Thursday, February 28, 2019

படை வீரர்கள் மரணமும் கட்சி அரசியலும் – இலக்குவனார் திருவள்ளுவன்

படை வீரர்கள் மரணமும் கட்சி அரசியலும்

படையில் சேருபவர்கள் தாய் மண்ணைக் காதலிப்பதுடன் இறப்பையும் காதலிக்கிறார்கள். எனவே, போரில் இறப்பு நேரும் என்பதை எதிர்பார்த்து வீர மரணத்தை எதிர்நோக்கியே இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது நடைபெற்ற  புல்வாலா தாக்குதல் போர்ச்சூழலில் நிகழவில்லை; எதிரி நாட்டுடனான  போரின் பொழுது கொல்லப்படவில்லை. எதிரிநாட்டுடன் இணக்கமாக உள்ள    தீவிரவாதிகள் மேற்காண்ட தாக்குதல் இது. எனவே, இது கடுமையான கண்டனத்திற்கு உரியது.
சம்மு காசுமீர் மாநிலத்தில்  புல்வாமா மாவட்டத்தில் இரத்னிபோரா பகுதியில் மத்திய ஆயுதப்படைக் காவலர்கள்(சிஆர்பிஎப்) வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த ஊர்தி வரிசையில்  300 அயிரைக்கல்(கிலோ) எடை கொண்ட வெடிபொருட்களை விளையாட்டுப் பயன்பாட்டு (எசுயுவி)ஊர்தியில் (Sport-utility vehicle) ஏற்றிவந்து மோதச்செய்தனர். இத் தற்கொலைப் படைத்  தாக்குதலில் மோதப்பட்ட ஊர்தியில் இருந்த 44 வீரர்கள் பலியானர்.
தாக்குதல் தொடர்பான நடவடிக்கைகள் ஆளுங்கட்சியின் நலன்சார்ந்ததாக – கட்சி அரசியல் நோக்கில் – பிறர் பார்க்கின்றனர். எனவே, இதை அரசியலாக்க வேண்டா என்கின்றனர். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சி அரசியலாக்குவதாகக் கூறி அவ்வாறு கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றர்.
ஆனால்,  வீணான செலவுச் சுமையை மக்கள் மீது திணிப்பதுடன், வீரர்கள் உயிர்களையுப்  பலி கொடுத்தும் அவர்களின் குடும்பத்தினரைத் துயரத்தில் ஆழ்த்தியும் அரசியல் ஆதாயம் அடைவது ஆளுங்கட்சிகளின் செயல்களாகப் பன்னாடுகளிலும் பார்க்க முடிகிறது. நாம் நம் நாட்டு நிகழ்வுகளைப் பார்ப்போம்.
 முதல் உலகப் போரில் 74,000 இந்தியவீரர்கள் தங்கள் வாழ்வை இழந்தனர். இரண்டாம் உலகப் போரில் 87,000 இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். இவர்கள் தவிர எதிரி நாடுகளால் சிறைவைக்கப்பட்டு இறந்தவர்கள் விவரங்கள் சரியாகத் தெரிவிக்கப்படவில்லை.  
பிற நாடுகள் நலன்கருதி நம் நாட்டு வீரர்கள் போரில் ஈடுபட்டு இன்னுயிர் இழந்தவை யாவும் அரசியலாக்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளன. சிரீமாவோ பண்டார நாயக்காவிற்கு எதிராக உள்நாட்டில் – இலங்கையில் – ஆட்சிக்கவிழப்பு முயற்சிகள் நடைபெற்ற போது இந்திய வீரர்கள் சென்று காப்பாற்றினர். கலவரக்காரர்கள் என்றும் புரட்சிகாரர்கள் என்றும் சொல்லப்பெற்ற 30,000 சிங்களர்கள் இறந்தனர். அப்பொழுது இந்திய வீரர்களும் இறந்தனர். ஆனால், அவ்விவரம் சொல்லப்படவில்லை.
வங்காளத் தேச விடுதலைக்காக ‘முக்தி வாகினி’ என்ற பெயரிலும் வெளிப்படையாகவும் இந்தியப் போர் வீரர்கள் பங்கேற்ற பொழுது பலர் சாவைத் தழுவினர். விவரம் மறைக்கப்பட்டது. 
இலங்கையில்  தமிழர்களுக்கு உதவும் போர்வையில் இந்திய அமைதிப்படைசென்றதே அப்பொழுதும் இந்திய வீரர்கள் இறப்பைத் தழுவினர். தாம்பரத்தில் கூடப் பல வீரர்களின் உடல்களை வானூர்திகளில் கொண்டு வந்து இறக்கினர். ஆனால், வழக்கம்போல் விவரங்கள் மறைக்கப்பட்டன.
ஐ.நா.வின் பன்னாட்டுப் போர்ப்படையில் இந்திய வீரர்களும் உள்ளனர். பல நாட்டுப் போர்களில் இந்திய வீரர்களும் இறந்துள்ளனர். இவ்விவரங்களும்     தெரிவிக்கப்பட வில்லை. இவையெல்லாம் தெரிவிக்கப்பட்டால் வீரர்களின் மீதான கழிவிரக்கம் அரசின் மீதான வெறுப்பாக எதிர்ப்பாக மாறும் என்ற அச்சத்தால் சொல்லப்படவில்லை.
மேற்குறித்த நிகழ்வுகளில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டால் மக்கள் உணர்வுகள் அரசிற்கு அதிராகத் திரும்பும் என்ற அச்சமே ஆள்வோருக்கு இருந்தது.
அதே நேரம் மக்களின் துயர உணர்வும், நாட்டைக் காக்கும் உணர்வில் ஏற்படும் எழுச்சியும் ஆளுங்கட்சிக்குச் சார்பாக மாற்ற எண்ணும்பொழுது அரசால் அரசியலாக்கப்படும் என்பதே உண்மை.
வீரர்கள் இறந்த செய்தி அறிந்த பொழுதும் தலைமையர் ஆவணப்படப்பிடிப்பை  நிறுத்தாமல் தொடர்ந்து இருந்தைமையாலும் முன்னரே உளவுத்துறை எச்சரித்திருந்ததாலும் அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசு கண்டுங்காணாமல் இருந்துவிட்டதோ என்ற அச்சம் பலதரப்பாரிடம் உள்ளது.
இதைப்பற்றி மிகுதியாகச் சொன்னால் நாட்டுப்பகைவர் என்ற முத்திரை குத்தி செய்தியை மறைக்கப் பார்ப்பர் என்ற அச்சமும் எதிர்த்தரப்பாரிடம் உள்ளது.
எல்லா நாடுகளிலும் அவரவர் நாட்டு வீரர்கள் இறந்தால் வீரமரணம் என்பதும் எதிரி நாட்டு வீரர்கள் கொல்லப்பட்டால் கொக்கரிப்பதும் வழக்கமாக உள்ளது. ஆனால், எல்லா உயிர்களும் சமமே! உயிரிழப்புகள் தடுக்கப்பட போரில்லா பெருவாழ்வு தேவை.
எல்லா நாட்டு மக்களுக்கும் எதிரிகளைச் சிக்கலின்றி அணுகும் முறையும் அறவழியில் தீர்வு காணும் முறையும் கற்பிக்கப்படவேண்டும். மண்ணாசையும் தலைமைத்துவ அதிகார வெறியும் நீக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் போர் ஒழியும். அந்தச் சூழலில் இத்தகைய விலைமதிப்பற்ற உயிர்கள் அழிவதும் தடுக்கப்படும்.
  போரில் மடியும் வீரர்களை விட  அல்லலுறும் வீரர்களின் குடும்பத்தினர், மனச் சிதைவிற்கு ஆளாவோர், போதிய கல்வியை இழப்போர், வேண்டிய வளர்ச்சியை இழப்போர் மிகுதி. போர்களினால் பெண்களும் சிறுவர் சிறுமியரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே, போரில்லா உலகை அமைக்க எல்லா நாட்டுத் தலைவர்களும் முன் வர வேண்டும்.
பெரும் உலகப்போர் ஏற்பட்டு உலகமே அழியும் நிலை வராமல் இருப்பதற்காகவாவது அனைத்து நாடுகளும் குறள் நெறியைப் பின்பற்றித் தாக்குதல்களும் எதிர் எதிர்த் தாக்குதல்களும் போரில் கொண்டுபோய் முடிக்காதிருக்கப் பாடுபட வேண்டும்!
தற்கொலைப் படையாள் தாக்குதலில் உயிர் இழந்த காவலர்களுக்கு வீர வணக்கங்கள்!
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து (திருவள்ளுவர், திருக்குறள் 777)

இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல 

Monday, February 25, 2019

நரேந்திரரின் பாக்கித்தான் மொழி பேசுநரைக் கண்டிக்கும் பேச்சு நாட்டைப் பாழ்படுத்தும்! இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

 நரேந்திரரின் பாக்கித்தான் மொழி பேசுநரைக் கண்டிக்கும் பேச்சு நாட்டைப் பாழ்படுத்தும்!

 இரு நாள் முன்னர், இராசசுதான் மாநிலத்தில் தோங்கு (Tonk ) தொகுதியில் தேர்தல் பரப்புரையில் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர(மோடி) கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவர், இந்தியாவில் இருந்து கொண்டு சிலர் பாக்கித்தான் மொழியில் பேசுவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இச்செய்தியை எல்லா ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. ஆனால் இப்பேச்சின் தீய நோக்கத்தை யாரும் கண்டிக்க வில்லை.
பாக்கித்தானில் பாக்கித்தான் மொழி என ஒன்றும் கிடையாது. அங்கே உள்ள பல மொழிகளில் பஞ்சாபி, பசுதூ(Pashto), சிந்தி, சராய்கி(Saraiki), உருது, பலூச்சி(Balochi) ஆகியன முதன்மை மொழிகளாகும்.
பாக்கித்தான் மொழி என்றால் உருது என எண்ணி நரேந்திரர் அவ்வாறு பேசியுள்ளார். இந்த அறியாமை மிக்கவர்தான் நம் நாட்டை வழி நடத்துகிறார் என்பது கொடுமையான ஒன்றாகும். இவர் மீண்டும் வந்தால் அதைவிடக் கொடுமை வேறு இல்லை.
அத்துடன் நிறுத்தவில்லை. பாக்கித்தான் மொழி பேசுவோர் தனக்கு எதிராகச் சதி செய்வதாகவும் பேசியுள்ளார். தனக்கு எதிராக எதிர்க்கட்சியினர் சதி செய்வதாகக் கூறியிருந்தால், எதிர்க்கட்சியினர் போராட்டங்களை அவ்வாறு கூறுகிறார் எனக் கருதலாம். அல்லது பொதுமக்களில் ஒரு பகுதியினர் சதி செய்வதாகக் கூறியிருந்தாலும், பண மதிப்பிழப்பு போன்ற இவரது திட்டங்களால் மக்களிடையே ஏற்பட்டுள்ள எதிர்ப்பைக் கூறியிருப்பதாக எண்ணலாம். அல்லது உட்கட்சியில் சதி இருப்பதாகப் பேசியிருந்தாலும்  தவறில்லை. இந்த அச்சத்தின் வெளிப்பாடுதான் அவரது பேச்சு. தன்னைப் பதவியில் இருந்து துரத்த சிலர் முயல்கிறார்கள் என்ற கவலையே அவரை இவ்வாறு பேச வைத்துள்ளது. ஆனால், பாக்கித்தான் மொழி பேசுவோர் என்று குறிப்பிட்ட மொழி பேசுபவர்களையும் அவர்கள் சார்ந்த சமயத்தையும்  – மதத்தையும் – கூறுவது நாட்டிற்கே கேடு நல்கும் அல்லவா?
பாக்கித்தானில மிகுதியாகப் பேசப்படும் மொழி பஞ்சாபியாகும்.  2008 கணக்கெடுப்பின்படி  ஏறத்தாழ  47.17 % பேர் பேசுகின்றனர். அடுத்ததாகப் பசுதூ மொழியை 15.44 %  மக்கள் பேசுகின்றனர்.
சராய்கி மொழியை 10.42 % மக்கள் பேசுகின்றனர். ஐந்தாவதாகப் பேசப்படும் உருது மொழியைப் பேசுவோர் 7.59%தான். ஆனால், பாக்கித்தானில் உருது மொழி மட்டும் பேசுவதாக எண்ணிப் பேசியுள்ளார் போலும். அல்லது உண்மை தெரிந்துதான் அவ்வாறு பேசினார் என்றால், உள்நோக்கம் கொண்ட தீவினைப் பேச்சாகும்.
உருது பாக்கித்தான் மொழி மட்டும் அல்ல. இந்தியாவின் அரசமைப்புச்சட்டப்படி அரசின் கரும மொழிகளுள் உருதும் ஒன்று. இந்தியாவில் 5.74 % மக்கள் தாய்மொழி உருது ஆகும்.
உருது பேசுவோர் எண்ணிக்கை இப்பொழுது 7.0 கோடி ஆகும்.
இந்தியாவில் பஞ்சாபி பேசுநர் 3.3 கோடி; சிந்தி மொழி பேசுநர் 2.77 கோடி
அப்படியானால் பாக்கித்தானில் வழங்கும் முதன்மை மொழிகளைப் பேசும் 13 கோடி இந்திய மக்களையும் அவற்றைப் பேசக் கூடாது என்கிறாரா? இந்தியக் குடிமக்கள் தங்கள் தாய் மொழிகளை, அதுவும் அரசமைப்புச் சட்டத்தால் ஏற்கப்பெற்ற தாய்மொழிகளைப் பேசுவதைக் கண்டிப்பதை  யாரும் கண்டிக்காதது ஏன்? அவர் பேச்சிற்கு முதன்மை தரவில்லையா? தேர்தல் வெற்றிக்காக இந்துக்கள் வாக்குகளைப் பெறுவதற்காக இப்படிப் பேசினால் இந்துக்கள் வாக்குகளும் கிடைக்காமல் போய்விடும் என்பதை அவர் உணர வேண்டும்.
அவர் போற்றும் இந்தி, இந்துத்தானிக்கும் உருதுக்கும் உள்ள தொடர்பை அவர் அறிவாரா? அப்படி என்றால் உருது கலந்த இம்மொழிகளையும் விரட்டி விடலாமே!
உருது பாக்கித்தான் நாட்டுமொழி மட்டுமல்ல. ஆப்கானித்தான், பஃகுரைன்(Bahrain), வங்காளத்தேதசம், போதுசுவானா (Botswana), பிசி(Fiji), செருமனி, கயானா(Guyana), இந்தியா, மலாவி(Malawi), மொரீசியசு(Mauritius), நேபாளம், நார்வே,  ஓமன், கத்தார் (Qatar), சவூதி அரேபியா (Saudi Arabia), தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து,  ஐக்கிய அரபு அமீரகம்(United Arab Emirates), ஐக்கியப் பேரரசு(United Kingdom), ஐக்கிய அமெரிக்கா, சாம்பியா(Zambia) நாடுகளிலும் உருது மொழி பேசுநர் உள்ளனர்.
உருது மொழி பேசுவோரைக் கண்டிக்கிறார் என்றால் அதனைத் தாய்மொழியாகவும் பேசுமொழியாகவும் கொண்ட இசுலாமியர்களைக் கண்டிக்கிறார் என்றுதான் பொருள். தேர்தல் நேரத்தில் மத வெறியைத் தூண்டும் வகையில் பேசுவது முறைதானா?
ஒரு வேளை தன் தாய் அமைப்பு தனக்கு மாற்றாக ஒருவரைத் தேடுவதால் தன்னை நிலைப்படுத்த இப்படிப் பேசுகிறாரா என்றும் தெரியவில்லை. நோக்கம் எதுவாயினும் பேசியது மிகப்பெரும் தவறு. அதற்கு அவர் வருத்தத்தைத்தெரிவித்து நற்பண்பை நிலை நாட்ட வேண்டும்.
உலகின் பல பகுதிகளில் பேசப்படும் மொழியாக உருது உள்ளதால் அந்த நாடுகளின் பகையை இந்தியாவிற்குத் தேடித் தரும் செயலாக இஃது அமையுமல்லவா? ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் அணிசேரா நிலையையும் வலியுறுத்தும் இந்திய அரசு இவ்வாறு தடம் புரள்வது நாட்டிற்கு நல்லதல்ல. தேர்தல் ஆணையம் இதுபோன்ற பேச்சுகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.
எனவே, பாசகவில் உள்ள கற்றறிந்தவர்கள், பாக்கித்தான் மொழி என்றால் என்ன என்பதையும் அவரது பேச்சு மொழி வெறி, மத வெறி தூண்டுதலாக அமையும் என்பதையும் விளக்குங்கள்.
வெற்றி பெற வேண்டும் எனக் கடுமையாக உழைக்கும் மாண்புமிகு நரேந்திர(மோடி)அவர்களே!
“நுணலும் தன் வாயால் கெடும்” என்னும் தமிழ்ப்பழமொழியினை உணருங்கள்! இந்தியத் துணைக்கண்டத்து ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் சொல்லாலும் எழுத்தாலும் செயலாலும் நிலையான வெற்றி காணமுடியாது என்பதை உணருங்கள்!
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.(திருவள்ளுவர்,திருக்குறள் 127)
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல 

Saturday, February 23, 2019

சிக்காகோ: உள்ளூர் உரையங்கமா? உலகத்தமிழ் மாநாடா? – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

சிக்காகோ: உள்ளூர் உரையங்கமா?உலகத்தமிழ் மாநாடா?

10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடும்  32ஆவது பேரவை-சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழாவும் வருகின்ற ஆனி – 19-22, தி.பி. 2050 / சூலை 2019 – 4 முதல் 7 ஆம் நாள்களில் அமெரிக்கா(சிக்காகோ)வில் நடக்க இருக்கிறது.  கருத்தரங்க அமைப்பாளர்கள் இது குறித்த அறிவிப்பைப் பரவலாக விளம்பரப்படுத்தி யுள்ளனர்.
பெதுவாக, ‘அகரமுதல’ இதழில் எக்கருத்தரங்கம் அல்லது மாநாடு குறித்துச் செய்தி வெளியிட்டாலும் நானும் அதன் பொறுப்பாளர்களில் ஒருவன் எனத் தவறாகக் கருதி விளக்கங்கள், விவரங்கள் கேட்பவர் பலர் உள்ளனர். இவ்வுலகத் தமிழ் மாநாடு குறித்து அகரமுதல இதழில் வெளியிட்டுப்பிற தளங்களில் பகிர்ந்ததும் பலரும் வினவினர்.  எனினும் அனைவரும் “இம்மாநாட்டிற்குக் கட்டுரைகள் அளிக்கலாமா, பங்கேற்கலாமா” என்றுதான் கேட்டனர். “இதனை நடத்தும் அமைப்பு விளம்பரப்புகழ் உள்ளவர்களைத்தானே பங்கேற்க அழைப்பர். நாம் கலந்து கொள்ள இயலுமா” என்றும் கேட்டனர். “இதற்கு முன்னர் விழாக்கள்நடத்தினர். நன்கொடை நோக்கில் அவ்வாறு செய்திருக்கலாம். இம்முறை மாநாடு என்பதால் கட்டுரைகள் அடிப்படையில் தெரிவு செய்வர். எனவே, கட்டுரைகள் அனுப்பலாம்” என்றேன். அதற்கிணங்கப் பலரும் கட்டுரைகள் அளித்தனர்.
இருவர் மட்டும் “பார்வையாளராகக் கலந்து கொள்ளலாமா” எனக் கேட்டனர். கட்டுரையாளர்களுக்குப் பதிவுக் கட்டணம் இல்லை எனவும் பார்வையாளர்களுக்குக் கட்டணம் என்றும் சில கருத்தரங்கங்களில் தெரிவிப்பர். இதில் பார்வையாளர்களுக்குரிய பதிவு முறை குறித்துத் தளத்திலேயே காணுமாறும் அமைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்தேன்.
மாநாட்டினர், உள்ளூர் விருந்தோம்பலை ஏற்றுக் கொண்டது அறிந்து  கட்டுரையாளர்கள் மகிழ்ந்தனர். ஆதலின் பரவலாகக் கட்டுரையாளர்கள் பங்கேற்றனர்.
 500 கட்டுரைகள் வந்த பின்னரும் கூட ஆய்வாளர்கள் கட்டுரைகளை அனுப்புமாறு அறிவிப்புகள் வந்துள்ளன.   அடுத்து மிகுதியான கட்டுரைகள் வந்துள்ளமையால் முடிவு தெரிவிக்க நாளாகும் என்றனர். ஆனால், இப்பொழுது கட்டுரையாளர்களுக்குப் பின்வருமாறு மடல்கள் அனுப்பியுள்ளனர்.
இருப்பினும், உங்கள் ஆய்வுச்சுருக்கம் சிறந்த ஆய்வின் அடிப்படையைக் கொண்டதாகத் தெரிவதால், உங்கள் ஆய்வினைத் தொடர்ந்து  செய்து கட்டுரையாக எழுதும்படி உங்களை ஊக்குவிக்கின்றோம்.  முடிந்த ஆய்வுக் கட்டுரையினை, ஏப்பிரல் 30, 2019 ஆம் தேதிக்குள் எங்களுக்கு கிடைக்கும்படி  அனுப்ப வேண்டுகிறோம். உங்கள் ஆய்வுக்கட்டுரை மாநாட்டின்  மையக்கருத்திற்கு ஏற்புடையதாக இருக்குமானால் அதைத்  தேர்ந்தெடுத்துமாநாட்டின் கட்டுரைத்  தொகுதியில் வெளியிட விரும்புகிறோம்இத்தொகுதி, எதிர்காலத் தமிழ் ஆய்விற்கும், இனி வரும் மாநாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
அல்லது
இருப்பினும், உங்கள் ஆய்வுச்சுருக்கம் மாநாட்டின் மையக்கருத்துக்கு ஒத்திருக்குமானால் அதை நாங்கள் மாநாட்டின் ஆய்வுச்சுருக்கத் தொகுதியில் வெளியிடலாம்; அது வருங்கால ஆய்வுக்குப் பயன்படக்கூடும்.
1200 கட்டுரைகள் வந்ததாகவும் அவற்றில் 200 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் வடிகட்டி 100 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. சிலர், கட்டுரை தெரிவு  பொறுப்பாளர்களுக்குப் பேசி, “எங்கள் சொந்தப் பணத்தில் வரும் பொழுது ஏன் இந்தக் கட்டுப்பாடு” என வினவியுள்ளனர். “நாங்களும் இதைத்தான் கேட்டோம். ஆனால், 100 கட்டுரையாளர்களுக்கு மட்டும்தான் வசதி ஏற்படுத்தித்தர இயலும் என்பதால் அதற்குமேல் தெரிவு செய்ய இயலவில்லை” என்றனர். சிலர், தத்தம் கட்டுரை தெரிவின்மை குறித்துக் கேட்டதற்கு வெவ்வேறு நாடுகளுக்குக் கட்டுரைகள் அனுப்பித் தெரிவு செய்துள்ளனர் என்றும் தங்களுக்கு வரவில்லை என்றும் தெரிவித்தனர்.
“பல்கலைக்கழகத் துறைத்தலைவர் ஒருவரிடம் உங்கள் பொறுப்பிற்காகவாவது உங்கள் கட்டுரைகளைத் தெரிவு செய்வர்” என்று கூறியிருந்தேன். அவர் பேசி, “என் கட்டுரையையும் தேர்ந்தெடுக்கவில்லை” என்றும்  இருவர் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் பல்கலைக்கழகத்தில் மாணாக்கர்களிடம் கொடுத்துத் திருத்தியதாகக் கூறப்படுவதாகவும் தெரிவித்தார். “தேர்வுத் தாள்களை அவ்வாறு திருத்துவது உண்டு. இவ்வாறு இப்பொழுது நடந்திருக்காது” என்றே தெரிவிததேன். கட்டுரைகள் தெரிவு செய்யப்பெறவில்லை என்றதும் இப்படிப்பட்ட செய்திகள் இறக்கை கட்டி உலா வருகின்றன.   
கட்டுரையாளர் சிலர் தமிழ்நாட்டரசு 5 கோடி உரூபாய் நன்கொடை தந்துள்ளதாகவும் அவ்வாறிருக்க அயல் நாட்டினர்களுக்கும் குழு உறுப்பினர்களுக்கும் முதன்மை அளித்துத்  தமிழக ஆய்வாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன் என்றும் வினவினர். “அரசிடம் நன்கொடை கேட்டுள்ளனர். எவ்வளவு கேட்டுள்ளனர் எனத் தெரியாது. தமிழக அரசு நன்கொடை தருவதாக இருந்தாலும் கருத்தரங்க நேரத்தில்தான் தருவர். கடந்த முறை அயல்நாட்டில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றிற்குத் தமிழ்வளர்ச்சி அதிகாரிகள்கூடச் சொந்தச் செலவில்தான் போக வேண்டும் எனக் கூறி நன்கொடை தரவில்லை. எனவே, வீண் புரளிகள் குறித்து எதுவும் பொருட்படுத்தாதீர்கள்” என்றேன்.
ஆய்வாளர்களும் அறிஞர்களும் தொடுக்கும் வினாக்கள் இவைதாம்:
 1. உலகெங்கிருந்தும் வரும் பேராளர்களின் எண்ணிக்கைய அறியாமல் ஏன் உலகத்தமிழ் மாநாடாக அறிவிக்க வேண்டும்?
 2. சிலர் தத்தம் பகுதி அளவில் கருத்தரங்கங்கள் நடத்தி உரிய தகவலை மட்டும் அறிவிப்பார்கள் அல்லது அதைக்கூடப் பிற பகுதியினருக்குத் தெரிவிக்க மாட்டார்கள். அல்லது பிற பகுதிகளில் கட்டுரைகள் மட்டும் கேட்டு மலரில் வெளியிடுவர். அவ்வாறு சுருக்கமாகக் கருத்தரங்கததை நடத்தியிருக்கலாமே!
 3. குறைவான வசதியே இருக்குமெனில் அதற்கேற்ப உள்ளூர் அல்லது உள்நாட்டு அளவில் கருத்தரங்கத்தை நடத்தியிருக்கலாமே !
 4. 100 பேர் பங்கேற்கு வகையில் சிறிய உரையங்கம் என்றால் எதற்கு உலகளாவிய விளம்பரம்? நன்கொடை திரட்டவா?
 5. 100 பேர்தான் பங்கேற்க இயலும் என்றால் எதற்கு இடையில் 500 கட்டுரைகள் வந்ததாகத் தெரிவித்து மேலும் கட்டுரைகளை வரவேற்க வேண்டும்?
6. “உங்கள் ஆய்வுச்சுருக்கம் சிறந்த ஆய்வின் அடிப்படையைக் கொண்டதாகத் தெரிவதால்” எனக் குறிப்பிடுவோர், ஏன் கட்டுரையை மறுக்க வேண்டும்? இந்தப் பூச்சு வேலை எதற்கு?
 1. உலக மாநாடுகள் என்ற பெயரில் நன்கொடை திரட்டவும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவும் சில மாநாடுகள் நடைபெறுகின்றன. இவற்றால் அயல்நாட்டு மாநாடுகள் என்றாலே தமிழக ஆய்வாளர்களுக்கு எரிச்சல் வந்து பங்கேற்பதில்லை. அவ்வாறு இருக்காது என்ற நம்பிக்கையை அளித்து ஆனால், இம்மாநாடும் கருத்தரங்கம் தொடர்பான குழுவினர் பங்கேற்கும் நிகழ்வுதான் என ஆர்வலர்களை ஏமாற்றியிருப்பது ஏன்?
கருத்தரங்கம் தொடர்பான குழுக்களின் உறுப்பினர்கள், தோழமை அமைப்புப்பொறுப்பாளர்கள் எண்ணிக்கையே 100 ஐத் தாண்டும் எனத் தெரிகிறது. இவர்களுக்காகத்தான் மாநாடு என்றால் உலக மாநாடாக அறிவித்து விருந்தோம்பலுக்காக நன்கொடைகள் ஏன் திரட்ட வேண்டும்?
இது போன்ற வினாக்களுக்கு விடையிறுக்கத் தகுதியானவர்கள் மாநாட்டுப்பொறுப்பாளர்கள்தாம். எனவே, ஆராய்ச்சியாளர்கள் தொடுக்கும் வினாக்களை அவர்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.
மாநாடு அல்லது கருத்தரங்கம் நடத்துவோர் இனியேனும் வசதி வாய்ப்புகளைத் திட்டமிட்டு அதற்கேற்ப நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்ளட்டும்.
நிகழ்ச்சி அமைப்பு முறையும் பரவலான விளம்பரமுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. இனியேனும் மாநாட்டு விவரங்களைப் பொதுவில் வைக்க வேண்டா. உங்களுக்குள் தெரிவித்துக் கொண்டு சிறப்பாக மாநாட்டை நடத்த வாழ்த்துகள்
தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர் (திருவள்ளுவர், திருக்குறள் 464)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Friday, February 22, 2019

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 11-20 -இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல,

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 11-20

(குறள்நெறி)

 1. உலகிற்கு நலம் பயக்கும் மழையே அமிழ்தம் என அறி!
 2. உணவை உருவாக்குவதும் உணவாவதும் மழையே என உணர்!
 3. மழை பொய்த்தால் பசி உலகத்தவரை வாட்டும் என உணர்!
 4. மழை இல்லாதுபோனால் உழவரும் உழார் என அறி!.
 5. கெடுப்பதும் கொடுப்பதும் மழையே என்பதை உணர்!
 6. மழைத்துளி இல்லையேல் புல் பூண்டும் இல்லை என அறி!
 7. கடல்நீர் மழையாக மாறாவிடில் கடல் வளமும் குறையும் என உணர்!
 8. வானம் வறண்டால் வானவர்க்கும் பூசை இல்லை என்பதை அறி!
 9. வானம் வழங்காவிடில் தானமும் தவமும் இல்லை என உணர்!
 10. நீரின்றி உலகமும் வான் மழையின்றேல் ஒழுக்கமும் இல்லை என உணர்!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

தாய்மொழி நாளுக்கு வாழ்த்திய முதல்வருக்குப் பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தாய்மொழி நாளுக்கு வாழ்த்திய முதல்வருக்குப் பாராட்டுகள்!

உலகத்தாய்மொழி நாளை முன்னிட்டுத் தமிழக முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி இம்முறை வாழ்த்துச் செய்தி அளித்துள்ளார். உண்மையிலேயே இது வரவேற்க வேண்டிய ஒன்றாகும். இம்முறை ஊடகங்களிலும் உலகத் தாய்மொழி நாள் குறித்த கட்டுரைகள், பேச்சுகள் தமிழின் சிறப்பை உணர்த்தும் வகையில் இடம் பெற்றுள்ளன. பல்கலைக்கழகங்கள், அரசு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், தமிழ் அமைப்புகள் சார்பில் உலகத்தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டுள்ளது. இஃது ஒரு வளர்நிலையாகும்.  எனவே அதற்கு முதல்வரும்  வாழ்த்துச் செய்தி அளித்துள்ளது தாய்மொழி நாள் மகிழ்ச்சிக்கு மகுடம் சூட்டுவதாக உள்ளது.
தாய் மொழி நாளுக்கு வாழ்த்திய முதல்வருக்குப் பாராட்டுகள்! எனவே, தமிழக முதல்வர் விளம்பரத்திற்காக அல்லாமல் உள்ளத்திலிருந்து எழுந்த வாழ்த்துணர்வு என்பதை மெய்ப்பிக்கவும் தமிழ் நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளதைக் காட்டவும் பின்வருமாறு செயல்பட வேண்டுகிறோம்.
1.நாட்டுமக்களுக்கு முன்னோடியாகத் திகழ்வதற்காக அமைச்சரவையினரும் அரசும் முன்முறையாகத் திகழ வேண்டும். எனவே, அனைவரது பெயர்களில் முன் எழுத்து அல்லது முன் எழுத்துகளைத்  தமிழிலேயே குறிக்க வேண்டும்.
 1. அமைச்சர்கள் பெயர்கள் கிரந்த எழுத்துகளின்றிக் குறிக்கப்பெற வேண்டும்.
 2. அமைச்சர்களின் ஊர்திகளின் எண்கள் அரசாணைக்கிணங்கத் தமிழில் குறிக்கப் பெற வேண்டும்,
 3. அமைச்சர்களின் குடும்பத்தினரின் பிள்ளைகள், அரசுப் பள்ளிகளிலும் தமிழ் வழியிலும் சேர்க்கப்பட வேண்டும்.
 4. மடலேடுகளில் தலைப்பில் தமிழ் உரு முத்திரைகள் மட்டுமே இடம் பெற வேண்டும்.
 5. தலைமைச்செயலகம் எனக் குறிக்காமல் ‘செயிண்ட் சார்சு கோட்டை’ எனக் குறிக்கப் பெறுவது நிறுததப்பட வேண்டும்.
 6. முதலமைச்சர், அமைச்சர்கள் கையொப்பங்கள், சுருக்கொப்பங்கள் யாவும் தமிழிலேயே இருக்க வேண்டும்.
 7. பதவிப் பெயர், அலுவலகப் பெயர்  முத்திரைகள் யாவற்றையும் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும்.
 8. தமிழ் வளர்ச்சி தொடா்பான அரசாணைகள் அனைத்தையும் முதலமைச்சர், அமைச்சர்கள் யாவரும் பின்பற்ற வேண்டும்.
 9. அனைத்துத் துறைகளிலும் தமிழ் முழுமையாகப் பயன்படுத்தப் பெற அமைச்சர்களே நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 10. உலகத் தாய்மொழி நாளை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். சித்திரை நாளில் வழங்கும் விருதுகள் இவ்வாண்டில் மாசியிலேயே/ பிப்பிரவரியிலேயே வழங்கப்பட்டுள்ளன. இனி அதே பிப்பிரவரியில் இடம் பெறும் உலகத்தாய்மொழி நாளில் அவ்விருதுகள் வழங்கப் பெற வேண்டும்.
 11. பாட நூல்களில் தமிழுக்காக உயிர் நீத்தவர்கள், சிறை சென்றவர்கள்பற்றிய பாடங்கள் இடம் பெற வேண்டும்.
 12. தமிழ்ப்புலவர்களுக்கு உரிய மதிப்பு கொடுத்து ஆண்டுதோறும் சிறப்பிக்க வேண்டும்.
 13. மொழிப்போர் வரலாறு பாட நூல்களில் இடம் பெற வேண்டும்.
 14. ஆங்கிலக் கல்விக்கு வரவேற்புப் பா பாடுவது நிறுத்தப்பட வேண்டும். எல்லா நிலைகளிலும் தமிழ்வழிக்கல்வியே திகழ உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 15. தனியார் அலுவலகங்கள் அயல்மொழி நிறுவனங்கள் என்ற வேறுபாடு இராமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அலுவலகங்கள் நிறுவனங்கள் யாவற்றிலும் தமிழே அலுவல் மொழியாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 16. உலக நாட்டுத் தூதரகங்களில் தமிழ் அறிந்தவர் ஒருவராவது இருக்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 17. அயல்நாட்டுத் தூதர்களில் பத்தில் ஒருவராவது தமிழராக இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 18. தமிழ்நாட்டுக் கல்வியகங்களில் இப்போதைய முறையிலான அயல்மொழிக்கல்வி முறை நிறுத்தப்பட வேண்டும். 6 ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் கற்பிக்கப்பட்டால் போதுமானது. 3 ஆவது மொழி என்பது பிற மொழியினருக்கு மட்டுமே இருக்க வேண்டும். எனவே, கல்வி நிலையங்களில் எந்த வகையிலும் இந்தி, சமக்கிருதத் திணிப்பு இல்லாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 19. நவோதயா பள்ளிகளுக்குரிய முழுத் தொகையையும் தமிழக அரசேபெற்று முழுமையான தரமான தமிழ்வழிக்கல்வி நிலையங்களாகச் செயல்பட ஆவன செய்ய வேண்டும்.
 20. மத்திய அரசின் திட்டம் எதுவாயினும் தமிழ்ப்பெயரில்தான் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப் பட வேண்டும்.
 21. மத்திய அரசின் திட்டங்களில் பத்தில் ஒன்றுக்காவது தமிழ்ப்பெயர் சூட்டப்பட வேண்டும்.
 22. முதல்வர் தலைமையில் இயங்கும் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை உருப்படியாகச் செயல்படச் செய்து அதன் மூலம் அயல்மாநில, அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் செந்தமிழ் கற்பிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 23. முதல்வரை அதன் நெறியாளர் என மாற்றித் தமிழறிஞர்கள் தலைவராக இருக்கும் வண்ணம் செம்மொழித் தமிழாய்வு நிறுவன விதிமுறையை மாற்ற வேண்டும்.
 24. கொச்சைத் தமிழையும் கலப்புத் தமிழையும் பயன்படுத்தும் ஊடகங்கள் தடை செய்யப்பட வேண்டும்.
 25. உரிமம் கொடுத்தல், பதிதல் முதலான தொடக்க நிலை விண்ணப்பங்களிலேயே வணிக நிறுவனங்களின் பெயர்கள், திரைப்பட நிறுவனங்களின் பெயர்கள், திரைப்படங்களின் பெயர்கள் தமிழில் உள்ளனவா எனக் கேட்டுஅவ்வாறிருந்தால் மட்டுமே இசைவு தர வேண்டும்.
 26. வழிபாடு என்றால் தமிழ் வழிபாடுதான் என்னும் நிலையைச் செயற்படுத்த வேண்டும்
 27. இசை என்றாலும் கலை என்றாலும் தமிழ்தான் என்னும் நிலையை உருவாக்கிட வேண்டும்.
 28. தமிழில் தமிழ்க்கையொப்பங்களுடன் உள்ள பட்டியல்கள், ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், ஆணைகள் முதலானவை மட்டுமே செல்லத்தக்கன என அறிவித்தால் போதும். தமிழ் ஆட்சி மொழிச் செயலபாடு முழுமை யடையும்.
 29. தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் வழங்கப்படும் விருதுகள், நிதி யுதவிகள் ஆகியவற்றைத் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் வழங்கச் செய்ய வேண்டும்.
 30. மாவட்டந் தோறும் மாவட்ட நீதிபதிகள் தலைமையில் தமிழ்ச் செயலாக்க ஆணையம் அமைக்க வேண்டும். இதன் மூலம் தமிழ் ஆட்சிமொழியைக் கண்காணிக்கவும் நெறிப்படுத்தவும் முடியும்.
 31. எனவே, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தை மூட வேண்டும்.
தலைமையின் சரியான செயலோட்டம் அடிமட்டம் வரை பாயும் அல்லவா? எனவே, இனியேனும் தமிழ்நாடு தமிழ் வழங்கும் நாடாகத் திகழத் தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன்  வேண்டுகிறோம்.
 ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
(திருவள்ளுவர், திருக்குறள் 673)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல

Followers

Blog Archive