(நாலடி நல்கும் நன்னெறி 4. – அறம் புரிந்து அருளாளர் ஆகுக! – தொடர்ச்சி)

செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத

புல்லறி வாளர் பெருஞ்செல்வம் – எல்லில்

கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி

மருங்கறக் கெட்டு விடும்

நாலடியார், செல்வம் நிலையாமை, 8

பொருள்:  நாம் செல்வமுடையவர்கள் என்று மகிழ்ந்து தாம் இனி இறப்பிற்குப் பின் போக உள்ள  மறுமையுலகத்தை நினைத்துப் பார்க்காத சிற்றறிவுடையோரின் மிகுந்த செல்வம், இரவில், கருமுகில் வாய் திறந்து தோன்றும் மின்னல்போல் சிறிது காலந்தோன்றி  இருந்த இடமும் தோன்றாமல் அழிந்து விடும்.

சொல் விளக்கம்: செல்வர்=செல்வமுள்ளவர்கள்; யாம் என்று=நாமென்று; தாம்=தாங்கள்; செல்வுழி=போகுமிடத்தை; எண்ணாத=நினைக்காத; புல்=அற்ப; அறிவாளர்=அறிவுடையாரது; பெரும்=பெரிய; செல்வம்=சொத்து; எல்லில்=இராக்காலத்தில்; கரும்=கரிய; கொண்மூ=முகிலானது; வாய்திறந்த=வாய்விடப்பட்ட; மின்னுப் போல்=மின்னலைப் போல்; தோன்றி=உண்டாகி; மருங்கு=வழி; அற=முற்றாக; கெட்டுவிடும்=கெட்டுப் போகும்.

எல் என்பது ஒளி, சூரியன், பகல், இரவு எனப் பலபொருள் தரும் ஒரு சொல். இப்பாடலில் இரவு என்னும் பொருளில் வருகிறது.

முகில் கடலில் ஆவியை முகந்து கொள்வதால் கொண்மூ எனப்படுகிறதுகார்முகில் மழை பெய்த பின்பு வெண்முகிலாய் வெறுமுகிலாய்ச் செல்வதும் கொண்மூ எனப்படுகிறது. முகிலின் நிறைநிலையாக மலை உச்சியில் குவிந்து பனியைக் கொண்டு இருப்பதும் கொண்மூ எனப்படுகின்றது. சிறப்புப் பெயராக  9000 பேரடி(மீட்டர்) உயரத்தில் உள்ள உயர்முகிலே கொண்மூ(Cirrus) எனலாம். இப்பாடலில் கருங்கொண்மூ எனக் குறிப்பிட்டுள்ளதால் இரவில் காணப்படும் கரு முகில் என்றே கொள்ளலாம். கொண்மூ வாய் திறந்ததுபோல் மின்னல் தோன்றுவதாகப் புலவர் அழகாகக் கூறுகின்றார். கணப்பொழுதில் தோன்றி மறையும் மின்னல்போல் செல்வமும் மறைந்து விடும் என அதன் நிலையாமையைப் புலவர் கூறுகிறார்.

மனிதன் நினைப்பதுண்டு’ படத்தில் அத் தலைப்பில் தொடங்கும் கண்ணதாசனின் பாடலில் பின்வரும் வரிகள் இடம் பெற்றிருக்கும்.

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

வாழ்வு நிலையென மனிதன் நினைக்கின்றான். இறைவன் மனிதனின் அறியாமை கண்டு இரக்கப்படுகிறான். எனினும் வேளை வரும்பொழுது அழைத்துக் கொள்கிறான். நிலையில்லா வாழ்வில் நிலையில்லாச் செல்வத்தை வீணே அழியவிட்டு என்ன பயன்?

ஆதலின் நிலையில்லாத் தன்மை கொண்ட செல்வததால் நிலையான புகழ் பெறும் நற்செயல்கள் ஆற்ற வேண்டும்.