Tuesday, December 12, 2017

தமிழக மீனவர்களைச் சுடுவதற்குத்தான் கடற்படையா? காப்பதற்கு இல்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்


தமிழக மீனவர்களைச் சுடுவதற்குத்தான் கடற்படையா?

காப்பதற்கு இல்லையா?

  “தமிழக மீனவர்களைச் சுடுவதற்குத்தான் கடற்படையா? காப்பதற்கு இல்லையா?” என்ற வினாவை மக்கள் எழுப்புவதே தவறுதான். தமிழக மீனவர்களைக்  காப்பதற்கு மாறாகப் பல வகைகளிலும் தாக்குகின்ற, சுடுகின்ற, அழிக்கின்ற இந்தியக் கடலோரப்படை அல்லது கப்பற் படை அல்லது இவை போன்ற அமைப்பு எப்படி அவர்களைக் காக்க முன்வரும்? தங்கள் பணிகளை இயற்கையே எளிதாக்கிவிட்டது என மகிழத்தானே செய்யும்? அதுதான் இப்பொழுது நடக்கிறதோ என மக்கள் ஐயுறுகின்றனர்.
இதுவரை இல்லாத அளவிற்குக் குமரி மாவட்ட மீனவர்கள் கொடும் புயலால் அல்லலுற்றுள்ளனர். தம் சுற்றத்தார்காணாமல் போயுள்ளனரா?  மடிந்து விட்டனரா? என ஏதும் புரியாமல் மீனவர் குடும்பங்கள்  வேதனையில் மூழ்கியுள்ளனர். ஒரு பக்கம் இல்லங்களும் உடைமைகளும் அழிவு! மறு பக்கம் குடும்பத்தினருக்க ஆதாரமான அன்புச்சுற்றங்கள் கடலில் காணாமல்  போனஅவலம்!
எத்தனையோ  மீனவர்கள்  பிற மாநிலக் கடலோரங்களில் கரை ஒதுங்கியதாக அரசு தெரிவிக்கிறது. அஃது உண்மையெனில், அவர்களைக் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளச் சொல்லலாமே! தாழ்ந்து பறந்து மக்களை ஒடுக்கப் பயன்பட்ட உலங்கூர்திகள்(helecopters)  மீனவர்களைக் கண்டறிய பறக்காதது ஏன் என மக்கள் வினவுவதில் என்ன தவறு?
அரசும் நிழலரசும் துயர் துடைப்புப் பணிகளில் விரைந்து இறங்காமல் மீனவர்களை நட்டாற்றில் விடுவது ஏன்?
மத்திய மாநில அரசுகள் மீனவர்களைக் காப்பாற்றவும் மீனவர் குடும்பங்களைக் காப்பாற்றவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை, திருவாரூர் முதலான புயலால் துன்புற்றுள்ள பிற மாவட்ட மக்களுக்கும் உரிய உதவிகளை விரைந்து செய்ய வேண்டும்.
கடல்கோள்அழிவினாலும் புயல் அழிவினாலும் இடறுற்ற சென்னையைக் காப்பாற்றிய அன்பர்கள், குமரிமக்களைக் காப்பாற்றவும் முன்வரவேண்டும்.
அரசுகள் துயர் துடைப்பு உதவிகளை அதிகரித்தும் உடன் உரிய மக்களுக்குச் சேரவும் உடரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மீனவர்கள் மட்டுமல்ல! குமரி மாவட்ட மக்களே கொடும்புயலால் கடும் அழிவைச் சந்தித்துள்ளனர். புயலால் துன்புறுவோருக்கு விரைந்து உதவி செய்யும் கேரள அரசைப்பார்த்துக் குமரி மாவட்ட மக்கள் தங்களைக் கேரளத்துடன் இணைக்குமாறும் குரல்  கொடுக்கின்றனர். அரசிற்கும் நாட்டிற்கும் பெரும் இழிவல்லவா இது!
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், வஞ்சினம் கூறும் பொழுது
என் நிழல் வாழ்நர் செல் நிழற் காணாது
கொடியன்எம் இறை எனக் கண்ணிர் பரப்பிக்
குடிபழி துாற்றும் கோலேன் ஆகுக! (புறநானூறு 72)
என்கிறார்.
”தான் எடுத்த செயலை முடிக்காவிட்டால், ஆட்சி நிழலில் வாழும் மக்கள் ஆட்சியாளன் கொடுமை எனக் கண்ணீர்ப் பெருக்கித் தன்னைத் தூற்றட்டும்” என்கிறார் பாண்டிய வேந்தர் நெடுஞ்செழியன். மக்கள் தமக்கு எதிராகத் தூற்றுவதைப் பெரும் பழியாக்க் கருதினர் அக்கால ஆட்சியாளர்களாகிய பழந்தமிழ் வேந்தர்கள். இன்றைய ஆட்சியாளர்கள் அதனை உணர வேண்டும்.
இந்நாட்டைவிட்டு வெளியேறுவோம் என்பவர்கள் வாழ்த்திக்கொண்டா இருப்பர்! பழி தூற்றிக் கொண்டிருக்கமாட்டார்களா? அதனைப் போக்க ஆள்வோர் முயல்க!
பழந்தமிழர் நெறியை உணர்ந்து இன்றைய ஆள்வோரும் குடிமக்கள் பழி தூற்றாமல் வாழ்க!
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல். (திருவள்ளுவர், திருக்குறள் 1021)
 சோர்வு அடையாமல் கடமை ஆற்றுபவர்க்கு இணையற்ற பெருமை கிட்டும் என்கிறார் அல்லவா, தெய்வப்புலவர் திருவள்ளுவர். அத்தகைய பெருமையை அடைய ஆள்வோரும், மக்கள்சார்பாளர்களும், அதிகாரிகளும், தொண்டர்களும்அன்பர்களும் முயல்க!
பாதிப்புற்றோர்களின் துயரங்கள் விலகட்டும்! இன்பம் இணையட்டும்!
-இலக்குவனார் திருவள்ளுவன்

Monday, December 11, 2017

தினகரனுக்கு வெற்றிச்சூழலை உருவாக்கும் தேர்தல் ஆணையம் – இலக்குவனார் திருவள்ளுவன்

தினகரனுக்கு வெற்றிச்சூழலை உருவாக்கும் தேர்தல் ஆணையம்

 அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவருவது அனைவரும் அறிந்த உண்மை.  இந்தச் சூழலில்  சசிகலா அல்லது தினகரன்பொறுப்பிற்கு வந்தால் வெறுப்பு  மேலும் மிகுதியாகும் என்ற சூழலே இருந்தது. ஆனால், இவர்களின் வளர்ச்சி கண்டு அஞ்சிய மத்திய ஆட்சி, இவர்களை வேரறுப்பதாக எண்ணி மக்களிடையே  செல்வாக்கை உண்டாக்கி வருகிறது.
 நெருக்கடிநிலையினால் ஏற்பட்ட இன்னல்களால் மக்கள் இந்திராகாந்திக்கு 1977 இல் தோல்வியைத் தந்தனர். அவர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். ஆனால் அவர் 1980 தேர்தலில் வெற்றிபெற்று அரசை அமைத்தார். அவரது  அணியே/கட்சியே அ.இ.பே.(காங்கிரசு) ஆனது. இதுபோல்சூழல்  அதிகமுகவிலும் இப்பொழுது உள்ளது.
  மக்களின் ஆதரவும் ஆதரவின்மையும் மாறிமாறி நிகழ்வனவே! கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் மக்களால் ஏற்கப்பெற்றால் ஒருவர் ஆட்சியமைக்கவும் முடியும். இதுவே நம்நாட்டு அரசியல் சூழல். இச்சூழலில் தினகரன் நிலைப்பாட்டைப் பார்த்தால் ஆட்சிகளின் செயல்பாடுகளால்,  தாழும் நிலையிலிருந்த அவர் ஆளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார் என்பதே உண்மை.
 அவருக்கு எதிரான தேர்தல் ஆணையத்தின் அல்லது அரசுகளின் நடவடிக்கை யாவும் அவருக்க்கு உரமாகவே அமைகின்றன.
