Saturday, January 30, 2021

முதல்வர் திறமையானவர் என்பதால் வந்த பாதையை மறுக்கலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




முதல்வர் திறமையானவர் என்பதால் வந்த பாதையை மறுக்கலாமா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிநிலைப்பாடு குறித்து ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர், ஊடகத்தினர், பொதுமக்கள், ஊகச் செய்தியாளர்கள் எனப் பல தரப்பாரும் எண்ணியதற்கும் சொல்லியதற்கும் மாறாக ஆட்சித் தேரைத் தொடர்ந்து செலுத்திக் கொண்டுள்ளார். நான்கு ஆண்டுகளைக் கடந்து விட்டுத் தேர்தல் காலத்தை நெருங்கிவிட்டார். மத்தியப்பிடியில் சிக்கியும் சிக்காமலும் நழுவியும் நழுவாமலும் வினைத்திறனுடன் செயல்பட்டு வருகிறார். பாராட்டிற்குரிய பல பணிகளை ஆற்றி வருகிறார்.

“எதிர்க்கட்சித் தலைவர் தாலின், தான் சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று கூறி வருகிறார். நான் மக்களால் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவன். என்னை முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் தேர்வு செய்தார்கள்” எனப் பொதுக்கூட்டங்களில் முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி கூறிவருகிறார். கட்சியிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகள் வகித்தவர், இப்பொழுதும் முதல்வராகவும் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள ஒருவர் இவ்வாறு கூறுவது அறியாமையாகக் கருத முடியாது. அவ்வாறிருக்க இவ்வாறு கூறுகிறார் என்றால் என்னென்பது? சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வரைத் தேர்வு செய்வது என்பது வெளியே காட்டப்படும் நடைமுறை. உண்மையில் கட்சித்தலைமை அடையாளம் காட்டப்படுபவரைத்தான் அங்ஙனம் தேர்ந்தெடுத்ததாக அரங்கேற்றுவதே உள்ளார்ந்த செயல்பாடு. முதல்வர் மட்டுமல்ல, தலைமையமைச்சர், குடியரசுத்தலைவர் முதலான ஆட்சிப்பொறுப்பில் உள்ள தெரிவுமுறையெல்லாம் கட்சித்தலைமையின் விருப்பத்திற்கிணங்க நடத்தப்படும் நாடகங்கள்தான் என்பதை அரசியலில் அரிச்சுவடி அறிந்தவர்களும் அறிவார்கள். உள்ளாட்சி உறுப்பினர்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் வரை அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கட்சித்தலைமை வாய்ப்பு அளிப்பதால்தான் இந்த வாய்ப்பை அவர்கள் பெறுகிறார்கள்.

கட்சிச்சார்பின்றிப் போட்டியிடுபவர்கள்தாம் தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகப் பெருமை பேசலாம். பிறர் யாருமே கட்சியால் அடையாளங் காட்டப்படுவதால்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களாக மாறுகிறார்கள். எனவேதான் அவர்கள் வெற்றி பெற்றதும் அதிகாரத் தலைமைக்குத் தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர். முன்பு குடியரசுத் தலைவாகத் தேரந்தெடுக்கப்பட்ட கியானிசெயில்(சிங்கு)வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டதும் கட்சித்தலைவியான இந்திராகாந்தி நடந்தபாதையை மகிழ்ச்சியுடன் துப்புரவு செய்வேன் என்றார்(1982). அவர் குடியரசுத்த்லைவரானதும் இந்திராகாந்தி சீருந்தில் இருந்து இறங்கியபொழுது கதவைத் திறந்துவிட்டார். அவர் சடடமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளில் 72விழுக்காடு பெற்று வெற்றி பெற்றவர். ஆனால், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இறுமாப்புகொள்ளாமல் தன்னைத் தெரிவுசெய்த கட்சித்தலைவி இந்திராகாந்தியால்தான் குடியரசுத்தலைவர் ஆனதை உணர்ந்து அவருக்கு (அளவு கடந்த) நன்றியுடன் நடந்து கொண்டார்

இதேபோல் மத்தியப்பிரதேசத் தொழில் அமைச்சர் கைலாசு விசயவர்கியா(Kailash Vijayvargia) பாசக தலைமை தனக்கு வாய்ப்பு தந்தமைக்காக எனக்குக் கட்டளையிட்டால் கட்சி அலுவலகத்தைத் துப்புரவும் செய்வேன் என்றார்(2013). இவ்வாறு பற்பலரைச் சான்றாகக் கூறலாம். தமிழ்நாட்டிலும் அமைச்சர்களாகவும் பேரவைத் தலைவர்களாகவும் வாய்ப்பு பெற்றவர்களும் நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுவதும் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதும் அனைவரும் அறிந்ததே. இத்தகைய வாய்ப்பு பெறாதவர்களும் தங்கள் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்லர். பாசகவின் சதி அரங்கேறாமல் சசிகலா சிறைக்குச் செல்லாமல் இருந்திருந்தால் அவரின் அடிமையாக் காட்டிக்கொள்வதில் போட்டி போட்டிருப்பார்கள். விடுதலை யான அவர் தமிழகம் திரும்பியதும்  இப்படிப்பட்டக காட்சிகள் அரங்கேறவும் வாய்ப்பு உள்ளது.

மக்கள் ஆட்சி என்ற பெயரில் கட்சி ஆட்சிதான் நடைபெறுகிறது. கட்சி ஆட்சி என்றால் ஒரு சிலரின் வல்லாண்மைக்கு உட்பட்டதுதான். கட்சித்தலைமையின் விருப்பத்திற்கு உரியவர்கள் வாய்ப்புகளைப் பெற்றுத் தேர்தல் முறையில் வெற்றி பெறுகிறார்கள்; ஆட்சிப் பொறுப்புகளில் அமர்த்தப்படுகிறார்கள். இவற்றை எல்லாம் கூறுவதன் காரணம் ச.ம.உ(எம்.எல்.ஏ)க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக உதடு சொன்னாலும் சொல்பவர் உள்ளத்திற்கு உண்மை தெரியும் என்பதால்தான். சசிகலா நினைத்திருந்தால் செங்கோட்டையனுக்கோ சட்ட மன்ற உறுப்பினராக இல்லாத தம்பிதுரைக்கோ வேறு யாருக்கோ முதல்வர் பதவி தந்திருக்கலாம்.  சாதி அடிப்படையிலும் யாருக்கேனும் முதல்வர் பதவி தந்திருக்கலாம். எனவே, சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டு அ.தி.மு.க.சட்டமன்றக் குழுவால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முறைப்படி முதல்வரானவர், சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன் எனக் கூறுவது மனமறிந்த பொய்யே! சட்டமன்ற உறுப்பினர்களின் செல்வாக்கு அவருக்கு இருந்தது என்றால் கூவத்தூருக்கு ஏன் தேவை ஏற்பட்டது. அவர்களைக் கூட்டி நேரடியாக முதல்வராக ஆகியிருக்க வேண்டியதுதானே!

அதேநேரம் எடப்பாடியாருக்கு இந்த உண்மையின் அடிப்படையில் நன்றி உணர்வு இருப்பதால்தான் பிற அமைச்சர்கள் சசிகலாவிற்கு எதிராக வன்மையாகக் கருத்து தெரிவித்தாலும்  அவரைத் தாக்கி இவர் எதுவும் பேசவில்லை. அப்படிப்பட்டவர் உண்மையைச் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் பொய்யாக முதல்வரானதன் காரணம் ச.ம.உ.(எம்.எல்.ஏ)க்கள் என்பது சரியல்ல.

ஒருவேளை, “சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துகளைக் கேட்டபொழுது பெரும்பான்மையர் என்னை விரும்பினார்கள், எனவே என்னைப் பரிந்துரைத்தார்” என்றுகூடச் சொல்லலாம். அப்படியானாலும் பெரும்பான்மையர் விருப்பத்தை ஏற்று நடுவுநிலைமையுடன் செயல்பட்டார் அல்லவா? இதை அற்ப உதவியாகக் கருதலாம். ஆனால்,

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

(திருவள்ளுவர், திருக்குறள் 102) என்பதல்லவா அறநெறி.

நன்றி கொன்றமை தவிர ஆட்சித்திறனால், சசிகலா தக்கவரைத்தான் முதல்வராக அமர்த்தியள்ளார் என்னும் நற்பெயரை அவருக்கு வாங்கித் தந்துள்ளார்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.(திருவள்ளுவர், திருக்குறள் 110)

 என்னும் நிலையைத் திறமையும் ஆளுமையும் மிக்கவர் அடையலாமா?

அஃதுமட்டுமல்ல. உதவியின் அளவைப்பொறுத்து உதவி மதிப்பிடப்படுவதில்லை. உதவிபெற்றவரின் பண்பின் அடிப்படையில்தான் உதவி மதிப்பிடப்படுகிறது என்கிறார் திருவள்ளுவர்.

உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.(திருவள்ளுவர், திருக்குறள் 105)

என்னும் தமிழ்மறைக்கிணங்க பெற்ற உதவியை மறக்கும் பண்பற்றவராக மாறலாமா?

ஒருவேளை காட்சிகள் மாறினால், “நான் சின்னம்மாவால் அடையாளங்காட்டப்பட்டவன்” எனப் பெருமை பொங்கக் கூறும் நிலையும் வரலாம். எனவே, இனிமேல், முதல்வர், தான் சசிகலாவால் முதல்வராகவில்லை எனச் சொல்வதையாவது இனி நிறுத்த வேண்டும். தன்னம்பிக்கை உள்ள முதல்வர் அவ்வாறு பொய்யுரை புகல்வதை நிறுத்துவார் என்றே எதிர்பார்க்கிறோம்.

வளர்க அவர் நற்பணிகள்!

வெல்க அவர் நன்முயற்சிகள்!

அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல

 







Friday, January 15, 2021

பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும்

கமலின் இயலாமையும்

 [பெருந்தலை(Bigg Boss) நிகழ்ச்சி என்பது நேர்நிகழ் காணாட்ட நிகழ்ச்சியாகும். இப்பொழுது இந்தியாவில் ஏழு மொழிகளில் நடைபெறுகிறது. தமிழும் அவற்றில் ஒன்று. பல்லாயிரக்கணக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை உருவாக்கியும் வழங்கியும் வரும் எண்டமோல் நிறுவனத்தின் சார் நிறுவனமே எண்டெமோல் சைன் இந்தியா (Endemol Shine India) என்னும் நிறுவனம். இது வியாகாம் 18(Viacom 18), இசுடார் இந்தியா ஆகியவற்றின் மூலம், இதனை வெளியிடுகிறது. ஊட்டு(Voot), திசுனி + ஆட்டுசுடார் மூலமே காட்சிப்படுத்துகிறது.  கேட்பிற்கிணங்கக் கட்டணக் காணொளி மூலமே(Subscription video on-demand)  இவை நிகழ்ச்சியை ஒளி பரப்புகின்றன. நெதருலாந்து-பிரித்தானியப் பெரிய அண்ணா(Big Brother) நிகழ்ச்சியின் பதிப்பே இது. ]

பெருந்தலையின்(Bigg Boss) தமிழ் நிகழ்ச்சியின் நான்காம் தொடர் இப்பொழுது நடைபெற்று வருகிறது. நாளை (தை 4 / 17.01.2021 அன்று) நிறைவுபெற உள்ளது. இதன் முடிவாக வாகையாளரை அறிவிக்கும் பொழுது விசய் தொலைக்காட்சி நடுநிலை பிறழ்ந்து நடந்து கொள்ளும் என்பதே பலரின் வருத்தமான நம்பிக்கையாக உள்ளது. அந்த அளவிற்கு அந்நிறுவனத்தின் செயல்பாடு மக்கள் மனத்தில் பதிந்து உள்ளது. எனினும் இணையத் தளங்களில் இவ்வாறு முறைகேடு நடக்கக்கூடாது எனப் பலரும் எழுதி வருவதால் நடுவுநிலையுடன் நடந்து கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பும் நேர்கிறது. விசய் தொலைக்காட்சி நிறுவனம் நடுவுநிலையுடன் நடந்து கொண்டால்  ஆரிதான் வெற்றி நாயகராக அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், தன் நிறுவனக் கலைஞர் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்கிறது.

ஆரி ஒவ்வொருவருக்குமே வெவ்வேறு சூழல்களில் தன்னம்பிக்கை உரை வழங்கியுள்ளார் என்பது அவ்வப்பொழுது  ஒவ்வொருவரும் கூறும் கருத்துகளில் இருந்து தெரிகிறது. அவற்றை ஒளிபரப்புவதில் பெரும்பான்மையை மறைத்துவிட்டார்கள். ஆரிக்கு நல்ல பெயர் வரக்கூடாது என மறைத்திருக்கிறார்கள். அவ்வாறு ஒளி பரப்புவது பார்க்கும் மக்களுக்குத்தான் நல்லது என உணர்ந்தாவது ஒளிபரப்பியிருக்க வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. போட்டியாளர்களை நடுவுநிலையுடன் நடத்தாமல் தன் விருப்பு வெறுப்பிற்கேற்பவே நடத்துகிறது. சான்றாகக், கடந்த முறை ஒலிவாங்கியை அணியாமல் இருந்ததற்காகப் போட்டியை விட்டு நீக்கிய பெருந்தலை இம்முறை ஒலிவாங்கியை எறிவது, தலையணையை எறிவது, செருப்பால் அடித்துக் கொள்வது, ஏச்சுச் சொற்களைச் சினத்துடன் சொல்வது எனப் பலமுறை விதி மீறிய பாலாமீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அவரே, அவரைத் துணைத் தலைவராக அறிவித்த பொழுது தான் விதிமுறைகளை மீறுபவன் என ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் செவ்வட்டை(Red Card) கொடுத்து வெளியேற்ற வேண்டியவரைச் சீராட்டி வைத்துக் கொள்கிறது.

அதே நேரம் மக்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றுள்ள ஆரிக்கு வெற்றிப்பட்டத்தைத் தரக் கூடாது என்பதற்காக அவருக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. சிலர் குழுவாக அமைத்துக் கொண்டு ஒவ்வொரு வாரமும் அவரை வெளியேற்றப் பட்டியலில் சேர்க்கின்றனர். வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளே வருபவர்கள், வெற்றி வாய்ப்புள்ளவரை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகக் கூட்டணி அமைத்துச் செயல்படுவதைத் தடுக்கவில்லை. அன்பு அணி என்பது விசய் தொலைக்காட்சியின் மீதான அன்பு அணியாகவே உள்ளது. ஆனால், உண்மையில் பெருந்தலை யாரை முன்னிறுத்துகிறதோ அவரைப் பொதுமக்கள் வெறுத்து ஒதுக்குகின்றனர். எடுத்துக்காட்டிற்கு இரண்டைப் பார்ப்போம். தொலைக்காட்சித் தொகுப்புத் திறமையால் மக்களிடம் வரவேற்பு பெற்றிருந்த அருச்சனா பெருந்தலைவர் சார்பாளர்போல் ஆரவாரமாக உள்ளே நுழைந்தார். அவரை அமைதியாக வெளியேற்றிவிட்டனர் பொது மக்கள். (இ)ரியோ மீது சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தமையால் எண்ணற்ற அன்பர்கள் இருந்தனர். தொடக்கத்தில் அவர் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர். ஆனால், வெருந்தலையால் முன்னிறுத்தப் படுகிறார் என்றதும் அவர் ஆதரவாளர்களே  அவரைப் புறக்கணித்து ஆரிக்கு வாக்களிக்கின்றனர்.

அனிதாவைத் தடுப்பறைக்கு(ஓய்வறைக்கு) அனுப்பியதைத் தவறென ஏற்றுக்கொண்டு திரும்பப்பெற்ற கமல், (இ)ரியோ, ஆரியைக் குறித்து வேண்டுமென்றே தவறாகக் குறித்துத் தடுப்பறைக்கு அனுப்ப முன்மொழிந்ததற்கு எதிராக ஆரி முறையிட்டதும் கண்டு கொள்ள வில்லை. (இ)ரியோவிற்கு எதிராகப் பேசுவதற்குப் பெருந்தலை ஒப்புதல் தரவில்லை போலும்! இல்லத் தோழர்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது பாராட்டிற்குரியதுதான். ஆனால் அவர்கள், காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ளும் பொழுது தலையிட்டு உண்மையான நீதியை வழங்க வேண்டும். பெருந்தலை இனியேனும் அதைப் பின்பற்றட்டும்!

அருச்சனாவின் நாடகங்களில் ஒன்று தன் தந்தையின் மரணம்பற்றிப் பேசப்பட்டது தொடர்பானது. குடும்பத்தவர்பற்றித் தவறாகப் பேசக்கூடாதுதான்.  ஆனால், துயரத்தை வெளிக்கொணர்வதற்காக அருச்சனாவின் தந்தை மரணத்தைக் குறித்துக் கூறுவது பெருங்குற்றமல்ல. அஃது ஒன்றும் குற்றச் சூழலில் நேர்ந்த மரணம் அல்ல. அவரது குடும்பத்தார், உறவினர், நண்பர்கள், ஊடகத்தினர் அறிந்த இயல்பான செய்திதான். எனவே, அதைச் சொல்வதை விரும்பவில்லை எனில், அப்படிச் சொல்லும் பொழுது அது குறித்துப் பேச வேண்டா என அமைதியாகத் தெரிவித்தாலே போதும். ஆனால், பெருங்கூச்சல்போட்டு நாடகமாடினார் அருச்சனா. இது குறித்துக் கமல்,

“தன்னைத் தோற்றபின் என்னைத் தோற்றாரா?

என்னைத் தோற்றபின் தன்னைத் தோற்றாரா?”

என்ற பாஞ்சாலியாக எண்ணிக் கொண்டு, நிசாவிடம் அருச்சனாவின் அப்பா மரணம் இங்கு வருவதற்கு முன்பேதெரியுமா? இங்கு வந்தபின் அருச்சனாசொல்லித் தெரியுமா எனக் கேட்டார்.

மாறாக, இவ்வாறு கூச்சல் போட்ட நாடகக்காட்சியைத் தவறு என்று சுட்டிக்காட்டியிருந்தால், அனிதா தன் கணவரைப்பற்றிச் சொல்வதாக மற்றொரு நாடகத்தை அரங்கேற்றியது நிகழ்ந்திருக்காது. தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் கண்டிப்பதும் செயல்களுக்கேற்ப இல்லாமல், ஆளுக் கேற்றவாறுதான் நிகழ்கிறது.

ஆரி ‘டா’ போட்டுப் பாலாவிடம் பேசியது குற்றமாகச் சொல்லப்பட்டது. எல்லாரும் ‘டா’, ‘டி’ என்றுதான் விளிக்கின்றனர். அஃதாவது பெண்களும் ஆ்ண்களை ‘டா’ என்று சேர்த்துத்தான் பேசுகின்றனர்.  ஆரியும் இதற்கு மு்ன்னர்ப் பாலாவை ‘டா’ என்று விளித்துப் பேசியுள்ளார். எனவே, அதனைக் குற்றமாகச் சொல்வது பொருத்தமில்லை.

துப்புரவுப்பணியைச் செய்யாத அல்லது செய்விக்காத தன்னிடம் ஆரி இனிமையாகக் கேட்கவில்லை என்று ஆசித்து கூறுவது ஏற்கும்படி இல்லை. அதுவும் ஆரியே அந்தப்பணியைச் செய்திருக்கலாமாம். தலைவன் என்ற முறையில் கேட்க வேண்டிய முறையில்தான் ஆரி கேட்டார். ஆசித்து, பெரியவர் சுரேசிடமே அவர் வேலை சொன்னதற்காகப் பொங்கி எழுந்த பொழுதே கண்டித்திருந்தால் தன்னைப் பண்படுத்திக் கொண்டிருப்பார். மாறாகச் சுட்டிக்காட்டும் தவற்றைத் திருத்திக் கொள்ளாமல் ஆரியிடம் இனிமையாகக் கூறி வேலைவாங்கச் சொல்வது தவறான ஆசித்தைத் திருத்தாது.

பிற போட்டியாளர்களின் குடும்பத்தினரே ஆரியை நம்பிக்கை நாயகனாகக் கருதுகின்றனர். முன்னரே மக்கள் பணிகளிலும் தொண்டுகளிலும் அருவினை (சாதனை)ச் செயல்களிலும் ஈடுபாடு கொண்டுள்ளவர் ஆரி; பெருந்தலை இல்லத்தில், நேர்மையாகவும் நடுவுநிலைமையுடனும் நடந்து கொள்வதாலும்  பிறரால் ஓரங்கட்டப்படுவதாலும் இவரின் வெற்றியை நேர்மையின் வெற்றியாகக் கருதி ஆதரிக்கின்றனர். பெருந்தலை நிகழ்ச்சியைப்பற்றிக் கருத்து தெரிவிக்கும் இணையத் தளங்கள் யாவற்றிலும் ஆரிக்கே பெரும் செல்வாக்கு இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பெருந்தலையின் எண்ணத்திற்கு மாறாக இப்போக்கு உள்ளதால் ஆரியை மட்டந்தட்டுவோரை ஊக்கப்படுத்தி வருகிறது.

தனியார் நிறுவனங்கள் நடத்தி வரும் வாக்கெடு்ப்புகளில் பிற போட்டியாளர்கள் பெற்றுவரும் மொத்த வாக்குகளைவிட மிகுதியாக ஆரிக்குதான் வாக்குகள் குவிந்து வருகின்றன. இதுவே ஆரிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கைக் காட்டுகிறது. இதேதான் பெருந்தலையின் வாக்கெடுப்பிலும் நிகழ்ந்து வருகிறது. எனினும் இம் முடிவை விரும்பாத பெருந்தலை மாறாகச் செயல்படுவதாக மக்கள் அஞ்சுகின்றனர்.

அண்மையில் மறைந்த நடிகையை மிரட்டியதாகக் கூறப்படும் தொகுப்பாளரைக் கொண்டு ஆரிக்கு எதிராகப் பேச வைத்துள்ளார்கள். தனியார் தளங்கள் எல்லாவற்றிலும் வாக்களிப்பில் பிற போட்டியாளர்கள் பெற்ற வாக்குகள் மொத்தத்தைவிட ஆரி பெறும் வாக்குகள் மிகுதியாக உள்ளன.  ஆரியைப் புறக்கணித்து விட்டுத் தாங்கள் கருதியவருக்கு வெற்றிப்பட்டம் வழங்கினால் மக்கள் எதிர்ப்பிற்கு ஆளாகலாம் என உணர்ந்து  அவையெல்லாம் ஆரியின் மக்கள் தொடர்பு அலுவலர் உருவாக்கும் வாக்குப்பதிவு எனப் பரப்புகிறார்கள். வலைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் போலி மறுப்பு ஒன்றையும் வெளியிடச் செய்துள்ளார்கள்.

தொடக்கத்தில் கூறியது போல், விதிகளை வகுத்துவிட்டு அவற்றைப் பின்பற்றாதவர்க் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிவிட்டுத் தங்கள் செல்லப்பிள்ளைகள் விதிகளை மீறினால் நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாகப் பாராட்டு கிடைக்கும். நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து பலவற்றைக் கூற இயலும் என்றாலும் இறுதியை நெருங்கும் பொழுது நேர்ந்த விதி மீறலைப் பார்ப்போம். பணப்பெட்டியை வைத்துவிட்டு, இடையிலேயே போக விரும்புவர்கள், அதனை எடுத்துக் காெண்டுபோகலாம் எனவும் பிறர் யாரும் அவர்களுக்குத் தூண்டதலாகச் செயல்படவோ அறிவுரை கூறவோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. கேபி ஐந்து நூறாயிரம் பணம் உள்ள பெட்டியை எடுத்து வெளியேறும் முடிவை வெளிப்படுத்தினார். அவர் ஆழ்ந்து சிந்தித்துத் தெளிவாக முடிவெடுத்துள்ளார் என்பது அவரது செயல்களிலேயே தெரிந்தது.  ஆனால்,(இ)ரியோ அவரைப் பணப்பெட்டியை வைக்குமாறும் மறுமுறை சிந்திக்குமாறும் மன்றாடினார்.  தான் போகவிரும்புவதால் விட்டுக்கொடுக்குமாறும் கெஞ்சினார். (இ)ரியோ இவ்வாறு மன்றாடுவதைப் பார்த்த பிற போட்டியாளர்கள் சிலரும் ஒவ்வொருவராக மறுமுறை சிந்தித்து முடிவெடுக்குமாறு கேபியை வலியுறுத்தினர்.  (இ)ரியோ பேசத் தொடங்கியதுமே நிறுத்தியிருந்தால் அவரும் தொடர்ந்திருக்க மாட்டார். பிறரும் அவ்வாறு கேபியிடம் வலியுறுத்தியிருக்க மாட்டார்கள்.  எனினும் கேபி உறுதியான முடிவு மூலம் அவர்களின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.  பெருந்தலை ஒருங்கிணைப்பாளருக்குப் பெண் போட்டியாளர்களைச் செல்லப்பெயரில் அழைப்பதில் கவனம் இருந்ததால் தொடக்கம் முதலே எவ்விதிமீறல் குறித்தும் கவலைப்படவில்லை.  செல்லப்பிள்ளைகள் பிறர் மீது பொய்யான குற்றம் சுமத்தினாலும் அது குறித்தும் கவலைப்படுவதில்லை.

தவறவிடும் தொலைபேசி அழைப்புகள் மூலம், கடந்த வாரத்திலிருந்தே  ஆரிக்கு வாக்களிக்க இயலவில்லை.  பலமுறை முயன்றால் ஓரிரு முறையே வாக்கு, கணக்கில் சேருகிறது. இணையத் தளங்களில் இது குறித்துச் சொன்னாலும் தக்க நடவடிக்கை எடுக்க வில்லை. இதுவும் ஆரிக்கு எதிரான திட்டமிட்ட சதியாகப் பொதுமக்கள் கருதுகின்றனர்.

கமல் பெருந்தலையின் ஊழியர்தான். பெருந்தலை நிறுவன முதலாளியிடம் வேலைபார்க்கும் தொழிலாளி.  எனவே, தன் மனச்சான்றுக்காகத் தவறுகளுக்கு எதிராகப் பொங்குவதுபோல் நடிக்கிறாரே தவிர நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதற்கான உரிமை இருந்தால்தானே நடவடிக்கை எடுக்க இயலும்! எனவே, மேடையில் தவறு கண்டு பொங்குவதாக நடிக்கிறார். அவ்வளவுதான்!

ஆரியின் செம்மையான பங்கேற்பையும் எதிரியாக எண்ணிச்செயல்படுவோரின் தவறுகளையும் பொதுமக்களே அறிந்திருப்பதாலும் பல தளங்களிலும் சுட்டிக் காட்டியிருப்பதாலும் இங்கே விவரிக்கவில்லை. மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள ஆரிக்கு வெற்றிப் பட்டம் சூட்டாவிட்டால் நடுநிலை அன்பர்களும் ஆரி நேயர்களும் வழக்கு மன்றத்தை நாட வேண்டும். இதுபோன்ற பிற நிகழ்ச்சிகளை விசய் தொலைக்காட்சி ஒளிபரப்பவோ நடத்தவோ தடை பெற வேண்டும்.

வாகை சூடும் ஆரிக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

தனித்திறமையால் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றவர்களுக்கும பாராட்டுகள்!

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.    (திருவள்ளுவர், திருக்குறள் 118)

– இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல 





Thursday, January 14, 2021

உலகெங்கும் பொங்கல் திருவிழா! – இலக்குவனார் திருவள்ளுவன்

     15 January 2021      No Comment




உலகெங்கும் பொங்கல் திருவிழா! 

தமிழர் திருநாள் என நாம் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். பொங்கல் திருவிழா கதிரவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி கூறும் விழா. உழைப்பாளிகளை மகிழ்விக்கும் விழா. அறுவடைத் திருநாளான இவ்விழா உலகெங்கும் பல நாடுகளில் பல்வேறு நாள்களில் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்கா, கனடா,  ஆகிய நாடுகளில் நன்றி தெரிவிக்கும் விழா அட்டோபர் – நவம்பரில் கொண்டாடப்படுகிறது. பிரிட்டனில் செட்டம்பர் முழுநிலவு நாளை ஒட்டிய ஞாயிற்றுக்கிழமை அன்று அறுவடை விழா கொண்டாடப்படுகிறது.

இலையுதிர் இடைக்காலத் திருவிழா அல்லது இடை-இலையுதிர்காலக் கொண்டாட்டம் (Mid-Autumn Festival) என்பது சீனா, வியத்துநாம், தைவான் ஆகிய நாடுகளில் அவர்களது நாட்காட்டியின்படியான எட்டாம் மாதம் முழுநிலவன்று கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகும்.

எபிரேயர்களின் நாட்காட்டியின்படி 7 ஆம் மாதம் – செட்டம்பரின் கடைசி முதல் அட்டோபர் கடைசி வரை – கூடாரத் திருவிழா (Sukkot)/ குடில்கள் விழா (Feast of Tabernacle) எனக் கொண்டாடப்படும் விழாவை அறுவடை விழா என்றே அழைக்கின்றனர்.

மலேசியாவில் உள்ள சரவாக்கு (Sarawak) மாநிலத்திலும் இந்தோநேசியாவில் உள்ள மேற்கு கலிமந்தன் மாகாணத்திலும் (West Kalimantan) உள்ள தயாகர் (Dayak) மக்களால் கொண்டாடப்படும் தயாகர் கயவாய் (Gawai Dayak) விழா மே 31, சூன் 1 ஆகிய நாள்கள் கொண்டாடப்படுகின்றன. இதனை அறுவடைக்கான நன்றியறிவிப்பு விழா என்கின்றனர்.

மலேசியாவில் உள்ள சபா மாநிலத்தில் (state of Sabah) மேத் திங்கள் நடைபெறும் காமடன் (Kaamatan) அல்லது பெசுட்டா காமடன் (Pesta Kaamatan) என்பது அறுவடைத் திருவிழாவாகும்.

கடையவன் விழா (Kadayawan Festival) என்பது பிலிப்பைன்சில் உள்ள தாவோ (Davao) மாநிலத்தில் கொண்டாடப்படும் அறுவடைக்காக இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகும்.

மியான்மியரில் இயோமி (Zomi) மக்களால் கொண்டாடப்படும் கெளதோ (Khuado) விழா என்பது அட்டோபரில் நடைபெறும் அறுவடைத் திருவிழாவாகும். மேப்பூக்கள் விழா (Flores de Mayo) என்பது மேத்திங்கள் பிலிப்பைனில் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகும்.

மெகிரெகன் (Mehregān) அல்லது மித்திரா (Mithra) திருவிழா என்பது பெருசியர்களின் அறுவடைத் திருவிழாவாகும். மெஃகர் திங்களில் (Mehr month) மெஃகர் நாளில் (Mehr day) நடைபெறும் அறுவடையை ஒட்டி இவ்விழா கொண்டாடப்படுகிறது. நடைமுறை ஆண்டில் இது 196ஆவது நாளாக அமைகிறது.

நைசீரியாவிலும் மேற்கு ஆப்பிரிக்காவிலும் வாழும் பழங்குடி மக்கள் இயரபா (Yaraba) அல்லது இயொருபா (Yoruba) எனப்படுகின்றனர். இவர்களின் மொழியில் அறுவடை என்பது இக்கோர் (Ikore) எனப்படுகிறது. அறுவடை நாளை இக்கோர் விழா எனக் கொண்டாடுகின்றனர்.

கானாவில் உள்ள மக்களால் மேத்திங்கள் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழா ஓமோவோ (Homowo) எனப்படுகிறது. கா (Ga) மொழியில் Homo  என்றால் பசி என்றும் wo என்றால் துரத்து என்றும் பொருள். அறுவடையின் பயன் பசியை விரட்டுவதுதானே!

முன்பு சுவாசிலாந்து (Swaziland) என அழைக்கப்பெற்ற எசுவாத்தினி (Eswatini) நாட்டினர் கோடைக்காலத்தில் கதிரவனைப் போற்றிக் கொண்டாடும் முதல் விளைச்சல் விழா இனக்குவாலா (Incwala) எனப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்காவில், குறிப்பாக நைசீரியாவிலும் கானாவிலும், ஈபோ (Igbo) மக்களால் ஆகத்துத் தொடக்கத்தில் கொண்டாடப்படுவது புது இனிப்புருளை விழா (New Yam Festival). யாம் என்பதை இனிப்பு உருளைக்கிழங்கு எனலாம். அறுவடையின் முடிவையும் அடுத்த பயிரிடலுக்குத் தொடக்கத்தையும் சிறப்பிக்கும் வகையில் இந்த  இனிப்புருளை விழா கொண்டாடப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள பழங்குடி இனங்களுள் ஒன்றாகிய இயூலு (Zulu) மக்களால் திசம்பரில் கொண்டாடப்படுவது அறுவடைத் திருவிழாவாகிய சுரைக்காய் விழாவாகும் (உம்கோசி வோக்குவேசுவமா – Umkhosi Wokweshwama). இப்பொழுது இதனை உம்கோசி ஓசெல்வா (Umkhosi Woselwa) என்கின்றனர். முதலில் விளைந்த கனியை இறைவனுக்குப் படைப்பது இதன் சிறப்பியல்பாகும்.

கொரியாவில் சூசெயோக்கு (Chuseok) என அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். அங்காவி (hangawi) எனவும் இதனை அழைக்கின்றனர். வட கொரியாவிலும் தென் கொரியாவிலும் இதனை 3 நாள் விடுமுறை அளித்துச் சிறப்பு விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

தங்கமயேங்கு (Dongmaeng) என்பது கொரியாவில் கூதிர்ப்பருவத்தில் கொண்டாடப்படும் உழவர்களின் பழமையான நன்றி அறிவிப்பு விழாவாகும். நீநமே சாய் (Niiname-sai) அல்லது சிஞ்சோ சாய் (Shinjō-sai) / நீநமேனொ மத்தூரி (Niiname-no-Matsuri) என்று அழைக்கப்படுவது சப்பானியர்கள் கொண்டாடும் அறுவடையின் பொழுதான நன்றி அறிவிப்பு விழா.

முன்பு 11 ஆவது மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்பட்ட இந்த விழா இப்பொழுது நவம்பர் 23 என வரையறுக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. இது தேசிய விடுமுறை நாளாகும்.

துருக்குமெனித்தானில் நவம்பர் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் அசில் தாய் (Hasyl toýy), இசுரேலில் கவ்வெளட்டு (Shavuot), சியார்சியாவில் அலெவெரதோபா (Alaverdoba), இரத்துவெளி (Rtveli), பெலரெசு குடியரசில் (Republic of Belarus) பெகாச்சு (Bagach), சுவிட்சர்லாந்தில் பிரான்சு பேசுவோரிடையே பேனிக்கோன் (Bénichon), நெதர்லாந்தில் நவம்பர் முதல் புதன்கிழமை, பயிருக்கும் உழைப்பிற்கும் நன்றி தெரிவிக்கும் விழா (தனக்கடகு ஊர் இயீவாசு என் அருபெயிடு-Dankdag voor Gewas en Arbeid)  என அறுவடை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

மேலும், போலந்து, உக்கிரெயின், உருசியா, செருமனி, ஆத்திரியா, உருதென்பச்சு (Urdenbach), அல்பேனியா, ஐசுலாந்து, ஐக்கிய இங்கிலாந்து எனப் பல நாடுகளிலும் அறுவடை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

இவ்வாறு உலகெங்கும் அறுவடைத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காரணம் என்னவாக இருக்கும்? உலகம் நிலப்பெயர்வுகளுக்கும் கடல்கோளுக்கும் முன்னர் ஒன்றாகத்தான் இருந்துள்ளது. அதன் பின்னர்தான் இயற்கை அழிவுகளால் சிதறிப்போனது. அவ்வாறு ஒன்றாக இருந்த தொன்மக்கள் கொண்டாடிய அறுவடை விழா, சிதறிய பின்னரும் எச்சமாக அந்தந்த நிலப்பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர் தாய் நிலமான இந்தியத் துணைக்கண்டத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதுபோல் தமிழர் நிலமான இலங்கையிலும் ஈழத்திலும் தமிழர்கள் வாழும் மலேசியா, சிங்கப்பூர், மொரிசியசு, இரீயூனியன், கனடா, ஆத்திரேலியா, முதலிய பல நாடுகளிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தமிழர்களின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடடுக்கூறுகளில் நெருங்கிய தொடர்புடைய இந்தோநேசியா, சப்பான், சீனா, கொரியா, முதலான ஆசிய நாடுகளிலும் பொங்கல் வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

சுரபி (அச்சயதிருதி அல்லது அகுதி அல்லது அகு தீசு எனப்படும்) விழா சித்திரைத் திங்களில் வட மாநிலங்களில் – குறிப்பாக – குசராத்து, மகாராட்டிரம், மத்தியபிரதேசம், இராசசுதான், கோவா, கொங்கன் ஆகிய மாநிலங்களில் இந்துக்களாலும் சமணர்களாலும் கொண்டாடப்படுகிறது.

உலோகரி (Lohri) பஞ்சாபு, தை 13 அன்று அரியானாவில் கொண்டாடப்படும் (கோதுமை) அறுவடைத் திருவிழா.

மாக பிகு (போகலி பிகு /Magh Bihu or Bhogali Bihu) தை 14, 15-இல் அசாமில் கொண்டாடப்படும் நெல் அறுவடைத் திருவிழா. தை மாதம் அசாம் நாட்காட்டியில் மாக (Magh) எனப்படுகிறது. எனவே, இதுவும் தைத்திங்கள் விழாதான்.

நெளகாய் (Nuakhai) அல்லது நெளகாய் பரபு (Nuakhai Parab) அல்லது நெளகாய் பெடகட்டு (Nuakhai Bhetghat) என்பது அசாமில் கொண்டாடப்படும் வேளாண் திருவிழாவாகும். அசாம் நாட்காட்டியின் படியான பத்தரபடா/பத்திரபா (Bhadrapada/Bhadraba) மாதங்களில் அஃதாவது ஆகத்து-செட்டம்பரில் நடைபெறும் விழாவாகும்.

வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக மணிப்பூர் மாநிலத்திலும் குக்கி-சின்-மிசோ (Kuki-Chin-Mizo) குழுவினரிடையேயும் நவம்பர் முதல் நாளன்று கொண்டாடப்படும் அறுவடை விழாவே குடு (Kut) விழாவாகும்.

கருநாடகாவிலும் கேரளாவிலும் உள்ள துளுவ மக்கள் கொண்டாடும் அறுவடை விழா தீபொலி  பரபா (Deepoli Parba).  அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள அபதனி (Apatanis) மக்களால் சூலை 4 முதல் 7 வரை கொண்டாடப்படும் அறுவடை விழா திரி (Dree) எனப்படுகிறது.

மகாராட்டிரா, கருநாடகா, கோவா மாநிலங்களில் உள்ள மராத்தி மக்களால் சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படுவது குடி படவா என்னும் வேளாண் விழா. இப்பொழுது இதைத் தீபாவளிபோல் கொண்டாடுகின்றனர்.

வங்காளத்தில் நபன்னா (Nabanna), கேரளாவில் ஓணம், ஆந்திரம், தெலுங்கானா, கருநாடகாவில் உகாதி, கேரளா, கருநாடகாவில் விசு, மும்பையில் அகெரா (Agera – நன்றி கூறும் ஞாயிற்று விழா), கா பொம்பலாங்கு நாங்கிரீம் (Ka Pomblang Nongkrem) ஆகியன, மேகாலயாவிலும் அசாமிலும் வங்கலா (Wangala), அரியானா, பஞ்சாபில் பசந்து பஞ்சமி (Basant Panchami), இலடாக்கு (Ladakh), இயன்சுகார் (Zanskar), கார்கில் (Kargil) ஆகிய பகுதிளில் இலடாக்கு அறுவடை விழா, பஞ்சாபு, அரியானாவில் பைசாக்கி (Baisakhi) என இந்தியாவெங்கும் அரியானா அறுவடைத் திருவிழா வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன.

முந்தைய நாவலந்தீவாகிய இன்றைய இந்தியாவில் முன்னர் தமிழ் மக்களே பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்தமையால் அறுவடை விழா  இந்நிலப்பகுதி எங்கும் உள்ளது.  எனினும் காலப்போக்கில் அந்நதந்த மாநில அறுவடைக் காலத்திற்கேற்ப அறுவடை விழா  நாள் மாறியுள்ளது. எனவே, பொங்கலின் தாய்நிலம் தமிழ் நிலம் எனலாம்.

இலக்குவனார் திருவள்ளுவன்

தாய் மின்னிதழ் 15.01.2021 10 : 55காலை

 


ShareTweet

Followers

Blog Archive