Tuesday, November 28, 2017

ஆர்வர்டு தமிழ்ப்பீடம் தேவைதானா? – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்! – இலக்குவனார் திருவள்ளுவன்ஆர்வர்டு தமிழ்ப்பீடம் தேவைதானா? – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்! 
  ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைக்க உள்ள தமிழ்ப்பீடத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கி.பழனிச்சாமி, தமிழக அரசு சார்பில் பத்துகோடி உரூபாய் நன்கொடை அளித்துள்ளார். எனவே நாமும் அவரைப் பாராட்டி நன்றி கூறுகிறோம். மக்கள் அவரை எளிதில் சந்திக்க முடியும் வகையில்  காட்சிக்கு எளியராக அவர் உள்ளமையே நன்கொடை வேண்டுகோள் உடனே பயனித்துள்ளது எனலாம்.
  இசையமைப்பாளர் அ.இர.(ஏ.ஆர்.) இரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் பெற்ற நிதியில்  இருந்து கனடா நிறுவனம் ஒன்று 25000 அமெரிக்கத் தாலர் நன்கொடை அளித்துள்ளது.
    தமிழ்த் திரைப்பட  உருவாக்குநர் சங்கத் தலைவராகவும், நடிகர் சங்கப் பொதுச் செயலராகவும் உள்ள நடிகர் விசால் தன் சொந்தப்பணத்திலிருந்து உரூபாய் பத்து நூறாயிரம் நன்கொடை அளித்துள்ளார்.  தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளித் தமிழாசிரியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் உள்ள   ஆர்வமுள்ள தமிழர்களும் தமிழ் அமைப்பினரும் நன்கொடை யளித்து வருகின்றனர். இன்னும் நன்கொடைதருவோர் உள்ளனர். அனைவருக்கும் பாராட்டு.
  தமிழ்ப்பீடம் அமைப்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் உள்ளமையும்  மாண்புமிகு முதல்வர் கவனத்திற்கு வந்திருக்கலாம். எனினும் நாம்   அவற்றையும் சுட்டிக்காட்டிப் பாரெங்கும்  பைந்தமிழ் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
 தனக்கு ஒதுக்கப்பட்ட துறையில் கருத்துடன் செயல்பட்டுத் தமிழ்வளர்ச்சியில் நாளும் கருத்து செலுத்தி வரும் அமைச்சர் மாஃபா.பாண்டியராசனும் நன்கொடைக்குக் காரணமாவார். எனவே, இவரும் தமிழ்ப்பீடம் பற்றிய மாறுபட்ட கருத்துகளை அறிந்து அனைவரும் ஏற்கும் வண்ணம் ஆர்வர்டு தமிழ்ப்பீடம் செயல்பட வழி  வகுக்க வேண்டும்.
 சமற்கிருதத்திற்கு இப்படிப் பிச்சை எடுத்ததுத்தான்  மொழிப்பீடம் தொடங்கினார்களா என்பது சிலர் வினா. என்றி வேர்  வேல்சு(Henry Ware Wales)  என்பவர்  ஏப்பிரல் 24, 1849 இல்  எழுதிய  இறுதி முறியில்(உயில்) பேராசிரியப்பணியிடம்  அமைக்க நிதிக்கட்டளை ஒன்று  அமைக்கப்பட்டது. இதன்படி,  ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில்  சனவரி 26, 1903 இல்  சமக்கிருதப் பீடம் உருவாக்கப்பட்டது. அப்படியாரும் தமிழுக்குத் தனிக்  கொடையாளர்கள் அமையவில்லையே! எனவே, கூட்டுமுயற்சி தேவைப்படுகிறது.
  பயிற்றுவிப்பு மூலமும் படைப்புகள் மூலமும் தமிழ் பரப்பி வரும் கணிணித்தமிழின் முன்னோடிகளில் ஒருவரான அமெரிக்கா வாழ் பேரா.முனைவர் இராசம் அம்மையார், மணற்கேணி ஆசிரியரும் அரசியலாளருமான  து.இரவிக்குமார் முதலான பலர் தமிழ்ப்பீடத்திற்கு எதிரான வலுவான கருத்துகளைச் சொல்லி வருகின்றனர். பேரா.முனைவர் செ.இரா.செல்வகுமார் முதலானவர்கள் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பீடம் தேவை என்பதை வலியுறுத்தி வருகிறார்கள். அமைப்புப்பணியைத் தொடங்கிவிட்டார்கள். தமிழ்ப்பீடமும் தொடங்கட்டும் என்ற நிலையில் சிலர்  உள்ளனர்.
 சங்க இலக்கியங்களையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள அறிஞர் வைதேகி எர்பர்ட்டு தமிழ்ப்பீடத் தோற்றுவாய்க்கு முதன்மையாளர்களில் ஒருவராக உள்ளார். அவரெல்லாம் இதன் பொறுப்பிற்கு வந்தால் நல்லதுதான். ஆனால், அந்நாட்டவரைத்தான் பணியமர்த்துவார்கள் என்கின்றனர்.
 வெளிநாட்டில் அமைந்துள்ள  பல்கலைக்கழகங்களின் தமிழ்ப்பீடங்களில் தமிழர் பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஒரு வேளை கிடைத்தாலும் வெள்ளையருக்கு  ஊதியம் மிகுதி. தமிழர்க்கு மிகவும் குறைவு என்பதை இராசம் அம்மையார் அடிக்கடிக் கூறிவருகிறார்கள்.
  என்றாலும் ஆர்வர்டு தமிழிருக்கையினால் தமிழக மக்களுக்கு என்ன நன்மை அல்லது தமிழகத்து மக்களிடம் நன்கொடை பெறவேண்டும் என்றெல்லாம்  வினா தொடுத்தால்,  எந்த நாட்டிலும் தமிழ்க்கல்வி தொடங்க இயலாது. ஆனால், அதே  நேரம் தொடங்கப்பட்ட தமிழ்த்துறைகளை மூடிவிட்டுப் புதியதாகத் தொடங்குவதால் என்ன பயன்? இதுவும் சில ஆண்டுகளில் மூடப்படலாமே என அஞ்சவதில் உண்மை யில்லாம லில்லை.
  ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பீடம் அமைந்தால் உலகில் தமிழின்மதிப்பு கூடும்! உலகெங்கும் தமிழ் பரவும்! என்பது  போன்ற ஆரவார உரைகள்தாம் இதற்கு எதிரான உரைகளை முன்வைக்கத் தூண்டுகோலாக அமைகின்றன. ஏனெனில், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இப்பொழுதும் தொடக்கநிலைஇடைநிலை, உயர்நிலை என 3 நிலைகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. அதனால் என்ன மாற்றம் ஏற்பட்டது? அவ்வாறிருக்கப் புதியதாகத் தமிழைக் கற்பிக்க இருப்பதுபோல் மக்களை ஏமாற்றலாமா?
   தமிழ் மட்டுமல்ல! சமற்கிருதம்,  இந்தோனேசிய மொழி, வங்காள மொழி, பருமிய மொழி,  இந்தி-உருது மொழிகள்,  நேபாள மொழி,   தாய்லாந்து மொழி, திபேத்திய மொழி ஆகியனவும் கற்பிக்கப்படுகின்றன.
   ஆர்வர்டு பல்கலைக்கழகம் தமிழைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது 2000 ஆண்டு தொன்மை எனக் குறிக்கிறது. தமிழுக்குப் பிற்பட்ட சமற்கிருதத்தை  ஏறத்தாழ 3000 ஆண்டுத் தொன்மைவாய்ந்ததாகக் குறித்துள்ளது. அது மட்டுமல்ல. ஆரியர்கள் தங்களை உயர்த்திக் கொண்டு பிறரைத் தாழ்த்துவதற்காகத் தங்கள் மொழியைத்  தேவபாடை என்றனர்.  இதை ஆர்வர்டு பல்கலைக்கழகத்தளம், செழுமைவாய்ந்த  இந்தமொழியின் அழகிற்காகக் கடவுளர் மொழி என அழைக்கப்படுவதாகக் குறிக்கிறது.
 அதுமட்டுமல்ல, தெற்காசியாவின் நுண்மாண் நுழைபுலம் மிக்கவராக  இருக்க வேண்டுமென்றால், சமற்கிருதத்தில் புலமை மிக்கவராக இருக்க  வேண்டுமாம். மேலும், தெற்கு ஆசியாவின்  செழுமையையும் மேம்பட்ட நிலையையும் அறிய சமற்கிருதக் கல்வி முற்றிலும் வேண்டற்பாலதாம்.
 தமிழ்ப்பீடம் அமைக்கச் செயலாற்றுவோர் ஆர்வர்டு பல்கலைக்ககழகத் தளத்தில் தமிழின் சிறப்பைப் பதிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
  உலகில் ஏறத்தாழ 15 பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை தொடங்கப்பெற்று ஏறத்தாழ 3 பல்கலைக்கழகங்களில் மட்டுமே இப்பொழுது  செயல்பாடுகள் உள்ளன.
 தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா காலத்தில்  சென்னை, மதுரை, அண்ணாமலைப்பல்கலைக்கழகங்களில் திருக்குறள் பீடம்(இருக்கை) தொடங்கப்பெற்றன.  அண்ணாமலையில் எப்பொழுதோ மூடுவிழா நடத்தப்பட்டு விட்டது. இதனை உயிர்ப்பிக்காமல்  செம்மொழி நிறுவனம் உரூபாய் ஒருகோடி அளித்து மற்றொரு திருக்குறள் பீடத்தை(இருக்கையை) அமைத்துள்ளது. மதுரையில் போதிய   பொருளுதவி இன்றித் தள்ளாடுகிறது. பிற மாநிலத் தமிழ்த்துறைகளும் போதிய பொருளுதவி இன்றி எதிர்பார்த்த பயனளிக்காமல் உள்ளன.
  பேராசிரியர் பணியிடத்தை உருவாக்கும் தமிழ்ப்பீடத்திற்குச் செலவழிக்கும்  தொகையில் நடைமுறையில் உள்ள தமிழ்வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் கல்வியுதவித் தொகை அளிப்பது சிறப்பாக இருக்கும். மாணவர் எண்ணிக்கைக்கேற்ற பணியிட எண்ணிக்கையையும் உயர்த்துவது நன்று.
  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடக்க ஆண்டில் ஒதுக்கப்பெற்ற 85 கோடி உரூபாயைப் பயன்படுத்தாமல் போனதால் அத் தொகையைப் பெற இயலவில்லை என்கின்றனர். இதனால் தொடர் ஆண்டுகளிலும்  கோர இயலவில்லை. செம்மொழி நிறுவனம் மூலமாக உலக நாடுகளின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் வகுப்புகள் தொடங்கவும் இணைய வழிக்கல்விக்கழகம் மூலமாக இணைய வழித்தமிழ்க்கல்விகளை ஒருங்கிணைக்கவும் தமிழ்ப்பல்கலைக்கழகம் உரிய பாடத்திட்டங்களை வகுக்கவும் ஆவன செய்ய வேண்டியதே இன்றைய தேவையா’கும்.
  பிறநாட்டுத் தமிழ்க்கல்விகளில்  பேச்சுத்தமிழுக்கு முதன்மை தருவது நிறுத்தப்பட்டு  நற்றமிழை நலியச் செய்யும் போக்கிற்கும் முற்றுப்புள்ளி இட வேண்டும்!
  இப்போதைக்கு இருக்கின்ற தமிழ்த்துறைகளைச் செம்மைப்படுத்துவதும்  தமிழ் பரவலாகப் பலநாடுகளிலும் கற்பிக்கப்படவும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்திற்குத் திரட்டிய பொருளைச்  செலவழித்தால்  தமிழ்த்தாய் அகம் மிக மகிழ்வாள்!
 தமிழ்க்கல்வி : முதலில் காலூன்றுவோம்! பிறகு பறப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 211, ஐப்பசி 19-25, 2048 /  நவம்பர் 05  – நவம்பர் 11,  2017

Monday, November 27, 2017

மாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே! ஈழமலர்ச்சிக்காகவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 

மாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே!

ஈழமலர்ச்சிக்காகவே!

   தமிழீழத்தை மனக்கண்களில் கண்டவர்கள்! தங்கள்  நெஞ்சில் சுமந்தவர்கள்! மனக்கண்களில் கண்ட தமிழீழம் உருவாகும்; அங்கே ஈழத்தமிழ் மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் தன்னுரிமையுடனும் தன்மதிப்புடனும் வாழ்வார்கள்; அடிமைத்தளையறுந்து, பட்ட துயரங்கள் மறைந்து, இன்னல்கள் நீங்கி, இன்பவாழ்வு வாழ்வர்; தமிழும் தனக்குரிய இடத்தை நாட்டிலும் உலகத்திலும் பெறும்; என்னும் நம்பிக்கையில், தங்கள் இன்னுயிரை நீத்தவர்கள் மாவீரர்கள்! இவர்களை வணங்குவது நமக்காகத்தான்! ஆம்! நமக்காக மறைந்தவர்களை – புகழால் வாழ்பவர்களை – நாம் வணங்குவது அவர்கள் கனவுகளை நாம் சுமப்பதற்காகஅந்தக்கனவுகளை நிறைவேற்றுவதற்கான எழுச்சி பெறுவதற்காகஎழுச்சி கொண்டு வாகை சூடுவதற்காக!
  ஈழத்தமிழர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் உரிமை  பெற்ற விடுதலை நாட்டில் வாழ்வதுதானே அவர்களுக்கு நலம் பயக்கும்! அப்படி என்றால் மாவீர்ர்களை வணங்கி நாம் உந்துதிறன் பெறுவது நாம் நன்மையடையத்தானே!
  தமிழ்நாட்டுத் தமிழர்கள்இந்தியாவில் பிணைப்புண்டிருந்தாலும் இந்திய அரசுதன்நாட்டு மக்களாகக் கருதுவதில்லை. உலகின் மூத்த மொழியான தமிழ் தன் நாட்டில் உருவாகிப் பேசப்படுவதால் மகிழ்ந்து அதனைப் பரப்ப வேண்டிய கடமையும் தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும் இந்திய அரசிற்கு உள்ளதுஆனால் இவற்றிற்கு எதிராக நடப்பதுதான் இந்திய அரசின் அன்றாடப் பணியாகிறது.
 தமிழைத் தமிழ்நாட்டிலேயே தொலைத்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் தமிழைத் தலைமை யிடத்தில் கொண்டு செல்லத்  தமிழீழ அரசு உறுதுணையாக இருக்கும். பன்னாட்டு அவையில் தமிழ் முழங்கித் தமிழும் தமிழர்களும் தலைநிமிர்ந்து வாழ இயலும்! இந்திய அரசும் தமிழைப் போற்றும், தமிழைரைக் காக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படும்! எனவே, நம்நாட்டுத் தமிழர்களுக்கும் தமிழீழத்தால்தலைநிமிர்ந்து வாழ்வர்!
 வீரவணக்க நாளில் விளக்கேற்றுவதும் நம் உள்ளங்களில் இருக்கும்அடிமை இருளை அகற்றத்தான்உரிமை ஒளியைப் பாய்ச்சத்தான்!
 இனப்படுகொலை முடிந்ததாகக் கூறினாலும் நல்லிணக்கம் என்னும்நயவஞ்சகம் பேசுகின்றனர்; தமிழர் நிலத்தில் சிங்களர்களைக் குடியேறவைத்துத் தமிழ் நிலம் என்று ஒன்று இல்லை என ஆக்குகின்றனர்’ காணாமல்போக வைக்கப்பட்டவர்களும் அடைக்கலம் அடைந்தவர்களும் வஞ்சகமாகப்   பிடிக்கப்பட்டவர்களும் உள்ளரா? இல்லரா? என்று தெரியாமல் உற்றார் உறவினர் கதறிக் கொண்டுள்ளனர்’ கட்டாயக் கருத்தடை,கற்பழிப்பு போன்ற கயமைத்தனங்களால்தமிழினம் அழிக்கப்படுகின்றது. முன்பு எரிகுண்டுகளாலும் வேதியல் குண்டுகளாலும் கொல்லப்பட்ட தமிழர்கள் இப்பொழுது மருந்து என்ற  போர்வையில் நஞ்சூட்டிக் கொல்லப்படுகின்றனர். வெளிப்படையாகத்தெரியாவண்ணம் ஈழ மண்ணில் தமிழர் அழிப்புநடந்துகொண்டுதான் உள்ளது. தண்டிக்கப் பெறாமையால் இனப்படுகொலையாளிகள் உற்சாகமாகத் தங்கள் அழப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சொல்லொணாத் துயரங்களில் மடிந்து வரும் ஈழத்தமிழர்களுக்குப் பன்னாட்டு அமைப்புகள் உரிய முறைகளில் உதவுவதில்லை. மனித  நேயர் குரல்களும் புலம் பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டங்களும் தாய்மண்ணில் நிகழும் போராட்டங்களும்வாழ்வதற்கான விதைகளை விதைத்தாலும் வாழும்முறைஅமையாமல் நாளும் அல்லறுகின்றனர் ஈழத்தமிழர்கள்.
  இவற்றைத் தாங்கிக் கொள்வதற்கும் போக்குவதற்கும் உரிமையைக் காப்பதற்கும் விடுதலை காண மாவீர்ர்கள் பற்றிய  நினைவுகள், எண்ணங்கள், நிகழ்வுகள் உறுதுணையாய் நிற்கும்!
  இந்த வகையில் மாவீரர் வணக்க நாள் என்பது மாவீரர்களை வணங்கி நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்காகவே! நம்மை இலக்கு நோக்கி இட்டுச் செல்வதற்காகவே! மாவீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்காகவே!
 மாவீரர்கள், துயிலுமிடங்களில் மட்டும் உறையவில்லை. அவர்கள் உறைவிடங்களில் மட்டும் உறைந்திருக்கவில்லை! நம் உள்ளங்களிலும் உறைந்துள்ளனர்.
 இன நலனுக்காக, நாட்டு நலனுக்காகத் தத்தம் குடும்பப்பற்றினையும் வாழ்க்கைப்பற்றினையும் மட்டுமல்லாமல் உயிர்ப்பற்றையும் துறந்த மாவீரர்கள் பெருமையை,  இதுவரை பிறந்து இறந்தவர்களை எண்ணமுடியாததுபோல், அளவிட்டுச் சொல்லத்தான் இயலுமோ?
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
 (திருவள்ளுவர், திருக்குறள் 22)
 பெருமைக்குரிய மாவீரர்களை நாளும் வணங்கி அவர்கள் உயிர் நீத்ததற்குக் காரணமான கனவுகளை நனவாக்குவோம்!
  உரிமை பெற்ற உலக நாடுகள் வரிசையில் தமிழ் ஈழம் இடம் பெறச் செய்வோம்!
வாழ்க மாவீரர் புகழ்!
வெல்க மாவீரர் கனவுகள்!
மலர்க தமிழ் ஈழம்!
பறக்கட்டும் தமிழ்க்கொடி பாரெங்கும்!
 • அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை –  அகரமுதல 214, கார்த்திகை 10- கார்த்திகை 16,  2048 /  நவம்பர் 26  – திசம்பர் 02,  2017