 இப்பொழுது எந்தக்காரணம் கூறி, இரட்டை இலை பன்னீர்-எடப்பாடிஅணிக்குத் தரப்பட்டதோ அந்தக் காரணத்தைக் கூறித்தான் சசிகலா அணிக்கு இரட்டை இலை கோரப்பட்டது. அப்பொழுது ஏற்கத்தக்கதல்ல என்ற காரணம் இப்பொழுது பாசகவின் செல்லப்பிள்ளைகளுக்கு வழங்க ஏற்றதாய் அமைந்துவிட்டது. இதனால், நடுநிலையாளர்களும் பாசகவின் ஆதிக்கத்தை விரும்பாத கட்சியினரும் தினகரன் பக்கம் சாய்கின்றனர். இரட்டை இலை மறுப்புதினகரனுக்கு ஆதாயம் என்னும் நிலையைத்தான் உருவாக்கிவருகிறது.
பன்னீருக்கு ஆதரவு என்பது மாயை. எடப்பாடி பழனிச்சாமிக்’கு ஆதரவு என்பது ஆட்சி தரும் கவசம். நாளை இந்தக் கவசம் அகற்றப்பட்டால், ஆதரவு காணாமல் போய்விடும்.  இந்த உண்மை அவர்களுக்கும் தெரியும். இருந்தும் அதிகாரவலிமையுடையவர்களின் ஆட்டத்தால் இவர்கள் ஆட வேண்டிய நிலையில் உள்ளனர். இருப்பினும்தினகரனைக் கண்டு அஞ்சி எடுக்கும் நடவடிக்கைகள் அவருக்குக் கேடயமாக மாறுகின்றன.
இரட்டை இலை இல்லை என்றவர்க்குச் சின்னமாகத் தொப்பி தருவதில் என்ன அச்சம்? அதுதான் தரவில்லை, சமைகலன்(குக்கர்)தந்த பின்னும் ஏன் அச்சம்?  இதுவரை தேர்தலில் சின்னம் தரப்படும் முன் மேற்கொள்ளும்  தேர்தல் பரப்புரைக்குத் தடை விதித்ததில்லை. ஆனால், சின்னம் இல்லாமல் பரப்புரை கூடாது என 4 நாள் தினகரன் தரப்பாருக்குப் பரப்புரைக்குத் தடை ஏன்? இத்தகைய அச்சமே தினகரனின் செல்வாக்கைக் கூட்டுகின்றது.
அதிமுகவின் மீதுள்ள வெறுப்பு தினகரன் பக்கம் சாராமல் அவரைக் காப்பாற்றும் செயல்களே அவருக்கு எதிரான நடவடிக்கைகள்.
 அதிமுகவில் தேவை ஒற்றுமையே!
ஆளும் அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் திறமைமிக்கவர்களே! இல்லாவிட்டால், இப்பொழுது பதவிகளில் இருக்கமாட்டார்கள். அதிமுக தோல்வியுற்றால், பாசகவின் ஆளுமைதான்  காரணம் எனச் சொல்லி அதன் ஆதிக்கத்தைக் குறைக்கும் வாய்ப்பு ஏற்படும் என எண்ணி அதன்  தோல்வியை அதிமுகவினரே விரும்புகின்றனர். இன்றைய சூழலில் அதிமுகவில் உள்ள மனக்குறைவர்கள் வலிமையான எதிர்க்கட்சியான திமுகவின் பக்கம் சென்றிருக்க வேண்டும் ஆனால், அத்தகைய ஆளும் வாய்ப்பைத் திமுக பெறவில்லை. அதற்குரிய நிலையான வாக்குவங்கி பெருகவில்லை. அதிமுகவில் உள்ளவர்கள் அதிமுகவில் உள்ள ஏதேனும் ஓர் அணியின் பக்கம்தான் இருக்க விரும்புகின்றனர். தினகரனின் சிரிப்பும் அரவணைப்பும் தொண்டர்களை அவர் பக்கம் ஈர்க்கின்றன. எனவே, எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு இணைப்பு அரசியலை நாடுவதே அதிமுகவினருக்கு நன்மை தரும்.
சமவாய்ப்பு கோருவது பன்னீர் அணிக்கு ஏற்றல்ல!
இரண்டு அணிகள் இணைந்ததாகச் சொல்லப்பட்ட  பின்னரும் பன்னீர் அணி, பழனிச்சாமி அணி எனச் சொல்லிக்கொண்டிப்பதால் பயனில்லை. பழனிச்சாமி அணியில் சமஉ எண்ணிக்கையில் ஏறத்தாழ பத்தில் ஒரு பங்கு  சமஉறுப்பினர்களை மட்டும்  கொண்டிருந்த பன்னீர் அணியினர் இணைப்பிற்குப் பின்னர்ச் சமவாய்ப்பு கேட்பதும் முறையல்ல! இணைந்ததாகச் சொன்ன பிறகு அந்த அணி, இந்த அணி என்று  சொல்வது எப்படி இணைந்ததாகும்? அதிமுகவின் ஒற்றுமை இன்மைதான் பாசகவின் அடிமையாக இருக்கச்செய்கிறது என்பதை உணர வேண்டும். எனவே, தங்கள் நலனுக்காகவும் கட்சி நலனுக்காகவும்  ஒரே கட்சியாக இணைய வேண்டும்.
 அதே நேரம் இவர்கள், சசிகலா, சசிகலா குடும்பத்தினரைப் பணிந்து நின்றவர்களே! பன்னீர் பிரிந்து நின்றபொழுது ஏன் அவ்வணியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கவில்லை. நாளை அவ்வணி தன் பக்கம் வரும் என்ற எதிர்பார்ப்பில்தான்! பாசக பின்னால் இருந்து இயக்காவிட்டால், ஆளும் அதிமுகவினர், இன்றைக்கும் சசிகலா-தினகரன் துதிபாடிக்கொண்டுதான் இருப்பர். இதனை அக்கட்சித்தலைவர்கள் உணர வேண்டும். தினகரனும் இணைந்த அதிமுக செயல்படுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்து கட்சியைக் காப்பாற்ற வேண்டும்.
இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றால் அல்லது ஆளுங்கட்சியைவிடக் கூடுதல் வாக்கு பெற்றால், கட்சியில் பெரும்பான்மையர் அவர் பக்கம் சென்றுவிடுவர். நிழலாட்சியால் முதலிடத்தைப் பெற இயலவில்லை என்றால், தேர்தலே ஒத்திவைக்கப்படும்.
  பொதுத்தேர்தல் வந்தால் திமுக ஆட்சியைக் கைப்பற்றும் சூழலும் வரலாம். அதிமுக எதிர்க்கட்சியாக மாறினாலும் ஒற்றுமை இருந்தால்தான் கட்சி நிலைத்து நிற்கும். ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதைவிடக் கட்சி நிலைக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை. எனவே, எந்நிலை வந்தாலும் கட்சிக்குத் தேவை ஒற்றுமை என்பதைக் கட்சித்தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதிமுகவின் ஒற்றுமை இன்மை அதன் வலிமையைக் குறைத்து நாட்டிற்குக் கேடு நல்கும். “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதைக் கட்சியினர் புரிந்து கொள்  வேண்டும்.
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. (திருவள்ளுவர், திருக்குறள் 521)
அதிமுகவினர் தங்கள் பழமையை நினைந்து இணைந்து செயலாற்ற வேண்டும்! ஓங்குக ஒற்றுமை!
  • இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, December 10, 2017

தமிழ் காக்கும் தலைமை நீதிபதிக்குப் பாராட்டும் வேண்டுகோளும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் காக்கும் தலைமை நீதிபதிக்குப் பாராட்டும் வேண்டுகோளும்!

  சீர்திருத்தம் என்று சொல்லிக் கொண்டு தமிழ் எழுத்துகளைச் சிதைக்கும் முயற்சிகளில் காலந்தோறும் யாரேனும்  ஈடுபட்டுவருகிறார்கள். அத்தகைய முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி இடும் வகையில் தலைமை நயனாளர்உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி,  மாண்பமை இந்திரா(பானர்சிஅம்மையார் மாண்பமை நீதிபதி செ.நிசாபானு அவர்களுடன் இணைந்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
 தமிழ்க்காப்புப் பணிகளில் தங்களையும் இணைத்துக் கொண்டு அருமையான தீர்ப்பு வழங்கியுள்ள அம்மையார் இருவரையும் தமிழுலகம் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். பிற நயனாளர்களும் இதுபோல் உணர்வுடன் செயல்பட்டுத் தீர்ப்பு வழங்கவும் வேண்டுகிறோம்.
 மதுரையில் எழுத்துச் சிதைவாளர் ஒருவர்  பொதுநல மனு என்ற பெயரில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் எழுத்துச் சிதைவிற்கான உயர்நிலைக்குழு அமைக்கக் கருதிப்பார்க்க அரசிற்கு ஆணையிடுமாறு வழக்கு தொடுத்திருந்தார்.
“தமிழ் உலகமொழி யாதலின் தமிழ்நாட்டிலுள்ள ஒருவர் அல்லது சிலரின் முடிவிற்கிணங்கத் தமிழ்தொடர்பான நிலைப்பாட்டை வரையறுக்கக்கூடாது. இதனை எப்பொழுதும் நினைவில்கொண்டு உலகளாவிய  கருத்துகளையே பெற வேண்டும்.”  என்னும் நம்கருத்தை அரசு ஏற்றுக்கொண்டதுபோல் நயனாளர்களும் – நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வழக்கில் மாண்பமை நீதியாளர்கள் இருவரும்,
“தமிழ்,  பாரம்பரியமிக்க பழமையான மொழி. வெளிநாடுகளில், குறிப்பாகச் சிங்கப்பூரில், தேசிய மொழியாக உள்ள, ஒரே இந்திய மொழி தமிழ். அத்தகைய மொழியில் மாற்றம் கொண்டு வர, உத்தரவிட முடியாது. மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையதல்ல.
நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில், மனுதாரர், தேவையின்றி மனு செய்துள்ளார். அவருக்குத் தண்டம்(அபராதம்) விதிக்கலாம். ஆனால் விதிக்கவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்கு எதையும் தொடுக்கக் கூடாது” என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். (தினமலர்)
 “உடலாம் எழுத்தை அழித்த பின் உயிராம் மொழி வாழ்வது எங்ஙனம்?” எனத் தமிழ்ப்போராளி இலக்குவனார் நமக்குஅறிவுறுத்தியுள்ளார்அதற்கிணங்க, தமிழ் மொழிக்கான உடலாம் தமிழெழுத்தைக் காத்த மாண்பமை நயனாளர்களுக்கு – நீதிபதிகளுக்கு நம் வணக்கமும் வாழ்த்தும் உரித்தாகுக!
  மேலும், நீதிபதிகள் வழக்குகளை விரைவாக  உசாவித் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அறிவுறுத்தி வருகிறார் .
”நீதிமன்றங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை நீண்ட நாள் நிலுவையில் வைக்காமல், உடனுக்குடன் அவற்றை உசாவி  நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்; ’தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி’ எனக் கூறுவதுபோல், அவசர கதியில் வழங்கப்படும் நீதி புதைக்கப்பட்ட நீதியாகும். அதனால், தீர விசாரித்து சரியான நீதி வழங்க வேண்டும்;”  எனவும் கடலூரில் மாவட்டக்  குற்றவியல் நீதிமன்றக் கட்டட திறப்பு விழாவின் பொழுது அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், உச்சநீதிமன்றம் தெரிவித்தவாறு நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் மார்ச்சு 2018 இற்குள் முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 காலத்தாழ்ச்சிகளால் நீதிமன்றங்களே நீதியைப் புதைகுழிக்குள் தள்ளும் போக்கிற்கும் முற்றுப்புள்ளி இடும் வகையில் நடவடிக்கைகள் எடுத்துவரும் மாண்பமை தலைமை  நீதிபதிஅவர்களைப் பாராட்டுகிறோம். இது குறித்துப் பின்வருமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அரசுப்பணியாளர் வழக்குகள் நீதிமன்றங்களில் தூங்கிக் கொண்டுள்ளன. ஓய்விற்குப் பின்பும் பணி வரன்முறை செய்யப் பெறாதவர்கள், ஓய்வுஊதியம் பெறாதவர்கள், உரிய ஓய்வுப்பயனை அடையாதவர்கள் எனப் பலர் நீதிமன்றக் கதவுகளைத் தட்டிக் கொண்டு அவை திறக்கப்படாமையால் அல்லலுறுகின்றனர்.  அனைத்து அரசுப்பணியாளர் தொடர்பான வழக்குகளையும் மக்கள்நீதிமன்றம் போல்  வாரம் ஒரு முறை உயர்நீதிமன்றங்ள் உசாவித் தீர்க்கச்செய்ய வேண்டும்.
  குற்ற வழக்குகள், உரிமைவழக்குகள், மேல் முறையீட்டு வழக்குகள், இட்டீடுகள்(disputes),  நிறுவன வழக்குகள், பல்வகை வழக்குகள், பேராணை வழக்குகள்  என்பன போன்று  உள்ள அனைத்து வழக்குகளையும் ஒவ்வொரு நாளில் குறிப்பிட்ட வகை வழக்குகள் என வகைப்படுத்தி, அவற்றையும் விரைவில் முடிக்க வேண்டும்.
 திங்கள் முதல் வியாழன் முடிய வழக்கமான கேட்புகளை (hearings)  எடுத்துக் கொள்ள வேண்டும்; அவசர வழக்குகளை வழக்கம்போல் எந்நாளிலும் உசாவலாம்; 6 மாதங்களுக்குச் சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டு, வெள்ளி, சனிக்கிழமைகளில் குறிப்பிட்ட வகை வழக்ககுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு  விரைவில் முடிக்க ஆவன செய்ய வேண்டும்.
படிக்கும்பொழுது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதுபோல் தோன்றலாம். பின்பற்றினால் சிறப்பாக நடைமுறைக்கு வரும்.
ஒரு முன்நிகழ்வைக் குறிப்பது இதற்கு வழிகாட்டியாய் அமையும்.
நான் 1979-84 இல் இளஞ்சிறார் நடுவர் மன்ற(Juvenile Court) நன்னடத்தை அலுவலராகப் பணியாற்றினேன்.
எல்லாக் காவல் நிலையங்களில் இருந்தும் நாள்தோறும் சிறுவர் வழக்குகள் வரும். ஆனால், பல்வேறு பணிகளில் உள்ள காவலர்கள்  நாள்தோறும் கேட்பிற்கு வர இயலாமல், வழக்குகள் ஒத்திவைக்கப்படும் சூழல் இருந்தது.  நன்னடத்தை அலுவலர்களும் களப்பணிச்சூழலால் நாள்தோறும் நடுவர் மன்றம் வருவதில் சிக்கல் இருந்தது.
நன்னடத்தை அலுவலர்கள் பணி வரம்பில் சென்னைப் பெருநகரம் 5 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி முடிய முறையே முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் வட்டத்திற்குரிய வழக்குகள் மட்டும் கேட்பிற்கு வரும் வகையில் வழக்குகள் ஒத்தி வைக்கப்பட வேண்டும். அவ்வட்ட வரம்பிற்குரிய காவல்துறையினர் தவறாது அன்று வரவேண்டும். வழக்கு தொடுக்கும்பொழுது முதல் நாளன்று இருவாரக் கணக்கு பார்க்காமல், அடுத்து உரிய வட்டத்திற்குரிய நாளன்று வழக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும். பின்னர் அவ்வழக்குகள் தொடர்ச்சியாக அந்தக் கிழமையில் வருமாறு ஒத்தி வைக்கப்பட  வேண்டும். இதனால் காவலர்கள், நன்னடத்தை அலுவலர்கள் ஆகிய இருதரப்பாரும் தங்கள் பணிகளை ஒழுங்கு செய்துகொண்டு உரிய கிழமையில் தவறாமல் வர இயலும என்றேன்.  சிறார்மன்ற நடுவரும் தலைமைப்பெருநகர நடுவரும் ஏற்றுக் கொண்டு அதனைப் பின்பற்றும் வகையில் நடைமுறைப்படுத்தினர். பெருமளவிலான வழக்குகள் நிலுவையில்லாமல் முடிவிற்கு வந்தன.
. இதே போன்று குறிப்பிட்ட நாளில் தொடர்புடைய வழக்குகள்மட்டும் வரும் வகையிலும் அரசுத்தரப்பில் மனித நேயத்துடன் அணுகும் முறையிலும் செயல்பட்டால் விரைவில் வழக்குகள் முடிவிற்கு வரும். குடும்ப நீதிமன்றம் போல்  உரிமை வழக்குகளிலும் இரு தரப்பாருக்கும் இடையே இணக்கம் காணும் வகையில் அறிவுரை மன்றம் ஒரு அமைக்கப்டுவதும் உரிமை வழக்குகளை விரைவில் முடிவிற்குக் கொண்டு வரும்.
எனவே, மாண்பமை தலைமை நீதிபதி அவர்கள் இதுபோல் நடவடிக்கை எடுத்து வழக்குகள் விரைவில் முடிக்கப்பட ஆவன செய்ய வேண்டுகிறோம்.
மற்றொரு முதன்மையான வேண்டுகோள். நமது உயர்நீதிமன்றம்  சென்னை உயர்நீதிமன்றம் அல்ல! எனவே, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் அல்லது தமிழ்நாடு-புதுச்சேரி நீதி மன்றம் என்றும் மதுரைக் கிளை தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை என்றும் அழைக்கப்பெற ஆவன செய்யவும் வேண்டுகிறோம்.
வெல்க தலைமை நீதிபதியின்  பணிகளும் தொண்டுகளும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல 216, கார்த்திகை 24 –மார்கழி 01,  2048 /   திசம்பர் 10  – திசம்பர் 16,  2017
நீதிபதி நிசாபானு

Thursday, December 7, 2017

இந்தியாவின் எதிர்காலம் குசராத்தியர் கைகளில்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 இந்தியாவின் எதிர்காலம் குசராத்தியர் கைகளில்!

  பேச்சுத்திறன் மிக்கவன், பொய்யை மெய்யென நம்ப வைக்கும் திறமை பெற்றவனாக இருக்கிறான்; வறுமையில் வாழ்பவர்களையும் வளமாக வாழ்வதுபோல் நம்ப வைக்கும் ஆற்றல் உடையவனாக இருக்கிறான்; இன்னலில் வாழ்பவர்களிடமே இன்பத்தில் வாழ்வதுபோல் கருத வைக்கும் வல்லவனாக இருக்கிறான். இச்சூழலில் பொய்யர்களைக் குறை சொல்வதா? தங்கள் நிலையைக் கூட உணரா மக்களுக்காக இரக்கப்படுவதா? அறியாமை இருளில் மூழ்கியிருக் கச் செய்யும் ஆட்சியாளர்களைக் குறை சொல்வதா?
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்
மெய் போலும்மேமெய்போலும்மே
(அதிவீரராம பாண்டியர், வெற்றிவேற்கை 73)
  இதற்கு இலக்கணமாகப் பலரைக் குறிப்பிடலாம்.  குறிப்பாகப் பாசக வினரும் அவர்களுள்ளும் நரேந்திரர் முதலான தலைவர்களும் சிறப்பானவர்கள். குசராத்தைப்பற்றித் தவறான தகவல்களைக் கூறும் பொழுது அம்மாநில மக்களே உண்மை என நம்பும் பொழுது பிற மாநிலத்தவர் நம்புவதில் என்ன வியப்பு? எனினும் மெல்ல அவர்களின் உண்மையுரு வெளி வந்து  கொண்டுள்ளது. பாசக ஆட்சியால் இந்தியா பல  இன்னல்களை எதிர்நோக்கி வருகிறது. இந்தியா பிளவை  நோக்கிய பயணத்தில் செல்வதற்குப் பாசகவின் மொழி வெறி,  சமய வெறி, இன  வெறி காரணமாக உள்ளன என மக்கள்   நல நேயர்கள் கூறிவருவது உண்மையன்றோ!
  குசராத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காகத் தணிந்த(ஒடுக்கப்பட்ட) இளைஞர்கள் நால்வரைப் பொதுஇடத்தில் கட்டி வைத்து அடித்தது போன்ற அவல நிகழ்வுகள்!
 குசராத்தில் முறுக்குமீசை வைத்திருந்த பியூசு பார்மர் என்னும் தணிந்த(ஒடுக்கப்பட்ட) பிரிவைச்சேர்ந்த இளைஞரைக் கட்டிவைத்து அடித்தது போன்ற கொடுஞ்செயல்கள்!
  குசராத்து கலவரத்தில் நரேந்திர அரசால் ப.த.ச.(பொடா)வின் கீழ்ச் சிறைக்குத் தள்ளப்பட்ட 287 பேர்களில் 286 பேர் இசுலாமியர் என்பது போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள்!
 தணிந்த(ஒடுக்கப்பட்ட) சாதியினருக்கு எதிரான  வன்கொடுஞ் செயல் புரிந்தவர்களில் குசராத்தில் தண்டனை  பெற்றவர்கள் 3% -இனருக்கும் குறைவே! என்னும் அவலம்!
  குசராத்து இன்பம் விளையும் மாநிலம் அல்ல என்பதற்கு இப்படிப்பட்ட செய்திகளை அல்லது உண்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
  பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு-சேவை வரி போன்ற பல நடவடிக்கைகளால் மக்கள் அடைந்துள்ள மீளாத்துயரம் போன்றவை தொடரக்கூடா என்றால் குசராத்தியர் நாட்டு  நலன் கருதி வாக்களிக்க வேண்டும்!
  சமற்கிருத வெறியாலும் இந்தி வெறியாலும் எடுக்கப்படும் நடவடிக்கைகளால், பிற தேசிய இனங்களுக்கு எதிரான அழிசெயல்களால் இன்னலுக்கு ஆளாகிறவர்கள் குசராத்தியரும்தான்!
 இந்தியாவில் மொழிவழித்தேசிய இனங்கள் மேம்படவும் எல்லா பிரிவு மக்களும் பிரிவு இல்லாத ஒருமை நிலையில் வாழவும் பாசக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி இட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
  தனக்கு அறுதிப்பெரும்பான்மை இருப்பதால், நாடு முழுவதும் முழுமையாகத் தன் பக்கம் இருப்பதாக எண்ணிக் கொண்டு, மக்களாட்சி முறைக்கு எதிரான நடவடிக்கைகளில் பாசக துணிவாக ஈடுபடுவதன் ஒரு பகுதிதானே தமிழ்நாட்டில் பாசகவின் நிழல் ஆட்சி!குசராத்தில் மீண்டும் பாசக வெற்றி பெற்றால் இது போன்ற அவலங்கள் தொடர்நிகழ்வாகுமல்லவா? குசராத்தில் அடிவிழுந்தால் மக்களாட்சியின் கழுத்தை நெரிக்கும் பிடி தளருமல்லவா?
அந்தப்பணியைச் செய்ய வேண்டியது குசராத்து மக்களல்லவா?
குசராத்து மக்களே! உங்கள் சட்டமன்றத்திற்கு மட்டுமான தேர்தல் அல்ல இது!
பாசகவின் போக்கை நல்வழிப்படுத்துவதற்கான தேர்தல் இது!
பாசக மீது விழும் முத்திரை பிறரை அழுத்தும் முத்திரை!
பாசகவினருக்கு எதிரான வாக்களிப்பு என்பது இந்தியாவிற்கான திருப்பு முனையாக அமையும் கைகாட்டி!
  புதுதில்லி, புதுச்சேரி, தமிழ்நாடு எனப் பல மாநிலங்களிலும் மடிந்து வரும் மக்களாட்சியை மலர்ச்சிபெறச்செய்யும் மந்திரக்கோல் உங்கள் கைகளில் வாக்குஆயுதமாக உள்ளது!
 குற்றப்பின்னணியினர் பெரும்பான்மையர் போட்டியிடும் உங்கள் மாநிலத் தேர்தலில் நல்லாரைப்பார்த்து வாக்களியுங்கள்!  அதே நேரம், இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது என்பதை உணர்ந்து வாக்களியுங்கள்!
 நீங்கள் நாட்டுமக்களுக்கு ஆற்றும்அருந்தொண்டாகக் கருதி  வாக்களியுங்கள்!
 நீங்கள் கருதுவதுபோல் குசராத்தில் இந்தியா இல்லை! இந்தியாவில்தான் குசராத்து உள்ளது என்னும் உண்மையை உணர்ந்து வாக்களி’யுங்கள்!
  உங்களது சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை! இந்தியா நல்லாட்சி நோக்கி நடைபோடுவதற்கான பாதையை ஆளுவோருக்கு வழிகாட்டுவதற்காகவும்தான் வாக்களிக்கிறீர்கள் என்பதை உணர்ந்து வாக்களியுங்கள்.
 இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது என்பதை உணர்ந்து வாக்களியுங்கள்!
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். (திருவள்ளுவர்திருக்குறள்: 517)
அன்புடன் வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive