Monday, November 26, 2018

தமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் சூசையப்பர் கல்லூரி-இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல

தமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் நோக்கில்

சூசையப்பர்  கல்லூரி

திருச்சிராப்பள்ளியில் உள்ள  தூய சூசையப்பர் கல்லூரி, வரும் திசம்பர் 6, 7 நாள்களில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்துவதாக அறிவித்திருந்தது.
கருத்தரங்கம் நடத்துவது இதழியல் துறை. தமிழ் முதல் இதழான சுதேசமித்திரன் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது 1882இல். இதழ்களில் இடம் பெறும் தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்தினால் தமிழின் இதழ்கள் அறிமுகத்திற்கு – 1882 இற்கு – முந்தைய இலக்கியங்கள் பொருண்மையில் அடங்கா.
 ‘பெண்கள் குறித்த நிறை குறைகள்’ எனப் பொதுவான தலைப்புகளாக இருப்பின் நடுநிலை ஆய்வாகக் கருதலாம். ஆனால், தலைப்புகள் யாவும் வலிந்து குறைகாணும் நோக்கிலேயே உள்ளன. எனவே, தமிழ் இலக்கியங்களையும் முந்தைத் தமிழர்களையும் பழிப்பதற்காக வேண்டுமென்றே கருத்தரங்கத் தலைப்புகள் தரப்பட்டுள்ளன எனப் பிறர் கருதுவதில் தவறில்லை.
கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுக்கு எடுத்துக்காட்டாக முதல் தலைப்பை எடுத்துக் கொள்ளலாம்.
‘தொல்காப்பியம் வரையறுக்கும் பெண்மீதான கட்டுப்பாடுகள்’ என்பதே அந்தத் தலைப்பு. தொல்காப்பியர் உணர்த்தும் பெண்மையின் சிறப்பு குறித்து ஆராய வேண்டியவர்களைத் தவறான பாதையில் திணிக்க விரும்புகின்றது இக்கல்லூரி.
இது முதலான 19 தலைப்புகள் வேண்டுமென்றே தமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் நோக்கில்தான் அமைந்துள்ளனஇதழியல் துறைக்கும் இந்த இலக்கியங்களுக்கும் என்ன தொடர்பு?
அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப.
என்று தொல்காப்பியர் களவியலில் கூறுவதைச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டு பெண்களுக்கு எதிரான கருத்தாகக் கூறுவர். சிலர் காதல் சுவைக்காக இவை தேவை எனக் கூறப்படுவதாகவும் சொல்லுவர்.
செறிவும் நிறைவும் செம்மையுஞ் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பா லான.
எனப்பெண்ணின் பெருமையைத் தொல்காப்பியர் கூறுகிறார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களைப் பெருமையாகக் கருதும் தமிழர் பண்புகளை ஆராயாமல்  எதிரான கருத்துகளைக் கற்பிப்பது தவறல்லவா?
செறிவு என்பது செறிந்த அறிவையும் நிறைவு என்பது நிறைவான பண்பையும் செம்மை என்பது செம்மையான ஒழுக்கத்தையும் குறிக்கும். செப்பு என்பதைச் சொல்லுதல் எனப் பிறர் குறிப்பிடப் பேரா.சி.இலக்குவனார் ‘கூறத் தகுவனவற்றைக் கூறல்’ என்று விளக்குகிறார். ஆகப் பெண்கள் தகாதவற்றைச் சொல்லார் எனப் பெருமையாகத்தான் தொல்காப்பியர் கூறுகிறார்.
பிற்காலத்தவர் பெண்களை அறிவற்றவர்களாகக் கருதியதும் உண்டு. பெண்கள் அறிவும் அரிதில் அமையும் -உயர்வு என்றும் பெருமை என்றும் சொல்லப்படும் – அருமை நலனும் உடையவர்கள் என்றும் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
இவ்வாறு பெண்களைச் சிறப்பிக்கும் தொல்காப்பியத்தை இழிவு படுத்தும் நோக்கில் கட்டுரை எழுதியவர்கள் ஆசிரியர்களாக இருப்பது தமிழுக்குத் தீதல்லவா?
‘சங்க அக இலக்கியங்கள் சித்திரிக்கும் குடும்ப வன்முறைகள்’ என்று ஒரு தலைப்பு. மிகச்சிறந்த இல்லறத்தை வாழ்வியலறத்தைச் சொல்லும் சங்க இலக்கியங்களைத் தவறான கண்ணோட்டத்தில் திரித்துக் கூறவே இத்தலைப்பு.
கதைச்சுவைக்காகக் கூறப்படும் பரத்தையர் பழக்கத்தைதச் ‘சங்க இலக்கியம் சித்திரிக்கும் பரத்தையர் ஒழுக்கம்’ எனக் காட்ட விரும்புகிறது இக்கல்லூரி. திரைப்படங்களில் தலைவன் எதிரியின் பெண்ணையே பெரும்பாலும் காதலிப்பான். இது கதைச்சுவைக்காகவும் பாத்திர எண்ணிக்கை குறைப்பிற்காகவும் கூறப்படுவது. அப்படி என்றால் எதிரியின் பெண்ணைத்தான் காதலிக்க வேண்டும் என்று மரபு இருப்பதாகக் கூற முடியுமா?
சிலப்பதிகாரத்தில் கோவலன் கலையார்வத்தாலும் சந்தர்ப்பச் சூழலாலும் மாதவியிடம் சென்றுள்ளான். எனினும் அதனை யாரும் பாராட்டவில்லை. கண்ணகி கோவலனிடம் “போற்றா ஒழுக்கம் புரிந்தீர்” என்கிறார். அப்படியானால் கணிகையிடம் அவன் சென்றதை மன்பதை ஏற்கவில்லை, போற்றவில்லை என்றுதானே பொருள்.
கோவலன், கண்ணகி பெற்றோர், பிறர் என யாரும் ஒருவருக்கு மேற்பட்ட துணையை நாடியதாக – கூடா ஒழுக்கத்தில் வாழ்க்கை இணையைத் தேடியதாகக் – குறிப்பு இல்லை. அவ்வாறிருக்க ஒரு செய்தியை ஒட்டு மொத்த பண்பாடாக இழித்துக் கூறுவது தவறலலவா?
‘சிலப்பதிகாரம் காட்டும் உரைசால் பத்தினி – மறு வாசிப்பு’ என்னும் தலைப்பே கண்ணகியை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கில் குறிக்கப்பட்டதாகத்தான் நன்கு தெரிகிறது.
எனவேதான் இக்கருத்தரங்கத்திற்குத் தமிழன்பர்களும் தமிழ்ப்பண்பாட்டை உணர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்த்தினசரி மின்னிதழ் < https://dhinasari.com/featured/62188-mass-campaign-against-trichy-saint-joseph-college-atrocitiies-degrading-tamil-literatures.html > ,  தமிழ் இலக்கியப் படுகொலை செய்யும் இக்கல்லூரி நிருவாகத்தினர் மீது ஆளுநர் நடவடிக்கை  தேவை எனக் குறிப்பிட்டுள்ளது.
பாசகவின் எச்சு.இராசா தன் சுட்டுரைப் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொய்யைத் திரித்து பரபரப்பு ஏற்படுத்த விரும்புபவர் எதிர்ப்பதால்தான் சிலர் சமய நோக்கில் தாக்குதல்  தொடுப்பதாகத் தவறாக எண்ணுகின்றனர். ஆனால், மதக்கலவரங்களை விரும்புவர்களுக்கு இக்கருத்தரங்கம் வாய்ப்பாக அமைகிறது என்பதே உண்மை. இந்து மக்கள் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சூசையப்பர் கல்லூரியின் நோக்கம் ஆராய்ச்சிதான் என்றால் இந்துமக்கள் கட்சி குறிப்பிட்டுள்ள தலைப்புகளில் ஆய்வரங்கம் நடத்த முன்வருவார்களா? மாட்டார்கள் அல்லவா?
சூசையப்பர் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரிடம் கருத்தரங்கு குறித்துக் கேட்டேன். இதுவரை 96 ஆய்வுக்கட்டுரைகள் வந்துள்ளன என்றும் தொல்காப்பியம் குறித்து ஒரு கட்டுரை வந்துள்ளதாகவும் அதுவும் சிற்பபைக் கூறுவதாகவும் பிற கட்டுரைகளும் தமிழின் சிறப்பை உணர்த்துவதாகவும் கூறினார். கட்டுரைகள அனுப்பி வைக்குமாறு வேண்டியதற்கு அவற்றைத் தொகுத்ததும் அனுப்பி வைப்பதாகக் கூறினார். ஆக கருத்தரங்கத்தாரின் தவறான முயற்சிக்கு ஆய்வாளர்கள் பலியாகவில்லை எனத் தெரிகிறது.
தமிழ் ஆட்சிமொழி-பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன்,“பெண்களை மகிமைப்படுத்தும் எண்ணற்ற இலக்கியப் படைப்புகள் தமிழில் நிறைந்து நிற்கையில் தமிழ்ப்பண்பாடு பெண்களைத் தாழ்த்தி வைத்தது என்ற நஞ்சுக்கருத்தினைப் பதிய விடக் கூடாது.” என்றும் “இத்தகைய இழிவான நிகழ்வுகள் நடைபெறுவதை அரசு அனுமதிக்காது” என்றும் தனது சுட்டுரைகளில் பதிவிட்டிருக்கிறார்.
பொதுவாகக் கருத்துரிமைக்கு மதிப்பளிப்பவர்கள்தாம் இப்பொழுது இக்கருத்தரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மார்க்சியத் திறனாய்வாளரான பேரா.மறைமலை இலக்குவனார், மிகவும் கேவலமான நிலைக்குப் பெண், தமிழிலக்கியங்களில் இழிவுபடுத்தப்பட்டுள்ளதைப் போல் சித்தரிக்கும் தூய சூசையப்பர் கல்லூரியின் “தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண்வன்கொடுமைகள்” என்னும் தலைப்பிலான கருத்தரங்கம் தமிழுக்குப் பொருந்தாதது; கல்விக்குப் பெருமையளிக்காது. இதனை அறிவுக்குறும்பர்களின் அற்பச்செயல் என வன்மையாகக் கண்டிக்கிறேன்” என முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இப்பதிவின் குறிப்புரைகளில் சிலரும் வெவ்வேறு தளங்களில் பலரும் எதிர்ப்பான கருத்துக்ள தெரிவித்துள்ளனர்.
இக்கருத்தரங்கம் தடை செய்யப்பட்டதாகவும் பதிவுகள் உள்ளன.
பேரா.செ.இரா.செல்வக்குமார் “மிகவும் மகிழ்ச்சி. பொதுவாக எந்தக் கருத்தரங்கத்தையும் தடுக்கும் நடவடிக்கையை நான் வரவேற்பவன் அல்லன். இதனையும் மிகுந்த தயக்கத்துடனேயே என் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றேன். கருத்தரங்க அமைப்பாளர்கள் அறிந்தே தீயவழியில் செல்ல முயன்றனர். இந்தத் தடையால் அவர்கள் அவர்களின் தீயசெயல்களை நிறுத்தப்போவதுமில்லை. இப்படியான தீய போக்குகள் தவறு என்று அவர்கள் உள்ளார உணர்ந்தால்தான் தீர்வு. துணிவான முடிவை எடுத்த அமைச்சர் பாண்டியராசன் அவர்களுக்கு நன்றி” எனக் கருத்தரங்கத்திற்கான அமைச்சரின் தடை முயற்சி குறித்துக் கூறியுள்ளார்.
உண்மையில் தடை விதிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. ஏனெனில் கல்லூரி கசா புயலால் ஒத்திவைக்கப்பட்டதாகத்தான் தெரிவித்துள்ளனர். நிறுத்தப்பட்டதாகவோ அரசால் தடை விதிக்கப்பட்டடதாகவோ தெரியவில்லை.
ஒளிவண்ணன் கோபாலகிருட்டிணன், “நாம் உடனடியாகச் செய்யவேண்டியது இக்கருத்தரங்கை நடத்தும் துறைத் தலைவருக்கும் கல்லூரி முதல்வருக்கும் உடனடியாக மின்னஞ்சல்கள் வாயிலாக நம்முடைய எதிர்ப்பினைப் பதிவு செய்ய வேண்டும்” என முகநூலில் பதிந்துள்ளார்.
முனைவர் முத்துவேலு, “இது போன்ற கருத்துகளை நடந்த முனைபவர்களின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை விளக்க வேண்டும்.தமிழ் இலக்கியங்களின் சிறப்பைக் குலைப்பதா அல்லது தமிழ்ப் பகைவர்களுக்குத் துணைபோவதா என்பதைத் துணிவுடன் எடுத்துக் கூறட்டும்”| என முகநூல் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தினர்,  “கருத்து உரிமையின் (சுதந்திரத்தின்) மீது, குறிப்பாக முற்போக்கான சமூக மாற்றங்களுக்கான கருத்து வெளிப்பாடுகளின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகத்தான், திருச்சியில் ஒரு கல்லூரியின் பன்னாட்டுக் கருத்தரங்கம் தள்ளிவைக்கப்பட்டதன் பின்னணியை ஐயப்பட வேண்டியுள்ளது” எனக் கூறியுள்ளனர்.
முற்போக்கு என்ற பெயரில் இன்றைய நிலைப்பாட்டு அடிப்படையில் அச்சூழலுக்குப் பொருந்தாத முந்தையக் கால வரலாற்றைத் திரித்துச் சொல்வதையும் எழுதுவதையுமே சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கருத்து உரிமை என்ற பெயரில் இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்வதும் இழிவு படுத்தும் நோக்கில் எழுதுவதும் கண்டிக்கத்தக்கனவே!
பல்கலைக்கழக நல்கை ஆணையம் ஆசிரியர்களின் தகுதியைத் தரப்படுத்துவதற்காகப் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. கல்வியியல், ஆராய்ச்சிப் புலங்களில் பின்வருமாறு மதிப்பெண்கள்வரையறுத்துள்ளது.
ஆய்வுத்தாள்கள் 30% மதிப்பெண்
ஆய்வு வெளியீடு 25% மதிப்பெண்
ஆய்வுத் திட்டம் 20% மதிப்பெண்
ஆய்வு வழிகாட்டி 10% மதிப்பெண்
பயிற்சிகள் கருத்தரங்கங்கள் 15% மதிப்பெண்
இவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் பெறவே பெரும்பான்மையர் கருத்தரங்கங்களில் பங்கேற்கவும் கருத்தரங்கங்கள் நடத்தவும் செய்கின்றனர்.  இவர்களுக்கு ஆய்வு நோக்கம் என்பது அறவே இல்லை. எனவே, பல ஆய்வுகள் தரமாக இருப்பதில்லை. இப்போது திட்டமிட்டுள்ள கருத்தரங்கமும் அப்படிப்பட்டதுதான். அத்துடன் தமிழை இழிவுபடுத்த வேண்டும் என்ற உட்கிடக்கையும் உள்ளது என்பது தலைப்புகளில் இருந்து தெரிகிறது. எனவே, கருத்தரங்கத்தைத் தடை செய்தால் மட்டும் போதாது. இதன் ஏற்பாட்டாளர்களுக்குப் பதவி யிறக்கம், பணிப்பறிப்பு முதலான  தண்டனைகளும் தர வேண்டும்.   
தமிழை இழிவு படுத்துவோரைக் கண்டிப்போம்! தண்டிப்போம்!
  • இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, November 25, 2018

புறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

புறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க!

தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன், திருவள்ளுவர் கூறும் படைமாட்சி இலக்கணத்திற்கேற்ப செம்மாந்த படை அமைத்தவர்.
உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையு ளெல்லாந் தலை. (குறள் 761)
என்கிறார் திருவள்ளுவர்.
இதற்கு விளக்கம் தரும் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்,
“அரசுக்குரிய செல்வங்களுள் படையே முதன்மையானது. அப் படையும் காலத்திற்கேற்பப் பல்வகைப் பகுதிகளும் பொருந்தி இருத்தல் வேண்டும். போர் முகத்தில் உண்டாகும், உறுப்பிழத்தல், உயிர்போதல் துன்பங்கட்கு அஞ்சாது இருத்தல்வேண்டும். ‘வெல் அல்லது வீழ்’ என்ற குறிக்கோளையுடையதாய் இருத்தல் வேண்டும். அப் படையே வெல்லும் திறன் பெற்றிருக்கும்.”
என்கிறார். இந்த இலக்கணத்தின் படி அமைந்தது பிரபாகரனின் விடுதலைப்புலிகள் படையே!
“படைவீரர்களிடத்தில், ஒழுக்கக் குறைபாடான செயல்கள் இருத்தல் கூடாது” எனத் திருக்குறள் 769 இல் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். உலகிலேயே மதுவை நாடாத பெண்களின் கற்பிற்கு இழுக்கு சேர்க்காத ஒழுக்கமான படையாக இருப்பது பிரபாகரனின் விடுதலைப்புலிகள் படையே! ஒரு நாட்டிற்கு உதவச் செல்லும் அடுத்த நாட்டுப் படையாக இருந்தாலும் ஐ.நா.வின் பன்னாட்டுப்படையாக இருந்தாலும் எதிரிப்படை போல் பெண்கள் கற்பழிப்பில் ஈடுபடுவதை வரலாற்று நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அவ்வாறு இல்லாமல் ஒழுக்கமே உயிர்நாடி எனப் பிரபாகரன் அறநெறிப்படையை அமைத்திருந்தது பாராட்டிற்குரியதல்லவா?உலகம் உள்ளளவும் போற்றுதலுக்கு உரியது அல்லவா?
உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத்
தொல்படைக் கல்லா லரிது. (குறள் 762) என்கிறார் திருவள்ளுவர்.
பெரும் நெருக்கடி ஏற்பட்டாலும் அழிவினால் துன்பம் வந்தாலும் அஞ்சாமையுடைய சிறப்பு தொன்று தொட்டு வரும் பெருமை கொண்டுள்ள  வீர மரபு கொண்டுள்ள படைக்குத்தான் இருக்கும் என்கிறார்.
இத்தகைய வீர மரபு கொண்டவர்களே தமிழ்ஈழப்படைஞர்கள். குறைவான எண்ணிக்கையில் மிகுந்த எண்ணிக்கை உடைய வீரர்களுடன் போரிட்ட அஞ்சாமையும் உலகின் பிற நாடுகள் எதிரியுடன் இணைந்து அழிக்க முற்பட்ட பொழுதும் எதிர்த்துப் போரிட்ட துணிவும் பிரபாகரனின் தமிழ் ஈழப்படையான விடுதலைப்புலிகள் படைஞர்களிடம் இருக்கின்றன.
 பல்வேறு வசதிக் குறைபாடுகள் இருப்பினும் தாய் நாட்டு நலன் காக்கத் தயங்காமல் போரிடும்  வீரமரபினரின் படையைச் சிறப்பாக நடத்துநர் மேதகு பிரபாகரன்.
இனப்படுகொலையாளிகளுடன் போரிடுவது மட்டுமல்லாமல், போர்க்கருவிகள், போர் ஊர்திகள் உருவாக்கவும் அவற்றிற்கான உதிரிப்பாகங்கள் உருவாக்கவும் தொழிலறிவும் அறிவியலறிவும் பெற்றவர்க ளே தமிழ் ஈழப்படைஞர்கள்!. மண்ணிலும் விண்ணிலும் நீரிலும் போரிடும் திறமை பெற்றவர்கள். வானூர்திகள் இயக்கவும்   ஏவுகணைகள் செலுத்தவும் நாவாய்கள் ஓட்டவும் நன்கறிந்தவர்களே விடுதலைப்புலிப் படையினர்.
போர் என்றால் மரணம் வர வாய்ப்பு உள்ளது. வராமலும் போகலாம். ஆனால் தாமாகவே மரணத்தை எதிர்நோக்கும் தற்கொலைப் படைஞர்களான கரும்புலிகள் வீரம் போற்றுதற்கும் வணங்குதற்கும் உரியதல்லவா? இத்தகைய படையை உருவாக்கிய மேதகு பிரபாகரன் சிறப்பிற்குரியவரல்லவா?
 தாய் மக்கள் மானம் காக்கவும் தாய்நாட்டு உரிமை காக்கவும் ஆட்சி நடத்திய அதற்கான சிறப்பான இருபால் இளைஞர் படையை நடத்திய மேதகு பிரபாகரன் மீண்டும் வருவார்; தம் பணியைத் தொடருவார்;  வெற்றி கரமாக அதனை முடிப்பார்; தமிழ் ஈழக் கொடி பாரெங்கும் பறக்கும்; தமிழர்கள் உரிமையுடனும் சிற்பபுடனும் வாழ்வர் என்னும் நம்பிக்கை பெரும்பான்மையரிடம் உள்ளது. அந்த நம்பிக்கையாளர்கள் சார்பாக நாமும் மேதகு பிரபாகரன் நூறு ஆண்டுகள் கடந்தும் நலமாகவும் சிறப்பாகவும் வாழ வாழ்த்துகிறோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

Friday, November 23, 2018

புயல் துயர மறுவாழ்வு – மத்திய அரசைக் கண்டிப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

புயல் துயர மறுவாழ்வு – மத்திய அரசைக் கண்டிப்போம்!

அண்மையில் ஏற்பட்ட கடும்புயலால் உயிரிழந்த, உடைமைகள் இழந்த, துயருள் மூழ்கிய, வாழ்விழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நம் ஆறுதல்களைத் தெரிவிக்கிறோம்.
பெரும்புயல் பாதிப்புகளைச் சரி செய்யவும் மறுவாழ்வு உதவிகளை வழங்கவும் பாடுபடும் அரசு ஊழியர்கள், அரசு சார் அமைப்புகளின் ஊழியர்கள், தொண்டு அமைப்புகள், கட்சியினர், இயக்கத்தினர், கலைத்துறையினர், தன்னார்வலர்கள் எனப் பலதரப்பட்டாருக்கும் நம் பாராட்டுதல்களையும் தெரிவிக்கிறோம்.
தமிழக அரசு தன்னால் இயன்றதைச் செய்துள்ளதாகக் கருதி அதனையும் பாராட்டுகிறோம். சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். எனவே, எதிர்பார்ப்பிற்கேற்ற போதிய செயல்பாடின்மைக்குக் காரணம் திறப்பாடின்மையே என எண்ண வேண்டி யுள்ளது. திறமையான அதிகாரிகள் இருந்தும் இயலாமைக்குக் காரணம் நமக்குப் புரியவில்லை. எனினும் மேலும் சிறப்பாகவும் விரைவாகவும் செயல்பட்டுத் துயருற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுகிறோம்.
அனைத்துத் தரப்பாரும் பங்கேற்கும் குழுக்களை ஊர்கள் தோறும் அமைத்து மறுவாழ்வுப்பணிகளில் ஈடுபடவேண்டும். இதனால் அரசின் இடர்ப்பாடுகளைப் பிறரும் புரிந்து கொள்வர். அரசும் மக்கள் எதிர்பார்ப்பிற்கேற்ப மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபட இயலும்.
தேசியப் பேரிடர் மேலாண்மை அதிகாரக் குழாம்(NDMA)-இல் உறுப்பினர் எண்ணிக்கை ஒன்பதிற்கு மேல் இராத வகையில் இருக்க வேண்டும் என்பது விதி. இப்போதைய உறுப்பினர்கள் நால்வர்தாம். எல்லா மாநிலங்களுக்கும் வாய்ப்பு கிட்டும் வகையில் சுழற்சி முறையில் மேலும் ஐவரை  உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும்.
இந்தக் குழாம் இதுவரை 6 முறை மட்டுமே கூடியுள்ளது. நாட்டில் எந்தப்பகுதியில் இயற்கைப் பேரிடர் கூடாமல் இவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்? கண் துடைப்பாக இந்த அமைப்பு இருந்து பயனில்லை. உரிய எண்ணிக்கையில் உறுப்பினர்களை நியமிக்கவும் உரிய காலங்களில் கூட்டத்தைக் கூட்டவும் எந்த மாநிலமாக இருந்தாலும் தேவைப்படும் பொருளுதவியை அளிக்கவும் மத்திய அரசை நாம் வலியுறுத்த வேண்டும்.
இச் சூழலில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்திய மத்திய அரசைக் கண்டிக்க வேண்டும். மத்திய அரசிற்கு மிகுதியான வரி வருவாய் கிடைப்பது தமிழ்நாட்டில் இருந்துதான். என்றாலும் தமிழ்நாடு என்றால் மத்திய அரசு பாரா முகமாக உள்ளது. தமிழ்நாட்டிற்கு இயற்கையால் பெரும்பேரிடர் ஏற்பட்டாலும் அதனை மத்திய அரசு கருதிப் பார்க்காது. நாம் கேட்கும் உதவிக்கும் மத்திய அரசு தரும் உதவிக்கும் தொடர்பில்லாத அளவில் சிறிய தொகையையே  வழங்கும். எடுத்துக்காட்டாக அண்மைய  உதவிகளைப் பார்ப்போம்.
2011 புயலின் பொழுது தமிழக அரசு 5249 கோடி உரூபாய்  உதவித் தொகைகேட்டதற்கு 500 கோடி உரூபாய்தான் முதலில் விடுவித்தது.
2016 வருதா புயலின்பொழுது தமிழக அரசு 22573 கோடி உரூபாய் நிதியை விடுவிக்க வேண்டியதற்கு வெறும் 226 கோடி உரூபாய்தான்  அளித்தது.
2017 ஒக்கி புயலின் பொழுது தமிழக அரசு 13250  கோடி உரூபாய் நிதி வேண்டியதற்கு ஒப்பிற்காக 280 கோடி உரூபாய் தந்தது.
புயல் மழை வெள்ளப்பாதிப்புகளைப் பார்ப்பதற்கு உடனடியாகவும் மத்திய அரசு அல்லது தேசியப் பேரிடர் மேலாண்மை அதிகாரக் குழாம் வராது. காலங்கடந்து வந்தாலும் ‘அவனவன் அப்பன் வீட்டுப் பணத்தைக் கேட்பதுபோல்’ மத்திய அதிகாரிகள் நடந்து கொள்வர். உரிய உதவித்தொகையைப் பெறுவதற்கு நடத்தும் போராட்டமே பெரும் போராட்டமாக இருக்கும் பொழுது தமிழக அரசுதான் என் செய்யும்? இதுபோன்ற பிற மாநில அரசுகளும் என்னதான் செய்யும்?
 பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 இன்படி இயற்கைப்பேரிடர் வரையறைக்குட்பட்டவாறான நிதி உதவியைத் தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்க வேண்டும். மாறாக இழப்புகளுக்கான முழுத் தொகையையும் கேட்கக் கூடாது. மத்திய அரசும் தேவைப்படும் தொகையைக் குறைக்காமலும் காலந்தாழ்த்தாமலும் வழங்க வேண்டும்.
தேசியப்பேரிடர் மேலாண்மை அதிகாரக் குழாத்திலிருந்து மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழாம்களுக்குப் போதிய எதிர்பார்ப்புத் தொகைகளுக்கு முன்பணமாக வழங்க வேண்டும்.
இதுபோன்ற இயற்கைப் பேரிடர் எப்பொழுது ஏற்பட்டாலும் தமிழக அரசும் பிற மாநில அரசுகளும் கேட்கும் உதவித்தொகையில்  75 விழுக்காட்டிற்குக் குறையாமல் உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும். எஞ்சிய தொகையை  உரிய நடைமுறைகளுக்குப் பின்னர் விடுவிக்கட்டும்.
மத்திய அரசிற்கு உள்ளபடியே நாட்டுமக்கள் நலன்களில் ஈடுபாடு இருக்குமெனில், ஊடகங்கள் மூலம் துயரங்கள் அறிய வந்தவுடன் தானாகவே முன்வந்து உதவித்தொகையை வழங்க வேண்டும்.
இவ்வாறான நடைமுறைகளை உடனடியாகப் பின்பற்றுமாறு மக்களும் கட்சியினரும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அதற்கு இணங்காவிட்டால் நம் கண்டனக் கணைகள் மத்திய அரசின் மீது பாய் வேண்டும்.
இந்திய அரசே!
உடனடியாகத் தமிழக அரசு வேண்டும் உதவித்தொகைகளை விடுவி!
மக்களின் துயரங்களில் பங்கு கொண்டு துயர் தணிப்புபப் பணிகளில் ஈடுபடு!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல

Saturday, November 17, 2018

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் – இலக்குவனார் திருவள்ளுவன்

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் 

பேரா.சி.இலக்குவனார் மாணவப்பருவத்தில் விடுமுறைக்காலங்களில் நண்பர்கள் மூவரை இணைத்துக் கொண்டு ஊர்கள் தோறும் தனித்தமிழ் பொழிவுகள் நடத்தினார்; தமிழின் பெருமை, தமிழ் இலக்கியச் சிறப்பு, அயற் சொற்கள் கலப்பின்றித் தமிழில் எழுதவும் பேசவும் வேண்டியதன் இன்றியமையாமை முதலானவற்றை வலியுறுத்தினார்.
முத்தமிழ்க்காவலர், செந்தமிழ் மாமணி எனப் போற்றப்படும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் மாணவப் பருவத்தில் இருந்தே தனித்தமிழ்ப் பாவலராகவும் தனித்தமிழ்ச் சொற்பொழிவாளராகவும்  திகழ்ந்து தனித்தமிழ்க் காப்பிற்குத் தொண்டாற்றித் தனித்தமிழ்க் காவலராகப் போற்றப்படுகிறார்.
 பள்ளியில் படிக்கும் பொழுது தன்மதிப்பு இயக்கப் பற்றாளரான ஆசிரியர் அறிஞர் சாமி சிதம்பரனார் ‘இலட்சுமணன்’ என்னும் இவரின் பெயரை ‘இலக்குவன்’ என மாற்றினார். இப்பெயர் மாற்றம் இலக்குவனாரைத் தனித்தமிழில் முழு ஈடுபாடுகாட்டச் செய்தது. தமிழ்ப்பற்று ஊட்டி வளர்க்கப்பட்ட இலக்குவனார், அயற்சொற்களை அகற்றித் தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தும் நிலைப்பாட்டிற்கு வந்தார். எனவேதான் உடன் பயிலும் மாணாக்கர்களிடம் மட்டுமல்லாமல், ஊர் தோறும்  சென்று ஊர் மக்களிடமும் (தனித்)தமிழ் ஆர்வத்தைத் தூண்டினார்.  இவ்வாறு மாணவப்பருவத்திலேயே தனித்தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர் அக்காலத்தில் வேறு எவரும இலர்.
புலவர் வகுப்பு பயிலும் பொழுதே ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும்  தனித்தமிழ்ப்பாவியத்தை இயற்றினார்; தனித்தமிழ்ப் பாடல்களையே எப்பொழுதும் இயற்றினார்.
பள்ளித் தமிழாசிரியராய்ச் சேர்ந்த பின்னும், கல்லூரிப்பேராசிரியராய்த் திகழ்ந்த பொழுதும் மாணாக்கர்கள் வருகை எடுப்பின் பொழுது ‘உள்ளேன் ஐயா’ எனத் தமிழில் கூறுமாறு செய்தார். இஃது ஓர் இயக்கமாகத் தமிழ்நாடு எங்கணும் பரவியது.
விளையாட்டு வகுப்புகளிலும் ‘அன்பே கடவுள்’ என (love all என்பதற்கு மாற்றாக)த் தொடங்குவது, ஒன்று, இரண்டு, மூன்று என்பனபோல் தமிழில் சொல்வது என்னும் வழக்கத்தை உண்டாக்கினார்.
நாகர்கோயில் தெ.தி.இந்துக்கல்லூரியில் இவரிடம் தமிழ் பயின்றவர் சொல் விளங்கும் பெருமாள். தனித்தமிழில் பேசுவதும் தமிழ்ப்பற்றை ஊட்டுவதுமே பேரா.இலக்குவனாரின் அன்றாடச் செயல்பாடு என்னும் அவர், ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார்.
ஒரு நாள் யாப்பருங்கலக் காரிகை நடத்திக் கொண்டிருந்தார். “ஐயா, ஒரு சந்தேகம்” என்றேன் நான். பேராசிரியர் முகத்தில் கருமேகம் திரண்டது. புத்தகத்தை மேசை மீது போட்டார். நிலைமையை உணர்ந்த நான்  “ஐயா, தெரியாமல்”  என்றேன்.
“ஐயா, நமது வகுப்பில் மறந்தும் பிற சொல் பேசலாமாய்யா? அதற்காகவாய்யா நான் இத்தனை பாடுபடுகிறேன். ஐயம் என்னும் சொல் இருக்க ஐயர் சொல் ஏனய்யா” என்றார்.
 நான் கண்ணீர் விட்டு அழாக்குறையாக எத்துணை வேண்டியும் மனம் ஒப்பினாரில்லை. கேட்ட ஐயம் போன இடம் தெரியவில்லை.  அன்றிருந்து வகுப்பில் யாரேனும் மறந்தும் பிற சொல் கலப்பரோ?” (செந்தமிழ், திசம்பர் 1973)
இவ்வாறு மாணாக்கர்கைளத் தனித்தமிழில் பேசச் செய்தார். ஐயர் தமிழ் என்று சொன்னாரே தவிரப் பேரா.சி.இலக்குவனார் சாதி வேறுபாடு பார்ப்பவ ரல்லர். பிராமண மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை  இல்லை என்பதால், கல்வி உதவித் தொகை தரும் நிறுவனங்களைக் கண்டறிந்து தானே விண்ணப்பப் படிவத்தை வாங்கி வந்து  பூர்த்தி செய்யச் செய்து அனுப்பி உதவித் தொகை கிடைக்கச் செய்வார்.  பணமுடையால் கல்லூரிக்குப் பணம் கட்டாத ஏழை மாணவர்களுக்குத் தாமாகவே முன் வந்து உதவும் பொழுதும் சாதி வேறுபாடு பார்க்காமல் இயலாமையை மட்டும் கருதி உதவுவார்.
பேரா.சொல் விளங்கும் பெருமாள் தன் கல்லூரிக்காலத்தில் பேராசிரியரின் தமிழ்க்காப்புப்பணியை நினைவு கூர்ந்து மேலும் பின்வருமாறு கூறுகிறார்.
“மாணவர்கள் தங்கள் கைகளில் தார்ச்செட்டி தூக்கித் தெருக்களில் காணப்படும் தமிழ்க்கொலைப் பெயர்களை அழித்தல் வேண்டும் “என்பார். “சிறு வெற்றிலைப்பாக்குக் கடைகளிலும் பெரிய உணவு விடுதிகளிலும் வண்ணக் குடிகளுக்கும் உணவு வகைகளுக்கும் நற்றமிழ்ப்பெயர்களைச் சூட்டவேண்டும்” என்று ஊக்கமூட்டுவார். இவ்வாறு அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களிலும் தமிழ்ப்பெயர் இருக்க வழி காட்டினார்.
ஒரு சமயம் தெ.தி.இந்துக்கல்லூரி முதல்வராக இருந்தபொழுது “நித்தியவெள்ளி உண்கலன் ஒன்று கேட்பாரற்றுக் கிடைத்துள்ளது. உரியவர் அடையாளம் கூறிப் பெற்றுக் கொள்ளலாம்” என அறிவிப்புப் பலகையில் அறிவிப்பை ஒட்டி யிருந்தார். இதனை அன்றைய ஆளுங்கட்சி சார்ந்த இதழ் ஒன்று கேலி செய்து எழுதியிருந்தது. இது குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனாரிடம் கூறிய பொழுது, “அப்படியாவது உண்கலன் என்னும் நற்றமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் அல்லவா? மகிழ்ச்சி அடைவோம்” என்றார். இவ்வாறு நல்ல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவது கண்டு உவகை கொள்பவர் அவர்.
 தனித்தமிழ் எனப்படும் தூய தமிழ் என்பது எழுத்திலும் பேச்சிலும் மட்டுமல்ல. “தமிழ்மொழி மேலும் தமிழர் பண்பாட்டு மேலும் பிறர் பிறரால் ஏற்றப்பட்டிருந்த மாசுகளின் வழியாகத் தொல்காப்பியத்திலும் மாசேற்றப்பட்டிருந்தது. தமிழ்நெறிக்கு மாறாகச் சொல்லப்பட்ட – உரை காணப்பட்ட, அவற்றின் அழுக்கை அறவே துடைத்து மேலைநாட்டு ஆய்வியல் அறிஞர்களின் எண்ணத்தில் படிந்திருந்த கறைகளையும் மாற்றினார்.”(புலவர் மணி முதுமுனைவர் இரா.இளங்குமரன்,செந்தமிழ்க்காவலர் இலக்குவனார், பக்.14). இவ்வாறு தமிழின் தூய்மை துலங்கவும் பேரா.சி.இலக்குவனார் பாடுபட்டார்.
பேரா.சி.இலக்குவனார் தாம் பணியாற்றிய ஊர்களிலெல்லாம் தமிழ் அமைப்புகளைத் தோற்றுவித்தார். அவை மூலமும் மாலை நேரங்களிலும் விடுமுறை நாள்களிலும் நடத்தும் தமிழ் வகுப்புகள் மூலமும் தனித் தமிழ்ப்பற்றினை ஊட்டினார்; தனித்தமிழை மாணவர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் பரப்பினார். வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், செய்தி யிதழ்கள் ஆகியவற்றில் அயற்சொற்களைக் களைந்து நல்ல தமிழ் வழங்கப்பாடுபட்டார். தமிழ்க்காப்புக்கழகம் முதலான தம் அமைப்புகளைத் தனித்தமிழ் பரவச்செயற்படுத்தினார்.
தாம் நடத்திய சங்க இலக்கியம், இலக்கியம், குறள்நெறி முதலான பல் வேறு இதழ்கள்  மூலம் தனித்தமிழ் வளரப் பாடுபட்டார்.
  தமிழின் தூய்மை காக்கப்பட வேண்டும் எனப் பாடுபட்டவர் பேரா.சி.இலக்குவனார். எனினும் ‘தூயதமிழ்’ என்றும் ‘நல்ல தமிழ்’ என்றும் சொல்வதை விரும்புவதில்லை. அவ்வாறு சொன்னால், ‘மாசுடைத் தமிழ்’ என்றும் ‘கெட்ட தமிழ்’ என்றும் இருப்பதாகப் பொருள் வரும் என்பார். பயன்பாட்டில் பிற மொழிச் சொற்களைக் கலப்பது  பயன்படுத்துவோர் தவறு. அதற்காகத் தமிழ் மொழியைக் குற்றம் சொல்லக் கூடாது என்பார். எனினும் கலப்பிலிருந்து அடையாளப்படுத்துவதற்காகத் ‘தனித்தமிழ்’ எனச் சொல்லப்படுகிறது. தனித்தமிழ் என்ற சொல்லாட்சி அடிப்படையில் தமிழின் தூய்மையைக் காத்த பேராசிரியர் சி.இலக்குவனார் தனித்தமிழ்க்காவலர் என்று அழைக்கப் பெறுகிறார்.
தமிழ்க்கடல் மறைமலையடிகள் தோற்றுவித்த  தனித்தமிழ் இயக்கப் பாதையில் நடைபோட்டு எண்ணம், சொல், செயல், படைப்பு, பணிகள்  களப்பணி மூலம் தமிழ்க்காப்பில் சிறந்திருந்த தனித்தமிழ்க் காவலர் பேரா.முனைவர் சி.இலக்குவனார் வழியில் நாமும் பிற சொற் கலப்பினை அகற்றித் தமிழ் வளர்ப்போம்!
வாழ்க தமிழ்! ஓங்குக இலக்குவனார் புகழ்!
இலக்குவனார் திருவள்ளுவன்
[கார்த்திகை 01, 2049/ நவம்பர் 17. 2018 தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் 109 ஆம் பிறந்த நாள்]
– தினசரி நாள் 17.11.2018

Followers

Blog Archive