போற்றுதலுக்குரிய ஞாலத்தலைவர் பிரபாகரன் என்றென்றும் வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

போற்றுதலுக்குரிய ஞாலத்தலைவர் பிரபாகரன்

என்றென்றும் வாழியவே!

  தமிழ்நாடான இலங்கை, ஒற்றை நாடாகவே மலர்ந்து தமிழினமும் இனஉரிமையும்  இணைஉரிமையும்  பெற்றுத் திகழும் என்னும் கனவு சிங்களர்களால் அழிக்கப்படத் தொடங்கிய நாளிலிருந்தே தமிழர்நாடு மலர  வேண்டிய தேவையை இலங்கைத்தமிழர்கள் உணர்ந்தனர். அடக்குமுறைகளும் ஒடுக்கு முறைகளும் அவற்றிற்கு எதிரான தொடர்  போராட்டங்களும் வாழ்க்கையாய் மாறின. விடுதலை விதைகள் பலரது உள்ளங்களிலும் ஊன்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே “தமிழீழம் தமிழர்களின் தாயகம்“ என்னும்  மந்திர உண்மை ஈழத்தமிழர்களை வழிநடத்தியது.
 மூத்ததலைவர்கள் வழியில் போராட்டக் களத்தில் ஈடுபட்டாலும் தேவை உணர்ந்து விடுதலைப்படை அமைத்து மக்களை வழிநடத்திச் சென்ற ஆசானும் தலைவனும் மேதகு பிரபாகரன் ஒருவரே!
 எல்லா நாட்டிலும் ஆட்சியாளர்கள் ஏற்கெனவே இருந்த படையைக்கொண்டு விரித்தும் பெருக்கியும்  போர்களைச் சந்தித்தனர் நாட்டைக் காத்தனர். ஆனால் தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் இன்மையிலிருந்து வன்மையை உருவாக்கியவர். இன மக்கள் நன்மைக்காக – நாட்டு விடுதலைக்காக – இடர்களைத் தாங்கிக்கொள்ளும் வலிமையும் எதனையும் எதிர்நோக்கும் துணிவும் உடைய புறநானூற்றுப் புலிகளைக் கொண்டு புதுப்படை அமைத்து நாடுகாக்கும் நற்பணியில் ஈடுபட்ட இனக்காவலர்.
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை. (திருவள்ளுவர், திருக்குறள் 765)
என்னும் இலக்கணத்தின்படி எமனே எதிர்த்துவந்தாலும் ஒன்று திரண்டு எதிர்க்கும் ஆற்றல் உடைய படையை உருவாக்கித் தலைமை தாங்கிய தகைமையாளர்.
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது. (திருவள்ளுவர், திருக்குறள் 762)
போரில் அழிவு வந்து வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமையைத் தொன்று தொட்டு உடைய  பெரும் படையை உருவாக்கி எதிரிகளை நடுங்க வைத்த நற்றமிழர் தளபதி.
  இதுபோல் ஒரு படை முன்னரும் இல்லை, பின்னரும் அமையாதுஎன்று சொல்லும் வகையில் மறம், மானம், அறிவு, திறமை, ஆற்றல், ஈகை உடைய இருபால் இளைஞர்களைக் கொண்டு விடுதலைப்புலிப் படையை, நிலம், நீர், வானம் என முப்பரப்பிலும் ஆட்சி செய்யும் தரைப்புலிகள், பெண்புலிகள், ஈருடகப்படையணி, கரும்புலிகள், சிறப்புப்படையணிகள், உளவுப்புலிகள்,  பொறியியல் அணி எனப் பலவகையாகப் பகுத்து அமைத்துத் திறம்பட ஆட்சி செய்த அடலேறு! எந்த நாட்டு விடுதலைப்போரிலும் இதுவரை இல்லாத அளவிற்கு முப்பெரும் படைகளைப் பல்வேறு பகுப்பாக அமைத்துக் களம்கண்டவர் இவர்போல் யாருமிலர் என்னும் பெருமைக்குரியவர்.
 ஆட்சித்துறை, வருவாய்த்துறை, நீதித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை,   எனப் பலவகையிலும் நாட்டாட்சியையும் திறம்பட நடத்திய மக்களாட்சித்தலைவரும் பிரபாகரன்தான்!
 இன மொழி நாட்டு விடுதலைக்கான பிரபாகரன் கனவு தோற்கவில்லை! இவர் கனவுமட்டுமல்ல! ஈழத்தமிழர்கள் கனவும்  தடங்கல்பட்டு நிற்கலாம்! இவர்கள்  கனவு நனவாகும் காலம் தள்ளிப் போயுள்ளது. அவ்வளவுதான்!
 பீடு மிக்க மேதகு பிரபாகரன்  பெருமங்கலத்தில் அவரை வாழ்த்துவதில் அகம் மகிழ்கிறோம்! தமிழ் ஈழத்தலைவராக மட்டுமல்லாமல் தமிழ்ஞாலத் தலைவராகவும் திகழும் மேதகு பிரபாகரன் நூறாண்டு கடந்தும் வாழ்க!
 அன்பு நீ!
ஆற்றல் நீ!
இனிமை நீ!
ஈகை நீ!
உழைப்பு நீ!
ஊக்கம் நீ!
எழுச்சி நீ!
ஏற்றம் நீ!
ஐயன் நீ!
என அனைவராலும் பாராட்டப்படும் மேதகு பிரபாகரன்  என்றென்றும் வாழியவே!
எல்லார் உள்ளங்களிலும் ஆட்சி செய்யும் மேதகு பிரபாகரன்
ஈழஆட்சித்தலைவராக மலரும் நாள் விரைவில் மலர்கவே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, November 22, 2017

அதிரடிகள் தொடரட்டும்… பாசகவினர் இல்லங்களிலும்! – இலக்குவனார் திருவள்ளுவன்


அதிரடிகள் தொடரட்டும்… பாசகவினர் இல்லங்களிலும்!

 ஒரு  செயல் சரியா அல்லது தண்டனைக்குரியதா? என்பது அச்செயலைப்பற்றி மட்டும் முடிவெடுப்பதல்ல! அதனை ஒத்த பிற  செயலைச் செய்தவர்கள்மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பொருத்தே முடிவெடுக்கப்படுகிறது. அதுபோல் நல்ல  செயலும் அதிகாரத்தினரிடம் உள்ள  செல்வாக்கின்மையால் குற்றச் செயலாக மாறுவதும் நிழ்கிறது. எனவே, எந்த ஒரு  செயலின் மதிப்பும் சூழ்நிலையைப் பொறுத்தே அமைகின்றது என்பதே  இன்றைய நம் நாட்டின்   இலக்கணமாக மாறிவிட்டது.
 சசிகலா குடும்பத்தினர், அவர்களின் நண்பர்கள், பணியாளர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் நடந்த, நடக்கின்ற வருமானவரித்துறையின் அதிரடி ஆய்வுகள் ஊழலை ஒழிக்க  வேண்டும் என்போர்களிடமும் எதிரான பல வினாக்களை எழுப்பியுள்ளது.
 முறையற்ற வழிகளில் செல்வத்தைப் பெருக்கியது ஓரிரு நாளில் நடந்திருக்காது. அப்படி யென்றால்  இதுவரை  தொடர்பான துறைகள்  தூங்கிக் கொண்டிருந்தமை ஏன்?
 எந்த அரசுப்பொறுப்பிலும் இல்லாமல் தவறுகள் நடந்திருக்கின்றன என்றால் அமைச்சர்களும் அதிகாரிகளும் உடந்தையாக இருந்தால்மட்டும்தானே நிகழ்ந்திருக்கும்அவர்களுக்கு என்ன தண்டனை?
  முன்னாள் முதல்வருக்கு  நெருக்கமாக இருந்ததால் பயன் அடைந்தனர் என்றால். ஆதாயம் அடைந்த அல்லது உடந்தையாக  இருந்த அல்லது கண்டும் காணாமல் இருந்த அவரும் தண்டனைக்குரியவர் என்று சொல்வதில் என்ன தவறு?
 கோயிலில் குற்றச்செயல் நடந்திருந்தால் அல்லது குற்றச் செயல் நடந்திருக்கும் என ஐயம் வந்தால்,  கோவிலில் உசாவல்-விசாரணை-மேற்கொள்வதில் என்ன தவறு? கோவிலே உசாவல் வரம்பிற்குத் தப்பாது என்னும்  பொழுது ஒருவரின் வாழ்விடத்தில்அவர் என்னதான் உயர்ந்த  பொறுப்பில் இருந்தாலும் அல்லது இருந்திருந்தாலும்குற்ற உசாவல்  மேற்கொள்வதில் என்ன தவறு?
  அரைமணிநேரம் அல்லது ஒரு மணிநேரத்திற்குமேல் உசாவலை  மேற்கொள்ள இயலாமல், வெறுமனே இருந்துவிட்டு அதனைப் பின்னாள்களிலும்  தொடர்ந்ததாகக் கூறுகிறார்களே! அப்படியானால், பழிவாங்குவதற்குரிய ஆவணங்கள் கிடைக்கவில்லையா?
  தனி ஒருவரிடம் வருமானவரித்துறை  மேற்கொண்ட அதிரடி ஆய்வில் உரூ.300 கோடி, உரூ.650 கோடி, உரூ.750 கோடி, உரூ.1450 கோடி  என்றெல்லாம் பணத்தைக் கைப்பற்றியுள்ளது. ஆனால் 187 இடங்களில்  அதிரடி ஆய்வு மேற்கொண்டும் உரூ. 1430 கோடி  அளவில்தான்  கண்டறிந்துள்ளனர்.  1800 அதிகாரிகள் அதிரடியில்  இறங்கியும் சராசரியாக ஆளுக்கு ஒரு கோடிகூடக் கண்டறியவில்லை. அப்படியானால், கச்சிதமாகத்திட்டமிட்டு மேற்கொண்ட முயற்சி வீணானதா?
  இதுவரை வருமானவரித்துறை அதிரடி ஆய்வு  மேற்கொண்டதன் தொடர் நடவடிக்கை என்னவாயிற்று? அப்படியானால் இவற்றின் நோக்கம், குற்றவாளிகளைக் கண்டறிதல்  இல்லையா?
  சசிகலா குடும்பத்தினர் பாசகவின் தாள் பணிந்திருந்தால் தொடர்ந்து வழக்கமான பாதையிலேயே அவர்கள்  சென்றிருப்பார்களா?
  ஊழல் குற்றச்சாட்டிற்காக உரிய துறையினர் செல்லும்பொழுது  மூன்றாமவரை உடன் சான்றாளராக அழைத்துச் செல்ல  வேண்டும். அப்படி 187 இடங்களுக்கும் சென்ற உடனாளர்கள் யாவர்?
  அதிரடி ஆய்விற்குப்பின்னர் கைப்பற்றிய ஆவணங்கள், உடைமை விவரங்கள் ஆகியவற்றை வெளியிடாமல், மூடுமந்திரமான செய்திகளை வெளியிட்டுத் தோல்வியை மறைப்பதேன்?
 இவற்றின் காரணமாகக், கட்சி வேறுபாடின்றி, அனைத்துக் கட்சியினரும், சசிகலா, தினகரனுக்கு எதிராகக் குரல் கொடுத்தோரும் ஊடகத்தினரும் நடுநிலை அரசியலாளர்களும் பாசகவின் தகா நடவடிக்கை என்றே கூறுகின்றனர்.
 மத்திய மாநில அரசுகளே, ஆகாதவர்களை ஒடுக்குவதற்காக, எதிர்த்தரப்பினரை உங்கள் பக்கம் இழுப்பதற்காக அல்லது இல்லாது ஒழிப்பதற்காக அரசின் துறைகளைப் பயன்படுத்தாதீர்!  இவ்வாறு செய்வதும் ஊழல்தான்! நீங்கள் தூய்மையாக இருந்து நாட்டில் தூய்மையும் நேர்மையும் நிலவ உதவ வேண்டும்.
 அதிகாரத்தில் உள்ளவர்களும் அதிகாரத்தால் பயனடைவோர்களும் பிற மக்களும் நேர்மையாகச் செல்வம் திரட்ட வேண்டும் என்பதில் உண்மையிலேயே வருமானவரித்துறையினருக்கு உடன்பாடு உள்ளதா? அப்படியாயின், ஆளுங்கட்சி, ஆளுங்கட்சியினருக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடுகளைவிட்டு ஐயத்திற்குரிய அனைவர் இல்லங்கள், அலுவலகங்கள், தோட்டங்களில் அதிரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
  இதுவரை மேற்கொண்ட அதிரடி ஆய்வுகளின் தொடர் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.
 அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் பிறரும் நேர்மையையே வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  குறுக்கு வழியில் பணம் சேர்க்க எண்ணுவது பச்சை மண் பானையில் நீரைச்  சேமித்து வைக்க எண்ணுவது  போன்றதாகும்.
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇயற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 660)
எனவே, குறுக்கு வழியில் செல்வம் சேர்க்க எண்ணுவோரே! நல்வழியில் பணம் திரட்டுங்கள். திரட்டிய பணத்தை நல்லறவழியில்  செலவிடுங்கள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 213, கார்த்திகை 03- கார்த்திகை 09,  2048 /  நவம்பர் 19  – நவம்பர் 25,  2017

Monday, November 13, 2017

இரண்டாம் உத்தமத்தில் என்ன நடக்கிறது? நேர்மையாளர்களே விடையிறுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இரண்டாம் உத்தமத்தில் என்ன நடக்கிறது? நேர்மையாளர்களே விடையிறுங்கள்! 
  உத்தமம்  (உலகத்தமிழ்த்தகவல் தொழில் நுட்ப மன்றம் –  International Forum for Information Technology in Tamil – INFITT) என்னும் அமைப்பு தகவல்தொழில்நுட்பம் மூலமாகத் தமிழை வளர்ப்பதற்காகத் தோன்றிய அமைப்பு. 1997இல்  முதல் தமிழ் இணைய மாநாட்டை நடத்தியிருந்தாலும் 2000இல்தான் முறையாக  இவ்வமைப்பு வடிவம் பெற்றது. இதுவரை 16  தமிழ் இணைய மாநாடுகளை 5 நாடுகளில் நடத்தி 800க்கு மேற்பட்ட கட்டுரைகள் அரங்கேற்றியுள்ளது. எனினும் இவ்வமைப்பில் கணிநுட்பர்களுக்கு முதன்மை அளித்துத் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் புறக்கணிக்கப்பட்ட சூழலால் தமிழன்பர்கள் பலருக்கும் கசப்பான பட்டறிவுகளே விளைந்தன. இவற்றின் தொடர்ச்சியாக அண்மையில் கனடாவில் நடந்த 16ஆவது தமிழ் இணைய மாநாட்டில் பொறுப்பாளர்கள் தவிர பிறரின் கட்டுரைகள் ஏற்கப்பெறாமல் மறுக்கப்பட்டன. இதனால் உலகளாவிய வெறுப்பை இவ்வமைப்பு  ஈட்டியது. இதன் விளைவாகப் புதிய அமைப்பு தோன்றியது. (அதற்கும் முன்னதாக, மலேசியாவில் உள்ள காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் , தகவல்  தொழில்நுட்பப்பிரிவு மூலம்பு இணையத்தமிழ் மாநாட்டினைச் சிறப்பாக நடத்தி முடித்தது.)
  தமிழ் இணைய வளர்ச்சிக்கு எனப் பல்வேறு அமைப்பு இருப்பது  தவறல்ல. வெவேறு நாடுகளில்  வெவ்வேறு அமைப்புகள் கணித்தமிழ் வளர்ச்சிக்கு உருவாக்கப்படுவதும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், ஒன்றிற்கு ஒன்று எதிரியாகக் கருதாமல் வாய்ப்புள்ள சூழல்களில் ஒருங்கிணையும் போக்கு நிலவ வேண்டும். அதே போல், எத்தனை அமைப்புகள் இருந்தாலும்  பொறுப்பாளர்கள்தாம் மாறியிருப்பார்களே தவிர, பங்கேற்கும் ஆர்வலர்களில் பெருத்த மாற்றம் இருக்காது. எனவே, தமிழுக்கு முதன்மை அளிக்கும் ஓர் அமைப்பு தோன்றியதில் தவறில்லை. ஆனால், வளர்ச்சிக்காக நடத்தாமல் வீம்புக்காக நடத்துவதுபோல் அதே சுருக்கப் பெயரையே உத்தமம் என (INFITT- International Forum for Information Technology) வைத்துக் கொண்டதுதான் தவறு.
  இந்த அமைப்பு, முந்தைய அமைப்பின் தளத்தில் உள்ளவாறே தன் தளத்தையும் அமைத்து,  இரவல் புத்தியைக்காட்டிக்  கொண்டது. தமிழ் என்று மாநாட்டில் பெயர் சேர்க்கப்படுவதால்தான் நன்கொடை கிடைகிறது, வரவேற்பு கிடைக்கிறது என்பனவற்றை மறந்து கணி நுட்பத்தைத் தமிழில் முழுமையாகக் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லிக்கொண்டாலும் அதற்கு அடிப்படையான தமிழ் ஆர்வலர்களை உத்தமம் புறக்கணித்தது. எனவே,  தமிழுக்கு வலியுறுத்தும் அமைப்பு என்பதால் (எதிர்ப்பை மட்டும்  தெரிவித்துவிட்டுப்) புதிய உத்தமம்  சார்பிலான மாநாட்டில் நானும் பங்கேற்க விழைந்தேன். சொல்லப்போனால் உத்தமத்தால் துரத்தப்பட்டடவர்கள், தகவல் தொழில் நுட்பத்தில்  தமிழ் வளர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட புதிய உத்தமத்தால் அன்புடன் வரவேற்கப்பட்டதால் அனைவரும் இம்மாநாட்டில்  ஆர்வம் காட்டினர்.
 ஆனால், மாநாட்டு அமைப்பினருக்கு ஆர்வம் இருந்த அளவில் செயல்திறம் இல்லை என்பது பலவற்றில் தெரிந்தது. உத்தமம், மாநாடு நடத்தப்படுவதற்குப் பல்கலைக்கழக இடம் மறுக்கப்படுவதற்கு முனைந்தது போன்ற சில செயல்களால் தட்டுத்தடுமாறி  புதிய உத்தமம்  நடை போட்டது.  இருப்பினும்  நம் நாட்டிலிருந்து ஒருவர் தவிரப்பிறருக்கு  மாநாட்டில் பங்கேற்க நுழைமம்(விசா) கிடைக்கவில்லை. (பயண முகவர், அழைப்பு மடல் சரியாக இல்லை என்றும், சுற்றுலாப்பயணிபோல் விண்ணப்பத்திருந்தால் அனைவருக்கும் நுழைமம் கிடைத்திருக்கும் எனத் தெரிவிக்கின்றார்.)
   நான் ஊடகப்பிரிவிலும் கட்டுரையாளர் என்ற முறையிலும் பங்கேற்பதாகப் பதிந்திருந்தேன். {எனவே, பதிவுக்கட்டணம் கனடா தாலர் 100 செலுத்த வேண்டா என இங்குள்ள துணைத்தலைவர்  அன்புடன் இசைந்தார்.) நுழைமம் கிடைத்தபின்னர் பயணச்சீட்டு எடுக்கலாம் எனப் பலரும் காத்திருந்தோம். ஆனால், கனடா அமைப்பினர், “இப்பொழுதே கட்டணமாக ஒருவருக்கு 65,000  உரூபாய் அனுப்புங்கள்.  பிறகு எடுப்பதாக இருந்தால் கட்டணம் உயர்ந்துவிடும். அதே நேரம், பணம் செலுத்தியவர்கள், 15.10.2017 ஆம் நாளுக்குள் நீக்குமாறு தெரிவித்தால் எவ்வகைப் பிடித்தமும் இன்றிப் பணம் திருப்பித் தரப்படும் . அதற்குப்பின்னர் தெரிவித்தால் உரூபாய் ஐயாயிரம் மட்டும்  பிடித்தம் செய்யப்படும்” என்று தெரிவித்தனர். நான் இதற்கு உடன்படா நிலையில் துணைத்தலைவராக உள்ள அன்பு நண்பர், “ நீங்கள் எப்படியும் கலந்து கொள்ள வேண்டும். எனவே, அதற்குரிய  ஏற்பாட்டினை நாங்கள் செய்து விட்டோம்.  நுழைமத்திற்கு விண்ணப்பிப்பவர்கள்  பெயர், தேடல் எண் விவரங்களைத் தெரிவிப்பின் கனடாவிலிருந்து தலைவர்,  அங்குள்ள தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்து  அனைவருக்கும் நுழைமம் கிடைக்கச் செய்துவிடுவார்” என்றார்.
  நான், என்னிடம் கடன் அட்டை இன்மையால் அட்டோபர் 3,2017 அன்று அவர்கள் குறிப்பிட்ட நண்பர் வழி உரிய கட்டணமான உரூபாய் 65,000 செலுத்திவிட்டேன். அன்றைக்கே அவர்களுக்குக் கிடைத்ததாக ஒப்புதலும் வந்துவிட்டது.   (நேரில் பணத்தைச்செலுத்த இயலாத ஒருவர் சார்பில் மற்றொரு 65,000 உரூபாயையும் நான் செலுத்தியுள்ளேன்.) அன்று மாலையே வானூர்திச்சீட்டு அனுப்பி வைக்கப்படும் என்று சொல்லியும் 3 நாள் ஆன பின்னரும் வராமையால் பயணச்சீட்டை அனுப்பி வைக்குமாறு வேண்டினேன். இரு நாளில் அனுப்புவதாகத் தெரிவித்தனர். அப்படியும் வராமையால் மீண்டும்கேட்டேன். நுழைமம்(விசா)வந்ததும் வானூர்திச்சீட்டை வாங்கி அனுப்புவார்கள் என்றும் அதுவரை பொறுத்திருக்கமாறும் தெரிவித்தனர். பயணச்சீட்டு  நீக்கும் சிக்கல் இருக்காது என்பதால் பிறர் போல் நானும் இதற்கு உடன்பட்டேன்.
  ஆனால், முதலில் விண்ணப்பித்திருந்த எனக்கு(ம் பிறர் அனைவருக்கும் ) நுழைமம் மறுக்கப்பட்ட தகவல் வந்தது. அட்டோபர் 09 இல் இதனைத் தெரிவித்தேன்.
  மறுக்கப்பட்டவர்கள் நுழைமம் பெற நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். “எங்களை  விட்டுவிட்டு இனி நுழைமத்திற்காகக் காத்திருப்பவர்கள் அனைவருக்கும் நுழைமம் கிடைக்க ஆவன செய்யுங்கள்” என்றேன். பயன்படுத்தப்பெறாக் கட்டணப் பணத்தைத்திருப்பி அனுப்புவதாகக்  கூறியவர்கள்,  திருப்பி அனுப்பாததால்,  நான் செலுத்திய தொகையைத் திரும்ப எனக்கு அனுப்புமாறு கேட்டேன். முதலில் அனுப்பி வைப்பதாகக் கூறியவர்கள், பின்னர், மாநாட்டுக்கணக்கு வழக்கு பார்த்த  பின்னர், அஃதாவது மாநாடு முடிந்த பின்னர் வானூர்திக் கட்டணப்பணத்தை அனுப்புவதாகக்  கூறினார்கள். “வானூர்திச்சீட்டே வாங்காதபொழுது கணக்கு வழக்கு எங்கே வந்தது” என்று கேட்டேன்.” மாநாட்டு வேலைகளில் மூழ்கியுள்ளனர். பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றனர்.
  காலம் கடக்கக்கடக்க நான் பொறுமையிழந்து, “பணத்தைத் திரும்பத்தராவிட்டால், காவல்துறையில் முறையிடுவேன்; இதழ்களில் அல்லது  என் மின்னிதழில் நிதி மோசடி எனச் செய்தி வெளியிடுவேன்” என்றேன்.
  அதற்குத் தமிழ்நாட்டிலுள்ள துணைத்தலைவராகிய அன்பு நண்பர், “ என்னை நம்பித்தானே பணம் கொடுத்தீர்கள். நான் பணத்திற்குப் பொறுப்பு . காலத்தாழ்ச்சியானால், உங்களுக்கு நான் பணத்தைக் கொடுத்துவிட்டுப் பின்னர்  மாநாட்டுக்குழுவிடம் வாங்கிக்கொள்வேன்”. என்றார்.  சொன்ன நாள் கடந்ததால் கருத்தரங்கக்குழுத் தலைவரிடம் பேசினேன். “யாருக்கும் பணம் தராவிட்டாலும் உங்களுக்குச் சொந்தப்பணத்தைக் கொடுக்குமாறு துணைத்தலைவரிடம் கூறியுள்ளேன். பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார். பின்னர் நவம். 1இல் பணம் அனுப்புவதாகக்  கூறி அன்று கேட்ட பொழுது “பணம் அனுப்பிவட்டார்கள், 8 நாளில் கிடைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டேன். இணைய வழியில் உடனே பணம் கணக்கில் சேர வாய்ப்பு உள்ளதே என்றதற்கு மிகுதியானவர்களுக்குத் திரும்பத் தருவதால் காலத்தாழ்ச்சி ஆகும் என்று புதுக்கதை கூறினர்.
  இதுவரை  வானூர்திக் கட்டணத்திற்காக நான் செலுத்திய பணம் வராததால்,  பின்வரும் வினாக்களுக்கு விடை தெரிய விரும்புகினறேன்.
 1. வானூர்திக்கட்டணத்திற்காகப் பெறப்பட்ட பணத்தை உடனடி வேறு செலவுகளுக்குப் பயன்படுத்தி, அவற்றை மீளப் பெற இயலவில்லையா?
 2. வானூர்திக் கட்டணத்திற்கு எனச் செலுத்திய பணத்தை – மாநாட்டுப்பணிக்காகவே இருந்தாலும் – வேறு வகையில் செலவழிக்கலாமா?
 3. அவ்வாறு பணத்தைத் தவறாகக் கையாளவில்லை என்றால் உடனே உரிய தொகையைத் திரும்ப அனுப்புவதில் என்ன சிக்கல்?
 4. வானூர்திப்பயணச்சீட்டு எண் எனச் சொல்லிப் பதிவு எண் மற்றொருவரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏமாற்றுவதன் காரணம் என்ன?
 5. அறை வாடகை செலுத்தாமல் அறைகளை ஒதுக்கி வைக்குமாறுதான் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். அதற்கான பதிவுக்கட்டணத்தைப் பேராளர்கள் செலுத்திய பின்னர், வாடகை செலுத்தாமையின் காரணம் என்ன?
 6. பயணச்சீட்டுக் கட்டணத்தை மாநாட்டுப் பிற வரவு-செலவுடன் சேர்த்துக் கணக்கு பார்க்க வேண்டிய தேவை என்ன? அவ்வாறு பார்க்கவில்லை எனில், அவ்வாறு சொன்னதன் காரணம் என்ன?
 7. மாநாடுமுடிந்து இரு வாரம் ஆகியும் கணக்கு வழக்கை முடிக்கவில்லையா? ஏன்?
 8. சொன்னவாறு நவ.1அன்று பணம் அனுப்பப்பட்டடதா? அனுப்பியிருந்தால் வங்கிக்கணக்கில் வந்துசேருவதில் என்ன சிக்கல்? இல்லையெனில், அவ்வாறு  சொன்னதன் காரணம் என்ன?
 9. இது வரை பணம் அனுப்பாமல் இருப்பதால் மனச்சான்று குத்தவில்லையா?
 10. யாருக்குமே பணம் திரும்பத் தரவில்லையெனில் பல நூறாயிரம் உரூபாய்மோசடி செய்ததாகுமே! இது குறித்துக் கவலைப்படவில்லையா?
 11. நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்படும் அமைப்பு, தொடக்கத்திலேயே தடுமாறினால்- நம்பிக்கை யிழந்தால் – எங்ஙனம் அமைப்பு வளரும்?
 12. என் மூலமாகப் பணத்தைக் கொடுத்தவரிடம் என்னிடமே பணத்தைக் கேட்குமாறு கூறியது முறைதானா?
 13. ஒரு முறையாவது மாநாட்டுக் குழுவினர், தாமே முன்வந்து, பணம் திரும்ப அனுப்புவது குறித்துச் சொல்லாதது ஏன்? கேட்டால் மட்டும் சொல்வதால் சமாளிப்பு என்றுதானே கருத வேண்டியுள்ளது. அவ்வாறு மதித்துச் சொல்லியிருந்தால்இவ்வாறு எழுத வேண்டிய தேவை வந்திருக்காதே!
 14. உங்களிடம் பெற்ற கசப்பான பட்டறிவு இனி, அயலக மாநாடு என்றாலே அஞ்சி ஓடச்செய்து விடுமே! கனடாவாழ் தமிழர்களுக்கு அவப்பெயர் வருகிறதே! இவற்றைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டதில்லையா?
 15. எழுதுவற்கு இன்னும் செய்திகள் உள்ளன. இருந்தும் இனியேனும் நல்ல வழிகாட்டிகளைக்கொண்டு நன்முறையில் செயல்பட்டு அமைப்பை வளர்க்க வேண்டுகின்றேன்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும். (திருவள்ளுவர்திருக்குறள் 448)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : 
அகரமுதல 212, ஐப்பசி 26 – 25, கார்த்திகை 02,  2048 /  நவம்பர் 12  –நவம்பர் 18,  2017

Followers

Blog Archive