Tuesday, September 25, 2018

கருணாவைக் குற்றஞ் சாட்டும் முன்னர்த் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ! – இலக்குவனார் திருவள்ளுவன்



கருணாவைக் குற்றஞ் சாட்டும் முன்னர்த்

தண்டிக்கப்பட வேண்டியவர்கள் !


  “யா காவாராயினும் நா காக்க” என்பதை சமய/மத வெறியர்களும் அவ்வாறு வெறியைத் தூண்ட விரும்பும் அரசியல்வாதிகளும் பின்பற்றுவதில்லை. இத்தகைய பேச்சிற்கான அரசு நடவடிக்கை என்பது ஒன்றுமில்லை என்னும் பொழுது இப்பேச்சுகள் பெருகுவதில் வியப்பில்லை. ஆனால், இவ்வாறு பேசுவோர் பாசக பிராமணராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அரசின் பாதுகாப்பு என்பது அக்கட்சிக்கும் அச்சமுதாயத்திற்கும் அவப்பெயர் என்பதை உரியவர்கள் உணரவில்லையே!
 சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கடந்த ஆவணி 31, 2049/16.09.2018 அன்று ச.ம.உ. கருணாசு பேச்சு சில அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசிய பேச்சிற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று குரல் எழும்பிக் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இவர் காவல்துறையை மிகவும் மதிப்புடன்தான் குறிப்பிட்டுள்ளார். தான் கண்டிக்கும் காவல் அதிகாரியையும் தமிழ் படித்தவன், தமிழன் என்பதால் மதிப்புடன் பார்ப்பதாகவும்தான் குறிப்பிட்டுள்ளார். கட்சித்தொண்டர்கள் சமுதாயக் காரணங்களால் கொலைகளில் ஈடுபடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். அதே நேரம் பாதிப்புற்றுக் குற்றம் செய்ய நேரும்பொழுது தன்னிடம் சொல்லிவிட்டுச் செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளார். இவரது தவறான சில கருத்துகளுக்குப் பிறர் கேட்கும் முன் தானாகவே வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுள்ளார்.
 முதல்வரைத் தான் அடிப்பதாக இவர் கூறவில்லை. அவ்வாறு காவல்துறை கூறுவது குறித்துத் தான் அப்படிப்பட்டவனா என்ற  தொனியில்தான் பேசியுள்ளார். ஒரு வேளை “எடப்பாடிக்கு முதல்வர் பதவி என்பது சின்னம்மா போட்ட பிச்சை” என்று பேசியது கைதிற்குக் காரணமாக இருக்கலாம். உலகறிந்த உண்மைதானே! அதற்கு ஏன் சினமடையவேண்டும் இப்பொழுது ஆட்சியை நிலைக்கச்செய்யும் வினைத்திறம் மிக்க முதல்வர் இதனை யெல்லாம் பொருட்படுத்தலாமா? பாசகவின் அடிமையல்ல என்று கூறிக்கொண்டே பாசகவினரைத் தாலாட்டிக் கொண்டு பிறரைத் துன்புறுத்தலாமா?
 காவல்துறையினரைத் தலைமைக்கு எதிராகத் தூண்டிப்பேசியவர், காவல்துறையினரிடம் மதவெறியைத் தூண்டிப் பேசியவர், உயர்நீதிமன்றத்தை இழிவாகப் பேசியவர், ஊடகத்தினரை இழிவுபடப் பேசியவர் என  இழிவாகவும் வன்முறையாகவும் பேசிய சிலர் வருத்தம் தெரிவிக்காத பொழுதும் கட்டுப்பாடின்றி நடமாடுகின்றனர். இவர் கைது செய்யப்பட்டுள்ளார்!
 ஆனால், இத்தகைய பேச்சுகளுக்குக் காரணம் அரசுதான். சொல்லப்பட்ட செய்தியை நோக்காமல் சொல்லியவர் யார் என்ற அளவுகோல் கண்டு பாராமுகமாக இருக்கும் அரசு இத்தகைய பேச்சுகளுக்கு வழி வகுத்து விடுகிறது.
 நூற்றுக்கணக்கிலான வன்முறைப் பேச்சுகள் இதற்கு முன்பு பேசப்பட்டுள்ளன, ஏசப்பட்டுள்ளன. ஆனால் அவ்வாறு பேசுவோர் தங்களை மாவீரர்களாக எண்ணிக்கொண்டு தொடர்ந்து வன்முறைப்பேச்சில் ஈடுபடும் வண்ணம்  மத்திய அரசும் மாநில அரசுகளும் பாராமுகமாக இருக்கின்றன. இதனால் மாற்றுக்கட்சியினர் உணர்ச்சிவயப்பட்டுப் பேசினால் தளையிடப்படுகின்றனர்.
 அவற்றைப் பட்டியலிட்டால் பக்கங்கள் நூற்றுக்கணக்கில் வரும். சில பார்ப்போம்.
  கேரள மாநில முதல்வர் பினராய் விசயன் தலையை வெட்டுபவருக்கு 1 கோடி உரூ. பரிசு வழங்கப்படும் என்ற ம.பி.மாநிலம் உச்சயினி இரா.சே.ச/ ஆர்.எசு.எசு. தலைவர் சந்திராவத்து
நடிகை தீபிகா படுகோனேவின் மூக்கை வெட்டுவோம்; பத்மாவதி படத்தின் இயக்குநர் தலையை வெட்டிக் கொண்டு வந்தால் 5 கோடி உரூ.பரிசு வழங்கப்படும் என்று அறிவித்த வன்முறை எதிர்ப்பில் ஊறிய இராசுபுத்து கருனி சேனா(Shree Rajput Karni Sena)
கன்னையா குமாரின் தலையைவெட்டினால் 11 இலட்சம்; நாக்கை வெட்டினால் 4 இலட்சம் என விலை பேசிய மேற்குவங்க மாநிலப் பதுவான் மாவட்டச்செயலாளர் குரு தீபுவரு சினி
 மேற்குவங்க முதல்வர் மமுதா பானர்சியின் தலையை வெட்டிக், கொண்டு வருபவர்களுக்கு 11 இலட்சம் உரூ.பரிசு வழங்கப்படும் என  அறிவித்த பா.ச.க இளைஞர் அணியான பா.ச. யுவ மோட்சா தலைவர்
 கன்னையா குமாரின் தலையைவெட்டினால் 11 இலட்சம்; நாக்கை வெட்டினால் 4 இலட்சம்.  – திலீபு கோசு,( மேற்கு வங்கம்)
 கவிஞர் வைரமுத்துவின் நாக்கை வெட்டினால் உரூ.10 கோடி பரிசு அளிக்கப்படும்.-முன்னாள் அமைச்சரும் பாசக மாநில துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரன்.
 உவைசியின் கன்னத்தில் அறைந்தால் ஒரு இலட்சம் பரிசு . பாபாராம்தேவு
 உவைசியின் தலையை வெட்டினால் ஒரு கோடி பரிசு – எச்சு.இராசா
 நடிகை தீபிகா படுகோனேவை உயிருடன் எரிக்கும் ஆளுக்கு 1 கோடி உரூ.பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்த பாரதீய சத்திரிய மகாசபை இளைஞர் அணித் தலைவர் புவனேசுசிங்கு
எனப் பலர் மீது எந்நடவடிக்கையும் இல்லை. 
 இவை தவிர அனந்தகுமார் எக்டே, பெங்களூர், இரவிசங்கர்(மனிதவள இணை அமைச்சர்), இராமகோபாலன், ஓகி ஆதித்தியாநாத்து(இப்போதைய உ.பி.முதல்வர்), கிரிராசு(சிங்கு)கிசோர், சாத்வி தேவிதாக்கூா், சாத்விபிராச்சி, சுப்பிரமணியசுவாமி, தேவாதாக்கூா், நரேந்திர(மோடி)(இப்போதைய தலைமையர்), நாராயணன், நிதின்கட்கரி(இப்போதைய மத்திய அமைச்சர்), நிரஞ்சன் சோதி, விகேசிங்கு(இப்போதைய மத்திய அமைச்சர்), முதலான பாசகவினர் உதிர்த்த பொன்மொழிகள்(?)  பின்வருவன. ஒத்த கருத்துடையவர்கள் என்ற முறையில் ஒரே வன்முறைப்பேச்சு பிறராலும் சொல்லப்பட்டுள்ளதால் யார் யார் விவரம் குறிக்கவில்லை.
 “இந்துக்களின் விந்தை  இசுலாமியப் பெண்களின் கருவுக்குள் செலுத்துங்கள்”
  “சூலாயுதத்தின் மூன்று முனைகளைக் கொண்டு நடுநிலை இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்துவர்கள் ஆகிய 3 பிரிவினரைக் குத்திக் கொலை செய்யவேண்டும் “
 “இசுலாமியர் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்!”
 “பாரத் மாதா கி சே என முழக்கமிடாதவர்கள் தலையை வெட்டுவேன்.”
(அரியானா மாநிலத்தில் பட்டியல் சாதிக் குழந்தைகள் இருவர் எரித்துக் கொல்லப்பட்டதற்கு அவ்வினத்தை இழிவுபடுத்தும் வகையில்) “நாய் மீது யாராவது கல் எறிந்தால், அரசு என்ன செய்ய முடியும்? அதற்கு அரசு பொறுப்பல்ல”
 (குசராத்து இசுலாம் இனப்படுகொலை குறித்து) “ஒரு நாய்க்குட்டி  சீருந்தின்(காரின்) சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் நமக்கு வேதனை ஏற்படுமா? “
 (கேரளா தேர்தல் தோல்வி எதிரொலியாகப்) “பொதுவுடைமைக்கட்சிப் பெண்களின்பிறப்புறுப்புகளில் குண்டு வைப்போம்.”
 “மசூதி என்பது வழிபாட்டுத் தலமல்ல, ஒரு கட்டடம் மட்டுமே எனவே அதனை எந்நேரத்திலும் இடிக்கலாம்.  “
 “இசுலாத்தை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும். “
 “கங்கை நதி ஓரம் உள்ள இசுலாமியர்களை வெளியேற்றுங்கள். அவர்களின் ஊர்களைக் காலி செய்யுங்கள். அரித்துவார், காசி, அலகபாத்தில் இசுலாமியர்கள் நுழையத்  தடைவிதியுங்கள். “
 இவ்வாறு பேசியவர்கள், பேசுபவர்கள் உயர் பொறுப்பிலும் உள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டுக் கருணாசு வழக்கை ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.
 மத்திய ஆட்சியில் மதவெறியும் சாதி வெறியும் மிக்க கட்சி ஆட்சி செய்வதால் நாடு முழுவதும் கொலைவிலைஞர்களும் அதிதீவிரப் பிராமணியப்பேச்சாளர்களும் பெருகி வருகின்றனர். இந்தியா முழுவதும் அவர்களுக்குப் பாதுகாப்பு உள்ளதுபோல் தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு உள்ளது. எனவேதான் தமிழக அரசு ஆட்சிக்குடை நிழலில் உள்ளவர்களை விட்டுவிட்டுப் பிறர் மீதுமட்டும் பாய்கிறது.
நூலணிந்தவர் பேசினால் அரசே வெண்சாமரம் வீசும்.
நூலறிந்தவர் பேசினால் ‘நகர நக்சல்’ என்று சிறைவாசம்.
என்னும் இத்தகைய நிலை நாட்டை அழிவிற்கு இட்டுச் செல்லும்.
 அறநூல் கல்லாதவருக்கு அரணாக இருக்கும் கொடுங்கோலாட்சி நிலத்திற்குச் சுமையாகும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். மாநில அரசுகளும் தன்னுரிமையுடன் திகழ்ந்துஅறவழி நிற்க வேண்டும்.
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை (திருவள்ளுவர்,திருக்குறள் 570)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

Tuesday, September 18, 2018

“தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி” தொடரலாமா? -இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல,

“தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி” தொடரலாமா?

  இக்கட்டுரை பிராமணர்க்கு எதிரானதல்ல. அவ்வகுப்பிலும் பிற வகுப்பார்போல் நல்லாரும் உள்ளனர்; பொல்லாரும் உள்ளனர். மாந்தர் இயற்கை இது. சிலர் செய்யும் தவறுகளுக்காக அவர்கள் சேர்ந்த வகுப்பையோ பிற பிரிவையோ நாம் பொதுவில் குற்றமாகச் சொல்ல இயலாது. அதேபோல் அவ்வகுப்பைச்சேர்ந்த நண்பர்களும் எனக்குண்டு. சாதிவேறுபாடு பார்க்காத மனித நேயர்களும் அவர்களுள் உள்ளனர். ஆனால் மத்திய அரசும் அதன் நிழலரசும் சாதிவேறுபாட்டில் குற்றவாளிகளைப் பாகுபடுத்திப் பார்ப்பதால் இதை எழுதவேண்டி உள்ளது.
சூத்திரனுக்கொரு நீதி – தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் – அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்
என்றார் பாட்டரசன் பாரதியார். இன்றும் அச்சதிதான் நிறைவேறுகிறது.
 பாரதியார் காலம்வரை தண்டச்சோறுண்ணும் பிராமணர் வாழ்ந்துள்ளனர். ஆள்வோரைக் கைகளுக்குள் போட்டுக்கொண்டு சாதிக்கொரு நீதி என நடைமுறைப்படுத்தி உள்ளனர். எனவே, அவர் மனம் நொந்து பாடியுள்ளார். சாதிகளில்லையடி பாப்பா என அறிவுரை கூறியதுடன் நில்லாது சாதிக்கொரு நீதிமுறையையும் சாடியுள்ளார். இப்பொழுது பிராமணர்கள், கல்வியாளர்களாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக, பணியாளர்களாக, தொழில் முனைவோர்களாக எனப் பல நிலைகளிலும் வாழ்கின்றனர். இருப்பினும் பிராமணியத்தை வளர்ப்பதெற்கென்றே ஒரு கட்சி உள்ளதால் சாதிக்கொரு நீதி என்னும் பாகுபாடு இன்றும் உள்ள கொடுமை தொடர்கிறது. இதனால் சமூகநீதி காக்கும் பிராமணர்களுக்கும் அவப்பெயர் வருகிறது.
 பிராமணியத்தை எதிர்க்கும் பலரும் பிரமாணர்களை எதிர்ப்பதில்லை.எனவேதான் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி, மூதறிஞர் இராசாசியுடன் நட்பு பூண்டிருந்தார். கலைஞர் கருணாநிதி உயர் பாெறுப்புகள் பலவற்றிலும் பிராமணர்களை நியமித்தார். பிராமணியம் என்பது ஆரியத்தின்  சாதிபாகுபாட்டு (வருணாசிரம)க் கொள்கைப்படி உயர்வு தாழ்வு கற்பிப்பதும் அவற்றை வலியுறுத்துவதும்தான்.
 இருநாள் முன்னர் (புதுக்கோட்டை மாவட்டம்) திருமயத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில், உயர்நீதிமன்றத் தடைக்கிணங்க மேடைபோட்டுப்பேச காவல்துறையினர் மறுத்துள்ளனர்.  பாரதிய சனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்சு. இராசா அதற்கு ஒத்துழைக்காமல்  காவல்துறை, உயர் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு எதிராக இழிவாகப் பேசியுள்ளார். மத வெறி நடவடிக்கையைத் தூண்டும் வகையிலும் அவரது பேச்சு அமைந்திருந்தது. அவரது பேச்சைக் கேட்ட அனைவருமே அது கண்டு அதிர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். அவரது கட்சியினரும் இத்தகைய அவரது பேச்சால் கட்சியில் உள்ள பிறருக்கும் அவப்பெயர் என்பதால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கருதுகின்றனர். மக்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு திருமயம் காவல்நிலையத்தில்  இவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
  பாசக இதுபோன்ற கொடுமைகளைத் தூண்டிவிடாமலும் வேடிக்கை பார்க்காமலும் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறாகப் பேசுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள்மீது காவல் துறை நடவடிக்கை எடுப்பதற்கு உதவ வேண்டும். பாசக குறுக்கிடாவிட்டால் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும். மாறாக ஊக்கப்படுத்துவது தனக்குரிய புதைகுழியைத் தானே தோண்டிக்கொள்வதற்கு ஒப்பாகும்.
 இதன் தொடர்பில், அமைச்சர் இராசேந்திர பாலாசிசோஃபியாவையும் இராசாவையும் ஒப்பிடக்கூடாது என்று சொல்வது உண்மை. ஆனால் காரணத்தை மாற்றி, “இராசா ஏதோ கோபத்தில் வெடித்துப்பேசிவிட்டார்” என்கிறார்.
 மாணவி சோஃபியா எதிர்பாராமல் வானூர்தியில் தமிழிசையைச் சந்தித்தபொழுது தூத்துக்குடி படுகொலைகள் நினைவால் “பாசசிச பாசக ஒழிக” என்று முழக்கமிட்டார்.  ஆனால், இராசாவிற்கு இவ்வாறு கடுமையாகப் பேசுவதே வழக்கம். நீதிமன்றத் தடையை அறிந்தவர் வேண்டுமென்றே மாவீரன்போல் காட்டிக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு நீதித்துறையையும் காவல் துறையையும் கடுமையாகப் பேசியுள்ளார். அஃதாவது அரசைத்தான் எதிர்த்துப் பேசியுள்ளார். ஆனால் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் பாசக தரும் அழுத்தத்தால், அதனைச் சினத்தில் வெடித்துப்பேசியதாக மழுப்புகிறார். மாணவி சோஃபியாவிற்குத் தீவிரவாத முத்திரை குத்துவோர் பிராமணிய அதி தீவிரவாதத்தைக் கண்டிக்க அஞ்சுவது ஏன் என்று தெரியவில்லை.
 ஆனால், எச்சு.இராசா பேச்சால் மனம் குமுறியோருக்கு ஆறுதலளிக்கும் வகையில் உயர்நீதிமன்றத்தில் உசாவல் நடந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதிபதிகள் செல்வம், நிருமல் குமார் ஆகிய இருவரும் தாமாக வழக்கை எடுத்துக் கொண்டதுடன் மக்களாட்சியின் தூணான நீதித்துறைக்குக் களங்கம் கற்பிப்பது பாசிசத்தையும் நக்சலிசத்தையும் வளர்ப்பதாக அமையும் என்று சரியாகவே சொல்லியிருக்கிறார்கள். நீதித்துறையின் கண்ணியத்தைக் காப்பது நீதிபதிகளின் தலையாய கடமை என்பதால்  தாமாக முன்வந்து வழக்குக் கேட்பிற்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். கடமை தவறாமல் நடவடிக்கை எடுக்கும் அவர்களுக்குப் பாராட்டுகள்!
 இராசாவின் ஒவ்வொரு பேச்சிற்குமே குண்டர்சட்டத்தில் அவரைப்போடலாம். தகாதவற்றை எழுதுவது; கேட்டால் எனக்குத் தெரியாமல் என் நிருவாகி பதிந்ததாகக்கூறுவது; வன்முறை வெறிப்பேச்சைப் பேசிவிட்டு, வேறுயாரோ தான் பேசியதுபோல் வெட்டி ஒட்டிக் காண்பிப்பதாகக் கூறுவது என்பனவற்றைத் திறமையாகக் கருதுகிறார். அடுத்து, வெறித்தனமாகப் பேசிவிட்டுப் பேசியது தானல்ல; நடிகர் ஒருவரை நடிக்க வைத்து ஒளிபரப்பியுள்ளார்கள் என்று  சொன்னாலும் சொல்வார்.
 இவரது பேச்சுகள் சாதி, மதக் கலவரங்களுக்குத் தூண்டுதலாக அமையும் என அறிந்தும் அரசு அமைதி காப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்பாவிகளை எல்லாம் உடனே கைது செய்யத் தெரிந்த அரசிற்கு அவர்கள் மீது வன்முறைச் சட்டங்களைப் பாய விடும் அரசிற்கு எச்சு.இராசா, எசு.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கத் தடையாய் இருப்பது நூல்தான் என்றால் அதைவிட இழிவானது வேறில்லை. ஆதலின்  ஆட்சியாளர்கள் அரசிற்கு அவப்பெயர் உண்டாக்குவோர் மீது நடவடிக்கை எடுத்து அரசின்மீதான அவப்பெயரை நீக்குவார்களாக!
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.(திருவள்ளுவர், திருக்குறள் 550)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

Tuesday, September 11, 2018

எழுவர் விடுதலை: முன்விடுதலை என்பது சட்டப்படியானதே! எதிர்ப்பவர்கள் சட்ட மறுப்பர்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன், தினசரி



எழுவர் விடுதலை:  முன்விடுதலை என்பதுசட்டப்படியானதே!

எதிர்ப்பவர்கள் சட்ட மறுப்பர்கள்!

  இராசீவு கொலை வழக்கில் சிக்கிய எழுவரை விடுதலை செய்வது அநீதியானது;  உலகெங்கும் நடைமுறையில் இல்லாதது என்பனபோல் சிலர் கூக்குரலிடுகின்றனர். நீதி மன்றத்திற்குத் தண்டிக்கும் அதிகாரம்மட்டும்தான் உள்ளது. ஒரு நீதிமன்றம் தண்டித்த பின்னர் அதற்கு வேலையில்லை. மேல் முறையீட்டு நீதி மன்றம் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது மாற்றலாம். ஆனால், தண்டனை வழங்கிய நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது.
  இறுதிநிலையில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் வழக்குடனோவாழ்க்கையுடனோ நீதிமன்றத்தின் தொடர்பு அற்று விடுகிறதுஅதன் பின்னர் தண்டனைவாசி குறித்த கருத்து கூற நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.
உலகெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் தண்டனைக் குறைப்புப் பிரிவு(remission section)என ஒன்று இயங்குகிறதுஎனவேதண்டனைக் குறைப்புஎன்பது உலக நடைமுறை.
  குற்ற வழக்குமுறைச் சட்டம் 432. 433 ஆகியவற்றின் கீழ் இந்தியாவில் இவை செயல்படுகின்றன. தண்டனைவாசிகளின் தண்டனைக்காலத்தைக் கழித்துக் குறைப்பதும் மாற்றிக் குறைப்பதும் (Section 432 Cr.PC for remission and Section 433 Cr.PC for commutation) இப்பிரிவுகளின்வேலை. எனவே, தண்டனைக் குறைப்புஎன்பது சிறைத்துறையின் வேலைஇதில் நீதிமன்றங்கள் தலையிடவேலையில்லை. சிறைத்துறையின் பரிந்துரைகளுக்கிணங்க மாநில அரசுகள்  ஆணையிடுகின்றன.
  அதே நேரம் மத்தியஅரசு சட்டங்களின் தண்டனை பெற்றவர்களின் தண்டனைக் குறைப்பு மத்திய அரசிற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். இதற்கிணங்கவே மேனாள் முதல்வர் செயலலிதா 2015 இல் நடந்து கொண்டார். ஆனால், அப்பொழுதும் மத்திய அரசிற்கு மறுக்கும் உரிமை யில்லை. தன்கருத்தினத் தெரிவிக்கலாம் அவ்வளவுதான். இதை ஏற்பதும் மறுப்பதும் மாநில அரசிற்குரியது.
எனவேதான், மேனாள் முதல்வர் செயலலிதா
“மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-இல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திரராசா என்கிற சாந்தன்,  சிரீகரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, இராபர்ட்டு பயசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
என அறிவித்தார்.
  இவ்வாறான தண்டைனக் குறைப்பு என்பது உலகெங்கும் நடைமுறையாகஇருக்கும்பொழுது இந்தியாவில் அதற்கு எதிராகக் குரல்  –அதுவும் குறிப்பிட்டவழக்கு தொடர்பில் மட்டும் எதிர்க்குரல்-எழுப்பப்படுவது முறையல்ல.தண்டனை முறைகளின் நோக்கம் குற்றங்களை ஒழிப்பதே தவிர குற்றவாளிகளை ஒழிப்பதல்ல. எனவேதான், ‘பல்லுக்குப்பல்’ என்பதுபோன்ற பழிக்குப்பழி எண்ண அடிப்படையில் நம் சட்டங்கள் இயற்றப்படவில்லை.
  ஆனால் எழுவர் விடுதலையை எதிர்ப்போர் இராசீவுகாந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் உணர்வுகளுக்கு மாறானது இவ்விடுதலை என்று எழுதுகிறார்கள் அல்லது பேசுகிறார்கள். ஆனால் இவர்கள் இக்குடும்பத்தினரின் மறுவாழ்விற்கு ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவர்கள்.
  கொல்லப்பட்ட இராசீவின் குடும்பத்தினர் விடுதலையை மறுக்கிறார்களாஏற்கிறார்களா என்பது பொருட்டே அல்ல. குற்றம் செய்ததாகக் கருதி அளவிற்கு மீறிய தண்டனை வழங்கப்பட்டுவிட்டது. பின்னர் அவர்களின் கருத்திற்குச் சட்டபடியான தேவையே இல்லை.
  நான் சிறைத்துறையில் நன்னடத்தை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளேன். முன்விடுதலைக்காக உசாவல்-விசாரணை மேற்கொள்ளும்பொழுது கொலையுண்டவரின் குடும்பத்தினரையும் உசாவுவேன். பெரும்பாலோர் எதிர்ப்பே தெரிவிப்பர். குறிப்பாகப் பெண்கள், “என் தாலியறுத்தவன் வருகின்றான் என்றால் அவன் பெஞ்சாதியும் தாலி அறுக்க வேண்டும். விடமாட்டோம்” என்பார்கள். நான், “உங்கள் எதிர்ப்பை எழுதிக் கொடுங்கள்” என்று எழுதி வாங்கிக் கொள்வேன். பின்னர் அவர்களிடம், “தண்டனையில் உள்ளவரை விடுதலை செய்யும் காலம் வந்து விட்டது. இனியும் அரசு அவர்களுக்குச் சிறையில் செலவு செய்யத் தேவையில்லை. ஆனால், விடுதலையில் வந்த பின்னர் அவருக்கு ஏதும் இயல்பாகவே தீங்கு நேர்ந்தது என்றால், நீங்கள்தான் பொறுப்பு. ஏதும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டா என்றால் அவர்களை விட்டு விலகியிருங்கள்” என்பேன். அவர்களும் எழுதிக் கொடுத்து மாட்டிக்கொண்டோமே என அமைதியாக இருப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதும் அரசு உதவி தேவை எனில் ஆவன செய்வேன். அவர்களும் அமைதியாக இருந்து விடுவார்கள்.
  இவ்வாறு, தண்டனைக்குறைப்பு முறையில் பல்லாயிரவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்; விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறிருக்க இவ்வெழுவருக்கு மட்டும் மறுக்கப்படுவது அநீதியல்லவா? சட்டத்தின் முன் யாவரும் சமம் என்று கூறிக்கொண்டு கொல்லப்பட்டவர் முன்னாள் தலைமையமைச்சர் எனக் கூறிப் பாகுபாடு காட்டுவதும் அநீதியல்லவா?
  அடுத்து ஆளுநர் கருத்துபற்றிப் பலரும் கூறுகின்றனர். குடியரசுத் தலைவர் மத்தியஅரசின் கருத்தையும் ஆளுநர் மாநில அரசின் கருத்தையும்தான் ஏற்கின்றனர். நடைமுறையில் அவர்களுக்கென்று தனிப்பட்ட கருத்து இல்லை. ஒரு வேளை அவர்களுக்கு மாறுபட்ட கருத்து இருந்தால் விளக்கம் கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ளலாம். அல்லது கலந்துபேசி நிபந்தனைகளை விதிக்கலாம். ஒரு முறை மறுத்தாலும் மீண்டும் அமைச்சரவை அனுப்பும் பொழுது மீண்டும் மறுக்காமல் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.  தமிழக ஆளுநர் தன்இயல்பில்செயல்படுவதால்  மாற்றிச் சிந்திக்கலாம்ஆனால் அது மக்களாட்சிக்குஏற்றதாக அமையாது என்பதை உணரவேண்டும்.
  எனவே, சட்டப்படியான, வாலயமான விடுதலையைக் காலங்கடத்தியதேதவறு. மேலும் காலங்கடத்தாமல் ஆளுநர் விரைந்து ஒப்புதல் தெரிவித்து எழுவரையும் விடுதலை செய்ய வழி விட வேண்டும். ஒருவேளை மத்திய அரசின் மறைமுகக் குறுக்கீடுகளால் காலத்தாழ்ச்சி நேரும் எனில், நாம் முன்னேர குறிப்பிட்டாற்போல் உடனடியாக எழுவரையும் காப்பு விடுப்பில் விடுதலை செய்து முறையான விடுதலைக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  எழுவரையும் விடுவித்து அறநெறி போற்றுக!
  எழுவரும் நன்னெறியில் நூறாண்டு அமைதியாகவும்இன்பமாகவும்வாழ்க!
-இலக்குவனார் திருவள்ளுவன்
தினசரி மின்னிதழ்
(படம்: அ.மு.)

Sunday, September 9, 2018

திரைத்துறையினரே! பரத்தமை(விபச்சார)ப் போக்கு முறைதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

திரைத்துறையினரே!

பரத்தமை(விபச்சார)ப் போக்கு முறைதானா?

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.(திருவள்ளுவர், திருக்குறள் 813)
  கிடைக்கும் பயனை அளந்து பார்த்துச்செயல்படுவதும் தமக்குத் தரக்கூடிய பொருளின் அடிப்படையில் உடலை விற்பவரும் திருடர்களும் இணையானவர்கள் என்கிறார் திருவள்ளுவர்.
  தமிழில் படங்கள் எடுத்துத் தமிழர்களின் செல்வத்தால் செல்வமும் புகழும் சேர்க்கும் நீங்கள் இத்தகையவரா இருக்கலாமா? பயன் அளந்து பழகுபவரும் பரத்தையர்களும் ஒன்றுதான் என்கிறார் திருவள்ளுவர். நீங்களும் அவ்வாறுதானே நடந்து கொள்கிறீர்கள்? உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லையா? உங்களில் சிலர் விலைமக்கள் போல் நடந்து கொள்ளாவிட்டாலும் உங்கள் செயல்களால் அவர்களுக்கும் அவப்பெயர் வருவது தெரியவில்லையா?
  எதைக் குறிப்பிடுகின்றேன் எனப் புரிகிறதா? திரைப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டினால் தமிழக அரசு முழுமையான வரிவிலக்கு என்று அறிவித்தது(2006); அதற்காகத் தமிழ்ப்பெயர் சூட்டினீர்கள்  தமிழல்லாப் பெயரையும் பெயர்ச்சொல் என்று சொல்லி வரிவிலக்கு பெற்று நன்மை அடைந்தீர்கள். இப்பொழுது வரிவிலக்கு நிறுத்தப்பட்டதுடன் தமிழ்ப்பெயர் வைப்பதையும் நிறுத்தி விட்டீர்கள். அப்படியானால், பொருளுக்காக உடலை விற்பவர்களுக்கும் உங்களுக்கும்  வேறுபாடு இல்லை என்றுதானே பொருள்? ஏன் இந்த இழி நிலையில் உங்களைத் தள்ளிக் கொள்கிறீர்கள்?
  இவ்வாண்டில் வெளிவந்த படங்களில் ஓநாய்கள் (ஞ்)சாக்கிரதை, விதி மதி உல்டா, ஃச்கெட்சு, மெர்குரி, பக்கா, பாஃகர் ஒரு (இ)ராஃச்கல், ஆந்திரா மெஃச், டிராபிக் ராமசாமி, செம போத, (ஞ்)சுங்கா, க(ஞ்)சினிகாந்த், காட்டுப் பய சார் இந்த காளி, பியார் பிரேமா காதல், லக்ஷ்மி , டார்ச் லைட்,  தொட்ரா, ஓடு ராசா ஓடு, யூ டர்ன், 4 (ஞ்)சி, (ஞ்)சனோ, (ஞ்)சருகண்டி, என்(ஞ்)சிகே, சைக்கோ,   முதலான பலவற்றில தமிழ் இல்லை. இனி வர உள்ள பேட்ட, ஸ்டிரீட் லைட்,சூப்பர் டீலக்சு, உத்தரவு மஃகாராசா, யங் மங் சங், அவுசு ஓனர், முதலான பல படங்களிலும் தமிழைக் காணவில்லை.
  அவளுக்கென்ன அழகிய முகம், வஞ்சகர் உலகம், 60 வயது மாநிறம், இமைக்கா நொடிகள், மேற்குத்தொடர்ச்சி மலை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம் முதலான பல படங்களுக்குத் தமிழில் பெயர்  சூட்டியவர்களுக்கு நாம் பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம்.
 ஆனால், இவர்களையும் முழுமையாகப் பாராட்ட இயலவில்லை. ஏனெனில்  படப்பெயரைத் தமிழில்  வைத்துவிட்டு அதற்கான விளம்பர முழக்கம், பிற விவரங்களை ஆங்கிலத்தில் அளிக்கிறார்கள். தமிழ் மக்கள் பார்ப்பதற்காகத்தானே விளம்பரம். அவ்வாறிருக்க ஆங்கில விளக்கம் ஏன்?
  தமிழ்ப்பெயர் வைக்கும் சிலர், பேட்டபோத என்பனபோன்று கொச்சை வடிவில் வைப்பது  ஏன் என்றும் தெரியவில்லை! நம் மொழியை நாம் பயன்படுத்தாவிட்டால் வேறு யார்தான் பயன்படுத்துவார்கள் என்ற உணர்வு இல்லையே!  பயன்படுத்தா மொழி அழிந்துபோகும் என்ற உணர்வும் உங்களுக்கு இல்லையே! தமிழாலும் தமிழராலும் பிழைக்கும் நாம்  அவர்களுக்குக் கடமைப்பட்டடவர்கள் என்ற நன்றியுணர்வுகூட இல்லையே!
 தமிழ்ப்பெயர்கள் தெரியாமையாலும் தமிழில் சரியாக எழுதத் தெரியாமையாலும் இவ்வாறு பெயர்கள் சூட்டுகின்றனர் என்று சொல்ல வாய்ப்பில்லை. அவர்களுக்குத் தெரிந்திருக்காவிட்டாலும் யாரிடம் தமிழில் தலைப்புகளைக் கேட்கலாம் என்றாவது அறிந்து இருப்பார்கள். ஆனால், பிற மொழிப் பெயர்கள் அல்லது பிற மொழி எழுத்துகளைக் கலந்து எழுதினால்தான் வெற்றி கிட்டும் என்ற தவறான நம்பிக்கையில் சிலர் இருக்கின்றனர். அவர்களது திறமையில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களோ தங்கள் திறமைகளை நம்பாமல் இவ்வாறு அயற்பெயர்களில் நம்பிக்கை வைக்கின்றனர். இனியேனும் அவர்கள் மாறிக் கொள்ள வேண்டும்.
 கதைப்பாத்திரங்களுக்குத் தமிழ்ப்பெயர்களையே சூட்ட வேண்டும் என்று நாம் பன்முறை வேண்டுகோள் விடுத்ததற்கு நல்ல பயன் உள்ளது. பலரும் தமிழ்ப்பெயர்களையே கதை மாந்தர்களுக்குச் சூட்டுகின்றனர். பாராட்டுகள். எல்லாரும் இவ்வாறு தமிழ்ப்பெயர் சூட்டும் நிலையே தமிழ்த்திரை உலகில் நிலவ வேண்டும்.
  கலைஞர்களை அறிமுகப்படுத்தும் பொழுதும் தமிழ்ப்பெயர்கள் சூட்டியே  அறிமுகப்படுத்த வேண்டும். பிற மொழிப்படங்களில் சாதிப்பட்டங்களுடன் திரிந்தாலும் தமிழ்த்திரைஉலகில் அவற்றைத் தூர எறிய வேண்டும்.
பெயர் என்பது வெறும் அடையாளம் மட்டுமல்ல!  பண்பாட்டைக் குறிப்பதாகவும் வரலாற்றை உணர்த்துவதாகவும் உள்ள குறியீடுமாகும். எனவே, பெயர்தானே என்று அலட்சியமாக இல்லாமல் பெயர்களுக்கு முதன்மை அளிக்க வேண்டும்.
 தூய வாழ்க்கை என்பது மொழித்தூய்மையையும் குறிக்கும் என்று தெளிதல் வேண்டும். அயல்மொழியில் பெயர் சூட்டுவதோ அயல் எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதுவதோ நம் தாய் தந்தையரை  இழிவுபடுத்துவது போன்றது என உணரவேண்டும். பொது வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் ஈடுபாடு காட்டும் கலைஞர்கள் மொழி வாழ்க்கையிலும் ஈடுபாடு காட்ட வேண்டும்.
 படங்களில்  பெயர்களின் தலைப்பு அல்லது முதல் எழுத்துகளைத் தமிழிலேயே குறிக்க வேண்டும். படக்கலைஞர்கள் குறித்துத் தெரிவிக்கும் விவரங்களையும் தமிழிலிலேயே குறிக்க வேண்டும். இயக்குநர், ஒளி இயக்குநர், ஒளி ஓவியர் என்பன போன்று தமிழில் குறிப்போரும் இடைவேளை என்பதை ஆங்கிலத்தில் குறிப்பது ஏன் என்று தெரியவில்லை.
  இளம் முன்னணி நடிகர்கள் பலர் பொதுநிகழ்ச்சிகளில் வேட்டி அணிந்து தமிழர் மரபைப் பேணப்போவதாக அறிவித்து அதன்படி நடந்து கொள்கிறார்கள். உண்மையிலேயே அவர்கள் பாராட்டிற்குரியவர்கள்.
 இசையமைப்பாளர், நடிகர், பாடகர் வெ.பிரகாசு(G.V.PrakashKumar) தமிழிலேயே கையொப்பம் இடப்போவதாக அறிவித்து உள்ளார். பாராட்டுகிறோம்.  அதே நேரம், கிரந்தம் விலக்கி எழுதுமாறும் வேண்டுகிறோம்.
  தமிழ்வழிப்பள்ளிகள் மூடப்படுதைத் தடுக்கத் தன்னாலான சிறு உதவியைச் செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இவரைப்போல் அனைத்துக் கலைஞர்களும் அவர்களின் நேயர் மன்றங்களும் முன் வந்தால் தமிழ் தமிழ்நாட்டில் நிலைக்கும் அல்லவா?
  கலைஞர்களே! உங்கள் பின்னர் உங்களைப் பின்பற்றும் கூட்டங்கள் இருப்பதை அறிவீர்கள். அவர்களை வழி நடத்தும் பொறுப்பு உங்களுக்கு உள்ளதை உணருங்கள். நீங்கள் மொழித்தூய்மையைப் பேணினால் அவர்களும் மொழித்தூய்மையைப் பேணுவார்கள் என்பதை அறியுங்கள். உங்கள் தாய்மொழி எது என்பது முதன்மை அல்ல!  நீங்கள் தமிழால் வாழ்கிறீர்கள் என்பதுதான் முதன்மையானது.   அப்படியானால் உங்களை வாழவைக்கும் தமிழைத் தாயாகக் கருதி அதைனப் போற்றுங்கள். திரைப்படத்தின் எல்லா நிலையிலும் பயன்பாட்டு மொழியாகத் தமிழே இருக்குமாறு செயல்படுங்கள்.
தமிழால் நிலைக்கும் நீங்கள், தமிழையும் நிலைக்கச் செய்யுங்கள்.
வாழ்க தமிழுடன்! வளர்க கலையுடன்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Followers

Blog Archive