Tuesday, January 24, 2017

முடியவில்லை மொழிப்போர்! முடித்து வைக்க வேண்டாவா மொழித்திணிப்புகளை! – இலக்குவனார் திருவள்ளுவன்



அகரமுதல 170, தை 09, 2048 / சனவரி 22, 2017

முடியவில்லை மொழிப்போர்!

முடித்து வைக்க வேண்டாவா மொழித்திணிப்புகளை!

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும் (திருவள்ளுவர், திருக்குறள் 674).
  மொழிப்போர் என்றால் நாம் 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப்போரைத்தான்  குறிப்பிடுகிறோம்.  வரலாறு எழுதுவோர் அதற்கு முன்  1937 இல் கட்டாய இந்தித்திணிப்பிற்கு எதிரான போராட்டத்தைக் குறிப்பிடுவர். ஆனால், சமற்கிருதம் எப்பொழுது  தன்னைத் தேவ மொழியாகக் கற்பித்துக்கொண்டும் தமிழை நீச மொழியாகப் பழித்துக் கொண்டும் தமிழ்நாட்டில் வரத் தொடங்கியதோ,  அப்பொழுதே மொழிப்போர் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சமற்கிருதத்திற்கு முன்னர் பாலி, பிராகிருதம முதலான மொழிகளுடனான தொடர்பு ஏற்பட்டிருப்பினும் அப்போது அந்தச் சூழல் எழவில்லை. ஆனால் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர்த் தொடங்கிய சமற்கிருதத்திற்கு எதிரான மொழிப்போர் இன்றும் முடியவில்லை. மொழிப்போர் என்பது இந்தித்திணிப்பிற்கு எதிரானது மட்டுமல்ல! சமற்கிருத்திற்கும் எதிரானது. தமிழர்களின் அன்றாட வாழ்வில் திணிக்கப்படும் ஆங்கிலம் முதலானவற்றிற்கும் எதிரானது என்பதை நாம் உணரவேண்டும்.
   தமிழகக்கட்சிகள் ஆண்டிற்கொருமுறை வீரவணக்க நாள் கொண்டாடுகின்றனர். எப்பொழுதாவது மத்திய அரசின் இந்தித்திணிப்பு, சமற்கிருதத் திணிப்புபற்றிச் பேசுகின்றனர். மற்ற நேரங்களில் சமற்கிருத்திணிப்பு, இந்தித்திணிப்புபற்றி  நினைத்துப்பார்ப்பதில்லை.
  மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் சமற்கிருதத்திணிப்பும்  இந்தித்திணிப்பும் முனைப்பாகச் செயல்படுத்தப்படும். பா.ச.க ஆட்சியிலிருக்கும் பொழுது மொழித்திணிப்புகள்  வெளிப்படையாக நடைபெறும். ஆனால், மத்தியில் மாறி மாறி  ஆட்சியில் பங்கு பெற்ற தமிழ்நாட்டுக் கட்சிகளுக்கு இவைபற்றிக் கவலையில்லை.  இந்தியை எப்படியெலலாம்  திணிக்கலாம் என வெளிநாடுகளுக்குச் செல்லும் குழுக்களுடன் இணைந்து  மகிழ்ச்சிப் பயணம சென்று வருவர். இந்தி ஒழிக!’ என்று சொல்லத் தெரிந்தவர்களுக்கு எந்த வகையிலெல்லாம் இந்தித் திணிக்கப்படுகிறது என்ற  விவரம்கூடத் தெரியாது.
  ‘தமிழ்’ என்று வாய் பேசினாலும் தமிழக ஆளுங்கட்சிகள் கல்வியில் இருந்து தமிழை அகற்றுவதன் மூலம் அயல்மொழிகளுக்கு வாயிலைத் திறந்து விடுவதையே கடமையாகக்கொண்டு செயல்படுகின்றனர்.  கல்வியிலும் தாய்மொழியாம் தமிழ் தமிழ்நாட்டிலிருந்து விரட்டப்பட்டால் எந்த எதிர்ப்புமின்றிச் சமற்கிருதத்தையும் இந்தியையும் எளிதில் திணிக்கலாம் அல்லவா? அப்புறம் ஆங்கிலத்தினிடத்தில் தமிழை அமர்த்தாமல் இந்தியை அமர்த்தலாம் அல்லவா? எனவே, மத்திய ஆட்சியாள்களின் மொழித்திணிப்பு வேலையை எளிதில் முடிப்பதற்கு உதவுவனவே தமிழக ஆட்சியாளர்களின் பணிகளாகின்றன.
  உச்சநீதிமன்ற  நீதிபதி பொறுப்பேற்க வேண்டும் என்றால் இந்தியில் தான் கையெழுத்து போடவேண்டும். அவரவர் தாய்மொழியில் கையொப்பமிட முடியாது. இந்தியில் கையொப்பம் இடப்பயிற்சி பெறுவதே உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அளிக்கும் முதல் பயிற்சியாகும்.
 வாணாள் காப்புறுதிக்கழகம்(எல்.ஐ.சி.) முதலான மத்திய நிறுவனங்களில் பண எடுப்பு முதலான பதிவுகளில் இந்தியில் அல்லது ஆங்கிலத்தில்தான் கையொப்பமிடவேண்டும். இவை அல்லாத நம் தாய்மொழியில் கையொப்பமிட்டால்இந்தி அல்லது ஆங்கிலத்தில் கையொப்பமிடத் தெரிந்தவரின் சான்றொப்பம் தேவை.   இப்படி மத்திய அரசு தொடர்பானவற்றில் நம் தாய்மொழியாம் தமிழில் கையொப்பமிட உரிமையில்லாதவர்களாகத்தான் நாம் இருக்கிறோம்.
  பதவிப்பெயர்கள் முதலானவை சமற்கிருதமயமாக்கப்பட்ட இந்தியில் உள்ளன. அதுபோல் பல்வேறு துறைகளின் முழக்கங்கள் அல்லது குறிக்கோள் தொடர்கள் சமற்கிருதமே. சான்றுக்குப்படம் 1 ஐயும் 2 ஐயும் காண்க. ஆனால், இதுபற்றிக்கேட்க நமக்கு உரிமையில்லை. படம் 3 ஐப் பாருங்கள். சென்னை உயர்நீதி மன்ற முத்திரையில் வாய்மையே வெல்லும் எனத் தமிழ்நாட்டரசின் முழக்கமில்லை; இந்தி முழக்கம்!
 சென்னைக் காவல்துறையில் ஆங்கில முழக்கம். ஊர்க்காவல்படையில் இந்தி முழக்கம்.
  “உப்பு போட்டுத்தான் தின்கிறாயா?  வெட்கம், மானம் சூடு, சொரணை இருக்கிறதா?” – இவ்வாறு நாம் அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால், நாம் அனைவருமே மான உணர்வற்றுத்தான் இருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தமிழகத் துறைகளில் தமிழ் அல்லா இலக்குத் தொடர்களே சான்றுகளாகும். சென்னை அல்லது  தமிழ்நாடு உயர்நீதி மன்றம் தங்களைத்  தமிழக அரசிலிருந்து வேறுபடுத்தித் தனித்துக் கூறிக்கொள்வதில் பெருமை கொள்ளும். அந்தப் பெருமை என்பது தமிழக நலன்சார்ந்துதான் அமைய வேண்டும். தமிழ் முழக்கத்தைப் புறக்கணிப்பதிலா இருக்க வேண்டும்.
   கல்விமொழி, பாடமொழி, இந்தித்தட்டச்சு தெரிந்தால்தான் மத்தியஅரசிலும் மத்திய நிறுவனங்களிலும் வேலை  என்பதுபோன்று வேலைவாய்ப்பு மொழி என எங்கும் இந்தி எதிலும் இந்தி என்பதே நீக்கமற உள்ள நடைமுறையாகும். இதனைத் தடுக்கத் தமிழகக் கட்சிகள் ஒரு துரும்பையாவது  கிள்ளிப்போட்டிருக்குமா?
  ஊடகங்களில்   இந்திக்காரர்களை அழைத்தல், இந்தி விளம்பரங்கள், பெயர்களை நட்ஃசு, பொன்ஃசு  எனச் சமற்கிருதப் பெயர்போல் எழுதுதல், தொகுப்புரையாக இருந்தாலும் தீர்ப்புரையாக இருந்தாலும், கலந்துரையாக இருந்தாலும் ஒன்றிரண்டு தமிழ்ச்சொற்கள் மட்டும் தெரியாமல் வந்துவிடும். ஊடக மொழி என்பது தமிழை இல்லாமல் ஆக்குவதாகத்தானே உள்ள்து.
  இவ்வாறு தமிழ்நாட்டில் தமிழ் இல்லாத நிலையையும் பிற மொழித்திணிப்புகளையும் அடுக்கிக்கொண்டே  போகலாம்.  ஏறுதழுவலுக்கு ஒன்று கூடிய இளைஞர்கள், மாணவ மாணவியர்,  நாட்டு நலன் கருதியும் தங்கள் எதிர்கால நல்வாழ்வு கருதியும்  தமிழின நிலைப்பு கருதியும் மொழித்திணிப்பிற்கு எதிராகக்  குரல்  கொடுத்து வெற்றி காண வேண்டும். மொழிப்போர்  என்பது தொடர்ந்துகொண்டே போவதில் பொருளில்லை. எனவே, சமற்கிருத, இந்தி,மொழகளின் திணி்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி இட  வைப்போம்!  தமிழைப் பயன்பாட்டுமொழியாகச் சிறக்கச் செய்வோம்!
தமிழ் எங்கள் உயிர் என்பதாலே — வெல்லுந்
தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே
தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் – இன்பத்
தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம்
தமிழுண்டு தமிழ் மக்களுண்டு – இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல
தமிழ் வெல்க வெல்க என்றே  நாளும் பாடு!    
 – பாவேந்தர் பாரதிதாசன்
    

– இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, January 22, 2017

சல்லிக்கட்டிற்கான போராட்டம் தமிழர் நலனுக்கான குறியீடே! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 170, தை 09, 2048 / சனவரி 22, 2017

சல்லிக்கட்டிற்கான போராட்டம்

தமிழர் நலனுக்கான குறியீடே!

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (திருவள்ளுவர், திருக்குறள் 487)
  சல்லிக்கட்டுத்தடையை எதிர்த்து  மார்கழி24/சனவரி 8இல் சென்னையில் தொடங்கிய போராட்டம் பிற இடங்களில் நடந்த கிளர்ச்சிகளுடன்சேர்ந்து இன்று நாடு முழுவதுமான அறப்போராட்டமாக மாறியுள்ளது.
  அலங்காநல்லூர், சென்னை, மதுரை என அனைத்து நகர்களிலும், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி, மாணாக்கர்கள், இளைஞர்கள் பொறுப்புணர்வுடனும் கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும்  நடந்து கொள்வதாக அனைத்துத் தரப்பாரும் பாராட்டி வருகின்றனர். கட்சிக் கொத்தடிமைகளையே பார்த்து வந்த நாட்டில் முதல்முறையாகக் கட்சிக்கு அப்பாற்பட்டு,  அமைதியாகக் கூடியுள்ள கூட்டம்; சாதி, சமய வேறுபாடின்றிப் பொதுநலன் கருதி அடக்கத்துடன் கூடியுள்ள கூட்டம்; தலைவர்களை நம்பியதுபோதும், நம் நலனுக்காக, நம் நாட்டு நலனுக்காக நாமே துணிந்து எழுவோம் என எழுச்சியுடன் கூடியுள்ள கூட்டம்; கட்சிக்காரர்களுக்காகவும் அதிகாரிகளுக்காகவும் பொறுத்ததுபோதும் நாமே பொங்கி எழுவோம் எனப் பொங்கிக் கூடியுள்ள கூட்டம்.
  பொதுவாகத் தமிழ்நாட்டுச் சிக்கல் என்றால் தமிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவர்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால், தமிழ்நாட்டிலுள்ள பிற மொழியாளர் மட்டுமல்ல,  கேரளா முதலான தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல்,  குசராத்து, தில்லி என வடமாநிலங்களிலும் தமிழர்களின் சல்லிக்கட்டிற்கு ஆதரவான போராட்டத்திற்கு ஆதரவு நல்கியுள்ளனர்.  இங்குமட்டுமல்ல, ஈழம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்,  பிரான்சு, அமெரிக்கா, கனடா,  என்று சொல்லிக்கொண்டே போகும்அளவிற்கு உலக நாடுகளில் சல்லிக்கட்டுத் தடையை நீக்க எழுச்சியுடன் போராட்டம்.
  நடிகநடிகையர் பின்னால் இளைஞர் பட்டாளம் என்ற நிலையை மாற்றி,  இளைஞர்கள் பட்டாளத்திடம்  நடிக நடிகையரை வரவழைத்ததிலிருந்தே இக்கூட்டம் மயங்குகிற கூட்டமன்று!  தமிழ்ப்பகையைக் கலங்கடிக்கிற கூட்டம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர்.
  இது வெறும் சல்லிக்கட்டுத்தடையை நீக்குவதற்கான போராட்டம் அல்ல! தமிழ், தமிழர் பகைச்செயல்களில் தொடர்ந்து  ஈடுபட்டு வரும் மத்திய அரசின் அறமுறையற்ற போக்கிற்கு எதிரான போராட்டமும் கூட!  மத்தியில் ஆட்சியில் இணைந்திருந்தாலும் தன் வீட்டு நலனில் கருத்து செலுத்திவிட்டுத் தமிழ்நாட்டு நலனில்  கருத்து செலுத்தாத கட்சியாளர்களுக்கு எச்சரிக்கை தரும்போராட்டமும்கூட!
  ஏறுதழுவல் என்பது தமிழர்களின் சிந்துவெளிநாகரிகக் காலத்திலிருந்தே இருக்கும்  அன்பின் அடிப்படையிலான வீர விளையாட்டு.
  தொடக்கக்காலத்தில் முல்லை நில மக்களின் பண்பாட்டுக் கூறாக இருந்திருக்கலாம். ஆநி்ரை கவர்தல், ஆநிரை மீட்டல் ஆகிய போர்முறைகளால் எல்லா நிலத்தவரும் பின்பற்றும் வீர விளையாட்டாக மாறியுள்ளது.
  காளையை அடக்குதல் என்று சொல்லாமல் ஏறு தழுவுதல் என்று சொல்வதிலிருந்தே காளைகளைத் துன்புறுத்தும்கொடுமைகளுக்கு இடமின்றிஅன்பின் அணைப்பிற்கே இடம் தந்துள்ளமை புரியும்.
  அண்மைக்காலங்களில் வெற்றியைக் கருதிச் சிலர் காளைகளுக்குப் போதை  நீர் தருதல் போன்ற  வஞ்சக முறைகளைப் பயன்படுத்தி இருக்கலாம் .அது வஞ்சகர்களின் செயல்பாடே அன்றி  ஏறுதழுவலின் குறைபாடன்று.
 எதற்கெடுத்தாலும் சாதியை இழுத்து ஆதாயம் அமைடயும் சிலர், இதனைச் சாதி விளையாட்டாகச் சொல்வதும் தவறு. ஏறுதழுவல் அறிமுகமான காலக்கட்டத்தில் சாதிப்பாகுபாடே இல்லை.
  பின்னரும் மணமுடிப்பிற்காகக் கன்னியின் கரம் பிடிக்கத் துடிக்கும் காளையர் காளைகளை அடக்க வரும் பொழுது, பெரும்பாலும்,  மாமன்மகன், அத்தை மகன் என முறைப்பையன்களாகத்தான் இருந்திருப்பர். உறவிலே காதல் வருவதை எப்படிச் சாதிக்கண்ணோட்டமாகக் கூற முடியும்?
  அண்மைக்காலங்களில் நடைபெறும் ஏறு தழுவல் அல்லது சல்லிக்கட்டு என்பது மணம்  முடிப்பதற்கான தேர்வு அல்ல. வீரத்தின் அடையாளமாக ஆடப்படுவதாகும். இங்கே எங்கே சாதி வந்தது?
  பட்டியல்வகுப்பினர் முதலான எல்லா வகுப்பினரும் வீரத்தின் அடிப்படையில் பங்கேற்கும்  வீர விளையாட்டு விழாவாகத்தான் உள்ளது.
  எங்கேனும் சாதிப்பாகுபாடும் தீண்டாமையும் தாண்டவ மாடியிருந்தால் உடனே  அப்போக்கு  தடைசெய்யப்பட வேண்டியதும் தண்டிக்கப்பட வேண்டியதுமாகும். அத்தகைய மனித நேயத்திற்கு மாறான, இயற்கை அறத்திற்குப் புறம்பான செயல்களைத் தடை செய்வதைவிட்டுவிட்டு இவ்விளையாட்டையே தடை செய்ய வேண்டும் என்பது மிகப்பெரும் அறியாமையே.
  ஆனால், இத்தகைய சாதிக் கண்ணோட்டங்களுக்கு இடம் கொடுக்காமல்  அறப்போராட்டத்தினர் ‘ஒன்றே நாம்’ என இணைந்து போராடுவது பாராட்டிற்குரியது.
  போரில் ஆநிரைகளைக் கவரும்பொழுதுகூட அவற்றைத் துன்புறுத்தாமல் பார்த்துக்கொள்வதே தமிழர் நெறி என்பதைத் தொல்காப்பியர் “நோயின்றி உய்த்தல்” எனக் குறிப்பிட்டுள்ளார். போரில்கூடக் காலநடைகளைத் துன்புறுத்தக்கூடாது என்னும் கொள்கை உடையவர்  ஏறு தழுவுதலின் பொழுது துன்பம் இழைக்க எண்ணுவரா?   என்பதைப் புரிந்துகொள்ளாதவர்களால்தான் சல்லிக்கட்டிற்கு எதிர்ப்பு வருகிறது.
  சல்லிக்கட்டிற்கு ஆதரவான போராட்டம் என்பது ஒரு குறியீடே என்பதை மத்திய மாநில அரசுகளும் கட்சித்லைவர்களும் உணர்ந்துள்ளனர். காவிரி, முல்லை-பெரியாறு முதலான பல சிக்கல்களில் தண்ணீர் தர மறுக்கும் அண்டை மாநிலத்தைத் தட்டிக்கேட்காத மத்திய அரசு;  நெய்வேலியைத்தாரை வார்க்கும் மத்திய அரசு; சமற்கிரும், இந்தி என மொழித்திணிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வரும் மத்திய அரசு;  176.00,00 ஈழத் தமிழர்கள் கொடுமையான முறையில் கொல்லப்படக் காரணமான மத்திய அரசு;   இனப்படுகொலைக்குப் பின்னரும் தொடர் கொடுமைகளை அரங்கேற்றும் சிங்கள அரசிற்குத் துணை நிற்கும் மத்திய அரசு; தமிழகச்சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் படுகொலையாளிகளைக் கூண்டில் ஏற்றத் துணைநிற்காமல் தப்பிக்க உதவும் மத்திய அரசு; என மத்திய அரசின் மீதான கடுஞ்சினம் சேர்ந்து இப்பொழுது வெடித்துள்ளது.
  இதுபோன்று ஈழத்தமிழர்படுகொலையின்பொழுது திரண்டிருந்தால், அவர்களைக் காப்பாற்றியிருக்கலாமே எனப் பலருக்கும் தோன்றுகிறது. அப்பொழுது கு.முத்துக்குமார் உயிர்க் கொடை கொடுத்தபின்னரும் உடலாயுதத்தைப் பயன்படுத்தவிடாமல் கட்சித்தலைவர்கள் போராட்டத்தைச் சிதைத்துவிட்டனர். அதில் கற்ற பாடம்தான் இப்பொழுது அவர்களை உள்ளே விடவில்லை. இது தொடக்கம்தான். இனி இதுபோன்ற நேர்வுகளில் என்னஆகும் என்ற அச்சம் தன்னலக் கட்சித்தலைவர்களுக்கு எழாமல் இருக்காது. எனவே இப்போதைய போராட்டம் ஒரு குறியீடு என்பதை அனைவரும் நன்கு புரிந்துள்ளனர்.
 போராட்டத்தின்பொழுது நரேந்திர(மோடிக்கு) எதிரான முழக்கங்கள் ஏற்பட்டதாகவும் தனிநாடு தொடர்பான கருத்தோட்டங்கள் வந்ததாகவும் போராட்டம்  திசை மாறிப் போய்விட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
 ஆட்சியில் அமருவதற்காகத் தவறான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியவர் அவர்தானே! சல்லிக்கட்டு தொடர்பிலும் தவறான நம்பிக்கை தந்து ஏமாற்றிவருபவர் அதுதானே! மயிலே மயிலே இறகு போடு என்பதுபோல் மூடத்தனமாகக் கெஞ்ச  வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? வாழ்த்துப்பா பாட வேண்டும் என்று விரும்புகிறார்களா? பேராயிரக்(மில்லியன்)கணக்கில் திரண்டுள்ள கூட்டத்தில் உணர்ச்சிஅலைகள் கொப்புளித்து வருவது இயற்கைதான். இதில் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. இதனைப் புரிந்து கொண்டு ஆட்சியாளர்கள்தாம்  தம்மைத் திருத்திக்  கொள்ள வேண்டும்.
  அவசரச்சட்டம் இயற்றிய பின்னரும் கலையாமல் தொடருகிறார்களே என்றும் சொல்கிறார்கள். அந்த அளவிற்கு அரசின்மேல் நம்பிக்கை! முதல்வர் பன்னீர்செல்வம் பெருமுயற்சி எடுத்து அவசரச்சட்டம் பிறப்பிக்கச் செய்தது பாராட்டிற்குரியதுதான். ஆனால், இதே சட்டத்தை இதற்கு முன்னர் ஏன் கொண்டுவரவில்லை. மோடி, தன்னளவில் கை விரித்துவிட்டுத் தமிழகஅரசு அவசரச்சட்டம் பிறப்பிக்க உதவுவதாகக் கூறுவதில் என்ன நாடகம் உள்ளதோ? அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொந்தக்காரணங்களுக்காகத் தலைமையமைச்சரைச் சந்திக்க  நேரம் கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உணர்வை  எதிரொலிக்கவே பொதுநலன் கருதி தலைமையரைச் சந்திக்க விரும்பினர். அங்கிங்கெனாதபடி எங்கும்சுற்றும் நரே்நதிர(மோடி) இவர்களைச்சந்திக்க மறுத்தது தமிழ்நாட்டை அவமானப்படுத்தும் செயல். அப்படியிருக்க அவரின் பேச்சை எவ்வாறு போராடும் இளைஞர்கள் ஏற்பர்?
  குடியரசுத்தலைவர் ஒப்புதலின்றியே அவசரச்சட்டம் பிறப்பிக்கலாம் எனில், இதற்கு முன்பு ஏன் அவ்வாறு சட்டம் பிறப்பிக்கவில்லை? குடியரசு நாள்கொண்டாட்டத்திற்காக ஒரு வார நாடகம் ஆடிவிட்டுப் பின்னர் “பழைய குருடி கதவைத் திறடி” என்பதுபோல் ஆனால் என்னாவது என்ற தயக்கம். சூடுபட்ட பூனையாய்மக்கள் இருக்கும் பொழுது இதுபோன்ற நிலைப்பாடு இயற்கையே! எனவே காட்சிப்பொருளில் இருந்து காளையை நீக்கவும்  விலங்குகளின் நற்பேணுகைக்கான மக்கள்(People for the Ethical Treatment of Animals) அமைப்பைத் தடை செய்யவும் தடை யின்றி ஏறுதழுவலாகிய சல்லிக்கட்டு எப்பொழுதும் நடைபெறவும்  சட்டப்படியான வழிவகைசெய்தால் போராட்டம் தானாக முற்றாகிவிடும் அல்லவா? எனவே, போராட்டக்காரர்களைக் கலைக்க முயலாமல் அதற்கான காரணங்களை நீக்குவதில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்தட்டும்!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
(பாரதிதாசன்)
என்பதை நனவாக்கிய போராட்டத் தோழர்களுக்கும் தோழியருக்கும் உற்றுழி உதவிய மக்களுக்கும் பாராட்டுகள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 170, தை 09, 2048 / சனவரி 22, 2017

ஆவணியில் தொடங்குவது ஆண்டு! சித்திரையில் தொடங்குவது வருடம்! – இலக்குவனார் திருவள்ளுவன்



அகரமுதல 170, தை 09, 2048 / சனவரி 22, 2017

ஆவணியில்  தொடங்குவது ஆண்டு!

சித்திரையில் தொடங்குவது வருடம்!

 தமிழ்ப்புத்தாண்டு தொடக்கத்தில் மேற்குறித்த தலைப்பு புதிராக இருக்கலாம். தைப்புத்தாண்டிற்கு மாறான கருத்துகளைத் தெரிவித்தாலே கண்டன அம்பு தொடுப்போர் இருப்பதையும் அறிவேன்.
  60 ஆண்டுக் காலச்சுழற்சியில் அறிவுக்குப் பொருந்தாத ஒழுக்கக்கேடான கதைகளைக் கற்பித்து இழுக்கு ஏற்படுத்தும் வகையில் சித்திரை ஆண்டு மாறியதால் வந்த தைப்புத்தாண்டு வரவேற்கத்தக்கதே. நாம் அனைவரும் பின்பற்றப்பட வேண்டியதே! அதே நேரம் கடந்த கால வரலாற்றை அறியவேண்டியதும் நம் கடமையாகும்.  அந்த வகையில் அமைந்தததே இக்கட்டுரை.
  வருடம் என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் ஆண்டு என்பது என எண்ணுவோரே உள்ளனர். வருடம் என்று சொன்னால் தமிழ்ப்பற்றற்றவன் என முத்திரை குத்தும் தனித்தமிழன்பர்களும் உள்ளனர். ஆனால் இரண்டுமே வெவ்வேறு காலப் பகுப்பைக் குறிக்கும் தமிழ்ச்சொற்களே!
  ஆண்டு, வருடம் இரண்டுமே ஏறறத்தாழ 365 நாட்களும் 12 திங்களும் 52 வாரங்களும் கொண்ட கால  அளவுதாம். ஆனால்,அத்தகைய காலத்தின் தொடக்கமும் நிறைவும் வெவ்வறோனவை.
 பேராசிரியர் சி.இலக்குவனார், தொல்காப்பியர் காலத்தில் ஆண்டின் தொடக்கம் ஆவணியாக இருந்திருக்கும் என்கிறார்.  அவர்,
அறிஞர்கள் சிலர் தொல்காப்பியர் காலத்தில் ஆண்டுத் தொடக்கம் கார் பருவத்தின் முதல் திங்களாகிய ஆவணி எனக் கருதுகின்றனர். கேரளாவில் இன்றைய நாளிலும் ஆவணியை முதலாகக் கொண்ட ஆண்டினை கணக்கிட்டு வருவது நடைமுறையில் இருப்பதை இதற்குச் சார்பாகக் கூறுவர் (நூற்பா. 6, 7, 8, 9, 10 இவற்றிற்கான நச்சினார்கினியர் உரை)
எனத் தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும் (பக்கம் 480) என்னும் நூலில்(Tholkāppiyam in English with critical studies) குறிப்பிடுகிறார்.
  “கார் காலம் என்பது ஆவணியும் புரட்டாசியுமாம். ஒரு காலத்தில் ஆண்டுத் தொடக்கம் ஆவணி முதலாகக் கொள்ளப்பட்டது என்பர். இன்றும் மலையாள நாட்டில் ஆண்டுத் தொடக்கம் ஆவணியிருந்தே கொள்ளப்படுகின்றது. இப்பொழுது சித்திரை முதலாக ஆண்டுத் தொடக்கம் கொள்கின்றோம். இம்மாற்றம் என்று உண்டாயிற்று என்பது ஆராய்ந்து காண்டற்குரியது. ஆவணியும் புரட்டாசியும் கார்காலம்; ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர் காலம்; மார்கழியும் தையும் முன் பனிக்காலம்; மாசியும் பங்குனியும் பின் பனிக் காலம்; சித்திரையும் வைகாசியும் இளவேனிற்காலம்; ஆனியும் ஆடியும் முதுவேனிற்காலம். இவ்வாறு காலங்கள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டு வந்தன. பன்னிரண்டு மாதங்களும் தமிழ்ப் பெயர்களே. இவை தொல்காப்பியர் காலத்திலேயே ஆட்சியிலிருந்தன.” என்றும் செந்தமிழ்மாமணி முனைவர் சி.இலக்குவனார்(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 137) தெரிவிக்கிறார்.
  இதுதான் சரியானது என்பதை ஆண்டு என்பதன் சொற்பொருளே விளக்குகிறது.
  365 நாளுக்கு ஒரு முறை முளைக்கும் மூங்கிலுக்கு  ஆண்டு  எனப் பெயர்.   அண்டையிற் கிளைத்து  முளைக்கும் மூங்கில்  முளை  அண்டு எனப்பெற்றது; ஆண்டு என மாறியது. இக்குறிப்பைச்  செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகரமுதலியிலும் காணலாம்.
 மூங்கில் முளைக்கும் திங்கள் ஆவணி. எனவே, ஓராண்டுக் கால அளவைக்குறிப்பிடும் மூங்கில் தோன்றிய மாதத்தில் இருந்து ஆண்டினைக் கணக்கிட்டுள்ளனர்.
  சேரநாடாக இருந்த கேரளத்தில் தமிழில்இருந்து கிளைத்த மலையாள மொழியில் மூங்கில், ஆண்டு எனக் குறிக்கப்படுகின்றது; ஆவணி முதல் ஆடி முடிய உள்ள காலத்தை ஆண்டுப் பகுப்பாகக்  கருதும்  ஆண்டுக்கணக்கு  நடைமுறை   உள்ளது. எனவே, தொல்காப்பியர் காலத்தில் ஆண்டு என்பது  ஆவணி முதல் ஆடி முடியவே என்பதை  இவை மெய்ப்பிக்கின்றன.
  நிதியாண்டு, கல்வியாண்டு, வேளாண்(பயிர்)ஆண்டு என்று நாம் வெவ்வேறு வகையாக இப்பொழுது குறிப்பிடுகிறோம். இவைபோல் சித்திரையை முதலாகக் கொண்ட 12 மாதக் காலப்பகுப்பும் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், எப்பொழுதிலிருந்துவந்தது என்று தெரியவில்லை. சூரியன் முதலான கோள்கள், சுழற்சிகள் மாற்றத்தின் அடிப்படையில்  சித்திரை முதலாகக் கொண்ட வருடம் தோன்றியிருக்கலாம். நிகண்டுகளிலும் வருடம் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது
  சித்திரையில் தொடங்கி பங்குனியில் முடிவது வருடம். சித்திரைத்திங்கள் மேழ ஓரையில் வருகிறது. மேழம் என்பது வருடை என்னும் ஒரு வகை ஆட்டைக் குறிக்கும். வருடையில் தொடங்கும் ஆண்டுப்பகுப்பு வருடம் எனப்படலாயிற்று. வருடம் என்பதை நாம் வருசம் எனக் குறிப்பதால் தமிழ்ச்சொல்லல்ல என்ற எண்ணம் நமக்கு ஏற்பட்டுவிட்டது. வேறு காலப்பகுப்பைக் குறிக்கும் ஆண்டு என்னும் சொல்லே வருடத்திற்கான நல்ல தமிழ்ச்சொல் என நாம் எண்ணிவிட்டோம்.
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து (நக்கீரர்: நெடுநல்வாடை: அடிகள் 160-161)
என வரும் சங்க இலக்கியப் பாடலடிகள் ஆட்டினை – சித்திரையை – முதலாக உடைய காலப்பகுப்பைக் குறிக்கின்றது.
  சித்திரையை ஆண்டுத் தொடக்கமாகக் கூறும்பலரும் இவற்றை விளக்கியுள்ளனர்.
  ஆனால், மற்றொரு செய்தியும் உள்ளது. நட்சத்திரங்கள் அடிப்படையில் பார்த்தாலும்  27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் புரவி (அசுவினி) என்பதாகும்.  அடுத்தது அடுப்பு(பரணி), மூன்றாவது ஆரல்(கார்த்திகை). புரவி, அடுப்பு, ஆரலில் ஒரு பகுதி தோன்றும் காலம் சித்திரைத் திங்களாகும். எனவே, நட்சத்திரங்களின் அடிப்படையில் பார்த்தால் வருடத் தொடக்கம் என்பது சித்திரைதான்.
  ஆனால்,  சித்திரை வருடத்திற்கும் ஆவணிஆண்டிற்கும் இடையில்  தையை முதலாக உடைய காலப்பகுப்பு இருந்திருக்கலாம். சிலர் தொல்காப்பியர் காலத்திற்கும் முன்னர் முதலில் தை ஆண்டுத் தொடக்கமாக இருந்திருக்கும் என்கின்றனர். அவ்வாறு இருந்து சான்றுகள் கிடைக்காவிட்டாலும் அவ்வாறு இல்லாமல் இருந்தாலும் நாம் தை முதல்நாளை  ஆண்டுப்பிறப்பாகக் கொள்ளத் தடை ஏதும் இல்லை.
  சல்லிக் கட்டு என்பது கிரந்த எழுத்துப் பயன்பாட்டில் குறிக்கப்பெறுகிறது. இதனால் ஏறுதழுவல் தமிழர்க்குரியதல்ல என்றாகிவிடுமா?
  தொடக்கத்தில் 60 ஆண்டு காலச் சுழற்சி முறையும் பயன்பாட்டில் இருந்துள்ளது. சீனாபோன்ற நாடுகளில் இன்றும் அறுபது ஆண்டுமுறை உள்ளது.
  தமிழகத்திலும் 60 ஆண்டு சுழற்சி முறை இருந்துள்ளது. பின் வந்த ஆரியர்கள், கிருட்டிணனுக்கும் நாரதனுக்கும் பிறந்த குழ்நதைகளே  60 ஆண்டுகள் என  ஒழுக்கததிற்கும் பண்பாட்டிற்கும் கேடுவிளைவிக்கும் கதையைக் கட்டியதாலும்  பழந்தமிழ்ப்பெயர்களை அழித்து சமற்கிருதப் பெயர்களைச் சூட்டியதாலும்,  நம்மால் இவற்றைப் பயன்படுத்த முடியாமல் போகிறது.
  பழம்  ஓலைச்சுவடிகள் அல்லது தொல்லாராய்ச்சி மூலம் 60 ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள் கிடை த்தால் நாம் அவற்றைப் பயன்படுத்தலாம்.  திணிக்கப்பட்ட சமற்கிருதப்பெயர்களுக்கான தமிழ்ப்பெயர்களைச் சூட்டி அதைப் பயன்படுத்தத் தேவையில்லை. எனவேதான், திருவள்ளுவர் ஆண்டு என்னும்  தொடர் ஆண்டினைத் தமிழறிஞர்கள் வலியுறுத்தினர். அரசும் ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பித்துள்ளது. அரசின் ஆணைகளில் தவறாமல் திருவள்ளுவர் ஆண்டு இடம் பெறுகிறது. இலக்கிய இதழ்களில் திருவள்ளுவர் ஆண்டினைக் குறிக்கின்றனர். ஆனால், அழைப்பிதழ்கள், கல்வெட்டுக்குறிப்புகள், பத்திரப்பதிவுகள்,அன்றாட நடைமுறை ஆகியவற்றில் திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப் பெறுவதில்லை. நாம் அனைவரும் உறுதிஎடுத்து எல்லா இடங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்த வேண்டும்.
  திருவள்ளுவர் ஆண்டினைப் பின்பற்றும்போது, இயல்பாகவே திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கமான தை முதல்நாள்தானே ஆண்டுப்பிறப்பாகும். எனவே, தமிழ்ப்புத்தாண்டாகத் தை முதல்நாளைக் குறிப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், தமிழ்நாட்டில்  கட்சிகைளப்பொருத்தே எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. திமுக ஆட்சிக்கு வந்தால்  அதிமுக செய்தனவெல்லாம்  தவறு. அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக செய்தனவெல்லாம் தவறு என்னும் போக்கே மேலோங்கியுள்ளது. மாறி மாறி ஆண்டுத் தொடக்கத்தை மாற்றுவது என்பது நல்ல நடைமுறை யல்ல.  இதனைத் தவிர்க்க,
ஆவணி முதல்நாள் தொல்காப்பியர் ஆண்டுத்தொடக்கம்
தை முதல்நாள் திருவள்ளுவர் ஆண்டுத்தொடக்கம்
சித்திரை முதல்நாள் இளங்கோவடிகள்ஆண்டுத் தொடக்கம்
என்று பின்பற்றலாம்.
  அரசாணைக்கிணங்க நடைமுறையில் உள்ள திருவள்ளுவர் ஆண்டினை எல்லா இடங்களிலும் கட்டாயமாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று ஆண்டுப்பிறப்பையும் சிறப்பாகக்கொண்டாட வேண்டும். இதன் மூலம் சித்திரையில்  தொடக்கத்தில் ஆண்டுப்பிறப்பைக் கொணடாடியவர்களும் வழக்கம்போல் கொண்டாட வழி ஏற்படும். தை முதல்நாளே ஆண்டுப்பிறப்பு என்போரும் தமிழ்ப்புத்தாண்டினைக் கொண்டாடி மகிழலாம். நமக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண இலக்கியமான மூவாயிரம் ஆண்டிற்கும் முற்பட்ட தொல்காப்பியம், தொல்காப்பியர் சிறப்புகளைப் பாரறியச் செய்யலாம்.
ஆவணி  முதல் நாளே ஆண்டின் தொடக்கம் !
சித்திரைமுதல் நாளே வருடத்தின் தொடக்கம்!
தை முதல்நாளே திருவள்ளுவர் ஆண்டின்  தொடக்கம்!
என்பனவற்றை ஏற்று  முவ்வகை ஆண்டுப்பகுப்பையும் போற்றுவோம்!
தமிழின் சிறப்பை நாளும் பரப்புவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive