(நாலடி நல்கும் நன்னெறி 5 – நிலை புகழ் தரும் செயல் ஆற்றுக – தொடர்ச்சி)

உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்

துன்னருங் கேளிர் துயர்களையான் – கொன்னே

வழங்கான் பொருள்காத் திரும்பானேல், அ 

இழந்தான்என் றெண்ணப் படும்.

-நாலடியார், செல்வம் நிலையாமை, 9

பொருள்: தான் உண்ணாதவனாக, மதிப்பைக் காக்காதவனாக, புகழ்மிகு செயல் செய்யாதவனாக, உறவினர்களின் துன்பங்களைப் போக்காதவனாக இரப்பவர்க்குக் கொடுக்காதவனாக வீணாகப் பொருளை வைத்திருந்து என்ன பயன்? பயன்பாடு இல்லாதிருக்கும் அந்தப்பொருளை அவன் இழந்தான் என்பதே உண்மையாகும்.

சொல் விளக்கம்: உண்ணான்=உண்ணாதவனாக; ஒளிநிறான்= ஒளியை நிறுத்தாதவனாக; துன்= பெறுதற்கு; அரும்= அரிய; கேளிர்= சுற்றத்தாருடைய; துயர்= துயரத்தை; களையான்= போக்காதவனாக; வழங்கான்= கொடுக்காதவனாக; கொன்னே= பயனின்றி; பொருள்=செல்வத்தை; காத்து=காத்துக்கொண்டு; இருப்பான் ஏல்= இருப்பான் ஆகில்; அ ஆ= ஐயோ! இழந்தான் என்று=இவன் பொருளை யிழந்தான் என்று; எண்ணப்படும்= (யாவராலும்) எண்ணப்படுவான்.

தருமம் தலைகாக்கும்’ என்னும் படத்தில் படத்தலைப்பில் தொடங்கும் கண்ணதாசன் பாடலில்

அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்

ஆனந்த பூந்தோப்பு

என வரும். அவ்வாறு பிறருக்கு அள்ளிக்கொடுக்காத செல்வம் இருந்தும் வீணே என்கிறது நாலடியார்.

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று

ஈதல் இலியல்பிலா தான்.(திருக்குறள் 1006)

எனத் திருவள்ளுவர் தனக்கும் பயன்படுத்தாமல் பிறருக்கும் அளிக்காமல் இருப்பவனின் பெருஞ்செல்வத்தை நோயாகக் கூறுகிறார் திருவள்ளுவர். எனவே,பயன்பாடு இல்லாத செல்வம் இருந்தும் இல்லாததற்குச் சமமாகும்.

எனவே பிறர்க்குப் பயன்படுத்தாத செல்வம் உடையவனும் ஏழையே!

இலக்குவனார் திருவள்ளுவன்