Sunday, May 30, 2021

தண்டனைக் குறைப்பு: கிணற்றுத் தவளைகளும் உலக நீதியும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

      30 May 2021      No Comment



தண்டனைக் குறைப்பு: கிணற்றுத் தவளைகளும் உலக நீதியும்!

இராசீவு காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்ட எழுவரும் தேவையின்றிச் சிறையில் காலவரம்பு கடந்தும் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இக்கொலை வழக்கு உசாவல் அதிகாரிகளும் நீதித்துறையினரும் மனித நேயர்களும் இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்னரே இவர்கள் விடுதலையை வலியுறுத்திய இன்றைய முதல்வர் மு.க.தாலின், அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே, குடியரசுத்தலைவருக்கு மடல் அனுப்பியுள்ளார்.

கடந்த மே 20அன்று குடியரசுத்தலைவருக்கு இராசீவு காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலிருக்கும் எழுவரையும் விடுதலை செய்ய உத்தரவிட மடல் எழுதி நேரில் கொடுக்கச் செய்துள்ளார்.

“எழுவரையும் விடுதலை செய்யத் தமிழக அமைச்சரவை 9.9.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குதான் உண்டு என்று கூறித் தமிழக ஆளுநர் அக்கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.” இதனை மடலிலும் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகள் மகுடைத் தொற்றை (கொரோனா) முன்னிட்டுச் சிறைவாசிகளை விடுதலை செய்து வருகின்றனர். பிரான்சு முதலான நாடுகளில் இதற்கெனத் தனிச்சட்டமே இயற்றி விடுதலை செய்து வருகின்றனர். இதற்கேற்பவே மகுடைத் தொற்றுப் பரவலைத் தடுக்க சிறைவாசிகளை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியுள்ளது. இதையும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காங்கிரசாரின் சட்ட அறிவு

தோழமைக்கட்சியினர், எதிர்க்கட்சியினர் எனப் பல கட்சியினரும் மனித நேயர்களும் இதை வரவேற்றுள்ளனர். மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசிடம் கொடுப்பானேன் என்றும் சிலர் கேட்டுள்ளனர். இருப்பினும் பேராயக்(காங்கிரசு)கட்சியினர் இது குறித்துத் தெரிவிக்கும் கருத்துகள் சட்ட அறிவே இல்லாத இவர்களையா மக்கள் சார்பாளர்களாகத் தேர்ந்தெடுத்து வருகிறோம் என நம் இழிநிலையை உணர வைக்கிறது. அக்கட்சியின் தமிழகத் தலைவர் அழகிரி, “இவ்விடுதலை சமுதாயத்தில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி விடும். எந்த ஒரு குற்றவாளிக்கும், நீதிமன்றம்தான் தண்டனையும், விடுதலையும் வழங்கும் முடிவை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மெத்த படித்தவரின் மகன் எனப் போற்றப்படும் கார்த்தி சிதம்பரம், “ஆயுள் தண்டனை கைதிகளைச் சில ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்யலாம் எனச் சட்டத்தில் இடமிருந்தால் எனக்கு மறுப்பு இல்லை” எனச் சொல்லியுள்ளார்.

இவர்கள் இவ்வாறு கூறுவது முதல் முறையல்ல. திருநாவுக்கரசர் போன்ற பேராயக்கட்சித்தலைவர்களும் இவ்வாறே கூறி வருகின்றனர். இதையறியும் அப்பாவிக் கட்சியினர் சிலரும் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வதா எனக் கூக்குரலிடுகின்றனர். ஆனால் இத்தகைய மீண்டும் மீண்டும் உளறிக் கொட்டுவதற்கும் அவ்வப்பொழுது சட்டப்படியான மறு மொழிகளை அளித்தும் அவற்றைக் கண்டுகொள்வதில்லை.

அரசுதான் விடுதலை செய்யும்

எந்த நாடாக இருந்தாலும் நீதி மன்றத்திற்குக் கேட்பிற்கு வரும் வழக்கில் குற்றமற்றவராயின் விடுதலை செய்யவும் குற்றம் இழைத்திருப்பின் தண்டிக்கவும்தான் சட்டப்படியான அதிகாரம் உள்ளது. அதே நேரம் எந்த நீதி மன்றத்திற்கும் தான் வழங்கிய தீர்ப்பைத் திருத்தவோ தண்டனையைக் குறைக்கவோ நீட்டவோ அதிகாரம் இல்லை. எல்லா நாடுகளிலும் சிறை நடைமுறை நூல்களில் தண்டனை என்பது மன்னித்துத் திருத்துவதையும் சேர்த்துதான் எனக் குறிப்பிட்டிருப்பர்.

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை (திருக்குறள் 579)

என்னும் குறள்நெறி தண்டனை வழங்கப்பட வேண்டியவர்களையும் மன்னித்துத் திருத்துவதே சிறந்த பண்பு என்கிறது. இதைத்தான் உலக நாடுகள் பின்பற்றுகின்றன.

உலகின் எல்லா நாடுகளிலும் தண்டனைவாசிகளை முன்கூட்டி விடுதலை செய்வது சிறைத்துறைகளின் பரிந்துரைகள் அடிப்படையில் அரசுகள்தான். உலகெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் தண்டனைக் குறைப்புப் பிரிவு (remission section)என ஒன்று இயங்குகிறது. எனவே, தண்டனைக் குறைப்பு என்பது உலக நடைமுறை.

எனவே, தண்டனைக் குறைப்பு என்பது சிறைத்துறையின் வேலை. இதில் நீதிமன்றங்கள் தலையிட வேலையில்லை. சிறைத்துறையின் பரிந்துரைகளுக்கிணங்க மாநில அரசுகள் ஆணையிடுகின்றன .

உ.பி.யின் பெருமன்னிப்பு

உ.பி.யில் பெருமன்னிப்பு வழங்க அரசமைப்புச்சட்டக் கூறு 161 தெரிவித்துள்ளதன் அடிப்படையில் இயோகி ஆதித்தியநாத்து அரசு 2018இல் கொள்கை முடிவு எடுத்து 1500 ஆயுள் தண்டனைவாசிகளை 2019 சனவரியில் விடுதலை செய்தது. இதே அரசமைப்புச் சட்டப்பிரிவின்படியும் குற்ற நடைமுறைச்சட்டம் பிரிவுகள் 432, 433, 433(அ) இன் கீழும் அசாம் அரசும் நூற்றுக்கணக்கான சிறைவாசிகளை விடுதலை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு உட்பட எல்லா மாநில அரசுகளும் இத்தகைய முன்கூட்டிய விடுதலைகளை வழங்கித்தான் வருகின்றன.

உலக நாடுகளில் பொதுவிடுதலை

தாய்லாந்தில் மகா வச்சிரலாங்காரன் அரசரின்(King Maha Vajiralongkorn) 68 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கிய அரச மன்னிப்பிற்கிணங்க ஆகத்து 2020 இல் 40,000 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். தொடர் நடவடிக்கையாகப் பின்னர் 2,00,000 சிறைவாசிகளை விடுதலை செய்தது. இதற்கு முன்னரும் திசம்பர் 2011 இல் தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேசின்(Thailand’s King Bhumibol Adulyadej) 84 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 2,700 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவரே அக்குடோபர் 2020இல் 931 சிறைவாசிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.

மொரோக்கோ நாட்டின் ஆறாம் முகம்மது அரசர்(King Mohammed VI) ஏப்பிரல் 2020இல் 5,654 சிறைவாசிகளைச் சிறையிலிருந்து விடுவித்தார். தேசிய, சமய விடுமுறைகளின் பொழுது மன்னிப்பு வழங்குவதற்கேற்பப் பக்குரீத்து எனப்படும் ஈகைத் திருநாளை(Eid Al Adha) முன்னிட்டு, ஆகத்து 2020இல் 752 சிறைவாசிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இதன் தொடர்ச்சியாக அக்குடோபர் 2020இல் 931 சிறைவாசிகளுக்கு விடுதலை அளித்தார். அதே ஆண்டிலேயே மன்னர்-மக்கள் புரட்சியை முன்னிட்டு 550 சிறைவாசிகளுக்கு விடுதலை வழங்கினார்.

இவ்வாறு வரலாறு நெடுக எல்லா நாடுகளிலும் நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டர்களை அரச விடுதலை செய்வதே ஏற்கப்பட்ட நீதியாகும்.

இந்த அடிப்படை அரசியலறிவுகூடப் பேராயக்கட்சியினரிடம் இல்லை என்றால் அவர்கள் அரசியலைவிட்டே ஒதுங்க வேண்டும். அறிந்தே வஞ்சக எண்ணத்துடன் திரித்துப் பேசுகிறார்கள் என்றால் தண்டிக்கப்பட வேண்டும். இராசீவு காந்தி குடும்பத்தினர் மன்னிப்புக் கருத்திற்கு எதிராகப் பேசுபவர்களை அக்கட்சியிலிருந்தே தலைமை நீக்க வேண்டும். அதே நேரம் பாதிக்கப்பட்டர்களின் மன்னிப்பு அல்லது மன்னிப்பு இன்மைக்கேற்ப எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது என்பதையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள நடைமுறைகளுக்கிணங்கவே முன் விடுதலை வழங்கப்படுகிறது என்பதையும் கிணற்றுத்தவளையாகக் கூக்குரலிடுவோர் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இந்த எழுவரைப் பொறுத்தவரை புலனாய்வுத்துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர் என வழக்கு தொடர்பானவர்கள் குற்றம் சாட்டப்பட்ட சாத்தனுக்கு மாற்றாக அப்பாவியான சாத்தனை வழக்கில் சிக்க வைத்தது, இரவிச்சந்திரன் வாக்கு மூலத்தை மாற்றி வைத்தது எனப் பல முறைகேடுகள் நிகழ்த்தியதைக் குறிப்பிட்டு இவர்கள் விடுதலை செய்யப்படவேண்டியவர்கள் எனப் பலமுறை தெரிவித்துள்ளனர். அப்பாவிகளைக் காலத்தை நீட்டித்துச் சிறைகளில் அடைத்து வைத்திருப்பது மனித நேயமல்ல என்ற உணர்வுதான் நமக்கு வரவேண்டும். கொலைக்கு எதிரானவர்கள் போலவும் அறவாணர்கள் போலவும் சட்டம் தெரிந்தவர்கள் போலவும் கொலையாளிகளை விடுதலை செய்யலாமா என்று அறியாமையுடன் கேட்பதும் அறிந்தே குழப்பம் விளைவிப்பதாகும்.

மன்னர்கள், தலைவர்கள் பிறந்தநாள்களின் பொழுதும் ஆட்சிப்பொறுப்பில் ஏறும்பொழுதும் சிறைவாசிகளை விடுதலை செய்வது உலக நாடுகளில் காலங்காலமாக உள்ள நடைமுறையே!

– இலக்குவனார் திருவள்ளுவன்

– மின்னம்பலம்

பகல் 1 ஞாயிறு 30 மே 2021



Sunday, May 9, 2021

கருத்துக் கதிர் 1/2052: அமைச்சுத்துறைப் பெயரில் தமிழ் வளர்ச்சி சேர்க்கப்பட வேண்டும். 2/2052: இணையப் பயன்பாட்டைச் செம்மையாக்க வேண்டும். 3 /2052: இணைய வழித் தகவல்கள் உடனுக்குடன் மாற்றவோ சேர்க்கவோப்பட வேண்டும். 4/2052 : பேரவைத் துணைத்தலைவர் பதவியை அதிமுகவிற்கு வழங்கலாம்.

 அகரமுதல



கருத்துக் கதிர் 1/2052: அமைச்சுத்துறைப் பெயரில் தமிழ் வளர்ச்சி சேர்க்கப்பட வேண்டும்.

