Sunday, May 29, 2022

திராவிட ‘மாடல்’ ஏன்? முன்முறை அல்லது நன்முறை என்று சொல்லலாமே! -இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




திராவிட ‘மாடல்’ ஏன்?

முன்முறை அல்லது நன்முறை என்று சொல்லலாமே!

தமிழுக்குத் தலைமை அளிக்கும் வகையில் செயல்படுவதைத் தமிழக அரசு இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால், சொற்கள்தாமே செல்வம். நாம் தமிழ்ச்சொற்களைக் கைவிடலாமா? பிற மொழிச் சொற்களை இறக்குமதி செய்துவிட்டுத் தமிழை வளர்க்கிறோம் என்பதில் பயனில்லையே! இதற்கு எடுத்துக்காட்டாகத் ‘திராவிட மாடல்’ என்று பயன்படுத்துவதைக் கூறலாம்.

கேம்பிரிட்சு பல்கலைக்கழக அச்சக வெளியீடாக செட்டம்பர் 2011 இல் உருவாக்கப்பட்ட ஒரு நூல் நவம்பர் 25, 2011 இல் வெளிவந்தது. அந்த நூலின் பெயர் “திராவிட மாதிரி: தமிழ்நாட்டின் அரசியல் பொருளியலை விளக்குதல் / The Dravidian Model: Interpreting the Political Economy of Tamil Nadu” என்பதாகும். இதன் ஆசிரியர்கள் ஏ.கலையரசன், எம்.விசயபாசுகர் ஆகியோர். இந்த நூலின் தலைப்பு அடிப்படையில்தான் முதல்வரும் அமைச்சர் பெருமக்களும் திராவிட மாடல் என்று கூறுகின்றனராம்.. இந்த நூலும் தலைப்பும் பிடித்திருந்தது எனில் தமிழில் கூறியிருக்கலாமே!

Model – மாதிரி என்று சொல்லலாம். அல்லது இதன் அடிப்படையில் திராவிட மாதிரியம் எனலாம். மாதிரி தமிழல்ல என எண்ணித் தவிர்த்திருக்கலாம். அதற்கு வேறு தமிழ்ச்சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர ஆங்கிலச் சொல்லை யல்ல.

எனினும், மாதிரி என்பதும் தமிழ்ச்சொல்தான்.

மாதிரி1 என்பதற்குச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி பின்வருமாறு விளக்கம் தருகிறது.

   1. உண்மைக்கு ஒத்த நிலையில் இருப்பது; pattern, sample, specimen, model.

   2. முறை; manner, way.

   3. தன்மை; kind.

     [மா = அளவு. மா → மாதிரி. ஒரே அளவுடையது, ஒன்று போலிருப்பது.]

எனவே, மாதிரி அல்லது மாதிரியம் என்று பயன்படுத்தலாம்.

அல்லது முன்முறை என்றாவது நன்முறை என்றாவது பயன்படுத்தலாம்.

1957 இல் மதுரைத் தெப்பக்குளம் எதிரில், கலைத்தந்தை தியாகராசர் ஒரு பள்ளியை நிறுவினார். அதன் பெயர் தியாகராசர் நன்முறை உயர்நிலைப் பள்ளி / THIAGARAJAR MODEL HIGH SCHOOL. (இப்பொழுது இது மேனிலைப்பள்ளியாகச் செயல்படுகிறது.) 1957 இலேயே நன்முறை என்னும் நற்றமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கையில் அது நன்றாக மக்கள் உள்ளங்களில் பதிந்திருக்கையில் நாம் அச்சொல்லையே பயன்படுத்தி  திராவிட நன்முறை என்று சொல்லாமே.

தமிழ் என்று சொல்லாமல் திராவிடம் என்று சொல்லலாமா என்ற வினா அடுத்து வருகிறது. அகநானூறு 31 ஆம் பாடலில் மாமூலனார்,  

தமிழ் கெழு மூவர் காக்கும்

மொழி பெயர் தே எத்த பன்மலை (அடி 14-15)

எனக் குறிப்பிடுகிறார். இதனை விளக்கும் பொழுது தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்,

 “இத் தமிழ் என்ற சொல் இப்பாடலில் காணப்படுகின்றதால் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் தோன்றிய “திராவிட” என்ற சொல்லே “தமிழ்” என மருவிற்று என்ற கூற்றுப் பொருந்தாப் பொய் என்று அறியலாம்” என விளக்குகிறார். ‘பழந்தமிழ்’ நூலில் தமிழ்க்குடும்ப மொழி என்றுதான் குறிக்க வேண்டும் திராவிட மொழி யல்ல என்றும் தெளிவு படுத்துகிறார். காலந்தோறும் பல்வேறு இடங்களில் ‘திராவிடம்’ என்பது தமிழைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, தமிழ் எனக் குறிப்பதே சரி. ஆனால், நாம் அரசியல் குறியீடாகத் திராவிடம் என்பதைப் பயன்படுத்துகிறோம். பகுத்தறிவு, பெண்ணுரிமை, சீர்திருத்தம், சாதி ஒழிப்பு முதலான மறுமலர்ச்சிப் பணிகளுக்குக் குறியீடாகத் திராவிடம் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்த, இருக்கும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளையும் பணிகளையும் மட்டுமே குறிப்பதால் திராவிடம் என்ற சொல்லைக் கையாளுகின்றனர். தமிழின் சிறப்பைக் கூறுவதானால் பழந்தமிழ் என்பதே சரியாக இருக்கும். ஆனால், கடந்த நூற்றாண்டு தொடக்கமான அரசியலைக் கூறுவதானால் திராவிடம் என்பது சரிதான். இங்கே தமிழ் என்றால் 1967 வரை ஆட்சியில் இருந்த பேராயக் கட்சியாகிய காங்கிரசும் அடங்கி விடும். அரசியல் காரணங்களால் திராவிடம் என்பதை ஏற்கிறோம் என்பதற்காக ‘மாடல்’ என்னும் ஆங்கிலச் சொல்லை ஏற்க வேண்டுமா?

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழ்ச்சொற்கள் பயன்பாடு குறித்துப் பல ஆண்டுகளுக்கு முன்னர்த் தெரிவித்த கருத்தே தாய்ச்சொற்கள் பயன்பாட்டிற்கான இலக்கணமாகும். அவர் கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டார்: “ஆங்கிலச் சொற்களை அறிமுகப்படுத்தி விட்டுப் பின்னர்த் தமிழ்ச்சொற்களை விளக்கிக் கொண்டிருக்காதீர்கள். எடுத்துக்காட்டாக  fan  என்று சொல்லி விட்டுப் பின்னர் விசிறி என்று சொல்லாதீர்கள். விசிறி என்று சொல்லிக் கொடுத்துவிட்டு fan என்பதை அறிமுகப்படுத்துங்கள்.” இவ்வாறு சில எடுத்துக்காட்டுகளுடன் கலைஞர் பேசியிருப்பார்.

நாம் குழந்தைகளுக்கு உறவுப்பெயர்கள், உணவுப் பெயர்கள், உடலுறுப்புப்பெயர்கள், உயிரினங்களின் பெயர்கள், எண்ணிக்கை முதலான அனைத்தையும் ஆங்கிலத்தில்தான் சொல்லித் தருகிறோம். பின்னர் அவற்றைத் தமிழில் சொல்லித் தரும்பொழுது குழந்தைகள் மனத்தில் ஆங்கிலச் சொற்களே மேலோங்கி இருக்கின்றன. எனவேதான், தமிழை அறிமுகப்படுத்துங்கள் எனக் கலைஞர் அறிவுறுத்தியது எக்காலமும் நாம் பின்பற்ற வேண்டிய பொன்மொழியாகும்.

கலைஞரின் வழியினும் சிறப்பான வழியில் நடைபோடும் அவர் மைந்தனின் ஆட்சியில் அவரது பொன்மொழியைப் புறக்கணிக்கலாமா? எனவே, முதல்வர் மு.க.தாலின் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். திராவிடமாடல் என்பதில் உள்ள ‘மாடல்’ என்னும் சொல்லைத் தூக்கி எறியுங்கள். பிறருக்கு முன்மாதிரியாக இருப்பதைக் குறிப்பிட எண்ணினால் திராவிட முன்முறை எனக் கூறுங்கள். எப்பொழுதும் நிலையான நல்லாட்சி என்று தெரிவிக்க விரும்பினால் திராவிட நன்முறை எனக் கூறுங்கள்.

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று(திருக்குறள் 100)

என்று வழிகாட்டுகிறார் அல்லவா தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

அவர் வழி யாட்சியில் தமிழ்க்கனியிருக்க அயற்காயைக் கவரலாமா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல-இதழுரை

 

‘அ . . . .’ க்கு நன்றி! முதல்வரின் சிறப்பான அணுகுமுறையை உணரச் செய்தமைக்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




‘அ . . . .’ க்கு நன்றி! முதல்வரின்

சிறப்பான அணுகுமுறையை உணரச் செய்தமைக்கு!

தலைமையமைச்சர் நரேந்திரர் மூன்று நாள் முன்பு சென்னையில் சில திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டித் தொடக்கி வைத்தார். இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.தாலின் மிகச் சிறப்பாக நம் மாநிலத்தின் வேண்டுகோள்களைத் தெரிவித்தும் திராவிட நன்முறை ஆட்சி விளக்கம் குறித்தும் பேசினார். இதனால் கண்ணேறு பட்டதால் கண்ணேறு கழிக்கப் பூசுணைக்காய் கட்டுவதுபோல் ஒருவர் சிலவற்றை உதிர்த்துள்ளார். ‘முதல்வர் பேசிய உரைக்காக நான் வெட்கப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார். அந்த அளவிற்குச் சிறப்பாக அல்ல நூற்றில் ஒரு பங்குகூடப் பேச முடியாத  பொழுது வெட்கப்பட்டுத்தானே ஆக வேண்டும். அதே நேரம் தலைமையமைச்சர் பாசக நிகழ்ச்சிக்காக வரவில்லை என்றும் ஆனால் முதல்வர் மரியாதை காண்பிக்காமல் தன்னை தானே இழிவுபடுத்திக் கொண்டார் என்றும் உளறியுள்ளார். இவ்வாறு அவர் பேசியிராவிடில் முதல்வரின் பேச்சு பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும். அவரது உளறலால், முதல்வரின் உரையை மக்கள் முழுமையாகப் படித்துப் பார்த்தனர். இந்த அளவிற்குத் தமிழகத்தின் தேவைகளை வலியுறுத்தியுள்ளாரே என அவரைப் போற்றுகின்றனர்.

கச்சத்தீவை மீட்கவும் மீனவ மக்களின் உரிமைகளை நிலை நாட்டவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மீனவர்கள் என்றால் அவர்கள் இந்திய மீனவர்கள்தாமே. இந்திய மீனவர்கள் குறித்து இந்தியத் தலைமையமைச்சரிடம் பேசாமல் பாக்கித்தான் தலைமை யமைச்சரிடமா பேச முடியும்?

பொருள் பணிகள் வரித்தொகை(GST)யில் 15.05.22 வரை  நிலுவையாக உள்ள உரூ.14,006 கோடித் தொகையை விரைந்து தர வேண்டியுள்ளார். தமிழ்மக்கள் நலன்களுக்காகச் செலவழிக்க வேண்டிய பணத்தைத் தராமல் இழுத்தடிக்கும் ஒன்றிய அரசை நடத்துவோரிடம் இதனைக் கேட்காமல் யாரிடம் கேட்க வேண்டும் என்கிறார் அந்த ‘அ’ என்று தெரியவில்லை.

மாணாக்கர்களின் கல்வி வளர்ச்சிக்கும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் தடைக்கல்லாக உள்ள தேசியத்தகுதி நுழைவுத் தேர்வை நீக்கச் சட்டமன்றம் தீர்மானம் இயற்றியிருந்தது. இதனை ஆளுநர் ஒப்புதலுடன் ஒன்றிய அரசிற்கு இசைவிற்கு அனுப்பியுள்ளது. இதனைக் கிடப்பில் போட்டுள்ளது ஒன்றிய அரசு. எனவே, தமிழக மாணாக்கர் நலனுக்காக விரைவில் இசைவு வழங்க வேண்டியுள்ளார். இதில் என்ன தவறு கண்டார் என்று தெரியவில்லை. ஒருவேளை மருத்துவக்கல்லூரி அனைத்து இடங்களையும்  ஒப்படைத்துவிடுவதாகப் பேசியிருக்க வேண்டும் என எண்ணினாரோ!

ஒன்றிய ஆளுங்கட்சியின் தமிழகத் தலைவர், தமிழ்மக்களின் நலன்களுக்கான வேண்டுகோள்களை நிறைவேற்றினால்தான் நம் கட்சி இங்கே பிழைக்க முடியும் என்று கூறி வற்புறுத்தி யிருக்க வேண்டும். மாறாகக் கட்சி மேலிடம் கூறியதற்காகத் தமிழக முதல்வர் மீது களங்கம் சுமத்த முற்படுவது எங்ஙனம் சரியாகும்? ஆனால், இதனால் முதல்வரின் சிறப்பான உரைகளை மக்கள் புரிந்து கொள்ள வழி வகுத்ததற்காக அவருக்கு நன்றி கூற வேண்டும்.

“உலகச் செம்மொழிகளில் இன்றளவும் உயிர்ப்போடு விளங்கக்கூடிய தமிழை இந்திக்கு இணையாக அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்” எனத் தமிழ்நலம்நாடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக மக்களின் ஒருமித்த கருத்து இதுதானே! இதனைத் தெரிவித்தமைக்காக அவரைப் பாராட்டமனமில்லாவிடிலும் தமிழன் என்று சொல்லிக் கொள்வதால் அமைதி காத்திருக்கலாம் அல்லவா?

முதல்வர் வேண்டுகோள்களை மட்டும் தெரிவிக்காமல், “மற்ற   மாநிலங்களின்   வளர்ச்சியைவிடத் தமிழ்நாட்டின்  வளர்ச்சி  தனித்துவமிக்கது. தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியானது வெறும் பொருளாதாரம்  சார்ந்தது  மட்டுமல்ல;  சமூகநீதி, பெண்கள்  முன்னேற்றம்,  சமத்துவம்  போன்ற அனைத்தையும்  உள்ளடக்கிய  வளர்ச்சிதான் தமிழ்நாட்டின்  வளர்ச்சி!” என எடுத்துரைத்துள்ளார்.

ஒன்றிய அரசிற்கு நாம் அளிக்கும் வருவாய்வகைகளைச் சுட்டிக்காட்டி அதில் உரிய பங்கைத் தராத ஒன்றிய அரசின் தாழ்நிலையை எடுத்தியம்பி, நம் வருவாய் உரிமையை விளக்கியுள்ளார்.

“மொத்த  வரி  வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு! இந்தியாவின்  மொத்த  ஏற்றுமதியில்  தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 விழுக்காடு! சவுளித்  துறை  ஏற்றுமதியில்  19.4 விழுக்காடு! சீருந்துகள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு! தோல்  பொருட்கள்  ஏற்றுமதியில்  33 விழுக்காடு! ஆனால்  ஒன்றிய  அரசின்  வரி  வருவாயில்  தமிழ்நாட்டுக்கு  பகிர்ந்தளிக்கப்படுவது 1.21 விழுக்காடு மட்டுமே. எனவே, தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள்  நாட்டின்  வளர்ச்சிக்கும்,  பொருளாதாரத்திற்கும்  அளிக்கக்கூடிய  பங்கிற்கு  ஏற்ப, ஒன்றிய  அரசும்,  திட்டங்களிலும்  நிதியிலும் தனது  பங்களிப்பை  உயர்த்த  வேண்டும்  என்று நான்  கேட்டுக்கொள்கிறேன்.  அதுதான் உண்மையான  கூட்டுறவுக்  கூட்டாட்சியாக அமையும்!” என விளக்கி ஏதோ பிச்சை போடுவதாக எண்ணிப் பாராமுகமாக இருக்கக் கூடாது; உரிமையின் அடிப்படையில் உரிய பங்கைக் கேட்கிறோம் என்பதை உணர்த்தியுள்ளார்.

தமிழ்நாடு சார்பாக முதல்வர் பேசியதெல்லாம் பிற மாநிலங்கள் சார்பாகவும் குரல் கொடுத்துள்ளதாகத்தான் அமைந்துள்ளன. எனவே, தமிழ்நாட்டு வேண்டுகோள்கள் மூலம், இந்திய மாநிலங்களின் சார்பாகக் குரல் கொடுத்துள்ளார் எனலாம்.

தலைமையமைச்சர் முன்னால் ஒன்றிய அரசு, ஒன்றிய அரசு எனத் திரும்பத் திரும்பப் பேசி முதல்வர் அவமானப்படுத்தி விட்டாராம். அரசியல் யாப்பில் உள்ள தொடரைக் கூறியதற்கு இவ்வாறு கூறுகிறார் என்றால், வல்லாண்மை அரசு எனக் கூற வேண்டும் என விரும்புகிறாரா ‘அ’ எனத் தெரியவில்லை.

கட்சிக் கூட்டமல்ல என அடிக்கடிச் சொல்கிறார் ‘அ’. முதல்வர் ஓரிடத்தில் கூடப் பாசக அரசு அல்லது பாசக என்றோ திமுக அரசு அல்லது திமுக என்றோ பேசவில்லை. வேறு எதுவும் சொல்ல இயலவில்லை என்பதால் இவ்வாறு கூறுகிறார் போலும். அப்படி என்றால் பாசகவின் கொள்கைகளான தேசியக்கல்வி முதலானவற்றைத் தலைமையமைச்சர் பேசினாரே. அப்படி என்றால் பாசக கூட்டம் என்று எண்ணித்தானே அவர் பேசியுள்ளார் எனக் கண்டித்திருக்க வேண்டும். “திரும்பிப் போ” என்று சொல்லாமல் இருக்க வைத்துச் செய்து விட்டாரே; உறவுக்குக் கை நீட்ட அழைத்து, உரிமைக்குக் குரல் கொடுத்துவிட்டாரே என எண்ணி  உரியவர் சொல்லி வால் ஆடுகிறது என்றுதான் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அனைத்துக் கட்சித்தலைவர்கள் மட்டுமல்ல, பிற மாநில அரசினரும் துணிவான தெளிவான சிறப்பான பேச்சிற்காக முதல்வரைப் பாராட்டுகின்றனர்.

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்

தக்கது அறிவதாம் தூது. (திருக்குறள் 686)

 சொல்லவேண்டியவற்றை நன்கறிந்து, சொல்லவேண்டியவர் குறித்து அஞ்சாமல் அவர் செவியில் சென்று உள்ளத்தில் பதியுமாறு சொல்பவனாகவும் காலச்சூழலை அறிந்து நடப்பவனாகவும் அரசின் சார்பாகப் பேசுபவன் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். பிச்சை எடுப்பதுபோல் உரிமையானவற்றைக் கேட்பதோ அடிமைபோல் அஞ்சி உரைப்பதோ கூடாது என்கிறார் அவர். இதற்கு இலக்கணமாக அன்று முதல்வர் அஞ்சாமல் தமிழ்நாட்டிற்கு வேண்டியவற்றைத் தக்க முறையில் சொல்லி யிருக்கிறார்.

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து

எண்ணி உரைப்பான் தலை.(திருக்குறள் 687)

ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனாகவும் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். தமிழ்நாட்டிற்கு வேண்டியவற்றை நிறைவேற்ற வேண்டிய கடமைகளை அறிந்து, தலைமையமைச்சர் வந்துள்ள காலத்தையும் இடத்தையும் தேர்ந்து எடுத்துச் சிறப்பாகப் பேசியுள்ளார் முதல்வர் மு.க.தாலின்.

எனவே, ‘அ’ செய்ய வேண்டிய வேலை, முதல்வர் வலியுறுத்தியுள்ள அனைத்தையும் நிறைவேற்றி நற்பெயர் எடுக்கச் சொல்ல வேண்டியதுதான். நற்பெயரை ‘எடுக்க’ விரும்புவர் நற்பெயர் எடுக்க வலியுறுத்துவார் என நாம் கனவு காணலாமா?

– இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை   




Monday, May 23, 2022

2. ஆட்சித்தமிழ்த் துறை எனப் பெயர் மாற்றுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  – 1 இன் தொடர்ச்சி)

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 

2. ஆட்சித்தமிழ்த் துறை எனப் பெயர் மாற்றுக!

தமிழ்வளர்ச்சித் துறை என்னும் பெயர் குறித்துப் பல்வேறு தமிழ் அமைப்பினரும் பிற துறையினரும் இத்துறை தமிழையா வளர்க்கிறது. அப்படியானால் தமிழ் வளரவில்லையா என்பர்.

சிலர் தமிழ் மேம்பாட்டுத் துறை எனப் பெயரிடலாமே என்பர். அப்படிக் கூறினால் தமிழ், மேம்படுத்தப்படவேண்டிய குறை நிலையில் உள்ளதாகப் பொருள் ஆகாதா என விடையிறுப்பேன். அலுவலகங்களில் தமிழை வளர்ப்பதால் தமிழ் வளர்ச்சித் துறை எனக் குறிப்பிடுகின்றனர் என அமைதிப்படுத்தும் முறையில் கூறுவேன். எனினும் இக்குறை எப்பொழுதும் என் உள்ளத்தில் உறுத்திக் கொண்டே உள்ளது. எனவே, இப்பொழுது இது குறித்து எழுதுகிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்தான் முதலில் 1996இல் தமிழ் வளர்ச்சிக்கெனத் தனி அமைச்சுத்துறை அமைத்தார். அதற்கு முன்பு இத்துறை கல்வித்துறையில் இருந்தது. முனைவர் மு.தமிழ்க்குடிமகனுக்கென உருவாக்கப்பட்டதாகக் கருதப்பட்ட இத்துறையை அவர் பொறுப்பிலேயே விட்டு அத்துறை அமைச்சர் ஆக்கினார். பொதுவாக நிதி அதிகாரம் உள்ள துறையைத்தான் வலிமையான துறையாக அதிகாரிகளும் பிறரும் கருதுகின்றனர். எல்லாத் துறைகளிலும் சம்பள நிலையில் மாறுபாடு இல்லா விட்டாலும் இ.ஆ.ப. அதிகாரிகள் நிதி அதிகாரம் குறைந்த பதவிகளைத் தண்டனைப் பதவிகளாகக் கருதிப் பரப்பிவிடுகின்றனர்.

அதிகாரம் இல்லாத துறையெப் பிறர் மதிப்பதால் தமிழ்க்குடிமகனும் அப்போதைய துறைச் செயலர் திரு வை.பழனிச்சாமி இ.ஆ.ப.வும் தொடர்ந்து வலியுறுத்திய பின்னர் தமிழ்வளர்ச்சித்துறையையும் வணிகவரித்துறையில் இருந்து பிரித்து அறநிலத்துறையையும் சேர்த்துப் பார்க்கும் வகையில் தமிழ் வளர்ச்சி – அறநிலையத்துறை எனச் செயலகத்துறையும் அமைச்சுத்துறையும் அழைக்கப்பட்டன. 

ஆட்சி மாறியதும் இப்பெயர் மறைந்து விட்டது.  ஓவ்வொரு முறையும் ஆட்சி மாறியதும் இவ்வாறு பெயர் மறைவதும் அதனைச் சேர்க்குமாறு தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் வலியுறுத்தி அதன்பின் மாற்றுவதும் வழக்கமாகி விட்டது. இம்முறையும் அவ்வாறு எழுதியும் துறைப் பொருண்மைகளில் தமிழ் ஆட்சிமொழி எனக் குறிப்பிட்டாலும் அமைச்சுத் துறைப் பெயரில் சேர்க்கப்படவில்லை. தொழில்துறை அமைச்சர்(Minister for Industries) என்பதுதான் அமைச்சுத் துறைப் பெயர். ஊடகத்தினரும் தமிழ் அமைப்பினரும் தமிழ்வளர்ச்சி அமைச்சர் எனக் குறிப்பிட்டாலும் அவர் தொழில்துறை அமைச்சர்தான். தந்தை எட்டடிப் பாய்ந்திருந்தால் மகன் பதினாறடி பாயும் வகையில் செயல்பட்டாலும் இத்துறையைப் பொறுத்தவரை, தந்தையால் சூட்டப்பட்டது, மகனால் மறக்கப்பட்டது. முதல்வரின் கவனத்திற்கு இது செல்லவில்லையா எனத் தெரியவில்லை.

செயலகத் துறையின் பெயரிலும் இயக்ககத்தின் பெயரிலும் தமிழ்வளர்ச்சி இருப்பினும் அமைச்சுப் பொருண்மைகளில் தமிழ்ஆட்சிமொழி என்றுதான் குறித்துள்ளனர். கலைஞர் ஆட்சிமாறியதும் தமிழ்க்காப்புக்கழக வேண்டுகோளை ஏற்றுத் தமிழ்ஆட்சிமொழி எனக் குறிக்கப்பட்டதன் அடிப்படையில் அப்பெயர் தொடர்கிறது.அமைச்சுத்துறைப் பொருண்மைகளில் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறைகளும் உள்ளன.

தமிழ் வளர்ச்சி, கலை-பண்பாடு, அருங்காட்சியகம், தொல்லியல் துறைகள் ஒரே செயலகத்துறையில்தான் இருந்தன. எனவே, ஒரே அமைச்சர்தான் இத்துறைகளுக்கு இருந்தனர்.

 இங்கே மற்றொரு வேண்டுகோளைக் குறிக்க விரும்புகிறேன். இலங்கையில் துறை என்றும் திணைக்களம் என்றும் வேறுபடுத்தி அழைக்கின்றனர். இதுபோல்,  இயக்ககத் துறைகளைத் துறை என்றும் செயலகத்துறைகளைத் திணை என்றும் அழைக்க வேண்டும்.(ஆறாவது உலக தமிழ் மாநாட்டில் அளிக்கப் பெற்ற கட்டுரை, கோலாலம்பூர், மலேசியா)

தமிழ் வளர்ச்சி, கலை-பண்பாடு, அருங்காட்சியகம், தொல்லியல் துறைகள் ஒரே துறையாக இருந்தால் வளர்தமிழ்த்துறை என அழைக்கலாம். ஆனால், பிரிந்து உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இதற்குப் பொறுப்பேற்க வந்த மூத்த செயலர் ஒருவர் செய்தித்துறை பிக்கல் பிடுங்கல் எனக் கருதி, சுற்றுலாத்துறையில் இருந்த செய்தித்துறையை நீக்கிவிட்டு, அதனினும் தொல்லை நிறைந்த கலைபண்பாட்டுத்துறையைத் தனக்கு விருப்பமான சுற்றலாத்துறையுடன் இணைத்துச் சுற்றுலா – பண்பாட்டுத் துறையாக மாற்றி விட்டார். என்றாலும், முதல்வருக்கு நெருக்கமான செய்தித்துறையுடன் தமிழ்வளர்ச்சித்துறை இணைக்கப்பட்டது ஒரு வகையில் வரவேற்பிற்குரியதாகும்.

பின்னர் இதுவரை, சமய அறநிலையத்துறையும் இணைந்து இத்துறை சுற்றுலா, பண்பாடு, சமய அறநிலையத் துறையாக அழைக்கப்பெறுகிறது. அறநிலையத்துறை முன்பு இந்து சமய அறநிலையத்துறை என்றுதான் அழைக்கப்பெற்றது. ஆனால், கிறித்துவ அலுவலர் ஒருவர் இதன் செயலராக அமர்த்தப்பட வேண்டிய சூழலில்- இந்து சமயத்திற்குக் கிறித்துவர் செயலராக எனக் கேட்கக்கூடாது என்பதற்காக – ‘இந்து’ எடுக்கப்பட்டது; வெறும் சமய அறநிலையத்துறையாக மட்டும் குறிக்கப்படுகிறது. திருவள்ளுவர் விருது வழங்குவிழாவை உரிய நாளில் நடத்தவில்லை என இயக்ககம் செய்த தவறுகளுக்கு அச்செயலர் பலிகடா ஆக்கப்பட்டு இத்துறையிலிருந்து மாற்றப்பட்டார். எனினும் மீளவும் கிறித்துவ அலுவலர் அமர்த்தப்படலாம் என நிலையாக இந்து அகன்று வெறும் சமயஅறநிலைய த்துறையாக மட்டும் அழைக்கப்படுகிறது.

இவற்றை எல்லாம் கூறுவதன் காரணம் பெயர் மாற்றம் என்பது ஒன்றும் புதியதல்ல என்பதைக் குறிக்கத்தான். இப்போதைய அரசிலும் சில துறைப்பெயர்களை முதல்வர் மாற்றி அழைக்கச் செய்துள்ளதை அறிவோம்.

முனைவர் ம.நன்னன், முனைவர் சிலம்பொலி செல்லப்பன் முதலிய சில அறிஞர்கள் இத்துறையின் இயக்குநராகப் பணியாற்றியிருந்தாலும் தமிழறிஞர்களைக் கொண்டதில்லை இத்துறை. தமிழ் அறிஞர்களுக்கும் சிறந்த நூல்களுக்கும் விருதுகளும் பரிசுகளும் வழங்கினாலும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கோ தமிழ் மொழி வளர்ச்சிக்கோ பணியாற்றுவது இத்துறையின் வேலையல்ல. எனவே, இதன் முதன்மைப்பணியும் முழுமைப்பணியும் ஆட்சித்தமிழ்ச் செயலாக்கம்தான். எனவே, இல்லாத தமிழ்வளர்ச்சியைத் துறையின் பெயரில் சேர்ப்பதை மாற்றலாம். மாறாக, ஆட்சித்தமிழ்ச் செயலாக்கத் துறை எனப் பொருத்தமாக அழைக்கலாம். இதனால், தமிழ் வளர்ச்சி இயக்ககம் என இப்போது அழைக்கப்படுவது ஆட்சித்தமிழ் இயக்ககம் என்றோ ஆட்சித்தமிழ்ச் செயலாக்க இயக்ககம் என்றோ அழைக்கப்படலாம்.

தமிழ்வளர்ச்சியில் நாளும் ஆர்வம் காட்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் தமிழ்நலப்பணிகளில் கருத்து செலுத்தும் முதல்வர் மு.க.தாலின் அவர்களும் இதில் கருத்து செலுத்தித் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தை ஆட்சித்தமிழ் இயக்ககமாகப் பெயர் மாற்றம் செய்ய வேண்டுகிறோம். இதுபோல், செயலகத்துறையில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை என்பதை ஆட்சித்தமிழ்த் துறை என மாற்ற வேண்டுகிறோம்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

(தொடரும் கட்டுரை : 3. உறங்குகின்ற

தமிழ் வளர்ச்சி இயக்கககத்தினைத் தட்டி எழுப்புக!)

Friday, May 20, 2022

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் – 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஒளவை அருளுக்குப் பாராட்டும் தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரமும் – தொடர்ச்சி)

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  – 1

தமிழ்நாட்டில் தமிழே எங்கும் திகழ அனைவரும் கருத்தூன்றிப் பணியாற்ற வேண்டும். ஆனால், பெரும்பகுதியினர் தமிழ்த்துறையினர் பொறுப்பு இது என்று வாளா இருக்கின்றனர். மறு பகுதியினர், அரசின் வேலை இது என்று ஒதுங்கி நிற்கின்றனர். ஆனால், அனைவருக்குமான கடமை இது என யாரும் உணரவில்லை. அதனால்தான் தமிழ் ஒருபுறம் தட்டுத்தடுமாறி வளர்ந்து கொண்டு உள்ளது; மறுபுறம் சிதைந்து தேய்ந்து கொண்டுள்ளது.

தமிழே நம் தேசிய மொழி!

தமிழ் அழிந்தால் நாமும் அழிவோம்!

உலகிற்கும் அஃது அழிவே!

என உணர்ந்து நாம் நம்மால் இயன்ற செயல்களில் ஈடுபடவேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழரல்லாதோர் கணிசமான அளவில் வாழ்கின்றனர். அவர்கள் தமிழ் வாழ்ந்தால் நமக்கென்ன? வாழாவிட்டால் நமக்கென்ன? என்று புறக்கணிப்புப் போக்கில் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்வு தமிழ்நாட்டு வாழ்வோடு, தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளதை உணரவேண்டும். எனவே, தமிழ்நாட்டிலுள்ள அயலார்,

தமிழே நம் வாழ்வியல் மொழி!

தமிழ் வாழ்ந்தால் நாமும் வாழ்வோம்!

தமிழழிவு நமக்கும் அழிவே!

தமிழ்நலம் பேணித் தமிழ் நாட்டவராய் வாழ்வோம்!

என உறுதிமொழி எடுத்து ஒல்லும் வகையெல்லாம் தமிழைப் புறக்கணிக்காமல் தமிழுக்கு முன்னுரிமை அளித்து வாழ வேண்டும். தமிழ், தமிழருடன் இணங்கி வாழ விழையாத அயலார், தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள அயலார் தத்தம் தாய்மொழியையும் புறக்கணிக்காமல் தமிழையும் விலக்காமல் தமிழ் மறவாத் தகைமையாளர்களாக வாழ வேண்டும்.

இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள தமிழர்கள், தமிழையும் விலக்கித் தாம் வாழும் மாநில மொழியையும் புறக்கணித்து, ஆங்கிலத்திற்கும் இந்திக்கும் முதன்மை கொடுத்து வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். தாம் வாழும் மாநிலத்து மொழியை விலக்காமல் கற்க வேண்டும். வாய்ப்பு இருப்பின் அதில்  புலமை பெற்று அம்மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள உறவு நிலையையும் இலக்கியச் சிறப்புகளையும் எடுத்துரைக்கவும் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபடவும் முன்வர வேண்டும்.

தமிழ் நாட்டார் போல் அயலகத் தமிழர்கள் சமற்கிருத்திற்கு இல்லாத உயர்வுகளை இருப்பதாக நம்புவதாலும் இந்தியை இந்தியாவின் தேசிய மொழி என அறியாமையால் கருதுவதாலும் அன்றாடப் பயன்பாட்டில் இவற்றிற்குத் தரும் இடங்களை உலக மொழியாகிய தமிழுக்குத் தருவதில்லை. ஆங்கிலத்தையும் இந்தியையும் படிக்கையில் மாநில மொழியும் தமிழும் எதற்கு என்று ஒதுங்கிச் செல்லும் அயல்மாநிலத் தமிழர் பலர் உளர். அத்தகையோர் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். தத்தம் பகுதி தமிழ் அமைப்புகளுடனும் தமிழ்நாட்டுத் தமிழமைப்புகளுடனும் தமிழ் உறவுகளுடனும் தொடர்பில் இருக்க வேண்டும். வாழ்வியல் பயன்பாட்டு மொழி என்னும் தகுதியைத் தமிழுக்குத் தர வேண்டும்.

அயல் மாநிலத்தமிழர்கள்

தமிழே நம் தாய்மொழி!

மாநில மொழியே நம் வாழ்வியல் மொழி!

தமிழையும் மாநில மொழியையும் இரு கண்களாகப் பேணுவோம்!

என்னும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் நற்றமிழ் ஆர்வலர்களாகத் தத்தம் பகுதிகளில் தமிழ் கற்பிக்கவும் தமிழைப் பரப்பவும் தமிழ் உணர்வுடன் செயல்படுகின்றனர். ஆனால், இளந்தலைமுறையினர் தமிழை மறந்து வளர்வதாக மூத்த குடியினர் கவலைப்படுகின்றனர். எனவே, தாம் தாம் வாழும் நாட்டு வளர்ச்சியிலும் ஈடுபாடு காட்டித் தமிழ்ப்பற்றுடன் செயல்படவேண்டும். எனவே,

தமிழை மறவாதீர்!

தாய் நாட்டை மறவாதீர்!

தாம் வாழும் நாட்டையும் மறவாதீர்!

இலங்கையில் குடியேற்றத் தமிழர்கள் இருந்தாலும் இலங்கையும் ஈழமும் தமிழர்க்குரிய தமிழ்நிலம்தான். சிங்கப்பூரில் தமிழ் ஆட்சிமொழியாக உள்ளது. மலேசியாவில் தமிழ் பள்ளிக் கல்வி மொழிகளில் ஒன்றாக உள்ளது. தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, தமிழை அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது. அயல்நாடுகளில் சில, தமிழைப் பண்பாட்டு மொழியாக ஏற்றுள்ளது. புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் தமிழ்க்கல்வியை வளரும் தமிழ் முறையினருக்கு அளித்து வருகின்றனர். சில நாடுகளில் தமிழ் நாள், தமிழ் மாதம் முதலியவை கொண்டாடப்படுகின்றன.

பருமா, மொரீசியசு, இறீயூனியன், கனடா, பிரான்சு, சீசெல்சு முதலான பல நாடுகளில் தமிழர்கள் குறிக்கத்தக்க அளவில் வாழ்கின்றனர்.  பொதுவாக, 177 நாடுகளில் பேசப்படும் மொழியாகத் தமிழ் உள்ளது.

இவற்றால் வரும் அற்ப மகிழ்ச்சியைத் தமிழன்பர்கள் பெரிதாக விளம்பரப்படுத்தி விடுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் தமிழுக்கு உரிய உரிமை இல்லாத பொழுது, இந்தியக் கூட்டரசில் அடிமைப்படுத்தப்படும் நிலை இருக்கும் பொழுது பிற நாடுகளில் தமிழ் உரிய தகைமையைப் பெறும் எனக் கனவு காண்பது கானல் நீராகவே போகிறது.

ஒரு பானைச் சோற்றுக்குப் பதமாக, மியன்மா அல்லது மியான்மர் எனப்படும் பருமாவில் தமிழ் நிலை குறித்துப் பார்ப்போம்.

பருமியச் சிறுவர் சிறுமியருக்குத் தமிழ் தெரியவில்லை. அவர்கள் பருமிய வழிக்கல்வியில் படித்து வருவதாலும் வீட்டில் பருமியமொழியே பேசப்படுவதாலும் தமிழை அயல்மொழியாகக் கருதுகின்றனர். பருமிய ஆட்சிமுறையால் தமிழ், பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்டமையால், தமிழ் கற்க வழியின்றிப் பருமிய மொழியைப் படித்து அதையே தாய்மொழிபோல் எண்ணுகின்றனர்.” எனினும்,

தமிழால் ஒன்றிணைவோம்! தமிழராய் உணர்வோம்!”

பாட்டன் தமிழை வீட்டில் பேசுவோம்”

எனத் தமிழ் அமைப்புகளும் தமிழ்ப்பள்ளிகளும் உணர்வை ஊட்டி வருகின்றன.

ஏறத்தாழ 15  நூறாயிரம் தமிழர்கள் அங்கு வாழ்ந்தாலும் அரசு முறையான புள்ளிவிவரப்படி சில நூறாயிரமே  காட்டப்படுகின்றன. 1962 இல் அரசுப்பணிகளில் இருந்து தமிழர்கள் நீக்கப்பட்டனர். இப்பொழுது வரை அரசுப்பணிகளில் தமிழர்கள் இல்லை. இது குறித்து முன்னரே நான் எழுதியுள்ளேன். பின்னரும் தனியாக மியான்மர் அல்லது மியான்மா குறித்து எழுதும் பொழுது குறிப்பிட விரும்புகிறேன். இந்தியக் கூட்டரசோ தமிழர்கள் இருக்கும் நாடுகளில் எல்லாம் இந்தியைக் கற்பிக்கவும் பரப்பவும் செயலாற்றி வருகிறது. தமிழ்நாட்டரசு தமிழர் வாழும் நாடுகளில் மறையும் தமிழை உயிர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிற நாடுகளில், தமிழ்நிலத்தின் ஒரு பகுதியாக முன்பு அமைந்த நிலப்பரப்பினாலும் பிறப்பினாலும் வேறு வகையாலும் குடியுரிமை உடைய தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் முழு வாழ்வுரிமையைப் பெறுவதற்குத் தமிழக அரசும் பணியாற்ற வேண்டும்.

உலகத் தமிழர் யாவரும்,

மொழியால் தமிழர் என்னும் நிலையை மறக்க வேண்டா.

இனத்தால் தமிழர் என்னும் மரபினைத் துறக்க வேண்டா.

ஆதலின்,

தாய்நாட்டில் தமிழைக் காப்பது முதற்பணி!

அயலகங்களில் தமிழை நிலைக்கச் செய்வது இரண்டாம் பணி!

இவற்றைத் தமிழ் மக்களும் தமிழக அரசும் ஆற்ற வேண்டியதே நாம் செய்ய வேண்டிய தலையாய பணி.

தொடரும் கட்டுரை : 2. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கத்துறை எனப் பெயர் மாற்றுக.

– இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, May 4, 2022

செய்தக்க செய்யா ஆளுநர்- இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




செய்தக்க செய்யா ஆளுநர்

திருவள்ளுவர் ‘தெரிந்து செயல்வகை’ என்னும் அதிகாரத்தில் பின்வருமாறு கேடு தருவனவற்றைக் கூறுகிறார்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்

(குறள் எண்:466)

ஒருவர் கெடுதி அல்லது தீங்கு செய்தால்தான் கேடு விளையும் என்று எண்ணக்கூடாது. கேடு செய்யாவிட்டாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யத் தவறினாலும் கேடு வரும் செய்யக் கூடாதவற்றைச் செய்தாலும கேடு வரும்.

ஒவ்வொரு தனிமனிதருக்கும் இது பொருந்தும். குடும்பத் தலைவர் என்ற முறையில் ஒருவரின் செயல்பாடு செய்யத் தவறியும் தவறானவற்றைச் செய்தும் அமைந்தது எனில் அவரால், அவரின் குடும்பத்திற்கே கேடு வரும். அதுபோல், அலுவலகத்தின் தலைவர், நிறுவனத்தின் தலைவர், அமைப்பின் தலைவர் எனத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் இவ்வாறு மாறுபட நடந்து கொண்டார் எனில், அந்த அமைப்பிற்கே கேடு வரும். பரிமேலழகர் முதலானோர் அரசரின் இத்தகைய செயல்பாடுகளைக் குறிப்பிடுகின்றனர். மன்னராட்சியில் அது சரிதான். எனினும் நாம், மன்னர் என்று மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டா. ஆள்வோர் எனப் பொருவாக எடுத்துக் கொள்ளலாம். ஆக ஆட்சித்தலைமைப் பொறுப்பில் உள்ளவர் பெரியோர்களால் ஒதுக்கி வைக்கப்படுவனவற்றைச் செய்தாலும் பெரியோரால் வற்புறுத்தப்படுவனவற்றைச் செய்யாது விட்டாலும் அவரது ஆட்சிப் பரப்பு தீமையையே சந்திக்கும். ஆட்சியாளர் கடமை தவறுவதால் ஏற்படும் தீங்கை நாம் இவ்வாறு கடமையைத் தவிர்த்தல் தவறானவற்றை மேற்கொள்ளல் என்பனவற்றால் கேடு வரும் எனலாம்.

இந்தியக் கூட்டரசில் ஆளுநர் என்பது பொம்மைப்பதவியே. எனினும் நெருக்கடி நேரத்தில் ஒன்றிய அரசின் சார்பில் செயல்படும் அதிகாரம் படைத்தவராக மாறி விடுகிறார் .ஆனால், அதற்காக இயல்பான நேரங்களில் அவர் தான்தான் தலைவர் என்று அரசின் அன்றாடப் பணிகளில் குறுக்கிடுவதோ அத்து மீறி அதிகாரம் செலுத்த முற்படுவதோ மக்களாட்சிக்குத் தீமைகளையே விளைவிக்கும். ஆனால், பா.ச.க.ஆட்சியில், பா.ச.க ஆட்சி செய்யா மாநிலங்களில் ஆளுநர்கள் அரசின் பணிகளில் குறுக்கிட்டு முதல்வருடன் முரண்பட நடந்து கொண்டு, ஆட்சி இயந்திரம் சரிவரச் செயல்படுவதைச்சிதைக்கிறார்கள்.  ஆனால், ஆளுநர்கள் தன் விருப்பில் செய்வன அல்ல இவை. ஒன்றிய அரசின் உந்துதலில் பா.ச.க ஆட்சியை மாநிலங்களில் மலரச்செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே செய்கின்றனர். உண்மையில், மாநில அரசுகளை அடிமைப்படுத்த நினைக்கும் இத்தகைய ஆளுநர்கள் ஒன்றிய அரசின் அடிமையரே!

சத்யபால் மாலிக்கு பீகார், பிரிக்கப்படாத சம்மு-காசுமீர் மாநிலம், கோவா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் ஆளுநராகப் பதவி வகித்தவர். இவற்றுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநில பாரதிய சனதா கட்சியில் மூத்த தலைவராக இருந்தவர். இவர், தம் மாநில உழவர்கள் 500 பேர் இறந்ததாகத் தலைமையமைச்சர் நரேந்திரரிடம் தெரிவித்த போது, அவர் மிகவும் கோபத்துடனும் ஆணவத்துடனும் பேசினார் எனச் சொல்லியுள்ளார். இவ்வாறு இவர் பா.ச.க.விற்கு எதிராகப் பேசுவது முதல் முறையல்ல. 2018ஆம் ஆண்டு காசுமீர் சட்டப்பேரவையை ஒன்றிய அரசு குதிரை பேரம் நடத்திக் கலைத்ததாகக் கடுமையாகக் குற்றஞ் சாட்டிப் பேசியுள்ளார். பின்னர் சம்மு காசுமீர் சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதற்கும் எதிராகப் பேசினார். எனவே,  கோவாவுக்கு ஆளுநராக மாற்றப்பட்டார். அங்கும் பாசக முதல்வர் பிரமோத்து சாவந்து குறித்துச் சாட்டுரையாகப் பேசியதால், மேகலாயா ஆளுநராக மாற்றப்பட்டார். இவர் முந்தைய ஆட்சியில் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தால் தொடக்கத்திலேயே நீக்கப்பட்டிருப்பார். ஆனால், இவர் பா.ச.க.வின் மூத்த தலைவர். எனினும் மக்கள் செல்வாக்கு உள்ளதால் நீக்கப்படாமல் வேண்டாத அதிகாரியை மாற்றிக் கொண்டே இருப்பதுபோல் மாற்றப்பட்டு வருகிறார்.

என்றாலும் ஆண்மையுடன் ஒன்றிய அரசின் தவறுகளையும் தலைமையமைச்சர், உள்துறையமைச்சர் தவறுகளையும் குறைசொல்லத் தவறுவதில்லை. பிற இந்திய ஆளுநர்கள் யாவருமே ஒன்றிய அரசின் ஏவலர்கள்போல் நடந்து கொண்டு பதவிக்குரிய மதிப்பை இழிவு படுத்திக் கொண்டு வருகிறார்கள். இதற்காகத்தான் சருக்காரியா ஆணையம், கட்சிப்பொறுப்பில் இல்லாதவர்கள் உயர் பதவிப்பொறுப்பில் இல்லாதவர்களாக ஆளுநர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்றது. அவ்வாறில்லாமையால், ஓய்வு நெருங்கும் பொழுதே ஒன்றிய அரசிற்குத் தாளம் போடத் தொடங்கித் தாங்கள் விரும்பிய பதவியை ஓய்விற்குப் பின் பெற்று விடுகிறார்கள்.

தமிழக ஆளுநராக உள்ள இர.நா.இரவி 2012இல் இந்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பின், 2014இல் தேசியப் பாதுகாப்பு மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 5.10.2018 அன்று இந்தியாவின் தேசியப் பாதுகாப்புத் துணை அறிவுரைஞராக நியமிக்கப்பட்டார். 2014இல் நாகாலாந்து தொடர்பான சிக்கில் நடுவராகச் செயல்பட்டவர் 2019 இல் நாகாலாந்து மாநில ஆளுநராக அமர்த்தப்பட்டார்.

அங்கே சிக்கலில் சிக்கியபின், 09.09.2021 அன்று தமிழக ஆளுநராக அமர்த்தப்பட்டார். எனவே, நடுவுநிலை பிறழ்வதும் ஒன்றிய அரசின் ஏவலுக்குக் கட்டுப்படுவதும் இயற்கைதான்.

ஆளுநர் இழுத்தடிக்கும் கோப்புகள் குறித்து முதல்வரும், அமைச்சர் பெருமக்களும், எதிர்க்கட்சியினரும் மக்கள் நல அமைப்பினரும் பல்வேறு காலக்கட்டங்களில் குறிப்பிட்டு வருகின்றனர் .திருப்போரூர் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எசு.எசு. பாலாசி, தமிழர் நலன் சார்ந்த 211 கோப்புகள் ஆளுநர் மாளிகையில் தேங்கி கிடப்பதாகச் சட்டப்பேரவையிலே யே பேசியுள்ளார்.

எவ்வாறு அதிகாரியாக இருந்த கிரண்(பேடி), தன் முதல்வரின் கனவு அரிப்பைப் போக்குவதற்காகப் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆட்டிப்படைக்குமாறு செயல்பட்டாரோ அதே போல், தமிழ்நாட்டில் ஆளுநராக உள்ள முந்தைய அதிகாரி மேதகு இர.நா.இரவி அதிகார அரியணையில் நடனமாடிக் கொண்டுள்ளார். அரசியலமைப்பு அறிவுறுத்தும் விதிமுறைகளுக்கு மாறாகச் சட்டமன்றத்தால் ஏற்கப்பெற்ற தீர்மானங்களையும் சட்ட வரைவுகளையும் அரசின் கோப்புகளையும் கிடப்பில் போடுவதையே முழு நேரப்பணியாகக் கருதிச் செயல்பட்டு வருகிறார்.

இராசீவு காந்தி கொலை வழக்கில் சிக்கி வைக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநரின் செயல்பாடு மோசமாக உள்ளதை உச்ச நீதிமன்றமே கண்டிக்கும் வகையில் சுட்டிக்காட்டி யுள்ளது. இவ்வழக்கில் உள்ள பிற அறுவர் விடுதலைக்கும் இது பொருந்தும்.

இவையெல்லாம் செய்ய வேண்டியவற்றைச் செய்யாதிருக்கும் ஆளுநரின் அவலப்பாடுகளைக் குறிக்கும். அதே நேரம் செய்யத்தகாதவற்றைச் செய்யும் அவரது செயற்பாடுகளைத் துணைவேந்தர் கூட்டம் முதலான பலவும் உணர்த்தும்.

திருக்குறளை மேற்கோளாகக் கூறும் தலைமையமைச்சர் நரேந்திரரும் பிற அமைச்சர்களும் மேலே குறிப்பிட்ட திருக்குறள் பொருளை உணர்ந்து பின்பற்றி ஆளுநர்களையும் பின்பற்றச் செய்ய வேண்டும். தலைமையமைச்சரும் உள்துறை யமைச்சரும் தம் கட்சியினரைத் தேர்தலில் மக்கள் உள்ளங்களைக் கவர்ந்து வாகை சூடி ஆட்சியில் அமரச்செய்ய வேண்டும் என்று செயல்பட வேண்டுமே தவிர, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஆளுநர்கள் மூலமாக மாநில ஆட்சிகளை ஆட்டிப்படைக்குமாறு செயல்படக் கூடாது. இந்நிலை தொடர்ந்தால், ஒன்றிய அரசிற்கும் கட்சிக்கும் எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் பேரிடர் வரும் என்பதை உணர வேண்டும். இந்தியத் துணைக்கண்டத்தின் சட்டம் ஒழுங்கினைப் பேணுவதற்காக ஆளுநர்களை இயல்பாகச் செயல்படச் செய்து மாநில அரசுகளின் காவலர்களாகச் செயல்படச் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களிலும் ஆளுநர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட கோப்புகளைத் தூசி தட்டிக் கையொப்பமிடச் செய்ய வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல




Followers

Blog Archive