Tuesday, November 29, 2022

தங்குமிடம் அளிப்போரே! தமிழுக்கும் தங்குமிடம் தாருங்கள்! (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 12) – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




தங்குமிடம் அளிப்போரே! தமிழுக்கும் தங்குமிடம் தாருங்கள்! (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 12)

 (“சுவை உணவு தருவோரே சுவைத்தமிழையும் தாரீர்!” தொடர்ச்சி)

முந்தைய கட்டுரையில் சுவை உணவு தருவோர், சுவைத்தமிழையும் தர வேண்டுமாய் வேண்டியிருந்தோம். அதற்கு முன்னர் “உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்” என எழுதியிருந்தோம். இரண்டின் தொடர்ச்சிதான் இக்கட்டுரையும்.

தமிழ் நாட்டிலுள்ள உறைவகங்கள் – தங்கும் விடுதிகள் – தமிழருக்கானவை யல்ல என அதன் உரிமையாளர்கள் கருதுகின்றனர் போலும். ஆனால், 7% இற்கும் குறைவானவர்களே அயல்நாட்டினராக இங்கு வருகின்றனர். அனைவருமே ஆங்கிலேயர்கள் எனச் சொல்ல இயலாது. ஆங்கிலம் அறியாதவர்களும் வருகின்றனர். பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களிலும் ஆங்கிலம் அறியாதவர்களும் உள்ளனர். இச்சிறுபான்மையருக்காகத்தான் தங்கல் மனைகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் உள்ளன; அவை தொடர்பான விவரங்களும் விளம்பரங்களும் ஆங்கிலத்தில் உள்ளன. நாம் தங்குவதற்கு விடுதிக்குச் சென்றால் உள்ளே நுழைந்ததில் இருந்து வெளியேறும் வரை ஆங்கிலம் ஆங்கிலம் ஆங்கிலம்தான்!

நாம் உள்ளே நுழைந்ததும் தரப்படும் பதிவுப் படிவம், அதற்கான பதிவேடு, பிற பதிவேடுகள், அறைகள், கூடங்கள் விவரங்கள், கட்டண விவரங்கள்,  உறைவகத்துடன் இணைந்துள்ள உணவகம் தொடர்பான அனைத்து விவரங்கள், அரங்கங்கள், சிற்றரங்கங்கள் பெயர்கள், நிகழ்ச்சி இருப்பின் நிகழ்ச்சி விவரங்கள், ஆங்காங்கே உள்ள அவசர வழி முதலான தகவல்கள் அல்லது அறிவிப்புகள், ஏணறைகளில்(மின்னேணிகளில்) உள்ள தள விவரம், அதன் இயக்கம் அல்லது நிறுத்தம் தொடர்பான பதிவுக் குரல்கள், பணியாளர்களின் உரையாடல்கள், வருவோர் கண்களையும் கருத்துகளையும் கவருவதற்காக வைக்கப்பட்டுள்ள படங்களில் உள்ள முழக்கங்கள் அல்லது வரிகள் என எங்கு நோக்கினும் தமிழுக்கு இடமில்லையே! 

“தங்கல்மனைகளிலும் கூடங்கள், அறைகள் முதலானவற்றிற்குத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவதில்லை. அரசன், அரசி, இளவரசன், இளவரசி,  பூவின் பெயர்கள், கூடம், விருந்தகம், குடிப்பகம், மலரகம் என்று தமிழிலேயே சூட்டலாம்  அல்லவா? தமிழில் குறிப்பிட்டால் அயல்மொழியாளருக்குப் புரியாது எனக் கவலைப்படுபவர்கள், அயல்மொழிகளில் சூட்டினால் தமிழ்மக்களுக்குப் புரியாதே என ஏன் கவலைப்டுவதில்லை?” என முன்னர்க் குறிப்பிட்டதை நினைவூட்டுகிறோம்.

அரசு முன்மாதிரிச் செயற்பாட்டாளராக இருக்க வேண்டும். ஆனால் அரசு, அரசாணைகளையே பின்பற்றுவதில்லை. தத்தம் பதவி உயர்வுகளில் கருத்து செலுத்தும் உயர் அதிகாரிகள் தமிழின் உயர்வு குறித்து எண்ணிப் பார்ப்பதில்லை. உயரதிகாரிகளின் நிலைப்பாடே தமிழை வாழ வைப்பதாக இல்லாத பொழுது சார்நிலைஅதிகாரிகள், பணியாளர்கள் மட்டும் தமிழைப் போற்றவா போகிறார்கள். எடுத்துக்காட்டிற்குத் தமிழ்நாட்டின் நிறுவனமான சுற்றுலாத் துறையின் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தைக்(TTDC – Tamil Nadu Tourism Development Corporation) கூறலாம். இதன் கட்டுப்பாட்டிலுள்ள எல்லா சுற்றுலா விடுதிகளிலும் – தமிழ்நாடு உறைவகங்களிலும் – பெயர்ப்பலகை தமிழில் இன்மையைக் குறிப்பிடலாம். மிகச் சில இடங்களில் தமிழும் ஆங்கிலமும் இருந்தாலும் அரசாணைக்கிணங்க ஒரே பலகையில் அமையாமல் தனித்தனியே இருக்கிறது. அதற்குச் சான்றாகச் சில உறைவகங்களின் பெயர்ப்பலகைகளையே தலைப்புப் படத்தில் குறிப்பிட்டுள்ளோம். பெயர்ப்பலகைகளில் மட்டுமல்ல தமிழ்நாடு உறைவகம் முழுமையும் தமிழ்ப் பயன்பாட்டைக் காண இயலவில்லை.

அரசு அவ்வப்பொழுது தமிழில் பெயர்ப்பலகைகள் இருக்க வேண்டும் என்று ஆணை, சுற்றறிக்கை, நினைவூட்டுகளைப் பிறப்பிக்கின்றது. அவற்றைப் பார்க்கும் பொழுது கடுமையான நடவடிக்கைபோல் தோன்றும். ஆனால் அவை வெற்றுவேட்டு என்பதை உணர்ந்து அவற்றை யாரும் பொருட்படுத்துவதில்லை.

சான்றாக 2010ஆம் ஆண்டு, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழில் பெயர் பலகை வைத்திருக்க வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி வெளியிட்ட ஆணையைக் குறிப்பிடலாம். அதில் “மே மாதம் 31 ஆம் நாளுக்குள் பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்து முதன்மையாக  இடம் பெறாவிட்டால், சூன் மாதம் 1ஆம் நாள் முதல் தமிழ்ப் பெயர் முதன்மையாக இராத பெயர்ப் பலகைகளைச் சென்னை மாநகராட்சி அகற்றும். இதற்குக் கால வாய்ப்பு யாரும் கேட்கக் கூடாது.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.  கடை உரிமையாளர்களின் உதடுகள் பின்பற்றுவதாகத் தெரிவித்தன. உள்ளங்கள் நகைத்துக் கொண்டு வாளாவிருந்தன.  இதைக் குறித்து வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 2012இல் தமிழர் பண்பாட்டு நடுவம் களத்தில் இறங்கியது. பேச்சளவில் ஆர்வம் காட்டிய வணிகர்கள் செயலில் பாராமுகங்களாக இருந்து விட்டனர். கடைகள் என்னும் பொழுது உணவகம், உறைவகமும் அடங்கும். மிகப் பெரும்பான்மையான தங்கும் விடுதியை நடத்தும் உரிமையாளர்கள் தங்கள் விடுதிகளில் தமிழுக்கு இடம் தருவதில்லை. முகப்பில் உள்ள பெயர்ப்பலகையைக் கூடத் தமிழில் வைக்காதவர்களா உள்ளுக்குள் தமிழை அமர வைப்பார்கள்.

ஓட்டல்(Hotel)  என்பதன் மூலச் சொற்கள்(hôtel, hostel, hospitālis) வழிப்போக்கர் விடுதி, ஆண்டிமடம், துறவிமடம், தங்கிடம், புகலிடம், காப்பகம்,  எனப் பல பொருள்களைக் குறிப்பிடும். கூடாரம், வாழும் இடம், நிழலகம், குகை முதலிய இடங்களைக் குறிக்கும் shelter என்பதையும் இதன் பொருள்களாகக் குறித்தனர். பின்னர் தங்குமிடங்களில் பானங்கள் குடிப்பதற்கு அளித்தமையால் அருந்தகம் என்னும் பொருள் வந்தது. பின் உணவும் அளிக்கத் தொடங்கியதும் பயன்பாட்டுஅடிப்படையில் விருந்தகம், விருந்து மனை, விருந்தில்லம், விருந்தினர் மாளிகை  என்னும் பொருள்கள் வந்தன. Lunch Home என இரட்டைச்சொல்லாகக் குறிப்பிடுகையில்தான்-பகல் உணவகம் – என உணவகத்தைக் குறித்தது. தொடக்கத்தில் ஓட்டல் உணவகத்தைக் குறிப்பிடா விட்டாலும் இப்போது பெரும்பாலும் உணவகம் என்னும் பொருளில்தான் குறிக்கின்றோம். எனவே, ஓட்டல் எனத் தங்குமிடத்தைக் குறிக்கும் இடங்களில் உணவகம் என்பது பொருந்தாது எனக் கருதி ஆங்கிலத்திலேயே குறிப்போரும் உள்ளனர். நாம் முன்பே குறித்தாற்போல் இதனை உறைவகம் எனக் குறிப்பது சாலப்பொருத்தமாகும். உணவு தரும் மனைகளை, உணவகம், உணவு மனை, விருந்து மனை, விருந்தகம், உண்டிச்சாலை என்ற வகையிலும் தங்குவதற்கான இடங்களை, விடுதி, தங்கல் மனை, தங்ககம், வழித்தங்கல் மனை, பயணர் விடுதி, பயணியர் விடுதி, துயில் மனை, துயிற்கூடம், துயிலகம் என்னும் வகையிலும் தங்கும் இடத்துடன் உணவும் தரும் விடுதிகளை உறைவகம், உண்டி உறையுளகம் என்பன போலும் பயன்படுத்தலாம். இவற்றுள் சில சொற்களுக்கு வேறு பொருள்களும் இருப்பினும் இதற்கு இதுதான் பொருள் என்ற வரைமுறையை வகுத்துக் கொண்டு பயன்படுத்தலாம். அரசு அதற்கான ஆணை பிறப்பித்தால் தமிழில் ‘ஓட்டல்’ என்றே குறிப்பிடும் பழக்கம் நிற்கும். உணவகம் என்றால் உண்ணும் மனையைத்தான்குறிக்கும் என்று ஆழமாகப் பதிந்த பின்னர் தங்குமிடத்திற்கும் அதையே பயன்படுத்துவதில் குழப்பம் இருப்பதைப் புரிந்து வழிகாட்டினால்தானே தமிழில் குறிக்க எண்ணுபவர்கள் தமிழைப் பயன்படுத்துவர்.

வருவோர்க்குச் சிறப்பாகத் தங்குமிட ஏற்பாட்டைச் செய்யும் உறைவகப் பொறுப்பாளர்கள் எல்லா இடங்களிலும் தமிழும் வீற்றிருக்க வகை செய்வார்கள் எனில், தமிழ்த்தாய் அகம்மிக மகிழ்வாள் அல்லவா? அந்நாள் எந்நாளோ?

– இலக்குவனார் திருவள்ளுவன்

Thursday, November 17, 2022

இலக்குவனார் விளக்கும் இல்லற மாட்சி– இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல




இலக்குவனார் விளக்கும் இல்லற மாட்சி

தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் முதலியவற்றை மக்கள் இலக்கிமாக மாற்றியவர்; சொற்பொழிவுகள், மாலை நேர வகுப்புகள், விடுமுறைக்கால வகுப்புகள், நூல்கள், இதழ்கள் வாயிலாக இலக்கியங்களின் மூலம் தமிழ் மொழியின் தொன்மை, இலக்கியச் சிறப்பு, பண்பாட்டுச் செழுமை, நாகரிக வளமை முதலியவற்றை மக்களின் உள்ளங்களில் பதித்தவர். “வள்ளுவர் கண்ட இல்லறம்” நூல் மூலம் இல்லறத்தின் சிறப்பை அவர் எடுத்துரைத்தார். அவற்றுள் சிலவற்றை நாம் பார்ப்போம்.

இல்லத் தலைமைக்குரியவர்கள் பெண்களே!

பெண்ணுரிமையைப் போற்றிப் பெண்களுக்கான தலைமையை வலியுறுத்தியவர் இலக்குவனார். “இல்லாளோடு கூடி வாழ்தலே இல்வாழ்க்கை எனப்படும். இல்லாள் என்பது வீட்டிற்குரியாள் எனும் பொருளைத்தரும். இல்லான் என்பதோ ஒன்றும் இல்லான், வறியன் எனும் பொருள்களைத் தரும். ஆதலின், இல்லத் தலைமைக்குரியவர்கள் பெண்களே  எனத் தமிழ் முன்னோர் கருதியுள்ளனார் என்றும் பெண்ணினத்தின் முதன்மையைப் போற்றி வாழ்வியலில் அவ்வினத் தலைமையையும் ஏற்றுள்ளனர் என்றும் தெளியலாம். இல்லறம் செம்மையுற்றால்தான் நாட்டில் நல்வாழ்வு உண்டாகும். பல இல்லறங்களால் அமைந்ததே நாடு. (For, in as much as every family is a part of a state. – Aristotle: Politics; page 78) ( வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை பக்கம் 9)” என இல்லறத்தின் சிறப்பையும் இல்லத்தரசிகளின் உயர்வையும் விளக்குகிறார்.

மனைவியின் சிறப்புகளைத் தொகுத்துரைப்பதே திருக்குறளின் இல்லறவியல்!

இல்வாழ்க்கைக்குத் துணையாகிய மனைவியின் சிறப்புகளைத் தொகுத்துரைப்பதே திருக்குறளின் இல்லறவியல் என்கிறார்.

மணந்தவரினின்றும் உள்ளம் பிரிதல் கூடாது என்கிறார். “நல்வாழ்க்கைக்குத் துணையாய் இருக்கக்கூடியவள் மனைவியேயாவாள். அவள் தன் கொண்ட கணவனிடம் நீங்காத அன்புடையவளாய் இருத்தல் வேண்டும். தன் கணவனைவிட அழகிலோ, செல்வத்திலோ, ஆண்மையிலோ, கல்வியிலோ, இன்னும் பிற சிறப்புகளிலோ சிறந்த வேறு ஓர் ஆடவனைக் காணுமிடத்து, அவன்பால் மனம் செல்லுதல் கூடாது. அவ்விதம் செல்லாமல் இருக்கும் நிலைமை திண்மை நிலை  உளங்கலங்கா நிலை. தமிழ் நாட்டில் உளங்கலங்கும் நிலை என்பது நினைக்கக் கூடாத ஒன்று.  ஆனால், மேனாடுகளில் ஒருவனை மணந்த பெண் பிறிதோர் ஆடவனை ஏதேனும் ஒரு காரணத்தால் விரும்பி முன்பு மணந்தவனிடம் விலக்குப் பெற்றுப் புதியவனை மணந்து கொள்ளுதல் மன்பதை வழக்குக்கும் அறநெறிக்கும் உட்பட்டதாகவே உளது. ஆனால், இவ்வாறு உளங்கலங்கி, மறுமணம் செய்து கொள்ளுதலால் இல்லற வாழ்வில் பல இடர்ப்பாடுகள் தோன்றும். இம்முறைக்கு இடம் கொடுப்பின், நினைந்தவுடன் மணந்து சினந்தவுடனேயோ, முந்தையவரினும் சிறப்பு மிக்கவரைக் கண்டவுடனேயோ பிரிவது என்றால் இல்லற வாழ்வு உடைகலம்போல் உறுதி பயவாது. ஆதலின், காதலித்து மணந்தவரினின்றும் உள்ளம் பிரிதல் கூடாது. அதற்கு உளத்திண்மைதான் வேண்டும். அதுதான் கற்பு எனப்படுகின்றது” என விளக்குகிறார். (வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை பக்கம் 22-23)

ஆண்களுக்கும் கற்பு வேண்டியதுதான்

கற்பு நெறி பெண்டிர்க்குத்தானா? ஆடவர்க்கு வேண்டியதின்றோ  என வினவி ஆண்களுக்கும் கற்பு வேண்டியதுதான் என்கிறார். “ஆடவனும் தன் மனைவியைவிட அழகு முதலிய சிறப்புகளில் மிக்காள் ஒருத்தியை விரும்பி உளங்கலங்குவானோயானால் அப்பொழுதும் இடர்ப்பாடு தோன்றும். அவள் சீறியெழுதல் கூடும் செற்றமும் கலாமும் மிகுந்து இல்லற இன்பம் சிதைந்து விடும். ஆகவேதான் திருவள்ளுவர் “கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்” எனப் பொதுப்படக் கூறியுள்ளார். இருபாலாரிடத்தினும் கற்பு நிலை பெறுகின்ற போதுதான் பெண்ணின் பெருமை நன்கு வெளிப்படும்” என்கிறார்.( வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை பக்கம் 25-26)

மகளின் கருத்தறிந்து மணத்துணைவரைத் தேர்ந்தெடுக்கவும்!

 “ இன்று பெற்றோரும் உற்றோரும் துணைவனுக்குத் துணைவியையும் துணைவிக்குத் துணைவனையும் ஓடி ஆடி நாடிச் சேர்க்கின்றனர். சேர்க்கும் போது எல்லாப் பொருத்தங்களையும் இனிதே காண முயல்கின்றனர். ஆனால், உள்ளப் பொருத்தம் உளதா என உசாவுவதை ஒதுக்கி விடுகின்றனர். இதனால் துயருறுவோர் ஆண்களினும் பெண்களே  பெரும்பான்மையர் ஆகிவிடுகின்றனர். தம் மகளுக்கு வேண்டும் துணிகளையும் கூட மகளின் கருத்தறிந்து அவள் விருப்பப்படியே தேர்ந்தெடுக்கின்றனர். சில ஆண்டுகள், சில திங்கள்கள், சில நாட்கள் பயன்படக்கூடிய பொருள்களைப் பெறுங்கால் மகளின் கருத்தையறியும் பெற்றோர், வாழ் நாள் முழுவதும் துணையாய் இருந்து வாழ்க்கைத் தேரைச் செலுத்துதற்குரிய கடப்பாட்டுடன் உடலும் உயிருமாய் ஒன்றி இயைந்து வாழவேண்டிய ஒருவரைத் தேட வேண்டியபோது மகளைப் புறக்கணிப்பது கொடுமையினும் கொடுமையன்றோ? ஆனால், பண்டு தமிழ்நாட்டில் தம் துணைவரைத் தேர்ந்தெடுப்பதில் மகளிர்க்கு முழுஉரிமை அளிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் நன்கு வெளிப்படுத்துகின்றன.” (வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை பக்கம் 31)

 

இன்பத்துப்பால் தமிழர் காதலறத்தின் நெறிமுறையே!

“இவ்வாறு மணவாழ்க்கையை மேற்கொள்வதன் முன்னர்த் தலைவனும் தலைவியும் கண்டு தெளிந்து ஒன்று கூடும் நிலையையும், ஒன்றிவாழும் நிலையையும், அவ்வமயங்களில் இருவரிடையேயும் உண்டாகும் நிலை வேறுபாடுகளையும் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் அஃதாவது புணர்ச்சி, பிரிவு, இருத்தல், ஊடல், இரங்கல் எனும் திணை வகைகளாக இலக்கியங்களில் எழில் மிகக் கூறியுள்ளனர். திருவள்ளுவர் பழந்தமிழ் இலக்கண இலக்கிய மரபை ஒட்டி அக வாழ்வை அழகுறத் தீட்டியுள்ளார். வாழ்வைப் புலப்படுத்தும் இலட்சியமாகவும் இலக்கியம் வெளிப்படுத்தும் வாழ்வாகவும் கூறப்பட்டுள்ள இன்பத்துப்பால் தமிழர் காதலறத்தின் நெறிமுறையேயன்றி, வடவர் முறையைப் பின்பற்றியதன்று. இது வடமொழி நூலான காம சூத்திர மொழி பெயர்ப்போ தழுவிய ஒன்றோ அன்று. திருக்குறள் இன்பத்துப்பாலையும் வடமொழியின் காமசூத்திரத்தையும் ஒப்ப நோக்குவார்க்கு இவ்வுண்மை எளிதிற் புலனாகும்.” (வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை பக்கம் 32-33)

 

இன்பத்துப் பால் ஒப்புயர்வற்ற இலக்கியக் காட்சிகளாக அமைந்துள்ளது.

“இன்பத்துப் பால் காதலரின் உறவு முறையை விளக்கப் போந்ததாயினும், காதலர்கள் இன்னின்னவாறு நடந்துகொள்ள வேண்டுமென்று விதிமுறையில் கூறாது, அவர்களையே நம்முன் நிறுத்தி ஒழுகச் செய்து விடுகின்றது. அதனாலேயே, இப்பகுதி ஒப்புயர்வற்ற இலக்கியக் காட்சிகளாகவும் அமைந்து கற்போர் உள்ளத்தைக் களிப்புக் கடலில் ஆழ்த்தும் பான்மையைதாய் உள்ளது.” (வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை பக்கம் 33)

 

உழைப்பிற்கும் உரிமை வாழ்விற்கும் மதிப்பளிக்கும் திருவள்ளுவர்

தம்இல் இருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு.””

“அம்=அழகிய; மா=மாமை நிறம் பொருந்திய; அரிவை=நங்கையது; முயக்கம்=புணர்ச்சி யின்பம்; தம்இல் இருந்து=தமக்குரிய வீட்டிலிருந்து கொண்டு; தமது பாத்து=தாமே உழைத்துத் தேடியதை இல்லாதார்க்குப் பங்கிட்டுக் கொடுத்துத் தமக்குரிய பங்கை; உண்டு அற்று =உண்டதனால் அடையும் இன்பத்தை ஒக்கும்.

 காதலியுடன் கூடிப் பெறும் இன்பத்தைத் தனக்குரிய வீட்டில் தனக்குரிய பங்கை உண்பதனால் உண்டாகும் இன்பத்திற்கு ஒப்பிடுவது உழைப்புக்கும் பிறர்க்கு ஈதலுக்கும் உரிமை வாழ்வுக்கும் திருவள்ளுவர் எவ்வளவு மதிப்புக் கொடுக்கின்றார் என்பதைப் புலப்படுத்துகின்றது.

 பிறர் வீட்டிலிருந்து கொண்டு பிறர் உழைப்பால் வருவதை உண்பதில் இன்பம் காண இயலாது என்பதையும் அவர் அறிவுறுத்துகின்றார்.”(வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை, பக்கம் 49-50)

திருக்குறளின் கற்பியல் உயர்ந்த இலக்கியம்

 தலைவன் பால் தலைவி கொண்டுள்ள உயர் பேரன்பும், தலைவன் தலைவிபால் கொண்டுள்ள தணியாக் காதலும் நன்கு சொல்லோவியப் படுத்தப்பட்டு உயர்ந்த இலக்கியமென அறிந்தோர் போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளமை பயின்று பயின்று இன்புறத்தக்கது. (வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை, பக்கம் 80)

 

மக்கட்பேறு இன்றியாமையாதது

 இப்பொழுதெல்லாம் தற்பாலுறவுகள் பெருகி வருகின்றன. இதன் மூலம் மக்கட்பேறுகளுக்கு முற்றுப்புள்ளி இட்டு வருகின்றனர். மக்கட்பேறு தமிழர் நெறி என்பதைத் திருவள்ளுவர் மூலம் இலக்குவனார் விளக்குகிறார்.

 “காதலால் பிணிப்புண்டு காதலனும் காதலயும் நாடறி நன்மணம் செய்து கொண்டு ஊடியும் கூடியும் இன்பம் நுகர்ந்து வாழுங்காலை மக்களைப் பெறுதல். திருமணத்தின் விளைவுதான் மக்களைப் பெறுதல். மக்களினம் அற்றுப்போகாமலிருத்தற்கும் நாடு நாடாகவே சிறப்புறுதற்கும் மக்கட்பேறு இன்றியாமையாதது. மக்களின்றேல் நாடு ஏது? ஆட்சி ஏது? கலை ஏது? பண்பு ஏது? ஆதலின் மக்களைப் பெற்றுத்தான் மனையறம் காத்தல் வேண்டும்.

  “காமஞ் சான்ற கடைக்கோட் காலை

ஏமஞ் சான்ற மக்கசொடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.”

எனத் தொல்காப்பியர் கூறியுள்ளமையும் காண்க.” (வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை, பக்கம் 200)

புதல்வர் தொடர்பான ஆரியக் கொள்கை தமிழர் வாழ்வியல் நெறிக்கு உடம்பாடன்று

 தென்புலத்தார் கடனிறுத்தற்கும், ‘புத் என்னும் நரகத்தைக் கடத்தற்கும் புதல்வரைப் பெறல் வேண்டும் என்னும் கொள்கை தமிழர் வாழ்வியல் நெறிக்கு உடம்பாடன்று. (வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை, பக்கம் 200)

முடிவுரை

இவ்வாறு இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர் எனப் போற்றப்படும் பேராசிரியர் சி.இலக்குவனார் திருக்குறள் உணர்த்தும் இல்லறச் சிறப்பை நமக்கு இனியதாக எடுத்துரைக்கிறார்.

கற்புநிலை என்று சொல்ல வந்தால் இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

என்று இன்றைக்குப் புரட்சிக் கவி பாரதியார்(பெண்கள் விடுதலைக்கும்மி: 17-18) சொல்லியதே பழந்தமிழர் நெறி எனத் திருவள்ளுவரின் திருக்குறள் மூலம் நமக்கு விளக்கியுள்ளார். திருவள்ளுவரின் திருக்குறள் தரும் கற்பியல், உடலுறவு சார்ந்ததாக இல்லாமல் உள்ள உறவு குறித்த உயர்ந்த இலக்கியம் என்பதைச் சிறப்பாக விதந்தோதியள்ளா்.

இலக்குவனார் வழியில் இல்லறச்சிறப்பை உணர்ந்து நல்லறம் நடத்துவோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

[17.11.2022 தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் ஆவது 113 ஆவது பெருமங்கல(பிறந்த நாள்) நிறைவு]

Friday, November 11, 2022

இராசீவு கொலைவழக்கில் எஞ்சிய அப்பாவிகள் அறுவரும் விடுதலை- இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல



இராசீவு கொலைவழக்கில் எஞ்சிய அப்பாவிகள் அறுவரும் விடுதலை

இராசீவு கொலைவழக்கில் சிக்கித் சிறைத் துன்பத்தில் உழலும் எஞ்சிய அறுவரை உச்சநீதி மன்றம் இன்று (ஐப்பசி 25, 2053 / 11.11.2022) விடுதலை செய்தது.

இராபர்ட்டு பயசு, செயக்குமார், சுதேந்திர இராசா(சாந்தன்), இரவிச்சந்திரன், சிரீஅரன் (எ)முருகன், நளினி ஆகிய அறுவரின் நலிந்த உடல்நிலை, சிறைவாழ்க்கையில் மேற்கொண்டுள்ள நன்னடத்தை, கல்வி, படைப்புகளில் ஈடுபடல் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சட்டப்படியும் மனித நேயத்துடனும் மூன்று தலைமுறையாகச் சிறைவாழ்க்கையில் துன்புறுவதைக் கருத்தில் கொண்டும் பேரறிவாளனை விடுதலை செய்த வழியில் இந்த அறுவரையும் நீதிபதிகள் விடுதலை செய்துள்ளனர். வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரிய உச்சமுறைமன்ற நீதிபதிகள் பூசன் இராமகிருட்டிண கவை(Bhushan Ramkrishna Gavai), பெ.வெ.நாகரத்தினா (Bangalore Venkataramiah Nagarathna) ஆகிய இருவரும் சட்டப்படி ஆராய்ந்து தமிழ்நாட்டரசின் பரிந்துரையையும் ஏற்றும் இது தொடர்பிலான தமிழ்நாட்டு ஆளுநரின் முறையற்ற செயலைக் குறிப்பிட்டும் விடுதலை அளித்துள்ளனர்.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் எக்குடே, கோபால் சங்கரநாராயணன் ஆகியோரும் தமிழ்நாட்டு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் இராகேசு திவேதியும் வழக்காடி வாகை சூடியுள்ளனர். அவர்களுக்குப் பாராட்டுகள். இவர்கள் விடுதலை தொடர்பில் சட்ட நீதி கிடைக்கப்போராடிய வைக்கோ முதலான தலைவர்களுக்கும் மக்களியக்கம் நடத்திய ப.நெடுமாறன் முதலிய தலைவர்களுக்கும் நன்றியுடன் பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம்.

இப்போதைய அரசு அமைந்ததும் முதலில் தமிழ்க்காப்புக் கழகம் இந்திய அளவிலான தமிழ்ச்சங்கங்களைக் கூட்டி வாழ்த்தரங்கம் நடத்தியது(வைகாசி 09, 2052 / ஞாயிறு / 23.05.2021). அதில் அப்போதைய  மாநிலங்களவை உறுப்பினர் மதிப்புமிகு தி.கோ.சீ. இளங்கோவன் அவர்களும் மகிழ்வுடன் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள். இக்கூட்டத்தல் முதல்வரை வாழ்த்திய அனைவரும் அப்பாவிகள் எழுவரையும் விடுதலை செய்ய முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதைத் தமிழ்க்காப்புக் கழகமும் முதல்வருக்குத் தெரிவித்தது.

தமிழ்க்காப்புக் கழகம் சார்பில் அவ்வப்பொழுது இவர்களின் விடுதலைக்கும் விடுதலை வரைக்கும் காப்பு விடுப்பிற்கும் முறையீடுகள் அனுப்பப்பட்டன. ஒரு முறை சென்னை உயர் நீதி மன்றத்தில் எழுவருக்கும் எதிராக அரசின் வாதுரை அமைந்ததும், அப்போதைய முதல்வர் செயலலிதா அம்மையாரின் சட்டமன்றப்பேச்சிற்கும் கருத்திற்கும் எதிராக இஃது அமைந்துள்ளது எனச் சுட்டிக்காட்டி வாதுரையைத் திரும்பப்பெற்றுப் புதிய வாதுரை அளிக்க வேண்டினோம். முதல்வர் அதனை ஏற்றுத் தமிழக வரலாற்றிலேயே (எங்குமுள்ள அரசுகளின் வரலாற்றிலேயே) முதன் முறையாக வாதுரையைத் திரும்பப்பெற்று இவர்களின் விடுதலைக்குச் சார்பான புதியவாதுரையை அளித்தனர். இவ்வாறு தமிழ்க்காப்புக்கழகம் இவர்கள் சார்பில் சிறிதளவு பணியாற்றியமையை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியுடன் விடுதலையை வரவேற்கிறது.

‘அகரமுதல’ இதழில் இவர்கள் விடுதலையை வேண்டிப் பலமுறை கட்டுரைகள் எழுதியுள்ளோம். பிறரின் கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டுள்ளோம். சட்ட அறிவே இல்லாமல் இவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, “எழுவர் விடுதலை:  முன்விடுதலை என்பது சட்டப்படியானதே! எதிர்ப்பவர்கள் சட்ட மறுப்பர்கள்!”, “வாணாள் தண்டனையும் எழுவர் விடுதலையும்”, “எழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக!” போன்ற என் கட்டுரைகள் தினசரி, தமிழ் இந்தியன் எக்குசுபிரசு, தாய் முதலான பிற இதழ்களிலும் வந்துள்ளன. தினமணியிலும் தினமலரிலும் கருத்தூட்டங்களும் அளிக்கப்பட்டன. ஈழம் வெல்லும்!  காலம் சொல்லும்!, கனவல்ல தமிழீழம்! ஆகிய என் நூற்களிலும் எழுவர் விடுதலை தொடர்பான கருத்தூடடங்களும் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

உச்சநீதி மன்றம் அளித்துள்ள விடுதலையால் உலகத்தமிழர்களும் உலக மனித நேயர்களும் உவகை கொள்கின்றனர்.

இப்போதைய தீர்ப்பிற்கு அடிப்படையாய் அமைந்த தீர்மானத்தை இயற்றிய சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கும் முதல்வர் மு.க.தாலின் அவர்களுக்கும் சட்டத்துறை, உள்துறை முதலான துறையினருக்கும் பொதுவாகத் தமிழக அரசிற்கும்  நம் பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறோம்.

இனி இவர்களின் வாழ்வு – மறுவாழ்வு – புது வாழ்வு – சிறப்பாக அமைய அரசு துணை புரிய வேண்டும். எழுவருக்கும் குறைந்தது ஒவ்வொரு கோடி உரூபாயும் அவர்களின் வாழ்முறைக்கு உதவிகளும் அளிக்க வேண்டும்.  பெயர் ஒற்றுமையின் காரணமாகச் சிக்க வைக்கப்பட்ட சாந்தனுக்குக் கூடுதல் பொருளுதவி அளிக்க வேண்டும். இவ்வழக்கில் பொய்யாவணங்களை உருவாக்கியும் வேறு வகையிலும் அநீதி நிகழக் காரணமாக இருந்த அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் தண்டிக்கப்படவேண்டும். திர்ப்பிற்கு எதிராக யாரும் முழங்கினாலோ போராட்டத்தில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலையாக எண்ணிக்கொண்டிருக்கக்கூடிய மடுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டில் குழப்பத்தை விளைவிக்க முயலலாம். உளவுத்துறை கவனமாகக் கூர்ந்தறிந்து  நாட்டில் அமைதி நிலவக் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இசுலாமியர் என்ற காரணத்திற்காக நெடுங்காலம் சிறையில் உள்ள பிறரையும் 14 ஆண்டுகளுக்கு மேல் எஞ்சியுள்ள பிறரையும் விடுதலை செய்யவும் தேவையெனில் நீண்டகாலக் காப்பு விடுதலை வழங்கவும் முதல்வரை வேண்டுகிறோம்.

தமிழ்த்தேசிய அமைப்புகள், பன்னாட்டு அமைப்புகள், ஈழ ஆதரவு அமைப்புகள்,  அயலகச் சட்ட அறிஞர்கள், உலகளாவிய மனித நேயர்கள்,ஊ்டகங்கள், குமுகாயத் தளங்கள், தமிழகக் கட்சிகள், இன்னும் பிற வகையினர் என எல்லா வகையிலும் விடுதலைக்குக் குரல் கொடுத்தவர்கள். பரப்பியவர்கள், உதவியவர்கள் அனைவருக்கும் நம் பாராட்டுகள்!

எழுவர் வாழ்க்கையிலும் துன்பம் அகன்று இன்பம் நிலைத்து நன்னெறியில் மகிழ்ச்சி பரவட்டும்

மகிழ்ச்சியுடனும் பாராட்டுகளுடனும் இலக்குவனார் திருவள்ளுவன்

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. (திருவள்ளுவர், திருக்குறள் 117)

அகரமுதல – இதழுரை

ஐப்பசி 25, 2053 / 11.11.2022

Sunday, November 6, 2022

சார்சா தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம்!– இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல





திருவள்ளுவரை இழிவு படுத்தும் சார்சா தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம்!

1966-ஆம் ஆண்டுமுதல் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 11 ஆவது உலகத்தமிழ் மாநாட்டைச் சார்சாவில் சூலை 2023இல் நடத்த இருப்பதாகத் தகவல் வந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.  90களில் அரசு சார்பாகத் துபாய் செல்ல வாய்ப்பு இருந்தும் வேறு அலுவல் பணிகளால் செல்ல  முடியாமல் இருந்தது. எனவே, இப்பொழுது இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும்  என எண்ணினேன். உலக மாநாடுகள் வணிக நோக்கு மாநாடுகளாகக் கருதி அவற்றைப் புறக்கணித்து வந்த நான், இம்முறை பங்கேற்கும் ஆர்வம் வந்தது. ஆனால் சில நாட்களிலேயே சிங்கப்பூரில் சூனில்  உலகத்தமிழ் மாநாடு நடைபெற உள்ளதாகச் செய்தி வந்தது.

முன்னரே சிங்கப்பூருக்கு நான்கு முறை  சென்று வந்துவிட்டமையால் இம்முறை அமீரகம் செல்லலாம் என எண்ணினேன். ஆனால் அறிவிப்புகளைப் பார்த்தால் இரண்டுமே உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் நடத்தப்படுவதாக இடம் பெற்றிருந்தது. ஏன் இந்தப் பிளவு என்று அதிர்ச்சியாக இருந்தது. உடன் அறிவித்த முனைவர் பொன்னவைக்கோ அவர்களிடம் அலைபேசி வழி கேட்டேன்’ “ஓற்றுமையாகச் சிறப்பாக நடத்தலாமே” என்றேன்.

“எங்களுக்கும் அதுதான் எண்ணம். ஆனால் தவறு எங்கள் மீது இல்லை. 2019-ஆம் ஆண்டு சிகாகோவில் கடந்த 10 ஆவது உலகத்தமிழ் மாநாட்டில் 11 ஆவது மாநாட்டிற்கான குழுவிற்குத் தலைவராக என்னையும் பிற 9 பொறுப்பாளர்களையும் முன் மொழிந்து தெரிவு செய்தவர் அப்போதைய தலைவரே. அவரேதான் தன் பெயரில் இப்பொழுது 11 ஆவது உலகத் தமிழ் மாநாடு சார்சாவில் நடைபெறும் என அறிக்கை விடுத்துள்ளார். எங்களுக்கெல்லாம் இஃது அதிர்ச்சியாகத்தான் உள்ளது. அவரைப் பின்னிருந்து மற்றொருவர் முடுக்கி விடுகிறார். தான் தெரிவு செய்த குழுவைத் தானே ஏன் மாற்றுகிறார் எனத் தெரியவில்லை. அவர்களை அமைதிப்படுத்தி ஓர் அமைப்பாகச் செயல்பட்டால் எங்களுக்கும் மகிழ்ச்சியே” என்றார். தொடர்பான வேறு சிலரிடமும் வினவினேன். அவர்களும் இதேபோல்தான் கூறினர்.

இலங்கையில் இருந்து ஒரு நண்பர்,  “இரு மாநாடுகள் வேண்டா என எழுதுங்கள்”  என்றார். “நான் எழுதினால் கேட்டுக் கொள்வார்களா? எனினும் உரியவர்களிடம் முன்னரே பேசியுள்ளேன்.” என விவரத்தைத் தெரிவித்தேன். மீண்டும் பேசுமாறு கூறி இலங்கையில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையை வெளியிடுங்கள் என்றார். “அந்த அறிக்கை உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்ற வரலாற்றைத் தெரிவிக்கும் விரிவான அறிக்கையாக உள்ளது.  இரு தரப்பையும் ஒற்றுமைப்படுத்தும் வகையில் அறிக்கை தாருங்கள். வெளியிடுகிறேன்; சார்சா மாநாட்டினர் யாருடனும் எனக்குத் தொடர்பு இல்லை. தொடர்பு விவரங்களைத் தந்தால் அவர்களிடமும் பேசுகிறேன்” என்றேன். விரிவான அறிக்கையைச் சுருக்கச் செய்தியாக எழுதி வந்த நான், சுருக்க அறிக்கை வரும் என எதிர்பார்த்து அதனை முழுமையாக்கி வெளியிட வில்லை.  மீண்டும் சிங்கப்பூர் மாநாடு நடத்தும் உ.த.ஆ.மன்றத்தினர் சிலரிடம் பேசினேன். வி.கே.டி.பாலனும் இதுகுறித்து நேரில் வந்து பேசியதாகவும் தாங்கள் எப்பொழுதும் ஒன்றுபட்டுச் செயல்படுவதையே விரும்புவதாயும் தெரிவித்தனர். இதனை இலங்கை நண்பரிடம் தெரிவித்தேன்.

அவர் சிறிது நாள் கழித்து “நீங்கள் அவர்கள் ஆள்”  என்று எழுதியப் பதிவை எனக்கு அனுப்பினார். அப்பொழுது நான் அவர் சார்சா மாநாட்டினர் பக்கம் இருப்பதால் நடுநிலையாகக் கருத்து தெரிவிக்கும் என்னை இவ்வாறு கூறுவதாகப் புரிந்து கொண்டேன்.

யார் வேண்டுமென்றாலும் அல்லது எந்த அமைப்பு வேண்டுமென்றாலும் உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தலாம். ஆனால், ஒரே அமைப்பின் பெயரில் ஏட்டிக்குப் போட்டியாக மாநாடுகள் நடத்துவது  இந்த அமைப்பைத் தோற்றுவித்த தனிநாயக அடிகளாருக்கும் அமைப்பில் முன்நின்ற அறிஞர்களுக்கும் இழுக்கு தேடுவதாகும். ஒரு மாநாடு முடிந்ததும் அடுத்த மாநாடு குறித்து முடிவெடுத்து முறையாக அறிவிப்பதே செல்லத்தக்கதாகும். எனவே, பத்தாவது மாநாட்டுப் பொதுக்குழு தேர்ந்தெடுத்த முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமையிலான குழுவினர்தான் உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் உண்மைப் பொறுப்பாளர்ள். எனவே, இவர்கள் எடுக்கும் முடிவே சரி. மாற்றுக் கருத்து இருந்தால் இக்குழுவில் தெரிவிக்க வேண்டுமேயன்றிப் போட்டிக் குழுவை உருவாக்கக் கூடாது.

இதுவரை நான், எந்த மாநாட்டில் பங்கேற்கலாம் எனக் கேட்டவர்களிடம், “நீங்கள் உங்கள் வாய்ப்பிற்கேற்ப எந்த மாநாட்டிலும் பங்கேற்கலாம். இயலுமெனில் இரண்டு மாநாடுகளிலும் பங்கேற்கலாம். ஆனால், நான் முறையான அமைப்பு நடத்தும் சிங்கப்பூர் மாநாட்டில் பங்கேற்கிறேன்” எனத் தெரிவித்து வந்தேன்.

இப்பொழுது என் கருத்தை மாற்றிக் கொண்டேன்.

சார்சாவில் நடைபெறும் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டை உலகத்தமிழராய்ச்சி மன்றத்தின் பெயரில் நடத்தக் கூடாது. அதே பெயரில் நடைபெற்றால் இதனை உலகத் தமிழர்கள் புறக்கணிப்பதே முறையாகும். இது குறித்து உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தினர் வழக்கு தொடுத்து தடை பெறுவது சிறப்பாகும்.

புறக்கணிப்பதற்கு இதைவிட மற்றோர் இன்றியமையாத காரணம், இம்மாநாட்டில் தெய்வப்புலவர்  திருவள்ளுவருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்தரங்கப் பொருண்மைகள் உள்ளன. அவை குறித்துப் பார்ப்போம்.

இம்மாநாட்டில், சிறப்பான குறட்பணியைச் சிறப்பாக நடத்தி வரும் திருக்குறள் அமைப்பு ஒன்றுக்குத் தனி அமர்வு அளித்துள்ளனர். இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விழாக்களையும் 1330இற்கும் மேற்பட்ட ஆய்வரங்கங்களையும் நூற்றுக்கு மேற்பட்ட மாநாடுகளையும் நடத்தியுள்ளது இந்த அமைப்பு. வள்ளுவர் கோட்டத்தில் இதுவரை சனிதோறும் 975 ஆய்வரங்கங்களை நடத்தியுள்ளது. நானூறாயிரம் திருக்குறள் சான்றோர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் திருக்குறள் விருதுகள் வழங்கியுள்ளது.  இதன் திருக்குறள் தலைமைத் தூதர் நூற்றுக்கணக்கிலான திருக்குறள் தூதர்களை அமர்த்தி அவர்கள் வழி குறள்நெறி பரப்புரை, குறளாய்வுகள் மேற்கொண்டு வருகிறார். நூற்றுக்கணக்கில் மேடையேற்றம், நூல்கள் வெளியீடு எனச் சிறப்பான பணிகளை ஆற்றி வரும் இதன் தலைமையிலுள்ள செம்மொழி விருதாளரான அறிஞருக்கு உலகின் உயர்ந்த விருது எதைக் கொடுத்தாலும் பொருத்தமாகத்தான் இருக்கும்.  ஆனால், ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு போல் இப்போது நடுநிலை என்ற போர்வையில் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் களங்கம் ஏற்படுத்தி வருவது வேதனையாக உள்ளது. என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கானவர்களின் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் வணக்கத்திற்கும் உரிய அவர் என்ன செய்கிறார் என்பதை எழுதவே கை கூசுகிறது. திருவள்ளுவர், திருக்குறள் தொடர்பான மாற்றுக் கருத்துகளுக்கும் மதிப்பளித்து உண்மையை வெளிக் கொணருகிறாராம். இதன்மூலம் அவ்வாறு சொல்பவர்கள் கருத்து தவறு என்பது மெய்ப்படுமாம். ஆனால், உண்மையில் இதுபோன்ற களங்க அமர்வுகள் நடைபெறவே அது வழி வகுக்கும்.

“1.  திருக்குறள் ஆரியத் தழுவல்  பெற்ற நூல்

2. ஆதி பகவன் என்னும்   பெயரைத் திருவள்ளுவர்  வேதங்களில் இருந்து

     பெற்றார்

3.  திருக்குறள் உலகப் பொதுமறை அன்று;   அது இந்துத்துவா நூல்

4.  திருவள்ளுவரின் காலம்    கி. பி. பத்தாம் நூற்றாண்டு

     எனச் சனாதனச்  சார்பாளர்கள் பரப்பி வரும்   கருத்துகளின் வன்மை மென்மைகளை ஆராய்வதே இவ்வமர்வின் நோக்கமாகும்.”  என்பனவே இவ்வமைப்பின் கூற்றுகள்.

     திருவள்ளுவர் தெலுங்கர், திருக்குறளை அதிகாரம் ஒன்றிற்கு ஒருவர் என நூற்று முப்பத்து மூவர் எழுதியுள்ளனர், திருவள்ளுவர் குறளி வகுப்பைச் சேர்ந்தவர்; எனவே, அவர் நூலுக்குக் ‘குறளி’ என்று பெயரிட்டு அது குறள் என மாறியது போன்ற வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளை ஏன் விட்டு விட்டார் எனத் தெரியவில்லை.

உண்மையிலேயே நடுநிலை ஆராய்ச்சி என்றால், திருக்குறள் ஆரியத் தழுவல் அல்ல, திருக்குறள் உலகப் பொதுமறையே, திருவள்ளுவரின் காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு என்பன போன்று தலைப்புகள் வழங்கியிருக்கலாமே. சனாதனச் சார்பாளர்கள் கருத்துகள் எனக் குறிப்பிட்டால் நடுநிலைமை ஆகிவிடுமா? அக்கருத்துகளுக்கு ஏன் முதன்மை தர வேண்டும்?

“திருக்குறளில் வருணாசிரமக் கருத்துகள்” போன்ற கொடுந்தலைப்புகளும் ஆராயப்பட உள்ளன. தலைப்பில் அவ்வாறு குறிப்பிட்டு விட்டு வருணாசிரமக் கருத்துகள் இல்லை என முடிப்பது நடுநிலையாகாது.

 திருக்குறள் அமைப்பின் பெயரால் திருக்குறளை இழிவு படுத்தும் பொருண்மையிலான அமர்வை உடனே சார்சா மாநாட்டினர் நிறுத்த வேண்டும். திருக்குறளின் சிறப்புகளைக் கூற வேண்டுமென்றால் பொது அமர்விலேயே அவ்வமைப்பினர் தெரிவித்துக் கொள்ளலாம். இவ்வாறு அவ்வமைப்பிற்குத் தடை விதிக்க வில்லை என்றால் உலகத்தமிழன்பர்கள் யாவரும், குறள்நெறிப் பற்றாளர்கள் யாவரும் சார்சியா மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும்.

நடுவுநிலைமை அல்லது கருத்துரிமை என்ற போர்வைகளில் திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளுக்குத் தமிழ்நாட்டரசும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஓர் அமைப்பை முறையற்ற முறையில் பயன்படுத்தியும் திருவள்ளுவருக்குக் களங்கம் கற்பிக்கவும் நடைபெறும் மாநாட்டிற்கு எவ்வகை ஆதரவையும் தமிழ்நாட்டரசு தரக் கூடாது என்றும் வேண்டுகிறோம்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடல்.   (திருவள்ளுவர்,திருக்குறள் 113)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

ஐப்பசி 20, 2053 / 06.11.2022




Followers

Blog Archive