(நாலடி நல்கும் நன்னெறி 7 : பயனின்றிச் சேர்ப்போர் இழப்பர் – தொடர்ச்சி)

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்

பல்கழன்று பண்டம் பழிகாறும் – இல்செறிந்து

காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே

ஏம நெறிபடரும் ஆறு.

  • நாலடியார், இளமை நிலையாமை, 13

பொருள்: சொற்கள் தளர்ந்து கைத்தடியுடன் நடக்கும் முதுமை வரையும் காமவழியில் செல்வார்க்குப் பேரின்ப நெறியில் செல்வதற்கு வழியில்லை.

சொல் விளக்கம்: சொல்=சொற்கள்; தளர்ந்து=வலிமை குறைந்து(குழறி); கோல்=ஊன்றுகோலை; ஊன்றி=ஊன்றிக்கொண்டு; சோர்ந்த=தள்ளாடிய; நடையினர் ஆய்=நடையை உடையவராய், பல்=பற்கள், கழன்று=உதிர்ந்து, பண்டம்=உடலாகிய பண்டம், பழிகாறும்=பழிக்கப்படுமளவும், இல்= இல்லத்திலேயே, செறிந்து=அடைபட்டு, காமநெறி=ஆசைவழியே, படரும்= நடக்கும், கண்ணினார்க்கு=காமநெறியில் செல்லும் சிற்றறிவுடையார்க்கு, ஏமம்= மெய்யின்பக் கோட்டை யாகிய, நெறி=நல்வழியில், படரும்= நடக்கும், ஆறு= வழி, இல்=உண்டாவது இல்லை. ஏமம் என்றால் பேரின்பம், மெய்யின்பம், பாதுகாவல் எனப் பல பொருள்கள். இவற்றை உள்ளடக்கி இங்கே மெய்யின்பக் கோட்டை எனப்பட்டுள்ளது.

இல்வாழ்க்கையில் உள்ளோர்க்கு நல்வாழ்க்கை இல்லை எனச் சிலர் தவறாகப் பொருள் உரைக்கின்றனர். பணி வாழ்வு, பொது வாழ்வு, அற வாழ்வு முதலியவற்றில் ஈடுபடாமல் வீட்டில் இருந்து கொண்டு காமவாழ்விலேயே ஈடுபடுவோர்க்குத்தான் நல்வாழ்க்கை இல்லை என்கின்றனர். இளமை நிலையாமையைச் சொல்லுவதன் காரணம், நிலையான நன்னெறியில் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தத்தான். 

அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி யம்பொழுக

மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு

கைத்தலம் மேல்வைத் தழும்மைந்த ரும்சுடு காடுமட்டே

என்னும் பட்டினத்தார் பாடலைத் தழுவி ‘பாதகாணிக்கை’ படத்தில் கண்ணதாசன் “வீடுவரை உறவு” எனத் தொடங்கும் பாட்டை எழுதியிருப்பார். அதன் தொடக்கமாக

ஆடிய ஆட்டமென்ன?

பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?

கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன…?

எனப் பாடலடிகள் வரும். இளமை ஆட்டம் முதுமை வரை தொடராது. ஆனால் இளமையில் செய்யும் நற்செயல் பயன் முதுமையிலும் தொடரும் என்பதை உணர வேண்டும்.

சிற்றின்பத்தில் திளைத்து நல்லற இன்பத்தை இழக்காதே!