Thursday, January 29, 2015

கருவிகள் 1600 : 641-680 : இலக்குவனார் திருவள்ளுவன்


கருவிகள் 1600 : 641-680 : இலக்குவனார் திருவள்ளுவன்

641.குறுக்குமானி – stenometer:   ஈர் இலக்குகளின் குறுக்கே உள்ள தொலைவை அளக்கும் கருவி. தொலைவுமானி வேறு உள்ளதால், இதனைக் குறுக்குமானி எனலாம்.
  1. குறுக்கொலிமானி – psophometer : மின்சுற்றுகளில் குறுக்கிடும் ஒலிகளை அளவிடும் கருவி.
மின் இரைச்சலளவி (.இ.) எனக் குறிப்பதைவிடக், குறுக்கொலிமானி எனலாம்.
  1. குறுகிய அலைப்பட்டை தழல்மானி – narrow-band pyrometer
  2. குறை கடத்தி திரிபளவி – semiconductor strain gauge
  3. குறைஒளி ஒளிமானி – grease spot photometer
  4. துளைநோக்கி – borescope / boroscope : குறைபாடுகள் அல்லது செம்மையின்மையை அறிய   இறுக்கமான இடங்களையும் குறுகிய துளைகளையும் ஆய்வதற்குரிய பார்வைக்கருவி.
647. கூட்டி – adder:   இலக்கங்களின் கூட்டுத் தொகையைப் பதிவு செய்யும் கருவி. எனவே கூட்டல் பொறி என்கின்றனர். அரசுத்துறைகளில் கூட்டி எனச் சுருக்கமாகக் கூறுகின்றனர்.(-இ)
648. கூட்டு நுண்ணோக்கி – compound microscope : ஈர் அளவாடிகள் இணைந்த நுண்ணோக்கி
649. கூம்பு அளவி – cone gauge / taper gauge                  
650. கூம்புநோக்கி – conoscope : படிகத்தள ஒளியியல் ஆய்வி, அச்சுக்கோண அளவி என இருபெயர்களில் அழைக்கின்றனர்.சுருக்கமாகக் கூம்புநோக்கி எனலாம்.
651. கூரிய மின்கடவுமானி- d’ arsonval galvanometer :  தர்சன்வால்(d’Arsonval :1851-1940) என்னும் பிரெஞ்சு இயற்பியலாளர் பெயரில தர்சன்வால் மின்கடவுமானி என்று அழைக்கப் பெறுகிறது.. நுண்ணிய மாழைக் கம்பிகள் அல்லது இழைகள் இடையே காந்தப்பு லத்தை நீக்கிய நகரும் கம்பிகள் உடைய கூரிய மின்கடவுமானி. எனவே, கூரிய மின்கடவுமானி எனலாம்
652. கூறுபாட்டு நுண்ணோக்கி- dissecting microscope
653. கேட்பு நிகழ்வெண்மானி- audio-frequency meter
654. கேட்பு நிறமாலைமானி – audio spectrometer
655. கேட்புமானி   sonometer   / audiometer : செவிகளின் ஒலி உணர்வுகளை அளக்கும் கருவி. சுரமானி, ஒலி நிகழ்வெண் அளவி, ஒலியளவி,ஒலிமானி எனப் பலவகையாகக் குறிக்கின்றனர். சுரமானி என்னும் பொழுது ஒலிச்சுரம் பற்றி இல்லாமல் காய்ச்சல் சுரத்தை அல்லது வெப்பத்தைக்குறிப்பதாகக் கருதுவர். எனவே, இதனைத் தவிர்க்கலாம். ஒலி அலைவெண் அளவி, ஒலியளவி, என்பன சோனோகிராஃப்பு(sonograph) என்பதைக் குறிப்பதாக அமையும். ஒலிமானி என்பது போனோமீட்டர் / phonometer -ஐக்குறிக்கும். செவிப்புல ஒலி உணர்வுமானி(-செ.)   என்பது தொடராக உள்ளது. செவிப்புல ஒலி என்பது கேட்டல்தான்.எனவே,கேட்புமானி என்றே குறிக்கலாம்.
656. கேளாஒலி அளவி – ultrasonoscope
657. கேளாஒலி நுண்ணோக்கி – ultrasonic microscope
658. கை விசைமானி – hand dynamometer
659. கைப்புலச் சுடரொளிநோக்கி –   pocket field luminoscope
660. கொண்ம உயரமானி – capacitance altimeter
661. கொண்ம மின்மானி – capacitive electrometer
662. கொண்மமானி   – capacitance meter
663. கொண்மி மின்னேற்ற உலவைமானி  – condenser-discharge anemometer: சராசரிக் காற்று வேகத்தைச் சுட்டிக்காட்டக்கூடிய மின்சுற்றில் இணைக்கப்பட்ட உலவைமானி. கொண்மி வெளியீடு காற்றுவேக அளவி (-இ.) எனக் கூறுவதைவிடச் சொற்சீர்மைகருதி, கொண்மி மின்னேற்ற உலவைமானி எனலாம்.
 664. கொதிநிலைமானி –   ebulliometer; hypsomete/hypometer என்பது குத்துயரமானியையும் குறிக்கும்; கொதிநிலைமானியையும் குறிக்கும். எனினும் நாம் தமிழில் கொதிநிலை மானி – ebulliometer; குத்துயரமானி- hypsometer எனத் தனித்தனியாகவே பயன்படுத்தலாம்.
665. கொதிநிலைநோக்கி – ebullioscope :  நீர்மங்களின் கொதிநிலையை நோக்கி அளக்க உதவும் கருவி.
666. கொளுக்கியளவி- hook gauge
667. கோடல்மானி- bias meter
668. கோண அளவி- angle gauge
669. கோண ஒளிமானி – goniophotometer
670. கோண முடுக்கமானி  – angular accelerometer
671. கோணத்தண்டு வெப்பமானி  –  angle-stem thermometer
672. கோணப்பதிவி   – recipiangle : கோணங்களை அளவிடுவதற்குரிய பழைய கருவி.
673. கோணப்பெயர்வு சுழல் நோக்கி – displacement gyroscope
674. கோணமானி – (படிகக் கோணமானி – இயற்பியல்; வானலைக்கோணமானி -மின்னியல்)   goniometer  படிக முகங்களுக்கிடையே உள்ள கோணங்களை அளக்கும் கருவி(-மூ.282) உள்வாங்கும் வானொலி அலைகளை அறிய உதவும் கருவியும் கோணமானி என்றே சொல்லப்படுகிறது. வேறுபடுத்த வேண்டுமானால் இயற்பியலில் படிகக் கோணமானி என்றும் மின்னியலில் வானலைக் கோணமானி என்றும் சொல்லலாம்.
675. கோபுரத் தொலைநோக்கி –  tower telescope: சூரியனை நோக்கி ஆராய்வதற்காகக் கோபுரத்தின் உள்ளே தொலைநோக்கிக் குழல் இருக்கும் வகையில் அமைக்கப்படும் அகன்ற ஒளிவிலகல் நீளம் உடைய தொலைநோக்கி.
676. கோலளவி –  rod gauge
677.  கோள எல்லொளிமானி /கதிர்வீச்சுத் தொகுமானி – bellani spherical pyranometer/ radiation integrator
678. கோளக வெம்மிமானி –  bomb calorimeter
679. ங – கதிர் தொலைநோக்கி –  X-ray telescope
680. ங – கதிர் நுண்ணோக்கி – X-ray microscope : ஊடு கதிராகிய ங – கதிர் பயன்படுத்தப்படும் நுண்ணோக்கி.
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png


- இலக்குவனார் திருவள்ளுவன்



மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு) – இலக்குவனார் திருவள்ளுவன்

kannadasan

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு)

(தை 4, 2046 / சனவரி 18, 2045 தொடர்ச்சி)
நிறைவு
மணிமேகலையின் தாக்கத்தால் பொன்னரசி புத்தத்தைத் தழுவியதாகக் கூறிக் காப்பியத்தை முடிக்கிறார். தொடக்கத்தில் தமிழ்வாழ்த்து பாடியவர், மொழியையும் நாட்டையும் மக்கள் பண்பையும் வாழ்த்தி, புத்த முழக்கத்துடன்,
தென்மொழியும் தென்னாடும் தென்னர் பண்பும்
செழித்துலகம் புகழ்பாட வாழி! வாழி!
புத்தம் சரணம் கச்சாமி
தருமம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
(மாங்கனி : 40. புத்தர் வழியில் பொன்னரசி)
என நிறைவு செய்கிறார்.
ஒப்புமை நினைவுகள்
  ‘மாங்கனி’யைப் படிக்கும் பொழுது முந்தைய இலக்கியக் காதல் காட்சிகள் நமக்கு நினைவிற்கு வருகின்றன. ஆட்டனத்தி -ஆதிமந்தி ; ஆட்டனத்தி- மருதி காதல் போல் இங்கே அடலேறு-மாங்கனி; அடலேறு- தென்னரசி காதல். காவிரிஆற்றுப் பெருக்கில் ஆட்டனத்தி மறைவதுபோல் இங்கே ஆற்று வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகப்படுபவன் அடலேறு. பரத்தையர் குடும்பத்தைச் சேர்ந்த மணிமேகலை மீது காதல் கொள்கிறான் இளவரசன். இங்கே பரத்தையர் குடும்பத்தைச் சேர்ந்த மாங்கனிமீது காதல் கொள்கிறான் அமைச்சர் மகன். மணிமேகலை புத்தச் சமயத்தைத் தழுவுவதுபோல், தென்னரசியின் உடன்பிறந்தாள் பொன்னரசி புத்தச் சமயத்தைத் தழுவுகிறாள். இவ்வாறு முந்தைய இலக்கியங்களின் தாக்குறவால் மாங்கனியின் அடிப்படைக் கதைப்போக்கைக் கண்ணதாசன் அமைத்துள்ளார். கண்ணதாசன். ‘ஆட்டனத்தி – ஆதிமந்தி’ எனத் தனியே குறுங்காவியம் எழுதியுள்ளமையால் அவர் உள்ளத்தில் இவர்கள் காதல் நன்கு பதிந்துள்ளது என்பதை மாங்கனியும் உணர்த்துகிறது.
கொள்ளத்தக்கனவும் தள்ளத்தக்கனவும்
  “இருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்க் கவிஞர்களில் கண்ணதாசன் இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் நிலைத்த புகழுடன் விளங்கிக் கொண்டிருக்கிறார். தன்கவிதைகள் மூலமாகப் படிக்காத பாமரர்களிடமும் சென்று சேர்ந்தார்” என்கிறார் முனைவர் சி.சேதுராமன. (http://puthu.thinnai.com/?p=16234 ) . ஆனால், “கண்ணதாசனைச்சிறந்த கவிஞர் என்பது மூடநம்பிக்கைகளுள் ஒன்று” என ஒருவர் கூறுகின்றார்.( http://mathimaran.wordpress.com/2011/05/26/article-400/). இவை தனி யிருவரின் கருத்துகள் அல்ல. வெவ்வேறு வகையான மதிப்பீட்டிற்கு உள்ளாகுபவரே கவிஞர் கண்ணதாசன். கண்ணதாசன் திரைப்பாடல்களைக் கொண்டு மட்டும் அவரை எடை போடக்கூடாது. அவை கதைப் பாத்திரத்தின் தன்மைக்கேற்பபுவும் கதைச் சூழலுக்கு ஏற்பவும் எழுதப்படுபவை. பல நேரங்களில் இயக்குநரும் கதையாசிரியரும்தான் பாடல்கள் உருவாகக் காரணமாகின்றார்கள். இசை யமைப்பாளர் பணிகளுக்கேற்ப விட்டு விட்டு இசை அமைத்து வரிகளைத் தொடுக்கும் பொழுது முதல் அடிக்கும் அடுத்த அடிக்கும் பொருத்தமில்லாப் பாடல்களும் உள்ளன. திரைப்பாடல்களையும் செம்மையாக எழுதலாம். என்றாலும் எழுதுபவரை மட்டும் பொருத்து இவை அமைவன அல்ல. எனவே, பிற படைப்புகளைக் கொண்டு எடை போட வேண்டும்.
குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். (திருக்குறள் 504)
என்னும் தெய்வப்புலவர் தரும் வரையறைக்கேற்ப குறை நிறை காணவேண்டும். இவரின் அரசியல் சூழலுக்கேற்ப இவரது நடையும் பொருண்மையும் வெளிப்பாடும் மாறி மாறி உள்ளன. அவை தனி ஆய்விற்குட்படுபவை. எனினும் திராவிட இயக்கப் படைப்பாளராக இவர் படைத்தவையும் இதழில் வடித்தவையும் பாராட்டிற்குரியனவாகவே அமைந்துள்ளன.
மனங்கவர் கவிஞர்
இவரது படைப்புகளுள் கொள்ளத்தக்கனவும் தள்ளத்தக்கனவும் உள்ளன என்பதை ஒப்புக்கொண்டு ஆராய்ந்தால், இவரது முதல் காப்பியமான ‘மாங்கனி’ இவரைச் சிறந்த உவமைப்புலவராக வெளிப்படுத்துகின்றது என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. உவமைப்புலவர் சுரதாவைப்போல் அதற்கடுத்த நிலையில் சிறப்பாக உவமைகளைக் கையாண்டு, பாவேந்தர் பாரதிதாசன்போல் எளிய நடைகளில் வெளிப்படுத்தி, நல்லதொரு கற்பனைக் காப்பியத்தை நமக்கு அளித்துள்ளார். எளிமை. இனிமை, புலமை மிகுந்த மனங்கவர்ந்த ‘மாங்கனி’ தந்த கண்ணதாசனும் மனங்கவர் கவிஞராவார்.
போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்
என்னும் அவரது வரிகளையே அடிப்படையாகக் கொண்டு தூற்றுதற்குரியனவற்றை விலக்கி வைப்போம்! போற்றுதற்குரியனவற்றைப் போற்றுவோம்!
( நிறைவு)
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/12/maangani_attai01.png

– இலக்குவனார் திருவள்ளுவன்



கலைச்சொல் தெளிவோம் 58 : பயின்-resin; பசைமம்-glue


glue
kalaichol-thelivoam03
58 : பயின்-resin; பசைமம்-glue
பிசின் வகைகள்
  தமிழில் மா, பலா ஆகியவற்றின் பிசின் (Gum of the mango or the palmyra tree) இடவகம் என்றும், ஒருவகை மரப்பிசின், கம்பிப்பிசின் எனவும், இலவம் பிசின் (Gum of the redflowered silk-cotton), சலவகு அல்லது சுரழ் (மலை) (Gum of Bombax malabarica) அல்லது மயிலம் Gum of the silk-cotton tree (பரிபாடல் : அகநானூறு :)எனவும், இலந்தைப்பிசின் (Gum of the jujube tree) சீவகம் எனவும், செந்நிறமாக உள்ள பிசின் செங்கரப்பன் (Red gum, Strophulus intertinctus) அல்லது எயிற்றுப்புண் எனவும், அத்திப்பிசின் தூணியங்கம் (Gum of the cluster fig) அல்லது நற்றுளி (Gum of the fig tree) எனவும், தேவதாருவின் பிசின் (Gum of the deodar) ஆச்சியம் எனவும், கருவேலம்பிசின் (Gum exuding from the black babul tree) காக்காய்ப்பிசின் எனவும், சொல்லப்படுகின்றன. இவை தவிர, உகளி, பயின், வேட்டம், கசை (பசைத்தன்மையுள்ள சாந்து) எனவும் பிசின் வகைகள் சொல்லப் படுகின்றன.
  ‘அம்பர் ‘(amber) என்பதற்கு சூழறிவியலில் அம்பர் என்றும், புவியியலில் (Geology) அம்பர் பிசின் என்றும், மனையியலில் அரக்குப்பிசின் என்றும், பொறி நுட்பவியலில் அரக்குப்பிசின், நிமிளை என இருவகையாகவும், பயிரியலில் பிசின் என்றும் குறிப்பிடுகின்றனர்.
 ‘கம்’(gum)-பிசின், பசை என ஆட்சியியலிலும், பொறிநுட்பவியலிலும் உயிரியலிலும் பசை என்றும், கால்நடைமருத்துவவியலில் தாவரப்பசை, பிசின் என்றும், வேளாணியலில் கோந்து என்றும் குறிக்கப்படுகின்றன.
 அதே நேரம், ‘ரெசின்’(resin)-பிசின் என வேளாணியல், வேதியியல், சூழறிவியல், கானியல், மருத்துவவியல் ஆகியவற்றிலும், மரப்பிசின் என உயிரியல், பொறிநுட்பவியல் ஆகியவற்றிலும், பிசின், குங்கிலியம் என இருவகையாக மனைஅறிவியலிலும் குறிக்கப்பட்டுள்ளன.
   ‘(இ)க்ளு’(glue)-பசை எனப் பொறிநுட்பவியல், மனைஅறிவியல் ஆகியவற்றிலும், எலும்புப்பசை என கால்நடைஅறிவியலிலும், ஒட்டுப்பசை, பிசின், பசை என மூவகையாக ஆட்சியியலிலும் குறிக்கப்பட்டுள்ளன.
 ‘அட்ஃகெசிவ்‘(adhesive)-ஒட்டுவிப்பி என வேதியியல், பொறிநுட்பவியல் ஆகியவற்றிலும், ஒட்டுப்பசை எனக் கால்நடை அறிவியலிலும், ஒட்டுப்பொருள், பசை என மருத்துவயியலிலும், பசை, ஒட்டும், ஒட்டும் தன்மையுள்ள என ஆட்சியியலிலும், ஒட்டிக்கொள்ளக்கூடிய, ஒட்டுப்பொருள் என வோளணியலிலும் குறிக்கப்பட்டுள்ளன. ஒத்த பொருள்கள் உடைய வெவ்வேறு சொற்களாக இருந்தாலும், அவை ஒரே சீராகக் குறிக்கப்பட்டால்தான் பயன்படுத்துவோருக்குக் குழப்பம் இராது.
பசைகொள் மெல்விரல் (அகநானூறு : 34.10)
பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன (அகநானூறு : 244.1)
பசைவிரல் புலத்தி நெடிது பிசைந்து ஊட்டிய (அகநானூறு : 387.6)
சிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்தி (மலைபடுகடாம் : 26)
நலத்தகைப் புலத்தி பசைதோய்த்து எடுத்து (குறுந்தொகை : 330.1)
ஒட்டும் தன்மையுள்ளமையால் அரக்கு பயின் எனச் சொல்லப்படுகிறது.
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய (அகநானூறு : 1.5 ; 356.9)
ஒட்டு என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்ட ஒட்டிய(2), ஒட்டாது(2), ஒட்டியோர்(1) என்னும் சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றின் அடிப்படையில் பின் வரும் சொற்களைக் குறிக்கலாம்.
ஒட்டி-adhesive
பயின்-resin
பசை-Gum
பசைமம்-glue
பயினி-amber




Followers

Blog Archive