தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்:

10.
முயற்சியால் துன்பம் வென்று இன்பம் காண்க!

  பணத்தினைப் பெருக்கி வாழ்வில் உயர என்ன செய்ய வேண்டும்? கல்வியறிவும், தொழில் ஈடுபாடும் இருந்தால் மட்டும் போதுமா? “நல்லன எண்ண வேண்டும்”, “எண்ணிய முடிய சோம்பலை நீக்க வேண்டும்”, முயற்சி வேண்டும்; காலம் அறிந்து செயல்பட வேண்டும்; முடியும் மட்டும் வினையாற்ற வேண்டும் அல்லவா? இவற்றைப் பல பாடல்கள் வழி வலியுறுத்துபவர்தானே பாரதியார்!
“எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி
… … …
எண்ணும் எண்ணங்கள் யாவினும் வெற்றி
எங்கும் வெற்றி எதனினும் வெற்றி”
(பாரதியார் கவிதைகள் :  பக்கம் 138-139 😐 வெற்றி)
“எண்ணிய எண்ணம் எல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்” ( பாரதியார் கவிதைகள்:  பக்கம் 169 : ஞானபாநு)
என எண்ணிய எண்ணியாங்கு எய்த திண்ணிய எண்ணம் வேண்டுமென உயர் தமிழ்ப்புலவர் திருவள்ளுவர் வழி உணர்த்துகிறார் பாரதியார்.
“துன்பமும் நோயும் மிடிமையும் தீர்த்துச்
சுகமருளல் வேண்டும்”
“துன்பம் இனியில்லை சோர்வில்லை தோற்பில்லை”
“இன்று எமை வருத்தும் இன்னல்கள் மாய்க” ( பாரதியார் கவிதைகள்: பக்கம் 51: வாழிய செந்தமிழ்)
“துயர்கள் தொலைந்திடுக
கவலைப்படுதலே கருநாகமாம்,
கவலையற்றிருத்தலே முக்தி
துன்பமே இயற்கை யெனும்
சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம்”
எனத் துன்பத்தைத் தொலைத்திடப் பலவாறாக வேண்டுகிறார் பாரதியார். சோம்பி இருந்தால் துன்பத்தைத் தொலைக்க முடியுமா?
“ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா” (பாரதியார் கவிதைகள் : பக்கம் 202 :பாப்பாப் பாட்டு)
துன்பம் நெருங்கி வந்த போதும் – நாம்
சோர்ந்து விடலாகாது பாப்பா” (பாரதியார் கவிதைகள் : பக்கம் 203 : பாப்பாப் பாட்டு)
“சோம்பல் மிகக் கெடுதி பாப்பா” (பாரதியார் கவிதைகள் : பக்கம் 203 : பாப்பாப் பாட்டு)
எனச் சோம்பலையும் சோர்வையும் விரட்ட பாப்பாவிற்கே அல்லவா பாரதியார் அறிவுறுத்துகிறார்!
இவ்வாறு சோம்பலை நீக்கி முயற்சி கொண்டு, துன்பங் கண்டு தளராமல் இருக்க உயர்வான எண்ணத்தை வலியுறுத்தும் பாரதியார் ‘புதிய ஆத்திசூடி’யிலும் கட்டளையிடத் தவறவில்லை. ‘எண்ணுவது உயர்வு’ (7) ‘கெடுப்பது சோர்வு’ (19) ‘கேட்டிலும் துணிந்து நில்’ (20) ‘ஓய்தல் ஒழி’ (11) ‘சிதையா நெஞ்சுகொள்’ (27) ‘செய்வது துணிந்து செய்’ (31) ‘கவ்வியதை விடேல்’ (24) ‘நன்று கருது’ (54) ‘நினைப்பது முடியும்’ (56) ‘நுனியளவு செல்’ (58) ‘நாளெல்லாம் வினை செய்’ (55) ‘நையப் புடை’ (62) ‘நொந்தது சாகும்’ (63) ‘மிடிமையில் அழிந்திடேல்’ (77) ‘பீழைக்கு இடங்கொடேல்’ (68) ‘யவனர்போல் முயற்சி செய்’ (86) ‘துன்பம் மறந்திடு’ (46) ‘முனையிலே முகத்து நில்’ (79) ‘வீரியம் பெருக்கு’ (106) ‘காலம் அழியேல்’ (14) ‘தோல்வியிற் கலங்கேல்’ (52) ‘நெற்றி சுருக்கிடேல்’ (60) ‘மீளுமாறு உணர்ந்து கொள்’ (78) ‘சௌரியந் தவறேல்’ (36) ‘சேர்க்கை அழியேல்’ (32).
இவ்வாறு கால மேலாண்மை, வினைத்திட்பம், வினை செயல் வகை முதலியனவெல்லாம் அடங்கும் வண்ணம் துன்பந் தொலைத்து இன்பங்காண செயல்திறனுக்கான கட்டளைகளை வழங்கியுள்ளார் பாரதியார்.

– இலக்குவனார் திருவள்ளுவன்
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum