Tuesday, December 27, 2022

ஆங்கில முத்திரையும் இந்தி முழக்கமும் ஏன்? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 18: இலக்குவனார் திருவள்ளுவன்



ஆங்கில முத்திரையும் இந்தி முழக்கமும் ஏன்?

– தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  18

(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  17 தொடர்ச்சி)

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் இந்தியா நாட்டியவிழா குறித்த விளம்பரங்களை எங்கும் பார்க்கலாம் அதில் ஆங்கில விளம்பரங்களிலில் ஆங்கில முத்திரை இருப்பதையும் காணலாம். தமிழக ஆட்சியாளர்களின் அறியாமைகளுள் ஒன்று ஆங்கில மடல், ஆங்கில ஆணை, ஆங்கில விளம்பரம் முதலியவற்றில் தமிழக அரசின் முத்திரையை ஆங்கிலத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது. தமிழ் முத்திரையைப் பயன்படுத்தினால் குற்றமாகிவிடும் என்ற பதைபதைப்பு அவர்களுக்கு.

சாலை அறிவிப்புகள், விளம்பரங்கள், ஆணைகள் முதலியவற்றில் ஆங்கிலக் காவல் திலகமாக உள்ள காவல்துறையின் முத்திரை ஆங்கிலத்தில்தான். சில துறைகள் முத்திரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் வைத்துள்ளன. எனினும் பெரும்பாலும் பயன்படுத்துவது  ஆங்கில முத்திரைகளைத்தான்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மின் வாரியம் முதலியவற்றில் ஆங்கில முத்திரைகளே கோலோச்சுகின்றன. பெரியார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில்தானே உள்ளது. அதற்கு ஏன் ஆங்கில முத்திரை? இப்படி ஆராய்ந்து பார்த்தால் பல துறைகளின் முத்திரைகள் ஆங்கிலத்திலி் உள்ளமையைக் காணலாம். இவற்றை யெல்லாம் பார்க்கும்போது அரசின் கண்கள் மூடியிருக்குமோ?

எந்த நாடாவாது வெவ்வேறு மொழிகளில் தன் முத்திரைகளைப் பயன்படுத்துகிறதா எனப் பார்த்ததில் நம் நாடு தவிர, வேறு எந்த நாடும் இல்லை.  இலங்கை அரசின் முத்திரை தமிழ், சிங்கள மொழியினருக்குப் பொதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக எழுத்துகள் அல்லது முழக்கமில்லாமல் படங்களை உடையதாக உள்ளது.  துறைகள் முத்திரைகள் பொதுவாகத் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் உள்ளன. படைத்துறை, காவற்றுறைகளில் சிங்களப்பயன்பாடு இருப்பினும் தமிழ்ப்பகுதிகளில் தமிழும் பயன்படுத்தப்படுகிறது. நான் இலங்கைக்குச் சென்றிருந்தபோது, சிங்களக்கட்டுப்பாட்டிலுள்ள ஒரு பகுதியைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்கே விடுதலைப்புலிகள் செயற்கைக் கடல் அலைகளை உருவாக்கி நீச்சல் பயிற்சி பெறும் கேணி இருந்தது. வாயில் முதற்கொண்டு வழியெங்கும் சிங்களமே இருந்தது. நான் பொறுப்பிலுள்ள ஒருவரிடம், “ஏன் சிங்களத்தில் மட்டும் குறித்துள்ளீர்கள்” என்றேன். “சிங்களப்படையினர் பயன்படுத்தும் பகுதி என்பதால் தமிழ் தேவையில்லை” என்றார். “அப்படியானால், பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைத்துள்ளீர்களே! தமிழ்மக்கள் வரவேண்டாவா? அவர்களுக்குத் தமிழில் தகவல் தேவையில்லையா?” என்றேன். “நீங்கள் கூறுவது சரிதான். நாங்கள் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விட்டபொழுது இது குறித்துச் சிந்திக்க மறந்துவிட்டோம். உயர் அதிகாரிகளிடம் கூறித் தமிழில் விளம்பரப்பலகைகள் வைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.

இலங்கைஅரசு. இனவெறி பிடித்த அரசாக இருந்தாலும் தமிழ்மக்கள் பயன்பாட்டுப் பகுதிகளில் தமிழ் இருக்க வேண்டும் என்பதில் கருத்து செலுத்துகிறது. வருங்காலத்தினர் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் ஆங்கில முத்திரைகளைப் பார்த்தால் என்ன எண்ணுவார்கள்? “ஆங்கில வெறி பிடித்த அரசு ஆட்சி செய்துள்ளது” எனப் பிழைபட எண்ண மாட்டார்களா? இந்த அவச்சொல் நம் அரசிற்குத் தேவைதானா? சிங்கள வெறி அரசினும் மோசமான ஆங்கில வெறி பிடித்த அரசாக வரலாற்றாசிரியர்கள் எழுதி வைக்க மாட்டார்களா? இதைத்தான் அரசு விரும்புகிறதா?

தமிழ்நாட்டில் தனித்தீவாகச் செயற்பட்டு வருவது உயர்நீதிமன்றம். தமிழ்ப்பற்று மிக்க நீதிபதிகள் பலர் உள்ளனர். அயல்மாநிலத்திலிருந்து வந்து பதவி யேற்றாலும் தமிழின் மீதுள்ள தங்கள் காதலை வெளிப்படுத்திப் பேசுகின்றனர்.  ஆனால் உயர்நீதிமன்ற முத்திரை இந்தி முழக்கத்துடன் கூடிய ஆங்கில முத்திரையாகத்தான் உள்ளது. நம் மாநிலத்தின் பெயரை, 1969 சனவரி 14இல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார் பேரறிஞர் அண்ணா. ஆனால், இன்னும் இந்தத்தகவல் உயர்நீதிமன்றத்தின் செவிகளில் சேரவில்லையோ! உயர்நீதி மன்றத்தின் பெயரைத் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று குறிக்கத்தான் ஒன்றிய அரசின் ஆணை தேவைப்படலாம்.  ஆனால், தமிழ்நாடு அரசு ‘மெட்ராசு’ என்பதைத் தமிழில் ‘சென்னை’ என்று குறிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தபின்பு முன்னோடியாக உயர்நீதிமன்றம்தானே அவ்வாறு பயன்படுத்தி யிருக்க வேண்டும். (17.07.1996, சட்டப்பேரவையில் முதல்வர் கலைஞர் அறிவிப்பு). ஆனால் இன்னும் மெட்ராசுதான். சென்னை இல்லை. (இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள உயர்நீதி மன்றங்கள், பிற நீதிமன்றங்கள் யாவுமே அந்தந்த மாநில மக்கள் மொழியை முழுமையாகப் பயன்படுத்தும் நிலை வரவேண்டும்.)

தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் வேண்டுகோளை ஏற்றுப் பேரறிஞர் அண்ணா ‘வாய்மையே வெல்லும்’ என அரசின் முழக்கத்தைத் தமிழில் குறித்தாரே! உயர்நீதிமன்ற முத்திரையில் மட்டுமில்லை. தமிழ்நாட்டரசின் ஊர்க்காவல் படை முத்திரையிலும் இந்தி எழுத்துகளில்தான் முழக்கம் உள்ளது. தமிழ்நாட்டரசின் கட்டுப்பாட்டில்  ஊர்க்காவல் படை இல்லையோ! இந்தித்திணிப்பை எதிர்ப்பதாக அரசு கூறிக் கொண்டிருந்தாலும் இவையெல்லாம் அரசிற்குத் தெரியா அளவிற்கு அரசு அறியாமையில் மூழ்கி உள்ளதா? அல்லது கண்டும் காணாமல் இந்திக்கு ஆதரவுக்கரங்கள் நீட்டுகின்றதா?  நாம்தான்  ‘தமிழ்நாடு ஊர்க்காவல் படை’ எனக் குறித்துள்ளதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தவறாக எண்ணிவிட்டோமோ!( ‘இந்தியா மை யோசனா’ என்னும் வலைப்பக்க முகவரியைப் பார்க்கும் பொழுதும் ஒன்றிய அரசின் துறைகளின் கிழ்க்குறிக்கப்படும் தளத்தைப்பார்க்கும் பொழுதும் அப்படித்தான் தோன்றுகிறது. இஃதுதான் உண்மை யென்றால் அரசு எதற்கு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இதனை வைத்திருக்கிறது எனத் தெரியவில்லை.)

இதற்கு ஒரே தீர்வு. தமிழ்நாட்டரசின் எந்த மொழி விளம்பரம், அறிக்கை, செய்தி, ஆணை எதுவாயினும் அதில் தமிழ் முத்திரை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்க வேண்டும். ஆங்கில முத்திரை செல்லத்தக்கதல்ல என அறிவிக்க வேண்டும். அதையும் மீறி ஆங்கில முத்திரையைப் பயன்படுத்தினால்  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் காரணங்கள் என்னென்ன? ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் அரசிற்குத் தெளிவு இல்லை. தான் பிறப்பித்த ஆணை தன்னையும் கட்டுப்படுத்தும் என்ற உணர்வு இல்லை. “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்று சொல்லிவிட்டால் போதும் தமிழ் வளர்ந்து விடும் என்பது அரசியலாளர்களின் நம்பிக்கை. அதுவும் ஒரு காரணம்.  இவையெல்லாம் மாறும் வரை தமிழ்நாட்டில் தமிழ் இருக்க வேண்டிய இடங்களில் பிற மொழிப் பயன்பாடு இருக்கத்தான் செய்யும். நாம் என்னதான் குரல் கொடுத்தாலும் கூக்குரலிட்டாலும் பயனில்லை.

என்றாலும் நாம் குரல் கொடுப்போம். குரல் மேல் குரல் கொடுத்தால் சிறிதேனும் பயன் இருக்குமல்லவா?

 இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

Friday, December 23, 2022

‘பள்ளி’ அறியாப் பள்ளிக் கல்வித் துறையினரை மீண்டும் பள்ளிக்கு அனுப்பலாமா? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 17: இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




பள்ளி’ அறியாப் பள்ளிக் கல்வித் துறையினரை மீண்டும் பள்ளிக்கு அனுப்பலாமா? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  17

(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 16 தொடர்ச்சி)

திட்டங்கள் மக்களுக்காகத்தான். அப்படி என்றால் திட்டங்களின் பெயர்களும் தமிழில்தானே இருக்க வேண்டும்! மக்களின் குறைகளைக் களையவும் முன்னேற்றத்திற்காகவும் பல நல்ல திட்டங்களைச் செயற்படுத்தி வரும் தமிழ்நாட்டின் அரசு அவ்வாறு கருதாதது விந்தையாக உள்ளது. உலகத் சதுரங்க விழா(44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டி: நம்ம chennai, சென்னை செசு) மாணாக்கியர், இளம்பெண்களுக்கான காவல்துறை உதவித் திட்டம்(போலீசு அக்கா’) என எதில் பார்த்தாலும் பெயர், முழக்கம், முத்திரை, விளம்பரம் என ஆங்கிலத்திணிப்பு நடந்து வருவதைப் பார்க்கிறோம். இவற்றையெல்லாம் நேற்றுகூடப் பிறமொழித் திணிப்பிற்கு எதிராகப் பேசிய முதல்வர் ஏன் கண்டும் காணாமல் இருக்கிறார் எனப் புரியவில்லை. அயற்சொற்களையும் தமிழ்ச்சொற்களாகக் கருதும் அறியாமை மிக்கவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனினும் ஆங்கிலச் சொல்லையே குறிக்கும் பொழுது எப்படி அமைதி காக்கிறார்கள்? அல்லது ஊக்கப்படுத்துகிறார்கள்?

தாங்கள் படித்த பள்ளி வளர்ச்சிக்காக அரும்பணிகள் ஆற்றியும் தத்தெடுத்தும் சிறப்பான தொண்டுகளை நம் நாட்டிலும் பிற நாடுகளில் பணியாற்றுநரும் செல்வர்களும் மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வப்பொழுது இவைபோன்ற செய்திகளைப் படிக்கும் பொழுது அவர்களைப் பாராட்டுவதுடன் ஒவ்வொரு பள்ளியையும் இவ்வாறு தத்தெடுத்து மேம்படுத்தலாமே! அரசு இதற்கான ஒருங்கிணைப்பை  மேற்கொள்ளலாமே எனத் தோன்றும்.

இவ்வாறான பலரின் கனவு நனவாகும் வகையில் ‘தமிழ்நாடு அரசாங்கம்’ நமது பள்ளித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கல்விநிலையங்களையும் கல்வித்தரத்தையும் மேம்படுத்தும் வகையில் இத்திட்டத்தைக் கொண்டு வரும் அரசையும் பள்ளிக்கல்வித்துறையையும் பாராட்டுகிறோம். கட்டைமப்புக் குறைபாடுகளுடன் கல்வி கற்போர் இனிச் சிறப்பான கல்வி பெற வாய்ப்புகள் அமையும் என்பது மகிழ்ச்சிதானே!

தரமான கல்வியும் உணவும் பெறுவதன் மூலம் உடலும் மனமும் வலிவும் பெற வழி உண்டாகிறது. கல்வியுடன் விளையாட்டிலும் பிற கலைகளிலும் மாணாக்கர்கள் சிறப்பான தேர்ச்சி பெற வாய்ப்பு கிட்டுகின்றது. முழுமையான அளவில் பள்ளி முன்னேற்றத்தில் தமிழ் வழிக்கல்வியுடன் இத்திட்டச் செயற்பாடு இருப்பின் அறிஞர்களையும் அறிவியலாளர்களையும் உலகளாவிய போட்டிகளில் வாகை சூடும் வீரர்களையும் நாம் காண இயலும்.

இச்சிறப்பான திட்டத்தின் பெயர் என்ன? தமிழ்நாட்டரசின் திட்டமாயிற்றே தமிழில் பெயர் சூட்டக்கூடாது என்பதுதானே அதன் இலக்கணம். அப்படியென்றால் தமிழில் பெயர் இருக்காது அல்லவா? ஆம் நம் அரசின் இலக்கணத்திற்கேற்ப ‘நம்ம school’ / Namma School Foundation எனப் பெயர் சூட்டியுள்ளார்கள். இவ்வாறு பெயர் சூட்டி மூன்று தவறுகளைச் செய்துள்ளது அரசு. பேசுவதுபோல் எழுதக்கூடாது. எழுதுவதுபோல் பேச வேண்டும் என்கிறார்கள் அறிஞர்கள். அவ்வாறு இல்லாமல் நமது என்று சொல்லாமல் நம்ம எனக் குறித்துள்ளார்கள். கேட்டால் அப்பொழுதுதான் உரிமையும் நெருக்கமும் இருக்கும் என்பார்கள். சரி, இதனை மன்னிக்கலாம் என்றால் அடுத்து school என்னும் ஆங்கிலச் சொல்லை ஆங்கில எழுத்திலேயே குறித்துள்ளார்கள். school என்றால் பள்ளி எனத் தெரியாதோ இவர்களுக்கு. அப்படிஎன்றால் இவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் தமிழ் பயில.

மூன்றாவதாகச் சில இடங்களில் Foundation என ஆங்கிலத்திலும் சில இடங்களில் ஒலி பெயர்ப்பிலும் குறிப்பிட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் செயற்படுத்தப்படும் திட்டத்திற்கு ஏன் இந்த மொழிக்கொலை.  ‘நமது பள்ளி நிறுவனம்’ எனலாம். அல்லது ‘நம் பள்ளிப் பீடம்’ எனலாம். ஆங்கில வழியில்தான் சொல்ல வேண்டும் என்றில்லை. ‘நம் பள்ளிப் பெட்டகம்’ எனலாம். இவ்வாறு சொல்லும் பொழுது நமக்குரியது என்ற உரிமை தொனிக்கத்தானே செய்கிறது. நமது பள்ளிக்காக நிறுவப்பட்டது என்னும் பொருளில் நிறுனம் என்றோ, பீடு(சிறப்பு/வளம்/பெருமை) உடைய அமைப்பு என்னும் பொருளில் பீடம் என்றோ, பள்ளி வளர்ச்சிக்கான பணப்பேழை என்னும் பொருளில் பெட்டகம் என்றோ சொல்கையில் கிடைக்கும் பொருள் பொதிந்த சிறப்பு ஆங்கில ஒலிபெயர்ப்பில் இல்லையே!

13ஆம் நூற்றாண்டில் தமிழுடன் சமற்கிருதச் சொற்களைப் புகுத்தி உருவாக்கப்பட்ட நடை மணிப்பிரவாளம் ஆகும். இதனால், தமிழ் கேடுற்றது; பாழ்பட்டது; சிதைந்து போனது; தான் வழங்கும் பரப்பில் குறைந்து போனது. ஒரு வழியாகத் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தொடங்கிய தனித்தமிழ்நடை எழுச்சியால் மக்களிடையே தனித்தமிழ் உணர்வு அரும்பிற்று. இவர் வழியில் நடைபோட்ட அறிஞர்கள் பிறரின் முயற்சிகளால்   மணிப்பிரவாளம் மறைந்தது. ஆனால், அந்தோ பரிதாபம்! தமிழைக் கெடுக்க வென்றே பிறந்த சிலரால் புதிய வகை மணிப்பிரவாளம் தோன்றியது. தமிங்கிலம் என்று சொல்லப்படுகின்ற அதனால் ஆங்கிலச் சொற்களும் தொடர்களும் தமிழில் கலந்து எழுதத் தொடங்கினர். இந்த நிலை இன்று மிகுதியாகித் தமிழை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கிறது.

இந்த அழிவிலிருந்து காக்க வேண்டிய பொறுப்பு அரசிடம் உள்ளது. ஆனால், அரசே இத்தகைய அழிவை முன்னெடுத்துச் செல்கிறது. காப்பானே கள்வன் ஆனால் என் செய்வது? காக்கவேண்டியவனே கொலைகாரனானால் யாரிடம் முறையிடுவது?

அதிகாரிகளை ஆற்றுப்படுத்த வேண்டிய அரசும் அரசிற்கு வழிகாட்ட வேண்டிய அதிகாரிகளும் தமிழ்க் கொலைச்செயலில் ஈடுபட்டால் தமிழ்விரைவில் அழியாதா? இதனால், தமிழினம் மறைந்துபோகாதா? தமிழ்நாடு என்பது இல்லாமல் போகாதா? இந்தியத்துணைக்கண்டம் முழுவதும் ஒரு காலத்தில் ஆட்சி செய்த தமிழ் இத்தகைய மொழிக்கொலைகளால்தான் பெரும்பரப்பில் அழிந்து சுருங்கியது என்பதை அறிந்த பின்னும் நாம் மொழிக்க்கொலையில் தொடர்ந்து ஈடுபடலாமா? தமிழறிஞர்களே! நீங்கள் ஏன் உறங்கிக் கொண்டுள்ளீர்கள்?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள் 448)

என உணர்ந்து செயற்படாவிட்டால், நீடிக்க வேண்டிய நல்லரசு நிலை கெட்டுப் போகாதா?

ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களும் அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்களும் வேடதாரிகளாக இருக்கக் கூடாது. இவர்களின் சொல் தமிழாகவும் செயல் ஆங்கிலமாகவும் இருந்தால் இவர்களைப்பற்றி மக்கள் என்ன எண்ணுவார்கள்? நம்பிக்கை வைப்பா்களா? என்றெல்லாம் எண்ண மாட்டார்களா?

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,

வஞ்சனை சொல்வா ரடீ! – கிளியே!

வாய்ச் சொல்லில் வீரரடி.

எனப் பாரதியார் பாடலைக் கூறி எள்ளி நகையாடமாட்டார்களா?

உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்!

என வள்ளலார் இராமலிங்க அடிகளார் வழியில் சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் உள்ளவர்களை உதறித்தள்ள முன் வரமாட்டார்களா?

எனவே, பள்ளிக்கல்வித்துறையும் அரசும் விரைந்து செயற்பட்டு, இத்திட்டத்தின் பெயரை நல்ல தமிழில் சூட்ட அன்புடன் வேண்டுகின்றோம். ஒன்றிய அரசு இந்தியில் திட்டங்களுக்குப் பெயர்வைப்பதாகக் குற்றம் சாட்டும் நாம், நமது திட்டங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதை உணர்ந்து பிற திட்டங்களின் பெயர்களையும் தமிழில் மாற்றவும் இனித் தமிழில் சூட்டவும் வேண்டுகிறோம்!

ஆங்கிலக் காவல் அரசாக இல்லாமல் தமிழ்க்காவல் அரசாகத் திகழ வேண்டுகிறோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, December 20, 2022

அமைச்சரவையில் உதயநிதியின் எழுச்சி மிகு உதயம்– இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




அமைச்சரவையில் உதயநிதியின் எழுச்சி மிகு உதயம்!

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்

(திருவள்ளுவர், திருக்குறள் 1023)

சட்ட மன்ற உறுப்பினரான மு.க.தா.உதயநிதி, கார்த்திகை 28,2053/14.12.2022 அன்று அமைச்சரானார்.

உதயம் என்பது, எழுதல், மேலெழும்புதல், தோன்றுதல், பிறத்தல் முதலிய பொருள்களையுடைய தமிழ்ச்சொல்லே. கீழ்த்திசையிலிருந்து மேலெழும்பும் சூரியனை உதய சூரியன் என்பதும் தமிழே! உதயநிதியும் அமைச்சரவையில் உதித்துள்ளார். அவரது கட்சியினரில் அவர் ஆதரவாளர்கள் விரும்பியவாறும் பல தரப்பாரும் விரும்பியோ விரும்பாமலோ எதிர்பார்த்தவாறும் ஊடகங்களில் உலா வந்த செய்திகளின்படியும்  தமிழக அமைச்சர்களுள் ஒருவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவரின் பன்முகச் செயற்பாடு பாராட்டும்படியே உள்ளது. 2009 இல் ‘ஆதவன்’ திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சிறுவேடத்தில் அறிமுகமானது முதல் 2022  ‘கலகத்தலைவன்’ வரை (வெளிவர உள்ள இரு படங்களையும் சேர்த்து) 18 படங் களில்  நடிகராகத் தன் நடிப்பாளுமையை வெளிப்படுத்தியுள்ளார்.

2008 இல் ‘குருவி’ திரைப்படம் முதல் 17 படங்களின் உருவாக்குநராகவும் 2010             ‘விண்ணைத்தாண்டி வருவாயா?’ முதல் 7 படங்களின் வழங்குநராகவும் இருந்து தன் திரையாளுமையை வெளிப்படுத்தியுள்ளார்.

2018 மார்ச்சு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2019-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகச் சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார். இதன்மூலம் மக்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். அரசியலில் பட்டறிவை வளர்த்துக் கொண்டார் 2019 சூலை 7 அன்று திமுக இளைஞர் அணிச் செயலாளரானார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு  வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினரானார். இத்தொகுதியில் இவர் 67.89 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது இவருக்கு உள்ள மக்கள் ஆதரவைக் காட்டுகிறது.

இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு, இத்துறைகளுடன்  சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள் ஆகிய துறைகளும் பொறுப்புகளாக வழங்கப்பட்டுள்ளன. இவை இளைஞர்களுடனும் மக்களுடனும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தும். தன்னுதவிக் குழுக்கள், சிறு தொழில்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி ஊரக வளரச்சி மூலம் தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல இயலும்.

பதவியேற்றபின் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவர் தெரிவித்தவை இவர்மீது நம்பிக்கை வைக்கச் செய்கிறது.  அவர், “என் மீது குறையுரைகள் வந்து கொண்டே தான் இருக்கும். குறையுரைகளுக்கு எனது செயல்பாடுகள் மூலம் விடை அளிப்பேன். முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாகச் செயல்படுவேன். விளையாட்டு வீரர்களுக்கு ஊக்குவிக்கும் பணிகளில் ஈடுபடுவேன். தமிழ்நாட்டை விளையாட்டுத் தலைநகராக மாற்றுவோம் எனத் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். அதை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் சிற்றரங்கம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறியுள்ளார்.

வழித்தோன்றலால் கிடைத்த பதவி என்பதற்குப் பிறகட்சிகளிலும் பிற மாநிலங்களிலும் பல நாடுகளிலும் இவ்வாறுள்ள சூழலை எடுத்துக் கூறி இங்கு மட்டும் தவறா எனக் கேட்டால் இயல்பாக இருந்திருக்கும். அவ்வாறில்லாமல் தன் செயல்பாட்டால் விடையிறுப்பேன் என்பதால், அவ்வாறே வினைத்திறனுடன் செயல்பட்டுத் தகுதியினால் பெற்ற பதவி என மக்கள் நம்பிக்கையைப் பெறுவார் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு கூறுவதன் காரணம் பதவி யேற்பு விளம்பரங்களைத் தடைசெய்து முன்னெடுத்துக்காட்டாக விளங்கியுள்ளதுதான்.  பதவியேற்பு அறிவிப்பு வந்ததிலிருந்து பதவியேற்றதும் தொடர்ந்தும் வாழ்த்தியும் புகழுரைகளைச் சூட்டியும் இல்லாத அடைமொழிகளைத் திணித்தும் விளம்பரங்கள் வரும். தங்களை அடையாளம் காட்டுவதற்காகவும் அவருடன் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளவும் இதன்மூலம் ஆதாயம் அடையவும் விளம்பரங்கள் கொடுப்பர். சிலர் கட்டாயத்தால் விளம்பரங்கள் கொடுப்பர். ஆனால், உதயநிதி, அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கட்சியிதழ்களிலும் விளம்பரங்கள் வழங்கத் தடை விதித்து விட்டார். இதற்கு இவரை என்ன பாராட்டினாலும் தகும்.

இவர் அரசியலில் இறங்கத் தீர்மானித்த பொழுதே இவருக்கும் குடும்பத்தாருக்கும் அமைச்சர் ஆசையும் இல்லாமல் இருந்திருக்காது. ஆனால், ஆசையினால் மட்டும் உழைப்பின்றி முன்னேற எண்ணவில்லை. உழைப்பையே வழியாகக் கொண்டு தீவிரமாகச் செயற்பட்டுள்ளார். திமுக வெற்றிக்குக் கடுமையாகப் பரப்புரை மேற்கொண்டுள்ளார். சட்ட மன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றதும் தொகுதி முன்னேற்றத்தில் கருத்து செலுத்தியுள்ளார். தன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இருக்கும் பள்ளி  கல்லூரி மாணவர்களுக்குப் பாடங்கள் படிக்க உதவும் வகையில் இலவச இணைய வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளார்  தொகுதிக்கான தனித்த அலைபேசிச் செயலியை உருவாக்கியதன் மூலம் தொகுதியில் ஏற்படும் குடிநீர், மின்சாரம், கழிவுநீர் அடைப்பு போன்ற சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டுள்ளார். பிற சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு முன்னெடுத்துக்காட்டு எனச் சொல்லும் வகையில்,  தன் செயற்பாடுகளை அமைத்துக் கொண்டார். வழித்தோன்றலுக்கான பரிசு எனப் பிறர் கருதுவதுபோல் அல்லாமல், மக்கள் பணிகளின் மூலம்தான் எதையும் அடைய வேண்டும் என்ற இலட்சிய இலக்குடன் செயற்பட்டுள்ளார். எனவே, இவர் தகுதியை வளர்த்துக் கொண்டே அமைச்சராக வீற்றிருக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் எனலாம். இதற்கு இவருக்குத் தோன்றாத் துணையாக இருக்கும் இவர் மனைவி கிருத்திகா உதயநிதிக்கும் பிறருக்கும் பாராட்டுகள்.

இவருக்கு நாம் வாழ்த்துடன் சில அறிவுரைகள் கூறவும் கடமைப்பட்டுள்ளோம். தமிழ், தமிழர் நலனில் கருத்து செலுத்தும் அரசாக இருப்பினும், அடிப்படையான ஆட்சித்தமிழ்ச் செயலலாக்கம் என்பது கனவாகத்தான் உள்ளது. தமிழ் வளர்ச்சியையும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைபோல் கருதிக் கருத்து செலுத்தலாம். அதற்கு இவர் முன்னெடுத்துக்காட்டாகத் திகழ்ந்து தமிழ்ப்பயன்பாட்டில் முதலிடத்தில் இருக்க வேண்டும்.

தங்கள் பெயர்களை அன்பழகன், அறிவழகன், மதியழகன், சிற்றரசு, தென்னரசு, நெடுஞ்செழியன் என்பன போன்ற தமிழ்ப்பெயர்களாக மாற்றித் தமிழுணர்வை வளர்த்தது தொடக்கத் தி.மு.க. இன்றைய தி.மு.க. தலைவர்களோ இன்றைய தலைமுறையினர்போல் ஆங்கிலத்தின் மீது மையல் – காமமயக்கம்(மோகம்) கொண்டு ஆங்கிலப் பெயர்களைச் சூட்டுகின்றனர். அதன் ஒரு வெளிப்பாடுதான் உதயநிதி தன் திரைப்பட நிறுவனத்திற்கு (இ)ரெட்(டு) செயிண்டு/Red giant எனப் பெயர் சூட்டியதாகும். தமிழ் நூல்களில்  ‘அரக்கன்’ எனக் குறிக்கின்றனர். அஃறிணைப் பொருளான விண்மீனை அரக்கன் எனக் குறிப்பது ஏற்றதல்ல. இதன் அகன்ற பரப்பு அடிப்படையில் வியலி எனச் சொல்ல வேண்டும் என நான் முன்பே குறித்துள்ளேன்(கலைச்சொல் தெளிவோம் 29, 04.01.2015). எனவே இதன் பெயரைத் தமிழில் செவ்வியலி எனக் குறிக்க வேண்டும். தமிழில் சொன்னால் புரியாது என்பார்கள். ஆங்கிலப்பெயர் மட்டும் அனைவருக்கும் புரியவா செய்கிறது? இல்லையேல் மக்களுக்குப்புரியும் என எண்ணும் தமிழ்ப்பெயரைச் சூட்டுங்கள்.

இந்தித்திணிப்பை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு தமிழை மறக்கச் செய்து இந்தியைப் பயிற்றுவிக்கும் இன்றைய திமுகவினர்போல் இல்லாமல் நம்ம பள்ளியை நம்ம school எனக் குறிப்பிட்டுத் திட்டப்பெயரில் ஆங்கிலத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்து தமிழைத் துரத்தும் இன்றைய திமுகவினர்போல் இல்லாமல் தமிழ் வளர்க்கும் தமிழ் மகனாகத் திகழ்ந்து தலைமகனாக ஒளிர்விட வாழ்த்துகிறோம். அமைச்சர் பொறுப்பு மூலம் மக்கள் நலன்களுக்காக எண்ணுவனவற்றை எல்லாம் இனிதே நிறைவேற்றிச் சிறந்து திகழ்ந்து மேலும் மேலும் உயர்வு பெற வாழ்த்துகிறோம்.

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

உள்ளியது உள்ளப் பெறின்

(திருவள்ளுவர், திருக்குறள் 540)

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை



Monday, December 19, 2022

தமிழக வேலை வாய்ப்பு ஆங்கிலேயருக்கு மட்டும்தானோ! – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 16 – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




தமிழக வேலை வாய்ப்பு ஆங்கிலேயருக்கு மட்டும்தானோ!

(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 15 – தொடர்ச்சி)

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் தொடரில் இப்பொழுது அறநிலையத்துறை குறித்துத்தான் தொடர்ந்து எழுதியிருக்க வேண்டும். எனினும் சில ஆணைகளும் அறிவிப்புகளும் ஆங்கிலத் திணிப்புகுறித்து எழுதத் தூண்டுகின்றன. ஏற்கெனவே இது குறித்துத் தெரிவித்தாயிற்றே! மீண்டும் தேவையா என எண்ணலாம். மீண்டும் மீண்டும் ஆங்கிலத் திணிப்பைத் தொடரும் போது நாமும் அது குறித்து மீண்டும் எழுதக் கடமைப்பட்டுள்ளோம் அல்லவா?

சில நாள் முன்னர் தீயணைப்புத்துறை இயக்குநர் மாறுதலாணை, காத்திருப்பு ஆணை ஆகியவை செய்திகளில் இடம் பெற்றன. தொடர்பான ஆணைகள் ஆங்கிலத்தில்தான் இருந்தன. ஒருவேளை ஒன்றிய அரசின் ஆணைகளோ எனப் பார்த்தால் தமிழ்நாட்டரசின் ஆணைதாம்.  இதில் என்ன அதிர்ச்சி. தமிழில் இருந்திருந்தால்தானே வியப்படைந்திருக்க வேண்டும் என்கிறீர்களா? ஆம். அரசு பிறப்பிக்கும் மாறுதல் ஆணைகள், பிற ஆணைகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது உயர் அதிகாரிகளின் மூட நம்பிக்கைகளில் ஒன்று. இதே போன்ற மற்றொரு மூடநம்பி்க்கை ஆளுநர் இல்ல ஆணைகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்பது குறித்த அரசின் ஆணை, செய்திக்குறிப்புகள் ஆகியனவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்புகளும் ஆங்கிலத்தில்தான் உள்ளன.

அமைச்சுப் பொறுப்புகள் மாற்றத்தால் அமைச்சர்கள் பொறுப்பேற்கும் ஆணைமட்டும் இணைப்பில் தமிழ்ப்பட்டியலுடன் இருந்தது. பிற வெல்லாம் ஆங்கிலத்தில்தான். ஆளுநர் செயலர் அழகாகத் தமிழில் கையொப்பமிட்டுள்ளார். அப்படி என்றால் தமிழறிந்த செயலர்தான் அவர்.  ஆனால், தமிழ் தெரியா ஆளுநர் ஆங்கிலத்தில்தானே ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கை உள்ளதே! எங்ஙனம் தமிழில் ஆணைகளையும் செய்திகளையும் வெளியிடுவது? எனவே, ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன.

உ.பி. ஆளுநர் மாளிகைத் தளத்தைப் பாருங்கள். இந்தியிலும் தளம் உள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிடும் செய்திக் குறிப்புகள் யாவும் இந்தியில்தான் உள்ளன. அட்டவணையில் பொருளடக்கப் பகுதியில் மட்டும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்தியில்தான் செய்தி வெளியீடுகள். உ.பி. மாநில ஆளுநர் அம்மாநில மக்கள் மொழியில் செய்திகளை வெளியிடும் பொழுது தமிழ்நாட்டின் ஆளுநர் மாநில மக்கள் மொழியான தமிழில் செய்திகளை வெளியிடக் கூடாதா?

அமைச்சரவை பொறுப்பேற்கும் அறிவிப்பாணை, அமைச்சுத்துறை பகிர்வு ஆணை முதலியற்றைப் பாருங்கள். ஆங்கிலத்தில்தான் உள்ளன. ஆங்கிலப்புலவர்கள், அதனால் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் என எண்ண வேண்டா. ஆங்கிலத்திலும் எழுதத்தெரியாதவர்களே மிகுதி. முந்தைய ஆணைகளையும் அறிக்கைகளையும் பார்த்து, பெயர், புள்ளிவரஙக்ளை மட்டும் மாற்றிப் புதிய ஆணைகள், அறிக்கைகளை  உருவாக்குநரே பெரும்பான்மையர். இவர்களுக்குத் தமிழில் மாதிரி வரைவுகள், மாதிரி அறிக்கைகளைக் கொடுத்து விட்டால தமிழில் எழுதத் தொடங்கி விடுவார்கள். தொடர்ந்து இவ்வாறு எழுதினால், நாளடைவில் தாமாகவே தமிழில் எழுதும் திறமைகளைப் பெறுவார்கள்.

தமிழ்நாட்டிற்கு வரும் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுடன் நெருக்கம் இருப்பதாகக் காட்டிக் கொள்ளத் தமிழில் ‘வணக்கம்’, ‘நன்றி’ சொல்லியும் தமிழ் மீதான விருப்பம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டு ஆளுநராகப் பொறுப்பேற்பவர்கள், தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பவர்கள்  தமிழை மதிப்பதாகக் கூறித் தமிழ் கற்கப் போவதாக அறிவிக்கிறார்கள். அவ்வாறிருக்க ஆளுநர்களை நன்கு தமிழ் கற்கச் செய்யலாமே. இ.ஆ.ப., இ.கா.ப. அதிகாரிகள் தமிழ்த்தேர்வில் வெற்றிபெற வேண்டும் எனச் சொல்வதுபோல்,  ஆளுநர்களையும் தமிழ்த்தேர்வில் வெற்றி பெறச் செய்யலாமே! ஆளுநர்கள் தமிழ் அறியாதவர்களாக இருப்பினும் ஆளுநர் மாளிகை அறிவிப்புகள், அறிக்கைகள், ஆணைகள் தமிழில் இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். ஆளுநர் மாளிகையின் ஆட்சி மொழி என்றும் தமிழாகத்தான் இருக்க வேண்டும்.

தமிழக அரசின் தேர்வாணையம் என்பது தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்குத்தான் என எண்ணிக் கொண்டுள்ளோம். ஆனால், இந்த அமைப்பு ஆங்கிலேயர்களுக்கானதோ! இதன் இணையத்தளத்தில் தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் வெளியிடும் வசதி உள்ளது. ஆனால், பல விளம்பரங்கள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. வேலைவாய்ப்பு விளம்பரத் தொகுப்பு அல்லது தேர்வு அட்டவணைகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன. சில நேர்வுகளில் தலைப்புகளைமட்டும் தமிழில் குறிப்பிட்டு விட்டுப் பதவிப் பெயர்களை ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர். பதவிப்பெயர்களைக்கூடத் தமிழில் குறிக்கத் தெரியாதவர்களை எதற்கு வேலையில் வைத்திருக்க வேண்டும்? போதிய தமிழறிவு இல்லாதவர்கள் என அவர்களை யெல்லாம் தூக்கி எறிய வேண்டியதுதானே! தமிழறிந்த தமிழருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமே!

தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் ஆங்கிலத்தைப் பார்த்தால் நமக்கு இரத்தம் கொதிக்கிறது. இவர்களோ சடம்போல் இருக்கிறார்களே! இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. நாம் அத்துடன் ஆங்கிலத்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தையும் நடத்த வேண்டும் என அரசு விரும்புகிறதோ! கவலைப்படவேண்டா. உங்கள் விருப்பம் அதுதான் என்றால் இதே நிலை தொடர்கையில் பெரிய அளவில் ஆங்கிலத்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வரத்தான் போகிறது. அதனால் ஆங்கிலத் திணிப்பாளர்கள் நாடு கடத்தப்பட்டாலும் வியப்பதற்கில்லை. அதற்குள் அவர்கள் தம்மைத் திருத்திக் கொள்வது நல்லது.

அரசு ஒரு முறையேனும் அலுவலக நடைமுறைகளில் தமிழைப் பயன்படுத்தாத உயரதிகாரிகள், துறைத்தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சிப்பீடத்தின் அடி முதல் முடிவரை ஆங்கில வெறி ஓடி விடும். நடவடிக்கை எடுப்போம் என்றெல்லாம் வாய்ப்பேச்சு எச்சரிப்பு கூடாது. நேரடியாக நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். அதற்குத் தமிழார்வம் மிக்க முதல்வரும் தலைமைச் செயலரும் முன்வரவேண்டும். இப்பொழுது அமைச்சரவை பொறுப்பேற்றது தொடர்பான ஆங்கில ஆணைகள், அறிவிப்புகள் தொடர்பில் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அடுத்து எந்த அறிவிப்பாக, ஆணையாக இருந்தாலும் தமிழில்தான் வரும். செய்வார்களா?

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
(திருவள்ளுவர், திருக்குறள் 561)

– இலக்குவனார் திருவள்ளுவன்



Followers

Blog Archive