Thursday, June 23, 2022

பு தி ய ஆ ட் சி த் த மி ழ் ச் ச ட் ட ம் தே வை! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல


(5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக! தொடர்ச்சி)

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்

6.  பு தி ய  ஆ ட் சி த் த மி ழ் ச்  ச ட் ட ம்  தே வை!

தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்பது கட்சி, சமய வேறுபாடின்றி அனைத்துத் தரப்பாராலும் பலமுறை வற்புறுத்தப்பட்டு வந்தது. தமிழறிஞர்கள், தமிழ்ப்பற்றாளர்கள், அரசியலாளர்கள் எனப் பலரும் கூட்டங்களில் தீர்மானமாக நிறைவேற்றியும் தங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தினர். இவற்றின் பயனாக, ஆட்சிமொழிச்சட்டம் 1956இல் 39 ஆம் சட்டமாக நிறைவேற்றப்பட்டது; 19.1.57இல் ஆளுநரின் இசைவைப் பெற்று 23.1.1957இல் அரசிதழில் வெளியிடப்பட்டது.

ஆட்சிமொழிச்சட்டம் இருந்தும் தமிழ் ஆட்சிமொழியாக முழுமையாகச் செயல்படவில்லை எனில், வேண்டிய திருத்தங்களை இதில் மேற்கொள்ளலாமே! எதற்குப், புதிய சட்டம் எனச் சிலருக்கு எண்ணம் வரலாம்.  இந்தச் சட்டம் உருப்படியான சட்டமே அல்ல. பொதுவாக ஆட்சியினர், மக்கள் சார்பாளர்கள் உள்ளக்கிடக்கையை அதிகாரிகள் உரியவாறு புரிந்து கொள்ளாமலும் புரிந்து கொண்டாலும் அவ்வாறு நிறைவேற்றாமலும் அரைகுறை ஆணைகளை வெளியிடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படித்தான் இந்தச் சட்டத்திலும் நடந்தது.

“தமிழைத் தமிழ்நாடு அலுவல் முறைக்காரியங்களில் பயன்படுத்தும் மொழியாக மேற்கொள்வதற்கு வகைசெய்யும் திட்டம்” என்றுதான் ஆட்சிமொழிச்சட்டத்தின் முன்னுரையாக முதல் பத்தி கூறுகிறது.

சட்டக் கூறு 1.2.

 “இது தமிழ்நாடு முழுவதற்கும் பரவி நிற்கும்” என்கிறது.

எனினும் உருப்படியாகச் சட்டம் பிறப்பிக்கப்படவில்லை.

சட்டக்கூறு 2

“தமிழ், இம்மாநிலத்தில் ஆட்சிமொழியாக இருக்க வேண்டுமெனில், தமிழ், தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக இருக்கும்”

என்கிறது. ஏதாவது புரிகிறதா? தமிழ் எந்த மாநிலத்தில் ஆட்சிமொழியாக இருக்க வேண்டுமெனில், தமிழ்நாட்டில் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்ற வினா எழுகிறதா? வேறொன்றுமில்லை. மொழிபெயர்ப்புச் சிக்கல். சட்டக்கூறு 2இன் தலைப்பும் விவரமும் தனித்தனியாக் குறிக்கப்பெறாமல் ஒரே தொடர் என எண்ணித் தவறாக மொழி பெயர்த்துள்ளனர்.

“தமிழ் மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். –   தமிழக அரசின் அலுவல் மொழி தமிழே”

என்று இருக்க வேண்டும்.

இது மொழிபெயர்ப்புக் கோளாறு. அதற்குச் சட்டம் என்ன செய்யும என்கிறீர்களா? இதனைக் கூட உணராதவர்களைக் கொண்டு எங்ஙனம் தமிழ் ஆட்சிமொழித்திட்டத்தைச் செயல்படுத்த முடியும்.

அது மட்டுமல்ல. சட்டக்கூறு 3 பின்வருமாறு கூறுகிறது.

“.. .. 2 ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ள எதுவாக இருந்த போதிலும், …. அரசு வேறு விதமாகக் கட்டளை யிடுகிற வரையில், இந்தச்சட்டம் தொடக்கத்திற்கு முன்பு ஆங்கில மொழி பயன்பட்டு வந்த அலுவல் முறைக் காரியங்கள் எல்லாவற்றுக்கும் அம்மொழியைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

அஃதாவது ஆட்சிமொழிச்சட்டம் என்பது தமிழ் ஆட்சிமொழியை எல்லா நிலைகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கானதல்ல். அவ்வாறு இயற்றி எதிர்பார்க்கும் இடர்களுக்கு வழிகாட்டித் தீர்வுகளை வழங்கியிருக்கலாம். அவ்வாறில்லாமல் இதுவரை ஆங்கிலம் பயன்படுத்தி வந்த இடங்களில் ஆங்கிலமே பயன்படுத்தப்படும் என்றால், இது தமிழ் ஆட்சிமொழிக்கான சட்டமா? ஆட்சித்துறையில் ஆங்கிலத்தைப் பாதுகாப்பதற்கான சட்டமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

1957இல் என்.வெங்கடேசுவர(ஐயர்) தலைமையில் மூவர் குழுவை நியமித்தது.  ஆய்விற்குச் சென்ற குழுத் தலைவர் ஆங்கிலத்தில்தான் அறிவுரை வழங்கினார். எனவேதான், முதல் கோணல் முற்றும் கோணலாக ஆட்சித்தமிழ்ச் செயலாக்கம் போய்விட்டது. இவ்வமைப்புதான் 1965இல் தமிழ்வளர்ச்சி இயக்கமாக மாற்றி யமைக்கப்பட்டது. குறிப்பிட்ட நோக்கத்திற்குக் குறிப்பிட்ட காலத்திற்கு நியமிக்கப்படும் குழு அல்லது அதிகாரிகள் உரிய காலத்தில் தம் பணிகளை நிறைவேற்றாததால், சட்டமன்ற ஆய்வுக்குழுவும் பிற பணியாய்வு அறிக்கைகளும் முன்னேற்றமில்லாத திட்டத்தைக் கைவிட வேண்டும் அல்லது இயக்கத்தை மூடிவிடவேண்டும் என்ற முறையிலேயே அறிக்கைகள் அளித்துள்ளனர்.

இந்த நிலைப்பாட்டில் இன்றுவரை மாற்றம் இல்லாத வகையில்தான் தமிழ்வளர்ச்சி இயக்ககச் செயல்பாடு உள்ளது.

தமிழ், தமிழ்நாட்டின் ஆட்சிமொழி எனச் சட்டம் கூறினாலும் 2%இற்கும் குறைவாக உள்ள தமிழக அரசின் எழுத்துப்பணியாளர்களிடம் இதை நிறைவேற்றுவது தொடர்பாகத்தான் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவும் செவ்வையாக இல்லாமையால் இவர்களிடம் சிறிதளவே முன்னேற்றம் உள்ளது.

மேலும், அதிகாரம் இல்லாத தமிழ்வளர்ச்சித்துறையினரால் ஒன்றும் செய்ய இயலாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெயரளவு அதிகாரிகளால் யாரையும் கட்டுப்படுத்தவோ வழி நடத்தவோ இயலவில்லை என்பதே உண்மை. ஆதலின் இப்போதைய தமிழ்வளர்ச்சி இயக்ககத்தைக் கலைத்து விட வேண்டும். இத்துறை வழங்கும் ஓய்வூதியம், விருதுகள், பரிசுகள் முதலான தமிழ், தமிழறிஞர் நலப்பணிகளைக் கலைபண்பாட்டுத் துறைக்கு மாற்றி விடவேண்டும். அதன் கட்டுப்பாட்டிலுள்ள இயல் இசை நாடக மன்றம் மூலம் இதுபோன்ற பணிகளை அத்துறை மேற்கொள்வதால் இதுவே பொருத்தமாக இருக்கும்.

நீதித்துறை அதிகாரம் மிக்க ஆட்சித்தமிழ்ச்செயலாக்க ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும். இந்த ஆணையத்தின் கீழ் மாவட்டக் குழுக்களும் அமைக்கப்பட வேண்டும். இவற்றின் மூலம் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் பின்னடைவைக் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் அனைவரும் சிறப்பாகப் பணியாற்ற உந்துதலாக அமையலாம். அறிஞர்கள் வழிகாட்டிக் குழுவை அமர்த்தி, தமிழ்க்கலைச்சொற்களுக்கும் தமிழ் வரைவுகளுக்கும் வழிகாட்டலாம்.

ஆட்சித்தமிழ்ச்சட்டம் 2022 எனப் பின்வரும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

(இது சட்டத்திற்கான முன்வரைவே)

ஆட்சித்தமிழ்ச்சட்டம் 2022

1957இல் வெளியிடப்பெற்ற 1956ஆம் ஆண்டின் ஆட்சிமொழிச்சட்டம் இன்றைய சூழலில் போதுமானதாக இல்லை என்பதால் தமிழ்நாட்டில் தமிழை முழுமையான ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் இச்சட்டம் இயற்றப்படுகிறது.

1. குறுந்தலைப்பும் பரப்பும் : அ.) இச்சட்டம் 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சித்தமிழ்ச்சட்டம் எனக் குறிக்கப்பெறும்.

ஆ.) இச்சட்டம் தமிழ்நாடு முழுமைக்கும் செயல்பாட்டிற்குரியது.

2. தமிழ் இம்மாநிலத்தின் முழுமையான ஆட்சிமொழி : தமிழ், தமிழ்நாட்டின் ஒரே முழுமையான ஆட்சிமொழியாக இருக்கும்.

3. தமிழ்நாட்டின் முழுமைக்குமான சட்டம் என்பதால், தமிழக அரசுப்பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலுள்ள தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பிற மாநில அரசு அலுவலகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், நிறுவனங்களின் அலுவலகங்கள் என அனைத்துமே / இவற்றில் பணியாற்றும் அல்லது பொறுப்பான அனைவருமே இச்சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கடப்பாடுடையவர்கள்.

4. தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் எப்பொருளாக இருந்தாலும் எந்நாட்டை அல்லது எம்மொழியினரைச் சார்ந்ததாக இருந்தாலும் அப்பொருளின் பெயர், பயன் முடிவு நாள், துணைப்பொருள், பயன் விவரங்கள், விழிப்புரைகள் முதலியன தமிழில் அல்லது தமிழிலும் இருந்தால் மட்டுமே விற்கப்பட வேண்டும். அவ்வாறில்லையெனில், விற்பனையாளர், விற்பனை முகவர், உற்பத்தியாளர் ஆகியோர் தண்டனைக்குள்ளாவார்கள்.

5. தமிழ்நாட்டிலுள்ள பெயர்ப்பலகை, விளம்பரப்பலகை முதலிய யாதாயினும் தமிழில் இல்லையேல் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். இவற்றை அகற்றியதற்கான செலவும் தண்டத் தொகையும் உரியவர்களிடமிருந்து பெறப்படும்.

6. தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் அல்லது விற்பனையாகும் தமிழிதழ்களிலும் தமிழ் நூல்களிலும் தமிழ் என்ற போர்வையில் பிற மொழிச்சொற்களின் ஒலிபெயர்ப்புகள் இடம் பெறக்கூடாது. தமிழ்ச்சொற்களே இடம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் பிற மொழிச்சொற்களையும் பிற மொழி எழுத்துகளையும் கலந்து வெளிவரக்கூடியவை தடை செய்யப்படும். அதற்குக்காரணமான தொடர்வுடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்.

7. தமிழ்நாட்டிலோ தமிழ்நாட்டிற்கு அப்பாலோ எடுக்கப்பட்டு இங்கு வெளியிடப்படும் திரைப்படங்கள், குறும்படங்கள் முதலியவற்றின் பெயர்கள், கதைப் பாத்திரங்களின் பெயர்கள், கதை நிகழ்வில் இடம் பெறும் பெயர்கள், உரையாடல்கள், பாடல்கள், திரைப்படங்களில் காட்டப்படும் விவரங்கள், தமிழிலேயே இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் வெளியாகும் திரைப்படங்கள் தடை செய்யப்படும். இதற்குக் காரணமான அனைத்து நிலையினரும் நிறுவனங்களும் தண்டிக்கப்படுவார்கள்.

8. தமிழ்நாட்டில் இயங்கும் அல்லது தமிழ்நாட்டின் வழியாக இயங்கும் பேருந்து, தொடரி, வானூர்தி முதலான எல்லாப் போக்குவரத்துகளிலும் அறிவிப்புகள் எழுத்திலும்  சொல்லிலும் தமிழில் இருக்க வேண்டும். இதனை மீறும் நிறுவனத்தின் உரிமம் நீக்கப்பட்டுத் தண்டிக்கப்படும்.

9. இவர்களுக்கு வழிகாட்டவும் நெறிப்படுத்தவும் ஆட்சித்தமிழ்ச்செயலாக்க ஆணையம் அமைக்கப்படும். ஆட்சித்தமிழ்த்திட்டத்தை நிறைவேற்றாதவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஆட்சித் தமிழ்த்திட்ட மீறுநர்களுக்கான தண்டனை விதிகள் இயற்றப்படும்.

10. இச்சட்டம் வெளியாகும் நாளிலிருந்து உடனடியாகச் செயல்பாட்டிற்கு வருகிறது.

–  இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, June 21, 2022

5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல





(4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக!– தொடர்ச்சி)

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்

5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக!

தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டம் 1956 நிறைவேற்றப் பட்டதிலிருந்து  இதுநாள் வரை தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்திற்காகப் பல்வேறு அரசாணைகள், தொடர்பான சுற்றறிக்கைகள், மடல்கள், வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்வளர்ச்சித்துறை இணையத்தளத்தில் 02.08.1968 முதல் 02.11.2021 வரையிலான 120 ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில முன்னர் வெளியிடப்பட்டவற்றையே வலியுறுத்திப் பின்னரும் வெளியிடப்பட்டனவாக இருக்கின்றன. இவ்வாறு மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளமையே தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் எந்த அளவில் இருக்கிறது என்ற துயரநிலையை வெளிப்படுத்துகிறது.

திருவள்ளுவர் ஆண்டு, திங்கள், நாள் குறிக்கப்பட வேண்டும் என 03.02.1982, 09.12.2008, 08.11.2012 ஆம் நாள்களில் ஆணைகள் (எண் 91 /எண் 70/ எண்158) பிறப்பிக்கப்பட்டுள்ளன. தமிழில் கையொப்பமிட வேண்டியது குறித்தும் வெவ்வேறு காலங்களில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பது குறித்தும் தமிழில் முதலெழுத்து குறிப்பது குறித்தும் இவ்வாறு பல செயல்பாடுகள் குறித்தும் வெவ்வேறு ஆணைகள் வந்துள்ளன. எளிய நடைமுறைகள் கூட முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்னும் பொழுது பயன்பாட்டிற்கு வராத ஆணைகளால் என்ன பயன் என்பதா? தமிழ்நாட்டு அலுவலகங்களில் தமிழ் இருக்கக் கடுமையான நடவடிக்கை தேவை என்பதா?

ஆட்சிமொழிச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தாத அரசு அலுவலர்கள் மீது  நடைமுறையில் உள்ள தமிழ்நாடு குடிமைப்பணியாளர் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு 06.01.1982(எண்  24) இலேயே அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணையைச் செவ்வையாக நடைமுறைப்படுத்தியிருந்தாலே தமிழ், ஆட்சிமொழியாகச் செவ்வனே வீற்றிருக்கும். ஆட்சிமொழிச் செயலாக்கத்தை நிறைவேற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணை இருந்தும் பயனற்றுப் போனதன் காரணம் பல அலுவலகங்களில் அவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களே நடவடிக்கைக்கு உள்ளாகும் நிலையில் தமிழைப் புறக்கணிப்பவர்களாகத்தான் உள்ளமைதான்.

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்திற்காக அவ்வப்பொழுது ஆணைகள் பிறப்பிப்பதை விட முன்னர்க் கூறியவாறு தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்தால் போதுமானது. ஆனால் அதற்கான துணிவும் வினைத்திட்பமும் தமிழ்வளர்ச்சித் துறையிடம் இல்லாதபோது தனித்தனி ஆணைகள் தேவைப்படத்தான் செய்கின்ற.

ஆணைத் தொகுப்பு என்றால் எல்லா ஆணைகளின் தொகுப்பாக இருக்கக் கூடாது. அதனால் பயனில்லை. அந்தத் துறையில் தேவையில்லை, இந்தத் துறைக்கு விதிவிலக்கு என்பன போலில்லாமல் செயலகத்துறை உட்பட அனைத்துத் தறைகளிலும் அரசு, அரசு நிறுவனங்கள், பிற மாநில அலுவலகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் என அனைத்து வகைகளிலும் அனைத்து நிலைகளிலும்  தமிழே அலுவலக மொழியாக இருக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்க வேண்டும்.

விதிவிலக்குகளை அகற்ற வேண்டும் என்பதற்கு ஒரு சான்று. செயலகத்துறைகளில் தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய 2.8.1968 ஆம் நாளிட்ட அரசாணை(எண் 1609)யில் “எல்லாத் துறைகளிலுமே சில குறிப்பிட்ட பொருள்களில் உள்ளூராட்சி அலுவலர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், துறைத்தலைவர்கள் ஆகியோர்களோடு தமிழிலேயே கடிதப் போக்குவரவு நடத்த வேண்டும்” என இருக்கிறது. என்ன அது? குறிப்பிட்ட பொருள்களில் மட்டும்? அப்பொழுது ஏதோ ஒரு சூழலில் இவ்வாறு குறித்திருக்கலாம். இப்பொழுது தொகுப்பில் ஆணைகளின் தொகுப்பாகப் பொருண்மைகளின் தொகுப்பாகக் கருதி, சில குறிப்பிட்ட பொருள்களில் என்பதை எடுத்து விட வேண்டும்.

இதுபோல் சட்டம், நிதித்துறைகளை விதிவிலக்காகக் குறிப்பிட்டும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கும். இப்பொழுது எந்தத்துறைக்கும் விதிவிலக்கு அளிக்க வேண்டிய தேவையில்லை. கையொப்பங்கள் பட்டியல்களில் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று முதலிலும், தமிழில் இருந்தால் அடைப்பிற்குள் ஆங்கிலத்தில் பெயர் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டும் ஆணைகள் இருக்கும். இவ்வாறெல்லாம் இல்லாமல் நிதித்துறையாக இருந்தாலும் நீதித்துறையாக இருந்தாலும் வேறு எத்துறையாக இருந்தாலும் தமிழில் கையொப்பம் இருந்தால் மட்டுமே செல்லத்தக்கது என அறிவிக்க வேண்டும்.

இவ்வாறெல்லாம் இப்போது ஆணையில் இருக்கக் கூடாது. இதுவரை வெளிவந்த ஆணைகளின் பொருண்மைகளின் அடிப்படையில் அனைத்துக் கூறுகளும் அடங்கிய புதிய ஆணையை வெளியிட வேண்டும். இப்புதிய ஆணையில் எந்த விதிவிலக்கிற்கும் இடம் தரக்கூடாது. இதுவரை வந்த ஆணைகளில் பல தெளிவின்மையும் குறைபாடுகளும் இருக்கும். அவற்றை எல்லாம் களைந்து விட்டு முழுமையானஆட்சிமொழிச் செயலாக்கத்திற்கு எவை எவை தேவையோ அவற்றை மட்டும் குறிப்பிட்டு ஆணை பிறப்பித்தால் போதுமானது. ஆணைத் தொகுப்பு என்றால் பழைய ஆணைகளை வரிசையாகத் தொகுத்துத் தராமல் செயல்படுத்த வேண்டிய ஆணைகளின் தொகுப்பாக இருக்க வேண்டும்.

ஆட்சிமொழிச்சட்டம் என்பது நூற்றுக்கு இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ள அலுவலக எழுத்துப் பணியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மட்டுமல்ல. ஆட்சிமொழிச்சட்டம், “தமிழ், தமிழ் நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கும்” என்றுதான் கூறுகிறது. எனவே, ஆணைத் தொகுப்பு என்பது தேவைக்கேற்ப புதிய ஆணைகளின் தொகுப்பாகவும் இருக்க வேண்டும். அதனால் தமிழ்க் கையொப்பம், தமிழ் முதலெழுத்து, தமிழ்ப்பெயர்ப்பலகை, தமிழ் மடல் போக்குவரத்து முதலிய ஆட்சித்தமிழ்ச் செயலாக்கங்கள் யாவுமே பொதுமக்களுக்கும் உரியது என ஆணை சேர்க்க வேண்டும்.

தமிழ் ஆட்சி மொழித்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தும் ஆர்வம் இருப்பின் நம் வேண்டுகோளை ஏற்றுப் புத்தாணை(த் தொகுப்பு) பிறப்பிக்கட்டும்! தமிழ் எங்கும் நிலைக்கட்டும்!

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற. (திருவள்ளுவர், திருக்குறள் 661)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தொடரும் கட்டுரைகள்:

6. ஆட்சித் தமிழ்ச் சட்டம் 2022 இயற்றுக!

7. திரைத்துறையின் தமிழ்க்கொலைகளைத் தடுத்திடுக!

8. இதழியல் துறையினரின் தமிழ்க்கொலைகளைத் தடுத்திடுக!

Thursday, June 16, 2022

வேற்றுமையின் வித்தே சனாதனம்!- இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல






வேற்றுமையின் வித்தே சனாதனம்!

“வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றிக் கூறுகிறோம். சனாதனத் தருமமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் வளர சனாதனத் தருமம் வழி முறையாக இருக்கும்” என உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பெரியர் ஒருவர் முத்து உதிர்த்துள்ளார். அறிந்தே சொல்லப்படும் பொய் என்பதால் அவருக்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டின் தலைவர்கள் பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும் இதுபோன்ற பொய்களை நம்பும் அப்பாவிகள் உள்ளனர். அவர்களை வைத்துத்தான் பொய்களை விதைத்தும் பரப்பியும் வருகின்றனர். எனவே, நாம் சனாதனம் என்பதே வேற்றுமையின் வித்துதான் என்பது குறித்து விளக்க வேண்டியுள்ளோம்.

இதுபற்றி அறிந்து கொள்ளும் முன்னர் நாம் ஆரியப் புரட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆரிய நூல்கள் யாவையுமே மனிதர்களிடையே வேறுபாட்டை விதைத்து வலியுறுத்துவனவாகவும் ஆரியரை மட்டும் உயர்த்துவனவாகவும், பெண்களையும் பிறரையும் இழிவு படுத்துவனவாகவும் உள்ளன. அதே நேரம், இதற்குப் பெருமை சேர்க்க வேண்டும் எனக் கருதிய சிலரால் மிகுதியாகத் தமிழ்மொழியில் இருந்தும் பாலி மொழி முதலிய பிற மொழிகளில் இருந்தும் நல்ல கருத்துகள் பல இடைச்செருகல்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஆரியத்தை உயர்த்த எண்ணும் பொழுது இந்த இடைச்செருகல்களை ஆரியக் கருத்துகள்போல் கூறிப் பேசுவர். அவற்றில் இருந்து தமிழ்  முதலிய பிற மொழி இலக்கியங்கள் கடன் வாங்கியுள்ளன என்றும் பேசுவர். இதனை அறிஞர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமற்கிருத இலக்கியங்கள் பேரளவினவை என்பதைக் காட்டுவதற்காகப் பாலிமொழி நூல்களையும் பிராகிருத மொழி நூல்களையும் மொழிபெயர்த்துக் கொண்டு அல்லது அவற்றின் அப்பட்டமான தழுவல்களை எழுதிவைத்துக் கொண்டு மூலங்களை அழித்துவிட்டு அவையெல்லாம் சமற்கிருத நூல்கள் என்று பொய்யான வரலாற்றை உருவாக்கியுள்ளனர் – பேராசிரியை சுகுமாரி

 வேதங்களில் வன்முறையும் அதிகார வெறியும் போற்றப்படுகின்றன.   – வெண்டி தோனிகர்(Wendy Doniger)

வேதங்களின் அடிப்படை இலட்சியம் விலங்குத்தனமானது –  சில்வியன் இலவி (Sylvian Levi)

சமற்கிருத இலக்கியங்களைப் பிற மொழி இலக்கியக் காலங்களுக்கு மூத்ததாகவும் முதன்மையானதாகவும் காட்ட முயன்ற மோசடிகளால்தான் காலக் குழப்பம் ஏற்பட்டுள்ளது – ஆர்தர் மக்குடானல்(Arthur A. Macdonell)

சமற்கிருத நூல்கள் இழிகாமத்தையே இயம்புகின்றன! – தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

இவை சனாதன நூல்கள் பற்றிய சில கருத்துகளாகும்.

“இந்து மதம் அல்லது வேத மதம் என்றும் அழைக்கப்படும் சனாதன தர்மம் 1960853110 வருட வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகம் (மற்றும் நவீன பாகித்தான் பகுதி) இந்து மதத்தின் பல தடயங்களைக் கொண்டுள்ளது” என்று இல்லாத தொன்மையைக் கூறுவதுபோல் இழிவான கருத்துகளை மறைத்து இல்லாத சிறப்பையும் கூறுவது சமற்கிருதர்களின் பொய்யான வாதமாகும்.

எனவே, சனாதனவாதிகள் அறிந்தே சொல்லும் பொய்களையும் அதனை உண்மையென நம்பிப் போற்றி எழுதப்படும் தவறான தகவல்களையும் நம்பிச் சனாதனத்தைப் பாராட்டவும் வேண்டா; ஏற்கவும் வேண்டா.

தருமம் என்பது, அறியாதார்க்கு அவரின் பசி, வறுமை முதலான துயரத்தைப் போக்கத் தருவது. அறம் என்பது மனத்தில் மாசில்லாமல் இருப்பது. எனவே, நல்லொழுக்கங்களின்படி வாழ்வது.  சமற்கிருதத்தில் குறிப்பிடும் தருமம் என்றால் “விதிமுறைகள்” என்பது பொருள். சனாதனத் தருமம் என்றால் சனாதன விதிமுறைகள் எனப்பொருள்; தமிழுடன் குழப்பிக் கொண்டு சனாதன அறம் என எண்ணக் கூடாது. ‘தருமம்’ என்றால் சிலர் கடமை என்றும் பொருள் கொள்வர். அங்ஙனமாயின்  சனாதனத் தருமம் என்றால் சனாதனக் கடமை – சாதிகளுக்குரிய கடமைகள் – என்னும் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சனாதனத் தருமம் என்றால் அவரவர் சாதி என்ன என்ன கடமையைச் செய்ய வேண்டும் என்று வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளதோ அவற்றை எப்போதும் தவறாமல் செய்ய வேண்டும் என்று பொருள். எனவே, சாதி வேற்றுமையை வகுத்துக்கொண்டு அதற்கேற்பக் கடமைகளைச் செய்ய வேண்டும் என்று சொல்லும் சனாதனம் எங்ஙனம் வேற்றுமையில் ஒற்றுமையை உரைப்பதாகும்?

நால்வருணத்தை வலியுறுத்தி அவற்றிற்கான தனித்தனி விதிமுறைகளையும் கடமைகளையும் வலியுறுத்தும், இல்லாத சாதிகளைப் புகுத்தி அச்சாதிகளில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சனாதனத்தைத்தான் உயர் அறம் எனப் பொய்யாகப் பரப்பி வருகின்றனர்.

சிலர், சங்க இலக்கியம் வலியுறுத்தும் அறக்கோட்பாடுகளும் சனாதன தருமம் கூறும் அறமும் ஒன்று;  திருக்குறளின் அறக்கருத்துகள் சனாதன தருமத்தை எதிரொலிக்கின்றன என்றெல்லாம்  பொய்மூட்டையை அவிழ்த்து விடுகிறார்கள். சனாதனம் என்பது அறமே அல்ல. அவ்வாறிருக்க அதை அறம் என்பதும் அதைத் தமிழ் அறத்துடன் ஒப்பிட்டு இணையாகக் கூறுவதும் எங்ஙனம் ஏற்புடைத்து?

“கடமையைச் செய்! பயனை எதிர்பாராதே!” என்ற உயர்ந்த(!) உண்மையைக் கீதை உரைப்பதாக உலகெங்கும் பரப்பி வருகிறார்களே. அந்தப் பொய் ஒன்றே ஆரியத்தின் புரட்டை உணர வைக்கப்போதுமானது. கீதை கூறுவது, அவரவர் சாதிக்கேற்ற கடமையைச் செய்ய வேண்டும்.  ஒவ்வொரு சாதிக்கடமைகளுக்கும் தக்கப் பயனுண்டு. கீழ்ச்சாதிக்காரன் மேல்சாதிக்கடமைக்குரிய பயன் சிறப்பை அறிந்து அக்கடமையைச் செய்ய எண்ணக்கூடாது. அவன் சாதிக்குரிய கடமை தரும் பயனைத்தான் ஏற்க வேண்டும். இல்லையேல் வரும் பிறவியில் துன்பம் விளையும் எனச் சாதிக்கேற்ற கடமைகளை அச்சுறுத்தி வலியுறுத்துகிறது.

சனாதனம் என்றால் நிலையானது என்று பொருள் என்றும் இந்துவியத்தைக் கூறுதற்கு இந்துக்களால் பயன்படுத்தப்படும் சொல் என்றும் கூறுகின்றனர்.

வேதங்களிலும் உடநிடதங்களிலும் மனுசுமிருதியிலும் கீதையிலும் சனாதனம் குறித்துக் கூறப்படுகின்றன.

நீண்ட தொலைவு பயணம் மேற்கொண்ட ஒருவரின் மனைவி அவனுடைய உறவினர் அல்லது பணியாளரிடம் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்பது அருத்த சாத்திரம் கூறும் சனாதனம். 

இம்மை மாறி மறுமை ஆயினும்

நீயாகியர் என்கணவனை

யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே

(குறுந்தொகை : 49) என்று “எத்தனைப் பிறவிகள் ஆனாலும், நாமே கணவன் மனைவி” என்பது தமிழ் கூறும் இல்லற அறம். இரண்டும் ஒன்றாகுமா?

அருத்தசாத்திரத்தைப் பொறுத்தரை சனாதனமாகிய குலத் தருமமே நீதியாகும். பிராமணன் எந்த வகைக் குற்றத்திற்காகவும் தண்டிக்கத்தக்கவன் அல்லன் என்கிறது அது. அரச தருமம் நால்வகைப்பட்ட வருணாசிரமத் தருமத்தைப் போற்ற வேண்டும் என்கிறது. ஒருவன் பல மகளிரை மணந்து கொள்ளலாம் என்றும் தன் மனைவியிடத்து வேறு ஒருவன் மூலம் புதல்வனைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறுகிறது.

இந்தச் சனாதனமும் நடுவுநிலைமையையும் பிறன்மனை விழையாமையையும் வலியுறுத்தும் தமிழறமும் ஒன்றாகுமா?

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.   (திருக்குறள் – 118)

என, யார், எவர் என்ற வேறுபாடின்றி, செல்வர்-ஏழை என்னும் செல்வப்பாகுபாடு, உயர்சாதி-கீழ்சாதி என்றெல்லாம் இல்லாத சாதிப்பாகுபாடு உயர்பதவியர் – கீழ்ப்பதவியர் என்ற பதவிவேறுபாடு என்று எப்பாகுபாடும் பார்க்காமல் சமமாக நோக்கவேண்டும் என்னும் தமிழறத்துடன் சனாதனத்தை ஒப்பிடத்தான் முடியுமா?

வேதம் ஓதுகிறவர்களைக் கடவுள் எனச் சொல்வதன் மூலம் வேதம் ஓதும் பிராமணர்களைக் கடவுளாகத் திரிக்கிறது (அருத்தசாத்தரம்) சனாதனம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (திருக்குறள்) என்கிறது தமிழறம். இரண்டும் எப்படி இணையாகும்?

நெஞ்சு பொறுக்காத வஞ்சகச் செயல்களைச் செய்ய வழி கூறுவதே (அருத்த சாத்திரம்) சனாதனம்.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.(திருக்குறள் 317)

 என மனத்தளவிலும் வஞ்சகத்தை எண்ணக்கூடாது என்பது தமிழறம். இரண்டையும் ஒப்பிடத்தான் முடியுமா?

பெண்கள் இழிவானவர்கள்(மனுநீதி, தரும சூத்திரங்கள், அருத்த சாத்திரம், காமசூத்திரம், பகவத்துகீதை முதலியன) என்பது சனாதனம்.

“பெண்ணின் பெருந்தக்க யாவுள?” (திருக்குறள் 54) என்று பெண்மையைப் போற்றுவது தமிழறம். இரண்டையும் ஒப்பிடுவது முறையாகுமா?

“புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்”(மனு 2.214) எனப் பெண்களைக் காமப்பித்தர்களாகக் காட்டுவது சனாதனம். “பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப்படுவனவற்றைக் கேட்பீராக” (மனு9.19) எனப் பெண்களை ஒழுக்கங்கெட்டவர்களாகக் கூறுவதும் சனாதனம்தான்.

“நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்

செவிலிக்கு உரியவாகும் என்ப”(தொல்காப்பியம், 1099) என்றும்

செறிவும்  நிறைவும்  செம்மையும்  செப்பும்

  அறிவும்   அருமையும்  பெண் பாலான”     (தொல்காப்பியம்,1155)

என்றும் பெண்ணைச் சிறப்பிப்பது தமிழறம். இரண்டும் எங்ஙனம் ஒன்றாகும்?

இவ்வாறு நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

மக்களிடையே மாறுபாட்டையும் வேறுபாட்டையும் விதைத்து அல்லொழுக்கத்தைப் பரப்பும் சனாதனம் எவ்வாறு நம் மண்ணிற்கு ஏற்ற பண்பாடாகத் திகழ முடியும்? நம் மண்ணிற்கு என்றில்லை, உலகில் உள்ள யாவர்க்குமே மக்களில் ஒரு பகுதியினரைக் கடவுள் நிலையில் உயர்த்தியும்  பிற பகுதியினரையும் பெண்களையும் இழிபிறப்பாகக் கூறும் சனாதனம் என்றுமே ஏற்றதாக அமையாது.

எனவே, தருமம் என்ற சொல்லில் மயங்கி சனாதனத்தைப் போற்றித் திரிய வேண்டா!தமிழறத்திலிருந்து தடம் புரள வேண்டா!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

(திருவள்ளுவர், திருக்குறள் 423)

– இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல






Sunday, June 12, 2022

4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(3. தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினைத் தட்டி எழுப்புக! – தொடர்ச்சி)

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்

4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக!

அலுவலகங்களில் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியது குறித்து ஆணைகள், சுற்றறிக்கைகள், அறிக்கைகள் எனப் பலவும் வேண்டிய மட்டும் வந்துள்ளன;  வந்து கொண்டுள்ளன. இருப்பினும் முழுப்பயனில்லை. உண்மையிலேயே  ஆட்சிமொழிச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால், ஒரே ஓர் ஆணை மட்டும் பிறப்பித்தால் போதும். அந்த ஆணை,

தமிழில் உள்ள செயல்முறை ஆணைகள், அலுவலக ஆணைகள், நிதி ஆணைகள், பட்டியல்கள், படிவங்கள், ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், சுற்றறிக்கைகள், கையொப்பங்கள், சுருக்கொப்பங்கள், பிற  மட்டுமே செல்லத்தக்கன

 என அறிவித்தால் போதும். இயல்பாகவே தமிழ் ஆட்சிமொழித்திட்டம் முழுமையாக நிறைவேறிவிடும்.

இவ்வாறெல்லாம் செய்ய முடியுமா? இயலக்கூடியதுதானா? என்றெல்லாம் எண்ணம் வரும். தமிழ் வளர்ச்சித் துறையில்தான் முடியாது. பிற துறையினர் தமிழ் வளர்ச்சித் துறையினரின் தக்க வழிகாட்டுதல் இருந்தால் முடித்து விடுவார்கள். தொடர்பான ஒரு நினைவைப் பகிர விரும்புகிறேன். நான் மதுரையில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநராகச் சேர்ந்த உடனேயே மறைந்த அலுவலக உதவியாளரின் ஓய்வூதிய விண்ணப்பத்தை முறைப்படி நிறைவு செய்து தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு அனுப்பினேன். விதி முறைப்படி இல்லை என்று திருப்பி அனுப்பினர். உடன் நான் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் உள்ள ஓய்வூதிய விண்ணப்பத்தைப் பெற்று அதற்கேற்பச் சிறிது மாற்றம் செய்து மீள அனுப்பினேன். அப்பொழுதும் விதிப்படி அனுப்புக என்றனர். நான் மாவட்டட ஆட்சியகப் பணியாளர்களைக் கலந்து பேசி மீண்டும் விண்ணப்பத்தை உரிய மேலனுப்புகைக்காக அனுப்பினேன். மீண்டும் அதே மறுமொழிதான். நான், உடனே விதிப்படி அனுப்ப வேண்டும் என்று கூறாமல் எந்த விதிப்படி எவ்வாறு அனுப்ப வேண்டும் எனத் தெரிவியுங்கள். மாதிரியையும் அனுப்பி வையுங்கள் என எழுதினேன். மறுமொழி இல்லை. தொடர்பு கொண்டு வினவினேன். “நீங்கள் நடுவணரசிற்கு அனுப்ப வேண்டிய விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் அனுப்பாம் தமிழில் அனுப்பியதால் அவ்வாறு குறிப்பிட்டோம். தமிழில் அனுப்புவதால் மறுக்கப்படுவதாகக் குறித்தால் சரியில்லை என்பதால் அவ்வாறு எழுதி அனுப்பினோம்” எனத் தங்களைத் தாங்களே மெச்சிக் கொண்டனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலேயே தமிழில் ஓய்வூதிய விண்ணப்பங்கள் அனுப்புவதைக் குறிப்பிட்டு, நன்னன் ஐயா இயக்குநராக இருந்த பொழுது, மாநிலக் கணக்காய்வுத் துறையினர் தமிழில் வரக்கூடிய எதையும் திருப்பி அனுப்பக் கூடாது என்றும் தேவையெனில், உரிய பயிற்சி அளிப்பதகாவும் ஆணை பிறப்பித்துள்ளதைச் சுட்டிக் காட்டினேன். “உங்களுக்குமட்டும் தமிழ்ப்பற்று இருப்பதுபோல் காட்டிக் கொள்வதற்காகத் தமிழில் ஓய்வூதிய விண்ணப்பத்தை அனுப்பி உரிய ஊழியர் குடும்பத்தினர் உரிய காலத்தில் பணம் வாங்குவதைத் தள்ளிப் போடுகிறீர்கள்” என்றார்கள். “என்னை எதிர்ப்பதாக எண்ணித் தமிழை எதிர்க்கிறீர்கள். நான் இதைச் செயலரிடம் எடுத்துச் சொல்வேன்” என்றேன். எனினும் நான் உடன் இயக்குநரிடம் பேசி, “தேவையற்றுச் சிக்கலை உருவாக்குகிறார்கள். தமிழ் வளர்ச்சித்துறையே இவ்வாறு செயல்பட்டால் எங்ஙனம் தமிழ் வளரும்” என்றேன். அவர் உடனே நான் அனுப்பிய ஓய்வூதிய விண்ணப்பத்தை அவ்வாறே தமிழில் மேலனுப்புமாறு தெரிவித்தார். இருப்பினும் ஓய்வூதியம் காலத்தாழ்ச்சியாக வரும் வகையில் ஏதும் சூழ்ச்சி செய்யலாம் என அஞ்சி, பணம் வரைவு அலுவலர் என்ற முறையில் எதிர் பார்க்கும் ஓய்வூதியப் பயனில் 90% வழங்கச் செய்தேன். பின்னர் நான் தமிழில் அனுப்பிய ஓய்வூதிய விண்ணப்பத்தைக் கணக்காய்வுத்துறையினர் ஏற்று உரிய ஓய்வூதிய ஆணையும் பிறப்பித்தனர்.

இதே போல் தமிழில் கையொப்பம் இருந்தமையால் விதிப்படி இல்லை எனத் திருப்பி அனுப்பினார்கள். கேட்டால் நிதி ஆவணங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆங்கிலத்தில்தான் கையொப்பம் இட வேண்டும் என்றார்கள். “நான் படிக்கும் பொழுதிருந்தே வங்கிக் கணக்கில் தமிழில்தான் கையொப்பம் இடுகிறேன்.  ‘Pay self’ என்பதற்கு எனக்குக் கொடுக்க எனக் குறிப்பிடுவேன். இதற்கு முன்பும் நான் சிறைத்துறையில் பணம் வரைவு அலுவலராகத்தான்(பணம் கோரிப் பெற்று வழங்கும் அலுவலராகத்தான்) பணியாற்றினேன். அங்கும் தமிழில்தான் கையொப்பம் இட்டுவந்தேன். இங்கு வந்தபின்பும் சம்பளப்பட்டிகள் முதலானவற்றில் தமிழில்தான் கையொப்பம் இடுகிறேன்” என்றேன். “கையொப்பம் தமிழா, ஆங்கிலமா எனத் தெரியாமல் ஏற்றிருப்பார்கள். நிதி தொடர்பானவற்றில் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும்” என்றனர். “அப்படி என்றால் நீங்கள் மட்டும் ஏன் கையொப்பம் தமிழா? ஆங்கிலமா? என ஆராய்ச்சி செய்கிறீர்கள். அப்படியே ஏற்க வேண்டியதுதானே” என்றேன். சில நேர வாதுரைகளுக்குப் பின் நான் எடுத்துக் கூறிய ஆணைகளைப் பார்த்து விட்டுத் தமிழ்க் கையொப்பத்தை ஏற்றுக் கொண்டனர்.

தமிழ் வளர்ச்சித் துறையில்தான் இந்தச் சிக்கல்கள் எல்லாம். தாங்கள், அரசாணைகளை இம்மிப்பிசகாமல் பின்பற்றுவதாக எண்ணிக் கொண்டு ஒன்றும் புரியாமல் தமிழுக்கு எதிராக இருப்பார்கள். பிற துறையினர் அவ்வாறில்லை. தொடக்கத்தில் கூறியதுபோல் தமிழ் வளர்ச்சித் துறையினர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வர்.  எனவே, நான் சம்பளக் கணக்கு அலுவலகத்திற்கு ஆய்விற்காகச் சென்றேன்.

தமிழ் ஆர்வலராக இருந்த சம்பளக் கணக்கு அலுவலரிடம், “நீங்களும் இவ்வலுவலகத்தினரும் ஒத்துழைத்தால் ஆட்சிமொழித் திட்டத்தை நம்மால் முழுமையாக நிறைவேற்ற இயலும்” என்றேன்.

“என்ன செய்ய வேண்டும்” எனக் கேட்டனர். நான் தொடக்கத்தில் ஆட்சி மொழி வகுப்பு நடத்தித் தமிழில் சிறப்பாக எழுதுவதற்கு வழிகாட்டியிருந்தேன். எனவே, என்மீது மதிப்பு கொண்டு சொல்வதைச் செய்ய ஆயத்தமாக இருந்தனர். பட்டியல்களுடன் இணைக்கப்படும் ஆணைகள் தமிழில் இல்லா விட்டால் திருப்பி அனுப்புமாறும் சம்பளப் பட்டியல்களைத் தவிரப் பிற பட்டியல்களைத் தமிழில் அளிக்கச் செய்யுமாறும் கணக்குத் தலைப்புகள் தமிழில் தெரிந்தால் சம்பளப்பட்டியல்களையும்’ தமிழில் அளிக்கச்செய்யுமாறும் ‘பணம் பெற்றுக்கொண்டேன், ‘பணத்தை இன்னாரிடம் கொடுத்திடுக’, ‘அவரது மாதிரிக் கையொப்பம் வருமாறு’ முதலிய குறிப்புகளைத் தமிழிலேயே எழுதச் செய்யுமாறும் தெரிவித்தேன். தொடர்பான சுற்றறிக்கையை அவ்வலுவலகத்தில் அளித்துச் சுற்றறிக்கையில் ஒட்டி வைக்குமாறும் ஒவ்வோர் உதவியாளரும் தம்மிடம் வரும் அலுவலகத்தினரிடம் ஒரு படியைக் கொடுக்குமாறும் வேண்டினேன். எப்பொழுது முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கலாம் எனக் கேட்டனர். கால வாய்ப்பு அளித்தால் தள்ளிக் கொண்டே போகும். எனவே, இப்பொழுது முதலே நடைமுறைக்கு வருவதாகச் செயல்பட வேண்டினேன். எனவே, தமிழில் இல்லாத பட்டியல்களையும் தமிழில் ஆணைகள் முதலியன இல்லாத பட்டியல்களையும் உடனே திருப்பி அனுப்புமாறும் இனிமேல், சம்பளக் கணக்ககத்தில் அளிக்க வரும் ஆங்கிலப் பட்டியல்களை ஏற்காமல் திருப்பி அனுப்புமாறும் வேண்டினேன். அவ்வாறே ஒப்புக் கொண்டு அனைவரும் செயல்பட்டனர். மதுரை அலுவலகத்தில் என்னுடன் அவ்வப்பொழுது பணியாற்றிய கணபதி, கா.பொ.இராசேந்திரன், பரிமளதாசு முதலான பிறரும் ஆர்வமுடன் பிற அலுவலகத்தினருக்கு வழிகாட்டினர். சில காலம் பரபரப்பாக இருந்தாலும் பின்னர் இயல்பான நடைமுறைக்கு வந்து அனைவரும் ஆட்சித்தமிழைச் சிறப்பாகச் செயல்படுத்தினர்.

இதே போல் மாநிலம் தழுவி, அனைவரும் தமிழ் ஆட்சி மொழித்திட்டத்தைச் செயல்படுத்த அரசு, பட்டியல்கள், அவற்றின் எல்லா வகை இணைப்புகள், அனைத்திலும் உள்ள கையொப்பங்கள், சுருக்கொப்பங்கள் யாவும் தமிழில் இருந்தால் மட்டுமே செல்லத்தக்கன என ஓர் ஆணை பிறப்பித்தால் போதுமானது. அதே நேரம் அனைத்துப் பட்டியல்கள், ஆணைகளுக்குமான மாதிரிக் கையேட்டையும் அரசு வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் ஐயமின்றிச் செயல்பட ஏதுவாகும்.

தமிழ் ஆட்சிமொழித்திட்ட நிறைவேற்றத்தில் சிறிய ஆணை மூலம் சீரிய பணியை ஆற்ற இயலும்.அரசு ஆவன செய்யும் என எதிர்பார்க்கலாமா?

– இலக்குவனார் திருவள்ளுவன்

தொடரும் கட்டுரைகள்:

5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக!

6. ஆட்சித் தமிழ்ச் சட்டம் 2022 இயற்றுக!

Tuesday, June 7, 2022

3. தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினைத் தட்டி எழுப்புக! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல





(2. ஆட்சித்தமிழ்த் துறை எனப் பெயர் மாற்றுக! – தொடர்ச்சி)

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்

3. உறங்குகின்ற

தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினைத் தட்டி எழுப்புக!

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை

(திருவள்ளுவர், திருக்குறள் 672)

உரிய காலத்தில் செய்ய வேண்டியவற்றைக் காலந்தாழ்த்திச் செய்ய முற்படுவது, தனக்குரிய பணிகளைச் செய்யாமல் தட்டிக் கழிப்பது ஆகியவற்றிற்கு விருது தர வேண்டும் என்றால் தமிழ் வளர்ச்சித் துறைக்குத்தான் தர வேண்டும். எனவே, சிறப்பாகத் தமிழ்வளர்ச்சித்துறையைக் கொண்டு செல்ல வேண்டும் என்னும் முனைப்பிலுள்ள இத்துறையின் புதிய இயக்குநர் முனைவர் ந.அருள், விழிப்பாக இருந்து விரைந்து பணியாற்றச் செய்ய வேண்டும்.

விழாக்களைப் பொறுத்த வரை, தமிழ் வளர்ச்சித் துறையினர் குடும்ப விழாபோல் கருதிக் கண்ணுங்கருத்துமாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது. ஆனால், ஆட்சித் தமிழைப் பொறுத்த வரையில் என்ன செய்ய வேண்டும் என்று அறியாச் சூழலில் செயல்படுவதால், ஏதும் செய்யாமல்தான் இருக்கின்றனர்.

தமிழ் வளர்ச்சி தொடர்பில், ஆட்சித் தமிழ்ச் செயலாக்கம் குறித்து எதுவும் மடல் அனுப்பினால் எந்த நடவடிக்கையும் இருக்காது. நாம் சில முறை நினைவூட்டினால் காலாவதி ஆன மருந்தைத் தருவதுபோல், உரிய நாள் முடிந்த பின்னர் மடல் அனுப்புவார்கள். சான்றுக்கு ஒன்று கூறுகிறேன்.

2013 இல் நூலக ஆணைக் குழு, நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதற்கு விண்ணப்பம் அனுப்புமாறு விளம்பரப்படுத்தி யிருந்தார்கள். ஆனால், விண்ணப்பப்படிவம் முழுமையும் ஆங்கிலத்தில்தான் இருந்தது. அதுவும் சில படிவத்தில் ஆங்கிலத்தில்தான் கட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் என்றும் இருந்தது. கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்தலாம் என்பதை அறியாதவர் உருவாக்கிய படிவமாக இருக்கலாம். இது குறித்துத் தமிழ் வளர்ச்சித் துறைக்குத் தமிழ்க்காப்புக்கழகம் உரிய நடவடிக்கை எடுத்துத்  தமிழ் விண்ணப்பப்படிவங்களை வெளியிடச் செய்யுமாறு வலியுறுத்தியது(மாசி 02, 2044/ பிப்.14, 2013). த.வ.துறை நடவடிக்கை எடுத்தது. எப்பொழுது தெரியுமா? உரிய விண்ணப்பங்களைப் பெற்று நூல்களைத் தெரிவு செய்து ஆணைகள் வழங்கி அந்நூல்களை எல்லாம் பெற்ற பின்னர் தமிழ்க்காப்புக்கழக மடலைத் தக்க நடவடிக்கைக்காக என்று அனுப்பியது(22.07.2013). அலுவலக நடப்புப் பதிவேட்டில் கோப்பினை முடித்ததாகக் காட்டக் கணக்கு காட்டத்தான் இம்மடலே தவிர ஆட்சித்தமிழ்ச்செயலாக்க உணர்விலல்ல என்பது சொல்லாமேல புரியும்.

இதனடிப்படையில் அடுத்த ஆண்டாவது தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு மார்கழி 22, 2044 சனவரி 06. 2013 அன்று மடல் அனுப்பினோம். புதிய விண்ணப்பம் ஆங்கிலத்தில் இருந்தது மட்டுமல்ல, ஆங்கிலத்தில்தான் நிரப்ப வேண்டும் என்றும் இருந்தது. ஆங்கில நூல்களுக்குப் பக்க வரையறை கிடையாது. தமிழ் நூல்களுக்குப் பக்க வரையறை உண்டு. இத்தகைய மொழிப்பாகுபாட்டை நீக்குமாறு வேண்டியும் பயனில்லை.

 முதலமைச்சர் தனிப்பிரிவில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தித் தமிழை ஒதுக்கி வைப்பது குறித்து முறையிட்டும் பயனில்லை. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

தமிழ்ப்பாடத்திட்டத்தில் இரு தாள்களாக இருந்த முறையை மாற்றி, ஒரு தாளாகக் குறைத்தமை, திருக்குறளை நீக்கியமை, மாெழி வாழ்த்தை அகற்றியமை போன்ற நேர்வுகளிலும் தமிழ் வளர்ச்சித் துறைக்குத் தெரிவித்த பொழுது  கொள்கை முடிவு என அமைதியாக இருந்து விட்டனர். (இவை குறித்துப் பள்ளிக்கல்வித்துறை தொடர்பானவற்றைத் தெரிவிக்கும் பொழுது பார்ப்போம்.)

பொதுவாகத் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு என்ன கருத்து அனுப்பினாலும் கொள்கை முடிவு என இரட்டைச் சொற்களில் முற்றுப்புள்ளி வைக்கும் பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். இது தவறான போக்கு ஆகும். “பல கொள்கை முடிவுகள் அதிகாரிகளின் கருத்துருக்களின் அடிப்படையில்தான் உருவாகின்றன. கொள்கை முடிவு என்றால், புதிய விருதுகள் அறிவிப்பும் புதிய திட்டங்கள் அறிவிப்பும் எங்ஙனம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. எனவே, கொள்கை முடிவு எனத் தட்டிக் கழிக்காமல் இது குறித்து ஆராய்ந்து தக்க முடிவு எடுக்குமாறு”  வேண்டினோம். பயனில்லை.

தமிழ் வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு முறையும் செம்மையாக இல்லை. ஆய்வுக்குரிய அலுவலகத்தினர் வினாப்படிவத்தை நிறைவு செய்து தந்தால் அதைப்பார்த்துத் தட்டச்சர் அறிக்கையைத் தட்டச்சுத் தந்திடுவார். இதுதான் ஆய்வறிக்கை. நிறைவு செய்த வினாப்படிவத்தைக் கடைநிலை ஊழியர் கூட வாங்கித் தரலாம். இதுபோன்ற புள்ளிவிவர அடிப்படையிலான ஆய்வறிக்கையால் என்ன பயன்? எனவே, இதையெல்லாம் ஆய்வாகவே கருத இயலாது.

பிறரைப் பொறுத்தவரை தமிழ்வளர்ச்சித் துறை சொன்னாலும் வழிகாட்டினாலும் செய்ய ஆயத்தமாகவே உள்ளனர். ஆனால், சொல்வார் யாருமில்லை. சான்றாகப் பல கூறலாம். எனினும் சில கூற விரும்புகிறேன்.

மதுரையில் சித்திரைப் பொருட்காட்சியில் காணுமிடமெங்கும் ஆங்கிலமே இருந்த பொழுது வேண்டுகோள் விடுத்துத் தமிழில் எழுத வழிகாட்டியதும் முழுமையாய்த் தமிழாக மாறியது; கடைப் பெயர்ப்பலகைகளைத் தமிழில் எழுத வேண்டுகோள் விடுத்ததுடன் நில்லாது, உரிய தமிழ்ச்சொற்களைத் தெரிவித்ததும் வழிகாட்டியதும் பெயர்ப்பலகைகள் யாவும் தமிழால் நிறைந்தது; அலுவலகங்களில் பிழையின்றியும் செம்மையாயும் தமிழில் எழுத வழிகாட்டியதும் அதனைப் பின்பற்றி ஆட்சித் தமிழை உளப்பூர்வமாக நிறைவேற்றியது; எனச் சொல்லிக் கொண்டு போகலாம்.

மதுரையில் மாவட்ட ஆட்சியகம் முன்புதான் திருவள்ளுவர் சிலை இருக்கிறது. ஆனால், சுற்றிலும் சுவெராட்டிகள் ஒட்டப்பட்டும் கைகளில் கட்சிக்கொடிகளை மாட்டி விட்டும் தலையில் கொடித்தோரணங்களைக் கட்டியும் மறைத்து வைத்திருந்தனர். அதனைத் தூய்மை செய்த பின்னரே மக்களுக்குத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை தெரிந்தது. தினமலரில் தமிழ்வளர்ச்சி அதிகாரியே ஒட்டப்பட்ட சுவரொட்டிகளைப் பிய்த்துத் தூய்மை செய்து கொண்டிருந்தார் என்ற செய்தியைப் பார்த்ததும் தமிழன்பர்களுக்கு அதனைத் தூய்மையாகவே வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வு வந்தது. மாலை அணிவிக்க அமைச்சர் வருகிறார், செயலர் வருகிறார் என்று சொல்லித் தொடக்கத்தில் புலவர் சிலைகளைத் துப்புரவாகவும் தூய்மையாகவும் ஆக்கியதும் பின்னர், தொடர்ந்து வேண்டியதற்கிணங்க, எப்பொழுதும் தமிழ்ப்புலவர் சிலைகள் தூய்மையாக்கியதை வாலாயப்பணியாக மதுரை மாநகராட்சி மேற்கொண்டதையும் மறக்க முடியாது. இதன் தொடர்ச்சியாக ஒன்று. மதுரையில் தொல்காப்பியர் சிலை எங்குள்ளது என்று யாருக்கும் தெரியாமல் இருந்த பொழுது  மதுரை பழைய நீதிமன்றக் கட்டிடம் அருகே மரக்கிளைகள் மூடி மறைத்திருந்தது. அதனைக் கண்டறிந்து அச்செய்தியை ‘தமிழக அரசியல்’ இதழில் செய்தியாக வெளியிட்டு அதனடிப்படையில் வேண்டிய பொழுது வழக்கம்போல் தமிழ் வளர்ச்சித்துறையினர் பாராமுகமாகக் கேளாக் காதினராகத்தான் இருந்தனர். மதுரை ஆட்சியருக்கும் மாநகராட்சி ஆணையருக்கும் மடல் அனுப்பியதை உலகத்தமிழ்ச்சங்கப் பொறுப்பு அதிகாரி முனைவர் பசும்பொன்னிற்குத் தெரிவித்ததும் தானே மறைத்துள்ள கிளைகளை அகற்றிக் காணும் வகையில் தொல்காப்பியர் சிலையை வெளிப்படுத்தினார். பின்னர் மாநகராட்சியினரும்  வாலாயப்பணியாக மேற்கொண்டு இன்று வரை தொல்காப்பியர் சிலை நன்னிலையில் உள்ளது.

அப்படியானால் இவைதான் தமிழ்வளர்ச்சிப்பணிகளா என அத்துறையினர் கேட்கலாம். அலுவலக நேரங்களில் ஆட்சித்தமிழ்ச் செயலாக்கத்தைச் சிறப்பாக நிறைவேற்றி, அதன் தொடர்ச்சியாகத் தமிழ் எங்கும் இருக்கவும் தமிழ்ப்புலவர்கள் மதிக்கப்படவும் செயலாற்றுவதும் முதன்மைப்பணிதான்.

தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினர் விழிப்பாக இருந்தனர் என்றால், ஆங்கிலத்தை அகற்றுவது எளிதாக இருக்கும். ஆனால், ஊடகங்களில் நாம் காணும் அறிக்கைகள், ஆணைகள், சுற்றறிக்கைகள், முத்திரைகள் யாவும் ஆங்கிலமாகத்தானே உள்ளன. அண்மையில் சென்னை மாவட்ட ஆட்சியர் மாறுதல் ஆணை ஆங்கிலத்தில்தானே பிறப்பிக்கப்பட்டது. தலைப்பில் உள்ள படங்களில் அடையாள அட்டை, அதில் இடப்பட்ட முத்திரை என யாவுமே ஆங்கிலத்தில் உள்ளதைக் காணலாம். இவற்றை யெல்லாம் பார்க்கும் பொழுது உடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இவற்றிற்கு முற்றுப்புள்ளி இடப்பட்டிருக்கும் அல்லவா? என்ன செய்ய வேண்டும், எவ்வாறு செய்ய வேண்டும் என்ற உணர்வும் இன்றி வழிவகையும் அறியாமல் இருக்கும் தமிழ்வளர்ச்சித்துறையைத் தட்டி எழுப்ப வேண்டுமல்லவா? இத் துறை உறங்கும் வரை தமிழன்னையும் உறக்கத்தில் தானே இருக்கும்.

  • இலக்குவனார் திருவள்ளுவன்

தொடரும் கட்டுரை : 4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக!

Followers

Blog Archive