இலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே! தோற்றது பா.ச.க.
இலங்கை அதிபர் தேர்தலில் கொலைகார இராசபக்சே மண்ணைக் கவ்வினான். கோவில் கோவிலாகச் சுற்றியும் கடவுள் கருணை காட்டவில்லை.
கணியத்தை – சோதிடத்தை – நம்பி
ஈராண்டுக்கு முன்பே தேர்தலை நடத்தித் தன் தலையில் தானே மண்ணை வாரிகப்
போட்டுக் கொண்டான்! மக்களை நம்பாமல் சோதிடத்தை நம்பினால் இதுதான் கதி என
மக்கள் காட்டிவிட்டனர்.
அவனுக்கு வாழ்த்து தெரிவித்ததன் மூலம்
அரசியல் கணிப்பின்மையை வெளிப்படுத்திய பாசக அரசின் தலைவர்
நரேந்திர(மோடி)க்கும் மக்கள் கரி பூசி விட்டனர். ஆர்வக் கோளாறு கொண்டு
அரசியல் வினைத்திறமின்மையை அவர் வெளிப்படுத்திக் கொண்டார்.
பாரதரத்னா விருதை அவனுக்கு வழங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த மோசடி வணிகர்களுக்கும் மரண அடி கிடைத்தது.
நானும் ஆரியன், நீயும் ஆரியன் எனக்
குலவிக் கொண்டிருந்த கொலைகாரன் இராசபக்சேவை இந்து என ஆதரவு காட்டிப்,
பேராயிரக் கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்கள் இந்துக்களல்லர் என மறைமுகமாக
உளறியவனெல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடி ஒளிந்து கொண்டான்!
தமிழர்களின் ஒற்றுமையும் சிங்களவர்களுடன் உறவாடிக் கொண்டிருந்த இசுலாமியர்கள் மனம் திருந்தியதும் கொலைகாரனை வீழ்த்தச் செய்தன.
ஓர் இன வெறியனை வீழ்த்துவதற்காக மற்றோர்
இன வெறியனை ஆதரிப்பதா எனக் குமுறியவர்களுக்கும் விடை கிடைத்து விட்டது.
ஈழத் தமிழர்களின் வாக்குகள்தாம் பக்சேவைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தன.
தேர்தலைப் புறக்கணித்திருந்தாலோ வேறு யாருக்கேனும் வாக்களித்திருந்தாலோ
கொலைகாரப் பக்சே எளிதில் வென்றிருப்பான்! என் செய்வது ஓர் எதிரியை
வீழ்த்துவதற்காக மற்றோர் எதிரியை அரவணைக்கும் போக்கில்தான் தமிழர்களின்
அரசியல் களம் உள்ளது. எனவே, அந்த முடிவிற்குத் தமிழ் ஈழமக்கள்
தள்ளப்பட்டனர். அது சரிதான் எனத் தேர்தல் முடிவு காட்டிவிட்டது.
வெற்றி பெற்றுள்ள மைத்திரி சிரிசேனா
தமிழர்கள் ஆதரவு தந்த போதும் வெளிப்படையாக அதனை வரவேற்காததன் காரணம்,
சிங்களவர் வாக்குகள் கிடைக்காமல் போகும் என்ற அச்சம்தான். ஆனால், தேர்தல்
முடிவுகள் ஈழத்தமிழர்களின் வாக்குகளே தன்னை வெற்றியடையச் செய்தன என்ற
உண்மையை உணர்த்தியிருக்கும். பக்சேவும் ஈழத்தமிழர்களால் தான்
தோற்கடிக்கப்பட்டதாகக் கூறியதும் கவனிக்கத் தக்கது.
இவரால் ஈழத்தமிழர்கள் முழு உரிமை பெற
வாய்ப்பில்லை. என்றபோதும் போர்க்குற்றவாளி, இனப்படுகொலையாளன், அவன்
கூட்டாளிகள் தண்டிக்கப்படவும் சிறையில் இருந்து அனைத்துத் தமிழர்களும்
விடுதலை செய்யப்படவும், தமிழர்கள், கடத்தல், கற்பழிப்பு போன்ற துயரங்களில்
இருந்து மீளவும், தமிழ் ஈழப் பகுதிகளில் உள்ள படையினர் வெளியேறவும்,
தமிழர்களுக்கான நலவாழ்வுப் பணிகளில் ஈடுபடவும் தமிழக மீனவர்கள்
கொடுமைக்குள்ளாவது தடுக்கவும் ஆவன செய்தால் வாக்களித்த தமிழர்களுக்கு
நன்றிக்குரியவராவார். அவருடன் உள்ள சிங்கள வெறியர்களும் இனிமேலாவது
உண்மையான புத்த நெறியைப் பின்பற்ற வேண்டும்.
வீழ்ந்தான் பக்சே ! விலகட்டும் துயரங்கள்!அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரைமார்கழி 27, 2045 / சனவரி 11, 2015
No comments:
Post a Comment