கொண்மூ
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ (புறநானூறு : 35.17)
நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி, (குறிஞ்சிப்பாட்டு : 50)
மா மலை அணைந்த கொண்மூப் போலவும், (பட்டினப்பாலை : 95)
இமிழ் பெயல்தலைஇய இனப்பலக் கொண்மூ (அகநானூறு : 68.15)
பெய்துவறி தாகிய பொங்குசெலற் கொண்மூ (அகநானூறு : 125.9)
உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போல (கலித்தொகை : 104.16)
முதலிய அடிகளில் வருவதுபோல் 17 இடங்களில்
கொண்மூ குறிக்கப்படுகிறது. முதலில் இச்சொல் பொதுவான பெயராக இருந்திருக்கும்
போலும். ஏனெனில் கடலில் இருந்து ஆவியைக் கொண்டு மேலே செல்லும் முகிலும்
கொண்மூ எனப்படுகின்றது; கார்முகில் மழை பெய்த பின்பு வெண்முகிலாய்
வெறுமுகிலாய்ச் செல்வதும் கொண்மூ எனப்படுகிறது. முகிலின் நிறைநிலையாக மலை
உச்சியில் குவிந்து பனியைக் கொண்டு இருப்பதும் கொண்மூ எனப்படுகின்றது.
சிறப்புப் பெயராக இதனையே 9000 பேரடி(மீட்டர்) உயரத்தில் உள்ள உயர்முகிலாகிய
சிர்ரசு/Cirrus எனலாம்.
கொண்மூ-Cirrus
பொதுவாக முகிலின் தோற்றத்தன்மையின்
அடிப்படையில் மேனாட்டார் கூறுவதற்குப் பொருந்தி வரக்கூடிய கலைச் சொற்களாகவே
அமைக்கப்பட்டுள்ளன. இடையிலே வந்த உரையாசிரியர்களால்கூடப் புரிந்துகொள்ளாத
அளவு முகில் வகைப்பாடு மறைந்து போனதால், நம்மால் புரிந்து கொள்வது
இயலாதனவாகவே உள்ளன. ஆதலால், சிலவற்றில் மாறுபட்ட கருத்து யாருக்கேனும்
ஏற்பட்டாலும், வேறு வகைப்பாடு இல்லாத காரணத்தால் குறியீடாகக் கொண்டேனும்
இவற்றைப் பின்பற்றலாம்.
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment