Thursday, September 28, 2017

நீதிமன்றம் அறம் காக்கவே! செல்வாக்கினரைக் காக்க அல்ல! – இலக்குவனார் திருவள்ளுவன்

     24 செப்தம்பர் 2017      கருத்திற்காக..


நீதிமன்றம் அறம் காக்கவே! – செல்வாக்கினரைக் காக்க அல்ல!

  நீதிமன்றத்தில் உரைக்கப்படும் தீர்ப்பு ஒவ்வொன்றும் சட்டத்தின் பகுதியாகின்றது. சட்டம் என்பது அறத்தை நிலை நிறுத்தவே என்னும் பொழுது தீர்ப்புகளும் அறத்தை நிலை நிறுத்தவே வழங்கப்பெற வேண்டும். மக்களுக்கு அறம் வழங்கும் வகையில் தீர்ப்புகள் வந்து கொண்டுள்ளன. அதே நேரம், “சட்டத்தின் முன் யாவரும் சமம்” என்பது பல நேர்வுகளில் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் உள்ளது. செய்தி யிதழ்களைப் பார்த்தே நடவடிக்கை எடுக்கும் நீதிபதிகள், தங்கள் முன் வரும் வழக்குகள்பற்றிய செய்திகளைக் கண்டு கொள்வதில்லை.
  “பனை மரத்தடியில் இருந்து பால் குடிக்கக்கூடாது” என்பதன் காரணம் தவறான ஊகங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதுதான். ஐயத்திற்கு அப்பாற்பட்டுச் செயல்பட  வேண்டிய நீதிமன்றங்களின் தீர்ப்புகள் சில, நீதி மன்றங்களின் மீதான நம்பிக்கையைப் பொய்யாக்கிவிடுகின்றன. ஏழை எளியவர்களுக்குப் பிணை மறுக்கப்படுவது குறித்தும் செல்வர்கள் எளிதில் பிணை பெறுவது குறித்தும் நீதிபதிகளே நீதிமன்றத்தில் குறை கூறிய இரு நாளிலேயே  செல்வாக்கின் காரணமாகவும் சாதியின் காரணமாகவும் பிணை வழங்கப்பட்டதாகக் கருதி மக்கள்  வருந்தியுள்ளனர்.
  காலத்தாழ்ச்சியாக வழங்கப்பெறும் தீர்ப்பும் அநீதியானது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சார்பாக இழுத்தடித்துத் தரப்படும் தீர்ப்பு குற்றச்சாட்டப்படுபவர்களுக்குக் கேடயமாக அமைகின்றது.
  தாய்மொழியாம் தமிழ்மொழிவழிக் கல்விக்கு எதிரான நவோதயா பள்ளி தொடர்பான தீர்ப்பு ஒருதலையானது என்பது அனைவரும் அறிந்ததே.
  அரசு ஊழியர் போராட்டம் தொடர்பான வழக்கில், 1 மணி நேரத்தில் முடிவைத் தெரிவிக்குமாறு நீதிபதி சொல்வது அரசு காவல்துறை மூலம் அடக்கியாள நினைப்பதுபோல், நீதித்துறை மூலமும்  மக்களை ஒடுக்க முயல்கிறது என மக்கள் கூறுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. நீதிமன்றங்கள் அறிவுறுத்தலாம், தீர்ப்பு வழங்கலாம். ஆனால் மிரட்டக் கூடாது என்பதை மறக்கலாமா?
 இத்தகைய தீர்ப்பு கூறுவோர் மீது நடவடிக்கை எடுத்தால்தான்  ஆராயாமல் தீர்ப்புகள்  வழங்கும் நேர்வுகள் இனி எழாது.
 அரசு ஊழியர் வழக்கு தொடர்பாக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த கருத்தாளரைக் கைது செய்துள்ளனர். தீர்ப்புகள் திருத்தத்திற்கு உரியனவே! இல்லை என்றால், மேல்முறையீடுகள், சீராய்வுகள் என ஒவ்வொரு தீர்ப்பும்  பல் வேறு அடுத்த நிலைகளில் ஆராயப்படுமா? நாம் மக்களாட்சி நாட்டில்தான் வாழ்கிறோமா இல்லையா என்னும் ஐயத்தை இத்தகைய நடவடிக்கைகள் எழுப்பி விடுகின்றன.
  பல்வேறு தீர்ப்புகள் சாதி, சமய, இன அடிப்படையில் உரைக்கப்படுவதாக மக்கள் கருதுவதை நீதிமன்றங்கள் அறியாமல் இருக்கா. அத்தகைய எண்ணம் வராத வகையில் சட்டத்தின் முன் யாவரும் இணை என்பதை மெய்ப்பிக்கும் வகையில்தானே தீர்ப்புகள் இருக்க வேண்டும்.
  அதிமுக பொதுக்குழு தொடர்பாக வழக்கு தொடுத்த பொழுது, “நீ விரும்பாவிட்டால் வீட்டிலேயே இரு” என்பதுபோல் சொல்வது எல்லாம் எப்படி நடுவுநிலையாக இருக்க முடியும்?  வேலைக்கான நேர்காணல் விதி முறையின்றி நடப்பதாக ஒருவர் வழக்கு தொடுத்தால் இதை முன்மாதிரியாகக் கொண்டு, “நீ விரும்பாவிட்டால் வீட்டிலேயே இரு”  என்று சொல்ல மாட்டார்களா? இவ்வாறு முறைகேட்டைச்சுட்டிக்காட்டும் பொழுது அதை ஆராய்ந்து முறையானது அல்லது முறையற்றது எனத் தீர்ப்பு கூறாமல், எடுத்தேன், கவிழ்த்தேன் என்பதுபோல் சொல்லலாமா? வழக்கு தொடுத்தவரும் சட்ட மன்ற உறுப்பினர் என்னும் பொறுப்பில் உள்ளவர். அவர்சார்ந்த கட்சியின் பொறுப்பாளர்களுள் ஒருவர்.  நாளை அமைச்சராகவும் – முதல்வராகவும் – ஆக வாய்ப்பு உள்ளவர். அது முதன்மையல்ல. அன்றைய நாளில், பொதுக்குழு,  கூட்டப்படுவதாகச் சொல்லிய கட்சியின் உறுப்பினர். பொதுமக்களே பொதுநல வழக்கு போடலாம் என்றால், கட்சி உறுப்பினர் கட்சி தொடர்பான கூட்டம் தொடர்பில் நீதி கேட்பது எப்படி தவறாகும்? ஆகவே உரிமையில் வழக்கு தொடுக்கும் பொழுது ஒறுப்புத்  தொகை  என்பதெல்லாம்,  அரசிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் இப்படித்தான் தீர்ப்பு அமையும் என மக்களை மிரட்டுவதாக அமையாதா?
  நீதிமன்றத்தில் பொதுக்குழுக் கூட்டம் அல்ல, இரண்டு அணிகளின் இணைப்பு எனத் தெரிவித்துவிட்டு, அதன்பின்னர்ப் பொதுக்குழுக் கூட்ட முடிவுகள் என அறிவிப்பதும் அவ்வாறே தேர்தல் ஆணையத்தில் தெரிவிப்பதும் முறையற்றவை அல்லவா? உடனே தவறான தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் வழக்குரைஞர்,  ஆளும் அணியினர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமல்லவா?
  முதலில் காலை,  மாலை இரு வேளைகளில் தனித்தனியே நீதி மன்றம் இரு முறை செயல்பட்டேனும் நிலுவை வழக்குகளை இல்லாமல் ஆக்க வேண்டும்.
 அரசு தொடர்பான பல வழக்குகள், வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக இருப்பின் பேசி எளிதில் முடிக்கச் செய்ய வேண்டும்.  அரசு ஊழியர்களுக்காக மாநிலத் தீர்ப்பாயம் அமைப்பதாக அறிவித்தும் எந்நடவடிக்கையும் இல்லை. அதனை விரைவுபடுத்தத் தெரிவித்து அதனடிப்படையில் அமைக்கப்பட்டால் அரசு ஊழியர்கள் வழக்குகள் மாற்றப்பட்டுப் பொதுமக்களுக்கான வழக்குகளுக்குக் கூடுதல் நேரம் கிட்டும். கால வரன்முறையை வகுத்துக்கொண்டு இன்றைய அளவிலான வழக்குகள் நிலுவையில் இல்லா நிலையை உருவாக்க வேண்டும்.
  பிச்சைக்காரராக இருந்தாலும் அவருக்கு முகவரிச்சான்று இருப்பின் அவர் பிணை வழங்கலாம் என நல்ல தீர்ப்பு ஒன்று அண்மையில் வந்தது. இது போன்று பிணைவிடுப்பை எளிதாக்கும் வரைமுறைகளை உருவாக்க வேண்டும். அதே நேரம் செல்வம், செல்வாக்கால் பிணை பெறுவதை மட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  நல்ல தீர்ப்புகளை வழங்கி மக்களின் கேடயமாகத் திகழும் நீதி மன்றங்கள் எல்லா நிலையிலும் அவ்வாறே செயல்பட அவ்வப்பொழுது நீதிபதிகளுக்கான  பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.  தவறான தீர்ப்புகள் வழங்கப்படும் நேர்வுகளில் மேல் நீதிமன்றங்கள் தாமாகவே நடவடிக்கை எடுக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.
  நீதி மன்றங்கள்  ஆள்வோர்க்குக் காவலராக, முறை தவறுவோர்களுக்குக் கேடயமாக இல்லாமல் குடியாட்சியின் காவல் அரணாக எல்லா நிலையிலும் திகழ வேண்டும்.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.    (திருவள்ளுவர், திருக்குறள் 118)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 204,  புரட்டாசி 08 – 15,   2048 / செட்டம்பர் 24 – 31,  2017

