு மாநிலத் தகுதி
தருவது, தமிழ்வளர்ச்சி இயக்ககம் உருவாக்கப்படவேண்டும் என்பதுபோன்ற
தமிழன்பர்களின் முறைப்பாடுகளைத் தீர்த்தல், நீண்ட கால
மாநிலச்சிக்கல்களைத் தீர்த்தல், மாநில உரிமைகளைக் காத்தல் போன்ற
நேர்வுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்துடன்
இணைந்தும் வழிகாட்டியும் செயல்பட்டால் புதுச்சேரியும் பொலிவு பெறும்.
அவருக்கும் நிலைத்த புகழ் கிட்டும்.
அரசியலறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவராதலின் இயல்பாகவே அரசியல் ஈடுபாடு இருக்கும். என்றாலும்,
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும் (திருவள்ளுவர், திருக்குறள் 663)
என்பதே தமிழ்நெறி. ஆதலின் புதுச்சேரி செயலாட்சியராகிய துணைநிலை
ஆளுநர் முனைவர் கிரண்(பேடி), தான் செய்யக்கருதியவற்றை வெளிப்படுத்தாமல்
அமைதியாகச் செய்து முடித்து புதுச்சேரி மாநிலத்தை மேம்படுத்திப்
புகழ்பெறுவாராக!
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment