Saturday, October 27, 2018

கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்குவதே கலைஞருக்கு உண்மையான அஞ்சலி! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்குவதே
கலைஞருக்கு உண்மையான அஞ்சலி!

தமிழுக்குரிய தொன்மையான செம்மொழித் தன்மையை மத்திய அரசை ஏற்கச் செய்ததில் கலைஞர் கருணாநிதிக்கு முதன்மைப் பங்குண்டு. தமிழறிஞர்களின் வேண்டுகோளுக்கிணங்கச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைய அவரே காரணமாக இருந்தார். இந்நிறுவனம் வளரவும் தமிழ் மேம்படவும் கனவு கண்டார்.  எனவே தனிப்பட்ட முறையில் சொந்தப்பணம் உரூ 1 கோடி வழங்கிச் செம்மொழித் தமிழ் அறக்கட்டளையை வழங்கினார். இத்தொகை தரும் வட்டியிலிருந்து ஒவ்வோராண்டும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கவும் ஏற்பாடு செய்யப்பெற்றது. விருது என்பது உரூ 10,00,000 தொகையாகும். இத்துடன் தகுதிச்சான்றிதழும் தமிழ்த்தாய்ச்சிலை நினைவளிப்பும் தங்கப்பதக்கமும் பொன்னாடையும் வழங்கப் பெறும். ஆண்டுதோறும் ஏப்பிரலில் விண்ணப்பங்கள் கேட்டு, மேத் திங்கள் முடிவெடுத்து, நன்கொடையாளரான கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான சூன் 3 இல் விருது வழங்கப்பெறும் எனவும் அறிவிக்கப்பெற்றது.
செம்மொழித் தமிழாய்விற்குச் சீரிய முறையில் பங்காற்றியுள்ள அறிஞர் அல்லது நிறுவனத்திற்கு இவ்விருது வழங்கப்பெறும். பண்டைத் தமிழ்ப் பண்பாடு, நாகரிகம்பற்றிய புதிய கருத்துகளை வெளிப்படுத்துவதாகவும் உலக அளவில் ஏற்புடையதாகவும், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், பண்டை இலக்கணமும் மொழியியலும், இலக்கியத் திறனாய்வு, படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, இசை, நடனம், நாடகம், ஒவியம், சிற்பம் முதலான ஏதேனும் துறையில் மேற்கொண்ட ஆய்வாகவும் பங்களிப்பு அல்லது படைப்பு இருக்கலாம். தமிழ் குறித்துப் பிற மொழியிலும் இருக்கலாம். இவ்விருது உலகளாவியது. அது மட்டுமல்ல நம் நாட்டில் கூடுதல் பரிசுத் தொகை உடைய இலக்கிய விருதாகும்.
2009 இல் கோயம்புத்தூரில் செம்மொழி மாநாடு நடைபெற்ற பொழுது முதல் விருது பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அசுகோ பர்ப்போலா(Prof. ASKO PARPOLA) என்னும் அறிஞருக்கு வழங்கப் பெற்றது.  இவர் சிந்துச் சமவெளி, அரப்பா நாகரிகம் குறித்தும் அவற்றின் எழுத்துவகைகள் குறித்தும், திராவிட மொழிக் குடும்பத்தின் நோக்கில்    ஆராய்ச்சி மேற்கொள்பவர். எனவே முதல் விருது தக்கவருக்குக் கிடைத்ததில் அனைவரும் மகிழ்ந்தனர்.
அதன் பின்னர் ஆண்டுதோறும் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் வந்துபோய்க் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் விருது தரும் வழி கண்ணுக்கு எட்டிய  தொலைவு காணப்படவில்லை.
2010 இற்கு விண்ணப்பங்கள் வரப்பெற்று அவை இயக்குநர்(பொறுப்பு) மேசையில் பசைபோட்டு ஒட்டப்பட்டன. எந்த நடவடிக்கையும் இல்லை. தொடர் ஆண்டுகளுக்கும் அறிவிப்பு இல்லை. அதிமுக ஆட்சி இருந்ததாலும் அதன் தலைவர் முதல்வர் செயலலிதா எதிர் உணர்வு கொண்டிருந்ததாலும் விருது அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆனால், அவர் மறைந்ததும் 2011, 2012, 2013, 2014, 2015, 2016 என 6 ஆண்டுகளுக்கும் கலைஞர் கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதிற்கான விண்ணப்பங்கள் கோரப்பெற்றன. இதற்கான நடவடிக்கையை அப்போதைய பதிவாளர் முனைவர் முகிலை இராச பாண்டியன் எடுத்திருந்தார்.
6 ஆண்டு விருதுகளுக்குமாக ஏறத்தாழ 150 விண்ணப்பங்கள் வந்திருந்தும் தெரிவுக் குழு அமைக்கவே நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்பான பதிவாளரின் குறிப்புகள் இயக்குநர் அறையில் உறங்கிக் கொண்டுள்ளன. அதிகாரமற்ற துணைத்தலைவர் ஒன்றும் செய்ய இயலா நிலைதான் உள்ளது. இது குறித்துக்கேட்டால் தங்களுக்குக் கிடைக்க இருக்கும் விருது கிடைக்காமல் போய்விடுமோ என்று தமிழறிஞர்களும் அமைதி காக்கின்றனர்.
பொதுவாகத் தமிழ்ப்பேராசிரியர்களே பதிவாளர்களாக அமைந்தமையால் அவர்கள் செம்மொழி நிறுவனப் பணிகளில் ஆர்வம் காட்டினர். ஆனால் இயக்குநர் பொறுப்பாக இருப்பவர்கள் மத்திய அரசின் அதிகாரிகள். அவர்களும் கூடுதல் பொறுப்பில்தான் செயல்படுவர். சான்றாக இப்போது இயக்குநர் பொறுப்பாக இருக்கும் அ.பழனிவேல், திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசியத் தொழில்நுட்பக்கழகத்தின் (NIT) பதிவாளர். மத்திய அரசின் தொழில்நுட்ப அதிகாரிகளிடம் எங்ஙனம் தமிழார்வத்தை எதிர்பார்க்க முடியும்?
மத்திய அரசைப் பொறுத்தவரை இந்நிறுவனம் செயல்படுவதில் நாட்டமில்லை. எனவேதான், பத்தாண்டுகளாக இயக்குநர் பதவியை நிரப்பாமல் உள்ளது. பதிவாளர் பதவியும் அவ்வப்பொழுது இப்பொழுது உள்ளதுபோல் காலியாகத்தான் இருக்கும். பொறுப்பாளர்கள் இருக்கும் பொழுதே செயல்பாடு சிறப்பாக இருக்க முடியும் என்று சொல்ல முடியாது.
உயர்நிலை அதிகாரிகளே இல்லாத நிலையில் எங்ஙனம் செம்மொழி நிறுவனம் இயங்கும்?
இதனைப் புறக்கணிப்பதன் ஒரு பகுதியாகத்தான் இதனைத் திருவாரூரிலுள்ள மத்தியப்பல்கலைக் கழகத்துடன் இணைக்க முயன்றது. இருப்பினும் நமது எதிர்ப்பால் அதனைக் கைவிட்டது. ஆனால், மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைத்துச் செயல்பாட்டை நிறுத்த முயன்ற மத்திய அரசு, “தனியாக எப்படிச் செயல்படுகிறீர்கள், பார்ப்போம்” எனப் பாராமுகமாக இருப்பதாக நிறுவனப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருணாநிதி எதிர் அரசியலைக் கைவிட்டுக் காட்சிக்கு எளியராக இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். செம்மொழி நிறுவனத்தின் தனித்தன்மையைக் காப்பதற்காக ஆட்சிக்கு வந்த புதிதில் முதன் முறையாகச் செம்மொழி நிறுவன ஆட்சிக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். தலைவர் என்ற முறையில் அவர் நடவடிக்கை எடுத்து ஏற்கெனவே அறிவித்த 7 ஆண்டுகளுக்கும் 2017 ஆம் ஆண்டிற்கும் சேர்த்து விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற காலத்தாழ்ச்சி இல்லாமல் இருக்கவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை’யைப் பதிவு பெற்ற தனி அமைப்பாக மாற்ற வேண்டும். நன்கொடையாளரான கலைஞர் கருணாநிதி குடும்பத்தினர், தமிழறிஞர்கள், செம்மொழி நிறுவன உயரதிகாரிகள் கொண்ட குழு இதன் பொறுப்பாக இருக்க வேண்டும். ஆண்டுதோறும் காலத்தாழ்ச்சியின்றித் தெரிவுக் குழுவை அமைத்தும் விருதாளர்களைத் தேர்ந்தெடுத்தும் செம்மொழி நிறுவனம்சார்பில் சூன் 3 ஆம் நாளில் விருது வழங்க வேண்டும். இத்தகைய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாய் கையில் கிடைத்த தேங்காயாக   அறக்கட்டளை வைப்புத் தொகை பயனற்றுப் போகும்.
பொறுப்பில் உள்ளவர்களின் குடும்பத்தவருக்கோ வேண்டியவருக்கோ விருது வழங்குவதாக இருந்தால் இப்படிப் பாரா முகமாக இருப்பார்களா? நாடாளுமன்றங்கள் ஒத்திவைக்கப்படுதல் தேசியத் துக்கம் கடைப்பிடித்தல் ஆகியவற்றைவிட, உண்மையான அஞ்சலி என்பது அவர் கனவை நனவாக்கும் வகையில் செம்மொழித் தமிழ் விருதுகளை வழங்குவதுதானே! உரிய நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசும் செம்மொழி நிறுவனமும்
இலக்குவனார் திருவள்ளுவன்
நக்கீரன், தொகுப்பு 31, இதழ் எண் 57,
நாள் அக்.27-30 பக்கங்கள் 24-26


Friday, October 26, 2018

ச.ம.உ. பதினெண்மர் வழக்கு: மாற்றத்திற்குரியனவே தீர்ப்புகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

..பதினெண்மர் வழக்கு:

மாற்றத்திற்குரியனவே தீர்ப்புகள்!

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.(திருவள்ளுவர், திருக்குறள் 578)
 தீர்ப்பு என்பது வழக்கின் தன்மையைமட்டும் கருதி வழங்கப்படுவதில்லை. நேர்வுகளுக்கேற்ப, வழக்காளிகளின் செல்வாக்கு, வழக்கின் பரபரப்புத் தன்மை, நீதிபதியின் பார்வை, வழக்குரைஞர்களின் வாதத்திறமை, வழக்கு நீட்டித்து ஆனால் சட்டென்று உடனே தீர்ப்பு சொல்ல வேண்டிய காலச்சூழல், அரசியல் மேலாதிக்கம் முதலியவற்றின் அடிப்படையிலேயே பல தீர்ப்புகள் அமைகின்றன. பணிச்சுமைகளில், வழக்குரைஞர் அல்லது வேறு யாராலோ தெரிவித்துத் தட்டச்சிடப்படுவதே தீர்ப்பாக வந்துள்ளதாகவும் சில சமயங்களில் கூறியுள்ளனர். சில நல்ல தீர்ப்புகளுக்கு மோசமான எதிர்க் கருத்துகள் வந்துள்ளன. சில மோசமான தீர்ப்புகள் நேர்மையானவையாகக் காட்டப்பட்டும் உள்ளன. எவ்வாறிருப்பினும் கீழமைவு நீதி மன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை தீர்ப்புகள் மாற்றப்பட்டுள்ளன என்பதே தீர்ப்பின் நிலையற்ற தன்மையை விளக்கும்.
  தீர்ப்பு எப்படி இருந்தாலும் அது குறித்த கருத்தைச் சொல்ல யாருக்கும் உரிமையுண்டு. இதனை நீதிமன்ற அவமதிப்பாகக் கூற இயலாது. நீதிமன்றத்தீர்ப்பைச் செயல்படுத்தும் நிலையில் உள்ளவர், மேல்முறையீடு செய்துள்ளமை போன்ற காரணம் இன்றிச் செயல்படுத்தாதிருந்தால் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதலாம்.
 நீதிபதி, தான் உய்த்துணர்ந்ததன் அடிப்படையில் தீர்ப்பு சொல்லி யுள்ளதை, அவர் பயன் அடைந்தோ பயன் எதிர்நோக்கியோ தீர்ப்பு சொன்னதாகப் பொய்க்குற்றம் சாட்டுவதும் நீதிமன்ற நடவடிக்கைக்குரியதே!
 எனவே, நாடே எதிர்நோக்கிய – உலகின் பல பகுதிகளில் எதிர்பார்த்திருந்த – தீர்ப்பு வெளியானபின்னர் அது குறித்து மக்களிடம் கருத்தைத் தெரிவிக்கும் உரிமை ஊடகத்திற்கு உண்டு என்ற அளவில் நாமும் சிலவற்றைத் தெரிவிக்க விருமபுகிறோம்.
 தகுதிநீக்க வழக்கினை விரைவாக முடிப்பதாகக் கூறி 12 நாள் கேட்பில் ஆகத்து 31 இல் இறுதிக் கேட்பு நிகழ்ந்தது. ஆனால், கிட்டத்தட்ட அட்டோபர் இறுதியில் அஃதாவது அட்டோபர் 25(2018) ஆகிய நேற்றுதான் தீர்ப்பு சொல்லப்பட்டது.
 18 சட்ட மன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்த வழக்கில் மூன்றாம் நீதிபதியின் தீர்ப்பு காலந்தாழத் தாழ இவர்களுக்கு எதிராகத்தான் தீர்ப்பு வரும் எனப் பலரும் கருதினர். அதற்கேற்பவே தீர்ப்பும் வந்துள்ளது.
பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் சட்டமன்றத்தலைவரின் தீர்ப்பு தவறெனக் குறிப்பிட்டு இரண்டாம் நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பை ஏற்று இதனை அறிவிப்பதாகச் சொல்லியிருப்பார் என்றுதான் அறத்தை எதிர்பார்த்தவர்கள் நம்பினர். இருப்பினும் அரசியல் சூழல் மாறாகவே தீர்ப்பைத் தரும் என்ற அச்சமே பலருக்கும் இருந்தது.
  இத்தீர்ப்பு படிக்கும்பொழுது ஆராய்ந்து சொல்லப்பட்டதுபோல்  எழுதப்பட்டிருந்தாலும் நாம் மேலோட்டமாகப் பார்க்கும் பொழுதே  நீதிக்குமாறான பல இடறல்களைக் காண முடிகிறது.
  முதல் இடறல் பன்னீர் அணிக்கு ஒருமாதிரி நடவடிக்கையும் தினகரன் அணிக்கு வேறுமாதிரி நடவடிக்கையும் எடுத்ததாகக் குற்றம்சாட்டியதற்குத் தீர்ப்பு சொல்லும தவறான விளக்கம்.
 கடந்த 2017ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 18ஆம் நாள் தமிழகச் சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திக்கு எதிராக அதிமுக ச.ம.உறுப்பினர்களில் பன்னீர் அணியினர் 11 பேர் வாக்களித்தனர். இது குறித்து பேரவைத்தலைவருக்கு முறையிட்டும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பின்தான் திமுக கொறடா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். தீர்ப்பு வந்ததன் பின்னர் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடும் செய்துள்ளார்.
 அரசை எதிர்த்து நம்பிக்கையில்லை என வாக்களித்த பன்னீர்செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தீர்ப்பு கூறுகிறது. எனவே அவர்களுக்குச் சாதகமாகவும் ஒருதலைச்சார்பாகவும் பேரவைத்தலைவர் செயல்பட்டார் என்பதை ஏற்க முடியாது  என்றும் தகுதி நீக்க விதிகளையும் இயற்கை நீதியையும் முழுமையாகப் பின்பற்றியே உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்றும் தீர்ப்பு கூறுகிறது.
உண்மைப் பூச்சுணைக்காயைச் சோற்றில் மறைப்பது போன்றதாக இத்தொடர்கள் அமைந்துள்ளன.
 மக்கள் எழுப்பும் வினா, அரசிற்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வாக்களித்த பொழுதும் அதை எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டிய பின்பும் எந்நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், வேறு கட்சியினருடன் சேராமல் நாட்டுத்தலைவர் என்ற முறையில் ஆளுநரிடம் முதல்வரை மாற்றுமாறு கோரியதற்குச் சட்ட மன்ற உறுப்பினர் பறிப்பு என்றால் ஒருவர் கண்ணில் வெண்ணெயும் மற்றொருவர் கண்ணில் சுண்ணாம்பும் தடவுவதுதானே.  இதைத் தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டிய தீர்ப்பு இதற்குப் பின்னர் நேர்ந்தமுறையீட்டைக் காரணம் காட்டி வழக்கு நிலுவையால் நடவடிக்கை இல்லைஎன்று சப்பை கட்டுவது ஏன்?
  அரசியல் கடமையை ஆற்றி நடுவுநிலைமையுடன் நடந்து கொள்ள வேண்டியபொறுப்பில் உள்ள ஒருவர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் உண்மைக்குமாறாகவும் இரு வேறு நிலைப்பாட்டைப் பின்பற்றுவது இயற்கைமுறைமையை மீறியதாக இல்லாமல் வேறு என்னவாம்?
 அடுத்த இடறல்.
முதல்வருக்கு எதிராக 18 ச.ம.உ.களும் ஆளுநரிடம் முறைப்பாடு அளித்தபோது, இதில் தன்னால் தலையிட முடியாது என ஆளுநர் கூறியுள்ள தகவலைத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட  ச.ம.உ.கள்  தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்ற உசாவலின் பொழுது தெரிவிக்கவில்லை எனத் தீர்ப்பில் குறிக்கப்பட்டுள்ளது.
இதுவும் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கப்படவில்லை. இவ்வாறு தகவல் தெரிவிக்காமையால் தீர்ப்பு உண்மைக்கு எதிராக வழங்கப்பட்டதாக – அஃதாவது இதைக் கவனிக்காமையால் மாறான தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்று – சுட்டிக்காட்டுவதாக இருந்தால் இவ்வாறு கூறலாம். இதனால் எந்த வகையில் முந்தைய தீர்ப்பு மாறியுள்ளது எனக் கருதுகிறார் என்பது புரியவில்லையே! இத்தகவல் பேரவைத்தலைவர் அல்லது முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறு தெரிவிக்கப்படவில்லை யெனில் இதைக் குற்றமாகச் சொல்லி  இதன் அடிப்படையில் தகுதி  நீக்கம் செய்தது சரி என்று சொல்வது எப்படி  முறையாகும்? நியாயமாகும்?  நீதியாகும்? நயன்மையற்ற வாதமாகப் படுகிறது.
 முதன்மையானதும் தலைமையானதுமான இடறல் வழக்கினைக் குறித்தநீதிபதியின்கண்ணோட்டம்.
  தீர்ப்பை வாசிக்கும் முன், ‘மாறுபட்ட உத்தரவுகளின் அடிப்படையில் பார்க்காமல், இந்த வழக்கை தனியாகக் கருதிப்பார்த்து, உத்தரவு பிறப்பிக்கிறேன்’ என, நீதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் இவ்வழக்கு கேட்பு தொடங்கியபொழுது இரு தரப்பாரும் முதலில் இருந்து தெரிவிக்கத் தேவையில்லை; தீர்ப்புரைகளின் மாறுபட்ட தன்மையில் சொன்னால்  போதும் என்று தடைவிதித்துள்ளார்.  வழக்குதொடர்பனாவர்களுக்கு ஒரு நீதி! தீர்ப்பாளருக்கு வேறு ஒரு நீதியா தனியாகக் கருதிப் பார்ப்பதாக இருந்தால் வழக்கின் முந்தைய உசாவல்களைப் புறந்தள்ளி, இரு தரப்பாரிடமும் தொடக்கத்திலிருந்து அல்லவா விவரங்களையும் வாதங்களையும் கேட்டிருக்க வேண்டும்.  எனவே, அடிப்படை அறமேமீறப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த தீர்ப்புரையுமே தவறாகப்படுகிறது.
 தலைமை நீதிபதி தீர்ப்பு தொடர்பான மறு உசாவல், அவரது கருத்திற்கு எதிராகச் சொலலக்கூடாது என்ற எண்ணத்தை அவரது சார்நிலையில் உள்ள நீதிபதிக்குத் தோற்றுவிக்கலாம். எனவே, இதுபோன்ற நேர்வுகளில் பிற மாநிலத்தலைமைநீதிபதியின் கருத்திற்கு விடலாமா என்பது குறித்து ஆராய வேண்டும்.
 தினகரன் அணியினர் தேர்தலையும் எதிர்நோக்கி, மேல் முறையீட்டிற்கும் செல்ல வேண்டும்மேல் முறையீடு அவர்களுக்காக அல்ல! தவறான தீர்ப்பு இனி முன் எடுத்துக்காட்டாக அமையக்கூடாது என்பதற்கும் வாளனளாவிய அதிகாரம் என்பது அரசியல் யாப்பின்படித்தானே தவிர பதவியில் உள்ளவர் எண்ணத்திற்கு ஏற்ப அல்ல என நிலை நாட்டப்படுவதற்காகவும்!
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.            (திருவள்ளுவர், திருக்குறள் 118)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Friday, October 19, 2018

நக்கீரன் இதழினர் மீதான வழக்கு, ஊடகத்தை அடக்கும் உச்சக்கட்டம் – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

நக்கீரன் இதழினர் மீதான வழக்கு,

ஊடகத்தை அடக்கும் உச்சக்கட்டம்

  ஆளுநர் மாளிகை தேன்கூட்டில் மீது கை வைத்தபின்பும் தன்னை மாற்றிக் கொள்ள வில்லை.
  ஊடகத்தில் நடவடிக்கை எடுப்பதற்குரிய செய்தி வந்தது எனில் எழுதிய செய்தியாளர், செய்தி ஆசிரியர், வெளியீட்டாளர், செய்தி வெளியீட்டில் தொடர்புடைய பிறர் ஆகியோர் மீது வழக்கு தொடுப்பது வழக்கம்.  ஆனால், அடிநிலை ஊழியர்கள் வரை வழக்கு தொடுப்பது முதன்முறைக் கொடுஞ்செயலாகும்.
  இதழ்களில் பல் வேறு பிரிவுகள் இருப்பதை அறிவோம். அந்தந்தப் பிரிவினருக்கு அந்தந்தப்பிரிவில் உள்ள வேலைகளை உரிய நேரத்தில் முடிப்பதற்கே  நேரம் சரியாக இருக்கும். எனவே, ஒரு பிரிவில் வெளிவரும் செய்தி தொடர்பில்லா மறு பிரிவினருக்கு இதழ் வெளிவந்தாலன்றித் தெரியாது. அவ்வாறிருக்க தாம் விரும்பாச் செய்தி வந்தது என்பதற்காக ஒட்டுமொத்தமாக இதழில் பணியாற்றும் அனைவர் மீதும் வழக்கு தொடுப்பது  அறிவுடைமையும் அல்ல, அறமுறையும் அல்ல.
  நக்கீரன் கோபாலைக் கைது செய்த பொழுது இன்று நீநாளை நான் என்பதை உணர்ந்த ஊடகத்தினர் அனைவரும் கிளர்ந்து எழுந்துள்ளனர். ஊடகத்தினர் அனைவருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம். இருப்பினும் அகங்காரம் கண்ணை மறைப்பதால், நக்கீரன் கோபால் மீதான வழக்கைக் கைவிட வேண்டியவர்கள், நக்கீரன் இதழ்ப்பணியாளர்கள்  அனைவர் மீதும் வழக்கு தொடுத்துள்ளனர். நக்கீரன்   கோபால் மீதான குற்றப்பிரிவே தவறு என நீதிபதி கோபிநாத்து தெரிவித்து அவரை அக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்த பின்பும் அவ்விதழில் பணியாளர்கள் முப்பத்தைவர்(1+34) மீதும் வழக்கு தொடுக்கும் கொடுமையை அரங்கேற்றியுள்ளனர். பணியாளர்களின் முன்பிணை வழக்கை உசாவிய உயர்மன்றநீதிபதி தண்டபாணியும் பொருந்தாக் குற்றச்சாட்டை ச் சட்டப்பிரிவு குறித்து வினவியுள்ளார்.
  ஊடகத்தினர் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் செய்திகளை வெளியிடுகின்றனர். ஊடகங்களில் வரும் எல்லாச் செய்திகளும் உண்மையாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாதுதான்.  தவறான செய்திகளும் வரலாம். வெளியிட்ட செய்தி தவறென தெரிவிக்கப்படும் பொழுது உண்மையை உணர்ந்து வருத்தம் தெரிவிக்கவும் தயங்குவதில்லை.
  நிருமலாதேவி தொடர்பான மேல்நிலையுடன் தொடர்புடைய செய்தி தவறெனில் அதை விளக்கியிருக்கலாம். காலங்கடந்து தன்னிலை விளக்கம் அளிப்பவர்கள் அப்பொழுதே விளக்கம் அளித்திருக்கலாம். அதனை நக்கீரனும் வெளியிட்டிருக்கும்.
  அலுவல் சார்ந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டால், அலுவலகத்தினர் விளக்கம் அளிக்கலாம். ஆனால், தனிப்பட்ட ஒழுக்கம் சார்ந்தது எனில் தொடர்புடையவர்தானே விளக்கம் தர இயலும். அவ்வாறிருக்க சார்நிலை அதிகாரி காவல் துறையில் முறைப்பாடு  தெரிவிப்பது சரியாகுமா? நக்கீரன் கோபால் கைதின் பொழுதே குற்றச்சாட்டு முறையானதாக இல்லை எனத் தெரிவித்திருந்தோம். அதனையேதான் நடுவர் மன்றமும் தெரிவித்துள்ளது. பொதுவான முறைப்பாடாக இல்லாமல் குற்றப்பிரிவினரைக் குறிப்பிட்டு வழக்கு தொடுக்கத் தெரிவிப்பது தானே எல்லாம் என்னும் தற்செருக்கு மனப்பான்மையின் அடையாளமாக இராதா?  திருடன் வந்து 6 மாதம் கழித்து நாய் குலைத்ததாம்என்பார்கள். இப்பழமொழி  போல் தவறான செய்தி எனில் உடனே ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை என மக்கள் எண்ணுகின்றனர்.
  செய்தி தவறெனில் அவ்வாறு சொன்ன நிருமலாதேவி மீதல்லவா நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவரது பேச்சு எல்லா ஊடகங்களிலும் இடம் பெற்றுள்ளனவே. அதன் பின்னணிப் புலனாய்வுச் செய்திதான் நக்கீரனில் வெளிவந்தது.
  செய்திக் கட்டுரைகள் வந்தமைக்கும்  கணக்குப்பிரிவு, அலுவலகப்பிரிவு முதலானவற்றிற்கும் என்ன தொடர்பு? இதழ்களைக் கட்டிட்டு அனுப்புவதற்கும் செய்திக்கட்டுரைக்கும் என்ன தொடர்பு?  அவர்கள்மீது எல்லாம் ஏன் வழக்கு? குற்றப்பிரிவைத்தான் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. யார் மீது வழக்கு தொடுக்கலாம் என்னும் பகுத்தறிவுகூட இல்லை என்பதுதான் வேதனையாகத்தான் உள்ளது.
  இப்படி ஒரு வன்மம் உயர்நிலையில் இருப்பவர்களிடம் இருக்கலாமா? உயர்நிலை என்பது பதவியாலோ, பணத்தாலோ, செல்வாக்காலோ அளவிடக் கூடாது. பண்பினால் உயர்ந்து இருத்தலே உயர்நிலை. குற்றவாளியிடம் அவன் செய்த குற்றத்தைச் சொன்னால் பழிவாங்கும் எண்ணம்தான் வரும். பண்பாளரிடம் செய்யாக் குற்றப்பழியைச் சுமத்தினாலும் பழிவாங்கும் எண்ணம் தோன்றாது.
 ஆனால், தனி மனிதனின் செயல்பாட்டைக் கூறினால், தேசியப்பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைந்ததுபோல் அடிநிலை வரை பொருந்தாக் குற்றத்தில் குற்றம் சுமத்திச் சிறையில் தள்ளுவதற்கு முயல்வது சரிதானா?  ‘பெரிய மனிதனின் சின்ன புத்தி’ என்பது குறித்துப் பலரும் வெவ்வேறு காலக்கட்டங்களில் எழுதி உள்ளனர். ஆனால் அதற்கு இன்றைக்கு இலக்கணமாக வாழச் சிலர் எண்ணுகின்றனர் போலும்.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.(திருவள்ளுவர், திருக்குறள் 267)
என நக்கீரன் குழுவினர் வரும் சோதனைகளைச் சாதனைகளாக்கிப் பணியாற்றுகின்றனர். அவர்கள் மீது வழக்கு தொடுப்பது அவர்களை வீழ்த்தாமல் உயர்த்தத்தான் உதவும். இருப்பினும் ஒட்டுமொத்தமாக அனைவரையும் பொருந்தாச் சட்டத்தின்கீழ்ச் சிறையில் தள்ள எண்ணுவது நடப்பது மக்களாட்சி அல்ல என்பதை அல்லவா உணர்த்துகிறது.
 உயர்நிலையாளர்கள் தங்கள் மீதுள்ள களங்கத்தைத் துடைப்பதாக எண்ணி மேலும களங்கத்தில் மூழ்குகின்றனர். இது தேவைதானா?
 உயர்நிலையர் தங்கள் மீது பொய்யாகக் குற்றம் சுமத்தப்படுவதாகக் கருதினால், அவதூறு வழக்கு போன்ற பிறவற்றின் மூலம் பரிகாரம் காணலாம். மாறாகத் தாம்தான் நாடு, தமக்கு எதிரானது நாட்டிற்கு எதிரானது என்பதுபோல் தேசப்பாதுகாப்பிற்குக் குந்தகம் வந்ததுபோல் நடவடிக்கை எடுப்பது சரியல்ல.
  எனவே, போலி மதிப்பு கொள்ளாமல், நக்கீரன் இதழினர் அனைவர்  மீதான வழக்குகளையும் உடனே திரும்பப் பெற வேண்டும். மத்திய பாசக ஆட்சி தன்மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ள, மக்களாட்சி வழியில் திரும்ப, ஆளுநரைக் கைப்பாவையாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுப்பதை நிறுத்த  வேண்டும். நாடெங்கும் ஊடகத்தினரும் மனிதநேய ஆர்வலர்களும் சிறை செய்யப்படும் போக்கு தமிழ்நாட்டிலும் வேரூன்ற விடாமல் தமிழகக் கட்சிகள் தடுக்க வேண்டும். தொடக்கத்தில் நக்கீரன் முதலானவரைக் கைது செய்ய மறுத்த மனச்சான்றுள்ள முதல்வருக்குப் பாராட்டுகள். ஆட்சியை ஆட்டி வைப்போரின் மக்களாட்சிப் படுகொலைச் செயல்களை எதிர்த்து நின்றால் மக்களும் அவர் பக்கம் இருப்பர்.
 ஆசிரியர் முதலான நக்கீரன் இதழினர்  மீதான பொய் வழக்குகளை உடனேதிரும்பப் பெற்று ஊடக நலத்தைக் காத்திடவும் மக்களாட்சி மாண்பினைப்பேணிடவும் மீண்டும் வேண்டுகிறோம்.
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து(திருவள்ளுவர், திருக்குறள் 551)
அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை

Sunday, October 14, 2018

இந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

இந்திய அரசியலில் தாலின் கவனம் செலுத்த வேண்டும்

 இடைத் தேர்தல்கள் நடந்ததெனில் இன்றைய சூழலில் திமுகவிற்கு அவற்றில்வெற்றி பெற வாய்ப்பில்லை. எனவே பொதுத் தேர்த்ல்களில் திமுக கவனத்தைச் செலுத்த வேண்டும். அதற்கு இந்திய அரசியலில் தாலின்  முனைப்புடன் ஈடுபட வேண்டும்.
  கலைஞர் கருணாநிதிக்கு இரு முறை நாட்டின் தலைமையமைச்சராகும் வாய்ப்பு வந்தது. ஆனால் தமிழக அரசியலை விட மனம் இல்லாமல், “ என் உயரம் எனக்குத் தெரியும்” என அவ்வாய்ப்புகளை அவர் புறக்கணித்தார்.
அவ்வாறில்லாமல் மத்திய ஆட்சியில் முதன்மைப் பங்கேற்று மத்திய ஆட்சியின் மைய அச்சாக மாறும் வகையில் தாலின் செயல்பாடு இருக்க வேண்டும்.
நாடெங்கும் மாநிலக்கட்சிகளின் வளர்ச்சி முதன்மை நிலைக்கு வருவதால் மாநிலக்கட்சிகளின் கூட்டாட்சிதான் அமையும். அவ்வாறெனில் இதில் தி.மு.க.வின் பங்கு முதன்மையாய் இருக்க வேண்டும். அதற்கு இதில் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டியது தாலின் கடமையாகும்.
மாநிலத் தன்னுரிமைகளுக்கும் அயல்நாட்டுக்கொள்கையில் மாநில உரிமைகள் பாதுகாக்கப்படவும் மத்திய ஆட்சி மொழியாகத் தமிழ் இடம் பெறவும் இந்திய அரசியலில் பங்கெடுப்பதன் மூலம் செயலாற்ற இயலும்.
மத்திய அரசில் இடம் பெறுவது பதவிகளுக்காக என்று எண்ணாமல்நம்உரிமைகளை மீட்டெடுக்கதமிழர் நலன் காக்கதமிழ் உலக அரங்குகளில்முதன்மை பெற எனப் பலவற்றைச் செயல்படுத்த இப்பொழுதே திட்டமிட்டுவைத்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசில் பங்கெடுக்கும் பொழுது இவற்றை நிறைவேற்ற வேண்டும்.
இவற்றால், தமிழ்நாட்டில் மக்கள் நலன்களுக்கு எதிரான திட்டங்கள் செயல்படுத்துவதைத் தடுக்கவும் தமிழக மீனவர்கள் நலன் காக்கவும் எழுவர் விடுதலையுடன் இராசீவைக் கொன்ற உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவும் தமிழ் ஈழம் தனியுரிமை பெறவும் செயலாற்றி வெற்றி காண இயலும்.
  தி.மு.க. இதற்கு முன்னர் மத்திய ஆட்சியில் பங்கேற்றிருந்தாலும் அப்பங்களிப்பு தனிப்பட்ட குடும்பங்களின் நலன்களுக்காகவும் அவை சார்ந்த பேரங்களுக்காகவும்தான் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. இந்த வழியிலேயே மீண்டும் சென்று அழிவு தேடிக்கொள்ளக் கூடாது. எனவே, தேர்தல் கூட்டணி அமைக்கும் பொழுதே மொழிவழித் தேசிய இனங்களின் கூட்டாட்சியாகச்செயல்படுவது குறித்த திட்டத்தை முன்னிலைப்படுத்த வேண்டும்.
 கலைஞர் கருணாநிதியின் படைப்புத்திறமையும் பேச்சாற்றலும் போராட்டஉணர்வும் அவருக்குப் புகழுருவை உருவாக்கித் தந்தது. எனவே, பின்னர் அவர் வழிமாறினாலும் தடம் புரண்டாலும் கொத்தடிமைகளான கட்சியினர் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. வலைத்தளங்கள் முதன்மை பெறும் இக்காலத்தில் தாலினுக்கு அவரது அரசியல் செயற்பாடுகள் மட்டுமே துணை நிற்கும். எனவே, தேர்தல் கூட்டணி அமைவின்பொழுதும் பரப்புரைகளின் பொழுதும் தன்னாட்சிமாநிலங்களின் கூட்டாட்சி குறித்து வலியுறுத்த வேண்டும். வாக்குகளுக்கான பரப்புரையாக இல்லாமல் உண்மையிலேயே ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.
  மத்தியஆட்சியில் வலிமையான பங்களிப்பு இருப்பின்  மாநிலத்திலும் சிறப்பான பங்களிப்பு தானே தேடி வரும்.
  தமிழ்நாடடில் ஒரு சார் தமிழ்த்தேசியவாதிகள் திராவிடத்தைப் பழிப்பதாகக் கூறி ஆரியத்திற்குப் பாய் விரித்து வருகின்றனர். உண்மையான தமிழ்த்தேசிய வாதியாகத் தாலின் செயல்படுவதே அவர் கட்சிக்கும் நாட்டிற்கும் நல்லது.
தமிழ்வளர்ச்சியில் தி.மு..வின் பங்களிப்பை மறக்க முடியாதுஅதே நேரம்தமிழின் தளர்ச்சிக்குத் தி.மு..வும் காரணம் என்பதையும் மறுக்க முடியாது. “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” என்பதை வாயளவில் முழங்கிக் கொண்டிராமல் உண்மையான ஈடுபாட்டுடன் செயற்படுத்த வேண்டும்முந்தைய குறைகளை மறைத்துச் சப்பைக் கட்டுக் கட்டிக்கொண்டிருக்கக் கூடாது. கடந்த காலச் செயல்பாடுகளைப் போலியாகப் பாராட்டுவது வீழ்ச்சிக்குத்தான் வழி வகுக்கும். கடந்த காலக் குறைநிறைகளை வெளியில் சொல்லி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க வேண்டா. ஆனால் அவற்றை உள்ளத்தில் அசை போட்டு இனிஉண்மையான தமிழ்நல அரசாகச் செயல்பட வேண்டிய வினைத் திட்டங்களைவகுத்துக் கொள்ள வேண்டும். உண்மைத் தமிழறிஞர்களை மதிக்க வேண்டும். மனிதநல ஆர்வலர்களுக்கு முதன்மை அளித்தல் வேண்டும். பகுத்தறிவு குறித்துப் போலியாகப் பேசுவதைக் கைவிடவேண்டும். இவற்றை யெல்லாம் தாலின் மட்டுமே செய்ததாகக் கூறவில்லை. ஆனால், தி.மு.க.வின் பாதை  அதுவாகத்தான் உள்ளது. ஆனால் அவற்றை மாற்றும் பொறுப்பு தாலினுக்கு உள்ளதால் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.
  தி.மு.க.வின் கொள்கை இறைமறுப்பல்ல. ஆனால் ஒற்றை இறை ஏற்பு. அதே நேரம் வேள்வி முதலான ஆரியச் சடங்குகளுக்கு எதிரானது. ஆனால், தி.மு.க.வினரே ‘வெற்றிக்கு வேள்வி’ என்பது போன்று ஆரியச் சடங்குகளைப் பெருக்கி வருகிறார்கள். இறை ஏற்பாக இருந்தாலும் பகுத்தறிவுப் பாதைதான் தி.மு.க.வினுடையது. ஆனால், முடைநாற்றம் வீசுகின்ற  மூடநம்பிக்கைக்குட்டையில் ஊறும் கட்சியாகத் தி.மு..உள்ளது. திராவிடர் கழகங்கள் இத்தகையோருக்குத் துதி பாடிக் கொண்டிராமல் தக்க வழி காட்ட வேண்டும்.
தாலின் இவ்வாறு தமிழ், தமிழர் நலன்களுக்கு முதன்மை கொடுத்து மத்திய அரசியலில் முதன்மைப் பங்கு வகித்தால் தமிழ்நாட்டு அரசியல் தானே அவர் பக்கம் திரும்பும்.
தமிழக அரசியலைக் கைப்பற்ற பா.ச.க.துடிக்கிறது. இந்தியஅரசியலிலும் மேலும் கால் பரப்ப விழைகிறது. இந்தியாவை மதவெறி மிக்க நாடாகவும் இந்தி ஆதிக்கம் உள்ள சமற்கிருத நாடாகவும் ஆரியச்சடங்குகளில் திளைக்கும் மண்ணாகவும் மாற்றத் துடிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மு.க.தாலினால் முடியும். எனவே அதற்கேற்பச் சிந்தித்துச் செயலாற்றிச் சம உரிமையுடைய கூட்டாட்சியாக இந்திய ஒன்றியத்தை மாற்றப்பாடுபட வேண்டும்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (திருவள்ளுவர், திருக்குறள் 666)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரைஅகரமுதல

Followers

Blog Archive