மஞ்சு (11)
விசும்பிற்கு மேற்பட்ட நிலையில் ஈராயிரம் பேரடி(மீட்டர்)
தொலைவில் உள்ள முகிலை அடுத்துப் பார்ப்போம். பின்வரும் பாடல் அடிகள்
மழையைச் சுற்றி மஞ்சு எனப்படும் முகில் கூட்டம் அமைந்துள்ளதை
விளக்குகின்றன.
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த (நற்றிணை: 154:1-4)
மணம் கமழ் மார்பினை, மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து (கலித்தொகை: 49.16)
அகல்இரு வானம் அம்மஞ்சு ஈன(ப்), (அகநானூறு: 71.8)
முனைசுட வெழுந்த மங்குல் மாப்புகை
மலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும் (புறநானூறு:103: 6.7)
மஞ்சு ஆடு மலை முழக்கும் (பரிபாடல்: 8:110)
மலை அல்லது இறும்பு அல்லது அடுக்கம்
எனப்படும் மலைப்பகுதிகள் அடியில் அகன்றும் மேலே செல்லச் செல்லக் குவிந்தும்
காணப்படுகின்றன. இவற்றைச் சூழ்ந்துள்ள மஞ்சு என்படும் முகில் வகையும்
அவ்வாறே அகன்றும் குவிந்தும் உள்ளதை இவ்வரிகள் மூலம் புரிந்து கொள்ளலாம்.
நிலத்திலிருந்து ஏறத்தாழ 6500 அடி
உயரத்தில் அமைந்து அங்கே அடிப்பரப்பு அகன்றும் மேலே செல்லச்செல்லக்
குவிந்தும் உள்ள முகில் கூட்டத்திற்கு கியூமுலசு-cumulus என்று 17
ஆம் நூற்றாண்டு நடுவில் மேனாட்டினர் பெயர் சூட்டினர்.
இச்சொல்லிற்கு(cumulus) வேளாணியலில் கீழ்மட்டக் கார் மேகங்கள் என்றும்,
மனையியலில் கார்முகில், திரள்முகில் என இரு வகையாகவும், இயற்பியலில்
திரள்முகில் எனவும் பயன்படுத்தப்படுகின்றனர். திரள்முகில் எனக் கூட்டுச்
சொற்களாகச் சொல்வதைவிடப் பொருள் பொதிந்த மஞ்சு என்னும் சங்கச் சொல்லே
சிறப்பாக உள்ளது. எனவே, மஞ்சு-cumulus எனப்படுவது பொருத்தமாகும்.
மஞ்சு-cumulus
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment