Thursday, June 22, 2017

ஆட்சியை மாற்ற வேண்டியது மக்களே! ஆளுநர் அல்லர்! – இலக்குவனார் திருவள்ளுவன்


அகரமுதல 191, ஆனி 04, 2048 / சூன் 18, 2017

ஆட்சியை மாற்ற வேண்டியது மக்களே! ஆளுநர் அல்லர்!

  இந்திய நாடு முழுவதுமே மத்திய ஆளுங்கட்சிக்கு ஒத்துவராத மாநில ஆட்சிகள் பலமுறை கவிழ்க்கப்பட்டுக் கலைக்கப்பட்டுள்ளன. முதன் முதலில் (சூலை 31, 1959), சவகர்லால்நேருவால், தேர்ந்தெடுக்கப்பட்டப் பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சி கேராளவில் கலைக்கப்பட்டுக் குடியரசுத்தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் இதுவரை 125இற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மாநிலஅரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. சத்திசுகாரையும்(Chhattisgarh) புதியதாகத் தோன்றிய தெலுங்கானாவையும் தவிர எல்லா மாநிலங்களுமே குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உட்பட்டுள்ளன. ஏறத்தாழ 85 முறை  பேராயக்(காங்.)கட்சிதான் இத்திருவிளையாடலைச் செய்துள்ளது. பா.ச.க.வின் கலைப்புப்பணி 7 முறைதான் நடந்துள்ளது. இதனால், தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுமே கலைக்கப்பட்டுள்ளன.
    தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக்  குறுக்கு வழியில் கலைப்பதற்குக் கலைஞர்  கருணாநிதி பெரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று உள்ளக்கிடக்கை இருந்தபொழுதுகூட,  அரசமைப்புச்சட்டப்பிரிவு 356 ஐப் பயன்படுத்தி அரசைக் கலைப்பதற்கு எதிராகவே  பேசி வந்துள்ளார். ஆனால், இப்பொழுது அவர் திருமகனான மு.க.தாலின்,  குடியரசுத்தலைவர் ஆட்சியை அரங்கேற்றத் துடித்துக் கொண்டுள்ளார்.  செயலலிதா மறைவால் அதிமுக பிளவுறும்; ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற கனவு தகர்ந்ததால் வந்த செயற்பாடே இது.
 சோ.இரா.பொம்மை(S.R.Bommai)   வழக்கில் உச்ச நீதிமன்றம், குடியரசுத்தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதற்குச் சில நடைமுறைகளை வரையறுத்து நீதிமன்றத்தின் பார்வைக்கு இதனைக் கொணர்ந்தது. இருப்பினும் அதன்பின்னர், ஆட்சிக்கலைப்புகள் நிகழத்தான் செய்துள்ளன. ஆனால், இதுவரை வந்த எந்த ஆளுநர் ஆட்சியும் நேர்மையான ஆட்சியாக இருந்ததில்லை. நேற்றுவரை  இன்றைய அரசியல்வாதிக்குரிய இலக்கணங்களுடன்  திரிந்து, மக்கள் செல்வாக்கு இழந்த பின்னர் ஆளுநராக அமர்த்தப்பட்டவர்கள், எங்ஙனம் நேரான பாதையில் செல்வர்? இருப்பினும்  குடியரசுத் தலைவர் சார்பிலான ஆளுநர் ஆட்சி நேர்மையான ஆட்சி என்பதுபோல் சிலர் அதனை வரவேற்கின்றனர்.
  இத்தகைய திணிப்பு ஆட்சி என்பது மத்திய ஆளுங்கட்சியின் ஆட்சியாகத்தான் செயல்படுகின்றதே தவிர மக்கள் நலன் நாடும் ஆட்சியாகச் செயல்படுவதில்லை. எனவே, இத்தகைய ஆட்சியைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தினால், பா.ச.க.வின் மறைமுக ஆட்சிதான் நிலவும். இதனால் தி.மு.க.விற்கு என்ன ஆதாயம்? அடுத்துத் தேர்தல் வந்தால் தான் வரலாம் எனத் தி.மு.க. கனவு  காணலாம். ஆனால், இதுவரை ஆளுங்கட்சியான அதிமுகவைப் புரட்டி எடுத்துக்கொண்டிருக்கும் பா.ச.க. அடுத்துத்தன் பாய்ச்சலைத் தி.மு.க.மீதுதானே காட்டும். தமிழ்நாட்டின் இரு முதன்மைக் கட்சிகளையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தன் பேரவலிமையைக் கூட்டிச்சட்டமன்றத்திலும் ஆட்சி்யிலும்  இடம் பிடிக்கும் முயற்சியில்தானே அது ஈடுபடும்! இதனை  உணராமல் தாலின் ஆட்சிக் கலைப்பிற்குப் பாடுபடுவது சரியல்ல.
  அதிமுகவில் பன்னீர் பிரிந்ததும் எடப்பாடி பழனிச்சாமி முதலானோர் சசிகலா-தினகரனைப் புறக்கணிப்பதும் பா.ச.கவின் சித்து விளையாட்டுகளால்தான் என்பதை அனைவரும் அறிவர். இருப்பினும் யாரும் தி.மு.க.பக்கம் சாயவில்லையே! இயல்பாகத் தேர்தல் நடந்தால் தி.மு.க.விற்குக் கிடைக்கும் வெற்றி வாய்ப்பு  இதனால் பாதிக்கப்படுமே தவிரக், குடியரசுத்தலைவர் சார்பிலான ஆளுநர் ஆட்சியால் தி.மு.க.விற்கு எப்பயனும் விளையாது. நாடடிற்கும் கட்சிக்கும் பயன்தராத ஆட்சி வருவதற்குத் தி.மு.க. ஏன் பாடுபடவேண்டும்?
  ஆளுங்கட்சி, பெரும்பான்மை இழந்த சூழலில் எக்கட்சியும் ஆட்சியமைக்க இயலாச் சூழலில், சட்டம் ஒழுங்கு  சிதைந்த சூழலில், நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறு நேரும் சூழலில்.
என ஆட்சியைக் கலைப்பதற்கான சூழல்களை அரசமைப்புச்சட்டம் வரையறுத்துள்ளது. இவற்றுள் எந்த ஒன்றும் தமிழ்நாட்டில் இப்பொழுது பொருந்தவில்லை. கூவத்தூர் பூச்சாண்டியைக் காட்டுவதும் பொருந்தாது. எல்லா மாநிலங்களிலும் இது போன்ற நேர்வுகள் நிகழ்ந்துள்ளன. தி.மு.க.வும்  இந்தப்  பாதையில் வந்ததுதான்; இப்பொழுதும் இந்தப்பாதையில் நடந்து இயலாமல் திரும்பியதுதான்; இனியும் வாய்ப்பிருந்தால் இந்தப் பாதையில் நடக்கப்போவதுதான்.
  ஆட்சிக்கலைப்பிற்கு ஒரு காரணமாக மாநில அரசு  சமயச் சார்பின்மைக்கு எதிராகச் செயல்படுவதும் குறிக்கப்பெற்றுள்ளது. அப்படியானால் பா.ச.க. அரசுகளைத்தான் கலைக்க வேண்டும். ஆனால், அதற்கு வழிகாட்டும்  சமயவெறியும் மொழிவெறியும் பிடித்த பா.ச.க. அரசிற்கு என்ன தகுதி யிருக்கிறது?
  மக்கள் பரத்தை ஒருத்தி மீது கல்லெறிந்த பொழுது, இயேசுநாதர், “உங்களில் யார் ஒரு குற்றமும் செய்யவில்லையோ அவர்கள் இவள் மேல் கல்லை விசி எறியுங்கள்” என்றார் அல்லவா? அப்படிப்பார்த்தால் யாரொருவருக்கும் ஊழலைப்பற்றிச் சொல்லத் தகுதி இல்லை. நாம் நேர்மையான ஆட்சிதான் வரவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், அதற்கான சூழலை உருவாக்கவில்லை. எனவே,  அந்த நல்ல காலம் எப்பொழுது கனியும் என்று தெரியவில்லை. ஒரே வகையான குற்றச்செயலை அனைவரும் செய்யும் பொழுது வலியோருக்கு ஒரு தீர்ப்பு, எளியோருக்கு ஒரு தீர்ப்பு என்பது முறையில்லை யல்லவா?
  ஆகவே, தேர்தல் ஊழலைக் காரணம் காட்டி ஆட்சியைக் கலைக்கச்சொல்வது அதே குற்றத்தில் ஊறியவர்கள் சொல்வது, அதே குற்றத்தில் திளைப்பவர்கள் நடைமுறைப்படுத்துவது என்பது எப்படிச் சரியாகும்?
  மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி மக்களால்தான் அகற்றப்பட வேண்டுமே தவிர, அதிகாரத்தால் அல்ல! என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
  தவறான ஆட்சியை அகற்றும் அதி்காரம் கொண்டவர்கள் வாக்குரிமை கொண்ட மக்கள் மட்டுமே!! ஆளுநர் அல்லர்! மத்திய ஆட்சியனரும் அல்லர்!
விளைவை எண்ணாமல் ஆட்சியைக் கவர எண்ணுவது அழிவைத்தரும். அதனை விரும்பாமல் வாழும்  பெருமிதம்   (ஆட்சியாகிய) வெற்றி‌யைத் தரும்.
    இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
    வேண்டாமை என்னுஞ் செருக்கு (திருவள்ளுவர், திருக்குறள் 180)
–   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை  : அகரமுதல 191, ஆனி 04, 2048 / சூன் 18, 2017

Thursday, June 15, 2017

தேர்தல் ஆணையமே! முடிவை மாற்றிக்கொள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் ஆணையமே! முடிவை மாற்றிக்கொள்!

  பா.ச.க.வின் கைப்பாவையாக இந்தியத் தேர்தல்ஆணையம் செயல்படுவது அனைவரும் அறிந்ததே! இதன் காரணமாகத் தமிழ்நாட்டின்  ஆட்சியில் தடுமாற்றமும் தமிழக அரசியலில் குழப்பமும் ஏற்பட்டுள்ளன. கட்சிகளில் பிளவு என்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால், கட்சியின் தலைமையை முடிவு செய்பவர்களாக மக்கள்தாம் இருந்துள்ளார்கள்! தேர்தல் ஆணையம் அல்ல! பேராய(காங்கிரசு)க் கட்சியில் பிளவு பட்ட பொழுது இந்திரா காந்தியின் தலைமைக்கு  ஏற்பளித்தவர்கள் மக்கள்தாம், தேர்தல் ஆணையம் அல்ல!
  தி.மு.க.வில் பிளவு வந்தபொழுது அதிமுகவிற்கு ஏற்பளித்தவர்களும் மக்கள்தாம்! தேர்தல் ஆணையம் அல்ல! தி.மு.க.வில் வைகோ நீக்கத்தால் கட்சி உடைந்த பொழுது தி.மு.க.வின்பக்கம் ஏற்பை வழங்கியவர்கள் மக்கள்தானே தவிரத் தேர்தல் ஆணையமல்ல. பிற மாநிலக் கட்சிப்பிளவுகளுக்கும் இது பொருந்தும்.
  தேர்தல் ஆணையத்தின் அதிகார  வரம்பிற்குள் வரக்கூடாத இது வந்து விட்டது. அப்பொழுதும் உ.பி.யில் தந்தை மகன் பிரிந்து பட்டு நின்ற பொழுது தேர்தல் ஆணையம்,  மக்கள்ஆதரவு யார் பக்கம் என ஊகத்தின் பெயரிலோ ஊடகத்தின் இட்டுக்கட்டிலோ சிக்காமல் பொறுப்பாளர்கள் யார் பக்கம் நின்றார்களோ அவர்பக்கம்தான் தீர்ப்பு வழங்கியது.
  தமிழ்நாட்டில் மாறுபட்டநி்லைமைக்குக் காரணம்,  தேர்தல் ஆணையம் பா.ச.க.வின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததுதான் என்பது வெள்ளிடை மலை. இது குறித்த செய்திகள்  வந்த பின்னரும் தேர்தல் ஆணையர்கள் வெட்கப்படவில்லை!
  தேர்தல் ஆணையம் குறுக்கிட்டிருக்காவிட்டால் இராதாகிருட்டிணன் நகர் இடைத் தேர்தல் நடந்திருக்கும். இரட்டை இலையைப்பறித்தும் தொப்பி செல்வாக்கு பெற்றிருக்கும்! தினகரன் வெற்றி பெற்றிருப்பார்!  ஆனால், பா.ச.க. கலங்கியிருக்கும்.  இதனைத் தாங்கிக் கொள்ள அடிமைகளுக்கு மனமிருந்திருக்காதே!  ஆனால், தமிழக அரசு தடுமாற்றத்தில் சிக்கியிராது.
  தேர்தல் ஆணையம் கடமையைச் சரியாகச் செய்து அத்து மீறலை  அரங்கேற்றியிருக்காவிட்டால், பொதுத்தேர்தலில் அ.தி.மு.. வெற்றி வாய்ப்பை இழந்திருக்க வாய்ப்புண்டு! ஆனால் அப்பொழுது வெற்றிக்கனியைத்தி.மு.க.தானே சுவைத்திருக்கும்! பா.ச.க அல்லவே!
  ஒரு வேளை, ஈழத்தமிழர் படுகொலைகளுக்குக் காரணமான தி.மு.க.-பேராய(காங்.)கூட்டணி வெறுப்பு; செயலலிதாவின் வழி எனச் சொல்லிக் கொண்டாலும் அவருக்கு மாறாகக் காட்சிக்கு எளிமை, இதனால், கோப்புகளில் தேக்கமின்மை, திட்டங்களில் சுறுசுறுப்பு போன்றவற்றால் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைத் தொடர்ந்திருக்கும். அப்பொழுதும் பா.ச.க.விற்குப் பயனில்லையே!
 தமிழ்நாட்டு முதன்மைக் கட்சியினரை  மிரட்டியும் ஒடுக்கியும்  மறைமுக ஆட்சி புரியவும் முறையற்ற பேரத்தால் கணிசமான தொகுதிகளைப் பெற்றுச் சட்ட மன்றத்தில் நுழையவும் பா.ச.க. கச்சிதமாகத் திட்டமிட்டுச் செயல்படுகிறது. அதற்கு மத்திய அரசின் துறைகளைப் பயன்படுத்துகிறது. தேர்தல் ஆணையமும் அதற்குத் துணைபுரிகிறது.
  பா.ச.க.வின் குறுக்கு முயற்சிகள் அதனைச் சரிவுப்பாதையில்தான் தள்ளும். அதன்  அசைவிற்கெல்லாம் தேர்தல் ஆணையம் ஆடுவது சரியல்ல.
    ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
    ஊக்கார் அறிவுடை யார். (திருவள்ளுவர், திருக்குறள் 463)
என்பது உலகப் பொது நெறி!
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான், போவான், ஐயோவென்று போவான்!
 என்கிறார் புரட்சிப்புலவர் பாரதியார்.
அது மட்டுமல்ல! அதிகாரத்தைப் பயன்படுத்தி வஞ்சகம் புரிபவர்கள்
நலிந்து போவார்கள்! நாசமாய்ப் போவார்கள்!
நாதியற்றுப் போவார்கள்! நரகத்திற்குப் போவார்கள்!
என்பது  அறவோர் கருத்து.
இவற்றைத் தேர்தல்  ஆணையத்திற்கு யாரும் எடுத்துச் சொன்னால் நன்று.
  தேர்தல் ஆணையம் தான் செய்த தவற்றைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இப்பொழுது அ.தி.மு.க.வின் பெரும்பான்மை அணியினரும் மீச்சிறுபான்மை எண்ணிக்கையினரும் ஆவணப்பத்திரங்களை அளிப்பதாக நூறாயிரக் கணக்கில் பத்திரங்களை அளித்து வருகிறார்கள். பொதுவாகவே தேர்தல் வழக்கு என்று வந்தாலே மறு தேர்தல் வரையும் தீர்ப்பு வராமையே நம் நாட்டு வழக்கம். ஆனால், இந் நேர்வில் வாணாள் முடிவதற்குள் தீர்ப்பு சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. எனவே, ஒவ்வோர் ஆவணத்தையும் சரியார்ப்பதற்குப் போதிய வாய்ப்பு இல்லை என்பதை ஒப்புக்கொண்டு இப்போதைய நிலையே தொடரட்டும்! மக்கள் தேர்தல் மூலம்உரிய நடவடிக்கை எடுக்கட்டும் என்று அறிவித்தால் போதும்.
 ஆவணங்களைச் சரிபார்க்கவும், தொடர்பாக இனி வரும் முறையீடுகளை உசாவவும் இப்பணிகளை மட்டுமே பார்க்கத்தான் தேர்தல் ஆணையத்திற்கு நேரமிருக்குமே  தவிரப் பிற வேலைகளைப் பார்க்க இயலாது எனக் கூறித் தேர்தல் ஆணையம் ஒதுங்கிக் கொள்வது அதற்கும் நல்லது! நாட்டிற்கும் நல்லது! தன்னைத் திருத்திக் கொள்ள நல்வாய்ப்பாகக் கருதித் தேர்தல் ஆணையம், மக்களாட்சியின் மாண்பைக் காக்கட்டும்!
இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, June 11, 2017

மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்!

 செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று
அல்லல் நீத்த உவகை நான்கே
(தொல்காப்பியர்,  தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 11)
எனத் தொல்காப்பியர், துன்பம் போக்கும் உவகைகளில் ஒன்றாக விளையாட்டைக் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது நம் நாட்டில் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தாலும் வல்லவர்களை உருவாக்கும் வண்ணம் போதிய கருத்து செலுத்துவதில்லை. புதிய விளையாட்டுகளில் கருத்து செலுத்தும் நாம் மனத்திற்கும் உடலுக்கும் வலுவைச்சேர்க்கும் பரம்பரை விளையாட்டுகளைப் புறக்கணிக்கின்றோம். அவ்வாறில்லாமல் மரபு விளையாட்டுகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும்.
  பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியது. இவற்றுள் ஒன்றாகப் பள்ளிகளில் மரபு விளையாட்டுகளைச் சேர்ப்பதும் ஒன்றாக இருக்க வேண்டும். பாடத்திட்டத்தில் மரபு விளையாட்டுகள் பெயர்களையும் விளையாடும் முறைகளையும்  வகுப்பிற்கேற்ப சேர்த்துக் கற்பிக்க வேண்டும்.
  கல்வி வாழ்க்கை தொடங்கும் பொழுதிருந்தே விளையாட்டுகளை ஆடும் வகையில் விளையாட்டுப் பாடங்கள் இருத்தல் வேண்டும்.
சிறுவர், சிறுமி விளையாட்டுகள்,
மகளிர் விளையாட்டுகள்
ஆடுவர் விளையாட்டுகள்
இரு பாலர் விளையாட்டுகள்
முதியோர் விளையாட்டுகள்
நீர் விளையாட்டுகள்
மனையக வியைாட்டுகள்
வீர விளையாட்டுகள்
ஆடற்கலை சார்ந்த விளையாட்டுகள்
எனப் பல வகைகளாகப் பிரிக்கலாம்.
  பழந்தமிழர் விளையாட்டுகள் என்றால் எப்பொழுதோ விளையாடிய விளையாட்டு என்று எண்ண வேண்டாம்.  பழந்தமிழர் விளையாட்டுகள் என்றாலும் கடந்த நூற்றாண்டு தொடக்கத்திலும் விளையாடப்பட்ட விளையாட்டுகள் இவை.  செக்கிழுத்த செம்மல் தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார் அவர்கள், தாம் ஆடிய விளையாட்டுகளாகப் பல விளையாட்டுகளைக் குறிப்பிட்டிருப்பார். அவ்வாறு கடந்த நூற்றாண்டில் பள்ளியில் சிறாருக்கேற்ற மரபார்ந்த விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்பட்டன.
  காலங்காலமாக நாம்ஆடிவந்த விளையாட்டுகளில்  சிலவற்றைப் பார்க்கலாம்.
  இவை மட்டுமல்ல, வீர விளையாட்டுகள் முதலான தலைப்புகளின் கீழ் நாம் பார்த்தால்  மேலும் நூற்றுக்கணக்கான விளையாட்டுகளை அறிய இயலும்.
  இவற்றுள் இளஞ்சிறார் விளையாட்டுகளைத் தொடக்கத்தில் கற்றுத்தர வேண்டும். உச்சரிப்பு விளையாட்டு, வினா விடை விளையாட்டு முதலான மொழி சார்விளையாட்டுகள், மாணாக்கர்களின் அறிவுத்திறனையும் நிறைவாற்றலையும் வளர்ப்பன. அவற்றைத் தொடக்கப்பள்ளியிலேயே கற்றுத் தர வேண்டும். மாணாக்கர்களின் அகவைக்கேற்ற விளையாட்டுகளைப் பகுத்து விளையாட்டுப் பயிற்சி அளிக்கப் பள்ளிக்கல்வித்துறை ஆவன செய்ய வேண்டும்.
  விளையாட்டு என்பது  உடற்பயிற்சிக்கானதும் பொழுதுபோக்கிற்கானது மட்டுமன்று. வாணாள் முழுவதும் சிறப்பு  தரும் கல்வியுமாகும்.
  அக்கல்வியைத் தரும் தமிழக அரசு, மரபு விளையாட்டுகளுக்கு முதன்மை அளிக்க வேண்டுகிறோம்
    ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும் ஏமாப் புடைத்து. (திருவள்ளுவர், திருக்குறள் 396)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 189, வைகாசி 28, 2048 / சூன் 11, 2017


Followers

Blog Archive