தலைப்பு-தலைப்பெழுத்து-திரு :thalaippu_thamizhithalaippu_thiru

தலைப்பெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதை

நடைமுறைப்படுத்த வேண்டும்!

  பெயர்களை இரு மொழிகளில் ஒரே நேரம் குறிப்பிடுவோர் உலகில் நாம் மட்டுமாகத்தான் இருக்கிறோம். பெயரின் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில் குறிப்பிட்டுவிட்டு அதை அப்படியே தமிழில் குறிப்பிடும்பொழுது நமக்கு இழுக்கைத் தருகிறது என்பதை உணரத் தவறுகிறோம். பொதுவாக, தந்தை பெயர் அல்லது  தாய்பெயர் அல்லது  பெற்றோர் பெயர் அல்லது ஊர்ப்பெயர் முதலானவற்றின் முதல் எழுத்தையே நம் தலைப்பெழுத்தாக இடுகின்றோம்.  கதிரவன் மகன் நிலவன் என்னும் ஒருவர் தன் தந்தையின்  முதல் எழுத்தை ஆங்கிலத்தில்  குறிப்பிட்டுத் தன் பெயரைக் கே.நிலவன் என எழுதுவதாக வைத்துக் கொள்வோம். அப்படியானால் அவர் கே என்னும் முதல் எழுத்தைப் பெயராக உடைய ஒருவருக்குப் பிறந்தார் என்றுதானே பொருள். இவ்வாறு தவறாகக் குறிப்பிடுவது தாய், தந்தை இருவரின் ஒழுக்கத்திற்கும் இழுக்கு ஏற்படுத்தும் அல்லவா? இதை உணர்ந்தாவது தமிழிலேயே தலைப்பெழுத்துகளைத் தமிழிலேயே குறிக்க வேண்டும். இதே போல் பிறவற்றின் பெயரையும் தவறாகக் குறிப்பது முறையற்றதாகும்.
  பொதுவாகக் கல்விக்கூடங்கள் செல்லாதவர்களும் தங்கள் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில் குறிக்கும் போக்கு உள்ளது.   தமிழ்நாட்டில் கல்விபெற்றோர் விகிதம் 80.33  விழுக்காடாக இருந்தாலும் தொடக்கக் கல்வியில் சேர்வோம் விகிதம் 100 விழுக்காடாக உள்ளது(விக்கிபீடியா). கல்விக்கூடங்களில் பெயர்களைப் பதியும் பொழுதே தமிழில் தலைப்பெழுத்தைக் குறிப்பதைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.  ஆங்கிலத்தில் குறிப்பதாயின் தமிழ் எழுத்தை  உணர்த்தும் வகையில், அஃதாவது க என்றால் கே/ K எனக் குறிக்காமல் கேஏ / KA எனக்குறிக்கும் வகையில் பதிய வேண்டும்.
  கல்வியாண்டு தொடங்கப்பெற்றுள்ள இப்பொததே இதனைக் கடுமையாகப்பின்பற்ற வேண்டும். பள்ளயில் சேரும்    நுழைவு வகுப்பு  -இளமழலை / முதல் வகுப்பு – என்றில்லாமல் பிற வகுப்புகளிலும் தலைப்பெழுத்தைத் தமிழில் குறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அரசின் பொதுத்தேர்வுகளான பத்தாம்வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு  எழுதுவோரின் சான்றிதழ்களில் பெயர்கள் தமிழ்த்தலைப்புகளுடன் இருப்பதற்காகவும் முழுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.  ஆங்கில வழிப் பள்ளிகளிலும் தமிழில் வருகைப்பதிவேடு பேணுவதைக் கட்டாயமாக்கிப்பெயர்களைத் தமிழ்த்தலைப்பெழுத்துகளுடன் தமிழிலேயே குறிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
 அரசு அலுவலகங்களில் வருகைப்பதிவேடுகள் தமிழில் இருக்க வேண்டும் என்றாலும் ஆங்கிலத்தில் வருகைப்பதிவேடுகள் பேணும் அலுவலகங்களும் உள்ளன. வருகைப்பதிவேடுகளைத் தமிழிலேயே பேண நடவடிக்கை எடுப்பதுடன், அவற்றில் பெரும்பான்மை ஆங்கிலத் தலைப்பெழுத்துகளுடன் உள்ள நிலைமையும் மாற்ற வேண்டும்.
  அரசு அலுவலகங்கள் என்றில்லாமல் தனியார் அலுவலகங்கள் முதலான எல்லா நிலை அலுவலகங்களிலும் தமிழ் வருகைப்பதிவேட்டையும் தமிழ்த்தலைப்பெழுத்துகடன் தமிழில் பெயர் எழுதுவதையும் கட்டாயமாக்க வேண்டும்.
 தமிழ்க்கையொப்பம் என்பது தமிழ்த்தலைப்புடன் கூடிய கையொப்பமே என்பதை வலியுறுத்தி அனைவரும் தமிழில் கையொப்பமிடச் செய்ய வேண்டும். தமிழ்த்தலைப்பெழுத்துடன் கூடிய சுருக்கொப்பமே ஏற்கத்தக்கது எனத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இது குறித்துத் தமிழக  அரசு ஆணை 1998இலேயே பிறப்பிக்கப்பட்டுள்ளது(அரசாணை த.வ.ப.- அ.நி.துறை நிலை எண் 431 நாள்  ஆவணி 31, 2029 / 16.9.1998). (இவ்வாணை பிறப்பிக்கப்படும்முன்னரே  முன்னோட்டமாக, நான் மதுரையில் தமிழ்வளர்ச்சித்துறையில் பணியாற்றிய பொழுது கல்வித்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்த அடிப்படையில் பலன் இருந்தது. எனினும் அது நிலைக்கவில்லை.) எனினும்  மீண்டும் ஆணை பிறப்பித்து, இவ்வாணை அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பொருந்தும் என்றும் மேலே கூறியவாறு கல்வித்துறை  செயல்படுமாறும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனாவில்ஆங்கிக்குறியீடுகளை அகற்றி வெற்றி காணும்பொழுது நம்மால் முடியாதா?
 அரசு தமிழுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் மிகுதியாக இருப்பினும் எல்லாவற்றினும் முதன்மையாகக் கருதி இதனை நடைமுறைப்படுத்த அரசிடம் வேண்டுகின்றோம்.
அயலெழுத்தில் தலைப்பெழுத்தைக் குறித்தல்
நாணமற்ற தல்லாமல்
நந்தமிழன் நலங்காக்கும்
செய்கையாமோ? (பாரதிதாசன்)
என்பதை உணரவேண்டும்.
பிற மொழியில் தலைப்பெழுத்தைக் குறிப்பது தாய்க்கு இழைக்கும் குற்றச்செயல்.
    குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
    அற்றந் தரூஉம் பகை. (திருவள்ளுவர்,திருக்குறள் 434)
ஆதலின்  தமிழ்த்தாய்க்குக் கேடுதரும், பெற்ற தாய்க்கு இழுக்கு தரும்வகையில்,  பிற மொழியில் தலைப்பெழுத்தைக் குறிக்க வேண்டா.
கையொப்பமும் சுருக்கொப்பமும்  தமிழில் இடுவோம்!
தலைப்பெழுத்தைத் தமிழில் இடுவோம்!
தாய்மானமும் தமிழ்மானமும் காப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை  : அகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo







thalaippu_kaiyopppamthamizhil_iduvoam