Wednesday, August 21, 2019

தாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை! - இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல





தாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை!

நம் நாட்டில் காந்தியடிகள் முதலான தலைவர்கள் பலரும் தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்தியுள்ளனர்; இப்பொழுதும் கல்வியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். பயிற்சிமொழிக் காவலர் பேரா. முனைவர் சி.இலக்குவனார், “ உலகில் வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை.  நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப் படாத காரணத்தினாலேயே பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளோம். ஆன்ற அறிவும் ஆள்வினையும் அற்றுள்ளோம்.” எனத் தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்துகிறார். இவ்வாறு அறிஞர்களும் கல்வியாளர்களும் வற்புறுத்தும் தாய்மொழிவழிக் கல்வியை அரசியலாளரான இந்தியக் குடியரசின் துணைத்தலைவர் மேதகு வெங்கையா(நாயுடுதொடர்ந்து வலியுறுத்துகிறார். இவரைப்போல் அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்கள் யாரும் தாய்மொழிக்கல்வியை தொடர்ந்து வலியுறுத்தவில்லை.
இவரது உரைகள் பலவற்றின் அடிப்படையில் தாய்மொழிக்கல்வி  மீதும் தாய்மொழிவழிக் கல்வி மீதும் இவர் கொண்டுள்ள தீராக் காதலைக் காணலாம். 5.09.2017இல் தேசிய ஆசிரியர் விருது வழங்கு விழாவிலும், 19.12.2017 அன்று சிறுபான்மையர் தேசிய ஆணையத்தின் பத்தாவது ஆண்டு உரையிலும் தாய்மொழிக் கல்வியைக் கற்பிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திப் பேசியுள்ளார்.
 “(ஒரே நாடு என்பதால்) நாம் நமது வேர்களை, நம் மொழிகளை, நம்பிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று பொருளல்ல. நாம் அவற்றை வளப்படுத்த வேண்டும். ஏனெனில் அவை நம்மை வளப்படுத்துகின்றன. நம் பன்முகத்தன்மைக்கு உள்ளார்ந்த மதிப்பு உள்ளது.”  எனப் பேசியுள்ளார். இதன் மூலம் ஒரே நாடு என்பது உணர்வு அடிப்படையிலானது. அதே நேரம் நாட்டின் பன்முகத்தன்மையின் சிறப்பைப் புரிந்து கொண்டு அனைத்து மொழிகளையும் சமமாகப் பேண வேண்டும் என்கிறார். இதனை மொழித் திணிப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
‘என் சொந்த மொழியில் பேசுகிறேன்’(Speaking in my own tongue) என இந்தியன் எக்சுபிரசு இதழில் (21.02.2018) வெங்கையா(நாயுடு) கட்டுரை எழுதியுள்ளார்.  அதில், தனிப்பட்ட தாய்மொழிகளை வலுப்படுத்துவதன் மூலமே பன்மொழி-பல பண்பாட்டு உலகம் அமையும் என்கிறார்.
“அனைத்து மாநில அரசுகளும் மாநில மக்களின் தாய்மொழிகளைப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக வைக்க வேண்டும்” எனவும் வலியுறுத்துகிறார்.
புதுதில்லி மத்திரேயி கல்லூரிப்(Maitreyi College) பொன் விழாவில் 27.02.2018 அன்று பங்கேற்றார். அங்கும் பூனாவில் 29.03.2018 அன்று நடைபெற்ற பட்டீல் வித்தியாபீடத்தின் 9ஆவது பட்டமளிப்பு விழாவிலும்  தாய்தந்தையர், தாய்நாடுபோல் தாய்மொழியையும் மறக்கலாகாது என வலியுறுத்தினார்.
 “அனைவரும் நமது மொழியை நினைவில் வைத்துக்கொள்வதுடன் அதைப் பாதுகாக்கவும் வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் உயர்நிலை கல்வி வரை தாய்மொழியைக் கட்டாயமாக்க வேண்டும்.”
“வாழ்க்கைப் பெருமரத்தின் வேர் தாய்மொழிதான். எனவே இந்த அடித்தளம் வலுவாக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். நாம் அனைவரும் நம் தாய்மொழிகளை நன்றாகக் கற்க வேண்டும். பேசியும் எழுதியும் இலக்கியங்கள் படைத்தும் பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் பயன்படுத்தியும் தாய்மொழியை நிலையாக வளப்படுத்திப் பேண வேண்டும்.” எனத் தாய்மொழிகளுக்காகக் குரல் கொடுத்துள்ளார்.
04.04.2019 இல் நடைபெற்ற தமிழ் நீங்கலான சமசுகிருதம் முதலான பிற செம்மொழி இலக்கியவாதிகளுக்கு அளிக்கப்படும் குடியரசுத்தலைவர் விருது, மகரிசி பத்திராயன் வியாசு சம்மன் (Maharshi Badrayan Vyas Samman) விருது ஆகியன வழங்கும் விழாவில் வெங்கையா(நாயுடு) மக்கள் மொழிகள் குறித்து அருமையான உரை ஆற்றி உள்ளார்.
“மொழியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பன்முக அணுகுமுறை தேவை. இது தொடக்கப்பள்ளி மட்டத்திலிருந்தே தொடங்கி உயர் கல்விக்குத் தொடரப்பட வேண்டும். குறைந்தது தாய் மொழியில் செயல்பாட்டு கல்வியறிவு உறுதி செய்யப்பட வேண்டும்.” என்றார்.
இக்கூட்டத்தில் அவர் தாய்மொழிகளை எல்லா நிலைகளிலும் பயன்படுத்திப் பேணுவதற்குத் தேசிய இயக்கம் தேவை என வலியுறுத்தி உள்ளார்.
நாம் எதற்கெடுத்தாலும் மேல் நாட்டைப் பாருங்கள், சப்பானைப் பாருங்கள், சீனாவைப் பாருங்கள் என்கிறோம். ஆனால் வளர்ச்சி பெற்ற அந்நாடுகள் தத்தம் தாய்மொழியில் கல்வி அளிப்பதால்தான் வளர்ந்துள்ளன என்பதை மறந்து விடுகிறோம். ஒருவர் தன் தாய்மொழி யல்லாத பிற மொழியில் படிக்கும் பொழுது பிற மொழிப்பாடமே ஒரு சுமையாக அமைகிறது. இதனால், அம்மொழியில் படிக்கும் துறைப்பாடங்களும் சுமையாக மாறிவிடுகின்றன. கல்வியாளர்களின் இக் கருத்தை உணர்ந்து எலலா நாடுகளும் தாய்மொழிக்கல்வியில் கருத்து செலுத்துகின்றன.
பிற மொழிக்கல்வியால் உருப்போடும் மனனக்கல்விமுறைதான் வளர்கிறது. மாறாகத் தாய்மொழி வழிக்கல்வியானது ஆசிரியர் மாணாக்கர் உறவை மேம்படுத்தி ஐயங்களை அகற்றவும் தெளிவு பெறவும் உதவுகிறது. இதனால் மாணாக்கர்களின் சிந்தனை ஆற்றல் பெருகுகிறது.
நார்வே, சுவீடன் முதலான ஐரோப்பிய நாடுகள், தங்கள் நாட்டில் வளரும் பிற மொழியினரின் குழந்தைகளுக்கும் அவரவர் தாய்மொழியைக் கற்பிக்க வழிவகை செய்துள்ளன. நார்வே நாட்டில் தமிழ்மொழிப் பாடத்தில் பெறும் மதிப்பெண், நார்வே நாட்டின் மருத்துவக் கல்வி நுழைவிற்கு உதவுகிறது. புலம் பெயர்ந்து வந்தவர்களும் தங்கள் தாய்மொழியை மறக்கக்கூடாது எனக் கருத்து செலுத்துகின்றது நார்வே.
பிற மொழிக் குழந்தைகள் சுவீடனில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பெற்றோர்களின் இடப்பெயர்வின் காரணமாகச் சுவீடனில் வாழ்ந்தாலும் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருந்தாலும் தாய்மொழிக்கல்வியை அவர்களுக்கு அளிப்பதைச் சுவீடன் கல்வித்துறை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. நம் நாட்டிலோ இங்கேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் அயல் மொழிக்கல்வியைத் திணிப்பதையே அரசுகள் கடமையாகக் கொண்டு செயல்படுகின்ற அவலம் உள்ளது.
22 நாடுகளில் 160 மொழிக் குழுக்களிடம் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனம் ஒன்று விவரம் திரட்டியது.  பெரும்பாலான மாணக்கர்களின் பள்ளிக்கல்வி முழுமை பெறாததற்கும் பிறமொழியைக் கற்கும் திறன் இழந்ததற்கும் தாய்மொழி அல்லாத பிற மொழிக்கல்விதான் காரணம் எனக் கண்டறிந்தது. இதனால் 2008இல் தாய்மொழிக் கல்வி, தாய் மொழிக் கல்வி வழியே பிற மொழிக் கல்வி, தாய் மொழிக் கல்வி வழியே உயர்கல்வி  என்பதையே கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு வலியுறுத்தத் தொடங்கியது.
எத்தியோப்பாவில், தாய் மொழிக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, கற்க முடியாமல் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கையானது பெருமளவில் குறைந்தது.
பாப்பூ நியூ கினியா  நாட்டில் 800 மொழிகள் பேசப்படுகின்றன. கணிசமான தொகையில் மக்கள்பேசும் 450 மொழிகளைக் கல்வி மொழிகளாக அந்நாடு பின்பற்றுகிறது.
பிலிப்பைன்சு அரசாங்கம் 2012 இல் அனைத்துத் தொல்குடி மக்களும் அவரவர் தாய் மொழி வழியே கல்விக் கற்பதைக் கொள்கை முடிவாக எடுத்து நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.
இந்தோனேசியாவில் 731 மொழிகள் பேசப்படுகின்றன. ஆசிரியர் அந்தப்பகுதி மக்களின் மொழி யறிவு உடையவரா என்பதைப் பொறுத்தே  மொழிக்கல்வி அமைகிறது. எனினும் மக்களின் தாய்மொழிகள் கற்பிக்கப்படுவதில் அரசு கவனம் செலுத்துகிறது.
தாய்மொழி சார் கல்வி(mother tongue-based education) உள்ள நாடுகளில் கல்வி வளர்ச்சியும் பிற வளர்ச்சியும் சிறப்பாக உள்ளன. அயல்மொழி சார் கல்வி உள்ள நாடுகளில் இவை பின்தங்கியே காணப்படுகின்றன.
பொதுவாக அயல்மொழியினர் ஆட்சியில் கட்டுப்பட்ட நாடுகளில் எல்லாம் தாய்மொழிக்கல்வி புறக்கணிக்கப்படுகிறது. இவற்றுள் எந்தெந்த நாடுகள் விழிப்படைந்து தாய்மொழிக்கல்விக்கும் தாய்மொழிவழிக்கல்விக்கும் மாறியனவோ அங்கெல்லாம் வளர்ச்சியைக் காண முடிகிறது.
நாம் முழுமையாகத் தாய்மொழிக்கல்வியையும் தாய்மொழி வழிக்கல்வியையும் நடைமுறைப்படுததாவிட்டால் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாது. ‘தாய்மொழிக்கல்வி மூலம் தாய்நாட்டு வளர்ச்சி’ என்பதை இலக்காகக் கொண்டு துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா(நாயுடு) வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் நீதி மன்ற விழாக்களிலும் எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம்  தாய்மொழிக்கல்வி, தாய்மொழிவழிக்கல்வி, தாய்மொழிப்பயன்பாடு குறித்துத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
எனவே, இவை சிறப்பாக நடைபெற இவர் மத்திய அரசு மூலம் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  1. தாய்மொழி நாள் (21/02) என்பது இப்பொழுது சமசுகிருத நாளாகத்தான் மத்திய அரசால் கொண்டாடப்படுகிறது. அவ்வாறில்லாமல் எல்லா மொழியினரும் தத்தம் தாய்மொழி நாளைக் கொண்டாட நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
  2. உலகத்தாய்மொழி நாள் பிப்பிரவரி ஆனால் நம்நாட்டு மொழிகளைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ்க்காப்பிற்காக 1937இல் நடைபெற்ற போராட்டக்காலத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து இந்தியத் தாய்மொழிகள் நாள் எனக் கொண்டாடச் செய்ய வேண்டும்.
  3. மொழிகளின் சமன்மையை நிலை நாட்ட எல்லா மொழிகளுக்கும் சம அளவிலேயே மத்திய அரசு செலவிட வேண்டும். எனினும் மொழியின் தொன்மை, வளத்திற்கேற்பச் சிறப்பு நிதி ஒதுக்கீடும் வழங்க வேண்டும்.
  4. கல்வித்துறையை மாநில அரசின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். தாய்மொழி வழிக்கல்விக்கான ஒதுக்கீடுகளை மனிதவள மேம்பாட்டுத் துறை ஒதுக்க வேண்டும்.
  5. பணி வாய்ப்பு இல்லாமல் தாய்மொழிக்கல்வி வெற்றி பெறாது. எனவே, எல்லாப்பணித்தேர்வுகளும் அனைத்து மாநில மொழிகளிலும் நடைபெற வேண்டும்.
  6. மத்திய அரசின் எல்லாக் கல்வி நிலையங்களும் அயலகக் கல்வி நிறுவனங்களும் பிற கல்வி நிறுவனங்களும் அவை இருக்கும் மாநில மக்களின் மொழிகளில் கல்வி கற்பிக்க வேண்டும்.
  7. அரசியல் யாப்புப் பட்டியலில் உள்ள தேசிய மொழிகள் அல்லாத பிற தாய்மொழிக் கல்வியும் அவ்வம் மொழியினரின் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட வேண்டும்.
  8. உயர்நீதிமன்றங்கள் வரை அனைத்து நிலைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் அயல்நாட்டு நிறுவனங்களிலும் மாநில மொழிகளே ஆட்சி மொழிகளாக இருக்க வேண்டும்.
இவரே குறிப்பிட்டதுபோல் தாய்மொழிக்கல்விக்கான தேசிய இயக்கத்தைத் தொடங்க வேண்டும்! தாய்மொழிக்கல்வி ஆர்வலரான மேதகு மு.வெங்கையா(நாயுடு) தாய்மொழிக்கல்விக் காவலராகத் திகழ வாழ்த்துகள்!
இமயமலை போலுயர்ந்த
ஒருநாடும் தன்மொழியில்
தாழ்ந்தால் வீழும் (பாவேந்தர் பாரதிதாசன், தமிழியக்கம்)

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 22.08.2019


Thursday, August 15, 2019

கருத்துக் கதிர்கள் 21 & 22 – இலக்குவனார் திருவள்ளுவன் [21. வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம்! 22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா!]

அகரமுதல

கருத்துக் கதிர்கள் 21 & 22

[21. வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம்!  22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா!]

21 வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம்!
வேலூர் தேர்தல் முடிவு, வேலூர் தொகுதியில் தோற்கப்போவது யார்?(03 ஆகத்து 2019) என முன்னர்த் தெரிவித்தவாறுதான் அமைந்துள்ளது.  “சண்முகத்தின் தனிப்பட்ட செல்வாக்கும் அ.தி.மு.க.வின் செல்வாக்கும் இவரை வெற்றியின் பக்கம் தள்ளும். ஆனால், பா.ச.க. வின் செயல்பாடுகள் இவரைப் பிடித்துப் பின்னுக்கு இழுக்கும்” எனக் குறிப்பிட்டு இருந்தோம். “பா.ச.க.வை விட்டு விலகி நின்றால் வெற்றி வாய்ப்பு உள்ள சண்முகம், வெற்றிக்கனியைக் கதிர் ஆனந்திடம் பறிகொடுக்கவே வாய்ப்பு உள்ளது.” என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
 அதுபோல் சண்முகம் வெற்றிக் கனியைச் சுவைக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். தி.மு.க.வின் கதிர் ஆனந்து குறைந்த வேறுபாட்டில் வெற்றி பெற்றிருந்தாலும் வெற்றி வெற்றிதான். இடைத்தேர்தல் போன்ற தனித் தேர்தலில் அமைச்சரவையே தேர்தலில் பம்பரமாகச் செயல்பட்டாலும் பொதுவான இடைத்தேர்தலில் வெற்றி காணும் ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.
 ஆளுங்கட்சி மக்களிடம் செல்வாக்கு மிகுதியாக,  மக்கள் எதிர்க்கும் திட்டங்களை விலக்கிக் கொள்ள வேண்டும். இரு மொழிக்கொள்கையில் உறுதியாக இருப்பதாகக் கூறுவதால் பா.ச.க.வின் இந்தித் திணிப்பையும் சமசுகிருதத் திணிப்பையும் கடுமையாக எதிர்த்து நிறுத்த வேண்டும். நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் 3 இல் மிகுதியாக வாக்குகள் வாங்கிவிட்டோம் என்று போலி மயக்கத்தில் இருக்கக் கூடாது.
தி.மு.க.வும் அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும்பொழுது சரிவு ஏற்பட்டுள்ளதை உணர வேண்டும். மக்கள் நலத்திட்டங்களிலும் தமிழ்க்காப்புத் திட்டங்களிலும் முனைப்பு காட்ட வேண்டும்.
“பா.ச.க. ஒதுங்கினால் வெற்றி பெறுவோம் என்று அதிமுக சொன்னது; நாங்கள் ஒதுங்கியதால் அது தோற்று விட்டது” எனத் தமிழிசை கூறுகிறார். அவர் மனத்திற்குத் தெரியும் உண்மை. முற்பகலில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு பிற்பகலில் சுறுசுறுப்பு அடைந்ததற்குக் காரணம் பா.ச.க.வின் சம்மு காசுமீர் உறிமைகள் பறிப்பு ஆணை வெளிவந்ததே.
குறுக்கு வழியில் ஆட்சிக்கட்டிலில் ஏறும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களுக்கு எதிரான திட்டங்களைக் கைவிட வேண்டும். மக்கள் உள்ளத்தில் அமர்ந்தால்தான் ஆட்சியில் அமர முடியும் என்பதை உணர வேண்டும்.
நாம் தமிழர் கட்சி முன்னேற்றத்திற்கான முத்திரையைப் பதிக்கும்  எனக் குறிப்பிட்டவாறு முத்திரையைப் பதித்துள்ளது. வாக்குகளை விலைக்கு வாங்காமல் பெற்ற வாக்குகள் என்ற அளவில் இதுவே வெற்றிக்கு ஒப்பானதுஎனலாம்.
வேலூர் வாக்காளர்கள் முதன்மைக் கட்சிகளுக்கு நம்பிக்கையையும் எச்சரிக்கையையும் ஒரு சேர வழங்கும் வகையில் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
இதனைப்புரிந்து கொண்டு அனைத்துக் கட்சியினரும் மக்கள் நலனில் மட்டும் கருத்து செலுத்தி. வாக்குகளை விலைபேசும் மனப்போக்கிலிருந்து விலக வேண்டும்.
மக்களுக்கு வெற்றி கிடைக்கும் வகையில் தேர்தல்கள் அமையும் காலம் வரட்டும்!
இலக்குவனார் திருவள்ளுவன்

 22 ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா!

இப்பொழுது கணிணியில் தட்டச்சிடும் வழி தெரியாமல் புது வகை எழுத்துச் சிதைவு பரவி வருகிறது. ‘தூ’, ‘நூ’ என்பனவற்றை ஒவ்வொரு எழுத்துருவில் ஒவ்வோர் விசையைப் பயன்படுததித் தட்டச்சிடுமாறு வைத்துள்ளார்கள். எழுத்துரு வடிவம் வெவ்வேறாக இருந்தாலும் விசைகள் குறிக்கும் எழுத்துருக்களில் மாற்றம் இருக்கக் கூடாது. இதற்கு அரசு தக்க வழிகாட்ட வேண்டும்.
தகர, நகரங்களில் ஊகாரங்கள் அச்சிடுவதற்குச் சில எழுத்துரு அமைப்பில் தகர, நகரங்களை மாற்று விசையில் தட்டச்சிட்டால் வரும். சிலவற்றில்  தகர, நகரங்களைத் தட்டச்சிட்ட பின் ஊகாரக் குறியீட்டை – மேல்வரிசையில் ஆங்கில விசைப்பலகையில் பகர அடைப்புக்குறியை-த் தட்டச்சிட்டால் வரும். 
 இதுபோல் கணியச்சிடுவோர் தங்கள் விசைப்பலகையில் தாங்கள் பயன்படுத்தும் எழுத்துருவிற்கான விசைப்பலகை எழுத்தமைப்பை அறிந்து கொண்டு அதற்கேற்பப் பயன்படுத்த வேண்டும்.  ஆனால், எவ்வாறு ‘தூ’, ‘நூ’ முதலியவற்றைத் தட்டச்சிட வேண்டும் எனத் தெரியாமல் முதலில் குறிப்பிட்டவாறு துாரம், துாறல், நுால், நுாறு, என்பனபோல் ‘துா’, ‘நுா’  எனத்  தவறாகவே தட்டச்சிடுகின்றனர்.வேண்டுமென்று இந்தத் தவற்றைச் செய்ய வில்லை. எனினும் சரி செய்வதற்கான போதிய முயற்சியை மேற்கொள்ள வில்லை.
இந்த எழுத்துச்சிதைவு போக்கிற்கு முற்றுப்புள்ளி இடுமாறு இதழ்க்குழுவினரையும் தட்டச்சிடுவோரையும் அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


Monday, August 12, 2019

ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை!

ஒப்பிலக்கியம் அல்லது ஒப்பியல் இலக்கியம் என்பது இலக்கிய ஆராய்ச்சிகளில் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
அமெரிக்க இந்தியானா பல்கலைக்கழகப் பேராசிரியர் எச்.எச்.இரீமாக்கு ((H.H.Remack), “ஒப்பிலக்கியம் என்பது ஒரு நாட்டின் இலக்கியத்தை இன்னொரு     நாட்டு இலக்கியத்தோடு     ஒப்பிடுவது; இலக்கியங்களுக் கிடையேயான உறவுகளை ஒரு பக்கமும், குமுகாயவியல் தத்துவம் போன்ற துறைகளை இன்னொரு பக்கமுமாக ஒப்பிட்டுக் கூறுவது ;  இலக்கியத்திற்கும், இசை, ஓவியம், கூத்து போன்ற கலை வடிவங்களுக்குமிடையேயான உறவுகளைக் கூறுவது”  என்கிறார்.
 பொதுவாக ஒரு நாட்டு அல்லது ஒரு மொழி இலக்கியத்துடன் அடுத்த நாட்டு அல்லது அடுத்த மொழி இலக்கியத்தை ஒப்பிடுவதைத்தான் ஒப்பிலக்கியம் வலியுறுத்துகிறது. ஆனால், பின்னர் ஒரே மொழியில உள்ள இலக்கியங்களை அதே மொழியிலுள்ள இலக்கியங்களுடன் ஒப்பிடுவதும் ஒப்பிலக்கியத்திற்குள் அடங்கலாயிற்று. ஒப்பீடு இரண்டுக்கு மேற்பட்ட இலக்கியங்களுடனும் அமையலாம்.
 தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் பக்கம் எண் 142-இல் மொழிகளின் தொன்மை வரலாற்றைக் குறித்து விளக்கப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சமசுகிருதம் கி.மு.2000 ஆண்டுகள் பழமையானது என்றும் தமிழ் கி.மு.300 ஆண்டுகள்தான் பழமையானது என்றும் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல உலக மொழிகள் அனைத்திலும்தொன்மையானது சமசுகிருதம் என்று வேண்டுமென்றே தவறாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதனை அறிந்ததும் கல்வியாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் நடுநிலையாளர்களும் கொதித்து எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். உடன் பள்ளிக்கல்வி யமைச்சர் செங்கோட்டையன் தமிழ்மொழியின் தோற்றம் குறித்த தவறான பாடப்பகுதி நீக்கப்படும் என்றும் தவறான தகவலைச் சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். உடன் நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.
 ஆனால் மதிப்பிற்குரிய மற்றோர் அமைச்சர் “பா...வின் தாள் பணிதலேமுதன்மைதமிழைத் தாழ்த்தினால் நமக்கென்ன” என்று கருதுகிறாரோ என மக்கள் எண்ணும் வகையில் கருத்துகள் தெரிவித்துள்ளார்.  “தமிழ், சமற்கிருதம் இவற்றில் எது மூத்தது எது சிறந்தது என்ற  அருததமற்ற ஆய்வை விட்டுவிடுங்கள்” என அவர் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறார்.  எல்லாக் கட்சிகளிலும் ஆதரவாளர்கள் உள்ளவர் என்றும் வினைத்திறம் மிக்கவர் என்றும் கருதப்படும் அவர், தெரிவித்த கருத்துகள் ஒப்பிலக்கியத்திற்கு முரணானவை.
 இலக்கியமோ மொழியோ எதுவாயினும் கால முதன்மை குறித்த ஆராய்ச்சி அவற்றை முழுமையாக ஆராய்வதற்கு அடிப்படையாக அமைகிறது. காலஆராய்ச்சியைத் தவிர்க்கும் மொழி ஆராய்ச்சி முழுமை யற்ற்தாக மட்டுமல்லதவறானதாகவும் இருக்கும். சான்றுக்கு நாம் இராமாயணத்தை எடுத்துக் கொள்வோம்.
 இராமாயணக் காலம் கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கும் – கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது என்பதே சரியான முடிவாகும். புத்தர், புத்த சமயத்தவர், புத்த பீடங்கள் முதலானவை பற்றிய குறிப்புகளின் அடிப்டையில் வரலாற்று நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாகும் இது.
 ஆனால், இராமாயணம் திரேதாயுகத்தில் நடந்ததாக ஆரியப்புனை கதை கூறுகிறது. இக்கற்பனையின்படி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன. கால ஆராய்ச்சியின் மூலம்தான் இது தவறு என்று மெய்ப்பிக்கப்படுகிறது.
‘இராமாயணம் ஓர் ஆய்வு’  நூலாசிரியர் கே. முத்தையா குறிப்பிடுவதுபோல் ஆராய்ச்சியாளர்கள் பலர், இராமாயணம் குறிப்பிடும் இலங்கா என்பது இலங்கை அல்ல என்றும் இராமன் முதலான எவரும் விந்திய மலைக்குத் தெற்கே வரவில்லை என்றும் கூறுகின்றனர்.
 கி.பி.1010-1050 ஆண்டுகளில்  உருவான சம்பூர்ண இராமாயணம் வரையிலும் இன்றைய இலங்கை பற்றிய எக்குறிப்பும் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 
 அதுபோல் திரேதாயுகததின் கடைசி ஆண்டில் பிறந்திருந்தாலும் இராமன் 8,69,110 ஆண்டுகளுக்கு முன்னர்ப் பிறந்தவன் ஆகிறான். ஆனால் அவன் பிறந்ததாகக் கூறப்படும் அயோத்தி கி.மு.700இல்தான் உருவானது. இதனை மத்திய அரசின் தொல்பொருள் துறை 1976-77 இல் ஆய்வு செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இக்குறிப்பை அம்சத்து வலைப்பூவில் (amjat.blogspot.com)காணலாம். தவறான இராமாயணக் கால அடிப்படையில் தமிழ் இலக்கியங்களின் காலங்களைத் தவறாக மதிப்பிடும் போக்கு வந்ததல்லவா? ஆகச் சரியான ஆய்விற்குச் சரியான கால ஆய்வும் தேவை அல்லவா?
பரிதிமாற்கலைஞர் வி.கோ.சூரியநாராயண(சாத்திரியா)ர்  ஆரியர் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் புகும் முன்னரே மேலை நாட்டு ஆரியர்களுடன் தமிழர் கடல்வழி வாணிகம் மேற்கொண்டு இருந்தனர் என்கிறார். இந்த முடிவிற்கு அவர் கால ஆராய்ச்சியையே அடிப்படையாகக் கொண்டார்.
இத்தகைய கருத்துகளைத் திருப்பூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாசக தகவல் தொழில்நுட்பம்-சமூகஊடகப்பிரிவும் முகநூலில் குறிப்பிட்டுள்ளது(08.06.2018). எனவே, பா...என்பதால் வரலாற்றுத் திரிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றல்ல. நடுநிலையாகவும் செயல்படலாம் என்பதற்கு இது சான்றகும்.
பரிதிமாற் கலைஞர் ஆரியர்கள் தமிழ் இலக்கியங்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்து அவ்வோலைகளைப் பழமையானவைபோல் காட்டி அவ்றறிலிருந்து தமிழில் இலக்கியங்கள் எழுதப்பட்டன என்று தவறாக நிறுவுவதை மெய்ப்பித்துள்ளார். வேண்டுமென்றே தமிழ் இலக்கியக்காலங்களைப்பின்னுக்குத் தள்ளுவதையே ஆரியர்கள் கடமையாகக் கொண்டுள்ளதால்தமிழ்சமற்கிருத ஒப்பாய்வில் கால ஒப்பீடு இன்றியமையாதுவேண்டப்படுகிறது.
 இப்பொழுது கூறுங்கள். தமிழின் காலத்தை வேண்டுமன்றே ஒரு மொழியினர் பின்னுக்குத் தள்ளுவதையே வாணாள் கடமையாகக் கொண்டு வாழும் பொழுது மொழிகளின் காலங்களைச் சரியாகக் குறிப்பிட்டுத்தானே ஆக வேண்டும்! இலக்கியக் கருத்துகள் சொல்லப்பட்ட காலங்கள் அடிப்படையில் பெருமைஉறுகின்றன என்னும் பொழுது கால ஆராய்ச்சியும் கால ஒப்பீடும்தேவைதானே! இலக்கிய ஆராய்ச்சியின் முழுமைக்குக் காலஆராய்ச்சி தேவை என்பது மறுக்க முடியாத உண்மைதானே!
ஒரு மொழி எழுத்திலக்கியம் பெற்றிருக்க வில்லை என்றால் முழுமையடைந்த மொழியாகாது. சமற்கிருத மொழியினர் இன்றைய இந்தியா என்று சொல்லப்படும் தமிழ்நிலத்திற்கு வந்த பின்னர்தான் தமிழ் எழுத்து வரிவடிவத்தைப் பார்த்துத் தங்கள் நெடுங்கணக்கு – எழுத்து – வடிவங்களை அமைத்துக் கொண்டனர். அவ்வாறு தமிழுக்குப் பிற்தைய சமற்கிருத மொழியைத் தமிழுக்குமுந்தையதாகத் தவறான காலக்குறிப்பை அளித்தால் அது தமிழுக்குச்செய்யும் கொடுமை அல்லவா?
எனவே இதுபோன்ற தவறுகளைத் தவறல்ல என்று சொல்லி ஊக்கப்படுத்தாமல் பள்ளிக் கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுப்பதுபோல் எடுத்துக் குறைகளைக் களைய வேண்டும். மொழிகளின் உண்மையான காலத்தையும் தமிழின் தொன்மையையும் குறிப்பிடும் பாடங்கள் எல்லா  மொழிப் பாடங்களிலும் இடம் பெற வேண்டும்.
மொழியின் சிறப்புக்கும் சிறுமைக்கும் அவ்வம்மொழிகளின் இலக்கியப் படைப்புகளே உரைகல்லாக அமையும்.
 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.(திருவள்ளுவர், திருக்குறள் 505)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல



Sunday, August 11, 2019

தானமும் தவமும் தமிழே! -இலக்குவனா் திருவள்ளுவன், மின்னம்பலம்


தானமும் தவமும் தமிழே!

சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா என்பது பற்றி பார்த்தோம். அதேபோல் இந்த வாரம் தானம், தவம் என்ற சொற்களின் முகவரியைத் தேடும் ஆய்வில் மூழ்குவோம்.
தானம், தவம் ஆகிய சொற்களை அயற்சொற்கள் என மயங்கி நாம் தவிர்க்கிறோம். இவை நல்ல தமிழ்ச்சொற்களே!
அயற்சொல் அகராதி (ப.253) தானம் என்பது ஃச்தான(sthaana) என்னும் சமசுக்கிருதச் சொல்லில் இருந்து வந்ததாகத் தவறாகக் கூறுகிறது. இதற்குப் பொருள் இடம், உறைவிடம், பதவி, கோயில், துறக்கம், இருக்கை, எழுத்துப் பிறப்பிடம், எண்ணின் இடம், ஆற்றல் சமநிலை, ஆற்றல் என விளக்கியுள்ளது. இவை தமிழ்ச் சொல்லான தானத்தின் பொருள்களாகும்.
தமிழ்ச்சொற்களுடன் முன்னெழுத்தாக ‘ஃஸ்’ சேர்த்து சமஸ்கிருதச் சொற்கள் உருவாகியுள்ளன. இதனை மறுதலையாக அஃதாவது சமசுக்கிருதத்தில் இருந்து தமிழ் வந்ததாக எண்ணுவது தவறு. சான்றுக்குச் சில பார்ப்போம்.
தனம் > ஸ்தனம்
தாணுநாதன் > ஸ்தாணுநாதன்
தானம் > ஸ்தானம்
தூலம் > ஸ்தூலம்
படிகம் > ஸ்படிகம்
எனவே, தமிழ்ச்சொல் தானத்திலிருந்துதான் ஸ்தான என்னும் சமசுகிருதச்சொல் உருவானது எனலாம்.
“நோற்றிட்டு, உடனாக ஐம்பொறியும் வென்றார்க்கு உவந்தீதல் தானமாகும்” என்று சீவக சிந்தாமணியார் (1546) கூறுவது போல், ” நோற்பார்க்கு மட்டுமே ஈதல் தானம் என்பது சமணர் கொள்கை. தவம் : தன் உடல் நலனுக்கும், மகிழ்விற்கும் அறிவுக் கூர்மைக்கும் செய்யப்பெறும் நோன்மை முயற்சி. நோன்மை நோற்றல் கடைப்பிடி, அஃது இருக்கை, மனவொருமை, மெய்யறிமுனைவு முதலிய விரிவு நிலைகள் கொண்டது.” என்று பெருஞ்சித்திரனார் விளக்குகிறார்.
தானம், தருமம், கொடை, ஈகை எனப் பழந்தமிழ் மக்கள் கொடுப்பதையும் வகைப்படுத்தி உள்ளனர். பொதுநோக்கம், கோவில்பணி முதலான நற்செயல்களுக்காகத் தானாக மகிழ்ந்து தருவதைத் தானம் என்றும் கேட்போருக்குக் கொடுப்பதைத் தருமம் என்றும் கல்வி, கலைகளில் சிறந்தவர்களுக்குக் கொடுப்பதைக் கொடை என்றும் எளியோர்க்கும் இரந்தோர்க்கும் அளிப்பதை ஈகை என்றும் சொல்வதே தமிழர் வழக்கு. இவ்வகைப்பாட்டின் மூலமும் தானம் தமிழ் எனப் புரிந்து கொள்ளலாம்.
“தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே”(தொல்காப்பியம், சொல்லதிகாரம், எச்சவியல் 50.1)
என்னும் தொல்காப்பியரின் வரையறையின் அடிப்படையில் ‘தா’ என்னும் வேரிலிருந்து உருவான ‘தானம்’ தமிழ்ச்சொல்லே என அறிஞர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
தமிழ், திராவிட மொழிகள் என அழைக்கப்பெறும் தமிழ்க்குடும்ப மொழிகளுக்குத் தாய், ஆரியத்திற்கு மூலம் என்றும் காட்டுவது ‘தா’ என்னும் வேர் மூலம் என்கிறார் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர். தமிழ் வேர் மூலமான ‘தா’ என்பதில் இருந்து பிறந்த ‘தானம்’ என்னும் சொல்லும் தமிழாகத்தானே இருக்கும்.
“தா என்னும் சொல் தமிழுக்கே யுரியதென்பது வெள்ளிடைமலை.” என அவரே திருக்குறள் தமிழ் மரபுரை முன்னுரையில் கூறுகிறார்.
மனுநீதி, “பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததனாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான்” எனத் தானம் வாங்குவதற்குரிய முதல் தகுதி பிராமணனுக்கே உள்ளதாகக் கூறுகிறது. இதற்குக் காரணமாக அது கூறுவது, உலகில் உள்ள நிலம், சொத்து, உடைமை, உடை ஆகிய யாவும் பிராமணனுக்குரியனவே. எனவே, பிராமணன் தானம் வாங்கினாலும், அது அவனது பொருளே, அவனது உடையே, அவனது சொத்தே, அவன் தயவினால்தான் மற்றவர்கள் அவற்றைத் துய்க்கிறார்கள் என்கிறது. ஆனால் தமிழர்களோ தம் எலும்பும் பிறர்க்கே என்னும் அன்பு நெறியில் வாழ்ந்து, பாகுபாடின்றி யாவருக்கும் தானம் வழங்குகிறார்கள்.
ஆதலின் தானம் தமிழே என்பதில் ஐயமில்லை.
இனித் ‘தவம்’ குறித்துப் பார்ப்போம்.
தவம், காடு என்னும் பொருளுடைய தவ(dava) என்னும் சொல்லில் இருந்து வந்ததாக அயற்சொல் அகராதி (பக்.236) கூறுகிறது. அஃதாவது காட்டில் மேற்கொள்வதால் அச்சொல்லில் இருந்து தவம் என்னும் சொல் வந்ததாம். தவம் என்னும் தமிழ்ச்சொல்லிற்கே காடு என்னும் பொருள் இருக்கும் பொழுது ஆரியத்தை நோக்கி ஓடுவானேன்?
தவசியர் (1), தவத்தின் (1), தவத்துக்கு (1), தவத்தோற்கே (1). தவம் (10), தவமும் (1) எனத் தவம் பற்றிய சொற்கள், சங்க இலக்கியங்களில் இடம் பெறுகின்றன.
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின். (திருக்குறள் 19)
எனத் திருவள்ளுவர் தானம், தவம் ஆகிய இரு தமிழ்ச்சொற்களையும் ஒரே குறளிலேயே பயன்படுத்தி உள்ளார்.
தவம் என்னும் சொல், வழிபாடு, இல்லறம், கற்பு, வாழ்த்துப்பா (தோத்திரம்), தவத்தைப் பற்றிக் கூறும் கலம்பக உறுப்பு, வெப்பம், காட்டுத் தீ, நோன்பு, நல் வினை, நற் செயல், நற்பயன் (புண்ணியம்) முதலிய பொருள்கள் உடைய தமிழ்ச்சொல்.
தவ வாழ்வு வாழ்பவர்களைத் தவத்தர் என்பதும், தவப்பெண்டிரைத் தவத்தி, தவப்பெண், தவமுதல்வி, தவமுதுமகள், என்றெல்லாம் அழைப்பதும் தவமுதுமகன், தவவீரர் எனத் தவவாழ்வு வாழும் ஆடவரை அழைப்பதும், தவ வாழ்க்கை வாழ்பவர்களைத் தவத்திரு எனக் குறிப்பிட்டு அழைப்பதும் தவப்பள்ளி, தவச்சாலை முதலான குடில்களும் தவவேடம், தவவேள்வி முதலாகிய சொற்களும் ‘தவம் செய்து பெற்ற பிள்ளை’ என்னும் உலகவழக்கும் தவம் என்னும் தமிழ்சொல் மக்கள் வாழ்வில் வேரூன்றி இருப்பதை உணர்த்துகின்றன.
”தானமும் தவமும் தான்செயல் அரிது” என்கிறார் ஒளவையார்.
தவம் என்றால் பற்றை நீக்கி உடலை வருத்திக் கொண்டு இறைவனை வழிபடுதல். அஃதாவது தவம் என்றால் தன்னை வருத்தி நோன்பு இருத்தல் எனப் பொருள்.
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு (திருக்குறள் 261)
எனத் தனக்கு வரும் துன்பத்தைப் பொறுத்தலும் பிறர்க்குத் துன்பம் செய்யாமையுமே தவம் எனத் திருவள்ளுவர் தவத்திற்கு இலக்கணம் கூறுகிறார். தவம் எனத் தனிஅதிகாரமே அமைத்துள்ளார். சிலர் திருக்குறளில் சமசுகிருதச் சொற் கலப்பு இருப்பதாகக் கூறினாலும் பேரா.சி.இலக்குவனார் முதலான அறிஞர்கள் திருக்குறள்முழுமையும் தனித்தமிழ்ச் சொற்களே உள்ளதாக நிறுவியுள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் பிறர் சமசுகிருதச்சொற்கள் எனக் கூறிய பாக்கியம் முதலான சொற்கள் யாவும் தமிழே என உணர்த்தியுள்ளனர்.
அறிஞர்களின் கருத்துகள், உலக வழக்கு, இலக்கிய வழக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தவம் தமிழ்ச்சொல்லே என உறுதிபடக் கூறலாம்.
ஆகவே, தானமும் தவமும் தமிழே எனத் தெளிவோம்! தமிழ் வளரத் தானம் புரிவோம்! தமிழ் பரவத் தவப்பணி மேற்கொள்வோம்!

இலக்குவனா் திருவள்ளுவன்

மின்னம்பலம், 11.08.2019

Followers

Blog Archive