Sunday, December 31, 2017

நடைமுறைப் புத்தாண்டில் நனிசிறந்து வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

எல்லா நாளும் ஒரு நாளே!
இன்பமும் துன்பமும் வரு நாளே!
இன்பம் வந்தால் மயங்கா தீர்!
துன்பம் கண்டால் துவளா தீர்!
பிறர் துன்பம் நீங்க உதவிடு வீர்!
அவர்இன்பம் காண முயன்றிடு வீர்!
மொழிச் சிதைப்பரை ஒதுக்கிடு வீர்!
இனக்கொலைஞரை ஒழித்திடு வீர்!
சாதிக் கொலைகள் இல்லாத
சமயச் சண்டை மறைந்திட்ட
ஏழ்மை எங்கும் காணாத
நன்னாள்தானே எந்நாளும்!
நாளும் மாறும் நாளில் இல்லை,
உயர்வும் புகழும் வாழும் முறையும்!
அல்லன நீக்கி நல்லன எண்ணில்
ஒவ்வொரு நாளும் புது நாளே!
இலக்குவனார் திருவள்ளுவன்

Thursday, December 28, 2017

திமுக தோல்வியுறும் என்பது தாலினே அறிந்ததுதான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

திமுக தோல்வியுறும் என்பது தாலினே அறிந்ததுதான்!
 கடந்த 13 ஆண்டுகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில்  இப்பொழுது முதன் முறையாக ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆளுங்கட்சியுடன் சேர்ந்து முதன்மை எதிர்க்கட்சியான திமுகவும் தோற்கடிக்கப்பட்டு விட்டது.
 இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலில் திமுக தோற்றதன் காரணம் தாலின் என்பதுபோலும் திமுக தொண்டர்கள் விலைக்குப் போனதும்தான் எனவும் எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றன. உண்மையில் முற்றிலும் தவறான செய்திகளாகும் இவை. தினகரன், தி.மு.க. கூட்டணி என அதிமுக கூறுவது தன் தோல்வியை மறைக்கத்தான். எதிர்க்கட்சி கூட்டணி வைத்தால் தோல்வியுறும் என்றால் அதிமுக வலிமையாக இல்லை என்றுதானே பொருள்.
எதிர்க்கட்சியான திமுகவிற்கு ஆளுங்கட்சி தோற்கடிக்கப்படவேண்டும் என்பதே முதல் இலக்கு. இத்தேர்தலில் அது நிறைவேறியுள்ளது.
  தேர்தலில் தனக்கும் திமுகவிற்கும்தான் போட்டி எனத் தினகரன் சொல்லி வந்தாலும் அவருக்கும் உண்மை தெரியும். நிழலாட்சியின் செல்வாக்கைத் தரைமட்டமாக்கினால்தான் தனக்கு வாழ்வு என அறிந்தவர்தாம் அவர். அப்படியாயின் அதுதானே அதன் முதல் எதிரி. ஆனால், அவ்வாறு கூறினால் அக்கட்சிக்கு முதன்மை கொடுத்ததுபோல் ஆகி விடும் என்றுதான் திமுகதான் எதிரி என்று சொல்லி வந்தார். அதிமுகவினருக்கும் தங்கள் தலைவியின் மறைவிற்குப் பின்னர், யாரை ஏற்பது என்ற முடிவு எடுக்க வேண்டிய தேவை இருந்தது. எனவே, அடிமைக்குரலா, உரிமைக்குரலா என்ற முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். எனவே, பிற கட்சிகளைக் களத்தில் உள்ளதாகக் கருதவில்லை.
  திமுக விலைபோனதாகக் கூறுவது இத்தொகுதியில் திமுகவிற்கு ஆதரவு உள்ளதுபோன்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில்தான். பொதுவாகத் தொகுதிகளில் 15% முதல் 25% வரைதான்  திமுகவினர் இருக்கின்றனர். திமுக செல்வாக்கு உள்ள பகுதிகளில் 25% உம் குறைவான செல்வாக்கு  உள்ள பகுதிகளில் 15% உம் பிறவற்றில் இடைப்பட்ட அளவிலும் திமுகவினர் இருப்பர். அடுத்து ஆதரவாளர்களும் அதற்கடுத்துத் தேர்தல் சூழலுக்கேற்ப  ஆதரவு தரும் மக்களும் இருப்பர். (எல்லாக்கட்சிக்கும் இது பொருந்தும்.) இத்தேர்தலில் 14.53% வாக்குகள் திமுகவிற்கு விழுந்துள்ளதால் திமுகவின் அடிப்படை வாக்குகளில் மாற்றம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
 1977 இல் உருவாக்கப்பட்ட இரா.கி.நகர் ச.ம.உ. தொகுதியில் இருமுறைதான் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. (பேராயக்கட்சி இருமுறை வென்றது.) அதிமுக தொகுதி என்பதால் திமுகவினர் வாக்குகள்மட்டுமே திமுகவிற்குச் சார்பாகப் பதிவாகி இருக்கும். ஆதரவாளர் வாக்குகளும் மக்கள் வாக்குகளும் கிடைக்கவில்லை.
 இதனை எதிர்பார்த்துத், தோல்வியைத் தரும் தொகுதி என்பதால் வீண் முயற்சிகளில் தாலின் ஈடுபடவில்லை. என்றாலும் இவ்விடைத்தேர்தலில் வாக்குகளை வாங்கும் முயற்சிகளில் ஈடுபடாமை பாராட்டிற்குரியது. இதனை இனி வரும் எல்லாத் தேர்தல்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.
தேர்தல் தோல்வி குறித்து அறிய, இரா.கி.நகர்ச.ம.உ.தொகுதியில் பதிவான வாக்குகள்பற்றிய கணக்கீட்டைப் பார்ப்போம்.

அட்டவணை 1.
கடந்த முறை திமுகவின் சிம்லா முத்துச்சோழன்   பெற்ற வாக்குகள்57,420

இப்போது திமுகவின் மருதுகணேசு பெற்ற வாக்குகள் 24,651
வேறுபாடு   32,769

அட்டவணை 2. 
இப்போது தினகரன்  பெற்ற வாக்குகள்                               89,013
சிம்லா-மருது வாக்குகள் வேறுபாடு
(57,420 -24,651 =)   
32,769
திமுக பெற்ற இவ்வாக்குகள்அனைத்தும்
 தினகரனுக்குச்சென்றதாகக்கருதினால்
 தினகரன் பெற்ற  வாக்குகளுக்கும்
இதற்கும் உள்ள வேறுபாடு 
56,244

அட்டவணை 3. 
இப்போது தினகரன்  பெற்ற வாக்குகள்                                89,013
கடந்தமுறை திமுக பெற்ற வாக்குகள்57,420
கடந்தமுறை திமுக பெற்ற வாக்குகள் அனைத்தும் தினகரனுக்குச் சென்றதாகக் கருதினாலும் (89,013-57,420) மிகுதி வாக்கு  31,693

  எனவே, திமுக வாக்குகளுக்கும் தினகரன் பெற்ற வாக்குகளுக்கும் தொடர்பில்லை. கடந்த முறை திமுகவை ஆதரித்த மக்கள் இம்முறை நிலையான ஆட்சியை விரும்பித் தினகரனுக்கு அளித்த வாக்குகள் இவை.
மேலும் வேறுவகையில் வாக்குகள்குறித்த கணக்கீட்டைப் பார்ப்போம்.
இந்தமுறை தினகரன் பெற்ற வாக்குகளும்(89,013) அதிமுகவின் மதுசூதன்ன் பெற்ற வாக்குகளும்(48,306) சேர்த்தால் வரும்வாக்குகள் எண்ணிக்கை 1,37,319 கடந்தமுறை செயலலிதா பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 97,037
இரண்டிற்கும் உள்ள வேறுபாடு  = அதிமுக கூடுதலாகப்பெற்ற வாக்குகள் = 40,282
 அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருந்தாலும் யாரும்திமுக பக்கம் செல்லவில்லை என முன்பே சுட்டிக்காட்டியிருந்தோம். திமுகவில் பிளவு ஏற்பட்டு  அதிமுக உருவானாலும் பின்னர் மதிமுக உருவானாலும்  தேர்தலில் பெறும் ஒட்டுமொத்த வாக்குகள் எண்ணிக்கை கூடத்தான் செய்கின்றது. அதுபோல்தான் அதிமுகவில் பிளவு ஏற்பட்டாலும் அவற்றின் இணைந்த ஆதராவாளர் எண்ணிக்கை மிகுவதாகவே உள்ளது.
தினகரனை அனைவரும் நடைமுறைப்படித் தற்சார்பர்(சுயேச்சை) எனக்கூறினாலும் அவரைப் போட்டி வேட்பாளராகக் கருத வேண்டும். ஆனால், மக்கள் இவரை உண்மையான அதிமுக எனக் கருதுகின்றனர்.
இத்தகைய அரசியல் சூழல்தான் தினகரனின் வெற்றிக்குக் காரணம்.
 மற்றொன்று அலைபேசி வழக்கு முடிவிற்கு அஞ்சி கனிமொழியைப்பரப்புரைக்கு பயன்படுத்தவில்லை எனச் செய்திகள் வந்தன. இவ்வழக்குச் சிலருக்குப் பொய்யாயும் சிலருக்குப் பழங்கைதையாயும் போய்விட்டன. இதன் முடிவு எவ்வாறிருப்பினும் தேர்தல் முடிவை அது பாதிக்கப் போவதில்லை என்பதைத் தி.மு.க. உணரவில்லை. அதே நேரம் தமிழீழத்தில நடைபெற்ற இனப்படுகொலையின்பொழுது திமுக நடந்துகொண்ட முறைக்கும் படுகொலையின் சூத்திரதாரி எனப்படும்  பேராயக்கட்சியான காங்கிரசின் மீதும் இன்னும் மக்களிட்டையே ஆறாச் சினம் உள்ளது. இஃது உண்மையெனின்  வைகோவிற்கு – மதிமுகவிற்கு – ஆதரவு இல்லையே எனக் கருதுகின்றனர். வைகோவிற்கு மக்களிடம் மதிப்பு உள்ளது. தேர்தல் களத்தில் அவருக்கு ஆதரவு இல்லை .ஆனால், தேர்தல் களத்தில் ஆதரவு இருந்த திமுகவிற்கு, ஆதரவிற்குக் காரணமான  தமிழின உணர்வு மங்கியதால் ஆதரவு தேய்ந்து விட்டது. எனவே,  வேறு காரணங்களை எண்ணி ஆராயாமல், தவறுகளுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்பத இழந்த ஆதரவைப் பெருக்கும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகச் செயலபட்டோம் எனப் பழங்கதை பேசாமல், இனப் படுகொலையின் பொழுதிலான செயல்பாடுகளுக்கும் ஈழத்தமிழர்களைச் சிங்களத்தமிழர்கள் எனத் திரித்துக் கூறியதற்கும் மன்னிப்பு கேட்டு, மனம் மாறினால் மக்கள் இவர்கள் பக்கம் திரும்புவர் என்பதை உணர வேண்டும்.
திமுகவின் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆராயாமல், கொள்கைச்சறுக்குகளை ஆராய்ந்து, தமிழ்சார்கொள்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தால், இனி வரும்தேர்தல்களில் வெற்றிக்கனிகளைப் பறிக்கலாம்.
  • இலக்குவனார் திருவள்ளுவன்

அதிர வைத்த தினகரனின் அதிரடி வெற்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்

அதிர வைத்த தினகரனின் அதிரடி வெற்றி! 

  இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், கனவுகளில்  வாழ்ந்தவர்களும் அவர் வெற்றி பெறக்கூடாது எனக் கருதியவர்களும் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற எண்ணிய முகவர்களும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். சின்னமும் கட்சியும் ‘மத்திய ஒத்துழைப்பால்’ கிடைத்தமையால் மக்கள் ஆதரவும் கிடைக்கும் எனத் தப்புக் கணக்கு போட்டமையால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
 ‘’தினகரன் வெற்றி பெற்றால் பாசகவின் பிடி தளரும் என்ற நம்பிக்கையில் உள்ளவர்கள் அவர் வெற்றி பெறுவதை விரும்புகின்றனர்” என முன்னரே குறிப்பிட்டுள்ளோம். தினகரனின் செல்வாக்கு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்வதாகவும் தெரிவித்து இருந்தோம். இவற்றைப் புரிந்து கொள்ளாமல், அச்சத்தாலும் ஆசையாலும் பாசகவின் அடியில் வீழ்ந்தவர்களால் வெற்றிக்கனியைச்  சுவைக்க இயலவில்லை. இந்த ஏமாற்றம் அவர்களை மேலும் அடிமைத்தனத்தில் மூழ்கடிக்கச் செய்தால் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல!
  தினகரன், குடும்பத்தினர், நண்பர்கள் எனப் பல தரப்பாரிடமும் மத்திய ஏவுகணைகளான அதிரடி ஆய்வுகள், வழக்குகள், சிறைப்பிடிப்பு போன்றவற்றால் மிரட்டி ஆதரவை ஒழிக்க  ஆக்கலாம்; ஆட்சியைத் தொடரலாம் என்ற ஆசைவலையில் ‘மத்திய முதலாளிகள்’  இவர்களைச் சிக்க வைக்கலாம். ஆனால், இத்தகைய முயற்சிகள் தினகரனுக்கு வலுசேர்க்கும் உரமாகத்தான் அமையும். இதனை ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள் எண்ணிச்செயல்பட வேண்டுகிறோம்.
 தினகரன் வெற்றிக்களிப்பில்எதிரிகள்  விரிக்கப்போகும் வலைகளை மறந்துவிடக்கூடாது. சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பேற்கக்கூட வில்லங்கம் விளைவிக்கலாம்; சட்டமன்ற உறுப்பினர்கள் இவர் பின் நின்று இவரை முதல்வராக்கிவிடுவர் என்ற அச்சத்தில் எந்தத் தொல்லையின் எல்லைக்கும் செல்லலாம்; வழக்கம்போல் தன் வினைத்திறத்தால் அவற்றைப் புறந்தள்ளி வெற்றிகாண வாழ்த்துகிறோம்.
 நேற்றுவரை எப்படி இருந்திருந்தாலும், அதிமுகவின் பெரும்பான்மைத் தொண்டர்களும் பெரும்பான்மை மக்களும் நம்பிக்கை  வைத்துள்ளமையால், இனிமேல் நாடும்மொழியும் தனதிரு கண்கள்எனக் கருதித் தொண்டாற்றிடத் தினகரனை வாழ்த்துகிறோம்!
  தமிழ்நாட்டின் உரிமையையும் தமிழர்களின் நலத்தையும் பேணி ஈழத்தமிழர்கன் விடியலைக் காணும்வகையில் மக்கள்நல, இன நலப்பணியாற்றிப் புகழ் பெற வாழ்த்துகிறோம்.
 பாசகவின் நிழல்ஆட்சி தொடர்ந்து, பாசக தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என முயல்வோர் தவறான பரப்புரைகளையும் கணிப்புகளையும் மேற்கொண்டாலும் தெளிவாக இருந்த மக்களுக்கு வாழ்த்துகள்!
  அதிமுக வெற்றி பெற்றிருந்தால் உலகமே அவர்களை ஏற்றுக் கொண்டதுபோலும் பாசகவின் முறையற்ற செயற்பாடுகள் சரி என்பதுபோலும்  பறைசாற்றியிருப்பார்கள் அல்லவா? அப்படியானால், இடைத்தேர்தலில் தினகரன்  வெற்றி,  தமிழகமக்களின் முடிவு என ஏற்பதில் என்ன தவறுசெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர்,  வழிநடத்தத் தகுதியானவர் தினகரன் என அதிமுகவினர் கருதுவாகச் சொல்வதில் என்ன தவறு?  செயலலிதாவின் ஆளுமையைப் பாராட்டுகின்றார்களே! அந்த ஆளுமையின் உருவாக்க வலிமை  சசிகலா என மக்கள் நம்புகிறார்கள் என்பதில் என்ன தவறு?
 வாக்குகளுக்கான விலையைத் தேர்தலுக்குப்பின் தருவதாகச் சொன்ன வாக்குறுதி அல்லது முன்பணம் உரூபாய் இருபது அளித்ததால் வாக்குகள் கிடைத்துள்ளன என்பதும் தவறான வாதம். விலையை முன்னதாகவே அளித்தவரிடம் பொருளைத் தராமல் –வாக்கு அளிக்காமல் – நம்பிக்கையின் அடிப்படையில் வாக்கு அளித்தனர் என்பது தினகரன் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என  எதிர்த்தரப்பினரும்  ஒப்புக்கொள்வதாகத்தானே பொருள்.
  தேர்தல் இலக்கண மாயைகளை உடைத்தெறிந்துள்ளனர் இரா.கி.நகர் வாக்காளர்கள். சாதி, இன அடிப்படையில் வாக்குகளை அள்ளலாம் என்னும் எண்ணத்திற்கும் அடிவிழச்செய்து வாக்களித்துள்ளனர்.
 முதன்மை வேட்பாளர்கள் பெயர்களில் சிலரைப் போட்டியிடச்செய்வதன் மூலம் வாக்குகளைப் பிரிக்கலாம் என்னும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். இடைத்தேர்தலில், தினகரன் என்னும் பெயருடைய  பிற மூவர் முறையே, 104 வாக்குகளும் 56 வாக்குகளும் 138 வாக்குகளும் மட்டுமே பெற்றுள்ளனர்.  மதுசூதனன்  பெயருடைய வேறிருவர் முறையே 59 வாக்குகளும் 137 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
 நாடாளுமன்ற உறுப்பினர்களே செல்லா வாக்குகளைப் பதியும் நம்நாட்டில் இரா.கி.நகர்தொகுதியில் ஒரு செல்லா வாக்குகூடப் பதிவாகவில்லை.
 கட்சிக்கு அப்பாற்பட்டும் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. விலைபெற்றமையால் விளைந்த விளைவாக இதனைக் கருத இயலாது. தமிழ்மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்கும் அடிமையாட்சி வேண்டா எனக் கருதும் மக்களின் தீர்ப்பே இது.
 இவற்றை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். இரு தரப்பினரும் பணம்அளித்து ஒரு தரப்பை மட்டும் மக்கள்  ஆதரிக்கிறார்கள் என்றால் பணத்திற்கு அப்பாற்பட்ட காரணிகளே வெற்றியைத் தீர்மானித்துள்ளது எனலாம். எனவே, தினகரனின் வெற்றி என்பது வாக்காளர்கள் விரும்பி அளித்த வாக்குகளால்  பெற்றதே!
 இவ்வெற்றி தொடர்வதும் தொடராமல் போவதும் சசிகலா குடும்பத்தினர் கைகளில் உள்ளது. இருப்பினும் இப்போதைய  வெற்றிக்கு உழைத்தவர்களுக்குப் பாராட்டுகள்!
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின். (திருவள்ளுவர், திருக்கறள் 540)
எனக் குறிக்கோளை அடைவதில் ஊக்கத்துடன்  செயல்பட்டு அதனையே நாளும் எண்ணி வெற்றி கண்ட சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பேற்க இருக்கும் தினகரனுக்கு வாழ்த்துகள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை -அகரமுதல 218, மார்கழி 09 – மார்கழி 15,  2048 /   திசம்பர் 24  – திசம்பர் 30,  2017

Friday, December 22, 2017

இராகுலுக்கு வாழ்த்துகள்! ஆனால் …… இலக்குவனார் திருவள்ளுவன்

இராகுலுக்கு வாழ்த்துகள்!  ஆனால் ……

இந்தியத் தேசியப் பேராயத்தின் எண்பத்தேழாவது தலைவராகப் பொறுப்பேற்றுள்ள இராகுலுக்கு வாழ்த்துகள்!
1885 இல் தொடங்கப்பெற்ற  பேராயக்கட்சியில் 1919 இல்  36 ஆம் தலைவராகப் பொறுப்பெற்றார் மோதிலால் நேரு. இவருக்குப்பின்  100 ஆண்டுகளை நெருங்கும் இந்த ஆண்டில் இக்குடும்பத்தின் 6ஆவது வழிமுறையினராக, இக்கட்சியின் 87 ஆம் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் இராகுல்(காந்தி);
ஆள் எண்ணிக்கை அடிப்படையில் 6 ஆவது வரிசைமுறை என்றாலும் (சவகர்லால் நேரு 8 தடவை தலைவர் பொறுப்பேற்றதுபோல்) பதவிஆண்டு வரிசையில் குடும்பத்தில் 44ஆம் வரிசையில் பொறுப்பேற்றுள்ளார். அஃதாவது 132 ஆண்டுகாலப் பேராயக்கட்சி வரலாற்றில்  மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக நேரு குடும்பமே கட்சியை ஆட்சி  செய்து வருகிறது. இத்தகுதியின் அடிப்படையில் இராகுல் பெறுப்பேற்றாலும் எளிமையை விரும்புவதாலும் மக்களாட்சி முறையில் நாட்டம் காட்டுவதாலும் இவர் தனித்தன்மையைப் போற்றிச் சிறப்பாகச் செயல்படுவார் என எதிர்பார்க்கலாம். 
இவர் குடும்பத்தினருக்கு நெகர் என்ற  சொல் மருவி  நேரு என்று மருவி நிலைத்தது. அதுபோல் ஃபெரோசு செகாங்கிர் கந்தி(Feroze Jehangir Ghandy) என்னும் இவரின் தாத்தா பெயரிலுள்ள கந்தி என்பது காந்தியாயிற்று. அதனால் அறியாமக்கள் காந்தி குடும்பத்தைச்  சேர்ந்தவர்கள் என இவர்கள் குடும்பத்தினரைக் கருதும் நல்வாய்ப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தகவல் களஞ்சியமான விக்கிபிடீயா தளத்திலேயே ‘’இவர் நேரு-காந்தி குடும்பத்தைச் சார்ந்தவர்’’  என  எல்லா மொழிகளிலும் குறிக்கப்பட்டிருக்கும பொழுது பாமரர்கள் இவ்வாறு தவறாக எண்ணுவதில என்ன  வியப்பு?
(  https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF) எனவே, குடும்பச்சூழலால் உந்தப்பட்டுத் தலைவராகியுள்ளார். எனினும் தன் குடும்பத்தினருக்கும் கட்சிக்கும் நாட்டிற்கும் நற்பெயர் கிடைக்கும் வகையில் பணியாற்றிச் சிறந்திட வாழ்த்துகிறோம்.
ஆனால், ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைகளால் அழிவுற்ற துயரத்தால் வருந்திக் கொண்டிருப்போர் இவ்வாறு வாழ்த்துவதையே தவறாக எண்ணுவர். இந்த உளப்பாங்கைப்  போக்கும் வகையில் செயல் பட இராகுலை வேணடுகிறோம்.
காசுமீருக்குத் தன்னாட்சி வழங்க வேண்டி இவர் கட்சியிலேயே இப்பொழுது குரல் ஒலிக்கத்   தொடங்கி விட்டது. இந்தியா என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடு என்பதையும் இந்நாடு நிலைத்து நிற்க மொழிவழித் தேசிய இனங்களின் கூட்டாட்சியாக இந்நாட்டை அமைக்க வேண்டும் என்பதையும் நினைத்துக் கட்சியின் வழிக் குரல் கொடுத்துகூட்டரசு நாடாக நம் நாட்டின் அமைப்பை மாற்றுமாறும்  வேண்டுகிறோம்.
இதன் தொடக்கமாக வடக்கே காசுமீரிலும் தெற்கே தமிழ்நாட்டிலும் முதலில் தன்னாட்சி அமைந்திட ஆவன செய்யுமாறும் வேண்டுகிறோம்.
இவரது தந்தை இராசீவு கொலையில் உண்மைக்குற்றவாளிகள் தப்பி, அப்பாவித் தமிழர்கள் சிறைக்கொட்ட்டியில் உள்ளனர். பலர் தூக்குத் தண்டனையைச் சந்திக்கும் சூழலில் துயரக்கடலில் உள்ளனர். உண்மையான குற்றவாளிகளையே ‘பல்லுக்குப்பல்’ என்ற முறையில் தண்டிப்பது தவறு என்னும் பொழுது அப்பாவிகளைத் தண்டிப்பது ஏன்? தனக்கெனத் தனிச்சிந்தனைப்பாதையை வகுக்க விழையும் இராகுல் இவர்களின் விடுதலைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
ஒரு குடும்பத்தலைவரின் மரணத்திற்கு ஓர் இனத்தையே அழிப்பது என்பது பெருங்  கொடுஞ்செயல். அப்படியானால் ஓர் இனத்தின் பேரழிவிற்கு யாரை அழிப்பது?  ஆனால், மாற்றாக யாரையும் அழிக்க வேண்டா. விடுலைக்குக் கொடுத்த விலையாகக்  கருதி  தமிழீழம் மலரக் குரல் கொடுக்க வேண்டும். இவர் முயற்சியால் தமிழ்ஈழம்  மலர்ந்தது எனில் அதுவே கழுவாயாக – பிராயச்சித்தமாக – அமையும்.  இவர் தாய் சோனியா உலகின் மூத்த மொழியான  உயர் தனிச் செம்மொழியான தமிழின் செம்மொழித்தன்மைக்கு அறிந்தேற்பு வழங்கினார். இவர் தமிழ்ஈழத்திற்கு அறிந்தேற்பு வழங்கி நிலையான புகழ் பெற வேண்டுகிறோம்.
தமிழையும் தமிழ் வரலாற்றையும் கற்றுத் தமிழுக்குத்  தொண்டாற்றவும் கட்சியில் உள்ள அடிமைத்தனத்தைப் போக்கி அந்தந்தப் பகுதியின் தலைவர்களை மதித்து அவர்கள் வழி உண்மையை அறிந்து அதன்படிச் செயல்படவும் வாழ்த்துகிறோம்.
வளமும் வலிமையும் மொழிச்சமஉரிமையும் பகுத்தறிவும் உள்ள பண்பான நாடாக நம் நாட்டைமாற்றத் தொண்டாற்றிச் சிறந்திட வாழ்த்துகிறோம்!
குடும்பப்பரம்பரைத் தகுதியில் இந்தியத் தேசியப் பேராயத்தின்(காங்கிரசுக்கட்சியின்) தலைவராகப் பொறுப்பேற்றுள்ள இராகுல்
 மேற்குறித்தவாறு செயல்பட்டுத் தன்னால் கட்சிக்கும் நாட்டிற்கும்பெருமை  சேர்க்க வேண்டுகிறோம்.
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
(திருவள்ளுவர், திருக்குறள் 956)
[மாசில்லாக்குடிப்பண்புடன் வாழ்வோம் எனக் கருதி வாழ்வோர், வஞ்சனையுடன் தகுதியில்லாதவற்றைச் செய்ய மாட்டார்கள்.]
தகுதியானவற்றை ஆற்றித் தகுதியால் தகைமைபெற இராகுலை வாழ்த்துகிறோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 217, மார்கழி 02 – மார்கழி 08,  2048 /   திசம்பர் 17  – திசம்பர் 23,  2017

Monday, December 18, 2017

அறவாணர்களே ஆட்சிக்குத் தேவை! அறவழியிலே தேர்தல் தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்

 

அறவாணர்களே ஆட்சிக்குத் தேவைஅறவழியிலே தேர்தல் தேவை!

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். (திருவள்ளுவர்திருக்குறள் 256)
உண்பதற்காக உயிரினங்களைக் கொல்ல விரும்புவோர் இல்லாவிட்டால் இறைச்சியை விலைக்குத் தர யாரும் முன்வரமாட்டார்கள் என்கிறார் திருவள்ளுவர். வாக்களிக்கக் கையூட்டு அல்லது அன்பளிப்பு என ஏதும் வாங்குவார் இல்லையெனில், அவ்வாறு தர யாரும் முன்வரமாட்டார்கள் என்று சொல்வதற்கும் பொருந்தும்.
“நம்மிடம் பறித்த பணத்தைத்தான் நமக்குத் தருகிறார்கள்”
“வெற்றிக்குப் பின்னர் பண அறுவடை  செய்யப்போகிறவர்கள் அதில் சிறு பகுதியை நமக்குத் தரும் பொழுது வாங்கினால் என்ன?”
“நாம் வாங்காவிட்டாலும் நமக்குத் தந்ததாகக் கணக்கு காட்டப் போகிறார்கள். அதற்கு நாமே வாங்கினால் என்ன ?”
என்பனபோன்ற எண்ணங்கள் தேர்தலுக்கான அன்பளிப்புகளை வாங்கத் தூண்டுகின்றன. அதுமட்டுமல்ல வாக்காள மக்களே, யார் என்ன தருவார் என்ற எதிர்பார்ப்பிலும் இருப்பதால், வேட்பாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டு அன்பளிப்பு மழையைப் பொழிகின்றனர்.
மக்களே வளர்த்தெடுக்கும் இம் முறைகேடு வளர்நிலையில் உள்ளதால் தடுக்கும் முயற்சிகள் பயனற்றுப் போகின்றன. தேர்தல் அன்பளிப்பு கொடுக்கும் வேட்பாளரைத் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்தால், மற்றொரு வேட்பாளரை இதே  போன்ற முறையில் களமிறக்கும் கட்சிகள். அப்படியானால் தடை செய்யப்பட வேண்டியவை தேர்தல்அன்பளிப்புகளில் ஈடுபடும் கட்சிகள் அல்லவா? ஆளுங்கட்சிகளே இத்தகைய  முறைகேடுகளில் ஈடுபடுவதால், அதற்கு எவ்வாறு வாய்ப்பு வரும்?
கட்சித் தொண்டர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் வழிச்செலவு, உணவு, தங்குமிடம் போன்ற செலவினங்களுக்கு இவற்றை விருந்தோம்பும் கடமையாகக் கருதிப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் கட்சியினர் அல்லரோ! அவர்கள் வாக்காளர்களையும் தொண்டர்களாக்காட்டி அவர்களுக்குத் தர வேண்டியவற்றைத் தந்து தம் வயம் இழுப்பார்கள் என்பதுதானே நடைமுறையாக மாறிவிடும்.
 ஒருவர் ஒரு கட்சியில்தான் தொண்டராக இருக்கு முடியும் என்று வரையறை விதித்தாலும் குறுக்கு வழி காண்பதில் வல்லவர்கள் நம்மவர்களாயிற்றே! இப்பொழுதும் செய்வதுபோல்   தொண்டர்கள் மூலம் அன்பளிப்புகளைக் கொண்டு சேர்ப்பர்.
அப்படி என்றால் என்னதான்செய்வது?
வேட்பாளர்கள் செலவுகளைத் தேர்தல் ஆணையமே அல்லது அரசே ஏற்க வேண்டும் என்ற குரல் அவ்வப்பொழுது எழுகிறது. அவ்வாறு செய்யலாமா? குறுக்கு வழியில் வாழும் வேட்பாளர்களுக்காக நம்பணத்தை ஏன் வீணடிக்க வேண்டும்?
தேர்தல் செலவின  வரையறைத் தொகைக்கு உட்பட்ட செலவினத்தைவேட்பளார் அல்லது கட்சி ஆணையத்திடம் அளித்திட வேண்டும்அனைத்துச் செலவினத்தையும் தேர்தல் ஆணையமே அவர்கள்சார்பில் செலவழிக்க வேண்டும். .
தேர்தல் ஆணையத்தினர் செலவில் முறைகேடு  செய்து சுருட்ட எண்ணினால், இவ்வித்தையை அறிந்த வேட்பாளர்களும் கட்சியினரும் சும்மா இருக்க மாட்டார்கள்.
பண வலிமை இல்லா உண்மையான வேட்பாளர்  சம வாய்ப்புடன் போட்டியிடும் சூழலும் ஏற்படும்.
அரசுதான் செலவழிக்கிறதே எனக் கட்சி சார்பற்ற தன் விருப்பர்(சுயேச்சைகள்) எண்ணற்றவர் போட்டியிட முன் வரலாம்.அதைத் தடுப்பதற்கு பழந்தமிழ்நாட்டில் இருந்தமை போன்று தகுதியுடைமை, தகுதியின்மை குறித்த உரிய வழிமுறையை வகுத்துப் பின்பற்ற வேண்டும். அல்லது குலுக்கல் முறையில் இருபத்தைவர்  அல்லது குறிப்பிட்ட ஏதேனும் எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு சில வரையறைகளை வகுத்துக் கொண்டு வேட்பாளர் அல்லது கட்சி சார்பில் எச்செலவும் மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும். வீடுவீடாகச்  சென்று பரப்புரை மேற்கொள்வதால்தான் அன்பளிப்புகள் வழங்கவும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இவற்றைத் தடைசெய்ய வேண்டும்.
தொண்டர்கள் அல்லது பொறுப்பாளர்கள் கூட்டங்களும் தேர்தல் ஆணையம் மூலமே அவர்கள் முன்னிலையிலேயே நடத்தப்பெற வேண்டும். அக்கூட்டத்திலும் அன்பளிப்புகள்தடை செய்யப்பெற வேண்டும்.
அனைத்துத் தரப்பாருக்கும்  சம வாய்ப்பு அளிக்கும் வகையில் ஊடகம் மூலமான பரப்புரைகள் நிகழ்த்தப்பெற  அரசு ஆவன செய்ய வேண்டும். இவற்றால் வேட்பாளர்கள் வீடுதோறும் செல்லாமலே வீடுகளுக்குச் சென்று பரப்புரையாற்ற வழிவகுத்ததாக அமையும்.
இத்தகைய நடைமுறைகள் மூலம் அன்பளிப்பு பெற்று வாக்களிக்கும் முறையைத் தடுக்க வேண்டும்.
மக்கள் சார்பாளர்களும் அதிகாரிகளும் நேர்மையாகச் செயலாற்றுவதன் மூலம் மக்களிடையே அன்பளிப்புபெறும் எண்ணங்கள் தோன்றாச் சூழலை உருவாக்கலாம்.
எல்லாவற்றிலும் முதன்மையானது வாக்களிக்கும் கடமைக்காக அன்பளிப்புகள் வாங்குவது தீங்கானது என்றும்  வாக்கு பெறுவதற்காக அன்பளிப்புகள் கொடுப்பது  இழிவானது என்றும் மக்களை உணரச் செய்வதுதான்.
அறவாணர்களே ஆட்சிக்குத் தேவை!
அறவழியிலே தேர்தல் தேவை!
  • இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive