Monday, April 30, 2018

அதிமுக-வைச் சிதைக்கிறாரா திவாகரன்? – இலக்குவனார் திருவள்ளுவன்


அகரமுதல

அதிமுகவைச் சிதைக்கிறாரா திவாகரன்?

  திவாகரன் மீது தினகரனுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் உள்ள சினம்  சரிதான் என்று தோன்றுகிறது.   நேற்று வெளியான 2.5.18 நாளிட்ட  இளைய விகடனாகிய சூனியர் விகடனில் திவாகரன் தெரிவித்த கருத்துகள் வந்துள்ளன. அதைப் படித்ததும் திவாகரன் மனம் கலங்கிய நிலையில் உள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.  நாம் எதிர்பார்த்தது நடக்காத போது அல்லது நம் நம்பிக்கை பொய்க்கும்போது இத்தகைய மனநிலை ஏற்படுவது இயற்கைதான்.  ஆனால், இந்த நிலைக்குக் காரணம் அவர்தான் என்பதை அவரது வாக்குமூலமே உறுதிப்படுத்துகிறது.
  பொதுவாகத்,  தினகரன் தன் நெருங்கிய உறவினர்களுக்குப்  பொறுப்பு கொடுப்பதில்லை; திவாகரன், அவர் மகனுக்குக்கூடப் பொறுப்புகள் தரவில்லை; எனவே புகைச்சல் இருப்பதாகத்தான் ஊடகங்களில் தெரிவித்து வந்தனர்.
  ஆனால், திவாரகன் தொடக்கத்திலிருந்தே தன் உடன்பிறந்தாள் மகனும் உடன்பிறந்தான் மருமகனுமான தினகரனைக் காழ்ப்புணர்ச்சியுடன் பார்த்து அழிக்க முயன்றிருக்கிறார் என்பது இப்பொழுது புரிகிறது.  “தினகரனை அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராக அறிவித்ததற்காகச் சசிகலாமீது எனக்குக் கோபம்தான்” என அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
  மேலும், “நீங்கள் ஏன் தினகரனுக்கு அடிமையாக இருக்கிறீர்கள்? எதிர்த்துச் செயல்படுங்கள்” என்றும் முதலில் இராதாகிருட்டிணன் நகருக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தினகரனுக்காக முதல்வர், அமைச்சர்கள் என அனைவரும்  வாக்கு கேட்டபொழுது,. “ஏன் எல்லாரும் அவர் பின்னால் சென்றீர்கள்?”  என்று கேட்டதாகவும் அவர்  தெரிவித்துள்ளார். எனவே தினகரனுடன் ஒற்றுமையாக இருந்தவர்களிடம் தன் பங்கிற்கு நச்சு விதைகளைத் திவாகரன் விதைத்திருக்கின்றார் என அறிய முடிகிறது.
  இரு வழி உறவினரான கட்சியில் பெரும்பான்மை ஆதரவு பெற்றவரிடமே ஒத்துப்போகாதவர் எப்படிப் பிறருடன் ஒத்துப் போவார் என்றும்  தெரியவில்லை. குடும்ப ஒற்றுமையையோ கட்சி ஒற்றுமையையோ கருதிப்பார்க்காத இவரால் அதிமுக எப்படி நன்மை யடைய முடியும் என்றும்  தெரியவில்லை.
  தினகரன் கட்சியில் பிளவு எனச் சிலர் எழுதுகிறார்கள். தான் அக்கட்சியில் இல்லை எனவும் இருப்பதாகச் சொன்னால் வழக்கு போடுவேன் என்றும் திவாகரன் சொல்லியுள்ளார். கட்சிக்கு வெளியே உள்ள ஒருவர் செய்யும் சலசலப்பு எப்படி அக்கட்சியின் பிளவாகும்? ஒரு புறம் நம்பிக்கை வஞ்சகம் – துரோகம் – செய்து கொண்டே மறுபுறம் பதவிகளை எதிர்பார்த்து ஏமாந்தவரின் வெற்று மிரட்டலாகத்தான் பார்க்க வேண்டும்.
  செயலலிதாவைச் சசிகலா சந்திக்க விடுவதில்லை எனக் கூறுவதுபோல் சசிகலாவைச் சந்திக்கத் தினகரன் விடுவதில்லை என்கிறார். சிறைக்கண்காணிப்பாளரிடம் சந்திப்பதற்கான விண்ணப்பம் கொடுத்தால் முடிவெடுக்கப் போவது சசிகலாதான். அதனை எப்படித் தினகரன் தடுக்க முடியும்? வழக்கமான பாணியில் கதை சொல்லாமல் வேறு பாணியில் கதை சொன்னால் நல்லது.
  தன் தமையனார் எடப்பாடி பழனிச்சாமி நண்பர்களான பிற அமைச்சர்கள் மூலம் நடராசன் உயிருடன் மரணப்படுக்கையில் இருந்த பொழுதே ஏன் சசிகலாவைத் திவாரகன்  பிணையில் அழைத்து வரவில்லை? என்பது போன்ற வினாக்கள் ஒரு புறம் இருக்கட்டும்; ஆளும்அணியுடன் நட்புடன் இருந்தாரா அல்லது போட்டுக் கொடுக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாரா எனக் கட்சிக்காரர்கள் ஐயம் எழுப்புகிறார்கள். இந்த ஐயம் வந்தபின் இவர்மீது எப்படி நம்பிக்கை வைப்பார்கள்?
  திவாகரன் கருத்துகளை வரிக்கு வரி மறுக்கும் வேலையைக் கட்சிக்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள் அல்லது சிரித்து விட்டு ஒதுக்கி விடுவார்கள். எனவே அதற்குள் போக விரும்பவில்லை. எனினும் செயலலிதாவின் பின்னணியில் இருந்த குடும்பம் சிதைவதால் சில கூற விரும்புகிறோம்.
  “ஒருவீர் தோற்பினும், தோற்பது நும் குடியே” (கோவூர் கிழார், புறநானூறு – 45) என்னும் சங்க இலக்கிய உண்மையை உணர்ந்தால் குடும்பத்தினருக்கு  நல்லது. இல்லையேல்  குடும்பத்தில் பிளவு ஏற்படும். ‘சும்மா’ அணியால், கட்சியில் சலசலப்புதான் ஏற்படும்.
  ஆளும் அணியுடன்  நெருக்கம் இருப்பதால் தான் எண்ணியதை ஆற்றலாம் எனத் திவாகரன் எண்ணுகிறார். எடப்பாடி பழனிச்சாமியின் திறமையை அவர் உணர்ந்தாரில்லை. இப்பொழுது செயக்குமாரை விட்டுச் சசிகலா குடும்பத்தில் இருந்து யார் வந்தாலும் சேர்க்க மாட்டோம் என்பது பிளவின் பின்னணில் தாங்கள் இல்லை எனக்காட்ட என இவரிடம்  சொல்லியிருப்பார்.  ஆனால், இவர் சேர்ந்தால், அதை வைத்து அரசியல் பண்ணலாமே தவிர, பெருமளவுத்  தொண்டர்களும் பொறுப்பாளர்களும் இவர் பின்னால் வரப்போவது இல்லை. அதைக் கொண்டும் முனுசாமி மூலம் சசிகலா குடும்பத்தினர் என்ற வகையி்ல் இவருக்கு எதிராக முடுக்கி விட்டும் இவரை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவார்.
 தினகரன்  வேண்டா, சசிகலா இருக்கட்டும் என எண்ணுவதாகச் சொல்வதெல்லாம் ஏமாற்று  வேலை. தாய் உறவு, குட்டிப்பகை என்பதன் உண்மை என்ன  எனப் புரிந்தவர்களுக்கு இதுவும் புரியும். நான்கு மாடுகள், ஒரு சிங்கம் கதை அறிந்த சிறுவர்களுக்கும் இது புரியும். அவர்களின் குடும்பத்தலைவியான சசிகலாவே இக்கதையை நினைவூட்டியதாக முன்பு செய்தி வந்தது.  கட்சிக்கு நங்கூரமாகத் தினகரன் செயல்பட்டு வருகையில் கோடாரியாகத் திவாகரன் செயல்படுவது அவர் குடும்பத்தினருக்கும் நன்றன்று
  தினகரன் என்றாலும் திவாகரன் என்றாலும் சூரியன்தான். ஒரே பொருளுடைய பெயரை உடையவர்கள் ஒருமித்த சிந்தனையில் செயல்படுவது மூத்தவர் கைகளில்தான் உள்ளது. உணருவாரா?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

Friday, April 27, 2018

11 ச.ம.உ. வழக்கில் தீர்ப்பு: இதற்குத்தானா இத்தனைக் காலம் நீதிபதிகளே! – இலக்குவனார் திருவள்ளுவன்

11 ..வழக்கில் தீர்ப்பு:

 இதற்குத்தானா இத்தனைக் காலம் நீதிபதிகளே!

 தமிழ்நாட்டிற்கான சென்னை உயர்நீதிமன்றம் நேற்று(27.04.2018) இரு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கிப் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஒன்று, சட்டமன்றத்தில்  மேனாள் முதல்வர் செயலலிதா படத்தை வைக்கும் பேரவைத்தலைவரின் முடிவில் தலையிட முடியாது என்பது.  நீதிமன்றத்தின்படி குற்றவாளியாக அவர் இருந்தாலும் முதல்வராகச் செயல்பட்டவர் என்ற முறையில் அவர் படம் இருந்து விட்டுப் போகட்டும் ஆனால், இவ்வழக்கு  தொடுத்த பொழுதேஇவ்வழக்கு உயர்நீதிமன்ற வரம்பிற்குள் வராது என மறுத்து வழக்கைத்தள்ளுபடி செய்திருக்கலாமே!
மற்றொன்று தமிழகத் தலைவிதியை மாற்றக்கூடியது.
முந்தைய தீர்ப்பையும் இத்தீர்ப்பையும் அளித்தது, வழக்குகளில் காலத்தாழ்ச்சியும் தேக்கமும் கூடாது என வலியுறுத்தும் தலைமை நீதிபதி இந்திரா(பானர்சி),நீதிபதி அப்துல் குத்தூசு அடங்கிய முதல் அமர்வுதான்!
சட்டமன்றத்தில் கட்சிக் கொறடா அறிவுறுத்தலுக்கு மாறாக வாக்களித்தால் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள சட்டம். கடந்த பிப்.18.2017 இல்  சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ஓ,பன்னீர் செல்வம் முதலான  பதினொருவர் அரசிற்கு எதிராக வாக்களித்தனர். அரசு கொறடா உத்தரவுக்கு எதிராகச் செயல்பட்ட இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு ச.ம.உறுப்பினர்கள் வெற்றிவேல், தங்கத்தமிழ்ச்செல்வன், பார்த்திபன், இரங்கசாமி ஆகியோர் பேரவைத் தலைவரிடம் 20.03.2017 அன்று எழுத்து வடிவில் முறையிட்டனர்.
இது  தொடர்பில் நீதி  கிடைக்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். திமுகவும்  இது குறித்து வழக்கு தொடுத்துள்ளது.
 எனவே நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் எனப் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களும் மக்களாட்சியை விரும்புபவர்களும் எதிர்பார்த்தனர்.
பன்னீர்செல்வம் முதலானோர், கொறடா உத்தரவு பிறப்பிக்கவில்லை என உயர்நீதிமன்றத்திலும்  கொறடா உத்தரவு பிறப்பித்ததாகத் தேர்தல் ஆணையத்திலும் முரண்பட்டுத் தகவல்  தெரிவிததுள்ளனர். இதனைத் திமுக சார்பிலான  மூத்த வழக்குரைஞர் கபில்சிபல் வாதுரையில் தெரிவித்துள்ளார். அதனை நீதிமன்றம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஆனால் பன்னீர் செல்வம் வழக்குரைஞர் வைத்தியநாதன், கொறடா உத்தரவை 11 பேரும் மீறியதாகக் கொடுத்த முறையீட்டின்மேல் பேரவைத்தலைவர் நடவடிக்கை எடுக்காதநிலையில் நீதிமன்றம் குறுக்கிட முடியாது என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
”சட்டமன்றத்தலைவருக்கு  நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா?” என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இதுகுறித்து  உயர் நீதிமன்றம் தலையிட முடியாது’ என, முதல் ஆய அமர்வு தீர்ப்பு  கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.
இது  தொடர்பான வழக்கில் தீர்ப்பு சரியாக இருக்கலாம். ஏனெளில் நீதிபதிகள் தகுதிநீக்கச் செயல்பாடு குறித்து ஒன்றும் தெரிவிக்க வில்லை. இது தொடர்பான முறையீடு  பேரவைத்தலைவரிடம்  முடிவெடுக்கப்டாத நிலையில் உள்ளது. அவ்வாறு இருக்க எவ்வாறு தீர்ப்பு வழங்க முடியும் என்பதும் அவரைத் தீர்ப்பு வழங்குமாறு எவ்வாறு கட்டளையிடுவது என்பதும்தான் நீதிமன்றக் கேள்வி.
ஆனால் மக்கள் முன் எழும் கேள்வி, பேரவைத்தலைவர்  நடவடிக்கையில் குறுக்கிட முடியாது என்றால் வழக்கு  தொடுத்த பொழுதே தள்ளுபடி செய்திருக்கலாமே  ஏன் அவ்வாறு செய்யவில்லை. அதுதான் போகட்டும் விவாதங்கள் முடிந்த நிலையி்ல் தீர்ப்பை வழங்கியிருக்கலாமே!  குறுக்கிட முடியாதுஎனச்சொல்வதற்கு ஏன் இத்தனை மாதங்கள்?  இச்செயல் பெரும்பான்மை இழந்த அரசை நீதிமன்றம் முட்டுக் கொடுத்துக் காப்பாற்றுவது போல் ஆகாதா என்று கொந்தளிக்கின்றனர்.
இதற்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்தப் போவதாக மு.க.தாலின்தெரிவித்துள்ளார். இது திமுகவின் சட்டப் போராட்டம் என்று கருதாமல் நீதியின் ஆட்சியை வீரும்புவோரின் சட்டப் போராட்டமாக மக்கள் பார்க்க வேண்டும்,
இதே நேரத்தில் மற்றொரு கேள்வியும் எழுகிறது.
அரசு மீது நம்பிக்கை இல்லை யென ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பத்தொன்பதின்மர், எல்லாம் வல்ல ஆளுநரிடம்  22.08.2017 அன்றுமுறையிட்டுள்ளனர். இவர்களுள் அணி  மாறித் திரும்பிய ஒருவரைத் தவிர 18 உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்துள்ளார் பேரவைத்தலைவர் தனபால். அதிமுக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டமையால் அதனைக் காப்பாற்ற சட்ட மன்ற உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைத்து அதன் மூலம் எதிர்ப்பைக் குறைத்துப் பெரும்பான்மை வலு உள்ளதுபோல் பேரவைத்தலைவர் ஆக்கியுள்ளார். இதன் மூலம் ஆளுங்கட்சி உறுப்பினர் என்ற முறையில் பேரவைத்தலைவர்என்ற தகுதியை மறந்து ஆணை பிறப்பித்துள்ளார் என்னும் பேச்சிற்கு ஆளாகியுள்ளார்.
இது தொடர்பான வழக்கும் உயர்நீிமன்றத்தில் வாதுரைகள் முடிந்த நிலையில்நிலுவையாக உள்ளது.
தினகரன் அணியைச்சேர்ந்த 18 பேர் பதவிப்பறிப்பிலும் இதுதான் தீர்ப்பு என்றால் உடனே அதை வழங்கலாமே!  ஒருவேளை 18 பேர் நேர்வில் பேரவைத்தலைவர் முடிவை அறிவித்த சூழலிலும் கருநாடகாவில்  மேற்கொண்ட இத்தகைய தகுதி நீக்கம் செல்லாது என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை முன் னெடுத்துக்காட்டாகக் கொண்டும் 18 ச.ம.உ. தகுதிநீக்கம் செல்லாது எனத் தீர்ப்பு வழங்குவார்களோ!
காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் (Justice delayed is justice denied) என்னும் சட்ட அறத்தை வலியுறுத்தும் தலைமை நீதிபதி மேலும் காலந்தாழ்த்தாமல் உடன் தீர்ப்பு வழங்க வேண்டும். மக்கள் நீதிமன்றத்தின் மீது குறைகாணாத வகையில் நடுநிலையான தீர்ப்பை வழங்க வேண்டும் என வேண்டுகிறோம்,
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. (திருவள்ளுவர்திருக்குறள்672)
(காலந்தாழ்த்தாது விரைந்து செய்ய வேண்டிய செயல்களில் காலந்தாழ்த்தக்கூடாது.)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
 

Monday, April 16, 2018

கலைமாமணி விருதுகள் வழங்குவதைக் காலங்கடத்துவது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்


கலைமாமணி விருதுகள் வழங்குவதைக் காலங்கடத்துவது ஏன்?
 கலைகளைப் பேணவும் கலைஞர்களைப் போற்றி ஊக்கப்படுத்தவும் தமிழ்நாடு அரசு தரும் விருது ‘ கலைமாமணி’. இவ்விருதுகள் பிப்பிரவரி 2010 இற்குப் பின்பு வழங்கப் பெறவில்லை. விருதுகள் வழங்க அரசிற்குப் பரிந்துரைப்பதும் நடவடிக்கை முற்றுப்பெறாமல் போவதுமாகச் சிலமுறை நிகழ்ந்துள்ளன.
கலைமாமணி விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவ்வப்பொழுது செய்திகள் வரும். ஆனால் காற்றோடு கரைந்து போகும்.
நாட்டில் எத்தனையோ சிக்கல்கள் இருக்கும்பொழுது இதற்கெல்லாம் முதன்மை கொடுக்க வேண்டுமா என எண்ணலாம். ஆனால், நாட்டு வளர்ச்சியில் கலைவளர்ச்சியும் அடக்கம். கலைவளர்ச்சியில் கலைஞர்களப் போற்றுவதும் அடக்கம். அது மட்டுமல்ல.  இதற்கான நிதி ஒதுக்கீடு இருக்கும்பொழுது உரியமுறையில் திட்டமிட்டுச் செலவழிக்க வேண்டியதும் அரசின் கடமை அல்லவா? அதனை நினைவுபடுத்துகின்றோம்.
 எப்பொழுது கலைமாமணி விருதுகள் வழங்கப் பெற்றாலும் எதிர் அலைகள் வீசுவதே இயற்கையாக உள்ளது.
கலையை மதிக்காமல் கவர்ச்சிக்கு முதன்மை அளித்து விட்டனர்; திரைப்படத் துறையினருக்கே மிகுதியாக அளித்து விட்டனர்; குறிப்பிட்ட சாதியினருக்கே விருதுகள் வழங்கியுள்ளனர்; வரிசையில் நின்ற எல்லாருக்கும் விருதுகள் வழங்கினர்; மதுரை சோமசுந்தரக் கடவுள் அருள்பெற்றவர்கள் போன்ற இடைத்தரகர்கள் மூலம் விருதுகளை விற்றுவிட்டனர் என்பன போன்ற குமுறல்கள் ஊடகங்களிலும் கலைஞர்களிடையேயும் எழுவது வழக்கமாகிவிட்டது.
இந்தமுறை எந்த எதிரிடைக் கருத்தும் எழாவண்ணம் விருதுகள் வழங்கப்பெற வேண்டும்.
 தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்னும் அமைப்பு கலை வளர்ச்சிக்காக 1955 இல் உருவாக்கப்பட்டது. 1973 இல் அப்போதைய முதல்வர் கருணாநிதி இதன் பெயரைத் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்று நல்ல தமிழில் மாற்றினார். 1990 இல் அப்போதைய முதல்வர் செயலலிதாவினால் கலைபண்பாட்டு இயக்ககம் உருவாக்கப்பட்டு அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பெற்றது.
பைந்தமிழ்க் கலைகளை வளர்ப்பதற்காகக் கலைநிகழ்ச்சிகளை அளிக்கச் செய்தல் கலையமைப்புகளுக்கு நிதியுதவி அளித்தல், நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் அளித்தல் முதலான பணிகளை இயல் இசை நாடக மன்றம் ஆற்றி வருகிறது. எனினும் கலைமாமணி விருது வழங்குவது மட்டுமே இதன் பணி எனப் பெரும்பாலோர் தவறாகக் கருதுகின்றனர்.
பிற பணிகளைப் போலவே   கலைமாமணி விருது  ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டும் என்பதை  இயல் இசை நாடக மன்றம் கடமையாகக் கொள்ள வேண்டும். அவ்வாறு வழங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகளை அரசின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்..
 கலைஞர்களை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஈர்க்கும் நோக்கில் அல்லது எதிர்க்கட்சி ஆதரவு நிலையைத் தடுக்கும் நோக்கில் கட்சிக் கண்ணோட்டத்துடன் விருதாளர்களைத் தெரிவு செய்யக்கூடாது.
கவர்ச்சியால் படம் ஓடினால், அவ்வாறு நடித்தமைக்காக விருதுகள் வழங்கப்பெறக்கூடா.
திரைப்பட வெற்றியைமட்டும் கருத்தில்கொள்ளாமல், தொழில்நுட்பம் முதலான வகைகளில் பின்புலமாக இருப்பவர்களையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
 இளங்கலைஞர்களைப் பாராட்ட எண்ணினால், கலைமணி என்னும் விருதினை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு வழங்கலாம்.20 ஆண்டுகளேனும் பட்டறிவு – அனுபவம் – உடையவர்களையும் 50 ஆண்டு அகவை( வயது) உடையவர்களையும் கருதிப்பார்க்க வேண்டும்.
படங்களுக்கும் கதை மாந்தர்களுக்கும் தமிழ்ப்பெயர் சூட்டுபவர்களுக்கும் தமிழ்ப்பண்பாட்டைப் படைப்புகளில் எதிரொலிப்பவர்களுக்கும் விருதுகள் வழங்குவதை வழக்கமாக க் கொள்ள வேண்டும்.
திரைத்துரையினருக்கு விருதுகள் வழங்கப் பல அமைப்புகள் உள்ளன. அவர்களுக்கு மட்டும் முதன்மை அளிக்கும் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் நாடகக் கலைஞர்களுக்கும் விருதுகளைப் பரவலாக வழங்க வேண்டும்.
இயற்கலைஞர்கள் போதிய அளவு போற்றப்படுவதில்லை. தமிழறிஞர்களுக்கும் நற்றமிழ்ப் படைப்பாளிகளுக்கும் விருதுகள், இசை நாடகக் கலைஞர்களுக்கு இணையாக வழங்கப்பெற வேண்டும்.
 தொடர்ந்து ஆயிரக்கணக்கில் கூட்டங்கள் நடத்திவரும், பெரியார் வாசகர் வட்டம், ஒய்எம்சிஏ பட்டிமன்றம் முதலான பல அமைப்புகள் உள்ளன. கலை அமைப்புகளுக்கு வழங்குவதுபோல், இயற்றமிழ் வளர்க்கும் அமைப்புகளுக்கும் நீண்டகாலப் பொறுப்பாளர்களுக்கும் கலைமாமணி விருதுகள் வழங்க வேண்டும்.    
அரசு மாவட்ட அளவில் வழங்கும் ஐவகை கலைவிருதுகளில் மூத்தவர்களுக்கான கலைநன்மணி விருதும் கலைமுதுமணி விருதும் குறிப்பிடத்தக்கன. இவ்விருது பெற்றவர்களையும் கலைமாமணி விருது வழங்கக் கருதிப்பார்க்க வேண்டும்.
கலைபண்பாட்டு ஆணையராகத் திரு. அ.இராமலிங்கம் இ.ஆ.ப. உள்ளார். இவர் முதல்வரின் செயலராக நீண்டகாலம் பணியாற்றியவர். எனவே நாடுதழுவிய பட்டறிவு உடையவர். துறையமைச்சர் மாண்புமிகு பாண்டியராசன் அனைத்துத்தரப்பாலும் போற்றப்படுபவராக உள்ளார். இ.ஆ.ப.( I.A.S.) அதிகாரியாக இருந்து முதல்முறையாக மன்றச்செயலர் ஆனவர் திரு.  தங்கவேலு இ.ஆ.ப. இசையமைப்பாளர் தேவா இரண்டாம் முறையாகத் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர்கள் தங்கள் பதவிக்காலத்தில்தக்கவர்களுக்குக் கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவதைக் கிடைத்தற்கரிய பேறாகக் கருதி ஆவன செய்ய வேண்டும்.
இதனை வழிநடத்தும் பொறுப்பு, அரசு செயலர் திரு அபூர்வ வருமா இ.ஆ.ப.விற்கு மட்டுமல்ல! கலைபண்பாட்டுத் துறையின் முதல் இயக்குநராக இருந்து இப்போது தலைமைச் செயலராகத் திகழும் திருவாட்டி கிரிசா வைத்தியநாதன் இ.ஆ.ப. அவர்களுக்கும் உரிய காலத்தில் விருதுகள் வழங்கச் செய்யவேண்டிய கடமை இருக்கிறது அல்லவா?
3 பவுன் தங்கப்பதக்கமும் பாராட்டிதழும் தந்து பொன்னாடை அணிவிக்கும் சிறப்பிற்குரிய கலைமாமணி விருதுகளை வழங்க மாண்புமிகு முதல்வரும் விரைந்து செயல்பட வேண்டுகிறோம்.
கலைஞர்களைப் போற்றித் தமிழ்க்கலைகளை வளர்த்திடுக!
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை (திருவள்ளுவர், திருக்குறள் 672)
– இலக்குவனார் திருவள்ளுவன்

Thursday, April 5, 2018

திட்டம் (scheme) என்றால் என்ன? சொல் விளையாட்டில் காவிரியா? - இலக்குவனார் திருவள்ளுவன்





திட்டம் (scheme) என்றால் என்ன? சொல் விளையாட்டில் காவிரியா?
-      இலக்குவனார் திருவள்ளுவன்

 காவிரியாற்று நீர்ப் பங்கீடு தொடர்பாகப் பிப்,16 அன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இதை இறுதித்தீர்ப்பு எனக் கடந்த கால வரலாற்று அடிப்படையில் நம்மால் சொல்ல இயலவில்லை.
 காவிரி மேலாண்மை வாரியமும் (Cauvery Management Board) காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும் எனக் கடந்த ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்(குடிமை முறையீட்டு வ.எண்  2456 / 2007) முறையிட்டிருந்தது. [புதுவை, கேரள(கு.மு.வ.எண்2454 / 2007 ), கருநாடக (கு.மு.வ.எண் 2453 / 2007 )  மாநிலங்களும் முறையிட்டிருந்தன.] இப்போதைய தீர்ப்பில் இத்தகைய பெயர்கள் இடம் பெறவில்லை; திட்டம் (scheme) என்றுதான் குறிக்கப் பெற்றுள்ளது என்பது எப்பொழுதும் முரண்டு பிடிக்கும் கருநாடக அரசின் வாதம்.

 இவ்வாதம் ஒரு வகையில் சரி என்பதுபோல் தோன்றும். ஆனால், எந்தப் பெயரில் காவிரிநீர்ப்பங்கீட்டிற்கான அமைப்பு இருந்தாலும் கருநாடகா ஏற்காது என்பதை உணர்ந்த உச்சநீதிமன்றம், எப்பெயராக இருந்தாலும் அந்த அமைப்பிற்குக் காவிரியாறு முற்றிலும் உரிமையானது; அதற்கே பங்கீடு, பகிர்வுத்திட்டம், செயல்படுத்தல் முதலான அதிகாரங்கள் உண்டு என்பதைக் குறித்துள்ளது.
 மேலும், முந்தையத் தீர்ப்புகளில் குறிக்கப் பெற்ற   காவிரி மேலாண்மை வாரியம் அல்லது காவிரி ஒழுங்காற்றுக் குழுவிற்கு எதிராக அக்குழுக்கள் தேவையில்லை அல்லது நீக்கப்படுகின்றன என்பன போன்ற எதுவும் தீர்ப்புரையில் தெரிவிக்கப்பட வில்லை.  அப்படியானால் அவ்வாரியமும் குழுவும் செயல்பட வேண்டும் என்றுதான் கருத வேண்டும்.
 நாம் இந்த இடத்தில் ‘scheme’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கான பொருள்களைக் காண்போம். இச் சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. அவற்றுள் திட்டம், வகைதுறை ஏற்பாடு, வகைமுறைப் பட்டி, கால விவரப்பட்டி, கால அட்டவணை, செயற்படுத்துவதற்கான திட்டம், திட்டமுறை. நடவை என்பன இங்கே பொருந்துவன. இவற்றுள் நடைமுறைச் செயற்பாட்டைக் குறிக்கும் ‘நடவை’ என்பது மிகப் பொருத்தமான சொல். எனினும் வழக்கத்தில் நாம் திட்டம் எனக் குறிப்பிட்டு வருவதால் அச்சொல்லையே இப்போதைக்குக் கையாளலாம். இங்கே குறிக்கப்படும் பொருள்களின் அடிப்படையில் திட்டமிட்டு வகுத்துத் தக்க ஏற்பாட்டுடன் செயல்பட்டாலே போதுமானது. சொல் விளையாட்டில் காலங்கடத்த வேண்டா. காவிரிநீர்ப்பங்கீட்டிற்கான முழு அதிகாரமுடைய வாரியம் அல்லது குழுவை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும், வேறு பெயரில் அமைத்துவிட்டு, ஒழுங்குமுறை ஆணையத்திற்குரிய அதிகாரம் இதற்கு இல்லை என மத்திய அரசு நழுவக்கூடாது என்பதற்காகத்தான் நாம் காவிரி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டுகிறோம்,
 காவிரி நீர்ப்பங்கீட்டிற்காகத் திட்ட முறையை வகுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்றால் மத்திய அரசு என்ன செய்திருக்க வேண்டும்? திட்டமா? வாரியமா? என ஐயம் இருப்பின் முதலிலேயே அதனை உச்ச நீதிமன்றத்தில் கேட்டுத் தெளிவு பெற்றிருக்க வேண்டும். அல்லது தான் நினைப்பதற்கேற்ப ஒரு திட்டத்தை வகுத்து அதன்பின்னர் இஃது உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படிச் சரியானதுதானா எனத் தெளிவு பெற்றிருக்க வேண்டும், அவ்வாறில்லாமல், கால வாய்ப்பு முடியும் வரை காத்திருந்து அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
தமிழ்நாட்டுப் பா.ச.க.வினர் கருநாடகாவில் பா.ச.க. ஆட்சியிலிருந்தால் காவிரி நீர் நமக்குக் கிடைக்கும் என முதலில் ஏமாற்றினார்கள். இப்பொழுது தமிழ்நாட்டிலும் கருநாடகாவிலும் பா.ச.க. ஆட்சியிலிருந்தால் காவிரி நீர் நமக்குக் கிடைக்கும் என்கிறார்கள். பேராசைக்கு அளவில்லைதான். ஆனால், இதற்கு முன்பு பா.ச.க. கருநாடகாவில் ஆட்சியிலிருந்த பொழுது அதுவும் தன் பங்கிற்கு நடுநிலையின்றித் தானே நடந்து கொண்டது. அல்லது இப்பொழுது மனம் மாறியுள்ளதாகக் கருதிப் பார்ப்போம். அப்படியாயின், இன்றைய கருநாடக எதிர்க்கட்சியாகிய பா.ச.க.வினர், காவிரிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாடு முதலான அண்டை மாநிலங்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்று போர்க்குரல் எழுப்பியிருக்க வேண்டுமல்லவா? அவர்களும் சேர்ந்துதானே நமக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள்.
  உச்ச நீதிமன்றம் தமிழ் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு என்ன தீர்ப்பு கூறினாலும் பா.ச.க.  எதிராக நடந்து கொள்ளும். இருப்பினும் தமிழ் நாட்டு நலனுக்காக எதுவுமே புரியாமல், நம் நலனில் கருத்து செலுத்துவது போல் நடிக்கின்றது. ஒரு வேளை தீர்ப்பு நமக்கு எதிராக இருந்து நாம் எதிர்ப்பு தெரிவித்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கும். எதிராக முறையிடும் தமிழக அரசினை-எக்கட்சி ஆட்சியிலிருந்தாலும் அந்த அரசை-உடனே கலைத்திடும். ஆனால், தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் கருநாடக அரசு மீது எந்நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஒரு வேளை காங்.அரசு மத்தியில் இருந்தாலும் இதுதான் நிலைமை. எனவே, தமிழ்நாட்டு மக்கள், கட்சி சார்பின்றிக் காவிரிநீர்ப் பங்கீடு போதுமான அளவு நமக்குக் கிடைக்கப் பாடுபட வேண்டும்.
  கருநாடக அரசு சொல்வதுபோல் திட்டம் ஒன்றை வகுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதாகவே கொள்வோம். அத்திட்டத்தைச் செயற்படுத்த பொறுப்பாளர்கள் தேவையல்லவா? அந்த பொறுப்பாளர்கள் முறையாகச் செயல்பட, ஓர் அமைப்பு தேவையல்வா? எந்தப் பெயரில் இருந்தாலும் அவ்வமைப்பு செயல்பட அதிகாரம் வேண்டுமல்லவா? அதைத்தான் உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

  திட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது?  “இத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரில், சொத்துகளைக் கையகப் படுத்துவதற்கும் உரிமையாக்குவதற்கும் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும் வழக்கு தொடரவும் வழக்கில் உட்படுத்திக் கொள்ளவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள  வேண்டும்.(…under the name specified in the said scheme, have capacity to acquire, hold and dispose of property, enter into contracts, sue and be sued and do all such acts as may be necessary for ..)” எனத் தெளிவாகக் குறித்துள்ளது,
மேலும், “நிலைக்குழு, குறித்த பணிக்கான  குழு,  அல்லது அதிகாரமளிக்கப் பெற்ற குழு (of any standing, ad hoc or other committees by the authority)”   எனத் தீர்ப்பில் குறித்துள்ளதன் மூலம், செயற்பாட்டைத் திட்டமிடவும் செயற்படுத்தவும் குழு தேவை என்பதை வலியுறுத்துகிறது, இது போன்ற தொடரை வெவ்வேறு இடங்களில் தீர்ப்பு குறிக்கிறது.
காவிரிஆற்று ஆணையம், காவிரித் தீர்ப்பாயம், காவிரி ஒழுங்குமுறை ஆணையம், காவிரி மேலாண்மை வாரியம் என முன்பு சொல்லப்பட்ட அல்லது அமைக்கப்பெற்ற எதனாலும் அவை சொல்லும் கருத்துகளை நடைமுறைப்படுத்த கருநாடக அரசு முன் வராததால் பயனற்றுப் போயின. எனவே, மேற்பார்வைக் குழு அல்லது ஒழுங்காற்றுக் குழு அல்லது எக்குழுவாயினும் - என்ன பெயரில் அக்குழு இயங்கினாலும் காவிரி அவ்வைமப்பிற்கே உரியது;  எம்மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது எனச் சொல்லி முழு அதிகாரத்தையும் அக்குழுவிற்கு அளித்துள்ளது.
  எனவே, தமிழக மக்களும் தமிழக அரசும் சொல்லும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு என்ன அதிகாரங்கள் இருக்க வேண்டுமோ அவ்வதிகாரங்கள் கொண்ட அமைப்பை உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணங்க மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்.
  விளக்கம் கேட்டுக் காலங்கடத்தப்படுவதற்கு இடம் தராமல் கேட்பு முதல்நாளன்றே உச்சநீதி மன்றம் தன் தீர்ப்பில் கூறியதைத் தெளிவுபடுத்தி காவிரிக்கு உரிமையுடைய குழுவை அமைக்க வலியுறுத்த வேண்டும். இல்லையேல் தானே ஒரு குழுவை அமைக்க வேண்டும். தமிழ்மக்கள் நலன் கருத்தில் கொள்ளப்படும் என ஆறுதலாகச் சொல்லியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், அதற்கேற்ப நடுவுநிலையான தீர்ப்பின் மூலம் காவிரிக் கரை மக்களும் வேளாண்குடி மக்களும் தமிழ்நாடும் நலம் பெறும் வகையில் நல்ல தீர்ப்பைக் கூற வேண்டும். இத்தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படாமல் காலங்கடத்தப்படுமாயின் கருநாடக மாநில அரசும் தேவையெனில் அதற்கு உடந்தையாக இருக்கும் மத்திய அரசும் கலைக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு சொல்ல வேண்டும்.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (திருவள்ளுவர், திருக்குறள்118)

எனத் தீர்ப்பு நடுவுநிலைமையுடன் வந்தால் மட்டும் போதாது. அத் தீர்ப்பு நடுநிலையுடன் செயற்படுத்தவும் உச்சநீதிமன்றம் ஆவன செய்ய வேண்டும்.
- இலக்குவனார் திருவள்ளுவன்

இ.எ.தமிழ்  : ஏப்,05, 2018



Followers

Blog Archive