(நாலடி நல்கும் நன்னெறி 3 – பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்!: தொடர்ச்சி)
அறம் புரிந்து
அருளாளர் ஆகுக !
தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் ; ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின் ; யாரும்
பிறந்தும் பிறவாதா ரில்.
-நாலடியார், செல்வம் நிலையாமை, 7
பொருள்: சூரியனை, முகத்தல் அளவுக்கருவியான ‘நாழி’ போன்று அளவுக் கருவியாகக் கொண்டு வாழ்நாளை இயமன் நாள்தோறும் அளக்கிறான். அவ்வாறு முழுமையாக உண்பதற்கு முன்னதாக அருள் உடையவர் ஆகுங்கள். இல்லாவிடில் பிறந்தும் பிறவாதவர்போல் கருதப்படுவீர்
சொல் விளக்கம்: தோற்றம்=நாள்தோறும் தோன்றும்; சால்=ஒளி மிகுந்த; ஞாயிறு=சூரியனை;நாழி ஆ=நாழி என்னும் அளவுக்கருவியாக; வைகலும்= நாள்தோறும்; கூற்றம்= இயமன்; அளந்து= அளவிட்டு; நும்= உங்களுடைய; நாள்= வாழ்நாளை; உண்ணும்=உண்பான், (ஆகையால்); யாரும்= அனைவரும்; பிறந்தும்=(மக்கட்பிறப்பாய்ப்) பிறந்தும்; பிறவாதாரில்=பிறவாது மேலுலகில் உள்ளவர் போல; ஆற்ற=மிகவும்; அறம்=அறத்தை; செய்து=செய்து; அருள் உடையீர் ஆகுமின்=அருள் உடையவர் ஆகுங்கள்.
சூரியன் காலத்தை அளக்கும் கருவியாக உள்ளது. எனவே, நம் வாணாளை அளக்கும் கருவியாகவும் அது உள்ளது. உண்ணும் என்பதால் உணவிற்கான கூலம்(தானியம்) முதலியவற்றை அளக்கும் நாழிக்கருவி போன்று சூரியனையும் கூறியுள்ளார் புலவர்.
‘மகிழம்பூ’ திரைப்படத்தில் மாயவநாதன்
தனக்குத் தனக்கு என்று ஒதுக்காதே – செய்த
தருமம் தலைகாக்கும் மறக்காதே
எனக் கூறுவதுபோல், தனக்கு என ஒதுக்கி வீணாக்காமல் பிறருக்கு வழங்கி நற்பேறு அடைய வேண்டும் என்பதே பாடல் கருத்து.
இலக்குவனார் திருவள்ளுவன்