Thursday, June 30, 2016

பெயரைச் சொல்வது தவறல்ல! சொல்லாதிருப்பதே வரலாற்றுப்பிழை! – இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-பெயரைச்சொல்வது தவறல்ல-திரு : thalaippu_peyaraicholvathu_thavaralla_thiru

பெயரைச் சொல்வது தவறல்ல!

சொல்லாதிருப்பதே வரலாற்றுப்பிழை!

 நாம், அடைமொழிகள் சேர்த்து ஒருவரை அழைத்தாலோ அவருக்குரிய பட்டத்துடன் குறிப்பிட்டாலோதான் அவருக்கு மதிப்பளிப்பதாகத் தவறாகக் கருதுகிறோம். தமிழக அரசியலில் இது மிகவும்  மோசமான முறையில் உள்ளது. ஒருவர் உயர, உயர, மக்கள் பெயருடன்மட்டும் குறிப்பதுதான் பழக்கம். எனவேதான் நேரு, காந்தி, அண்ணா என்கின்றோம்.  ஆண்டவனையே பெயர் சொல்லி அழைக்கும் நாம்,  நாட்டை  ஆண்டவனை, ஆள்கின்றவனை அவ்வாறு பெயர் சொல்லிஅழைப்பது அவரைச் சிறுமைப்படுத்துவதாகத் தவறாகக் கருதுகிறோம். பெயரைச் சொல்லாமல் சிறப்புப்பெயரால் அழைப்பதையே உயர்வு எனவும் தவறாகக் கருதுகிறோம்.  ஆனால், இவ்வாறு நாம் அழைப்பதன் மூலம், யாரைச் சிறப்பிப்பதாகக் கருதுகிறோமோ அவரை வரலாற்றிலிருந்து நீக்கும் தவற்றைச் செய்கின்றோம் என்பதைஉணர்வதில்லை.
  கடல்கொண்ட தமிழ்நாட்டில் எஞ்சிய இலக்கியங்களைத் தொகுத்தனர். இவ்வாறு தொகுத்த சங்கப்பாடல்கள் சிலவற்றை இயற்றிய புலவர்களின் பெயர்கள் தெரியவில்லை. எனவே, அவர்கள் பாடல்களில்  இடம்பெற்ற  சிறப்புத் தொடர்கள் மூலம் அவர்களை அழைத்தனர். இவ்வாறு அழைக்கப்பெறும் புலவர்களே,  அணிலாடு முன்றிலார், இரும்பிடர்த் தலையார், ஊட்டியார், ஊண்பித்தை, ஓரிற்பிச்சையார், ஓரேருழவர், கங்குல் வெள்ளத்தார், கவைமகன், கழாத்தலையார், கழைதின் யானையார், காமஞ்சேர் குளத்தார், காலெறி கடிகையார், குப்பைக் கோழியார், கூகைக் கோழியார், செம்புலப்பெயல்நீரார், தனிமகனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், தொடித்தலை விழுத்தண்டினார், நோய்பாடியார், பதடி வைகலார், மீனெறி தூண்டிலார், விட்டகுதிரையார் முதலானவர்கள் ஆவர். இவர்களின் இயற்பெயர்கள் தெரியாச் சூழலில் இவ்வாறு சிறப்புப்பெயர் சூட்டி அழைப்பது தவறல்ல. ஆனால், இயற்பெயர் மறையும் வகையில் சிறப்புப் பெயரால் அழைத்தால் இயற்பெயர் மறைந்துவிடும் சூழல் ஏற்படும்.
  ஒரு வேளை, திருவள்ளுவரின் இயற்பெயர் வேறாக இருந்திருப்பின் திருவள்ளுவர் என்னும் சிறப்புப்பெயரால் மட்டுமே குறிப்பிட்டதால் இயற்பெயர் மறைந்திருக்கும் வாய்ப்பு உண்டு.
  தொல்காப்பிய உரையாசிரியர்களில் ஒருவர் பெயர் பேராசிரியர் என்பதாகும். கல்வி ஒழுக்கங்களில் சிறந்து பெரும்புலமையுடன் உரையெழுதியமையால், பேராசிரியர் என்றே அழைக்கப்பெற்றுள்ளார். 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக்கூறப்படும் இவர்  காலத்தில்தான்  காலிங்கர், பரிமேலழகர்,  பருமனார், தருமனார் முதலான உரையாசிரியர்கள் வாழ்ந்துள்ளனர்.  இவர் காலத்திற்கு முன்பே  மணக்குடவர்,  நீலகண்டனார், ஆத்திரையன் பேராசிரியர்பரிப்பெருமாள், குணசாகரர், இளம்பூரணர் எனப் பலரின் பெயர்களும்  தெரிய வருகையில் இவரது இயற்பெயர் மறைந்ததன் காரணம் இவர் காலத்திலேயே இவர் சிறப்புப்பெயரால் அழைக்கப்பெற்றமைதான். இவரைப்போலவே மேலும் நால்வர் பேராசிரியர் என்று அழைக்கப்பெற்று இயற்பெயர் மறைந்து  புகழால் வாழ்கின்றனர். சிலப்பதிகாரத்திற்கான உரை வளத்தால் சிறப்பு பெற்ற அரும்பதஉரையாசிரியர் முதலான பிறரின் பெயர்களும் தெரியாமல்போனதற்கு நூல்கள் அழிவுடன் இதுவும் காரணமாய் இருந்திருக்கலாம்.
  நாம் பாரதியார் என்றால் சுப்பிரமணிய பாரதியாரைத்தான் எண்ணுவோம். ஆனால், ஒரே நேரத்தில்தான்  சுப்பிரமணியன் என்னும் கவிஞருக்கும் சோமசுந்தரம் என்னும் கவிஞருக்கும் பாரதியார் பட்டம் வழங்கப் பெற்றது. முன்னவர்  புரட்சிக்கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் என்றும் பின்னவர் நாவலர் சோமசுந்தர பாரதியார் என்றும் உலகில் புகழ்பெற்றனர். ஆனால் நாம்  முன்னவரைப் பாரதியார் என்று மட்டும்  குறித்துப் பயன்படுத்திவருவதால் அவரது உண்மைப்பெயரே பலருக்கும் தெரியாமல் போகின்றது. கனகசுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்டவர் தாமே பாரதி்தாசன் என்று புனைபெயர் வைத்துக்கொண்டமையால் அவரது இயற்பெயர் குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், இயற்பெயருடன் அழைக்கப்பெற வேண்டியவர்களைச் சிறப்புப் பெயரால் மட்டும் அழைப்பதால், அவர்களுக்குரிய பெயர்களை வரலாற்றில்இருந்து நாமே அப்புறப்படுத்துகின்றோம் என்பதை உணரவில்லை.
  இதைத் தவிர்ப்பதற்குச் சிறப்புப்   பெயர்களுடன் இயற்பெயர்களையும் சேர்த்தே குறிப்பிடுவதை நாம் நடைமுறையாகக்கொள்ள வேண்டும்.
  கடந்த வாரம் சட்ட  மன்றத்தில் தி.மு.க.தலைவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டுப் பேசியதால் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  நீண்ட காலச் சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையிலும் முன்னாள் முதல்வர் என்ற முறையிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்றோ தி.மு.க. தலைவர் கருணாநிதி என்றோ குறிப்பிட்டிருக்கலாம். அவர் பெயரைச்சொல்லிக் குறிப்பிட்டது கண்டு எதிர்க்கட்சியினர் வெகுண்டெழுந்திருக்கவும் தேவையில்லை. தங்கள் தலைவரின் புகழ் என்பது அவர் பெயரால் அவரைக் குறிப்பிடாததில்தான் அடங்கியிருப்பதாக எண்ணுகின்றனரா?  தமிழினப்பகைச்செயலைச் செய்யாமையால்தான் இருக்கி்ன்றது  என்பதை உணரவில்லையா? மிகுதியான படைப்பிற்கு உரிமையாளர் புகழ் அவரைப்பெயர் சொல்லிக் குறிப்பிட்டதும் நீஙகிவிடும் என்ற அறி்யாமை ஏன்?
 தங்கள் கட்சித்தலைவரை மதிப்புடன் அழைக்க விரும்புபவர் மாற்றுக்கட்சித் தலைவரையும் அவ்வாறு அழைப்பதுதானே முறை. முன்பு ஒரு முறை கலைஞர் கருணாநிதி முன்னரே ஒருவர் பெயரைக் குறிப்பிட்டுப்பேசியபொழுது  பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கலைஞர் கருணாநிதி, எனக்குப் பெற்றோர் இட்ட பெயரைச் சொல்லி யாரும் கூப்பிட்டதில்லை.  இவராவது அப்பெயரைக்  கூறுகிறாரே என் தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு பேசினார்.
  பொதுவாக ஒருவரை நாம்  ‘திரு’ என்று சேர்த்து அளிப்பதே போதுமானது. ஆனால், முனைவர், மருத்துவர், பொறிஞர் என்றெல்லாம் சேர்த்துக் குறிப்பிடும்பொழுது ‘திரு’ என்னும்  அடைமொழி தேவையில்லை.  அமைச்சர், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கான ‘மாண்புமிகு’ என்பது பதவிக்கே தவிர பெயர்களுக்கு முன் குறிப்பிடக்கூடாது. அஃதாவது மாண்புமிகு …. துறை அமைச்சர் இன்னார்   என்றுதான் குறிக்கவேண்டுமே தவிர, …. துறையமைச்சர் மாண்புமிகு இன்னார் எனக் குறிக்கக்கூடாது.  ஆனால், நடைமுறையில் பொதுமக்கள் பெயர்களுக்கு முன்னர் மாண்புமிகு என்பதைக் குறிப்பிடுகின்றனர். இந்தநேர்வில்,  மறுநாள் திமுக உறுப்பினர் துரைமுருகன் மாண்புமிகு தி.மு.க. தலைவர் எனக் குறிப்பிட்டால் போதும் என்பதை ஏற்று முதல்நாள்  பெயரால் மட்டும் அழைத்த அ.தி.மு.க. உறுப்பினர் செம்மலை அவ்வாறே குறிப்பிட்டுள்ளார். ( இருவரும் மேனாள் அமைச்சர்களே!) இந்த மாற்றத்திற்குப் பாராட்டு. இதற்குப் பின்னணியில் முதல்வரோ சட்ட மன்றத்தலைவரோ இருந்திருப்பின் அவர்களுக்கும் பாராட்டு.
  ஒருவரது சிறப்பை  அல்லது குறையை நாம் அழைக்கும் முறையால் மாற்றிவிட முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
  கலைஞர்,  முத்தமிழறிஞர், தலைவர், என வெவ்வேறு காலக்கட்டங்களில் அழைக்கப்பெறுபவர் ஒருவர்தான், அவர்தான் கருணாநதி என்று வரலாறு சொல்ல வேண்டுமென்றால் கலைஞர் கருணாநதி என்பதுபோல் பெயரையும் இணைத்துச் சொல்ல வேண்டும். இது போல், புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, அம்மா என அழைக்கப்பெறுபவர் யாரென வரலாறு   உணர்த்த வேண்டும் என்றால்,    புரட்சித் தலைவி செயலலிதா என்று  பெயரையும் சேர்த்துத்தான் குறிக்க வேண்டும். ஊடகங்களில் பெயரைமட்டும் குறிப்பதையே நடைமுறை மரபாகப் பின்பற்றுகையில் சினம்வராதவர்களுக்குப் பிற இடங்களில்மட்டும் பெயரைக்குறிப்பிடுவதால் சினம்வரத் தேவையில்லை.
  இவ்வாறு பெயரைக்குறிப்பிடுவது மதிப்புக் குறைப்பல் என்றும் வரலாற்று உண்மையை நிலைக்கச் செய்யும் செயல் என்றும் அரசியலாளர்கள் உணர வேண்டும். 
 போலிப் புகழுரைகளாலோ காழ்ப்புணர்ச்சியுடன் கூறும் இகழுரைகளாலோ ஒருவரின் மதிப்பு அமையாது. அவர் காலத்தில் மேற்கொண்ட அறச்செயல்கள், நேர்மைப்பணிகள், நல்லொழுக்கப்பாங்கு முதலியவற்றால் அவர் காலத்திற்குப்பின் அவர் விட்டுச்செல்லும் பணி விளைவுகளாலும் அவற்றால் கிடைக்கும்  உண்மையான பெயராலும்தான் அமையும்.  எனவே வாழும் காலத்தில் பெயரைக்குறிப்பிடாமல் பட்டப்பெயரைக் குறிப்பதுதான் சிறப்பு என எண்ணாமல், பெயரையும் இணைத்துக்  குறிப்பிடுவதே சிறப்பு என உணர வேண்டுகிறோம்.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். (திருவள்ளுவர்,திருக்குறள் 114)
 – இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, June 26, 2016

எழுவர் விடுதலை – சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-எழுவர் விடுதலை-திரு : thalaippu_ezhuvarviduthalai_thiru

எழுவர் விடுதலை – சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்!


  இராசீவு கொலைவழக்கில் மாட்டிவைக்கப்பட்ட எழுவரும்  மாயவலையில் சிக்கித் தவிக்கின்றனர். வலையை அறுத்து மீட்பார் யாருமில்லாமல் அவர்களின் துன்பம் நாளும் பெருகுகின்றது.
 தமிழக முதல்வரின் பேச்சு, சட்டமன்றத் தீர்மானம்,  போன்றவற்றால் இவர்கள் விடுதலைஆவார்கள் என்ற நம்பிக்கையும் தேவையற்ற அலுவலக நடைமுறைகளாலும் பாகுபாடு காட்டும் நீதிமன்றங்களின் நடைமுறைகளாலும் கானல்நீராகின்றது.
  இது தொடர்பான முதல்வரின் சொல்லும்  அதிகாரிகளின் செயலும் ஒன்றாகும்வண்ணம்  அரசின் போக்கு மாற வேண்டும்.
  10 ஆண்டுகளுக்கு மேலாகத் தண்டனை  துய்த்த 2,200  ஆயுள்தண்டனைச் சிறைவாசிகளைத் தமிழக அரசு விடுதலை செய்துள்ளது. இதே அடிப்படையில், கடந்த 25 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை  துய்த்து வரும் தன்னையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் கடந்த திசம்பர் மாதம்  நளினி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள மத்திய அரசின் வழக்கில் ஒரு முடிவு எட்டும் வரை, இந்த வழக்கில் நளினி  பதிந்த விண்ணப்பத்தை உசாவலுக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது; எனவே, அவரது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று   எதிர்ஆவணம் அளித்துள்ளது.
 அதிகாரிகளின் போக்கு அரசின் கருத்திற்கு இணங்க அமைய வேண்டும். ஆனால், அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவைப் புறக்கணித்து மாறுதலுக்குரிய விதி முறை எதையாவது காரணம் காட்டி அரசின் உள்ளக்கிடக்கைக்கு எதிராக நடந்துகொள்கின்றனர். எனவேதான் வழக்கு மன்றத்தில் தவறானகருத்தைப் பதிந்துள்ளனர். அரசாணைகளுக்கு எத்தனையோ விதிவிலக்கு அளித்துள்ள அரசதிகாரிகள் ஒரு வேளை விதி இடையூறாக இருந்ததென்றால் அதை மாற்றலாமே! அல்லது விலக்கு அளிக்கலாமே!
  “19.02.2014 இல் கூடிய அமைச்சரவைக்கூட்ட முடிவின்படி எழுவரையும் விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432- இல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சுதேந்திரராசா என்கிற சாந்தன்,  சிரீஅரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி,  இராபர்ட் பயசு, செயகுமார், இரவிச்சந்திரன்  ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள்” என்று மாண்புமிகு முதல்வர் செயலலிதா தெரிவித்திருந்தார். ஆனால் மனித நேயமும் அறவுணர்வும்மிக்க இந்த உரைக்கு மாறாகவே அதிகாரிகளின் போக்கு உள்ளது.
  பெரும்பாலான அதிகாரிகளின் போக்கு இன்னலுக்குள்ளானவர்கள் உள்ளங்கள்பற்றிக் கவலைப்படாது தொடர்பான தாள்களைப்பற்றியே இருக்கும் என்பதற்குச் சான்றாக இவ்விடுதலை தொடர்பான நேர்வை எடுத்துக் கொள்ளலாம். தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் இவ்வழக்கு தொடர்பான எழுவரையும் விடுதலை செய்ய அல்லது அதுவரையில் காப்பு விடுப்பில் விடுவிக்க மடல்கள் அனுப்பப்பட்டுள்ளன. தொடர்பான மடல்களில் சில
09.11.2044 / 25.11.2013, 07.01.2045 / 20.01.2014, 22.01.2045/ 04.02.2014, 05.02.2045/ 20.02.2014,24.11.2046 / 10.12.2015  நாள்களிலும் மேலும் பல நாள்களிலும் அனுப்பப்பட்டுள்ளன.
  மாண்புமிகு முதல்வர், திட்டமிட்டவாறு தடைகளை உடைத்து எழுவரையும் விடுதலை செய்யும் நாள்வரை பொறுத்திராமல் இடைக்காலத்தடையை முறியடிக்கும் வகையில் இடைக்கால விடுதலையாகப் பேரறிவாளன் என்கிற அறிவு, சிரீஅரன் என்கிற முருகன், சுதேந்திரராசா என்கிற சாந்தன், நளினி, இராபர்ட்டு பயசு, செயக்குமார்இரவிச்சந்திரன் ஆகிய எழுவரையும் காப்பு விடுப்பில் விடுவிக்க வேண்டும் என்பதே முறையீடுகளின் மையக் கருத்தாகும்.
இம்மடல்களில், பின்வருமாறு வலியுறுத்தப்பட்டன.
  1. அமைச்சரவை முடிவிற்கேற்ப மாண்புமிகு முதல்வரால் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டமுருகன் முதலானவரை முதலில் 6 திங்கள் காப்பு விடுப்பில் விடுவித்தல்.
  1. இவர்கள் தொடர்பான தீர்ப்பு குறித்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் அளித்தல்.
  1. தேவை யெனில் காப்பு விடுப்பில் விடுவிக்கப்படு வோரை நன்னடத்தைக் கண்காணிப்பில் வைத்தல்.
  தொடர்ந்து வழக்கினைக் காட்டியே மறுத்ததால்,மதிப்புநிலை நன்னடத்தைக் கண்காணிப்பாளர்களை அமர்த்தி அவரின் பார்வையில் இவர்களை உட்படுத்தலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டது.
  முறையீடுகளுக்கு மதிப்பளித்து அவ்வப்பொழுது மறுமொழி அளித்துள்ள உள்துறைச் செயலர், தமிழ்நாடு சிறைத்துறைத்தலைவர் முதலானஅரசு அதிகாரிகளைப் பாராட்டுகிறோம். ஆனால், அவர்கள் பார்வை பழம்பார்வையாக உள்ளது வருத்தமாக உள்ளது. முதன்முறை மடல் அனுப்பிய பொழுது சிறைத்துறையில் இருந்து மறுத்து மடல்  அனுப்பப்பட்டது. ஆனால், அம்மறுப்பை ஏற்காமல் ஆராய்ந்து தெரிவிக்குமாறு முதல்வர் அலுவலகத்திலிருந்து மடல் அனுப்பினர். இதனைப் படித்தபின்பாவது அரசின் நோக்கத்திற்கேற்ப ஆராய்ந்து இருக்கலாம். ஆனால், பொதுவாக “விடுதலை குறித்தான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தமிழ்நாடு தண்டனை தள்ளிவைப்பு விதிகள் 1982, இன்படி விடுப்பு வழங்குவது குறித்துப்பரிசீலிக்க இயலாத நிலைஉள்ளது” என்பதே மறு மொழியாக இருக்கும். அதைத்தான் இப்பொழுது நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளனர்.
  அண்மையில் சிறைத்துறைத்தலைவர் அனுப்பிய மடலில் (எண் 7072/சிபு.1/2016 நாள் 01.06.2016 )  “ஆயுள் தண்டனை சிறைவாசிகளை முன்விடுதலை செய்யும்  நேர்வு தற்போது பரிசீலனையில் இல்லை. மேலும் 14 ஆண்டுகள் சிறைவாசம் பெற்ற சிறைவாசிகளின் முன்விடுதலை அறிவுரைக்கழகம் மூலம் பரசீலனை செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.
 அப்படியாயின் அறிவுரைக்கழகத்தைக் கூட்டுவதற்கு என்ன தடை உள்ளது? உடனே கூட்டலாமே!
 “ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.” (திருவள்ளுவர், திருக்குறள் 579)
ஆதலின், தண்டித்துத்தான் திருத்தவேண்டும் என்போர்களையும் மன்னிப்பதே சிறந்த பண்பு. ஆனால், இங்கோ, செய்யாக் குற்றத்திற்காகப் பொல்லாத் தண்டனையில் துன்புறுவோரைக் காப்பாற்ற இயலாமல் உள்ளது பேரவலம் அல்லவா?
  சட்டமன்றத்தீர்மானம், அமைச்சரவை முடிவு, முதல்வர் அறிக்கை, உரை முதலியவற்றின் அடிப்படையில்  இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். ஆனால், உச்சநீதிமன்றத்தில் அதிகாரவரம்பு தொடர்பான வழக்கு உள்ளதால், தமிழக அரசினால் விடுதலை செய்ய இயலவில்லை. எனினும் நீதிமன்றம் இசைந்தால் விடுதலையை எதிர்நோக்கி  விடுப்பில்(பரோலில்) விடுவிப்பதாகத் தெரிவித்து  நீதிமன்ற இசைவைப்பெற வேண்டும். ஒரு வேளை நீதிமன்றம் மாறாகத் தெரிவித்தால் உடனடியாக அறிவுரைக்கழகம் கூட்டத்தைக்கூட்டி நிலுவை வழக்கு முடியும்வரை  காப்பு விடுப்பில் விடுவிப்பதாக முடிவெடுத்து உரிய ஆணைகளைப் பிறப்பிக்க வேண்டும். நளினிக்கு மட்டுமல்லாமல் பிற அறுவருக்கும் இவ்வாறு விடுப்பு வழங்க வேண்டும்.
  விசாரணைக் கைதிகளில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது  காப்பு விடுப்பு என்பது மறுக்கப்படலாம். ஆனால் அளவுகடந்த தண்டனையில் உள்ளவர்களுக்கு வழக்கு நிலுவை என்பது பொருந்தாது. மேலும் அரசு விடுதலைக்கே ஆயத்தமாக இருக்கும் பொழுது காப்பு விடுப்பு மறுப்பு என்பது அரசிற்குக் களங்கம் ஏற்படுத்தும். உண்மை உணர்வுடன் விடுதலை செய்வதாக அறிவித்த முதல்வரின் புகழுருவிற்கும் இழுக்கு ஏற்படுத்தும். உலகத்தமிழர்களின் உள்ளம் குளிர்ந்து மாண்புமிகு முதல்வரை வாழ்த்த, எழுவர் விடுதலைக்கேற்ப மறு எதிர்உறுதி ஆவணம் அல்லது வாதுரை அளித்து, எழுவருக்கும் விடுதலை அல்லது விடுப்பு வழங்கி மறுவாழ்வு உதவிகளும் அளித்து நீதியை நிலைநாட்ட வேண்டும்.
நீதிமன்றத்தில் அரசின் உள்ளக்கிடக்கையைத் தெரிவித்து எழுவரின் இடைக்கால விடுதலையாக விடுப்பிற்கு ஆவன செய்வார்களாக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 140, ஆனி 12, 2047 / சூன் 26, 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo

Saturday, June 25, 2016

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 11 – இலக்குவனார் திருவள்ளுவன்


தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02
பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 11

ஈந்து மகிழ்க!
 இவ்வாறு பலநூல் கற்று, வினைத்திட்பத்துடன் தொழில் ஆற்றிப் பணத்தைப் பெருக்குவது எதற்காக? ‘மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ (பக்கம் 112 | நல்லதோர் வீணை) அன்றோ – எனவே “ஈகைத்திறன்” (4) கொண்டு வாழுமாறு கூறுகிறார். ‘சிறுதுளி பெரு வெள்ளம்’ என்பதால் சேமிக்க வேண்டி ‘(இ)லவம் பல வெள்ளமாம்’ (97) என்கிறார்.
ஞிமிரென இன்புறு’ (39) ‘ஞெகிழ்வது அருளின்’ (40) ‘ஞேயங் காத்தல் செய்’ (41) ‘வருவதை மகிழ்ந்துண்’ (103) என ஈகைத்திறனையும், மனித நேயத்தையும், பகுத்துண்டு வாழ்வதையும் வாழ்வியல் கடமைகளாக வலியுறுத்தும் பாரதியார், புதிய எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறார். சுற்றத்தாரின் சுமைதாங்கியாக எப்போதுமே இருந்து அவர்களைக் காக்கலாமா? அவ்வாறு இருப்பின் அவர்கள் சோம்பித் திரிந்து உழைத்து உயரும் பாதையில் செல்ல மாட்டார்கள். அவர்கள் ‘திருவினை வென்று வாழ்’தல் (44) வேண்டும் அல்லவா? எனவே, ‘கிளை பல தாங்கேல்’ (15) என்கிறார்.
– இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive