குரோகடைல்(crocodile), அலிகேட்டர்(alligator)
என இரண்டையும் நாம் முதலை என்றே சொல்கிறோம். பொருள் அடிப்படையில் இரண்டும்
சரிதான். பல்லி என்னும் பொருளுடைய கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது
குரோகடைல். பல்லி என்னும் பொருளுடைய இசுபானியச் சொல்லில் இருந்து உருவானது
அலிகேட்டர். மூலப் பொருள் ஒன்றாயினும் வெவ்வேறு வகையைக் குறிப்பதால் நாமும்
அவ்வாறே குறிப்பதே சிறப்பு. முதலை, இடங்கர், கராம் என முதலைகளின் வெவ்வேறு
வகைகள் பழந்தமிழகத்தினர் அறிந்திருந்தனர். குறிஞ்சிப்பாட்டில் ஒரே
வரியிலேயே(257)
கொடுந் தாள் முதலையும், இடங்கரும், கராமும்
என வருவதால் இவை முதலையின் வேறு பெயர்கள்
என எண்ணாமல், வேறுவகைப் பெயர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். முதலை(10),
கராஅம்(4), கராம்(20), கரா(1), எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன
போல், மகரம், ஆட்பிடியன், சாணாக முதலை முதலான வேறு வகைகள் இருந்தன எனப்
பின்னுள்ள இலக்கியங்கள் வழி அறிகின்றோம். விலங்கு வகைகளை நன்குணர்ந்த
அறிவியலுக்கு உரிய நாம் ஒரே பெயரில் அழைப்பதை விடப் பின்வருமாறு
வேறுபடுத்திக் குறிப்பிடலாம்.
இடங்கர்-crocodile
கராஅம்-alligator
முதலை-gavial (பாவாணர்: சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்: பக்கம் 43)
No comments:
Post a Comment