 தமிழக அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சர், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்பப்பண்பாடு, தொல்லியல் துறை முதலியவற்றைப் பார்க்கிறார். ஆனால் அமைச்சுப் பெயரில் தமிழ் எந்த வகையிலும் இடம் பெற வில்லை. முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதிதான் தமிழ் வளர்ச்சிக்கெனத் தனி அமைச்சுத்துறையைத் தோற்றுவித்தவர். எனினும் அதிகாரமில்லாத் துறையால் அமைச்சருக்கு உரிய மதிப்பு கிடைக்கவில்லை எனப் பிற துறையையும் அதனுடன் இணைத்தார். ஆனால், அமைச்சுப்பெயரில் தமிழ் வளர்ச்சி இடம் பெற்றிருக்கும். சான்றாகத் தமிழ் வளர்ச்சித்துறையுடன் அறநிலையத்துறை இணைந்த பொழுது தமிழ் வளர்ச்சி அறநிலையத்துறை என அழைக்கப்பெற்றது.  பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்த பொழுது தமிழ் வளர்ச்சி எடுக்கப்பட்டது. தமிழ்க்காப்புக்கழகம் மூலம் முறையிட்ட பின்னர் அமைச்சுத்துறையில் தமிழ் ஆட்சி மொழி இடம் பெற்றது. மீண்டும் அடுத்த அதிமுக அரசு அமைந்த பொழுதும் தமிழ் விடுபட்டது. அப்பொழுது முறையிட்ட பின்பும் தமிழ் வளர்ச்சி சேர்க்கப்பட்டது. தமிழுக்கு எதிரான யாரோ ஒரு புல்லுருவி அதிகார மட்டத்தில் உள்ளதால் இந்த நிலை. இப்பொழுதும் மு.க.தாலின் அமைச்சரவை அமைத்துள்ள பொழுது அமைச்சுத்துறையின் பெயரில் தமிழ் இல்லை. உரியவரை அடையாளம் கண்டு முதல்வர் களை யெடுக்க வேண்டும்.  தமிழ் வளர்ச்சித்துறை பண்பாட்டுத்துறை முதலியனவற்றிற்கான அமைச்சர் தொழிலக ஆட்சித்தமிழ் அமைச்சர் அல்லது தொழிலக – தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறை அமைச்சர் என்பனபோல் ஏதேனும் வகையில் பெயரிலேயே தமிழ் ஆட்சிமொழிக்குமான அமைச்சர் என்பது புரியும் வகையில் பெயர் சூட்டப்பட வேண்டும். விரைந்து செயலாற்றும் முதல்வர் மு.க.தாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக் கழகம்.

000

கருத்துக் கதிர் 2/2052: இணையப் பயன்பாட்டைச் செம்மையாக்க வேண்டும்.

அரசின் இணையப் பயன்பாட்டினால் மக்களுக்கு விரைவில் குறைகள் தீரவும் தேவைகள் நிறைவேறவும் தகவல்கள் அறியவும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. ஆனால், எப்பொழுதுமே இணையப் பயன்பாடுகள் எத்துறையிலும் சீராக இருப்பதில்லை. அது குறித்து எத்துறையினரும் கவலைப்படுவதில்லை. முதலில் இணைய வசதியை ஏற்பாடு செய்துவிட்டு அதன்பின்னர் அது சரியாகச் செயல்படுகிறதா என்று பார்ப்பதில்லை. அல்லது ஆங்கிலத்தில் ஓரளவு பயன்பாடு இருக்கும். அதைக் கருத்தில் கொண்டு முழுமையும் சிறப்பாக இருப்பதாக எண்ணிக் கொள்வர் அல்லது தமிழ்ப் பயன்பாடு குறித்துக் கவலைப்படுவதில்லை.

சான்றுக்கு இரண்டைப் பார்ப்போம். வருவாய்த்துறையிலும் உள்ளாட்சித்துறையிலும் இணைய வழியாகச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.  ஆனால் தமிழ்ப்பகுதி வேலை செய்யாது. முதலைமச்சர் தனிப்பிரிவிலும் இதுதான் நிலை. தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டால் ஆங்கிலப் பகுதியில் விண்ணப்பிக்கக் கூறுவார்கள்.  வருவாய்த்துறையில்  சான்றிதழுக்காக விண்ணப்பித்தால் இணையத்தில் பதிந்து கொள்வர். ஆனால், விண்ணப்பதாரர் கைகளில் விண்ணப்பங்களைக் கொடுத்து விட்டு ஊர் நல அலுவலர் நிலையிலிருந்து ஒவ்வொரு நிலையாகச் சென்று உரிய சான்றிதழ்களை வாங்கி வருமாறு அலைய விடுவர். இறுதியில் வட்டாட்சியர் அலுவலகத்திலும் அலைந்து காணிக்கையைச் செலுத்திய பின்னர் இணையத்தில் சான்றிதழ் கிடைக்கும். இணையப்பயன்பாடு இருக்கும் பொழுது பொதுமக்கள் ஏன் ஒவ்வொரு நிலையிலும் அலைய வேண்டும். ஆங்காங்கே படி அளப்பதற்காக இந்த நடைமுறையா? இதனைப் புதிய அரசு உடனே மாற்ற வேண்டும். மக்கள் குறைகளைக் களைவதில் விரைவு காட்டுவதால் இத்தகைய போக்கு  அதற்கு இடையூறாக இருக்கும் என்பதை உணர்ந்து முழு இணையப்பயன்பாட்டைக் கொணர வேண்டும். இணையம் வழியாகவே மக்கள் உரிய விண்ணப்பம் அளித்து இணைய வழியாகவே சான்றிதழைப் பெறும் வகையில் செம்மையாக்க வேண்டும். இதனால் தொடர்பான ஊழல்கள் குறையும். மக்களுக்கு நன்மையும் ஏற்படும். ஆவன செய்ய உரிய அரசு அலுவலர்களை வேண்டுகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

000

கருத்துக் கதிர் 3 /2052: இணைய வழித் தகவல்கள் உடனுக்குடன் மாற்றவோ சேர்க்கவோப்படவேண்டும்.

இணைய வழித் தகவல்களும் அற்றைப்படுத்தப்படாமல் பழைய தகவல்களே இருக்கும். அல்லது ஆங்கிலத்தில் ஒன்றாகவும் தமிழில் மற்றொன்றாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாகப் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றபின்பு தகவலைத்தேடினால் தமிழில் முந்தைய முதல்வர் பெயரையும் முந்தை அமைச்சரவையினர் பெயரையுமே பார்க்க முடிந்தது. ஆங்கிலத்தில் உரிய விவரங்களைப்பதியும் பொழுது தமிழ் மீது புறக்கணிப்பைக் காட்டுவதேன்? இன்றைக்குப் பார்த்த பொழுது தமிழில் முதல்வர் பெயர் மட்டும் மாற்றப்பட்டுச்சரியாக இருந்தது.  அமைச்சரவையைச் சொடுக்கினால், ஆங்கிலப்பகுதிக்குச் சென்று ஆங்கிலத்தில் அமைச்சரவையினரைக் காட்டுகின்றது. அதனைத் தமிழில் வெளியிடுவதில் என்ன சிச்கல்?  தமிழில் விவரங்களைப் பதிவேற்றம் செய்யத் தெரியாதவர்களாக இருப்பின் உடனடியாக அவர்களைப் பொறுப்புகளிலிருந்து தூக்கி எறிய வேண்டும்.  உடனுக்குடன் தமிழில் விவரங்களைத் தர வேண்டும். இதுபோல் மாவட்ட இணையப் பக்கங்களைப் பார்த்தால் அங்கே தமிழுக்கு இடமில்லை. புதிய முதல்வர் பொறுப்பேற்றாலும் முந்தைய முதல்வர் பெயரே காட்சிதரும். முறையிட்ட பின்பே மாற்றுவார்கள். இந்தத் தொல்லை வேண்டா என்பதற்காக இப்பொழுது மாவட்டப் பக்கங்களில் முதல்வர் பெயரையே எடுத்து விட்டார்கள். எல்லாத் துறைகளிலும் தலைவர் முதலான விவரங்கள மாறினாலும் பழைய விவரங்களே வாரக்கணக்கில் இருக்கும். இவ்வாறு இல்லாமல் எல்லா நிலைகளிலும் தமிழில் விவரங்கள் அவ்வப்பொழுது உடனுக்குடன் பதிவு செய்யப்பட வேண்டும். உறங்கிக் கொண்டிருக்கும் தமிழ் வளர்ச்சித்துறை இணையங்களில் தமிழ் முழுமையாகப் பயன்பாட்டில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

000

கருத்துக் கதிர் 4/2052 : பேரவைத்துணைத்தலைவர் பதவியை அதிமுகவிற்கு வழங்கலாம்.

மு.க.தாலின் மேற்கொண்ட திட்டமிடல், செயலாக்கம் முதலியற்றால் தி.மு.க. வலிமையாகப் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பீடத்தில் ஏறி இருக்கிறது. இருப்பினும் முதல்வர் கட்சிசார்பற்ற செயல்பாடுகளையே விரும்புகிறார். கட்சித்தலைவராக இல்லாமல் முதல்வராகச் செயல்பட முனைப்பு காட்டுகிறார். அதனால் இக்கருத்தை அவர் முன் வைக்கின்றோம். பேரவைத்துணைத்தலைவர் பதவியைப் பேராயக்கட்சிக்கு வழங்கினால்  கூட்டணிக்கு வலு சேர்க்கும் என்றாலும் அக்கட்சி எதிர்க்கட்சிதான். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் வேண்டினால் பேரவைத் துணைத்தலைவர் பதவியை அக்கட்சிக்கு வழங்கலாம். இதனால் அக்கட்சியிலும் ஒருவர் பேரவைத் துணைத்தலைவராகவும் மற்றொருவர் பேரவை எதிர்க்கட்சித்தலைவராகவும் திகழ்ந்து கட்சியின் உட் குழப்பம் தீரலாம். அரசின் செயல்பாடுகளுக்கு எதிரிக்கட்சிபோல் செயல்படாமல் அரசுடன் ஒத்துழைத்து தமிழகம் வெற்றி நடைபோட அக்கட்சியும் உதவலாம். தேர்தலின் பொழுது போட்டிமனப்பான்மைகளை வைத்துக்கொண்டு இப்பொழுது ஒற்றுமைப் போக்கைக் கடைப்பிடிக்கலாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

000


Sunday, May 2, 2021

முதல்வர் மு.க.தாலின், புதிய உறுப்பினர்கள், வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!- இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




முதல்வர் மு.க.தாலின், புதிய உறுப்பினர்கள், வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!

 

தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்

(திருவள்ளுவர், திருக்குறள் 462)

திருவள்ளுவர் திருவாய்மொழிக்கிணங்க தேர்தல் வழிமுறைகளை நன்கு தெரிந்த கூட்டத்தோடு ஆராய்ந்து, பலவகையாலும் தாமும் எண்ணி அருவினை ஆற்றி வெற்றியை அறுவடை செய்துள்ளார் தி.மு.க.தலைவர் மு.க.தாலின். தேர்தல் கணிப்புகள் பொய் எனக் கூறி தி.மு.க. வெல்லாது என்றவர்களுக்கு வலுத்த அடியைக் கொடுத்துள்ளது தேர்தல் முடிவுகள். 125 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுத்தனிப் பெருங்கட்சியாகத் திகழ்கிறது. கூட்டணிக்கட்சிகள் 34 இடங்களை வென்றுள்ளன.

தமிழக மக்கள் எப்பொழுதும் கூட்டணி ஆட்சியைத் தெரிவு செய்யாமல் தனித்த நிலையான ஆட்சிக்குத்தான் வாக்களிப்பர் என்னும் நிலைப்பாட்டில் வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி. தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்காமல் வெற்றி பெறப்போகும் கட்சிக்கு வாக்களிப்பதும் வாக்களார்கள் பழக்கம். இதன் காரணமாகத்தான் அ.ம.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வாக்கை வீணாக்காமல் நிலையான ஆட்சி வேண்டித் தி.மு.க.விற்கு வாக்களித்தனர்.

பா.ச.க. என்னும் பாம்பைக் காலில் சுற்றி வைத்துக் கொண்ட அ.தி.மு.க.வால் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை;. பொதுத்தேர்வு முதலான பல் வேறு சூழல்களில் பா.ச.க.வின் தாளத்திற்கு ஏற்ப ஆடியதால் ஆட்சியை இழந்து விட்டது. ஆட்சியை இழந்த எடப்பாடி பழனிச்சாமி கட்சியைக் காப்பாற்றிக் கொண்டார்; 92,868 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி அடைந்துள்ளார்; அ.இ.அ.தி.மு.க.வை 65 இடங்களில் வெற்றி பெறச் செய்துள்ளார்; கூட்டணிக் கட்சிகளை 9 இடங்களில் வெற்றி பெறச் செய்துள்ளார்; தான் உழைத்த கொங்கு மண்டலத்தில் மகிழ்ச்சியான வெற்றியைக் கட்சிக்கு வாங்கித் தந்துள்ளார். என்றாலும் அவர் கவனமாகச் செயல்படாவிட்டால் ஆட்சியை இழந்ததற்கு அவரின் பிடிவாதம்தான் காரணம் என அவருக்கு எதிராகக் கலகக் குரல்கள் எழுவதைத் தடுக்க இயலாது. இருப்பினும், தேர்தல் வரும் வரை ஆட்சியை நிலைக்கச் செய்து கட்சியிலும் பிடிப்பை ஏற்படுத்திக் கொண்ட அவருக்குப் பாராட்டுகள்!

கடம்பூர் இராசு எளிமையாக அனைவரிடமும் பழகும் பண்பினால் மக்களைக் கவர்ந்து வெற்றி பெற்றுள்ளார். ஆகவே, தினகரனின் சாதிக்கணக்கு வெற்றி பெறவில்லை. ஆனால், தினகரன் கட்சி இந்த அளவிற்குக் குறைவான வாக்குகள் பெறும் என எதிர்பார்க்கவில்லை. “தினகரன் தனிக் கட்சியில் இருப்பதைவிட, அதிமுகவில் இருந்தால் முதன்மைச் செல்வாக்கு பெறுவார்”  என முன்பு குறிப்பிட்டதுதான் உண்மை.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற

(திருவள்ளுவர், திருக்குறள் 495)

என்பதற்கு இலக்கணமானார்.

அ.தி.மு.க.வை மீட்க முயலும் தினகரனால் தன் கட்சியையே காக்க முடியவில்லை. இதற்குச் சசிகலாவும் ஒரு  காரணம். பா.ச.க.வின் மிரட்டலால் அரசியலிலிருந்து ஒதுங்கியவர் அ.தி.மு.க.ஆதரவுத் தொனியை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் அ.ம.மு.க. கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கும். ஆயிரத்திற்கும் குறைவாகவே வாக்குகளைப் பெற்றுள்ள இப்போதைய அவல நிலைக்கு வந்திருக்காது.

ஒரு தேர்தல் முடிந்ததுமே அடுத்த  தேர்தலுக்கான பணியைத் தொடங்குவது பா.ச.க.வின் திட்டமிடல் பழக்கம். எனினும் வாக்குகளிலேயே கருத்து செலுத்தும் அக்கட்சி வாக்காளர் நலன் குறித்துக் கருத்து செலுத்தாமைதான் தோல்விக்குக் காரணம். எம்.ஆர் காந்தி, நயினார் நாகேந்திரன், சி.கே.சரசுவதி ஆகியோர் முற்றிலும் தனிப்பட்ட செல்வாக்கினால்தான் வெற்றி பெற்றுள்ளனர். வானதி சீனிவாசனுக்குத் தன் தொகுதியில் உள்ள உள்ள பா.ச.க.வாக்கு வங்கியும் பிற மாநிலத்தவர்கள் வாக்குகளைப்பெற  அவர் மேற்கொண்ட தேர்தல் உத்திகளும் கை கொடுத்து வெற்றிக் கனியை அளித்துள்ளது. இனியேனும் பா.ச.க. தமிழக மக்கள் நலன்களுக்கு ஆதரவாகச்செயல்படட்டும்!

கலைஞர்களைப் போற்றும் தமிழக மக்கள் தேர்தல் களத்தில் திரை உலக மாயையில் வீழ்வதில்லை என்பதைக் கமல் புரிந்து கொண்டிருப்பார்.

நம் முதல் வாழ்த்து சீமானுக்குத்தான். ஏனெனில், தேர்தல் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து தேர்வு எழுதி எழுதித் தன் கட்சியை வளர்த்து வருகிறார். தமிழர் என்ற உணர்வு வெளிப்படுவதற்கு அவரின் நாம் தமிழர் கட்சி பாடுபடுகிறது. சம பங்கு பெண் வேட்பாளர்கள், வாக்குகளை விலைக்கு வாங்காமை போன்ற அவரின் பல செயல்கள், அவருக்கு வாக்காளிக்காதவர்களாலும் பாராட்டப்பட்டுள்ளன. சீமான், திராவிடம் என்னும் சொல்லாட்சியைப் புரிந்து கொள்ளாமலும் திராவிடக்கட்சிகள் செய்யத் தவறியவற்றைக் கண்டிப்பதற்காகச் செய்த பணிகளைப் புறக்கணிப்பதும் தவறு என உணர வேண்டும்.

தே.மு.தி.க அதன் தலைவர் விசயகாந்தின் தனிப்பட்ட செல்வாக்கு மீது மட்டும் பயணம் செய்வதால் அவர் நலிவுற்ற சூழலில் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லவில்லை.

தி.மு.க.கூட்டணியால்தான் பேராயக்கட்சி(காங்கிரசு) 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஈழத்தமிழர் படுகொலைதொடர்பாக அதன் மீதுள்ள சினம் நீறுபூத்த நெருப்பாகத்தான் உள்ளது. சமற்கிருத, இந்தித் திணிப்புகளுக்குக் கால்கோளிட்டு வளரச்செய்தது அக்கட்சிதான். பா.ச.க. இன்றைக்குச் சொல்லும் தட்சிணப்பிரதேசம் உட்பட கூட்டாட்சிக்கும் தேசிய மொழி இன உரிமைகளுக்கும் எதிான எல்லாச் செயல்பாடுகளுக்கும் வழி அமைத்தது பேராயக்கட்சிதான். இனியேனும்  தன் போக்கை அது மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஊடக விளம்பரத்தில் மயங்கி, மக்கள்மனத்தைப் புரிந்து கொள்ளாமல் சகாயம் (இ.ஆ.ப.) தேர்தலில் இறங்கியதைக் குறிப்பிட்டிருந்தோம். இந்தத் தேர்தல் முடிவுகள் அவருக்கு நாட்டு மக்கள் நிலையைப் புரிய வைத்திருக்கும். இந்தப் புரிதல் அடிப்படையில் அவர் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும்.

தேர்தலில் வாகை சூடிய அனைவருக்கும் வாழ்த்துகள்! கட்சிச் சார்பின்றிப்  பணியாற்றுவதன் மூலம் கட்சிக்குப் பெருமை சேர்க்கட்டும்! மக்கள் நலப்பணிகளில் கருத்து செலுத்தட்டும்! தமிழர், தமிழ் நலன்களுக்குக் குரல் கொடுக்கட்டும்! அமைச்சரவை முடிவானதும் அமைச்சர் பொறுப்பேற்க இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்! மக்கள் பகைப்போக்கிற்கு இடம் தராமல் நிலைத்த பணியாற்றுங்கள்!

ஆட்சியில் அமருவதற்கு முன்னரே ஆட்சிப்பொறுப்பேற்றதும் செய்ய வேண்டிய திட்டங்களை வகுத்து வைத்துள்ளார் மு.க.தாலின். அவற்றைத் திறம்படச் செய்து மக்கள் உள்ளங்களில் நிலைத்த இடம் பெறட்டும்!  இயன்றால் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆட்சியில் இடம் தரட்டும்! இல்லையேல் அமைச்சுப்பதவிக்கு இணையான பதவிகளை நல்கி ஆட்சியில் அவர்களையும் இணைத்துக் கொள்ளட்டும்!

பொறுப்பேற்க உள்ள புதிய பேரவையினருக்கும் அமைச்சரவையினருக்கும் வாழ்த்துகள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை -அகரமுதல

 



Followers

Blog Archive