22 April 2025 அகரமுதல
குறட் கடலிற் சில துளிகள்
25. உன்னையே வியந்து கொள்ளாதே!
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
( திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், எண்: ௪௱௩௰௯ – 439)
பொழிப்பு: எப்பொழுதும் தன்னை வியந்து கொண்டாடாதே; நன்மை தராத செயல்களை மனத்தாலும் விரும்பாது ஒழிக! (சி.இலக்குவனார்)
பதவுரை: வியவற்க-வியந்து கொள்ளற்க, பெருமிதம் கொள்ளற்க, புகழ்ந்து கொள்ளற்க; எஞ்ஞான்றும்-எப்பொழுதும்; தன்னை-தன்னை; நயவற்க-விரும்பாதீர்; நன்றி-நன்மை; பயவா-விளைக்காத; வினை-செயல்.
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா நாளுந் தன்னைப் பெரியனாக நினைத்து வியவாதொழிக;
பரிப்பெருமாள்: எல்லா நாளுந் தன்னைப் பெரியனாக வியவாதொழிக;
பரிதி: தன்னை வியந்து கொள்ளக் கடவனல்லன்;
காலிங்கர்: வேந்தனானவன் எஞ்ஞான்றும் தன்னைத் தானே பெருமிதம் கருதற்க;
பரிமேலழகர்: தான் இறப்ப உயர்ந்த ஞான்றும் மதத்தால் தன்னை நன்கு மதியாது ஒழிக; [தான் இறப்ப உயர்ந்த ஞான்று – தான் மிகுதியும் உயர்ந்தபோது; மதத்தால் – செருக்கால்]
.எக்காலத்தும் தன்னை வியந்து கொண்டிருக்க வேண்டா என்பது இப்பகுதியின் பொருள்.
நயவற்க நன்றி பயவா வினை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வியந்தா னாயினும் அவ்வியப்பினானே நன்மை பயவாத வினையைச் செய்யாதொழிக.
மணக்குடவர் குறிப்புரை: செய்யிற் கெடு மென்றவாறாயிற்று.
பரிப்பெருமாள்: வியந்தா னாயினும் அவ்வியப்பினானே நன்மை பயவாத வினையைச் செய்யாதொழிக.
பரிப்பெருமாள் குறிப்புரை: செய்யின் கேடுதரும் என்றவாறாயிற்று. இதனை மதம் என்ப. இதனாற் கெட்டான் கார்த்தவிரியார்ச்சுனன்.
பரிதி: புண்ணியம் தராத காரியத்தை விரும்புவான் அல்லன் என்றவாறு.
காலிங்கர்: மற்று இதுவும் அன்றித் தனக்கு இருமைக்கும் நன்மை பயவா(க் கருமங்களை எஞ்ஞான்றும் விரும்பாது) ஒழிக என்றவாறு.
பரிமேலழகர்: தனக்கு நன்மை பயவா வினைகளை மனத்தால் விரும்பாது ஒழிக.
பரிமேலழகர் குறிப்புரை: தன்னை வியந்துழி இடமும் காலமும் வலியும் அறியப்படாமை யானும், அறனும் பொருளும் இகழப்படுதலானும், எஞ்ஞான்றும் வியவற்க என்றும் கருதியது முடித்தே விடுவல் என்று அறம் பொருள் இன்பங்கள் பயவா வினைகளை நயப்பின், அவற்றால் பாவமும் பழியும் கேடும் வருமாகலின், அவற்றை ‘நயவற்க’ என்றும் கூறினார். இதனான், மத மானங்களின் தீமை கூறப்பட்டது. [இதனான் -தன்னை வியத்தலானும், நன்றி பயவா வினையை நயத்தலானும்; தன்னை வியத்தல் மதமாம்; நன்றி பயவா வினையை நயத்தல் மானமாம்]( மதித்தல் மதமாம், பெருமை மானமாம்.) செருக்கு என்னும் பொருளில் மதம் எனவும் குற்றம் என்னும் பொருளில் மானம் எனவும் பரிமேலழகர் குறிப்பிடுகிறார்.
எந்நாளும் தன்னை உயர்வாக எண்ணி வியந்து செருக்கடையக் கூடாது எனத் திருவள்ளுவர் நம்மை வலியுறுத்துகிறார். நன்மை தராத செயலைச் செய்யக்கூடாது என்று சொல்லாமல் விரும்பவும் கூடாது என்றும் வலியுறுத்துகிறார். முதலில் வரும் விருப்பம்தானே செயலுக்கு அடிப்படையாகும்.
தற்புகழ்ச்சி கொண்டவன் விண்புகழ்ச்சிக்காக நன்மை தராத செயல்களில் ஈடுபடுவான். எனவேதான் நன்மை தராதவற்றை நினைக்கவும் கூடாது என்றார். நன்மை பயவாமை என்றால் யாருக்கு? தனக்கு, தன் குடும்பத்திற்கு, தன் சுற்றத்திற்கு, தன் ஊருக்கு, தன் நாட்டிற்கு, உலகிற்கு என எப்பகுதியனருக்கும் எத்தரப்பாருக்கும் நன்மை தராத செயல்களைப்பற்றி எண்ணக்கூடாது. எனவேதான் திருவள்ளுவர் உலகப் பொதுமை கருதி இதனைப் பொதுவில் கூறினார்.
தீயது விளைவிக்காவிட்டாலும் ஒரு செயலால் நன்மை இல்லை எனில் அதையும் எண்ணக்கூடாது என்பதே வள்ளுவம்.
“தன்னை வியந்தான் விரைந்து கெடும்” எனப் பின்னரும் திருவள்ளுவர் கூறுவார்(குறள் ௪௱௭௰௪-474)
நம்மை நாமே பாராட்டி வாழாமல், பிறர் மதிக்குமாறு வாழ வேண்டும் என நாலடியாரும்(பாடல் ௱௫௰ரு 165) கூறுகிறது.
எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று: – தம்மை
அரியரா நோக்கி அறனறியுஞ் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்.
தற்புகழ்ச்சி கொள்பவனை, மருந்து கொடுத்தும் தீராத பைத்தியம் என்று பலரும் எள்ளிநகையாடுவர் என நாலடியார்(௩௱௪௰ – 340) மேலும் பின் வருமாறுகூறுகிறது.
கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும்.
தான் அறிவில் சிறந்தவன் என்றோ புகழில் நிறைந்தவன் என்றோ செல்வச்செழிப்பில் உயர்ந்தவன் என்றோ தோற்றத்தில் பொலிவு உடையவன் என்றோ சிறந்த உயர் பதவியில் உள்ளவன் என்றோ ஒருவன் செருக்கடையக் கூடாது. எனவே, தன்னைத்தானே புகழ்ந்து பேசக்கூடாது. தனக்குப் பெருமையும் புகழும் வந்து சேர்ந்தாலும் அடக்கமாக இருந்து மேலும் உயரவேண்டுமே தவிர அகங்காரம் கொண்டு அழியக் கூடாது. செருக்கடைபவன் செவிகள் பிறர் அறிவுரைகளுக்கு மூடிக் கொள்ளும். வாயோ நல்ல இனிய சொற்களுக்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு தகாதவற்றை உதிர்க்கும். நாவைக் காக்காமல் நலிந்து அழிவான். எனவேதான் தற்புகழ்ச்சி கூடாது.
தன்னைத்தானே வியப்பவன் மேற்கொண்டு முன்னேற மாட்டான். எனவேதான், தற்செருக்கு, தனிப்பட்ட வளர்ச்சியைத் தடுக்கும் எதிர்மறைப் பண்பு எனச் செருமானியத் தத்துவ அறிஞர் இமானுவேல் கண்டு(Immanuel Kant 22.04.1724 – 12.02.1804) கூறுகிறார்.
உன் நலன் கருதி உன்னையே வியந்து புகழாதே!
உலகநலன் கருதி நன்மை தராச் செயல்களை விரும்பாதே!
என்கிறார் திருவள்ளுவர்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment