(நாலடி நல்கும் நன்னெறி 6 – பயன்பாடு இல்லாப் பொருளால் என்ன பயன்? – தொடர்ச்சி)

உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்

கெடாஅத நல்லறமும் செய்யார் – கொடாஅது

வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட !

உய்த்தீட்டும் தேனீக் கரி.

-நாலடியார், செல்வம் நிலையாமை, 10

பொருள்:  நல்ல ஆடைகளை உடுத்தாமலும் சுவையான உணவுகளை உண்ணாமலும் வறுமையாளர்களுக்குக் கொடுக்காமலும் அழியாக நல்லறச் செயல்கள் செய்யாமலும் உடலை வருத்திச் செல்வத்தை வெறுமனே சேர்த்து வைப்பவர் அதனை இழப்பர். பிறரிடம் தேனைப் பறிகொடுக்கும் தேனீயே அதற்குச் சான்று.

சொல் விளக்கம்: உடாதும்= நல்ல உடைகளை உடுத்து அணியாமலும்; உண்ணாதும்=உண்ணாமலும்; தம்=தங்களுடைய; உடம்பு=உடலை; செற்றும்=வருத்தியும்; கெடாத=தீங்கு இல்லாத; நல்= நன்மையாகிய; அறமும்=அறங்களையும்; செய்யார்=செய்யாதவர்களாய்; கொடாது=யாதுங் கொடாது; வைத்து ஈட்டினார்=பொருளைத்தேடி வைத்திருப்பவர்கள்; இழப்பர்=இழப்பார்கள்; வான்=வானத்தை; தோய்=தொடும் அளவு; மலை=மலைகளடங்கிய; நாட=நாட்டையுடையவனே; தேன்=மலர்த்தேனை; உய்த்து=ஆராய்ந்து; ஈட்டும்=சம்பாதிக்கும்; ஈ=தேனீயல்லவோ; கரி=சான்று.

‘சுமைதாங்கி’ படத்தில் கண்ணதாசனின் பின்வரும் வரிகள் அடங்கிய பாடல் இடம் பெறுகிறது.

வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்

வாழை போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்

உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் தெய்வமாகலாம்

இவ்வாறு பிறர்க்கு வழங்கித் தெய்வமாகாமல் வீணாகச் சேர்த்து வைக்கக்கூடாது என்பதே நாலடியார் கூறும் நீதி.

தேனீயைப் பொதுவாகச் சேமிப்பிற்கு எடுத்துக்காட்டாகக் கூறுவர். சேமித்த பணத்தை நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து போட்ட முதலையே இழக்கும் பலர் உள்ளனர். எனவே, தேனீபோல் வீணாகச் சேமித்துப் பிறர்  – கள்வரோ கயவரோ – எடுத்துக் கொள்வதற்கு இடம் கொடுக்கக்கூடாது.

செல்வத்தைச் சுற்றமும் உலகும்

பயன்பெறப் பயன்படுத்த வேண்டும் என்கிறது நாலடியார்.