Sunday, December 31, 2023

சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 : இலக்குவனார் திருவள்ளுவன்




(சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95

91. Abetment of suicide of childகுழந்தைத் தற்கொலைக்கு உடந்தை  

குழந்தை அல்லது இளவர் தற்கொலை புரிந்துகொண்டால் அதற்கு உதவிய அல்லது உடந்தையாக இருந்து அல்லது தூண்டுதலாக இருந்தவர் தண்டிக்கப்படுவார்.  

18 அகவைக்குட்பட்ட / மனநலங் குன்றிய/பிற ழ் மனம் உடைய/மடமை மிகுந்த/போதையில் உள்ள/ எவரேனும் தற்கொலை புரிந்து கொண்டால், இதற்கு உடந்தையாக இருப்பவர் மரணத் தண்டனை அல்லது வாணாள் தண்டனை அல்லது பத்தாண்டுத் தண்டனையும் ஒறுப்புத்தொகையும் விதிப்பதற்குரியவர். (இ.த.ச.305/IPC 305)
92. Abetment of suicide  தற்கொலைக்கு உடந்தை  

ஒருவர் தன்னுயிரைப் போக்குவதற்கு உதவும் வகையில் அவருக்கு உயிர்போக்கும் நஞ்சு, தூக்குக்கயிறு உயிர்போக்குவதற்குரிய வேறு பொருள் முதலியவற்றை வாங்கித் தருதல் அல்லது வாங்குவதற்கான வழிமுறை கூறுதல் அல்லது உயிர்போக்கும் செயலுக்குத் துணையாக இருத்தல். ‌அத்தகையவர் உடந்தைக் குற்றவாளி அல்லது குற்ற உடந்தையர் எனப்படுவா
ர்.
93. Abettingதூண்டுதல்

குற்றம் புரியத் தூண்டுதல்   போதைப்பொருட்களை விற்பதற்கு அல்லது உட்கொள்வதற்குத் தூண்டுதல்   போதைப் பொருட்கள் – மனநோய் சார்ந்த பொருட்களில் சட்ட முரண் போக்குவரத்தைத் தடுக்கும் சட்டம், 1988 பிரிவு 2
94. Abetting of waging warபோர் நடத்த உடந்தை  

(இந்திய அரசிற்கு எதிராகப்) போரை நடத்துபவர், அல்லது அத்தகைய போரை நடத்த முயல்பவர் அல்லது அத்தகைய போர் நிகழ உடந்தையாக இருப்பவர், மரணத்தண்டனை அல்லது வாணாள் தண்டனையுடன்  ஒறுப்புத் தொகை விதிப்பதற்குஉரியவர்.   (இ.த.ச.பிரிவு 121)
95. Abettor



 
உடந்தைக் குற்றவாளி,
குற்ற உடந்தையர் குற்றவுடந்தையர்
  உடந்தையாளர்

தற்கொலைக்கு உடந்தை   குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர் ஒருவர் குற்றச்செயல் புரிவதற்குச் செயல் வகையிலோ பொருள்வகையிலோ அறிவுரை வகையிலோ உதவுநராகவோ தூண்டுநராகவோத்  துணைநிற்பவர்.  

தூண்டுதல்
(ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 3. 1. ஆ.. /S. 3(1)(b) PCA, 1988)

குற்ற உடந்தை
(கொத்தடிமைத் தொழிலாளர் முறை (அழித்தல்) சட்டம், 1976/S. 20 BLS(A)A, 1976)

உடந்தையாயிருத்தல் (போதை மருந்துகள் உளப்பாதிப்புப் பொருள்கள் தடுப்புச்சட்டம், 1985 பிரிவு 29 / S. 29 NDPSA,1985)

தற்கொலைக்கு உடந்தையாக இருத்தல்‌ (உடன்கட்டைத் தடுப்புச்சட்டம் 1987, பிரிவு  4 / S. 4 COS(P)A,1987) 

தூண்டுதல் (போதை மருந்துகள் உளப்பாதிப்புப் பொருள்கள் போக்குவரத்துத் தடுப்புச்சட்டம், 1988, பிரிவு 2./S. 2 PIT NDPS, 1988)
 

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, December 27, 2023

சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 : இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச்சொற்கள் விளக்கம் 81-85 தொடர்ச்சி)

சட்டச்சொற்கள் விளக்கம் 86-90

86. Abetment of assaultதாக்குதலுக்கான / தாக்க முனைதலுக்கான உடந்தை
 
திடீரென, கடுமையான ஆத்திர மூட்டலினாலின்றித்,   தாக்குதல் நடத்துதல் அல்லது குற்ற வன்முறையைப் பயன்படுத்தல் இ.த.ச.பிரிவு 134 இன் கீழ்க் குற்றமாகும்.  

தரைப்படையில் அல்லது கப்பற்படையில் அல்லது வான்படையில் உள்ள அதிகாரியோ வீரரோ மீகாமரோ(கப்பலோட்டி வீரர்) வான்படைஞரோ அலுவற்பொறுப்பை நிறைவேற்றும் எந்த ஓர் உயர் அதிகாரியைத் தாக்கினாலும் அஃது ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனைக்கும் தண்டத்தொகை விதிப்பிற்கும் உரியது.

  தாவு/தாக்கு  பொருள் கொண்ட இலத்தீன் சொல்லான assiliō  இருந்து assault உருவானது. மக்கள் பேச்சு வழக்கில் assault என்றால் அலட்சியம் என்று பொருள் கொண்டு பயன்படுத்துகின்றனர்.
87. Abetment of desertion of soldier, sailor or airman.தரைப்படை, கப்பற்படை, வான்படை விரர்கள் வெளியேறத் தூண்டுதல்  

முப்படையைச் சேர்ந்தவர்களைத் தம் பணிப்பொறுப்புகளைக் கைவிட்டு ஓடுவதற்குத் தூண்டுதலாக இருப்பது இ.த.ச. பிரிவு 135 இன் கீழ் ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது ஒறுப்புத்தொகை விதிப்பு அல்லது இரண்டுமான தண்டனைக்குரிய குற்றமாகும்.
88. Abetment of escape of persons arrestedதளையிடப்பட்டவர்கள் தப்பியோட உடந்தை  

கைது செய்யப்பட்டவர்கள் தப்பிச் செல்வதற்குத் தூண்டுதலாகவோ உடந்தையாகவோ இருப்பவர்களும் குற்றவாளிகளே.
89. Abetment of insubordinationகீழ்ப்படியாமைக்கு உடந்தை  

கீழ்ப்படியாமை என்பது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பதைக் குறிக்கிறது. இ.த.ச.பிரிவு 138 இது குறித்துக் கூறுகிறது.   

தரைப்படை, வான்படை, கப்பற்படையைச் சேர்ந்த எந்த ஒருவரும் பணிப்பொறுப்பிலிருந்து தப்பி ஓடினால்,- பணியைக் கைவிட்டு ஓடினால், அத்தகைய செயலுக்கு உடந்தையாக இருப்பவரும் தண்டனைக்குரியவரே.  

படைஞர், மேலலுலவர்களின் அல்லது படைத்துறையின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பதற்குத் தூண்டுதலாக அல்லது உடந்தையாக இருப்பவர், 6 மாதம்வரையிலான  சிறைத்தண்டனை அல்லது ஒறுப்புத் தொகை அல்லது இரண்டும் விதிக்கப்படுவதற்கு உரியவர்.
90. Abetment of mutinyகலகத்தைத் தூண்டுதல்  

படைஞர் அல்லது படைத்துறை அலுவலர் தம் பணியிலிருந்து கடமை தவற ஈர்ப்பவர் அல்லது கலவரம் செய்யத் தூண்டுபவர், வாணாள் சிறைத்தண்டணைக்கு அல்லது பத்தாண்டு வரையிலான தண்டனையும் ஒறுப்புத்தொகையும் விதிப்பதற்கு உரியவராவார்(இ.த.ச.பிரிவு 131).  

இத்தூண்டுதலால் கலகம் நேர்ந்தது எனில் அதற்குக் காரணமானவர், மரணத்தண்டனை அல்லது வாணாள் தண்டனை அல்லது பத்தாண்டுகாலத் தண்டனை அல்லது சிறைத்தண்டனையுடன்   ஒறுப்புத்தொகையும் தண்டனையாக விதிப்பதற்குரியவராவார். (இ.த.ச.பிரிவு 132)  

mutiny  என்றால் ஆட்சி எதிர்ப்புக்கிளர்ச்சி, படைவீரர் கலகம், கலகம், கிளர்ச்சி, கலவரம், சட்டப்படியான அதிகாரத்தை வெளிப்படையாகப் புறக்கணிக்குங் கலகம், படைத் தலைவர்களுக்கு எதிரிடையாகப் படைவீரர்கள் செய்யுங் கலகம் எனப் பலவாறாகக் கூறப்படுகிறது. இங்கே படைஞர்கள் செய்யும் கலவரத்தைக் குறிக்கிறது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, December 24, 2023

சட்டச்சொற்கள் விளக்கம் 81-85 : இலக்குவனார் திருவள்ளுவன்

      25 December 2023      அகரமுதல



(சட்டச்சொற்கள் விளக்கம் 71-80 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொகுப்பு)

சட்டச்சொற்கள் விளக்கம் 81-85

81. Abetment by aidதூண்டல் உதவி  

குற்ற உடந்தை உதவி – குற்றவாளி, குற்றம் புரிவதற்கு வேண்டுமென்றே உதவி, தூண்டுதலாக இருப்பது.  
குற்றம் புரிய அல்லது குற்றச் செய்கையை எளிமையாக்கத் தூண்டுநர் உதவுகையை இது குறிக்கிறது.

குற்றவாளிக்கு உதவும் எண்ணம் இருப்பதே முதன்மையானது.   தூண்டுதல் என்பது, குற்றவாளி குற்றத்தைச் செய்யும்போது, குற்றம் புரிய ஏவுதல் அல்லது சொல்லிக் கொடுத்தல் அல்லது ஊக்குவித்தல் அல்லது வழிகாட்டுதல் என்பன அடிப்படைப் பொருள்களாகும்.

குற்றவாளி ஒரு குற்றத்தைச் செய்யும்போது அவருக்கு உதவுவதையும் இது குறிக்கும்.  

இந்தியத் தண்டிப்புச்சட்டம் பிரிவு 107(IPC Section 107)குற்ற உடந்தை பற்றி உரைக்கிறது.
82. Abetment by conspiracy  சதி உடந்தை  

குற்றச் சதி வாயிலான உடந்தை  

ஒரு குற்றச் செயல் நடைபெறுவதற்கு அதற்கான சதியில் கருத்துரை வழங்கியோ அக்குற்றச் செயலுக்குரிய உதவுநராக இருந்தோ உடந்தையாயிருத்தல்.    

Cōnspīrātiō என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இரட்டிப்புச்சதி.
83. Abetment by defamationஅவதூறு வாயிலாக உடந்தையாக இருத்தல்  

இணையத் தளங்களில் சொற்போருக்கு இடந்தரும் கருத்துகளை எழுதுபவர்கள் மீது,கடும் நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால், இ.த.ச. பிரிவுகள் 499-502 அவதூறு தொடர்பானவை; பேச்சு உரிமை,

கருத்துரிமை,தன்னுரிமையான சிந்தனை ஆகியற்றிற்கு எதிராக இப்பிரிவுகள் உள்ளனவாகக் கூறி இவற்றை நீக்க வேண்டும் என்ற கருத்து பரவி வருகிறது.
84. Abetment by instigationதூண்டுதல் வாயிலாக உடந்தையாயிருத்தல்  

இ.த.ச.107 இன்கீழ்க் குற்றத்தைச் செய்வதில், மறைமுகமாகப் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.   இதன்படிக் குற்றச் செயலைச் செய்யத் தூண்டுதலாக இருத்தல், சதி செய்தல், உடந்தையாக இருத்தல் முதலியன தண்டனைக்குரிய குற்றச் செயலாகிறது.
 85. Abetment of a thingஒன்றைச் செய்யத் தூண்டுதல்

  ஒரு குற்றச் செயலைச் செய்யத் தூண்டுதல்.  

ஒருவர் அல்லது ஒருவருக்கு மேற்பட்டவர்களுடன் சேர்ந்து சதி செய்து சட்டச்செயலை விடுத்தல் அல்லது சட்ட முரண் செயலைச் செய்தல்.  

ஒன்றைவேண்டுமென்றே சித்திரிப்பதன் மூலம் அல்லது அவர் வெளிப்படுத்த வேண்டிய ஒரு பொருளை மறைப்பதன் மூலம் அல்லது குற்றச் செயல் ஒன்றைச் செய்விப்பதன் அல்லது அடைவதன் மூலம் அல்லது செய்யவோ அடையவோ முயல்வதன் மூலம் குற்ற உடந்தையாளர் ஆகிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, December 23, 2023

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

 




பன்னாட்டுத் தமிழ்மொழி

பண்பாட்டுக் கல்விக் கழகம்

சென்னை வளர்ச்சிக் கழகம்

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்

முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு

ஆடி 27, 2054 —– ஆகட்டு 12, 2023

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள்  1/7

கலைச்சொற்கள், துறைச் சொற்கள், தொழில் நுட்பச் சொற்கள் எனச் சிலவாறாகக் கூறப்படும் சொற்கள் இயல்பான வழக்கில் கருதப்படும் பொருள்களுக்கு மாறாகச் சிறப்புப் பொருள்களில் பயன்படுத்தப் படுகின்றன. ஒரு சொல்லே பயன்படும் இடத்திற்கு ஏற்ப இயல்புச் சொல்லாகவோ சிறப்புச் சொல்லாகவோ பயன்படுத்தப்படுகிறது. எனவே, கலைச்சொல் என எதுவும் தனியாக இல்லை எனலாம்.

கலைச்சொல்லிற்காகத் தரப்படும் விளக்கமும் சரியில்லை. “மற்ற மொழிகளில் உள்ள சொற்களை அந்தந்தத் துறையில் உள்ளவர்கள் அவர்களின் துறைக்கு ஏதுவாக பயன்படுத்த உருவாக்கப்பட்டதே கலைச்சொற்கள்” என்கின்றனர். அப்படியானால் பிற மொழிச்சொற்களுக்கான பொருளை விளக்கும் சொற்கள்தாம் கலைச்சொற்கள் என்றால், தாய்மொழியிலேயே அமையும் நுட்பச்சொற்கள் அல்லது சிறப்புச் சொற்கள் கலைச்சொற்கள் ஆகாவா? எனவே, இத்தகைய விளக்கம் தவறு. இருப்பினும் நடைமுறை அடிப்படையில் கலைச்சொல் என்றே இங்கே பயன்படுத்தப்படுகிறது.

ஒரு சொல் இடத்திற்கேற்ப பொருளைப் பெறுகிறது. எனவே, பயன்பாட்டு அடிப்படையில்தான் கலைச்சொல் உருவாக்கப்பட வேண்டும்.

Back – பின் / முன்

எடுத்துக்காட்டிற்கு ஒன்றைப் பார்ப்போம்.

நான் வேறொரு கட்டுரையில் தெரிவித்ததை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

Back என்றால் பின் அல்லது பின்பக்கம் இருக்கும் முதுகு என நடைமுறையில் பொருள் கொள்கிறோம். back என்றால், பின்னே, உதவி செய், மீண்டும், பின்பகுதி, பின்பக்கம், காக்கும் ஆட்டக் காரர், காப்பாளர், முதுகுப்புறம், ஆதரவளி, முதுகு, புறம், குண்டில், சிறுபுறம், முதலான பல பொருள்களை அகராதிகள் குறிக்கின்றன. ஆனால்  back file  என்னும் பொழுது முந்தைய கோப்பு அல்லது முன் கோப்பு என்றாகிறது.  இங்கே பயன்பாட்டில் பின் என்பதற்கு மாற்றாக முன் வருகிறது. எனவே, ஒரு சொல்லின் பொதுவான பொருளையே எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணாமல் பயன்பாட்டிற்கு ஏற்ற பொருளை விளக்கும் வகையில் சொல்லாக்கம் இருத்தல் வேண்டும்.

மற்றொன்றையும் இங்கே பார்ப்பது ஏற்றதாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

Orderly room register

orderly என்றால் பொதுவாக ஏவலர் என்று குறிக்கப்பெறுகிறது.

துணை ஏவலர், ஒழுங்கு முறையான, துணை ஏவலர், உள்ளிருப்பு மருத்துவமனைப் பணியாள், மருத்துவமனை ஏவலாள், ஏவலாள், முதலான பொருள்களை அகராதிகள் குறிக்கின்றன. சிறைத்துறை போன்ற சீருடைத் துறை அலுவலகங்களில் orderly room register எனப் பதிவேடு உள்ளது.

இங்கே orderly என்பதை ஏவலர் என்று குறிப்பது தவறாகும். orderly என்பது தகவல்களை அல்லது உத்தரவுகளை நிறைவேற்றுவது தொடர்பானது அல்லது குற்றஞ்சாட்டப்படுவது எனப் பொருளாகும். அதுபோல், இங்கே orderly என்பது ஒழுங்குமுறை தொடர்பான குறைகளைத் தெரிவிப்பது. உத்தரவுகளைச் சரியாகப் பின்பற்றாத அல்லது நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டும் குறைபாடுகளைப் பதிவது; அத்துடன் பணியாளர்களும் தங்கள் குறைகளை வெளிப்படுத்த வாயிலாக அமைவது.

 room என்றால் பொதுவாக அறை என்றே குறிக்கிறோம். அறையில் இடமளி, கொட்டடி, அறைப்புரை, முறி, ஙனம், ஙகரம், நாடு, அறைவீடு, அங்கணம், தேயம், நிலையம், இடம், கதவு, அறை, அரங்கு, கோட்டம், பள்ளி, வெளி, அவகாசம், அறைக்கட்டு எனப் பல பொருள்களை அகராதிகள் கூறுகின்றன.

give no room for rumors என்றால் புரளிகளுக்கு(வதந்திகளுக்கு) இடம் தர வேண்டா எனப் பொருள். அறை தர வேண்டா எனச் சொல்வதில்லை.

எனவே, இந்த இடத்தில் room என்பதை அறை என்னும் பொருளில் குறிப்பது தவறாகிறது. பணியாளர்கள் தங்களுக்கு உள்ள குறைகளை மேலலுவர்களுக்குத் தெரிவிப்பதற்கான பதிவேடும் ஆகும். நான் முதலில் குறைநிறை பதிவேடு எனக் குறித்துள்ளேன்.  எனினும் குறை முறைப் பதிவேடு என்பதே சரியாக இருக்கும். குறைகளை முறையிடுவதற்கும் அதற்கான முறைகளைக் காண்பதற்குமான பதிவேடுதானே. எனவே

orderly room register – குறை முறைப் பதிவேடு எனலாம்.

ஆனால் இத்தகைய பதிவேடு நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை.

சட்டச் சொற்கள் சில

சட்டத்துறையி்ல் வழக்கத்திற்கு மாறான பொருளுடைய சில சொற்களைப் பார்ப்போம்.

Achromatic  – எழுதா ஆவணம்

Achromatic  – நிறமற்ற என்று பொருள்.

எழுதப்பெறா என்னும் பொருளில் சட்டத்துறையில் பயன்படுத்தப்படுகிறது. பயன்பாட்டில் எழுத்தாவணமற்ற வாய்மொழிக் கூற்றைக் குறிக்கிறது. எனவே, எழுதப்பெறா ஆவணம் >  எழுதா ஆவணம் எனலாம்.  எழுதப்பெறாத வேதத்தை எழுதாக் கிளவி என்பது தமிழ் வழக்கு.

Alienation- மாற்றுரிமை

Alienation-மாற்றாக்கம் எனக் குறிப்பிடுகின்றனர்.

பராதீனம் என்றும் சொல்கின்றனர்; நற்றமிழ்ச் சொல்லன்று இது. பராதீனம் என்பதன் பொருள் கட்டுப்பாடற்ற என்பதாகும். ஆதலின் ஒன்றிலிருந்து விலக்குதல், பிரித்தல் என்றும் பொருள் படுகிறது. கட்டுப்பாடற்ற என்பது அதனால், பிறர் வயமாவதையும் குறிக்கிறது.

பிறர் வயமாக்குவதற்காக ஒருவர் சொத்து, நிலங்கள், குடியிருப்புகள் அல்லது பிற பொருட்களை மற்றொருவருக்கு மாற்றும் ஒரு செயலாகும். எனவே, மற்றாக்கம் எனப்படுகிறது. உரிமை மாற்றம் > மாற்றுரிமை என்றே சொல்லலாம்.

Alienee – மாற்றாளர்

சொத்து அல்லது சொத்து உரிமை மாற்றம் பெறுபவர். எனவே, சுருக்கமாக மாற்றாளர் எனப்படுகிறது.

– இலக்குவனார் திருவள்ளுவன்

(தொடரும்)

Friday, December 22, 2023

இலக்குவனார் குறிப்பிடும் மாமூலனார் புலப்படுத்தும் வரலாற்றுச் செய்திகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

 








இலக்குவனார் குறிப்பிடும் மாமூலனார் புலப்படுத்தும்

வரலாற்றுச் செய்திகள்

பழந்தமிழர்களுக்கு வரலாற்றை எழுதி வைக்கும் உணர்வும் அறிவும் இல்லை என்று பரப்பி வருகின்றனர். சங்க இலக்கியப் பாடல்களிலேயே வரலாற்றுக் குறிப்புகள் பலவற்றைக் காணலாம். அகப்பாடல்களிலேயே உவமையாகவும் அடை மொழியாகவும் பல வரலாற்றுச் செய்திகளைப் புலவர்கள் தெரிவிக்கின்றனர். நடுகல், கல்வெட்டு, பட்டயம் முதலியனவும் வரலற்றுச் செய்திகள்தாமே! (தன்வரலாறு எழுதுவதைத் தற்புகழ்ச்சியாகக் கருதி எழுதவில்லை. அதுபோல் வாழ்க்கை வராற்றுச் செய்திகளையும் எழுதி வைக்க விரும்பவில்லை.) இவையெல்லாம் வரலாற்றுஅறிவு மிக்கவர்கள்தாம் பழந்தமிழர்கள் என்பதை மெய்ப்பிக்கின்றன. பெரும்பாலான பழந்தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டனவும் அழிந்தனவும் போல், வராற்று நூல்களும் அழிந்துள்ளன.

நாம் இங்கு மாமூலனார் பாடல்களில் இடம் பெறும் வரலாற்றுச் செய்திகளைப் பார்ப்போம்.   மாமூலனார் முப்பது பாடல்களை எழுதியுள்ளார். முப்பதும் அகப்பாடல்களே. இவற்றுள் 27 அகநானூற்றிலும் 2 நற்றிணையிலும் 1 குறுந்தொகையிலும் உள்ளன. இப்பாடல்களுக்கான விளக்கங்களைச் சங்கத்தமிழ்ப் பேரறிஞர் முனைவர் சி. இலக்குவனார் தாம்  1945-47   ஆண்டுகள் நடத்திய வார இதழான ‘சங்க இலக்கியம்’ என்னும் இதழில் தொடராக எழுதியுள்ளார். இது ‘சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்’ என்னும் பெயரில் திருமகள் நிலையப் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது. “மாமூலனார் இயற்கை நலனை இனிமையுறத் தீட்டும் செஞ்சொல் புலவர் மட்டுமல்லர். வரலாறு கூறும் வண்தமிழ்ப்புலவராகவும் காணப்படுகிறார்” என்னும் சங்கத்தமிழறிஞர் இலக்குவனார் அதற்கேற்ப மாமூலனார் கூறும் வரலாற்றுச் செய்திகளை நமக்குப் புலப்படுத்துகிறார். 

மாமூலனார் பாடல்கள் மூலம் அறிய வருவன

கோசர்கள்,   வரலாற்றுக்கு முற்பட்ட நன்னன்,  கரிகால் வளவன், சேரலாதன், புல்லி என்ற சிற்றரசன்,  உதியன் சேரலாதன், குட்டுவன்,  எவ்வி, விறல் போர்ப் பாண்டியன், எழினி, நந்தன், மோரியர், வடுகர், திதியன், அள்ளன், அதியன் முதலிய மன்னர்களைப் பற்றி மாமூலனார் குறிப்பிடுகிறார். யாழ்ப்பாணர், நல்வேல்பாணர், கள்வர்(களமர்), பரதவர் முதலியவர்கள் பற்றிய குறிப்புகளையும் தருகிறார். துளு நாடு, முதுகுன்றம் ,பாழி நகர், வேங்கடம், பொதினி, எருமை(குட நாடு), வெளியம், மாந்தை  முதலிய நாடுகள், நகரங்கள் பற்றிய விளக்கங்களை எடுத்துரைக்கிறார். நந்தர் செல்வம் முதலிய வரலாற்றுச் செய்திகளை மாமூலனார் கூறுவதை விளக்குகிறார். வெண்ணிப்போர் முதலிய போர்ச்செய்திகளைக் குறிப்பிடுகிறார். வடக்கிருத்தல், சுவர்களில் கோடு கிழித்தல், பூந்தொடை விழா, பெருஞ்சோறு படைத்தல், யானை வேட்டை, அரம் போழ் வளை யணிதல்,தோப்பி(நெல்லிலிருந்து எடுக்கப்படும் கள்) குடித்தல், நாளின் தொடக்கம், காவல் மரம், ஆம்பல் முதலிய எண்களின் பயன்பாடு முதலியபற்றிய ஆராய்ச்சி உரைகளை அறியலாம். தமிழர்களின் மொழியின் பெயர் தமிழே என்னும் வரலாற்றுக் குறிப்பு முதலிய பிறவற்றையும் மாமூலனார் பாடல்கள் மூலம் , பேரா.சி.இலக்குவனார் நமக்கு விளக்குகிறார். அவற்றுள் ஒரு பகுதியைமட்டும் இக்கட்டுரையில் காண்போம்.

1.கரிகால் வளவன்

2. சேரலாதன்

3. வெண்ணிப்போர்.

4. வடக்கிருத்தல்

மாமூலனார் அகநானூற்றில் 55 ஆம் பாடலில் மூன்று வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பிடுகிறார்.

கரிகால்வளவன் வரலாற்றைப் பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை, பழமொழி முதலியவற்றாலும் அறியலாம். சேரலாதன் வாழ்க்கை, 

மயிர்நீர்ப்பின் வாழாக்கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்

என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாகும். “இவன் உண்ணா நோன்பு கொண்டு உயிர்விட்டகாலத்து, இவன் நாடு பொலிவற்றிருந்தது என்பதனாலும், சான்றோர் பலர் உயிர்விட்டனர் என்பதனாலும் யாவராலும் விரும்பப்பட்ட பேரரசன் என்று அறியலாம்.”

கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்

பொருது புண் நாணிய சேரலாதன்

அழிகள மருங்கின் வாள் வடக்கிருந்தென

இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்

அகநானூறு 55.9-12

என இவர்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார். ஒளிபொருந்திய போர்க்கருவிகள் மிகுந்த கரிகால்வளவனோடு வெண்ணி என்ற ஊரில் நடந்த போர்க்களத்தில் சண்டையிட்டு, மார்பில் அம்பு பட்டு ஊடுருவிச் சென்றதால், முதுகில் புண் உண்டானது. இதனால் முதுகிலேயே புண்பட்டதாக வெட்கமுற்று சேர வேந்தன் பெருஞ்சேரலாதன், தான் பெருமை இழந்த போர்க்களத்தில் வாளுடன் வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்தான்.

“வடக்கிருத்தல்: மானம்கெட வருமிடத்து உயிர் வாழ விரும்பாத தமிழர்கள் தூய்மையான ஓரிடத்தில் வடக்கு நோக்கி உட்கார்ந்து எவ்வுணவும் கொள்ளாது உயிர்விட்டனர். வடக்கு நோக்கி உட்கார்ந்தமையில் “வடக்கிருத்தல்” என்று அழைக்கப்பட்டது.” எனப் பேராசிரியர் இலக்குவனார் விளக்கம் அளிக்கிறார்.

வெண்ணி’ ‘கோவில் வெண்ணி’ என்ற பெயரின் சுருக்கமாகும். இங்கு நடைபெற்ற போரே வெண்ணிப்போர். இவ்வரலாற்றுச் செய்தியை இப்பாடல் கூறுகிறது.

5. நந்தர் நிதியம்,  நந்தன் வெறுக்கை

நந்தர் செல்வம் குறித்த வரலாற்றுச்செய்தியை அகநானூற்று 265 ஆம் பாடலில் மாமூலனார் கூறுகிறார்.

பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்

 சீர் மிகு பாடலிக் குழீஇக் கங்கை

 நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ?

அகநானூறு 265 .4-6

நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண்

 தங்கலர்;

அகநானூறு 251.5-6

மாமூலனார்,  நந்தன் செல்வம் கிடைத்தாலும் தங்காமல் தலைவர் வந்துவிடுவார் எனத் தோழி தலைவியிடம் கூறுவதாகக் குறிப்பிடுகிறார். “தனநந்தன் என்பவன் செல்வத்தைத் தேடுவதிலேயே காலத்தைக் கழித்து, நாட்டில், தோல், பிசின், மரம், கல் முதலியவற்றின் மீதும் வரிவிதித்து எண்பது கோடிக்குமேல் சேர்த்து கங்கை நடுவில் உள்ள ஒரு மலைப்பாறையின் குகையில் ஒளித்து வைத்தான்” என்று சொல்லப்படுவதாகப் பேரா.இலக்குவனார் விளக்குகிறார்.

வடநாட்டு வரலாற்றுச் செய்திகளையும் தமிழ்ப்புலவர்கள் அறிந்திருந்தனர். அதுபோல்தான் மாமூலனார் நந்தன் குறித்த வரலாற்றுச் செய்தியை இங்கே குறிப்பிடுகிறார்.

6. எழினி

7. மத்தி

8. வெண்மணியின் கோட்டை வாயிலில் பல்லைப் பதித்தமை

பிடிபடு பூசலின் எய்தாது ஒழியக்

 கடுஞ்சின் வேந்தன்  ஏவலின் எய்தி

 நெடுஞ்சேண் நாட்டில் தலைத்தார்ப்பட்ட

 கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய

 வன்கண் கதவின் வெண்மணி வாயில்

 மத்தி நாட்டிய கல்கெழு பனித்துறை

அகநானூறு  211. 9-15

இப்பாடல் குறிப்பிடும் வரலாற்றுச் செய்தியைப் பேரா.இலக்குவனார் பின்வருமாறு விளக்குகிறார்.  “எழினி சிற்றரசன். சோழன் ஆணைக்கு உட்பட்டவன். (சோழன் இன்னான் என்று தெரியவில்லை) சோழன் ஆணைக்குக் கீழ்ப்படிந்து வராமல் யானை வேட்டையில் பொழுது போக்கிக்கொண்டு இருந்துள்ளான். சோழன் சீற்றமுற்றான். தனது படைத் தலைவனாம் மத்தி என்பவனை ஏவினான். மத்தி சென்று எழினியை வென்றான். அவன் பல்லைப் பிடுங்கினான். அப்பல்லை வெண்மணி  என்னும் ஊரின் கோட்டைவாயில் கதவில் பதித்துக்கொள்ளுதல் அக்காலவழக்கம் போலும். வெற்றியைக்குறித்த கல்லும் நாட்டியுள்ளான். இவ்வரலாறெல்லாம் அறியமுடியாத புதை பொருளாகவே இருக்கின்றது.”

9. பெருஞ்சோறு படைத்தல்

 போர்க்களத்தில் மடிந்த வீரர்கள் புதைத்த இடங்களில் நடுகற்கள் இடுவது தமிழர் வழக்கம். இறந்தவர்கள் நினைவு நாளில் வீரர்களைக் கொண்டாடுவது வழக்கம். உதியன் சேரலாதன் வீரர்களின் நினைவுநாளைப் பெருஞ்சோறு படைத்துக் கொண்டாடினான் எனப் பின்வரும் பாடலில் மாமூலனார் குறிப்பிடுகிறார். பாரதப்போரில் இரு தரப்பாருக்கும் சோறு வழங்கிய பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் குறித்து ப் புறநானூறு,

ஈரைம்பதின் மரும்பொருது களத்து ஒழிய

 பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

எனக் குறிப்பிடுகிறது. இவ்வரலாற்றுச் செய்தியைத்தான் மாமூலனார் குறிப்பிடுவதாகக் கூறுகின்றனர். பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் உணவு வழங்கியது பாரதப் போரில் அல்ல என்பதும் பெருஞ்சோறு வழங்கல் தமிழ் மன்னர்களின் பொதுவான பண்பாடு என்பதும் சொல்லப்படுகின்றன.(சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா? – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி). அவ்வாறாயின் பெருஞ்சோறு வழங்கும் பண்பாட்டுச்செய்தியை வரலாற்றுக் குறிப்பாக மாமூலனார் தந்துள்ளார் எனலாம்.

10. விறல் போர்ப்பாண்டியன்

வினை நவில் யானை விறல் போர்ப்பாண்டியன்

 புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை

அகநானூறு  201.3-4

தொழில் பயிற்சியுள்ள,  யானைப் படையால் சிறந்த வலிமை மிகுந்த போர் செய்வதில் சிறந்த பாண்டிய வேந்தனின் புகழ் நிறையும் கொற்கைத் துறைமுகம் குறித்து மாமூலனார் குறிப்பிடுகிறார். கொற்கையைப் பற்றி மேலைநாட்டு வரலாற்று ஆசிரியர்களும்  சிறப்பித்துக் கூறுகின்றனர்.

11. எவ்வி

வாய்வாள்

எவ்வி வீழ்ந்த  செருவில் பாணர்

கைதொழு மரபின் முன் பரித்து இடுஉப் பழிச்சிய

வள்ளயிர் வணர்மருப்பு அன்ன

அகநானூறு 115.7-10

வீசினால் பகைவரைக் கொல்லதத் தப்பாத வாட்படையினையுடைய எவ்வி என்னும் சிற்றரசன் போர்க்களத்தில் மடிந்தான். இதனால், பாணர்கள்,  தாங்கள் தொழுது வணங்கும்  யாழை ஒடித்துப் போட்டனர். எவ்வி மறைந்தபின், யாழிசைக்க விரும்பவில்லை அவர்கள். இசைவாணர்களால் போற்றப்படும் புகழ் மிக்க எவ்வி என்னும் அரசன் குறித்து இவ்வாறு மாமூலனார் கூறுகிறார்.

12. குடநாடு

குடநாட்டை ஒத்த அழகு என்றும் குடநாடு பெற்றாலும் தங்கியிராமல் திரும்புவார் என்றும் சொல்வதன்மூலம் குடநாட்டின் அழகையும் சிறப்பையும் கூறும் மாமூலனார் இப்பாடலில் வரலாற்று உண்மையைக் குறிப்பிடுகிறார்.

நுண் பூண் எருமை குடநாட்டு அன்ன என்

ஆய்நலம்

அகநானூறு 115.5-6

எருமை குடநாட்டை ஒத்த அழகு என்கிறார். இதன்மூலம் இன்றைய மைசூரான அன்றைய எருமையூர் சேர நாடான குடநாட்டுடன் இணைந்து தமிழ்நாட்டின் பகுதியாக இருந்த வரலாற்றுச் செய்தியை உணரலாம்.

13. நன்னன்

வேவ்வேறு நன்னன்கள் அரசாட்சி செய்துள்ளனர். நன்னன் வேண்மா, பெண்கொலை புரிந்த நன்னன், நன்னன், சேய் நன்னன் என்றெல்லாம் சங்க இலக்கியப்பாக்களில் குறிப்பிடப்படுகின்றவர்கள் இவனின் வேறாவர் என்று கருத வேண்டியுள்ளது. இதில் குறிப்பிடப்படும் நன்னன் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய நன்னனாக இருக்க வேண்டும் என்கிறார் பேரா.சி.இலக்குவனார்.

நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறைமகளிரொடு

அகவுநர்ப் புரந்த அன்பின் கழல் தொடி

நறவு மகிழ் இருக்கை நன்னன் வேண்மான்;

வயலை வேலி வியலூர் அன்ன

அகநானூறு 97.10-13?

இப்பாடலில் நன்னன் வேண்மான் பரந்து அமைந்துள்ள வியலூர் போன்ற பரந்த மார்பு எனக் குறிப்பிட்டு நன்னனின் ஊர்ச்சிறப்பு குறிக்கப் பெறுகிறது.

சூழியானைச் சுடர்ப்பூண் நன்னன்

 பாழி அன்ன கடியுடை வியன் நகர்ச்

 செறிந்த காப்பு இகந்து

அகநானூறு 15.10-13

இப்பாடலில்  பாதுகாப்பு மிகுந்த நன்னனின் தலைநகராகிய பாழி என்னும் ஊரைப்போன்று நம் வீடும் பாதுகாப்பு மிக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நன்னன்  தம் தலைநகரை மிகவும் பாதுகாப்பாகப் பேணி வந்த சிறப்பு அறிய முடிகிறது.

14.திதியன்

15. திதியன்-வேளிர் போர்

 நாளவையிருந்த நனைமகிழ் திதியன்

வேளிரொடு பொரீஇய கழித்த

வாள்வாய் அன்ன வறுஞ்சுரம் இறந்தே

அகநானூறு  331.12-14

அன்றன்று அலுவல் பார்ப்பதற்கு நாளவை என்னும் மன்றத்தில் வீற்றிருக்கும் திதியன் என்பதன் மூலம் மன்னர்கள் அன்றாடம் அலுவல் பார்ப்பதை அறிய முடிகிறது. ஆள் இல்லாத வழியைக் குறிப்பிடுகையில் திதியன் குறுநில மன்னர்களோடு போர் புரிவதற்காகக் கையில் எடுத்த வாள் நீங்கிய வெற்றுறை போன்று இருந்தது எனக் குறிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் போர்ச்செய்தி இடம் பெற்றுள்ளது. இவனும் மேலும் 6 சிற்றரசர்களும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் வெல்லப்பட்டமை, மதுரைக் காஞ்சியினும் அகநானூற்றுப் பாடல்களிலும் கூறப்படுகின்றது.

16. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

வலம்படு முரசின் சேரலாதன்

முந்நீர் ஒட்டிக் கடம்பு அறுத்து இமயத்து

முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து

நல்நகர் மாந்தை

அகநானூறு 127.3-6

வெற்றி முரசையுடைய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடலில் பகைவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து அப்பகைவர்களின் காவல்மரமாகிய கடம்ப மரத்தை வெட்டிய செய்தி தெரிவிக்கப்படுகிறது. இவன் முன்னோர் இமயமலையில் விற்கொடி பொறித்த அருவினையும் தெரிவிக்கப்படுகிறது. அத்தகையவனின் நல்ல நகராமாகிய மாந்தை எனக் கூறப்படுகிறது.

17. மோரியர் வருகை

முரண் மிகு வடுகர் முன்னுற மோரியர்

 தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு

அகநானூறு 281.8-9

வடுகர் துணையுடன் மோரியர் தென்பகுதிக்கு வந்த வரலாற்றுச்செய்தி குறிக்கப்பெறுகிறது.

18. சேரலாதன் கடற்போர்

சால்பெரும் தானைச் சேரலாதன்,

மால் கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து

அகநானூறு     347 . 3-4

பெருகி வரும் பெரும்படையுடைய சேரலாதன் கடலில் பகைவர்களை ஓடச்செய்து அவர்களின் காவல்மரமாகிய கடம்ப மரத்தை வெட்டியெறிந்த செய்தி குறிக்கப்பெறுகிறது.

19. குட்டுவனும் செம்பியனும்

குட்டுவன்

அகப்பா அழிய நூறிச் செம்பியன்

பகல்தீ வேட்ட ஞாட்பினும் மிகப்பெரிது

அலர் எழச் சென்றனர் ஆயினும்,

நற்றிணை 14 : 3-6

சேர அரசனுக்கும் சோழஅரசனுக்கும் இடையே நடந்த போர் குறிக்கப்பெறுகிறது. வெற்றி பெற்ற பின்பே உண்பேன் என உறுதி மொழி எடுத்து அவ்வாறு உண்பதைப் பகல் தீ வேட்டல் என்பர். அது இங்கே குறிக்கப்பெறுகிறது. குட்டுவன் சேரர் மார்பில் முதற்குட்டுவனாய் இருப்பின் வரலாற்றுக் காலத்துக்கு அப்பாற்பட்டவனாதல் வேண்டும் என்கிறார் பேரா.சி.இலக்குவனார். அப்படியாயின்இதில் குறிக்கப்பெறும் செம்பியனாகிய சோழனும் வரலாற்றுக்காலத்துக்கு அப்பாற்பட்டவனாக இருக்க வேண்டும். இதில் குறிப்பிடப்படும் போர ்நடந்த இடம் கழுமலம் எனப் பின்னத்தூர் நாராயணசாமி, நற்றிணைக்கான பொழிப்புரையில் குறிப்பிடுகிறார்.

20. அள்ளனும் அதியனும்

ஆடுநடைப் பொலிந்த புக ற்சியின் நாடுகோள்

அள்ளனைப் பணித்த அதியன்

அகநானூறு 325 . 8

வெற்றிச் செயலால் புகழடைந்த மகிழ்ச்சியால் தன் நாட்டைக் கொள்ள வந்த அள்ளன் என்னும் மன்னனைப் பணியச் செய்த அதியன் என்பதால் இருவரிடையே  நடைபெற்ற போர்ச்செய்தி குறிக்கப் பெறுகிறது.

நிறைவுரை

இவ்வாறு மாமூலனார் பாடல்கள் மூலம் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளை அறியலாம். எஞ்சியவற்றை ‘மாமூலனார் பாடல்கள்’ அல்லது ‘சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்’ வழி அறிந்து கொள்க.

 இலக்குவனார் திருவள்ளுவன், thiru2050@gmail.com

Followers

Blog Archive