Saturday, May 23, 2015

கொன்றவனும் வாழ்கின்றான்! துணை நின்றவனும் ஆள்கின்றான்!


veeravanakkam03

கொன்றவனும் வாழ்கின்றான்!

துணை நின்றவனும் ஆள்கின்றான்!

வீழ்ந்தவர்கள் தாழலாமா?

  காலமும் மறதியும் துயரத்தை மறக்கும் மருந்துகளாகும். தனி மனிதர் என்ற முறையில் நமக்கிழைத்த இன்னல்களை மறக்கலாம்! மன்னிக்கலாம்! ஆனால், கூட்டம் கூட்டமாகப் பேரினப் படுகொலை நடத்தியவர்களை நாம் எப்படி மறப்பது? மறந்தோமென்றால் இருப்பவர்களும் அழிவதைத் தவிர வேறு வழியில்லையே!   பொள்ளென நாம் சினந்து எழாவிட்டாலும் காலம் பார்த்து உள் வேர்க்கும் (குறுள் 487)   மன உரமாவது வேண்டுமல்லவா?
“வீழ்ச்சியுறு ஈழத்தில் எழுச்சி வேண்டும்!” எனில்
“சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!” (பாரதிதாசன்)
அல்லவா?
  தமிழ் ஈழத்தில் வஞ்சகத்தால், கூட்டுக் கொலைகளால், கொத்துக் குண்டுகளால், மடிந்தவர்களும் துயருற்றவர்களும் பன்னூறாயிரவர்(பல இலட்சக்கணக்கினர்). அங்கே நடந்தது உள்நாட்டுப் போருமல்ல! போர்க்குற்றமுமல்ல! பேரினப் படுகொலை!
  2009 ஆம் ஆண்டு 3ஆவது வாரம் என்பது தமிழ்த்தேசியக் கொடுந்துயர் வாரமாக உருவாக்கப்பட்டது. துயரத்திற்குக் காரணமானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லையே!
  பன்னூறாயிரவர் வஞ்சகத்தால் கொல்லப்பட்டதை மூடிமறைக்கும் வகையில் பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றி விழாவாகக் கொண்டாடுகிறான் சிங்களன்! தமிழீழத்தலைவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் சிலரும் அதற்குத் தாளம் போடுகின்றனர்! உலகநாடுகளோ மனச்சான்றின்றிப் போர்க்குற்றம் எனச் சுருக்குகின்றன. இரு தரப்பிலும் போர்விதி மீறல்கள் நடந்ததாகவும் சிங்களக் காடையரின் விதிமீறல்களைவிட விடுதலைப்புலிகளின் விதி மீறல்கள்தாம் மிகுதி என்றும் ஒரு கூட்டம் பிதற்றிக் கொண்டுள்ளது. இராசபக்சே அரசியல் தலைமையிலிருந்து தேர்தல் மூலம் அகற்றப்பட்டது ஈழத்தமிழர்களின் மகிழ்ச்சிக்கான வெற்றி. அதே நேரம், இதை வெற்றியின் தொடக்கமாகக் கருதலாமே தவிர, முழு வெற்றியல்ல. அடுத்து இப்பொழுது வந்த சிரீசேனா அரசியல் காரணங்களால் சிங்களர்களிடம் முதன்மை பெறுவதற்காக இராசபக்சேவை எதிர்த்து வரலாமே தவிர, தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல! தமிழர்களுக்குத் தன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல! ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதை ஒப்புக் கொள்ளவோ, அதற்குக் காரணமான கொலைக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கோ அல்ல!
  ஈழத்தமிழர் தலைவர்களில் பலர், பதவி நலனுக்காகவோ, தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவோ, அரசியல் தந்திரம் என்றோ, வேறுவழியில்லை என்றோ ஒரே நாடு எனக்கூறிக்கொண்டு சிங்களத்தலைமையுடன் இணைந்து செயல்படுகின்றனர். புலம் பெயர் தமிழர்களிடமும் தாங்கள் நம்பிக்கை வைக்கும் தலைவைர்களுக்கிணங்கக் கருத்து மாறுபாடுகள் உள்ளன. எனினும், புலம் பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையர், இனப்படுகொலை என்பதை உலகம் ஒத்துக் கொள்ள வேணடும் என்பதிலும் கொலைக்குற்றவாளிகளும் கொலைகளை வழிநடத்திய தலைவர்களும் அதிகாரிகளும் மனிதநேயமின்றி இனப்படுகொலைக்குத் துணை நின்ற உலக நாடுகளின் தலைமைகளும் தண்டிக்கப்படவேண்டும்! அரசியலிலிருந்து அகற்றப்படவேண்டும்! ஈழத்தமிழர்கள மறுவாழ்வு பெற வேண்டும்! தமிழீழக்கொடி விரைவில் தரணியெங்கும் பறக்க வேண்டும்! தமிழ்ஈழ நாடு உலகில் தலைசிறந்து விளங்க வேண்டும் என்பதிலும் ஒத்துள்ளனர். தமிழ்நாட்டிலும் கட்சித்தலைமையின் முரண்பட்ட கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எதிராகக் கட்சித் தொண்டர்கள் பலரும் தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் இதேபோல் எண்ணி அதற்காகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
  ஆனால், ஈழத்தில் தமிழர் நிலம் சுருங்கிக்கொண்டே உள்ளது. தமிழர் பகுதிகளின் சுற்றிலும் இடையிடையேயும் சிங்களப் படையோ மக்களோ குடியமர்த்தப்டுகிறார்கள். கட்டாயக் கருக்கலைப்பு போன்றவற்றால் ஈழப் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டு இனஅழிப்பு வேலை இன்னும் நடந்து கொண்டுள்ளது. காணாமல் போன ஈழத்தமிழர்களின் இருப்பிடம் இன்னும் தெரியவில்லை! அவ்வப்பொழுது திடீர், திடீரென்று தமிழிளைஞர்கள் கடத்தப்பட்டுத் துன்புறுத்தப்படுகிறார்கள்! நாளும் இழைக்கப்படும் கொடுமைகளால் வாழும் வகையின்றி வாடும் ஈழத்தமிழர்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வரவேண்டாவா? மாண்ட தமிழர்களின் ஈகங்களுக்கு உரிய பயன் வரவேண்டாவா? தாய்மண்காக்கப் போரிட்ட விடுதலைப்புலி வீரர்களின் கனவுகள் நனவாக வேண்டாவா? நம் கனவு நனவாக நாம் என்ன செய்ய வேண்டும்?
  வீழ்ந்தவர்கள் எழுவதற்கும் தாழ்ந்தவர்கள் வாழ்வதற்கும் பிற இனத்தவரிடமும் நாம், கருத்தாதரவு தேட வேண்டும்! தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் வழங்கும் மொழிகளில் தமிழினப் படுகொலை பேரளவில் நடைபெற்றமை குறித்தும் தமிழர்களின் தாயகம் தமிழீழம் என்பது குறித்தும் ஈழநாடு விடுதலை குறித்தும் மேற்கோள்கள், கட்டுரைகள், செய்திகள், பிற படைப்புகள் முதலானவற்றை மொழி பெயர்த்து இனப்படுகொலை குறித்தும் உணர்த்தி உலக நாடுகள் இனப்படுகொலையாளிகளும் உடந்தையாளர்களும் தண்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு செயல்படவேண்டும்.
 தொடர்ந்த இனப்படுகொலைகளிலும் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற பேரவலப் படுகொலைகளிலும் இறந்தவர்களுக்கு நாம் செலுத்தும் வீர வணக்கம் என்பது
ஒன்றுபட்டுச் செயல்பட்டு உலகநாடுகளின் கருத்தாதரவு பெற்று இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்படுவதே!
கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் தண்டிக்கப்படுவதே!
தமிழ்ஈழநாடு தன்னுரிமையுடன் பன்னாட்டவைகளில் இடம் பெற்றுத் தனி இறையாண்மையுடன் திகழ்வதே!