Saturday, September 23, 2017

அருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே! – இலக்குவனார் திருவள்ளுவன்

அருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே!

     அறிவியல் என்றால் நம்மில் பலர் ஆய்வகத்தில், குடுவைகளில் ஆய்வு செய்வது எனத் தவறாகக் கருதுகிறோம். ஆனால், “கூர்ந்து நோக்குவதாலும்  ஆய்வாராய்ச்சியாலும் கண்டறியப்பட்டு முறைமைப் படுத்தப்படும்” எல்லாம் அறிவியலே.
  இத்தகு அறிவியலில் தமிழ் மக்கள் தொடக்கக் காலத்தில் இருந்தே சிறந்து விளங்கியுள்ளமையை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறார் தொல்காப்பியர். இவ்வாறு பொருள் குறித்து அமையும் சொற்கள் எல்லாம் அறிவியல் தன்மை கொண்டுள்ளமைதான் தமிழுக்கே உள்ள சிறப்பு. காலம் செல்லச் செல்ல பல சொற்களின் அறிவியல் தன்மை நமக்குப் புரியாமல் போயுள்ளது. எனினும் இன்றும் வழங்கும் பல சொற்கள் உணர்த்தும் அறிவியல் உண்மையை உணர்ந்தால் அருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே என உணரலாம். சில சொற்களின் அறிவியல் தன்மையை இங்கே நாம் காணலாம்.
  உயிரினம் வாழ்வதற்கு மிக இன்றியமையாதது காற்று. இந்த அறிவியல் உண்மையை உணர்ந்தமையால் காற்று என்பதற்கு ‘உயிர்ப்பு’ என மற்றொரு பெயரையும் நம் முன்னோர் சூட்டியுள்ளனர். காற்று அங்கும் இங்கும் அசைந்து உலவுவதைப் பார்த்தவர்கள் அதன் தன்மைக்கேற்ப, ‘சலனன்’ என்றும் ‘உலவை’ என்றும் பெயரிட்டனர்.
  காற்று வரும் திசையின் அடிப்படையிலும் அதன் தன்மையின் அடிப்படையிலும், பெயர்கள் சூட்டினர். வடக்கில் இருந்து வரும் காற்று வடந்தை, அதுவே அதன் வாட்டும் தன்மையால் வாடை எனப்பட்டது. மேற்கே இருந்து வருவது கோடை, கிழக்கே இருந்து வருவது கொண்டல், தெற்கே இருந்து வருவது தென்றல் என்பனபோல் காற்றின் அறிவியல் தன்மைக்கேற்பப் பெயரிட்டு அழைத்தனர். காற்று அசையாமல் ஒரே இடத்தில்  நிலைத்து நிற்கும் தன்மையையும் உணர்ந்து  பெயரிட்டுள்ளனர். உடலில் 10 வகைக் காற்று இருப்பதாக உணர்ந்து தனித்தனியே பெயரிட்டனர். இதயத்தில் இருந்து இயங்குவது, உச்சித்தலையில் இயங்குவது, வயிற்றில் இருந்து இயங்குவது, உடல் முழுவதும் பரவி யிருப்பது முகத்தில் இருந்து தும்மலும் சினமும் வெம்மையும் செய்வது, ஓட்டம், இளைப்பு, வியர்த்தல் ஆகியன செய்வது என அறிவியல் உண்மைகளை உணர்ந்து பெயர்கள் இட்டனர். பின்னர் வந்த ஆரியர் இவற்றைச் சமசுகிருத்தில் எழுதி வைத்துத் தமிழ்ப் பெயர்களை இல்லாமல் ஆக்கியதால் இவற்றின் தமிழ்ப் பெயர்களை ஆய்ந்து கண்டறிய வேண்டியுள்ளது.
     எல்லா இடத்திலும் காற்று இருக்கும் என்ற அறிவியல் உண்மையையும் உணர்ந்து இருந்தனர். ஒரு பாத்திரத்தில் அல்லது ஓரிடத்தில் நீர்ப்பொருள் அல்லது திடப் பொருள் என எதுவும் இல்லாமல் இருந்தால் அதனை வெற்றிடமாக எண்ணவில்லை. அங்கே காற்று இருப்பதை உணர்ந்திருந்தனர். எனவேதான் அந்த இடத்தைக் ‘காலி’ யாக உள்ளதாகக் குறிப்பிட்டனர். கால் + இ = காலி ; காற்றை உடையது. எனவே பொருள் எதுவும் இல்லா இடத்தில் காற்று நிறைந்து உள்ள அறிவியல் உண்மையை உணர்த்தியுள்ளனர். இவ்வாறு வெற்றிடம், காற்றிடம் என்ற அறிவியல் உண்மைகளை உணர்ந்து சொற்களைப் படைத்துள்ளனர்.
      நாம் வாழும் மண்ணுலகிற்கு ஏறத்தாழ 50 வகையான பெயர்கள் உள்ளன. இவை அனைத்தும் புவியறிவியல் சார்ந்தனவே. உலகம் நிற்காமல் உலவிக் கொண்டுள்ளதால் உலகம் எனவும் சக்கரம் உருளுவது போல் உருண்டு கொண்டே இருப்பதால் சக்கரம் என்றும் கோள வடிவு உடையதால் பூகோளம் என்றும் பூவலயம் என்றும் புவியறிவியலை வெளிப்படுத்தும் சொற்களைப் படைத் துள்ளனர். “சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்”  என்னும் குறளடியும் உலகம் சுழலும் அறிவியல் உண்மையை உணர்த்துவதை நாம் அறிவோம் அல்லவா?
   கோள்களுக்குப் பெயரிடுகையில் பிற இனத்தவர் போல் கற்பனைக் கதைப் பாத்திரங்களின் பெயர்களைச் சூட்டாமல், நிறத்தின் தன்மையில் செந்நிறத்தில் உள்ள கோள் செவ்வாய், கரு நிறத்தில் உள்ள (சனிக்) கோளின் பெயர் காரி என்றும் அகன்ற பரப்பின் தன்மையில் வியாழன் என்றும் ஒளியின் தன்மையில் வெள்ளி என்றும் சூரிய மண்டிலத்தின் அண்மையில் வாயிலாக உள்ள தன்மையை உணர்ந்து புதன் என்றும் வானறிவியல் அடிப்படையில் பெயர்களைச் சூட்டியுள்ளனர். இன்றைக்கு நாம் வால்மீன் என்று குறிப்பிடுகிறோமே அதற்கு வால் எதுவும் கிடையா. அதன் அறிவியல் தன்மையை உணர்த்தும் பழந்தமிழ்ச் சொல் புகைக் கொடி என்பதே ஆகும்.
   ‘கோளாறு’ என்றால் நாம் பழுது என எண்ணுகிறோம்.(ஆங்கிலத்தில் கூட, ‘repair’ என்றால் சீராக்குதல் அல்லது பழுதுநீக்கல் என்னும் உண்மைப் பொருளை உணராமல் பழுதானதாகத்தான் கருதுகிறோம்.) உண்மையில் கோளாறு என்றால் செவ்வையான இயக்கம் என்றுதான் பொருள். தென் மாவட்ட ஊர்ப் பகுதிகளில் வண்டியில் செல்லும் பொழுது “கோளாறாகப் போ” என்றும் அடுத்தவரை இடிக்காமல் நேராக உட்காருவதற்குக் “கோளாறாக உட்கார்” என்றும் சொல்லுவர். இக்கோளாறு என்னும் சொல் மிகச் சிறந்த வானறிவியல் சொல்லாகும்.
  ஆறு என்றால் வழி எனப் பொருள். நல்லாறு என்றால் நல்ல வழி என்றும் போகாறு என்றால் பொருள் போகும் வழி என்றும் ஆகாறு என்றால் பொருள் ஆகி வரும் வழி என்றும் திருவள்ளுவர் திருக்குறளில் கையாண்டுள்ளார். கோள் என்பது விண்ணிலுள்ள கோள்களைக் குறிக்கும். விண் கோள்கள் அனைத்தும் உலவிக் கொண்டு இருப்பினும் ஒன்றுடன் ஒன்று மோதாமல் அதனதன் வழியல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கோள்களைப் போன்ற செவ்வையான இயக்கம் வேண்டும் என்பதற்காகவே கோளாறு எனக் குறிப்பிட்டுள்ளனர்.
   பகவன் என்பது  காலத்தை இரவு, பகல் எனப் பகுக்கும் தன்மைiயின் அடிப்படையில்  சூரியனைக் குறித்த அறிவியல் பெயராகும். இதனை ஆதிபகவன் என்றும் “ஆதி பகவன் முதற்றே உலகு”  என்றும் குறிப்பது உலகில் பிற எவரும் உணரா பொழுதே தமிழ் மக்கள் பூமியின் தோற்றத்தை உணர்ந்த அறிவியல் அறிவை உணர்த்துவதாகும். சூரியனில் – பகவனில் – இருந்து பூமி தோன்றிய உண்மையை உணர்ந்து பகவனை முதலாகக் கொண்டே உலகம் தோன்றியுள்ளது! சூரியனில் இருந்து உருவானதே இந்நில உலகம் என்னும் மிகப் பெரும் புவியறிவியல், வானறிவியல் உண்மையை மிக எளிமையாகப் பாமரரும் அறியும் வண்ணம் பயன்படுத்தி வந்துள்ளோம்.
 உயிரினங்களுக்கு அவற்றின் அறிவியல் தன்மைகளை உணர்ந்தே பெயரிட்டுள்ளனர். சான்றாக ஓரிரண்டு பார்ப்போம். ‘கயம்’  என்றால் மென்மை எனப் பொருள். யானையின் தலை மிகப் பெரியதாக இருந்தாலும் அதன் உட்பகுதி கடற்பஞ்சு போன்ற எலும்புகளும் ஒன்றுமில்லா அறைப்பகுதிகளும் உடையதாக உள்ளதால் மென்மையாகவே இருக்கும். இவ்வறிவியல் தன்மையை உணர்த்தும் வகையில் ‘கயம்தலை’ –  ‘கயந்தலை’ என்றனர். இதிலிருந்தே சமசுகிருதச் சொல்லான ‘கசமுகன்’  உருவாயிற்று.
 வயிற்றை ஒட்டப் போடும் – பட்டினியாய் இருக்கும் – தன்மையுடைய விலங்கு ஒட்டகம் என அழைக்கப்படலாயிற்று. அணிஅணியாக – வரிவரியாக – உடலில் தோற்றமுடைய உயிரினத்தை அணில் என்றனர். கோரைப்பல் உடைய உயிரினத்தைப் பல் + தி =  பன்றி என்றனர். தன் துணை இன்றி வாழாப் பறவையை ‘அன்றில்’ என்றனர்.
 விலங்கினங்களை அவற்றின் அறிவியல் தன்மைகளுக்கேற்ப வகைப்படுத்தியும் பெயரிட்டுள்ளனர். எனவே, யானையானது உம்பல், உவா, கறையடி, கைம்மா, நால்வாய், புகர்முகம், கைம்மலை, புழைகை, பெருநா, பொங்கடி, கரி, வழுவை எனவும் ஆடு அருணம், கொச்சை, துருவை, மேழகம், உதள், துள்ளல், மறி, மை, வெறி, வருடை, ஏடகம் எனவும் மான் இரலை, நவ்வி, மரையான், உழை. கடமா எனவும் முதலை இடங்கர், கராம் எனவும் பாம்பு அகடூரி, கட்செவி, அரவு, பன்னகம், நாகம், மாசுணம், பாந்தள்,  எனவும் குறிக்கப்பட்டன.
 உயிரினங்களின் பெயர்கள், மரபுப் பெயர்கள், இளமைப் பெயர்கள் முதலியன இன்றைய வகைப்பாட்டறிவியலில் பழந்தமிழ் மக்கள் சிறப்புற்றிருந்ததை உணர்த்தும். வகைப்பாட்டறிவியலில் சிறந்திருந்தமையால்தான்  புலி, முயல், பன்றி, நரி, நாய் முதலியவற்றின் இளமைப் பெயர்கள் பறழ், குட்டி எனவும் ஆடு, குதிரை, மான், முதலியவற்றின் இளமைப் பெயர்கள் மறி எனவும் கலை, மான், கழுதை, பசு, எருமை, யானை, ஒட்டகம், கவரி, கராம் ஆகியவற்றின் இளமைப் பெயர்கள் கன்று எனவும் தவழ்வனவற்றின் இளமைப்பெயர்கள் பிள்ளை, பார்ப்பு எனவும் பல்வேறு வகையிலும் குறித்துள்ளனர். இவ்வாறு தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இவை குறிக்கப்பட்டமை தமிழ் அறிவியலின் தொன்மையை உணர்த்தும்.
   விலங்கினங்களுக்கு மட்டுமல்லாமல் அவற்றின் உறுப்புகளுக்கும்  பெயரிட்டுள்ள வகைப்பாடு, புறவியலில் சிறந்துள்ள நம் அறிவியலுக்குச் சான்றாகும். இறகு நுண்மையாக இருந்தால் ‘ஈர்’ என்றும் குட்டையாக இருந்தால் ‘கூழை’ என்றும் நீண்டு இருந்தால் ‘கூரல்’ என்றும் மென்மையாய்த் தொடக்க நிலையில் இருந்தால் ‘பிஞ்சம்’  என்றும் தொகுப்பாய் இருந்தால் ‘தோகை’ என்றும்  பெயரிட்டுள்ளனர்.
 விலங்கினங்களின் பல்வேறு வகைகளை அறிந்து வகைப்படுத்திப் பெயரிட்டமைபோல் புவியியலிலும் வகைகளுக்கேற்ப பெயரிட்டுள்ள அறிவியல் திறம் வியந்து போற்றுதற்குரியது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை வகைப்பாட்டில் சிறந்த திணை யறிவியல் உலகில் பிற யாரும் கண்டறியாததன்றோ. இவற்றுள்ளும் உட்பிரிவுகள் அறிவியலுக்கேற்ற வகையில் அழைக்கப்படுவது அருந்தமிழ்ச் சிறப்பன்றோ.
   ‘மல்’ என்றால் வலிமை எனப்பொருள். வலிமையான கருங்கற்களால் ஆன நிலப்பகுதி மலை எனப்பட்டது. மிக உயர்ந்த மலை ஓங்கல், குறுக்கே நீண்டு இருக்கும் மலை விலங்கல், ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கடுக்காகப் பாறைகள் அமைந்திருக்கும் மலை அடுக்கம், எதிரொலி செய்யும் மலை சிலம்பு, மூங்கிற்காடுகள்  உள்ள மலை வரை, காடுகள் அடர்ந்த மலை இறும்பு, சிறிய மலை குன்று, மண்மிகுந்த மலை பொற்றை  என மலைகளை வகைப்படுத்திய அறிவியல் சிறப்பு, உலகில் இன்று கூட வேறு எங்கும் இல்லை என நாம் பெருமையாகக் கூறலாம்.
  மதுரையிலுள்ள அழகர்மலை சிலம்பு வகையைச் சார்ந்தது. எனவே, இங்கு ஓடும் ஆறு ‘சிலம்பாறு’ எனப்பட்டது. இவ்வறிவியல் உண்மையை உணரா ஆரியர் சிலம்பு என்பததைக் காலில் அணியும் சிலம்பாகக் கருதி ‘நூபுர கங்கை’ என மாற்றிவிட்டனர். பெயரில் என்ன இருக்கிறது என்பவர்கள், இத்தகைய பெயர் மாற்றங்களால், தமிழறிவியல் வளம் புதைந்து போயுள்ளதை உணர வேண்டும்.
  மலை வகைப்பாட்டைப் போன்றே பருத்த உயரமான மரங்கள் அடர்ந்த காடு வல்லை, சிறு மரங்கள் நெருக்கமாக உள்ள காடு இறும்பு, சிறிய அளவிலான இறும்பு குறுங்காடு, சிறு தூறல்கள் அல்லது புதர்கள் பரவியுள்ள  காடு அரில் அல்லது பதுக்கை, மிக முதிர்ந்த முற்றிப் போன மரங்கள் உடைய காடு முதை, மரங்கள் கரிந்து போன காடு பொச்சை அல்லது சுரம், காவலுள்ள காடு அரண், என்ற வகைப்பாட்டு வன அறிவியலிலும் தமிழுலகு சிறந்துள்ளமைக்குச் சான்றன்றோ.
  தமிழிலுள்ள நெய்தல் நிலப் பெயர்கள் நம் கடல்சார் அறிவியலுக்குத் தக்க சான்றாகும். பல்வகைக் கலன்களால் கடல்நீரில் ஆட்சி செய்வதற்கு முன்பு உலகின் தோற்றக் காலத்தில் கடப்பதற்கு அல்லாத நீர் நிலையைக்கடல் என்றனர். கண் பார்வையைக் கடந்து நிற்பதாலும் கடலின் எல்லை பார்ப்பவர் கண்ணுக்குப் புலப்படாததாலும் இப் பெயர் நிலைத்து நின்று விட்டது. ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலையை ஏரி என்றும் குளிப்பதற்குப் பயன்படும் நீர்நிலையைக் குளம் என்றும் பெயரிட்ட நம் முன்னோர், கடலுக்கும் அதன் தன்மைகளுக்கேற்பப் பல்வகைப் பெயர்களை இட்டுள்ளனர். கடல் பரந்து உள்ளமையால், பரவை;  ஆழமாக உள்ளமையால் ஆழி; உப்பு நீர் – உவர் நீர் – உடைமையால் உவரி; மழையை உண்டாக்குவதற்குரிய முகிலைக் கொள்வதற்கு உரிய இடம் என்பதால் கார்கோள்; மழைநீர், ஆற்று நீர், ஊற்று நீர் ஆகிய மூன்றும் இணைந்த நீர்ப்பரப்பு என்பதால் முந்நீர்;  அலைகள் வீசுவதன் மூலம் பேரிரைச்சல் தோன்றுவதால் ஆர்கலி; என்பன போல் அம்பரம், அளக்கர், சலதி, வாரி, பெருநீர், அழுவம், தெண்டிரை முதலான 50 வகைப் பெயரிட்டுள்ளனர். (பிங்கல நிகண்டு பா எண் 584)
 வயலும் வயல் சார்ந்த பகுதியுமான மருதநிலப் பெயர்கள் நில வகைப்பாட்டியலில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பைந்தமிழ் சிறந்திருந்தது என்பதற்குச் சான்றாகும். நிலத் தொகுப்பு வகையாக நெல், கரும்பு முதலிய பயிர்த் தொகுதியைச் ‘செய்’ என்றும் மிளகாய், கத்தரி முதலிய செடித்தொகுதியைத் ‘தோட்டம்’ என்றும் மா, தென்னை முதலிய மரத்தொகுதியைத் ‘தோப்பு’ என்றும் முல்லை, குறிஞ்சியில் உள்ள நிலத் தொகுதியைக் ‘காடு’ என்றும் மரமடர்ந்த இயற்கைத் தோப்பினைச் ‘சோலை’ என்றும் பாதுகாக்கப்படும் சோலையைக் ‘கா’ என்றும் கடற்கரைச் சோலையைக் ‘கானல்’ என்றும் மக்கள் வசிக்காத காட்டை ‘வனம்’ என்றும் புதுக்கொல்லையை ‘இதை’ என்றும் பழங்கொல்லையைச் ‘சுதை’ என்றும் நன்கு பண்படுத்தப்பட்ட நிலத்தை ‘நன்செய்’ என்றும் ஓரளவு பண்படுத்தப்பட்ட நிலத்தைப் ‘புன்செய்’ என்றும் பாழ்நிலத்தைக் ‘கரம்பு’ அல்லது ‘களரி’  என்றும் விளையா நிலத்தைக் களர் அல்லது சவர்  என்றும் அனைத்தும் உண்டாகும் நன்னிலம் உறாவரை  என்றும் முல்லை நிலம்-புறவு;  வான்மழையை எதிர்நோக்கியுள்ள விளைநிலம்-வானாவாரி (மானாவாரி என்பது சிதைந்த வழக்கு); மேட்டு நிலம் – மிசை;   பள்ளமான நிலம்-அவல்; அரசிற்குரிய பண்படுத்தப்பட்ட நிலம்-புறம்போக்கு;  உணவிற்கு விடப்படும் வரிவிதிக்கப் பெறா நிலம்-அடிசிற்புறம்;  பயிர்  செய்யாது புல், பூண்டு முளைத்துக் கிடக்கும் நிலம்-தரிசு;   சிவந்த நிலம்- சிவல்;   களிமண் நிலம்-கரிசல்;  சரள் நிலம்-முரம்பு;     நன்செய் தொடர்ந்து விளையும் நிலம்-வயல்;  போரடிக்கும் களமுள்ள வயல்-கழனி;  பழைமையான வயல்-பழனம்; நீர் நிறைந்த பள்ளமான வயல்- பண்ணை;   சேறு மிகுந்த வயல் – செறு;   என்பன போன்றும் உள்ள சொல்லாட்சி நிலத்திணையியலில் நாம் கொண்டுள்ள சிறப்பை உணர்த்தும்.
    இவ்வாறு துறைதோறும் துறைதோறும் நாம் ஆராய்ந்தால் அருந்தமிழ்ச் சொற்களின் அறிவியல் சிறப்பை நன்கு உணரலாம். இவற்றை யெல்லாம் வெளிக் கொணரவும் பரப்பவும், நாம் நம் மொழியின் சிறப்பை உணர்ந்து இனியேனும் அதனைப் பேணவும் வேண்டும்.
  அருந்தமிழ்ச் சொற்களின் அறிவியல் தன்மைகளை உணரும் நாம், அறிவியலையும் தமிழில் பயின்றால்தானே  தலைநிமிர்ந்து வாழ இயலும்! தலைசிறந்து திகழ இயலும்!
இலக்குவனார் திருவள்ளுவன்
[குறிப்பு;:  பத்தாண்டுகளுக்கு முன்னர் எழுதி தமிழோசை நாளிதழில் வெளிவந்த கட்டுரை. இதன் விரிவைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும்  உரையாற்றியுள்ளேன்.]

Friday, September 22, 2017

தெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்
தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware

2/2

ware என்பது பொருள் அல்லது பண்டம் என்பதைக் குறிக்கும் என்பது உண்மைதான்.
எனவே, ஆட்சியியலில்
  warehouse –  கிடங்கு, பொருளறை, பண்டக மனை என்றும்
 வேளாணியலில் பொருளைத தேக்கி அல்லது சேமித்து வைக்குமிடம் என்னும் பொருளில்  warehouse   –  தேக்ககம், கிட்டங்கி
வங்கியியலில் காப்பகம், பண்டகச்சாலை  என்றும்
பொறியியலிலும் மனையியலிலும்  glassware – கண்ணாடிப் பொருட்கள்
 என்றும் குறிக்கின்றனர்.
மேசையில் வைக்கப்படும் பொருள்களைக் குறிக்கும் table-ware -. மேசைத் தட்டுமுட்டுக் கலம். எனச் சொல்லப்படுகிறது.இதனைச் சுருக்கமாக மேசையணிகள் அல்லது மேசைக்கலன்கள் எனலாம்.
sea-ware  – கடற்பாசி உரம் எனப்பெறுகிறது. இங்கே கடற்பொருள் எனப்பெறுவதில்லை.
ware என்பது  பல இடங்களில்  மண்பாண்டங்களைக் குறிக்கும்.
 எனவே, பொறியியலில்
earthenware       மண்கலம்
 என்றும்
கல்வெட்டியலில்
  brown slipped ware     பழுப்புநிற மட்கலன்
  grey ware        சாம்பல்நிற மட்கலன்
  northern black polished ware              வடக்கத்திய பளபளப்பான மட்கலன்
   red slipped ware         செம்பூச்சு மட்கலன்
  rouletted ware             ரோமானிய பானை வகை
    coarse red ware         பருவட்டான சிவப்பு மட்கலம்
  black and red ware      கறுப்பு சிவப்பு மட்பாண்டம்
எனவும் குறிக்கப்பெறுகின்றன.
ware என்பது விற்பனைப்பொருள் என்றும் செய்கலம் என்றும் சொலலப்படும்.
எனவே மனையியலில்
flatware – தட்டைக்கலன்கள் எனப் பெறுகின்றது.
சுடப்படாத  பச்சை மண்ணால் ஆன மட்கலனை
 greenware –  சுடப்படா மண்பொருட்கள் என்கின்றனர்.
   stoneware –  கற்கலன் என்பன பொருள் என்றும் கலன் என்றும் ware குறிக்கின்றது.
மனையியலில்
 cogware – கரட்டுக் கம்பளித் துணிவகை என்கின்றனர். குறுந்துணி என்றும்கூறலாம். ஆனால் small wares – குறுந்துணி என்பதால், இதனை இவ்வாறு குறிப்பிடுகின்றனர். small ware  – சிறு துணி எனலாம்.
ware- பாத்திரங்கள் என்னும் பொருளில்   மனையியலில்
  service ware –  பரிமாறல் பாத்திரங்கள்
  warewashing –  பாத்திரம் கழுவல்
என்றும் சொல்லப்பெறுகின்றன.
 இவ்வாறு ware என்பது பொருளைக் குறித்தாலும் இடத்திற்கேற்றவாறு என்ன பொருள் என்பதைக்  குறிக்கும் வகையிலும் குறிக்கப்பெறுகின்றது.
  இவற்றின் அடிப்படையில் நாம் ஆர்டுவேர்/hardward  குறித்துக்காணவேண்டும்.
  Hardwares . வன்மாழைகள், வன்மாழையகம், வன்சரக்கு, இரும்புக்கடை என்பன இரும்புப்பொருள் வழங்குமிடங்களில் மட்டுமே பொருந்தும். கணிப்பொறியியலில் பொருந்தாது
தகவல்நுட்பவியலில்
 hardwired – நிலையிணைப்பு
  hard clip area – தாளின் வரைபரப்பு
  hard configuration – நிலை உள்ளமைவு
என்பவற்றின்மூலம்   hard(ware) என்பது வன்(பொருள்) என்று கையாளப் பெறவில்லை என்பதையும் காணலாம்.
hard copy        என்றால் கடினப்படி என்பது தவறல்லவா? தாள்படி அல்லது அச்சுப்படி என்றுதானே பொருள்.
hard error என்றால் கருவிப்பிழை என்றும் hard failure என்றால்  கருவிப்பழுது என்றும் தகவல்நுட்பவியலில் குறிக்கின்றனர். இங்கே கடினப்பிழை என்றோ கடினப்பழுது என்றோ குறிக்கவில்லை. இதுதான் சரியானது. hard என்பது கருவியையும் குறிக்கிறது என்பதற்கு இதுவே சான்றாகும்.
hardwareஎன்பதற்கு ஆங்கில அகராதிகளில் பின்வரும் பொருள்களும் குறிக்கப்பெற்றுள்ளன.
1.metalware as tools, locks, hinges, or cutlery.
  1. the mechanical equipment
  2. Fixtures, equipment, tools and devices
இவையெல்லாம் கருவி என்னும் பொருள் சார்ந்தவையே.

Computer hardware  என்னும்பொழுதது இரும்புப்பொருள்கள் அல்லது வன்மையானபொருள்கள் என்று சொல்லாமல், கணிணியின் உறுப்புப்பொருள்களாகத்தான் குறிக்கப்பெறுகின்றன. (Computer hardware is the collection of physical components that constitute a computer system. )
இயற்பியலில் hardware – கருவியம் என்பதை  ஏற்றுப் பயன்படுத்துகின்றனர். தமிழ்ப்பல்கலைக்கழக அகராதியில் இவ்வாறே இடம் பெற்றுள்ளது.
  மேலே விரிவாகக் குறிப்பிட்டதன் காரணம் சொற்பொருள் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் தவறான சொல்லைப் பற்றிக்கொண்டு வீண்பிடிவாதம் பிடிக்கின்றனர் சிலர். அவர்கள், புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
  தகவல்நுட்ப வல்லுநர்கள், தங்களின் தமிழார்வத்தைத் தமிழ்ப்புலமையின் அடையாளமாகக் கருதிக்கொண்டு, பொருத்தமான தமிழ்ச்சொற்களைப் புறக்கணிக்கும் போக்கு நிற்க வேண்டும். பொருத்தமில்லாத நேர் பொருள்சொற்களுக்கு முற்றுப்புள்ளி இட வேண்டும்.. எனவேதான் விரிவாக விளக்க வேண்டி வந்தது.
hard ware என்னும் பொழுது கணிணியியலில்  – கருவிக்கலனைத்தான் குறிக்கின்றது எனப் புரிந்து கொள்ளலாம். கலன் என்றால் பாத்திரம் எனப் புரிந்து  கொள்ள நேரிடலாம். எனவே நாம் ஆர்டுவேர்/ hard ware- கருவியம் என்றால் பொருத்தமாகவும்அழகாகவும் இருக்கும்.
கருவியம் தொடர்பான சில சொற்களைப் பார்ப்போம்.
 கருவிய  அமைவொழுங்கு(வடிவமைப்பு)  hardware configuration
 கருவிய நுட்பவியல் hardware technology
 கருவிய மீட்டமைப்பு  hardware reset
 கருவிய முரண்பாடு hardware conflict
 கருவிய வல்லுநர் hardware expert
 கருவிய வளங்கள் hardware resources
 கருவிய விசை  hardware key
 கருவிய விவரிப்பு விளம்பி(மொழி) hardware description language
 கருவியக்கடை hardware shop
  கருவியக்கல்வி hardware  education
 கருவியக்குவிப்பு hardware dump
 கருவியச் சார்வு hardware dependent
 கருவியச்சான்றிதழ் certificate in hardware
 கருவியச்சிறப்பறிவாளர்  hardware specialist
 கருவியப் பட்டயம் diploma in hardware
 கருவியப் பாய்வுக் கட்டுப்பாடு  hardware flow control
கருவியப் பொறியாளர், கருவியப்பொறிஞர் hardware engineer
 கருவியப்படிப்பித்தல் hardware teaching
   கருவியப்பாடமுறைமை hardware course
 புதிய கருவியைத்தை இணை  add new hardware
   வரைகலை உள்ளீட்டுக் கருவியம்  graphic input hardware
  வரைகலை வெளியீட்டுக் கருவியம்  graphic output hardware
 hardware-வன்பொருள், என்று சொல்லிக்கொண்டிராமல் கருவியம் என்று நாம் பயன்படுத்தினால் எளிதாகவும் புரிந்து கொள்ள வாய்ப்பாகவும் இருக்கும்.
  கணிணியியலில் வன்பொருள் என்பதைப் புறக்கணிப்போம்! கருவியத்தைப்  பயன்படுத்துவோம்!
இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசிரியர், அகரமுதல – பன்னாட்டு மின்னிதழ்
தமிழ் இணைய மாநாட்டுக் கட்டுரை, 2017, மலேசியா

Followers

Blog Archive