இடம்விட்டு இடம் பெயர்ந்து செல்லும்
பறவைகள் புலம் பெயர் பறவைகள்/transit birds எனப்படும். இவற்றை அயல்
புலத்திலிருந்து வருவன, அயற்புலத்திற்குச் செல்வன என இருவகையாகப்
பிரிப்பர். இடம் பெயராமல் தாய்மண்ணிலேயே தங்கும் பறவைகளும் உள்ளன.
மைகிரேசன் (migration) எனில்
குடிப்பெயர்ச்சி எனத் தொல்லியல், வங்கியியல், பொருளியல் ஆகியவற்றிலும்
புலப்பெயர்ச்சி என வேதியியல், தகவல் நுட்பவியல் ஆகியவற்றிலும் வலசைபோதல் என
மீனியல், உயிரியல், காலநடைஅறிவியல் ஆகியவற்றிலும் புலம்பெயர்தல் என
மனையியலிலும் சட்டவியலிலும் இடம்பெயர்தல் என அரசியலிலும் குடிபெயர்வு எனச்
சமூகவியலிலும் இருப்பிடமாற்றம், புலம்பெயர்வு என இருவகையாக வரலாற்றியலிலும்
இடம்பெயர்வு, புலம்பெயர்வு என இருவகையாகப் பொறி-நுட்பவியலிலும்
புலம்பெயர்தல், வலசைப் போதல் என இருவகையாக வேளாணியலிலும் இடம்பெயர்தல்,
புலப்பெயர்வு, குடிப்பெயர்ச்சி என மூவகையாக ஆட்சியியலிலும்
சொல்லப்படுகின்றன.
பறவைகளின் இடப்பெயர்ச்சிக்கு மட்டுமே வலசை(migration) போதல் பொருந்தும்.
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின்
என்னும் புலவர் பிசிராந்தையாரின் பாடல் வரிகள் (புறநானூறு 67.6-7) பறவைகள் இடம் விட்டு இடம் செல்வதைப் பெயர்ச்சியாகக் குறிக்கின்றன.
தென்திசைக் குமரியாடி வடதிசைக்
காவிரிபாடி
எனப் புலவர் சத்திமுற்றப் புலவர் பாடும்பொழுதும் பறவைகளின் இடப் பெயர்ச்சியைக் குறிப்பிடுகிறார்.
அலங்கல் அம்சினைக் குடம்பைப் புல்லெனப்
புலம்பெயர் மருங்கில் புள் எழுந் தாங்கு
என்னும் கல்லாடனாரின் பாடல் வரிகளும் (அகநானூறு: 113:24-25) புலம்பெயர் சொல்லாட்சியைக் குறிப்பிடுகின்றது.
புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
என்னும் பாடல் வரி பறவைகள் இடம் விட்டு
இடம் செல்வதையும் இடம்மாறி வருவதையும் [குறுங்கோழியூர்கிழார். புறநானூறு
(20.18)] குறிப்பிடுகிறது.
புலம்பெயராப் பறவைகள் வதி பறவைகள் எனப் பெறும்.
வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை என்னும் குறுந்தொகைப்பாடல் (5.2)
இதை உணர்த்துகிறது.
வம்ப நாரை இனன்ஒலித் தன்ன (அகநானூறு: 100.14)
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு (அகநானூறு: 180.9)r
வம்ப நாரை இரிய (அகநானூறு: 189.7)
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது (நற்றிணை: 178.4)
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து
உமணர் போகலும் (நற்றிணை: 183.4-5)
உமணர் போகலும் (நற்றிணை: 183.4-5)
என்பன புலம் பெயர்ந்து வரும் பறவைகளைக் குறிக்கின்றன.
வம்ப(16), வம்பலர்(33), வம்பு(17) என்பனவற்றின் அடிப்படையில் வம்பப்புள் என்று சொல்லலாம்.
இடம் பெயராமல் நம் நாட்டிலேயே தங்கும்
பறவைகளை இடம் பெயராமல் நம் நாட்டிலேயே தங்கும் பறவைகளை வதி (7)
என்பதன்அடிப்படையில் வதிபறவை என்றுசொல்லலாம்.
வலசை- migration
வம்பப்புள்- immigration bird
வதிபறவை – non-transit bird
இவ்வாறு சங்க இலக்கிய அடிப்படையில் குறிப்பின் கலைச்சொல்லாக்கங்களுக்காக நேரத்தைச் செலவிடத் தேவையிராது.
- இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment