தமிழ் அமைப்பினரே! தமிழ்த்துறையினரே! தமிழைத்தொலைக்காதீர்!
தமிழ் ஆர்வத்தின் காரணமாகப் பலர் தமிழ்
அமைப்புகள் நடத்தி வருகின்றனர். தமிழ்நிகழ்ச்சிகள் நடத்துவதில் மனநிறைவு
கொள்வோரும் தற்பெருமை அடைவோரும் உண்டு. ஆனால், உண்மையில் அவர்கள், தமிழைத்
தொலைத்துக்கொண்டு வருகிறோம் என்பதை உணரவில்லை.
தமிழன்பர்கள் எனில், பிற மொழிக்கலப்பை அகற்ற வேண்டுமல்லவா?
பிறமொழி எழுத்துகளின் பயன்பாட்டை நீக்க வேண்டுமல்லவா? ஆனால், இன்றைக்குத்
தமிழ் விழாக்கள் நடத்துவோரில் மிகப் பெரும்பான்மையர், பெயர்களில் கிரந்த
எழுத்துகளைப் பயன்படுத்துகின்றனர்; தலைப்பெழுத்துகளில் ஆங்கில எழுத்துகளைப்
பயன்படுத்துகின்றனர்; நிகழ்விடம், பணியிடம், முகவரிகள் முதலானவற்றைக்
குறிக்கும் பொழுது பிற மொழிச்சொற்களைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பிற மொழிப்பயன்பாட்டின் மூலம் தமிழைத்தொலைப்பது தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு தரும் என்பதை உணர்ந்தும் உணராமல் செயல்படுகின்றனர்.
தமிழர்களின் தொடராண்டு முறை குறித்து
நமக்குத் தெரியாமல்போனது. எனவே, தமிழ்க்கடல் மறைமலையடிகள் தலைமையில் கூடிய
தமிழறிஞர்கள், தொடராண்டுப் பயன்பாட்டிற்குத் திருவள்ளுவர் ஆண்டை
நடைமுறைப்படுத்தினர். ஆனால், அரசு மடல்கள் தவிரப்,பொதுவாகத் திருவள்ளுவர்
ஆண்டுப்பயன்பாடு என்பது அருகிக் காணப்படுகிறது. முன்பெல்லாம் இலக்கிய
நிகழ்ச்சிகள் நடத்துவோர் திருவள்ளுவர் ஆண்டைக் குறித்து வந்தனர்.
இப்பொழுது தாங்கள் நடத்தும் இதழ்களில் திருவள்ளுவர் ஆண்டைப்
பயன்படுத்துவோர்கூட அழைப்பிதழ்களில் திருவள்ளுவர் ஆண்டைப்
பயன்படுபடுத்துவதில்லை. தமிழ் அமைப்புகள் நடத்தும் கிறித்துவச் சமயத்தினர்
சிலர், கிறித்துவ ஆண்டைத் தவிர வேறு ஆண்டுமுறையை ஏற்பதில்லை எனக் கூறித்
திருவள்ளுவர் ஆண்டினைப் புறக்கணிக்கின்றனர். பிறரோ, திருவள்ளுவர் ஆண்டு என
ஒன்று நடைமுறையில் இருக்கின்றதா என்றே தெரியாததுபோல் நடந்துகொள்கின்றனர். திருவள்ளுவர் ஆண்டுக் குறிப்பு என்பது காலக்குறிப்பு மட்டுமல்ல! மானக்குறிப்புமாகும்!
இன்னும் சிலர், தமிழ்ச்சிறப்புகளை இழிவு படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்துகி்ன்றனர். இத்தகையோர் நிகழ்ச்சிகள் நடத்தவில்லை என யார் அழுதது என்று தெரியவில்லை!
தமிழரிடையே புகுத்தப்பட்ட சாதி அமைப்பை
இல்லாமல் ஆக்குவதற்குத் தந்தை பெரியார் முதலான ஆன்றோர்களும் பாரதிதாசன்
முதலான அறிஞர்களும் பாடுபட்டனர்; பலரும் இன்றும் பாடுபட்டு வருகின்றனர்.
சாதிப்பட்டத்தைத் துறக்க வேண்டும் எனப் பகுத்தறிவுச் செம்மல் சிவகங்கை இராமச்சந்திரனார்,
விடுத்த வேண்டுகோளை ஏற்றுச்சாதிப்பட்டங்களை மறந்த மன்பதையாகத் தமிழ்நாடு
விளங்கும் வேளையில் அழைப்பிதழ்களில் சாதிப்பட்டங்களுடன் பெயர்கள்
காணப்படுகின்றன.
சாதி ஒழித்தல் ஒன்று – நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால் – மற்றப்
பாதி துலங்குவதில்லை!
எனப் பாவேந்தர் பாரதிதாசன் கூறியதை மறந்து செயல்பட்டுத் தமிழை எங்ஙனம் வளர்க்க இயலும் எனத் தெரியவில்லை.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (திருவள்ளுவர், திருக்குறள் 645)
என்பதனை மறந்து நாம், பிற
மொழிச்சொல்லைப் பயன்படுத்துகின்றோம் என்றால் அந்த இடத்தில் சிறப்பாக அமைய
வேண்டிய தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தத் தவறிவிட்டோம் என்றுதானே பொருள்! தமிழ்ச்சொல்லுக்கு மாற்றுத் தமிழ்ச்சொல்லாகத்தானே இருக்க முடியும்?
தமிழ் அமைப்பினர் அழைப்பிதழ்களில் மட்டுமல்ல, நடத்தும் நிகழ்ச்சிகளிலும்,
நகைச்சுவை என்ற பெயரிலும், பிற மொழி அறிந்தவராகக் காட்டிக்கொள்ளும்
தோரணையிலும் பிற மொழிச்சொற்களைத் தங்கு தடையின்றிப் பயன்படுத்துகின்றனரே!
இதற்கு எதற்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும்? இத்தகைய கொடுமைகள் நிகழாமல்
இருந்தாலே தமிழ்வாழும் அல்லவா?
இங்கே தமிழ் அமைப்பினரைக் குறிப்பிடுவதன் காரணம், முன் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய அவர்களே தடுமாறினால் பிறர் எங்ஙனம் தமிழை வாழ வைப்பர் என்பதை உணர்த்தத்தான்!
தமிழ் அமைப்பினர் என்று சொல்லும் பொழுது ஆர்வத்தின் காரணமாகச் செயல்படுவோரை மட்டும் குறிக்கவில்லை; அவர்களுக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டிய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் முதலான கல்விக்கூடங்களின் தமிழ்ப்பணிகளுக்காக ஊதியம் பெறுவோரையும்தான்.
இன்னும் சொல்லப்போனால் இவர்கள் செய்யும் கொடுமைகள்தான் மிகுதி. நடத்தும்
நிகழ்ச்சிகள், விழாக்கள், கருத்தரங்கங்கள், மாநாடுகள் முதலியவற்றில் அழைப்பிதழ்களில் தமிழைத் தொலைப்பதுபோல், உரைகளிலும் மலர்களிலும் கட்டுரைத் தொகுப்புகளிலும் தமிழ்க்கொலைகளைக் காணலாம். தொல்காப்பியத்திற்கு
விழா எடுப்பதாகக் கூறிக்கொண்டு உண்மை வரலாற்றை மறைத்து, ஆரியரின் ஆரிய
இலக்கணம் என்பார்கள். சங்க இலக்கியக் கருத்தரங்கம் என்ற பெயரில், சங்க
இலக்கியங்கள், பிற்பட்டன என்றும் தழுவல் என்றும் உரைப்பார்கள்.
திருக்குறள் மாநாடு என்ற பெயரில் திருக்குறள் ஆரியத் தழுவல்
என்ப்பார்கள். இந்தக் கொலைஞர்களையும் மீறித்தான் நல்ரோர் சிலர் அரும் பாடுபட்டுத் தமிழ் வாழ உழைத்து வருகின்றனர்.
தமிழ்ப்பணிகளுக்காக ஊதியம்பெறுவோரும்,
கைப்பணத்தைச் செலழித்து, ஆர்வத்தின் காரமாகத் தமிழ் அமைப்புகள்
நடத்துவோரும், தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தமிழ்ப்பெயர்
சூட்டுவது இல்லை. தாங்கள் நடத்தும் திருமணம், பிற நிகழ்வுகளில் தமிழைப்
பயன்படுத்துவதில்லை. தமிழ் வளர்ச்சிக்கு உதவும் வண்ணம் படைப்புகளோ
பேச்சுகளோ அளிப்பதில்லை. மேடையேறி நிகழ்ச்சி நடத்திவிட்டால், பெரிய
தமிழறிஞர்கள் என்றும் பெரும் தமிழார்வலர் என்றும் காட்டிக்கொள்ளலாம் என
எண்ணித் தவறான பாதையில் செல்கின்றனர்.
இத்தகையோரின் விளம்பர உத்தியால் உண்மையாகவே தமிழுக்குத் தொண்டாற்றுவோர் புறக்கணிக்கப்படுகின்றனர். போலிகளைத் தமிழன்பர்கள் புறந்தள்ளினால், உண்மைத் தமிழ்த்தொண்டு நிலைக்கும். தமிழ் வாழும்.
அயல்மொழி வேண்டா ஆர் எழில் சேர் தமிழ்
நிறைதமிழ்! இந்நாள் நெடுநிலம் முழுதும்
குறைவில தென்றுகுறிக்கும் தனித்தமிழ்! (பாவேந்தர் பாரதிதாசன்)
என்பதை உணர்த்தும் வகையில் தொண்டாற்றிடத்
தமிழ்த்துறையினரையும் தமிழ் அமைப்பினரையும் உண்மையாகத் தமிழுக்கு
உழைப்போர் சார்பில் வேண்டுகிறோம்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment