18 சனவரி 2015 கருத்திற்காக..
காதி அல்லது கதர்-khadi என்பதற்குக் கைந்நூலாலை, கதர் ஆடை (ஆட்.), மெருகேறிய கதர்(தொ.நுட்., மனையியல்) எனக் கூறுகின்றனர். ‘மதிப்பு மிகுந்த’ என்னும் பொருளில் சொல்லப்பட்ட காதி-khadi/கதர் கையால் நூற்கப்படுவதையே குறிப்பிடுகிறது. கையில்கட்டும் காப்புநூலைக் கைந்நூல் எனக் குறுந்தொகை(218.2) குறிப்பிடுகிறது. விசையால் இயங்கும் தறியை விசைத்தறி (ஆட்.,மனை.) என்றும் கையால் இயங்கும் தறியைக் கைத்தறி (வேளா.,மனை.) என்றும் சொல்வதுபோல் கையால் நூற்கப்படுவது என்ற பொருளில் கைந்நூல் என்பதே சரியானது.
ஈரணி-two piece dress
கஞ்சுகம்-safari
குப்பாயம்-coat
கைந்நூல்- khadi
நீரணி-swimming dress
மீகை-over coat
[தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும் (பதிற்றுப்பத்து: 81.11). மீகை-தோள்மேல் அணியும் சட்டை. (சட்டையின் கை, தோளை மூடி அதன் மேல் உயர்ந்து தோன்றலின், மீகை எனப்பட்டது.-உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி)]
குறுவட்டை-mini skirt
காழகம் (௭) பொதுவாக ஆடையைக் குறிப்பிட்டாலும், வினைமாண் காழகம் வீங்கக் கட்டி(கலித்தொகை: 7.9) என்னும் பொழுது கைகளில் அணியும் தோலுறையைக் குறிப்பிடுகிறது. இப்பொழுது கைகளில்அணியும் உறை கையுறை (வேளா.), காப்புறை(மரு.) என்றும் சொல்லப்படுகின்றது. மாறாக இதனைக்,
காழகம்-Glove
எனலாம்.
கழுத்தில் அணியும் துணியினைப் பலர் கழுத்துப்பட்டை என்று குறிப்பிடுகின்றனர். காலர்(collar) என்பதையும் கழுத்துப்பட்டை என்பதால் பொருந்தவில்லை. சிலர் கழுத்துக் கச்சை என்கின்றனர். கச்சு என்றால் பெண்கள் மார்புஆடை என உள்ளத்தில் பதிந்து விட்டதால், இச் சொல் பழக்கத்தில் வரவில்லை. கழுத்தின் மற்றொரு பெயர் கண்டம். கண்டத்தில் அணியும் நகையைக் கண்டிகை என்றனர். (கழுத்தில் அணியும் துணியும் கண்டிகை எனப்பட்டுள்ளது.) எனவே, கழுத்தில் அணியும் துணியைக் கண்டிகை (1) எனலாம்.
கண்டிகை-neck tie
No comments:
Post a Comment