நம் வீரவணக்கம் பொருள்பொதிந்ததாக மாறும் வகையில்
ஈழவிடுதலை நாள் விரைவில் வருவதாக!
தமிழ் ஈழ மக்கள் வாழ்வு மலர்வதாக!
உலக அரங்குகளில் தமிழர் தலைமை பெறுவார்களாக!
என்றென்றும் தமிழ் முதன்மை இடத்தில் நிலைப்பதாக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 இதழுரை
feat-default

may1802

Thursday, May 14, 2015

ஒலி பெயர்ப்பு வரையறைக் குழு அமைக்க அரசிற்கு வேண்டுகோள்!

mu.rasaram i.a.s.02tkramachanthiranias01Seal_of_Tamil_Nadu01

சீரான ஒலிபெயர்ப்பை நடைமுறைப்படுத்த

 தமிழக அரசிற்குத் தமிழறிஞர்களின் வேண்டுகோள்

  மூல மொழிச் சொற்களை உள்ளவாறு உணர்வதற்கு உதவுவது ஒலிபெயர்ப்பு. அந்த வகையில் தமிழ்ச்சொற்களைப் பிற மொழியினர் அறிய உதவுவது ஒலி பெயர்ப்பு. பொதுவாக உரோமன்/ஆங்கில எழுத்துகளில் தமிழுக்கான ஒலிபெயர்ப்பு மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. [பிற மொழியாளர்கள் புரிதலுக்காகத்தான் ஒலி பெயர்ப்பே தவிர, தமிழில் ஒலி பெயர்ப்பு முறையில் பிற மொழிச்சொற்களைக் கலக்கக்கூடாது.] ஐரோப்பியர் வருகைக்கு முன்னர், எத்தகைய ஒலி பெயர்ப்பு முறைகளைப் பிற மொழியினர் கையாண்டிருந்தனர் என நமக்குத் தெரியவில்லை. ஐரோப்பியர் வருகைக்குப்பின்னரே தமிழ் மொழிக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது.
  இன்றைக்கு வெவ்வேறு வகை ஒலி பெயர்ப்பு முறைகள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொருவரும் ஒவ்வோர் ஒலி பெயர்ப்பு முறையைப் பின்பற்றும் போக்கும் உருவாகிறது. எனவே, தமிழக அரசு ஒலிபெயர்ப்பு வரையறை ஆணை ஒன்றை வெளியிட வேண்டும்.
  ஒலி பெயர்ப்பு ஆணையை வெளியிடும் முன்னர் ஒலி பெயர்ப்பு வரையறைக் குழு ஒன்றைத் தமிழக அரசு அமைக்க வேண்டும்.
 “தமிழ் எழுத்துகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு குறித்துத் தனிப்பட்டவர்கள் முடிவெடுப்பது ஏற்கத் தக்கதல்ல. தமிழக அரசே, தமிழ் வளர்ச்சித்துறை மூலமாகத் தமிழுக்கான ஆங்கில ஒலிபெயர்ப்பு தரப்படுத்தும் குழு ஒன்றை அமைத்து, அக்குழு பட்டறிவு மிக்க, மொழிபெயர்ப்பில் ஈடுபாடு கொண்ட தமிழறிஞர்கள் கருத்துகளைக் கேட்டறிந்து பரிந்துரைப்பதன் அடிப்படையில் அரசே தக்க ஆணை பிறப்பிக்க வேண்டும். தொழில் நுட்பர்கள் தமிழ்த் தேவையை நிறைவேற்றும் பணிதான் ஆற்ற வேண்டுமே தவிர, இம் முடிவில் தலையிடக்கூடாது. தமிழ் மரபறியா பிற மொழியாளர்களும் இதில் தலையிடக் கூடாது.”   என மடல் எண் 107/2045 நாள் 04.03.2045 / 18.03.2014 மூலம் முன்னரே தமிழக அரசிற்குத் தமிழ்க்காப்புக் கழகம் தெரிவித்துள்ளது.
மடல் எண்120/2045 நாள் ஆவணி 10, 2045 / 26.08.2014 மடல் மூலம், “தமிழ் இணையக்கல்விக் கழகம் தமிழ் தொடர்பான கருத்துகளை முடிவெடுக்கவோ முன்மொழியவோ ஏற்ற அமைப்பல்ல. “தமிழை வளர்ப்பதற்கான அமைப்பு; ஆதலின் தமிழ்ப்புலமை உடையவர்களே இதன் இயக்குநராக இருக்க வேண்டும்” என்னும் பொழுது இஃது இணைய அமைப்பு என்பதாகத் தவறாகக் கூறி அதற்கேற்ப விதிமுறைகளிலும் புனைவாவணம் உருவாக்கப்பட்டுள்ளதை முன்னரே தங்கள் கருத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். ஆனால், இப்பொழுது தமிழ்பற்றிக் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் தமிழ் அமைப்பு எனக் கூறிக் கொள்வது இரட்டை வேடமன்றி வேறல்ல. தமிழ்ப்புலமையாளர் தலைமையில் இயங்காத,   ஓர் அமைப்பு தமிழ் தொடர்பில் அரசிற்குக் கருத்து கூறுவதோ அதன் முடிவை அரசு ஏற்பதோ தமிழுக்குக் கேடுதருவதாக அமையும்.”   என்றும் அரசிற்குத் தமிழ்க்காப்புக் கழகம் தெரிவித்துள்ளது.
  தமிழ் வளர்ச்சி – செய்தித்துறையின் செயலர் முனைவர் மு.இராசாராம் இ.ஆ.ப., ஒரு நாளின் பெரும் பொழுதை அலுவலகப் பணிக்காகவே செலவிடும் உழைப்பாளி. எனினும் ஒலி பெயர்ப்பு தொடர்பான பொருண்மை முதலில் தகவல் தொழில்நுட்பத்துறையில் எழுப்பப்பட்டுள்ளதால், அது குறித்த முடிவு எடுத்தலை அடுத்து துறையின் பணியில்தலையிடவதாகக் கருதுகிறார் போலும். இந்த எண்ணம் தவறானது. எனவே, தமிழ் வளர்ச்சித்துறையின் பணி என்பதை உணர்ந்து இது குறித்து விரைவில் முடிவெடுத்துத் தக்க அரசாணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இப்பொழுது ஒருங்குகுறிச் சேர்த்தியம் முன்வைக்கப்பட்டுள்ள பின்னங்கள், குறியீடுகள் முன்மொழிவு தொடர்பில் சுவடு முதலான சொற்களுக்கு ஒலிபெயர்ப்பு தேவைப்படுகின்றது. அதற்கெனத் தனியாகத் தகவல் தொழில் நுட்பக் குழுவில் குழு அமைக்க வேண்டிய தேவையில்லை. முன்மொழிவின் பிற பொருண்மைகள் பற்றி மட்டும் முடிவெடுத்தால் போதுமானது. நமது வேண்டுகோளுக்கிணங்க ஒருங்குகுறி தொடர்பான நடவடிக்கை எடுத்து வரும் தகவல் தொழில்நுட்பச் செயலர் திரு தா.கி.இராமச்சந்திரன் இ.ஆ.ப., இது தொடர்பான குழுவை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் ஒலி பெயர்ப்பு தொடர்பான உட்குழுவை அமைக்காமல் தமிழ் வளர்ச்சித்துறையின் பொறுப்பில் விட்டுவிட்டு அதன் அடிப்படையிலான முடிவைச் செயல்படுத்துவதே சிறப்பாக அமையும். தமிழ் வளர்ச்சித்துறையும் தமிழுக்கான ஒலி பெயர்ப்பு வரையறை ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் இதனடிப்படையில் முடிவெடுக்குமாறு தொழில்நுட்பத்துறைக்கு அறிவுறுத்தி, இதற்கெனத் தனியே குழு அமைப்பதை நிறுத்த வேண்டும்.
எனவே,
 • தமிழ்வளர்ச்சித்திணைக்களத்தின் – அஃதாவது செயலகத்துறையின் – செயலர் கட்டுப்பாட்டில் இக்குழு அமைதல் வேண்டும்.
 • தமிழ்வளர்ச்சி இயக்குநர், உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் ஆகியோரை இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக அமர்த்துதல் தமிழறிஞர்களைத் தெரிவு செய்ய எளிமையாக இருக்கும்.
 • இக்குழுவில் தமிழ்ப்பற்று மிக்க தமிழறிஞர்களையும்   தமிழிலக்கியமொழிபெயர்ப்பு படைப்பாளர்களையும் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும்.
 • மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியிடும் தமிழ்ப்பல்கலைக்கழகம் முதலான பல்கலைக்கழகங்கள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சாகித்ய அகாதமி, ஆசியவியல் நிறுவனம் முதலான நிறுவனங்கள், தமிழ்க்காப்பு அமைப்புகள் ஆகியவற்றின் சார்பாளர்களையும் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும்.
 • குழுவின் நோக்கம், உறுப்பினர்கள் விவரம் முதலியவற்றை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
 • இப்போது நடைமுறையில் உள்ள ஒலி பெயர்ப்பு முறைகளை அட்டவணைப்படுத்தி, செய்தித்தாள்களில் விளம்பரமாக வெளியிட்டும் இணையத்தளங்கள் வழியாகப் பகிர்ந்தும் உலகத் தமிழறிஞர்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும். தொடர்பான கருத்து தெரிவிப்பவர்கள் கட்டுரையாக அளிக்காமல், தேவைப்படும் மாற்றங்களைக் குறிப்பிட்டுத் தொடர்பான குறிப்புகள் அளி்த்தால் போதுமானது என்றும் தெரிவிக்க வேண்டும்.
 • இவ்வாறு பெறப்படும் கருத்துகளைத் தொகுத்து ஒலி பெயர்ப்பு வரையறைக் குழு ‘ஒலிபெயர்ப்புத் தெரிவு அட்டவணையை’ உருவாக்க வேண்டும்.
 •  ஒலி பெயர்ப்புத் தெரிவு அட்டவைணையை விளம்பரங்கள் இணையப் பகிர்வுகள் மூலம் மீண்டும் மக்கள் முன்னிலையில் வைக்க வேண்டும்.
 • இவ்வாறு பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் ஒலிபெயர்ப்பு வரையறைக் குழுவானது ‘ஒலிபெயர்ப்பு வரையறை ஆணை வரைவை’ உருவாக்க வேண்டும்.
 • இவ்வரைவாணையை மீண்டும் மக்கள் முன்னிலையில் தெரிவித்து நிறைவுக் கருத்து எதுவும் இருப்பின் பெற வேண்டும்.
 • அதன்பின்னர், தமிழக அரசு தமிழுக்கான ஒலி பெயர்ப்பு வரையறை ஆணையை வெளியிட வேண்டும்.
எனவே, ஒலிபெயர்ப்பில் சீர்மை நிலவுவதற்காகவும் தனிப்பட்டவர்கள் இது தொடர்பில் தத்தம் விருப்பம்போல் முடிவெடுப்பதை நிறுத்துவதற்காகவும் தமிழக அரசு உடனே தமிழுக்கான ஒலி பெயர்ப்பு வரையறைக் குழுவை அமர்த்திச் சீரான ஒலி   பெயர்ப்புகளுக்கான ஆணையைப் பிறப்பிக்க வேண்டுகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
 feat-default

கலைச்சொல் தெளிவோம் 195 – 204(அறிவியல் துறைப் பெயர்கள்)


department_of_sciences04
 1. மரபு இயைபியல் genecology: தாவரத் தொகுதியின் மரபு இயைபை வளர் இடர்த் தொடர்பாக ஆராயும் துறை:
 2. மரபு வழியியல் geneology: ஒரு தனி உயிரி அல்லது குடும்பம் பற்றிஆயும் துறை:
 3. புவி வேதியியல்geo chemistry: புவியின் வேதி இயைபை ஆராயும் துறை
 4. புவி வடிவ இயல்geodesy: புவி மேற்பரப்பை படமாக்குதல் , அளவிடுதல் ஆகியவை பற்றி ஆராயும் துறை
 5. புவியியல்geography: புவி மேற்பரப்பின் இயல்புகள், அவற்றின் பரவல் வினை ஆகியவை பற்றி ஆராயும் துறை
 6. புவி வளரியல் geology : புவி வரலாறு, வளர்ச்சி,   திணை உயிர்கள் ஆகியவற்றை ஆராயும் துறை
 7. புவி இயற்பியல் geo physics: புவியையும் அதன் காற்று வெளியையும் இயற்பியல் முறைகளில் ஆராயும் துறை
 8. மூப்பியல்gerontology: உயிரியல் தொகுதிகளில் மூப்பு முறைகளை ஆராயும் துறை
 9. மகளிர் நோயியல்gynaecology: பெண்கள் நோய்கள் பற்றி ஆராயும் துறை
 10. குருதியியல்haematology: குருதி அமைப்பு,   தோற்றம்,   வேலை, நோய் ஆகியவை பற்றி ஆராயும் துறை
- இலக்குவனார் திருவள்ளுவன்


கலைச்சொல் தெளிவோம் 185 – 194(அறிவியல் துறைப் பெயர்கள்)


department_of_sciences03
 1. மின்னணுவியல் electronics: மின் சுற்றுகளின் பெருக்கத்தை ஆராயும் பயன் முறை அறிவியல் துறை
186. அகச் சுரப்பியியல் endo crinology: தொண்டைச் சுரப்பி முதலிய அகச் சுரப்பிகளை ஆராயும் துறை
 1. பூச்சியியல் entomology: பூச்சிகளை ஆராயும் துறை
 2. நொதித் தொழில் நுட்பவியல்enzyme technology:தொழிற்சாலை முறைகளில் பிரிக்கப்பட்டதும் தூய்மையானதுமான நொதிகளின் வினையூக்கப் பயனை ஆராயுந்துறை
 3. நொதியியல்enzymology: அறிவியல் முறையில் நொதிகளை ஆராயும் துறை
 4. கொள்ளை நோயியல்epidomology: கொள்ளை நோய்களுக்குக் காரணமானவற்றை ஆராயும் துறை
 5. பணிச்சூழியல்ergonomics: வேலை செய்பவர்களுக்கு ஏற்ற வகையில் இயந்திரங்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளை ஆராயும் துறை
 6. ஒழுக்கவியல்ethics: வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய ஒழுக்க நெறிமுறை பற்றிய துறை
 7. மாந்த இனவியல்ethnology: மாந்த இனங்கள் அவற்றுக்கிடையே உள்ள உறவுகள் ஆகியவற்றை ஆராயும் துறை
 8. திணைத் தாவர இயல்floristics: திணைத் தாவரங்களைப் பற்றி ஆராயும் துறை:
- இலக்குவனார் திருவள்ளுவன்


Wednesday, May 13, 2015

கலைச்சொல் தெளிவோம் 175 – 184 (அறிவியல் துறைப் பெயர்கள்)department_of_sciences02
 1. வேதியியல் –   chemistry: தனிமம் சேர்மம் ஆகியவற்றின் பண்புகளையும் இயல்புகளையும் ஆராயும் இயைபியல் துறை.
 2. வேதிவகைப்பாட்டியல் –   chemo-taxonomy: வேதிப் பகுப்பின் நெறிமுறைகளையும் முடிவுகளையும் தாவரங்களை வகைப்படுத்த பயன்படுத்தும் முறை பற்றிய ஆய்வுத் துறை.
 3. திரைப்படவியல் – cinematography: திரைப்படம் தொடர்பான நுணுக்கங்களை ஆராயும் துறை.
 4. மருத்துவ மரபணுவியல் – clinical genetics: நோயாளியை நேரடியாக உற்று நோக்கி உயிரியல் மரபுரிமையை ஆராயும் மருத்துவத் துறை.
 5. மருத்துவ நோய் இயல் – clinical pathology: ஆய்வகத்தில் குருதி, மலம், சிறுநீர், சளி முதலியவற்றை ஆராய்ந்து நோய்க் குறிகளின் தன்மையை அறியும் மருத்துவத் துறை.
 6. படிகவியல் – crystallography: படிகங்களின் அமைப்பு,   வடிவம், பண்புகள் ஆகியவற்றை ஆராயும் துறை.
 7. சூழ்நிலையியல் – ecology: பயிரினங்கள் உயிரினங்கள் ஆகியவற்றிக்கும் சூழ்நிலைக்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆராயும் துறை.
 8. உயிர் மின்னியல் – electro biology: உயிரியலில் நடைபெறும் மின் நிகழ்வுகளை ஆராயும் துறை.
 9. மின்வேதியியல் – electro chemistry : வேதி மாற்றங்களுக்கும் மின் திறனுக்கும் இடையே உள்ள தொடர்பினை ஆராயும் துறை.
 10. மின் ஒலியியல் – electro-acoustics: மின் ஒலி பற்றி ஆராயும் துறை.

- இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல 78 சித்திரை 27, 2046, மே 10,2015
 

Followers

Blog Archive