kanavukal-aatchimozhi
[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்
2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல்
“தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்”
என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில்
வாசிக்கப் பெற்ற கட்டுரை.
 அவையில் அனைவரின் பாராட்டையும் பெற்ற கட்டுரை இது. யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் எப்படியெல்லாம் சட்டம் இயற்றக்கூடாது என்பதற்குத் தங்களுக்கு இது மிகவும் வழிகாட்டியாக அமையும் என்றார். முனைவர் நன்னன் அவர்கள் “தமிழ்நாடே இனி உருப்படாதோ என்ற தொனி இருந்தாலும் உண்மைகளைச் சிறப்பாக உரைத்துள்ளீர்கள்” என்றார். கடந்த ஆண்டே அறிஞர் ஔவை நடராசன் அவர்கள் இதனை வெளியிடுமாறு தெரிவித்தார். இவற்றில் தெரிவித்துள்ளவற்றில் இன்றைய நிலையில் பெரிதும் மாற்றமில்லை யென்பதால் வெளியிடுகிறேன்.]
     தமிழ் நாட்டரசின் 1956 ஆம் ஆண்டின் 30-ஆவது சட்டமான ஆட்சிமொழிச் சட்டம் 1957 சனவரித் திங்கள் 19-ஆம் நாளன்று ஆளுநரின் இசைவைப் பெற்றது: 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப் பெற்றது. அதுமுதல் ( ஆட்சி செய்து வந்த அனைத்துக் கட்சியினராலும்) இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய ஆணைகள் பல பிறப்பிக்கப்பட்டுள்ளன; செயல் திட்டங்கள் சில வகுக்கப்பட்டுள்ளன. எனினும் ஒரு தலைமுறை கடந்த பின்பும், இத்திட்டம் முழுமையடையவில்லை என்பது மட்டுமல்ல: முழுமையான பாதையை நோக்கிச் செல்லவில்லை என்பதே உண்மை. அது மட்டுமல்ல ஆட்சிமொழிச் செயலாக்கம் என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் ஓர் இனிய கனவேயன்றி வேறொன்றுமில்லை என்பதே பேரூன்மை. இவ்வுண்மையை உள்ளவாறே உரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
சிதைந்த கனவா? இனிய கனவா?
     தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்திற்கெனத் தனி அமைச்சுத் துறையை அமைத்த பின்பு – அதற்கு முற்றிலும் தகுதியான ஒருவரை அமைச்சராக அமர்த்தி – அவர் ஆக்கப் பணிகளில் ஈடுபட்ட பின்பு எழுதப்படும் கட்டுரைதானா இஃது எனச் சிலருக்கு ஐயம் வரலாம். இதற்கு முன்பு எழுதப்படும் கட்டுரையாயின் ‘ஆட்சிமொழிச் செயலாக்கம் ஒரு சிதைந்த கனவு’ என்றுதான் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி – பண்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களும் மிகவும் முனைப்புடன் செயற்படுகிறார்கள். தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுத் துறையின் செயலராக வினைத்திறம் மிக்கவரே உள்ளார். இவர்கள் எடுத்துவரும் ஒவ்வொரு நடவடிக்கையும் வரலாற்றில் இடம் பெறக்கூடிய புரட்சி: என்பவை மறுக்க முடியாத உண்மை. எடுத்துக்காட்டாகத் தலைமைச் செயலகத்தில் 500 ஆங்கிலத் தட்டச்சுப் பொறிகள் அகற்றப்பட்டு 500 தமிழ்த் தட்டச்சுப் பொறிகளை வழங்குவது என்பதை மிக எளிய செயலாக எண்ணக்கூடாது. நாளைய தலைமுறையினரால் போற்றப்படப் போகின்ற புரட்சிச் செயலே இது. இது போன்ற செயல் திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப் பட்டாலும் ஆட்சிமொழிச் செயலாக்கம் ஓர் இனிய கனவேயன்றி வேறில்லை என்பதே உண்மை.
     தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தை நிறைவேற்றத் தடைகள் பல இருக்கலாம். ஒரு வேளை அவற்றில் சில இதுவரை அரசின் கருத்திற்குக் கொணரப்படாமல் இருந்தாலும் இனிமேல் அவை அரசிற்குத் தெரிவிக்கப்பட்டால் உடைத்து எறியப்படும். இவ்வாறிருக்க ஏன் இந்த அவநம்பிக்கை எண்ணம் என்று சிலர் எண்ணலாம். ஆட்சிமொழிச் செயலாக்கம் என்றால் நாம் என்ன கருதிக் கொண்டிருக்கிறோம்? உண்மையில் இதன் வரையறை என்னவாக இருக்க வேண்டும்? என்பதை உன்னிப்பாக ஆராய்ந்தால் தான் இக்கட்டுரையின் நடுநிலைப் போக்கும் , மெய்ம்மையும் புலப்படும்.
   தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 2% அளவுள்ள தமிழக அரசு எழுத்துப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய தமிழ்ப் பயன்பாட்டைப் பற்றித்தான் நாம் மிகவும்பேசுகிறோம். இவற்றிற்குரிய முயற்சிகள் முழுமையாக எடுக்கப் பெற்று 100% வெற்றியடைவதாகக் கற்பனையாகக் கருதிப் பார்ப்போம். அப்பொழுதும் ஆட்சிமொழிச் செயலாக்கம் முழுமையடைந்ததாக நம்மால் கூற இயலாது. ஆட்சிமொழிச் செயலாக்கப் பரப்பை நாம் குறைவாகக் கருதிக் கொண்டு அதற்குள் சுற்றிவருகிறோம். உண்மையில் தமிழ் நாடெங்கும் தமிழ் வீற்றிருப்பதற்கான வழிவகைகளைக் கானத்தவறி விடுகிறோம். தமிழ்நாட்டில் ஆட்சிமொழியாகத் தமிழ் முழுஅளவில் இருக்க வேண்டுமெனில், கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, வணிக மொழியாக, அலுவல் மொழியாக, அனைத்துத் தரப்பாருடனான தொடர்பு மொழியாக என ஒவ்வொரு நிலையிலும் தமிழே ஆட்சிசெய்தால்தான் இயலும்.
     இது குறித்து ஆராயும் முன், இதுவரை நடந்து வந்த ஆட்சி மொழிச் செயலாக்கப் பாதையில் நாம் ஈட்டிய வெற்றிகளையும், ஈட்டுவதாக நம்பவைத்து ஆனால் ஈட்ட்த் தவறியவற்றையும் சுருக்கமாகப் பார்த்தால் இனியும் நாம் கனவுப் பாதையில் தான் நடைபோடுவோம் என்பது எளிதில் புலனாகும்.
ஆட்சிமொழிச் சட்டம்:
     ‘1956ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம்’ என்ன கூறுகிறது? இதன் 2-ஆம் விதி, “தமிழ், தமிழ் நாட்டின் ஆட்சிமொழியாக இருக்கும்” எனத் தெரிவிக்கிறது. ஆனால் 3-ஆவது விதியோ “அரசு வேறுவிதமாகக் கட்டளையிடுகின்ற வரையில் அலுவல் முறைக் காரியங்களில் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்பட வேண்டும்” என வலியுறுத்துகிறது. இச்சட்டம் ’ஆட்சிமொழியாய்த் தமிழை அறிவிக்கும் சட்டம்’ என்றா இருக்கிறது? இல்லையல்லவா? எனவே ஆங்கிலமே தொடர்ந்து நீடிக்க வகைசெய்யும் இச்சட்டத்தில் குறையில்லை. இதை நம்பி இன்றுவரை ஏமாந்து கொண்டிருக்கும் நாம்தான் குறையுடையவர்கள். ‘ஆங்கிலம்’ என்ற இடத்தில் ‘தமிழ்’ என்று இருக்க வேண்டும் என்று யாரும் வலியுறுத்தத் தேவையில்லை; அடித்தளமில்லாமல் கோபுரத்தை எவ்வாறு எழுப்புவது என்று நாம் எண்ண வேண்டாம். சீட்டுக் கட்டில் கட்டப்படும் கோபுரத்தைப் பற்றி ஆரவாரமாகப் பேசினால் போதும்!
    2 -ஆவது விதியை நம்பி யாரும் ‘தமிழ் நாடெங்கும் தமிழே’ இருக்க வகை செய்துள்ளதாகக் கனவு காண வேண்டாம் என 3-ஆவது விதியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம் 3 -ஆவது விதியின் விரிவு வருமாறு:-
     “2-ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளது எவ்வாறு இருந்த போதிலும் அரசியலமைப்புச் சட்டத்தின் 346-ஆவது 347-ஆவது பிரிவுகள் ஏற்பாடுகளுக்கு ஊறு இன்றி, 4-ஆவது பிரிவின் படிக்கான அறிவிக்கையின் மூலம் அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்படும் அலுவல்முறைக் காரியம் எதைக் குறித்தேனும் மாநில அரசு வேறுவிதமாகக் கட்டளையிடுகின்ற வரையில், இந்தச் சட்டத்தொடக்கத்திற்கு முன்பு ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வந்த அலுவல் முறைக் காரியங்கள் எல்லவற்றிற்கும் அம்மொழியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.”
இதில் குறிப்பிட்டுள்ள 4-ஆவது பிரிவு (விதி 4 ) என்ன கூறுகிறது?
     “மாநில அரசு அவ்வப்போது வெளியிடுகின்ற அறிவிக்கையின் மூலமாக அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்படுகிற அலுவல்முறைக் காரியங்களுக்குத் தமிழ் பயன்படுத்த வேண்டும் என்று கட்டளையிடலாம்”
     ஆகத் ‘தமிழ்நாட்டில் ஆங்கிலமே தொடர்ந்து பயன்படுத்த முடியும்’ ‘அவ்வப்போது தமிழ் பயன்படுத்த வேண்டும் எனக் கட்டளையிடலாம்’ என ஆங்கிலத்தை நிலைப்படுத்தித் தமிழுக்குத் தவணைமுறை வாய்ப்பு தந்துள்ள இந்தச் சட்டத்தை வைத்துக் கொண்டுதான் நாம் ஆகாயக் கோட்டை கட்டுகின்றோம். முதல் கோணல் முற்றும் கோணலை உருவாக்கி விட்டது.
     சரி. ‘இன்று முதல் தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழி’ எனப் புதிய சட்டம் பிறப்பித்தால் நம் கனவு நனவாகுமா? விதிவிலக்குகளில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நம்மால் அப்போதும் கனவுதான் காண இயலும்.
(இனியும் காண்போம்)
- இலக்குவனார் திருவள்ளுவன்
- அகரமுதல 67 நாள் மாசி10, 2046 / பிப்பிரவரி 22, 2015