(கடலில் சில துளிகள் 23. நல்லன செய்யாது செல்வத்தை அழிக்காதே!- தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள்
24. கஞ்சத்தனத்தை என்றும் எண்ணாதே!
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன்று அன்று.
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், எண்:௪௱௩௰௮ – 438)
பொழிப்பு: பற்றுள்ளம் கொண்டு செல்வத்தைச் செலவிடாத இவறன்மை எந்த நன்மையுள்ளும் வைத்து எண்ணப்படுதற்குரிய ஒன்று அல்ல.
பதவுரை: பற்று-பிடித்தல்; உள்ளம்-நெஞ்சம்; என்னும்-என்கின்ற; இவறன்மை-கஞ்சத்தனம்; இவறல்+தன்மை; செலவிடப்படத் தக்கனவற்றிற்குச் செலவு செய்யாத பொய்யான சிக்கனத் தன்மை. இது திருவள்ளுவரால் புதிதாக ஆளப்பட்ட சொல் என்கின்றனர் திருக்குறள் ஆய்வர்கள். எற்றுள்ளும் – எவற்றுள்ளும்
தேவையற்ற கஞ்சத்தனத்தைத் திருவள்ளுவர் நேரடியாகக் குற்றம் என்று கூறவில்லை. ஆனால் குற்றச் செயல்கள் யாவற்றிலும் எண்ணத் தக்கதல்ல என்று சொல்லி இதனைக் குற்றச் செயல்கள் யாவற்றிலும் மோசமான குற்றச் செயலாக உணர்த்துகிறார். எனவேதான், காலிங்கர், இவறுதல் பெரிய குற்றம்’ என்று கூறினார்.
‘குற்றத் தன்மைகள் எவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்று அன்று’ என்றபடி மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிதி, பரிமேலழகர் ஆகியோர் உரை பகன்றனர்.
தமிழறிஞர் இரா சாரங்கபாணி “பொருளை விடாது இறுகப் பற்றும் மனம் என்று கூறத்தகும் கஞ்சத்தன்மை எக்குற்றத்துள்ளும் ஒன்றாக வைத்து ஒப்ப நினைக்கத் தகுவதன்று. அது நிகரற்ற பெருங் குற்றமாகும்” என்கிறார்.
‘பொருளைச் செலவழிக்க வேண்டியவிடத்துச் செலவழிக்காமல் இருப்பதற்குரிய உள்ளம் என்று சொல்லப்படும் சிக்கனத் தன்மை எதனுள்ளும் வைத்துக் கருதப்படுவதற்குரிய குணம் அன்று; குற்றமேயாகும்’ என்ற தமிழறிஞர் சி இலக்குவனார் உரை எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது என்கிறது குறள் திறன் தளம்.
இவறன்மை ஓர் இனம் புரியாத குற்றம், குற்றத்தில் பெரிய குற்றம், தனித்தன்மையுடைய குற்றம், நற்குணங்களைத் தாழ்வுபடுத்தும் குற்றம். சிக்கனமாக இருந்து சேமிப்பது சிறந்த பண்புதானே எனச் சிலர் எண்ணலாம். சிக்கனம் என்ற பெயரில் செலவழிக்க வேண்டியதற்குச் செலவழிக்காமல் இருப்பது குற்றம் என்கிறார் திருவள்ளுவர். –
மக்கள் பணத்தை அல்லது பொதுநிதியைத் தேக்கிவைத்து செலவிடாமல் இருப்பது குற்றமே என இக்குறள்மூலம் அறிவிக்கிறார் திருவள்ளுவர்
எண்ணப்படுவதொன்றன்று என உளவியலுடனும் தொடர்பு படுத்துகிறார். இன்றைய உளவியலறிஞர்கள், கஞ்சத்தனம் பணச்சுழற்சியை நிறுத்தி வேலையின்மைக்கு வழி வகுக்கிறது என்றும் மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு உணர்வுகளை உண்டாக்குகிறது என்றும் கூறுகின்றனர்.
இதனை ஆள்வோர்க்கும் திருவள்ளுவர் கூறுகிறார். பொதுப் பணத்தை அஃதாவது பொதுநலத்துக்கான நிதியைச் செலவு செய்யாமால் பாதுகாக்கும் கஞ்சத்தனமே இவறன்மையாம். மிகு செல்வம் கொண்டோரின் ஈயாத்தன்மையையும் இச்சொல் குறிப்பதாக உரையாசிரியர்கள் சொல்வர். மக்களிடம் பணத்தைத் திரட்டும் அரசு அதனை நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் செலவழிக்காமல் வீணே வைத்திருப்பதைக் குற்றம் என்கிறார் திருவள்ளுவர். ஆதலின், பொருள் மேல் பற்று கொண்டு பொதுநலனுக்குச் செலவழிக்காத குற்றத்தைக் கடிதல் வேண்டும் என இக்குறள் மூலம் திருவள்ளுவர் வேண்டுகிறார்.
கஞ்சத்தனம் உள்ளவனிடம் ஈதலாகிய நற்பண்பு இருக்காது. பிறருக்குக் கொடுக்கும் மனமில்லாததுடன் தனக்கும் செலவழிக்க மாட்டான். இவனிடம் இருக்கும் பொருள் பயனற்று வீணே இருக்கும். யாருக்கும் பயனின்றி அவனது செல்வம் அழியும். எனவேதான் கஞ்சத்தனம் குறித்து எண்ணவும் கூடாது.
“தனிநலன், குடும்ப நலன், பொது நலன் கருதிக்
கஞ்சத்தனத்தை என்றும் எண்ணாதே” என்கிறார் திருவள்ளுவர்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment