Friday, June 30, 2017

மத்தியத் தலைவரானார் தாலின்! முன்மொழியுநராக மாறுக! – இலக்குவனார் திருவள்ளுவன்



அகரமுதல 192, ஆனி 11, 2048 / சூன் 25, 2017


மத்தியத் தலைவரானார் தாலின்! முன்மொழியுநராக மாறுக!

   தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாள்/ அவரது சட்டமன்றப் பணி மணி விழா,  தி.மு.க.வால் நடத்தப்பட்டுள்ளது. செயல்தலைவர் தாலின்(இசுடாலின்/ஃச்டாலின்) அனைத்து இந்தியத் தலைவர்களை அழைத்துச் சிறப்பாக நடத்தியுள்ளார்.
  விழாவில் கனிமொழிக்கு முதன்மை அளிக்காததன் காரணம், விழாவின் பெருமையில் யாரும் பங்கு போடக்கூடாது என்ற எண்ணம்தான். அவர் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும்வரை இந்த எண்ணம் இருக்கும். எனவே, இதனை அரசியல் அடிப்படையில் தவறாகக் கருத இயலாது. மேடையில் தமிழகக் கூட்டணித் தலைவர்களை மேடையேற்றாததன் காரணம் அனைத்து இந்தியத் தலைவர்களிடையே மாநிலத்தலைவர்கள் எதற்கு என்ற எண்ணம். ஆனால், திராவிடர்கழகம், நம் நாட்டில் மட்டுமல்லாமல், இலங்கை,  ஈழம்,  மலேசியா, சிங்கப்பூர், பருமா முதலான பல வெளிநாடுகளிலும் பரவியுள்ள இயக்கம். உலகத்தலைவராகக் கருதவேண்டிய  ஆசிரியர் வீரமணியைக் குறுகிய நோக்கில் மறுத்ததன் காரணம் அண்மைய அவரது அரசியல் கருத்தாகத்தான் இருக்க முடியும்.
  இப்படிச் சில குறைகள் இருப்பினும், அவர் தன்னை அனைத்து இந்தியத்தலைவர்களுடன் இணைந்து செயலாற்ற உயர்த்தி்க் கொண்டுள்ளார். அவரது முன்னேற்றம் பாராட்டிற்குறியது.
  இதற்கு முன்பு சென்னைக்கு வந்த எப்பொழுதும் கூட்டணிக்கட்சியான தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியைச் சந்திக்காதவர் இராகுல். தாலின், அவரை,  இம்முறை தன் வீட்டிற்கு  வரவழைத்ததுடன் தலைவர் கருணாநிதி இல்லத்திற்கும் சென்று அவரைச் சந்திக்கச் செய்துள்ளார். இராகுலுக்கு வேறுவழியில்லை என்றாலும் இதற்கு முன்பும் இந்த நிலைதான் இருந்தது. ஆனால், பிடிவாதமாகப் பண்பின்றி அல்லது விருப்பின்றிச் சந்திக்க மறுத்தவர்தான் இராகுல். அவரைச் சந்திக்கச் செய்தது,  தாலின் அணுகுமுறைக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.
 பிற கட்சியினரும் இப்போதைக்குப் பா.ச.க.வின் எதிர்நிலையிலுள்ள தி.மு.க.வுடன் இணைந்துதான் செயலாற்ற வேண்டும். எனவே, இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியக்கட்சிகளை வழிநடத்தும் திசைகாட்டியாகத் தாலின் மாற வேண்டும்.
 தமிழகத் தேர்தல் நோக்கில் அல்லது கூட்டணிப்பயன் நோக்கில் எனப் பிற தலைவர்களுடன் சந்திப்பை வைத்துக்கொள்ளாமல் பிறருக்கு முன்மொழியுநராக மாற வேண்டும். இப்பொழுது அ.இ.தலைவர்கள் முன்மொழிவதை வழிமொழியினராக உள்ளார். தலைவர் கருணாநிதி முன்பு இந்தியத்தலைவர்கள் இவரைக் கேட்டு முடிவெடுக்கும் நிலையில் இருந்தார்.  இந்தியாவின் வழிகாட்டியாக இருந்தவர் தமிழக அரசியலுடன் தன்னைச் சுருக்கிக்கொண்டது அவரது கட்சிக்கும் நாட்டிற்கும் இழப்பாகப் போயிற்று.
  அவ்வாறில்லாமல்,  எப்பொழுதும் பிற கட்சித் தலைவர்கள்,  இவர் கருத்திற்கு மதிப்பு கொடுக்கும் அளவில் தாலின் தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டுத் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
 தமிழ்நாட்டு அரசியலில் தலைமையாக இருந்து  கொண்டு இந்திய அரசியலில் “ஆமாம் சாமி” போட்டால்போதும் என்று எண்ணக்கூடாது.
  நாட்டின் அனைத்துச் சிக்கல்களிலும் அவற்றைக் களையவும் எதிர்த்துப் போராடவும் திட்டம்  தீட்டவும் வழிகாட்டும் தலைவராக மாறின், தாலின் உலகத்தலைவராக மாறுவார்!
  அதற்கு முன்னதாகத் தமிழ் மக்களின் உள்ளத்தில் உள்ள நெருடலைப் போக்க வேண்டும். இலங்கைத்தமிழர்கள், ஈழத்தமிழர்கள் நல்வாழ்விற்காகத் தி.மு.க. சிறப்பாக ஒரு காலத்தில் பணியாற்றியிருந்தாலும்,  தமிழின மக்களைக் கொத்துக் குண்டுகளாலும் வேதியல் குண்டுகளாலும் அழித்தொழித்தற்குத்  தோன்றாத் துணையாக இருந்ததுடன் பேரழிவை  நிலையாமை என்று சொன்னது எப்பொழுதும் முள்ளாகத் தைத்துக் கொண்டிருக்கும். எனவே, அதற்காகத் தாலினும் சோனியா அல்லது இராகுலும் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் இழந்ததைப் பெற முடியாது. என்றாலும் இரண்டில் ஒரு தெரிவு என்ற சூழலில் இருக்கும் மக்கள் பா.ச.க.வைவிட்டு விலகி இவர்கள் பக்கம் வர இது துணைபுரியும்.
  மன்னிப்பு கேட்பது என்பதும் புதியதல்ல. தவறு செய்த தலைவரே பின்னர் மன்னிப்பு கேட்பதும் முந்தைய பதவிப்பொறுப்பில் இருந்தவர் செய்த தவறுகளுக்காகப் பிந்தைய  பதவிப் பொறுப்பிற்கு வருபவர் மன்னிப்பு கேட்பதும் உலகெங்கும் உள்ள நடைமுறைதான்.  நம் நாட்டிலும் இந்த நடைமுறை இருந்துள்ளது. பொற்கோவிலில் படைத்துறையினரை நுழையவைத்துப் பெருங்குற்றம் இழைத்த இந்திராகாந்தி சார்பாகப் பின்னர் வந்த தலைமையமைச்சர் விசுவநாத்து பிரதாபு / வி.பி.சிங்கு மன்னிப்பு கேட்டதை எடுத்துக்காட்டாகக் கூறலாம். எனவே, ஈழத்தமிழ் மக்களுக்காகப் பெருங்கேடிழைத்த பெருங்குற்றத்திற்காகத் தானும் கட்சி அல்லது தந்தை சார்பில் மன்னிப்பு கேட்டுப் பேராயக் கட்சியையும்(காங்கிரசையும்) மன்னிப்பு கேட்கச் செய்ய வேண்டும். ஒரு நாடு, ஒரு சமயம், ஒரு மொழி எனப் பா.ச.க. அத்துமீறிக்கொண்டிருக்கும் இச்சூழலில் மன்னிப்பு கேட்பது மக்களை இவர்கள்பால் ஈர்க்கும்.
    பிற கட்சித் தலைவர்களிடம் உயர்தனிச்செம்மொழியான தமிழின் பெருமையையும் உலக மொழிகளின் தாயான அதனை இந்திய மக்கள் படிப்பது என்பது மூதாதையருக்குச் செலுத்தும் மதிப்பு என்பதையும் புரியச் செய்து தமிழின் சிறப்புகளை அவரவரர் பகுதிகளில் பரப்ப நற்றொண்டாற்ற வலியுறுத்தி வெற்றி காண வேண்டும்.
  அரசியலில் வெற்றி காணப் பிற கட்சிகளின் துணை வலிமை சேர்க்கும். ஆனால், நற்செயல் எல்லா நன்மையும் தரும். தவற்றினை உணர்ந்து மன்னிப்பு கேட்பதும்,  பிறருக்கு வழிகாட்டியாக உயர்த்திக் கொள்வதம் நற்செயல்கள் அல்லவா?
    துணைநலம் ஆக்கம் தருஉம் வினைநலம்
    வேண்டிய எல்லாந் தரும்.  (திருவள்ளுவர், திருக்குறள் 651)

இலக்குவனார் திருவள்ளுவன்

Monday, June 26, 2017

5 மாவட்டங்களிலும் தமிழக அரசே, மருத்துவமனை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்


அகரமுதல 192, ஆனி 11, 2048 / சூன் 25, 2017

5 மாவட்டங்களிலும் தமிழக அரசே,

மருத்துவமனை அமைக்கட்டும்!

   அ.இ.ம.அ.நி.(அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் நிறுவம்) மருத்துவமனை (AIIMS) தமிழ்நாட்டில் 200 காணி பரப்பில் 2000 கோடி உரூபாய் செலவில் அமைக்கப்பட இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 2015 இல் தெரிவத்தது.
  தமிழ்நாடு அரசு, செங்கல்பட்டு (காஞ்சிபுரம் மாவட்டம்), புதுக்கோட்டை,  செங்கிப்பட்டி(தஞ்சாவூர் மாவட்டம்), பெருந்துறை(ஈரோடு மாவட்டம்), தோப்பூர் (மதுரை மாவட்டம்) ஆகிய 5 இடங்களைப் பரிந்துரைத்தது.
   இந்திய ஒன்றியத்தின் நல்வாழ்வு குடும்பநலத்துறை இணைச்செயலர்  தத்திரி பண்டா (Dharitri Panda)  தலைமையிலான குழு 5 இடங்களையும் ஆய்வு செய்து  திரும்பியது.
  எனினும் தொடர் நடவடிக்கை இன்றி இத்திட்டம் கிணற்றில் போட்ட கல்லானது.  மேனாள் முதல்வர் செயலலிதா தலைமையமைச்சரிடம் உடனே தக்க இடத்தில் இம் மருத்துவமனை நிறுவுமாறு (17.2. 2016) வலியுறுத்தி மடல் அனுப்பினார்.
  மத்திய அரசு  5 இடங்களுமே தக்க இடமில்லை என மறுத்தது.
 இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  (பிப்.2017 இறுதியில்,) தலைமையர் நரேந்திரரை (மோடியை)ச்சந்தித்த பின்னர், இம் மருத்துவமனை தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கிப்பட்டியல் அமைய இருப்பதாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டதைக் கூறினார்.
  வாய்ப்பந்தல் போட்டட அளவிற்கு மருத்துவமனை அமைப்பற்கான எச் செயல்பாடும் இல்லை. எனவே, 5 மாவட்ட மக்களும் தத்தம் மாவட்டத்தில் மருத்துவமனை அமையப் போராடி வருகின்றனர்.
  இதற்கிடையில் பாற்கர் என்பார்  தமிழ்நாடு(சென்னை) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  மதுரையில் அஇமஅநி மருத்துவமனையை அமைக்க வழக்கு தொடுத்தார். இவ்வழக்கில் மத்திய அரசு தமிழக அரசு தெரிவிக்கும் இடத்தில் மருத்துவமனை அமையும் எனக் கூறியுள்ளது.
  தமிழக அரசின் கையில்தான் மருத்துவமனை அமையும் இடம்  இருக்கிறது என்று இப்போது சொல்லும் மத்திய அரசு  ஏன் பரிந்துரை கேட்கவேண்டும்.? 5 இடங்களில் பார்வையிட்டு மக்கள் பணத்தை வீணடிக்க வேண்டும்?  காலத்தை வீணடிக்க வேண்டும்?
  அண்மையில் சட்டமன்றத்தில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விசய பாற்கர், 5 இடங்களில் மருத்துவமனை எங்கு அமைந்தாலும் வரவேற்பதாகத் தெரிவித்தார். ஆனால், அடுத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தஞ்சாவூர் மாவட்டத்தில் மருத்துவமனை அமைய வாப்பில்லை என மத்திய அரசு மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
  அமைச்சரவை கூட்டுப்பொறுப்பிற்குரியது. மத்திய அரசின் தகவலைத் தொடர்புடைய அமைச்சருக்குக்கூட முதல்வர் தெரிவிக்கவில்லை எனில் அது தவறாகும்.
  மருத்துவச்சுற்றுலா வரைபடத்தில் இருப்பதாகவும் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை  ஆகிய நகரங்களில் இருந்து சம  தொலைவு இருப்பதாகவும் சொல்லப்பட்ட  செங்கிப்பட்டியில் அமைந்தால் சசிகலா-தினகரன் அணி செல்வாக்கு பெறும் என முதல்வரே மறுக்கச் சொல்லியிருந்தாலும் மத்திய அரசு மறுத்திருந்தாலும் அதுவும்  தவறாகும்.
  ருமானவரித்துறை, புலனாய்வுத்துறை முதலான துறைகளில் தலையிடும் மத்திய ஆளுங்கட்சி, இந்திய ஒன்றிய அரசு மூலம்,   மருத்துவமனை அமைப்பதிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றது.
  அங்கங்கே மாவட்ட அளவில் மக்கள் போராடுவதால், இதனை மாநில அரசின் பக்கம் திருப்பவே தமிழக அரசின் கையில் முடிவு எடுப்பதாகக் கூறியுள்ளது.
இப்போக்கு மாவட்டம் சார்ந்த பெரும்பான்மைச் சாதியின் எதிர்ப்பாகவும் மாறும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது போலும்!
  தமிழக மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்!
  மத்திய அரசின் அமைப்பு வருகின்றது என்றால், அங்கே தமிழ் அகற்றப்படுகிறது! தமிழர் வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்படுகிறது என்றுதான் பொருள்.
  ஒவ்வொரு மாவட்ட மக்களும் தனித்தினியே   போராடாமல்,  ஒன்றிய அரசு நிதி உதவியுடன் தமிழக அரசு 5 இடங்களிலும் உலகத்தரம் வாய்ப்நத மருத்துவமனை அமைக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும். தமிழக அரசு இதனை வலியுறுத்தும் நிலையில் இல்லை. மறைமுக ஆளுங்கட்சியான பா.ச.க. இது குறித்துக் கவலைப்படாது. எனவே,  மக்கள் சேர்ந்து குரல் கொடுத்தால் ஒன்றிய அரசு செவிமடுக்கும்.
நமக்குத் தேவைவாப்பு வசதிகள் உள்ளன எனக் கண்டறியப்பெற்ற 5 இடங்களிலும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளே!
முயல்வோம்! செல்வோம்!
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.  (திருவள்ளுவர், திருக்குறள் 671)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 192, ஆனி 11, 2048 / சூன் 25, 2017

Thursday, June 22, 2017

ஆட்சியை மாற்ற வேண்டியது மக்களே! ஆளுநர் அல்லர்! – இலக்குவனார் திருவள்ளுவன்


அகரமுதல 191, ஆனி 04, 2048 / சூன் 18, 2017

ஆட்சியை மாற்ற வேண்டியது மக்களே! ஆளுநர் அல்லர்!

  இந்திய நாடு முழுவதுமே மத்திய ஆளுங்கட்சிக்கு ஒத்துவராத மாநில ஆட்சிகள் பலமுறை கவிழ்க்கப்பட்டுக் கலைக்கப்பட்டுள்ளன. முதன் முதலில் (சூலை 31, 1959), சவகர்லால்நேருவால், தேர்ந்தெடுக்கப்பட்டப் பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சி கேராளவில் கலைக்கப்பட்டுக் குடியரசுத்தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் இதுவரை 125இற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மாநிலஅரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. சத்திசுகாரையும்(Chhattisgarh) புதியதாகத் தோன்றிய தெலுங்கானாவையும் தவிர எல்லா மாநிலங்களுமே குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உட்பட்டுள்ளன. ஏறத்தாழ 85 முறை  பேராயக்(காங்.)கட்சிதான் இத்திருவிளையாடலைச் செய்துள்ளது. பா.ச.க.வின் கலைப்புப்பணி 7 முறைதான் நடந்துள்ளது. இதனால், தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுமே கலைக்கப்பட்டுள்ளன.
    தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக்  குறுக்கு வழியில் கலைப்பதற்குக் கலைஞர்  கருணாநிதி பெரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று உள்ளக்கிடக்கை இருந்தபொழுதுகூட,  அரசமைப்புச்சட்டப்பிரிவு 356 ஐப் பயன்படுத்தி அரசைக் கலைப்பதற்கு எதிராகவே  பேசி வந்துள்ளார். ஆனால், இப்பொழுது அவர் திருமகனான மு.க.தாலின்,  குடியரசுத்தலைவர் ஆட்சியை அரங்கேற்றத் துடித்துக் கொண்டுள்ளார்.  செயலலிதா மறைவால் அதிமுக பிளவுறும்; ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற கனவு தகர்ந்ததால் வந்த செயற்பாடே இது.
 சோ.இரா.பொம்மை(S.R.Bommai)   வழக்கில் உச்ச நீதிமன்றம், குடியரசுத்தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதற்குச் சில நடைமுறைகளை வரையறுத்து நீதிமன்றத்தின் பார்வைக்கு இதனைக் கொணர்ந்தது. இருப்பினும் அதன்பின்னர், ஆட்சிக்கலைப்புகள் நிகழத்தான் செய்துள்ளன. ஆனால், இதுவரை வந்த எந்த ஆளுநர் ஆட்சியும் நேர்மையான ஆட்சியாக இருந்ததில்லை. நேற்றுவரை  இன்றைய அரசியல்வாதிக்குரிய இலக்கணங்களுடன்  திரிந்து, மக்கள் செல்வாக்கு இழந்த பின்னர் ஆளுநராக அமர்த்தப்பட்டவர்கள், எங்ஙனம் நேரான பாதையில் செல்வர்? இருப்பினும்  குடியரசுத் தலைவர் சார்பிலான ஆளுநர் ஆட்சி நேர்மையான ஆட்சி என்பதுபோல் சிலர் அதனை வரவேற்கின்றனர்.
  இத்தகைய திணிப்பு ஆட்சி என்பது மத்திய ஆளுங்கட்சியின் ஆட்சியாகத்தான் செயல்படுகின்றதே தவிர மக்கள் நலன் நாடும் ஆட்சியாகச் செயல்படுவதில்லை. எனவே, இத்தகைய ஆட்சியைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தினால், பா.ச.க.வின் மறைமுக ஆட்சிதான் நிலவும். இதனால் தி.மு.க.விற்கு என்ன ஆதாயம்? அடுத்துத் தேர்தல் வந்தால் தான் வரலாம் எனத் தி.மு.க. கனவு  காணலாம். ஆனால், இதுவரை ஆளுங்கட்சியான அதிமுகவைப் புரட்டி எடுத்துக்கொண்டிருக்கும் பா.ச.க. அடுத்துத்தன் பாய்ச்சலைத் தி.மு.க.மீதுதானே காட்டும். தமிழ்நாட்டின் இரு முதன்மைக் கட்சிகளையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தன் பேரவலிமையைக் கூட்டிச்சட்டமன்றத்திலும் ஆட்சி்யிலும்  இடம் பிடிக்கும் முயற்சியில்தானே அது ஈடுபடும்! இதனை  உணராமல் தாலின் ஆட்சிக் கலைப்பிற்குப் பாடுபடுவது சரியல்ல.
  அதிமுகவில் பன்னீர் பிரிந்ததும் எடப்பாடி பழனிச்சாமி முதலானோர் சசிகலா-தினகரனைப் புறக்கணிப்பதும் பா.ச.கவின் சித்து விளையாட்டுகளால்தான் என்பதை அனைவரும் அறிவர். இருப்பினும் யாரும் தி.மு.க.பக்கம் சாயவில்லையே! இயல்பாகத் தேர்தல் நடந்தால் தி.மு.க.விற்குக் கிடைக்கும் வெற்றி வாய்ப்பு  இதனால் பாதிக்கப்படுமே தவிரக், குடியரசுத்தலைவர் சார்பிலான ஆளுநர் ஆட்சியால் தி.மு.க.விற்கு எப்பயனும் விளையாது. நாடடிற்கும் கட்சிக்கும் பயன்தராத ஆட்சி வருவதற்குத் தி.மு.க. ஏன் பாடுபடவேண்டும்?
  ஆளுங்கட்சி, பெரும்பான்மை இழந்த சூழலில் எக்கட்சியும் ஆட்சியமைக்க இயலாச் சூழலில், சட்டம் ஒழுங்கு  சிதைந்த சூழலில், நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறு நேரும் சூழலில்.
என ஆட்சியைக் கலைப்பதற்கான சூழல்களை அரசமைப்புச்சட்டம் வரையறுத்துள்ளது. இவற்றுள் எந்த ஒன்றும் தமிழ்நாட்டில் இப்பொழுது பொருந்தவில்லை. கூவத்தூர் பூச்சாண்டியைக் காட்டுவதும் பொருந்தாது. எல்லா மாநிலங்களிலும் இது போன்ற நேர்வுகள் நிகழ்ந்துள்ளன. தி.மு.க.வும்  இந்தப்  பாதையில் வந்ததுதான்; இப்பொழுதும் இந்தப்பாதையில் நடந்து இயலாமல் திரும்பியதுதான்; இனியும் வாய்ப்பிருந்தால் இந்தப் பாதையில் நடக்கப்போவதுதான்.
  ஆட்சிக்கலைப்பிற்கு ஒரு காரணமாக மாநில அரசு  சமயச் சார்பின்மைக்கு எதிராகச் செயல்படுவதும் குறிக்கப்பெற்றுள்ளது. அப்படியானால் பா.ச.க. அரசுகளைத்தான் கலைக்க வேண்டும். ஆனால், அதற்கு வழிகாட்டும்  சமயவெறியும் மொழிவெறியும் பிடித்த பா.ச.க. அரசிற்கு என்ன தகுதி யிருக்கிறது?
  மக்கள் பரத்தை ஒருத்தி மீது கல்லெறிந்த பொழுது, இயேசுநாதர், “உங்களில் யார் ஒரு குற்றமும் செய்யவில்லையோ அவர்கள் இவள் மேல் கல்லை விசி எறியுங்கள்” என்றார் அல்லவா? அப்படிப்பார்த்தால் யாரொருவருக்கும் ஊழலைப்பற்றிச் சொல்லத் தகுதி இல்லை. நாம் நேர்மையான ஆட்சிதான் வரவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், அதற்கான சூழலை உருவாக்கவில்லை. எனவே,  அந்த நல்ல காலம் எப்பொழுது கனியும் என்று தெரியவில்லை. ஒரே வகையான குற்றச்செயலை அனைவரும் செய்யும் பொழுது வலியோருக்கு ஒரு தீர்ப்பு, எளியோருக்கு ஒரு தீர்ப்பு என்பது முறையில்லை யல்லவா?
  ஆகவே, தேர்தல் ஊழலைக் காரணம் காட்டி ஆட்சியைக் கலைக்கச்சொல்வது அதே குற்றத்தில் ஊறியவர்கள் சொல்வது, அதே குற்றத்தில் திளைப்பவர்கள் நடைமுறைப்படுத்துவது என்பது எப்படிச் சரியாகும்?
  மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி மக்களால்தான் அகற்றப்பட வேண்டுமே தவிர, அதிகாரத்தால் அல்ல! என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
  தவறான ஆட்சியை அகற்றும் அதி்காரம் கொண்டவர்கள் வாக்குரிமை கொண்ட மக்கள் மட்டுமே!! ஆளுநர் அல்லர்! மத்திய ஆட்சியனரும் அல்லர்!
விளைவை எண்ணாமல் ஆட்சியைக் கவர எண்ணுவது அழிவைத்தரும். அதனை விரும்பாமல் வாழும்  பெருமிதம்   (ஆட்சியாகிய) வெற்றி‌யைத் தரும்.
    இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
    வேண்டாமை என்னுஞ் செருக்கு (திருவள்ளுவர், திருக்குறள் 180)
–   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை  : அகரமுதல 191, ஆனி 04, 2048 / சூன் 18, 2017

Followers

Blog Archive