உயிர்ச்சத்து எனப் பலராலும் குறிக்கப்படும் ‘வைட்டமின்’ என்பதற்கு வேளாணியல், பயிரியல், வேதியியல் ஆகியவற்றில் ‘உயிர்ச்சத்து’, ‘வைட்டமின்’
என்றும். மீனியல், மனையியல் கால்நடைஅறிவியல் ஆகியவற்றில ‘உயிர்ச்சத்து’
என்றும் குறிப்பிடுகின்றனர். சிலர் ‘வைட்டமின்’ அல்லது ‘விற்றமின்’ என
ஒலிபெயர்ப்பு அடிப்படையில் அயற்சொல்லையே கையாளுகின்றனர்.
இதற்கு நாம் சங்கச் சொல் அடிப்படையில்
புதுச்சொல் அறிந்து பயன்படுத்த வேண்டும். உரன் (19) என்னும் சொல் மன உறுதி,
பற்றுக்கோடு என்னும் பொருள்களில் சங்க இலக்கியங்களில் வந்துள்ளன.
[சிறுபாணாற்றுப்படை (115,190); நற்றிணை (3-6, 333-5); குறுந்தொகை 95-5,
140-3); கலித்தொகை (12-10,68-6, 142-21); அகநானூறு : (92-11,107-15, 159-3,
210-5, 215-3, 349-6); புற, (60-9, 161-13, 190-11, 206-3)]. இவற்றுள் சில
அடிகள் வருமாறு:
ஒருதான் றாங்கிய உரனுடைய நோன்தாள் (சிறுபாணாற்றுப்படை : 115)
சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை (நற்றிணை : 3.8)
தீயோ ரன்னவென் உரனவித் தன்றே (குறுந்தொகை : 95.5)
உரன் உடை உள்ளத்தை, செய் பொருள் முற்றிய (கலித்தொகை : 12.10)
உருமுச் சிவந்து எறிந்த உரன்அழி பாம்பின் (அகநானூறு : 92.11)
உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன் (புறநானூறு: 60.9)
உடலுக்கும் உள்ளத்திற்கும் உறுதியையும்
பற்றுக்கோட்டையும் நல்கும் வாழ்வூட்டச் சத்தினை நாம் உரன் என்னும் சொல்லின்
அடிப்படையில் உரனி – Vitamin என்று அழைக்கலாம்.
உடலுக்கு வேண்டிய அளவு உரனி
கிடைக்காவிட்டால் உடல் நலிவுறும்; நோய்க்கு இடமாகும். அந்தந்த உரனியின்
இயல்பிற்கேற்ப ஒவ்வொன்றிற்கும் பெயர் சூட்டியுள்ளனர். எனினும் எளிமை கருதி
அ, ஆ, இ, (ஏ,பி,சி) என்பன போல் குறிப்பிடுகின்றனர். இவற்றையும் நாம்
தமிழிலேயே குறிக்க வேண்டும்.
சீரோத்தல்மியாவெதிர்
(anti-xerophthalmia) எனப்படும் உரனி உடல் வளர்ச்சிக்குக், குறிப்பாக, விழி
வெண்படலம் முதலான மென்படல மெய்ம்மிகளின் (திசுக்களின்) வளர்ச்சிக்குத்
தேவைப்படும் உரனி, தேவையான அளவு கிடைக்காவிட்டால், விழி வறண்டு மாலைக்கண்,
பார்வைப்பழுது முதலானவை ஏற்படும். விழி வறணிக்கு எதிரான (xerophthalmia)
இவ்வுரனியை உரனி-1 என்பர். (Vitamin A முதலானவற்றைத் தமிழில் அ, ஆ, இ என
எழுத்து அடிப்படையில் அல்லாமல் 1, 2, 3, என எண் அடிப்படையிலேயே
குறிக்கலாம்.)
வறட்சி, உலர்தல், வெறுமையாதல் முதலான
பொருள்கள் கொண்ட வறள்(4) சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது. தவிர்தல்
என்னும் சொல், நீங்குதல், ஒழிதல், விலகுதல், தணிதல் என்னும் பொருள்கள்
உடையது. தவிர் (1), தவிர்க்கும் (4), தவிர்க (1), தவிர்குதல் (1), தவிர்தல்
(1) என்பனபோல் சங்க இலக்கியங்களில் சொற்கள் இடம் பெற்றுள்ளன.
எனவே,நோய்க்கு எதிரான உரனி என்று சொல்வதை விட வரும் முன்பு தடுப்பதற்கு
உதவுவதைத் தவிர்(ப்பதற்கான) உரனி என்று சொல்வதே பொருத்தமானது. எனவே,
வறள்நிலையைத் தவிர்க்க உதவும் உரனியை வறள்தவிர் உரனி எனலாம்.
வயிற்றுவலிமருந்து, தலைவலி மருந்து என்றால் வயிற்று வலியைப் போக்குகின்ற,
தலை வலியை நீக்குகின்ற மருந்து என்றுதான் பொருள். இவைபோல் தவிர் என்பதைத்
தொகைப்பொருளாக அல்லது உட்பொருளாகக் கொண்டு வறள்உரனி எனச் சுருக்கமாகச்
சொல்லலாம்.
வறள்(தவிர்) உரனி அல்லது உரனி 1-anti-xerophthalmia vitamin or Vitamin A
உரனியின் பயன்பாட்டின் அடிப்படையில் இவ்வாறு கூறுவதுபோல் இதன் பற்றாக்குறையால் ஏற்படும் நோய் அடிப்படையில் இதனை
மாலைக்கண்(தவிர்) உரனி-anti-nyctalopia vitamin எனலாம்.
கரைம உரனிகள் (water-soluble vitamins) உரனி 2 ஆம் குழுவில் உள்ளன.
இவற்றுள் மீநலிநோய்(பெரி பெரி/beri beri), நரம்புத்தளர்ச்சிநோய் ஆகியனவற்றிற்கு எதிரான உரனி 2.01 நலிவு(எதிர்) உரனி ஆகும்.
சுதைய உரனி
வெள்ளி யன்ன விளங்குஞ் சுதையுரீஇ (நெடுநல் வாடை: 110)
ஆய் சுதை மாடத்து, அணி நிலா முற்றத்துள் (கலித்தொகை: 96.19)
சுதைவிரிந் தன்ன பல்பூ மராஅம் (அகநானூறு: 211.2)
மாரிச் சுதையின் ஈர்ம்புறத்து அன்ன (அகநானூறு: 346.2)
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப் (ஊன்பொதி பசுங்குடையார் : புறநானூறு : 378.6)
எனச் சுதையம்(சுண்ணாம்பு) குறிக்கப்பட்டுள்ளது. சுதையத் தேவைக்கான உரனியைச் சுதைய உரனி எனலாம்.
மலட்டெதிர் உரனி
எதிர் என்னும் சொல் பின்வருமாறு பல இடங்களில் எதிர்நிலையைக் குறிப்பிட்டுக் கையாளப்பட்டுள்ளது.
கெடுதியும் உடையேன் என்றனன் அதன்எதிர் (குறிஞ்சிப் பாட்டு : 142)
யாணது பசலை என்றனன் அதன் எதிர் (நற்றிணை: 50.7)
வானோர் பிரங்கும் ஒன்றோ அதனெதிர் (குறுந்தொகை : 194.2)
போர்எதிர் வேந்தர் தார்அழிந்(து) ஒராலின் (பதிற்றுப்பத்து : 23.17)
எதிர் எதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து (கலித்தொகை : 44.2)
கருத்தரியாமைக்கு-மலட்டு நிலைக்கு-எதிரான உரன் தருவதை மலட்டெதிர் உரனி என்று சொல்லலாம்.
கசிவெதிர் உரனி
ஒழுகுதல், ஊறுதல்
கசிவு (2)புறநானூற்றில் இரு பாடல்களில்
(60-4, 161-13) கசிவு குறிக்கப்பெறுகிறது.
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக் (நற்றிணை: 168.3) என்பதுபோல்,
கசிந்து, கசிந்த, கசிந்தவர்என்றெல்லாம் புலவர்கள் கையாண்டுள்ளனர்.
கசிவிற்கு எதிரான உரனி, கசிவு(எதிர்) உரனியாகும்.
நலிவெதிர் உரனி
நலிதந்த, நலிதந்து, நலிதரின், நலிதரும்,
நலிறல், நலிறலின், நலிந்து, நலிய, நலியாது, நலியின், நலியும், எனப் பலவாறாக
நலிவு அடிப்படையிலான சொற்களைச் சங்கப் புலவர்கள் கையாண்டுள்ளனர்.
மெலிவு, வருந்து என்பன நலிவு என்பதற்குப் பொருள்களாகும். நலிவிற்கு எதிரான உரனி, நலிவு(எதிர்)உரனி ஆகும்.
நிற ஊட்டுரனி
நிறம் (72) என்னும் சொல்லையும் ஊட்ட (3),
ஊட்டல் (1), ஊட்டலென் (1), ஊட்டி (21), ஊட்டிய (3), ஊட்டின (1), ஊட்டு (1),
ஊட்டுதும் (1), ஊட்டும் (9), ஊட்டுறு (3), ஊட்டுவார் (1), ஊட்டுவாள் (1),
ஊட்டுவோள் (1) என ஊட்டு என்னும் சொல்லின் அடிப்படையிலான பல சொற்களையும்
சங்கப் புலவர்கள் கையாண்டுள்ளனர். இவற்றின் அடிப்படையில் நிறம்
ஊட்டுவதற்கான உரனியை நிற (ஊட்டு) உரனி எனலாம்.
இவைபோல் வெடி(2)ப்பிற்கு எதிரான உரனி வெடிப்பு(எதிர்)உரனி ஆகும்.
No comments:
Post a Comment