உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்!
(1)
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். (திருவள்ளுவர், திருக்குறள் 644)
நாம் உணவுதரும் நிலையத்தை உணவகம்
என்கிறோம். தங்குமிடத்தை விடுதி என்கிறோம். உணவுவசதியுடன் தங்குமிடத்தை
உண்டிஉறையுளகம் (Boarding and Lodging) என்று முன்பு குறித்தாலும்
இப்பொழுது உணவு விடுதி என்கிறோம். என்றாலும் விடுதி (Lodge) என்ற சொல்லை
மாணவர்கள் அல்லது பணியாற்றுநர் தங்குமிடமாக(Hostel) நாம் கையாள்கிறோம்.
தங்குமிடம் என்ற சொல்லில் கையாண்டால், வேறுவகை தொழில் நடக்குமிடமாகக்
கருதிப் புறக்கணிக்கி்றோம். ஆங்கிலத்தில் ‘ஓட்டல்’(hotel) என்பது உணவிடம்
(Boarding House), தங்குமிடம் (Lodging House) என்பனவற்றின் பொதுச்
சொல்லாகவே கையாளப்படுகிறது. ஆனால், தமிழில் ‘ஓட்டல்'(hotel) என்றால்
உணவிடம் என்றே கருதுவதால், தங்குமிடத்தையும் குறிக்கையில்
தடுமாற்றத்திற்கு உள்ளாகின்றனர்; எனவே, தமிழிலும் ‘ஓட்டல்’ என்றே
குறிக்கின்றனர். உறை என்றால் தங்குதல் என்னும் பொருளும் உணவு என்னும்
பொருளுமுண்டு. எனவே, தங்குமிடமும் உணவு வழங்கலும் உள்ள இடத்தை உறைவகம்
என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். தங்கும்ஏந்து(வசதி) மட்டும் உள்ள
இடத்தை உறையுளகம் எனலாம். தமிழக அரசின் உறையுளகத்தை ஓட்டல் என்றே
குறிக்கின்றனர். நான் முன்பு (தமிழ்வளர்ச்சித்துறையில் இருந்தபொழுது)
தமிழ்நாடு உறைவகம் எனக் குறிக்க வேண்டும் என்று எழுதியிருந்தேன்.
துறையளவில் ஏற்றுக்கொண்டிருந்தாலும் அப்போதைய உரிய அமைச்சர் இராம.வீ.
ஓட்டல் என்றே சொல்லே இருக்கட்டும் என்றதால் மாற்றவில்லை. தமிழ்நாட்டில்
தமிழ்நாட்டரசின் விடுதியின் பெயர் ஆங்கிலத்தில் குறிக்கப்படும் அவலம்
இன்றளவில் தொடருகிறது.
தலைப்பில் உறைவகம் எனக் குறித்துள்ளதால் அதற்கான விளக்கத்தை முதலில் தெரிவிக்க வேண்டி வந்தது. இனித் தலைப்பிற்குள் நுழைவோம்!
பணி, படிப்பு போன்றவற்றின் காரணமாகக்
குடும்பத்தினரை விட்டுத் தனியே தங்கியிருப்போர் அன்றாடம் உணவகத்தை நம்பியே
உள்ளனர். என்றாலும் உணவகம் செல்வது என்பது இன்றைக்குப் பொழுதுபோக்காக
மாறிப் பொதுமக்களும் வாரம் ஒரு முறையேனும் உணவகம் செல்வதை வழக்கமாகக்
கொண்டுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் தமிழர்க்கே உரிய உணவு வகைகளைக்கூடத் தமிழில் குறிப்பதில்லை. உணவு நிரலில் தமிழ்இருப்பது ஒவ்வாமை(allergy) எனக் கருதிவிட்டனர் போலும். அது முழுக்க முழுக்க ஆங்கிலத்தில்தான் உள்ளது. ஒரு வேளை ஆங்கில எழுத்துகளில் தமிழ் உணவின் பெயர் குறிக்கப்பட்டாலும் தோசா, வடா என்பது போன்று சிதைவு வடிவில்தான் குறிக்கப்பட்டிருக்கும். உணவுச்சுவையுடன் தமிழ்ச்சுவையும் வழங்க வேண்டியவர்கள், தமிழில்லாத இடமாக உணவகத்தை ஆக்குகின்றனர்.
தண்ணீர் என்று கேட்டாலும் சோறு என்று கேட்டாலும் பரிமாறுநருக்குத்
தெரிவதில்லை. அவ்வாறு தமிழில் கேட்கும்பொழுது எந்த மொழியில்கேட்கின்றீர்கள்
என்று கேட்பவர்களும் உண்டு. தமிழில் சொன்னால் புரியாது என்று
சொல்பவர்களும் உள்ளனர். ஆங்கிலத்திலும் இந்தியிலும் உணவுப்பெயர்களைக்
குறிப்பிட்டு அச்சொற்களை மக்கள் நாவில் நடமாடச் செய்பவர்களால்,
தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தினால், அவற்றையும் மக்கள் பயன்படுத்துவார்கள்
என்ற எண்ணம் ஏன் வரவில்லை? எனத் தெரியவில்லை.
தங்கல்மனைகளிலும் கூடங்கள், அறைகள் முதலானவற்றிற்குத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவதில்லை. அரசன், அரசி, இளவரசன், இளவரசி, பூவின் பெயர்கள், கூடம், விருந்தகம், குடிப்பகம், மலரகம் என்று தமிழிலேயே சூட்டலாம் அல்லவா? தமிழில் குறிப்பிட்டால் அயல்மொழியாளருக்குப் புரியாது எனக் கவலைப்படுபவர்கள், அயல்மொழிகளில் சூட்டினால் தமிழ்மக்களுக்குப் புரியாதே என ஏன் கவலைப்டுவதில்லை?
நான் முன்பு (1998) கல்கத்தா சென்றிருந்தபொழுது பியர்லசு
உணவகம் சென்றிருந்தேன். அங்கே அவர்கள் காத்திருப்பு நேரத்தைப் பயனுள்ளதாக
ஆக்கும் வகையில் மொழிப்பற்றுடன் வினாத்தாள் ஒன்றைக் கொடுக்கின்றனர். அதில்
உணவகம், உறைவகம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் வங்காளச் சொற்களைக்
குறிப்பிட்டு, அவற்றின் பொருள்களைக்கேட்டும், ஆங்கிலச்சொற்களைக்
குறிப்பிட்டு அவற்றின் வங்காளச் சொற்களைக்கேட்டும் வினாக்கள்
அமைத்துள்ளனர். உண்ணவருபவர்களும் ஆர்வமுடன் தங்களுக்குத் தெரிந்த வங்காளச்
சொற்களைத் தெரிவிக்கும் வகையில் விடை எழுதித் தருகின்றனர். இதன்மூலம் புதிய
வங்காளச் சொற்களையும் அறிந்து மகிழ்கின்றனர். இம்முறையால் கூடங்களுக்கும்
மாடங்களுக்கும் சூட்டப்பட்டுள்ள வங்காளச் சொற்களைப் புரிந்துகொள்ளும்
வாய்ப்பும் பிறருக்கு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் அவ்வாறு பின்பற்றலாமே!
தமிழ்நாட்டு உணவகம், உறைவகங்களில்
ஓவியங்களைக்கண்களுக்கு விருந்தாக மாட்டி வைத்துள்ளனர். தமிழ்
இலக்கியக்காட்சிகளையும் தமிழகச் சிறப்பிடப் படங்களையும் பார்வைக்கு
வைக்கலாமே! இது குறித்தும் சுற்றுலாத்துறைக்கு முன்னர் நான் மடல்
விடுத்திருந்தேன். சில அதிகாரிகள் மூலம் அரசின் கவனத்திற்கும் கொண்டு
வந்தேன். இப்பொழுது அரசு சுற்றுலா விடுதிகளில், சுற்றுலா நோக்கில்
தமிழகப்படங்கள் இடம் பெறுகின்றன. சில இலக்கியக்காட்சி ஓவியங்களும் இடம்
பெறுகின்றன. இவற்றைப்பின்பற்றித் தனியார் சிலரும் தங்கள் உறைவகங்களில்
தமிழ்ஓவியங்கள் சிலவற்றை வைத்துள்ளனர். ஆனால், எல்லா
உணவகங்களிலும் உறைவகங்களிலும் தமிழ்இலக்கியக்காட்சிகள் இடம் பெறுவது
கண்களுக்கு மட்டுமல்லாமல் கருத்திற்கும் விருந்தாக அமையுமல்லவா?
உணவகங்களில் இந்தியத் தலைவர்கள்,
அவர்களின் வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றையும் அறிவுக்குப்பொருந்தாத
புராணக் காட்சிகளையும் படங்களாகக் காட்சிக்கு வைத்திருக்கும் உணவக
உரிமையாளரிடம் எழுத்து மூலம்மட்டுமல்லாமல் நேரிலேயே தமிழகம்,
தமிழ்இலக்கியம் சார்ந்த படங்களை மாட்டுமாறு வேண்டியிருந்தேன். நல்ல
கருத்து, அவ்வாறு செய்கிறேன் என்றவர், அவ்வாறு செய்யவில்லை. படங்கள்
அல்லது ஓவியங்கள் மாட்டியுள்ள எந்த உணவகம் அல்ல உறைவகம் செல்ல
நேர்ந்தாலும் இவ்வாறு வேண்டுகோள் விடுக்கும்பொழுது வரவேற்கத்தக்க கருத்து
என மகிழ்ச்சியாகத் தெரிவிப்பர். ஆனால், பெருமபயனில்லை. வடஇந்தியத்தலைவர்கள்
படங்களை மாட்டினால் பெருமையாகவும் தமிழகத்தலைவர்கள் படங்களைக்கட்சி
சார்பாகக் கருதுவதும் தமிழ்இலக்கியம் மீது பாராமுகம் காட்டுவதுமே இதற்குக்
காரணம். ஓவியர்கள் தமிழ்இலக்கியக்காட்சிகளைப் படமாக வரையாததும் மற்றொரு காரணம்.
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment