(குறள் கடலில் சில துளிகள் 22. உன்னைத் திருத்திய பின் ஊரைத் திருத்து! – தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள்
23. நல்லன செய்யாது செல்வத்தை அழிக்காதே!
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், குறள் எண்: ௪௱௩௰௭ – 437)
நல்ல செயல்களுக்குப் பயன்படுத்தாதவன் செல்வம் பயனின்றி அழியும் என்கிறார் திருவள்ளுவர்.
பதவுரை: செயல்பால-செய்யவேண்டியவை; செய்யாது-செய்யாமல்; இவறியான்-(மிகையான பொருட்) பற்றுக்கொண்டு அதைச் செலவழிக்காதவன், கருமி; செல்வம்-பொருள்; உயல்பாலது-மீட்கத்தக்கது, உய்யுந்தன்மை, தப்புதலுக்குரியது, உளதாகுதல், ஒழிக்கத் தக்கது, விலக்கத் தக்கது, நீக்கத் தக்கது, விடத்தக்கது; இன்றி-இல்லாமல்; கெடும்-அழியும்.
செல்வத்தைச் செலவழிக்காமல் வீணே வைத்திருப்பதைக் குற்றமாகப் பழந்தமிழர் கருதினர். எனவே, இக்குறளைக் ‘குற்றங்கடிதல்’ அதிகாரத்தில் வைத்துள்ளனர்.
செய்தக்க செய்யாமல் செல்வத்தை வீணாக்காதே!
செய்யவேண்டியவற்றைச் செய்யாமல் இறுகப் பற்றிக் கொண்டிருப்பான் செல்வம், பின் நிலைத்திருக்கும் தன்மையில்லாமல் வீணாகக் கெடும். எனக் குறள்நெறி அறிஞர் சி.இலக்குவனார் விளக்கம் தருகிறார்.
:நற்பணிக்குச் செலவழிக்காமல் செல்வத்தைப் பாழாக்காதே.!
நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும். என்று கலைஞர் மு.கருணாநிதி விளக்குகிறார்.
பின்வரும் சீவக சிந்தாமணிப் பாடலைக் கொண்டும் பரிமேலழகர் விளக்குகிறார்.
பொன்னின் ஆகும் பொருபடை; அப்படை
தன்னின் ஆகும் தரணி, தரணியிற்
பின்னை ஆகும் பெரும்பொருள்; அப்பொருள்
துன்னுங் காலைத்துன் னாதன வில்லையே–
(திருத்தக்கத் தேவர், சீவக சிந்தாமணி, விமலையார் இலம்பகம் 34)
அஃதாவது செல்வத்தால் படையும் படையால் நாடும் நாட்டால் மேலும் பெரும் பொருளும் கிடைக்கும். பொருளால் ஆகாதன ஒன்றுமில்லை. அத்தகைய பொருளை எதற்கும் பயன்படுத்தாமல் பாழாக்கலாமா? இதனையே தேவநேயப் பாவாணர் தம் நடையில் விளக்கியுள்ளார்.
“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் “(கொன்றைவேந்தன், 4:) எனத் தேவைப்படுவோருக்குத் தரப்படாத செல்வத்தைத் தீயவர்கள் எடுத்துக் கொள்வர் என்கிறார் இடைக்கால ஒளவையார்.
ஒளைவயாரே “பாடுபட்டுத் தேடி” எனத் தொடங்கும் நல்வழிப் பாடலில்(22) இறந்த பின் யார் துய்ப்பார் என அறியாமல் அரும்பாடுபட்டுப் பணத்தைத் தேடி யாருக்கும் எதற்கும் செலவழிக்காமல் புதைத்து வைப்பது குறித்துக் கேள்வி கேட்கிறார்.
“செயற்பால செய்யாது இவறியான் செல்வம்” என்னும் தொடருக்குப் பரிப்பெருமாள், “செய்யும் முறைமை செய்யாதே ஈட்டுதற்கு விரும்பியவனும் அவனது செல்வமும்” என்றும்
பரிதி, “செய்யும் முறைமை அறிந்து செய்யாதான் செல்வம்” என்றும்
காலிங்கர், “தனக்கு எய்திய பொருள் கொண்டு அதனால் செய்தற்பாலனவாகிய நல்வழக்கம் செய்யாத உலோபியவனது செல்வமானது” என்றும்
பரிமேலழகர், “பொருளால் தனக்குச் செய்து கொள்ளப்படும் அவற்றைச் செய்து கொள்ளாது அதன்கண் பற்றுள்ளம் செய்தானது செல்வம்” என்றும் கூறியுள்ளனர்.
பொருள் விளக்கம் தருவோரில் ஒரு பகுதியினர், “பொருளினால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைச் செய்து கொள்ளாமல் அதன்மீது பற்றுள்ளம் கொண்டு செலவழிக்காமல்” இருப்பதைக் குறிப்பிடுகின்றனர். மறு பகுதியினர் தனக்கு என்றில்லாமல் அறச்செயலகளுக்குச் செலவழிக்காமல் இருப்பதைக் குறிப்பிடுகின்றனர்.
இஃது ஆட்சியாளருக்கும் பொருந்தும். வரி வருவாய் முதலியவற்றின் மூலம் திரட்டும் செல்வத்தை வீணே வைத்திருக்கக் கூடாது; மக்களுக்குப் பன்படும் வகையில் பணத்தைச் சுழற்சிக்கு உட்படுத்த வேண்டும் என்ற பொருளியல் கொள்கையை அரசு பின்பற்ற வேண்டும்; என ஆட்சியாளருக்கும் அறிவுரை வழங்குவதாகக் கருத வேண்டும்.
உயற்பாலது இன்றிக் கெடும் என்பதற்குப் பரிதி, பகைவன் கெடுக்காமல் தானே கெடும் என்கிறார். எனவே செல்வத்தை நல்ல வழியில் செலவழிக்காத ஆட்சியாளர் புறப்பகை இன்றித் தானே அழிவான் என்பதாம்.
செல்வத்தைத் தனக்கோ, தன் குடும்பத்திற்கோ, தன் சுற்றத்திற்கோ, ஊருக்கோ நாட்டிற்கோ உலகிற்கோ செலவழிக்காமல் வீணே வைத்திருப்பின் அழிப்பார் இன்றி அழியும் எனத் திருவள்ளுவர் நம்மை எச்சரிக்கிறார். ஆதலின்
செல்வத்தைப் பயனுள்ள வகையில் செலவழித்துப்
பயன்பட வாழ்க!
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment