Saturday, February 28, 2015

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு : 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

thamizh-type-writer01
[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்
2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல்
“தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்”
என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில்
வாசிக்கப் பெற்ற கட்டுரை.]
தட்டச்சுப் பொறி:-
            1961ஆம் ஆண்டு வெளியான அரசின் குறிப்பாணை ஒன்றின்படி “மாவட்ட ஆட்சியர்களும் துறைத் தலைவர்களும் இசைந்ததற்கு இணங்க ஒரே ஒர் ஆங்கிலத் தட்டச்சுப் பொறி உள்ள அலுவலகங்கள் அத்தட்டச்சுப் பொறியை 31.3.63 வரை வைத்துக் கொள்ளலாம். பெரிய அலுவலகங்கள் ஒர் ஆங்கிலத் தட்டச்சுப் பொறியை ஒப்படைத்துவிட்டு இரண்டு தமிழ்த் தட்டச்சுப் பொறிகளைப் பெற்றுக் கொள்ளலாம்” அடுத்துவந்த ஆணையின்படி எச்சார் நிலை அலுவலகத்திலும் ஆங்கிலத் தடச்சுப் பொறி இருக்கக் கூடாது. மாவட்ட நிலை அலுவலகங்களில் மட்டும் மொத்தப் பொறிகள் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கிற்கு மிகாத அளவு ஆங்கிலத் தட்டச்சுப் பொறி இருக்கலாம்: பிறவற்றை எழுதுபொருள் அச்சுத் துறையிடம் ஒப்படைத்து மாற்றுத் தமிழ்த் தட்டச்சுப் பொறிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர், விதிகளுக்கிணங்க ஆங்கிலத் தட்டச்சுப் பொறியை ஒப்படைக்க வேண்டியவர்கள் ஒப்படைக்காமல் இருந்தால் எழுதுபொருள் வழங்கப்படமாட்டது என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
            இருப்பினும் பல அலுவலகங்களில் ஆங்கிலத் தட்டச்சுப் பொறிகள் ஒப்படைக்கப்படாமல் உள்ளன என்பது மட்டுமல்ல; ஆங்கிலத் தட்டச்சுப் பொறிகள் ஒப்படைக்கப்பட்ட அலுவலகங்களில் கூடத் ‘தனிப்பட்ட முறையில்’, ‘நன்கொடை முறையில்’,   ‘வாடகை முறையில்’ என்ற ஏதேனும் ஒரு பெயரில் ஆங்கிலத் தட்டச்சுப் பொறிகள் இருக்கத்தான் செய்கின்றன. முழுமையும் தமிழ் பயன்படுத்தப்படும் சூழலை உருவாக்காமல் இவ்வாறு ஆங்கிலத் தட்டச்சுப் பொறியைப் பயன்படுத்துவோரைக் குறைகூறிப் பயன் இல்லை. அனைத்து ஆங்கிலத் தட்டச்சுப் பொறிகளையும் பறிமுதல் செய்தாலும் தமிழ் பயன்பாட்டிற்கான வழிவகைகளை முழுமையாக உருவாக்கும் வரை, இந்நிலையே தொடரும்.
கையொப்பம்:-
            தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை இயல்பான உணர்வுடன் செயலாற்றுவோர், கையொப்பங்களைத் தமிழில் இட்டுப் பதவிப் பெயர்களைத் தமிழில் குறிப்பிடுவது கூடக் கருவூலக் கணக்குத் துறையினருக்குப் பொறுக்கவில்லை. அவர்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததும், தமிழ்ப் பயன்பாட்டிற்குச் சார்பாக புதிய அறிவுறுத்தம் பிறப்பிக்காமல், 1965 இல் கருவூலம் தொடர்பான மடல் போக்குவரவு, பட்டிகள் முதலிய அனைத்திலும் கையெழுத்து, பதவிப்பெயர் உட்பட அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டும் என்றுதான் ஆணை பிறப்பிக்கப்பட்டது. எனினும் 1970இல் பிறப்பிக்கப்பட்ட குறிப்பாணையில் ‘அரசாணைக்குச் சிறிது மாறுதலாகப் பட்டியல்களிலும், காசோலைகளிலும் தமிழில் கையெழுத்து இடலாமென்றும் ஆனால் அவ்வாறு தமிழில் கையொப்பம் இடும் போது அவற்றின் ஆங்கில எழுத்துப் பெயர்ப்பையும் குறிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டது, இதன்படியும் தமிழில் கையொப்பம் இட வேண்டுமென்பது கட்டாயமன்று. இவற்றின் தொடர்ச்சியாக 1978இல் 21.6.1978 முதல் அனைத்துப் பணியாளர்களும் தமிழில்தான் கையொப்பமிட வேண்டுமென்று ஒர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாணையும் அண்மையில் மீண்டும் நினைவூட்டப் பெற்றுச் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. இந்த ஆணையின் அடிப்படையில் தமிழில் கையொப்பமிடுமாறு வற்புறுத்தப்பட்டு வந்தாலும் பலர் தமிழில் கையொப்பம் இடாமல் உள்ளனர் என்பது எந்த அளவு உண்மையோ, அதைவிடக் கொடுமையான உண்மை என்னவென்றால் இந்த ஆணையின் அடிப்படையில் அனைத்து இடங்களிலும் தமிழில் கையொப்பம் இடுமாறு யாரையும் வற்புறுத்த இயலாது என்பதே. ஏனெனில் வழக்கம்போல் ஆங்கிலத்தில் கையொப்பம் இடப்பட்டு ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள இவ்வாணையில் ‘அரசாணை பல்வகை எண். 2070 கல்வி (தமிழ் வளர்ச்சி) நாள் 2.12.1971 இல் பத்தி 4இல் குறிப்பிடப்பட்டுள்ளவை நீங்கலான’ அனைத்து தேர்வுகளைப் பற்றித்தான் குறிப்பிடுகின்றது. இவ்விலக்கின்படி சம்பளப் பட்டியல், பயணப் பட்டியல் சில்லறைச் செலவினப் பட்டியல், நீதிமன்றங்களுக்கும் மைய பிற மாநில அரசு அலுவலகங்களுக்கும் மேல்முறையீட்டிற்குட்பட்ட சட்டத் தொடர்புடைய ஆணைகள், அதிகத் தொழில் நுட்பம் வாய்ந்த பொருட்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், தூதரகங்கள், ஆங்கிலத்திலேயே தொடர்பு வைத்துக் கொண்டுள்ள நிறுவனங்கள் ஆகியற்றுடன் கொள்ளும் தொடர்பு ஆகியவற்றில் தமிழில் கையொப்பம் இட வேண்டா. இவையனைத்தும் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டுமா என்பது ஒரு புறமிருக்கத் தமிழில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவதை ஏற்கும் பொழுது ஆங்கிலத்தில் எழுதப்படுவனவற்றில் தமிழில் கையொப்பம் இட்டால் என்ன என்ற கேள்வி எழுகிறதா? ஒப்புக்காகப் பிறப்பிக்கப்படும் ஆணைகளைச் சிறிதேனும் பொருட்படுத்தினால் தானே இவ்வுண்மை புரியும்.
நீதிமன்றங்கள்:-
            ஆணைஅறிவிக்கப்படும் நாள் முதல் அறிவிக்கப்படும் பொருள் வரம்பில் தமிழ் பயன்படுத்த கட்டளையிடப்படலாம் என்ற அடிப்படையில் நீதிமன்றங்களில் தமிழைப்பயன்படுத்துவது குறித்தும் பல்வேறு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தமிழ் வாக்குமூலங்களைத் தமிழில் பதிய வேண்டியது போன்ற நடவடிக்கைகள் இவற்றில் அடங்கும். இவற்ரின் தொடர்ச்சியாக 1.2.82 முதல் உயர் நீதி மன்றத்திற்குச் சார்நிலையில் உள்ள உரிமை வழக்கு மன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் வாடகை நீதிமன்றங்கள், வருவாய் நீதிமன்றங்கள் ஆகியவற்றிலும் தீர்ப்புரைகள் ஆணைகள் முதலியவற்றில் தமிழ் பயன்படுத்த ஆணை பிறபிக்கப்பட்டது. நீதிமன்ற அலுவலக நடைமுறை பொதுவான ஆணைகளின்படித் தமிழில் இருக்க வேண்டும்: சட்ட நுட்பச் சொற்களைக் கையாளும் தீர்ப்புரைகள் பொன்றவற்றிற்குத்தான் காலவரம்பிற்கேற்ப பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் தேவை. ஆனால் நல்ல முறையில் தமிழில் தீர்ப்பு மிகுதியாக வழங்கக்கூடிய நடுவர் மன்றங்களிலும் அலுவலக நடைமுறை 1% கூடத் தமிழில் இல்லை. தனியாக இதற்கென ஆணை உயர்நீதிமன்றத்தில் இருந்து வந்தால்தான் தமிழில் சுருக்கொப்பம், கையொப்பம் இடுதல், பணியாளர் விண்ணப்பங்களைத் தமிழில் எழுதுதல் தமிழில் செயல்முறை ஆணைகளைப் பிறப்பித்தல், பதிவேடுகளில் தமிழில் எழுதுதல் முதலிய பணிகளைப் பார்க்க முடியும் என்று மறுக்கிறார்கள். சரி அதற்கென்ன இந்த ஆணைகளை உயர்நீதிமன்றத்தில் கேட்டுப் பெறக்கூடாதா என்கிறீர்களா? தேவையில்லாத இந்நடைமுறை குறித்து அவர்களுக்குக் கூற நாம் யார்? மேலும் பல நடுவர்கள் ஆங்கிலத்தில் தீர்ப்புரை எழுத விதிவிலக்கு வேண்டி, அவ்வாறே பெற்று வந்தனர். ஒவ்வொருவருக்காக விதிவிலக்கு தரவேண்டாம் எனக் கருதிய உயர்நீதிமன்றம், ஒட்டு மொத்தமாக இவ்வாணைக்கு மாறாகத் தீர்ப்புரைகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் வழங்கலாம் என விதிவிலக்கு அளித்து விட்டது. இதனால் வாலாயமாகத் தமிழில் தீர்ப்புரை வழங்கியவர்கள் கூட இப்பொழுது ஆங்கிலத்திற்குத் தாவிவிட்டனர். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தீர்ப்பாயத்தில் ஒர் ஆணை அல்லது தீர்ப்புரையாவது தமிழில் வந்ததாகத் தெரியவில்லை. வணிகவரி முதலான துறைகளில் வழங்கப்படும் தீர்ப்பாணைகளை ‘அனைத்து வழக்குகளுமே மேல்முறையீட்டுக்கு உட்பட்டவை’ என எடுத்துக் கொண்டு தமிழில் வழங்குவதில்லை அரசாணை (நிலை எண். 968/1982 )இன் படி 1.4.82 முதல் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் ஆட்சிமொழி மூவாண்டு முனைப்புத் திட்டம் விரிவுபடுத்தி ஆணையிடப்படுள்ளது. ஆனால் உயர்நீதிமன்றத்திலும், அனைத்துப் பிற நீதிமன்றங்களிலும் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் இல்லை என்பது நீதிமன்றமே நீதி பிறழ்வதாகாஆகாதா? நீதிமன்றங்களிலேயே தமிழுக்கு நீதி வழங்காநிலை தொடருகையில் கனவு கண்டு காலத்தைக் கழிப்பானேன்?
(இனியும் காண்போம்)


Friday, February 27, 2015

நாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி!

supersinger-function01supersinger-function02 supersinger-function03
  கடந்த இதழுரையிலேயே “திறந்த புத்தகம்போல் விசய் தொலைக்காட்சி இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு இருந்தோம். ஆனால் உச்சப்பாடகர் நிகழ்ச்சியில் உலக மக்கள் தங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்ற அச்சம் இல்லாமலும் தட்டிக் கேட்பதற்கு யாருமில்லர் என்ற தலைக்கனத்தாலும் வாக்கில் முதலிடம் பெற்றவருக்குப் பரிசு அளிக்காமல் மூன்றாம் இடம் பெற்றவருக்கு முதல் பரிசு அளித்துள்ளனர். ஒரு கோடிக்கு மேல் ஒருவர் வாக்கு பெற்றது பாரறிய அறிவிக்கப்பட்டது. அவர் (ஃச்) பூர்த்தியாக இருந்தால் அந்த வாக்கு எண்ணிக்கையை அறிவித்திருப்பர். மக்கள்வாக்கும் நடுவர் முடிவும் ஒத்துப் போவதாகவும் கூறியிருப்பர். அவ்வாறு சொல்லாததே முதலிடத்தில் உள்ளவர் பூர்த்தியல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது. முதலில் ஆறு கோடிக்கு மேல் வாக்குகள் வந்ததாகக் கூறியதன் காரணம், முதல் பரிசு பெறப்போவது தமிழ்ப்பெண் என்பதால் அவருக்குத் தர விருப்பமின்றிப் பிறரும் கோடிக்கணக்கில் வாக்குகள் பெற்றதாகக் கணக்குக் காட்டி விரும்பிய தமிழரல்லாதவருக்குப் பரிசு தர எண்ணியிருப்பர். ஆனால், குறைந்த காலத்தில் அதற்கான வாய்ப்பு இன்மையால், தவறாகத் தெரிவித்துவிட்டதுபோல் அறிவித்து விட்டனர்.
  தேர்தல் என்று வந்துவிட்டாலே வாக்கு அடிப்படையில்மட்டும்தான் வெற்றி முடிவாக வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் நல்லவர் குறைவான வாக்குகள் பெற்று மிகுதியான கொலைகளும் கொள்ளைகளும் புரிந்த ஒருவர் வெற்றி பெற்றால் அவரைத்தான் வென்றவராக அறிவிக்க இயலுமே தவிர, நல்லவர் வாய்ப்பை இழக்கிறாரே என்று பரிவில் அவரை வென்றவராக அறிவிக்க முடியாது. அதுபோல்தான் வாக்குஅடிப்படையிலான எல்லாத் தேர்தல்களும். ஆனால், இங்கே முதலிடம் பெற்றவர் உண்மையில் குரலினிமையும் பாடற்திறமையும் பெற்ற தகுதியானவரே! ஆனால் தமிழர் என்பதைத் தகுதிக்குறைபாடு எனக் கருதுவோரால் அவர் வெற்றி பறிக்கப்பட்டுள்ளது. அதுபோல் இரண்டாமிடத்தில் இருந்தவரும் தமிழ்ச்சிறுமிதான். எனவே மூன்றாவதாக வந்த தமிழச்சி அல்லாதவருக்கு வாகைப்பட்டம் சூடியுள்ளனர். இதேபோல் ஐந்தாம் இடம் வந்தவருக்கு மூன்றாம் இடம் அளித்துள்ளனர். எனவே, முதல் கோணல் முற்றம் கோணலாகி ஒட்டுமொத்த முறைகேடாக அமைந்துள்ளது.
  மொத்த வாக்குகளில் 65 விழுக்காடு பெற்றவருக்கு மூன்றாம் பரிசாம்! அவர் பெற்றதில் ஒன்பதில் ஒரு பங்கு பெற்றவருக்கு முதல் பரிசாம்! இரண்டாம் இடம் பெற்றவருக்குப் பரிசு இல்லையாம்! அவரது வாக்கு எண்ணிக்கையில் 4இல் 1 பங்கு வாக்கு பெற்றவருக்கு மூன்றாம் பரிசாம்! வாக்குகள் பெற்ற யாரையும் பாடல் திறமையற்றவர் என நடுவர்கள் சொல்ல முடியாது. ஏனெனில் பல்வேறு தடைகளைக் கடந்துதான் முன் இறுதி நிலைக்கும் இறுதி நிலைக்கும் வந்துள்ளனர். எனவே எப்பொழுது வாக்கு அடிப்படையில் வாகையாளரை முடிவெடுக்கின்றார்களோ அப்பொழுதே நடுவர்களுக்கு அங்கே வேலை யில்லை என்பதைப் புரிந்து கொண்டு ஒதுங்கியிருக்க வேண்டும். அவ்வாறு ஒதுங்கினால் தாங்கள் விரும்புபவருக்குப் பரிசளிக்க முடியாதே! இத்தகைய முடிவால் பரிசுத்தொகையில் பங்குபெறும் ஊழலும் இடம் பெற்றுள்ளதோ என எண்ணுவதிலும் தவறிருக்காது. முடிவை அறிவித்ததும் செசிக்கா, அசுனுசுயா குடும்பத்தினர் வாக்கு எண்ணிக்கையை அறிவியுங்கள்; நாங்கள் பரிசு பெற்றுக் கொள்கிறோம் எனத் தெரிவித்திருக்க வேண்டும். நடுவர் முடிவு இறுதியானதுபோன்ற ஏதேனும் விதி உள்ள ஒப்பந்தத்தில் கையொப்பம் இவர்களிடமிருந்து பெறப்பட்டதோ எனத் தெரியவில்லை.
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார் (திருக்குறள் 433)
என்னும் திருவள்ளுவர் மிகச்சிறுஅளவு குற்றம் நேர்நதாலும் பழிச்செயல்களுக்கு வெட்கப்படுபவர் மிகப் பெரிய அளவாகக் கருதுவர் என்கிறார். ஆனால், இவர்களோ இமயமலை அளவு மிகப் பெருங்குற்றம் தொடர்ந்து புரிந்தாலும் வெட்கமின்றி உலவுகின்றனரே! இவர்கள் தம் சொந்தப்பணத்தில் சாதி, மொழி, இனம் பார்த்துப் பரிசு வழங்கினால் நாம் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஆனால் மக்கள் பணத்தில் அல்லவா விளையாடுகிறார்கள்! மக்கள் வாக்குஅளிக்கும் பொழுது செலுத்தும் கட்டணத்திலிருந்துதான் நிகழ்ச்சி   நடைபெறுகிறது என்னும் பொழுது அதிலிருந்து அளிக்கப்படும் பரிசுத் தொகையும் மக்கள் பணம்தானே!
  எனவே, விசய் தொலைக்காட்சி நிறுவனமும் இதனை நடத்தும் ஏர்டெல் நிறுவனமும் உண்மை எண்ணிக்கையை அறிவித்து அதற்கிணங்கப் பரிசுகளை அறிவிக்க வேண்டும். முறைகேட்டிற்குக் காரணமானவர்களை இனித் தம் நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும். முதல் பரிசு பெற்ற பூர்த்தி குடும்பத்தினரும் இம் முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்திருப்பின் அவருக்கு வழங்கிய பரிசைத் திரும்பப் பெறவேண்டும். உடந்தை இல்லை எனத் தெரியவந்தால் அப்பரிசுத் தொகையைத் திரும்பப் பெற வேண்டா. ஆனால், முதலிரு இடம் பெற்றவர்களுக்கும் அவர்களுக்கு முன்பு வழங்கிய பரிசுகளைத் திரும்பப் பெறாமலேயே புதியதாக மீண்டும் பரிசுகள் அளிக்க வேண்டும். அல்லது வாக்காளர்களுக்கு அவர்களிடமிருந்து பெற்ற கட்டணங்களை ஏதேனும் வகையில் திரும்பத்தர வேண்டும். அஃதாவது பணமாகத்தான் திரும்பத்தரவேண்டும் என்றால் நடைமுறைச்சிக்கல்கள் எழலாம் என்பதால், அந்தத் தொகைக்கு அலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பதுபோன்ற முறையில் செலுத்திய கட்டணங்கள் திரும்பப் பெற வேண்டும். முறைகேட்டிற்குக் காரணமானவர்களிடமிருந்து முதலில் அளிக்கப்பட்ட பரிசு மதிப்பினைச் சமமாகப் பெற வேண்டும்.
இதனைக் கண்டுகொள்ளாமல் வழக்கம்போல் அமைதிகாத்து அடுத்து வரும் போட்டியையும் இதே மோசடி முறையில் திட்டமிட்டால், விசய் தொலைாக்காட்சி நிறுவனமும் ஏர்டெல்நிறுவனமும் முறைகேடுகளுக்குக் காரணம் என்பது தெளிவாகும். அப்படியாயின்
1.       நம் நாட்டிலிருந்தோ பிறநாட்டிலிருந்தோ இசையன்பர்கள் இந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க வேண்டும்.
2.  விசய் தொலைக்காட்சியையும் அதில் பங்கேற்கும் கலைஞர்களையும் புறக்கணிக்க வேண்டும்.
3.       விளம்பரங்களும் தரக்கூடாது.
4.      இதன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக்கூடாது.
5. சிங்களத் தோழமை நிறுவனம் என்ற காரணத்தால் ஒரு சாராரால் புறக்கணிக்கப்படும் ஏர் டெல் நிறுவனத்தை உலக மக்கள் அனைவருமே புறக்கணிக்க வேண்டும்.
அதுதான் இவர்களுக்கும் இவர்களைப் போன்ற ஊடக ஊழல் வாதிகளுக்கும் தண்டனையாக அமையும்.
   தவறான தீர்ப்பு வழங்கிய குற்றத்திற்காக வளைந்த செங்கோலை நிமிர்த்த பாண்டிய மன்னன் உயிரையே விட்டான். இவர்கள் உயிரை விடவேண்டா! அறம்வழங்கி முறைப்படி வென்றவர்களுக்குப் பரிசும் பட்டமும் அளித்தால் போதும்! செய்வார்களா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரைfeat-default
அகரமுதல 67 நாள் மாசி10, 2046 / பிப்பிரவரி 22, 2015

தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!


delhi-constituency-mapdelhi-thilli

தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!

  தலைகால் புரியாமல் இருக்கும் நரேந்திரர், அகமது(பட்டேல்) முதலானவர்கள் தலையில் பாறாங்கல்லைப் போட்ட தில்லி வாக்காளர்களை நாம் பாராட்ட வேண்டும். ஆம் ஆத்மி என்னும் பாசக-காங். கலவைக் கட்சியைத் தேர்ந்தெடுத்ததற்காக நாம் பாராட்டவில்லை. அதனைத் தேர்ந்தெடுப்பது தவிர அம்மக்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், பாசக வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவே தாங்கள்தான் என மாரடித்துக் கொண்டு உலகமெல்லாம் மாயத் தோற்றத்தை அதன் தலைவர்கள் உருவாக்கியிருப்பர்.   நரேந்திரர் பின்னால் இந்தியா இருப்பதாகவும் அதன் தலைவர் அகமது வினைத் திறம் வெற்றி கண்டதாகவும் கூறுவதுடன் நில்லாமல் இந்தியாவை ‘இந்து’யாவாக மாற்றத் தொடர்ந்து ஈடுபடுவர். “இந்தியாவின் தலைநகர் தந்த வெற்றி இந்தியாவின் ஒட்டு மொத்த மக்கள் தந்த வெற்றி” எனத் தலைக்கனத்துடன் பேசியிருப்பர். மரண அடி பெற்றதும் “மாநிலத் தேர்தல் வேறு, மத்தியத் தேர்தல் வேறு” என இப்போது கூறிவரும் வாய்தான் வெற்றிபெற்றிருந்தால் மாறாகக் கூறியிருந்திருக்கும். அதற்கான வழி வகுக்காமல் வேரொடு வீழ்த்திய தில்லி வாக்காளர்களைப் பாராட்டுகிறோம்.
  அதே நேரம் மத்தியில் ஆளும் பொறுப்பில் உள்ள பாசக இத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு நல்லிணக்க அரசை நடத்தத் தவறினால் இந்தியா முழுமையும் பள்ளத்தில் விழநேரிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தித்திணிப்பையும் சமற்கிருத்திணிப்பையும் இந்து மயமாக்கலையும் வரலாற்றுத் திரிபையும் அடியோடு கைவிட்டு, வேறு வழியின்றிக் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில்தான் பா.ச.க.விற்கு மக்கள் வெற்றி வாய்ப்பைத் தந்தனர் எனப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பு நிலைக்க வேண்டும் என்றால் இந்துமதக் கட்சி என்ற நிலைப்பாட்டிலிருந்து மாறி அனைத்து மக்களுக்கான கட்சியாகச் செயல்படவேண்டும்.
கிரண்(பேடி) முதல்வராக முன்னிறுத்தப்பட்டதால்தான் தோல்வியைத் தழுவியதாக உள்ளபடியே பா.ச.க. எண்ணினால் அதுவும் தவறுதான். இதுபோன்ற நேர்வுகளில் எக்கட்சியாக இருந்தாலும் சிறு சலசலப்பு இருக்கத்தான் செய்யும். ஆனாலும், கட்சித்தலைமையின் கொத்தடிமைகளாக இருக்கும் கட்சியினர் கட்சியின்பக்கமே நிற்பர். உண்மையில் அதுதான் காரணம் எனில் அவரைமட்டும் தோற்கடித்து விட்டுப் பிற இடங்களில் வெற்றியைத் தந்திருக்கலாம் அல்லவா? கிரண்(பேடி) அரசியல் கணிப்பில் தவறியுள்ளார் என்பதுதான் உண்மையே தவிர, அவரால்தான் பா.ச.க. மண்ணைக் கௌவியது என்பது தவறேயாகும். எனவே, பா.ச.க. தன் போக்கை அனைத்து மக்கள் நலனுக்காகவும் செயல்படும்வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
  தமிழ் நாட்டைப் பொருத்தவரை தமிழக மீனவர்கள் துயரத்தைப் போக்குவதுடன் சிங்கள அரசிடமிருந்து உரிய இழப்பீட்டைப் பெற்றுத்தரவேண்டும். ஈழத்தமிழர்களுக்குத் தமிழகச்   சட்டமன்றத் தீர்மானத்திற்கு இணங்க நீதி கிடைக்கவும் படுகொலையாளிகளும் கூட்டாளிகளும் தண்டிக்கப் பெறவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரசு போலவே அண்டைநாட்டுடனான நல்லுறவு என்ற போர்வையில் சிங்கள அரசுடன் கூடிக் குலவிக் கொண்டிருந்தால் இருந்த இடம் தெரியாமல் போக நேரிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
  தில்லி மக்கள் காங்கிரசை இருப்பிடம் தெரியாத அளவிற்குத் தொலைந்துபோகச் செய்து விட்டார்கள். சிறிய வெற்றி கிடைத்திருந்தாலும் பா.ச.க.மீது கசப்பு ஏற்பட்டால் அதற்கு மாற்று நாம்தான் என்ற எண்ணத்தில் ஆட்டம் போடத் தொடங்கியிருப்பர். அதன் ஊழலுக்கும் மனிதநேயமற்ற செயல்களுக்கும் தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக்கும் சரியான பாடம் தில்லித் தேர்தலில் கிடைத்து விட்டது.
  அதே நேரம் அரவிந்து(கெசுரிவால்) தனக்காகக் கிடைத்த வெற்றி என எண்ணிச் செயல்பட்டார் எனில் அடுத்த தேர்தலில் இவரும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார். எனவே, மக்கள் நல அரசாகச் செயல்படவேண்டும். தில்லியில் கணிசமான தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் தமிழரைப்பற்றியோ அவர்களின் தாய்மொழியான தமிழின் சிறப்பையோ அங்குள்ள தமிழர்களின் இன்னல்களையோ   அங்குள்ள தமிழர்களின் உறவினர் வாழும் தமிழ் ஈழம் குறித்தோ அறியும் நாட்டம்கூட இல்லாதவராகத்தான்அரவிந்தர் (கெசுரிவால்) அரவிந்து(கெசுரிவால்) உள்ளார். இந்தப் போக்கையும் அவர் மாற்றிக் கொள்ள வேண்டும்.மற்றவரை எதிர்ப்பதற்காக முன் நிறுத்தப்படும் யாரும் நிலைத்து நின்றதில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
  வெற்றி பெற்ற அரவிந்தரையும் பிறரையும் வாழ்த்துகிறோம்! மீண்டும் தில்லி மக்களைப் பாராட்டுகிறோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை


தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு : 1 – இலக்குவனார் திருவள்ளுவன்


kanavukal-aatchimozhi
[புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்
2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல்
“தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்”
என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில்
வாசிக்கப் பெற்ற கட்டுரை.
 அவையில் அனைவரின் பாராட்டையும் பெற்ற கட்டுரை இது. யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் எப்படியெல்லாம் சட்டம் இயற்றக்கூடாது என்பதற்குத் தங்களுக்கு இது மிகவும் வழிகாட்டியாக அமையும் என்றார். முனைவர் நன்னன் அவர்கள் “தமிழ்நாடே இனி உருப்படாதோ என்ற தொனி இருந்தாலும் உண்மைகளைச் சிறப்பாக உரைத்துள்ளீர்கள்” என்றார். கடந்த ஆண்டே அறிஞர் ஔவை நடராசன் அவர்கள் இதனை வெளியிடுமாறு தெரிவித்தார். இவற்றில் தெரிவித்துள்ளவற்றில் இன்றைய நிலையில் பெரிதும் மாற்றமில்லை யென்பதால் வெளியிடுகிறேன்.]
     தமிழ் நாட்டரசின் 1956 ஆம் ஆண்டின் 30-ஆவது சட்டமான ஆட்சிமொழிச் சட்டம் 1957 சனவரித் திங்கள் 19-ஆம் நாளன்று ஆளுநரின் இசைவைப் பெற்றது: 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப் பெற்றது. அதுமுதல் ( ஆட்சி செய்து வந்த அனைத்துக் கட்சியினராலும்) இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய ஆணைகள் பல பிறப்பிக்கப்பட்டுள்ளன; செயல் திட்டங்கள் சில வகுக்கப்பட்டுள்ளன. எனினும் ஒரு தலைமுறை கடந்த பின்பும், இத்திட்டம் முழுமையடையவில்லை என்பது மட்டுமல்ல: முழுமையான பாதையை நோக்கிச் செல்லவில்லை என்பதே உண்மை. அது மட்டுமல்ல ஆட்சிமொழிச் செயலாக்கம் என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் ஓர் இனிய கனவேயன்றி வேறொன்றுமில்லை என்பதே பேரூன்மை. இவ்வுண்மையை உள்ளவாறே உரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
சிதைந்த கனவா? இனிய கனவா?
     தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்திற்கெனத் தனி அமைச்சுத் துறையை அமைத்த பின்பு – அதற்கு முற்றிலும் தகுதியான ஒருவரை அமைச்சராக அமர்த்தி – அவர் ஆக்கப் பணிகளில் ஈடுபட்ட பின்பு எழுதப்படும் கட்டுரைதானா இஃது எனச் சிலருக்கு ஐயம் வரலாம். இதற்கு முன்பு எழுதப்படும் கட்டுரையாயின் ‘ஆட்சிமொழிச் செயலாக்கம் ஒரு சிதைந்த கனவு’ என்றுதான் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி – பண்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களும் மிகவும் முனைப்புடன் செயற்படுகிறார்கள். தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுத் துறையின் செயலராக வினைத்திறம் மிக்கவரே உள்ளார். இவர்கள் எடுத்துவரும் ஒவ்வொரு நடவடிக்கையும் வரலாற்றில் இடம் பெறக்கூடிய புரட்சி: என்பவை மறுக்க முடியாத உண்மை. எடுத்துக்காட்டாகத் தலைமைச் செயலகத்தில் 500 ஆங்கிலத் தட்டச்சுப் பொறிகள் அகற்றப்பட்டு 500 தமிழ்த் தட்டச்சுப் பொறிகளை வழங்குவது என்பதை மிக எளிய செயலாக எண்ணக்கூடாது. நாளைய தலைமுறையினரால் போற்றப்படப் போகின்ற புரட்சிச் செயலே இது. இது போன்ற செயல் திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப் பட்டாலும் ஆட்சிமொழிச் செயலாக்கம் ஓர் இனிய கனவேயன்றி வேறில்லை என்பதே உண்மை.
     தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தை நிறைவேற்றத் தடைகள் பல இருக்கலாம். ஒரு வேளை அவற்றில் சில இதுவரை அரசின் கருத்திற்குக் கொணரப்படாமல் இருந்தாலும் இனிமேல் அவை அரசிற்குத் தெரிவிக்கப்பட்டால் உடைத்து எறியப்படும். இவ்வாறிருக்க ஏன் இந்த அவநம்பிக்கை எண்ணம் என்று சிலர் எண்ணலாம். ஆட்சிமொழிச் செயலாக்கம் என்றால் நாம் என்ன கருதிக் கொண்டிருக்கிறோம்? உண்மையில் இதன் வரையறை என்னவாக இருக்க வேண்டும்? என்பதை உன்னிப்பாக ஆராய்ந்தால் தான் இக்கட்டுரையின் நடுநிலைப் போக்கும் , மெய்ம்மையும் புலப்படும்.
   தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 2% அளவுள்ள தமிழக அரசு எழுத்துப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய தமிழ்ப் பயன்பாட்டைப் பற்றித்தான் நாம் மிகவும்பேசுகிறோம். இவற்றிற்குரிய முயற்சிகள் முழுமையாக எடுக்கப் பெற்று 100% வெற்றியடைவதாகக் கற்பனையாகக் கருதிப் பார்ப்போம். அப்பொழுதும் ஆட்சிமொழிச் செயலாக்கம் முழுமையடைந்ததாக நம்மால் கூற இயலாது. ஆட்சிமொழிச் செயலாக்கப் பரப்பை நாம் குறைவாகக் கருதிக் கொண்டு அதற்குள் சுற்றிவருகிறோம். உண்மையில் தமிழ் நாடெங்கும் தமிழ் வீற்றிருப்பதற்கான வழிவகைகளைக் கானத்தவறி விடுகிறோம். தமிழ்நாட்டில் ஆட்சிமொழியாகத் தமிழ் முழுஅளவில் இருக்க வேண்டுமெனில், கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, வணிக மொழியாக, அலுவல் மொழியாக, அனைத்துத் தரப்பாருடனான தொடர்பு மொழியாக என ஒவ்வொரு நிலையிலும் தமிழே ஆட்சிசெய்தால்தான் இயலும்.
     இது குறித்து ஆராயும் முன், இதுவரை நடந்து வந்த ஆட்சி மொழிச் செயலாக்கப் பாதையில் நாம் ஈட்டிய வெற்றிகளையும், ஈட்டுவதாக நம்பவைத்து ஆனால் ஈட்ட்த் தவறியவற்றையும் சுருக்கமாகப் பார்த்தால் இனியும் நாம் கனவுப் பாதையில் தான் நடைபோடுவோம் என்பது எளிதில் புலனாகும்.
ஆட்சிமொழிச் சட்டம்:
     ‘1956ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம்’ என்ன கூறுகிறது? இதன் 2-ஆம் விதி, “தமிழ், தமிழ் நாட்டின் ஆட்சிமொழியாக இருக்கும்” எனத் தெரிவிக்கிறது. ஆனால் 3-ஆவது விதியோ “அரசு வேறுவிதமாகக் கட்டளையிடுகின்ற வரையில் அலுவல் முறைக் காரியங்களில் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்பட வேண்டும்” என வலியுறுத்துகிறது. இச்சட்டம் ’ஆட்சிமொழியாய்த் தமிழை அறிவிக்கும் சட்டம்’ என்றா இருக்கிறது? இல்லையல்லவா? எனவே ஆங்கிலமே தொடர்ந்து நீடிக்க வகைசெய்யும் இச்சட்டத்தில் குறையில்லை. இதை நம்பி இன்றுவரை ஏமாந்து கொண்டிருக்கும் நாம்தான் குறையுடையவர்கள். ‘ஆங்கிலம்’ என்ற இடத்தில் ‘தமிழ்’ என்று இருக்க வேண்டும் என்று யாரும் வலியுறுத்தத் தேவையில்லை; அடித்தளமில்லாமல் கோபுரத்தை எவ்வாறு எழுப்புவது என்று நாம் எண்ண வேண்டாம். சீட்டுக் கட்டில் கட்டப்படும் கோபுரத்தைப் பற்றி ஆரவாரமாகப் பேசினால் போதும்!
    2 -ஆவது விதியை நம்பி யாரும் ‘தமிழ் நாடெங்கும் தமிழே’ இருக்க வகை செய்துள்ளதாகக் கனவு காண வேண்டாம் என 3-ஆவது விதியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம் 3 -ஆவது விதியின் விரிவு வருமாறு:-
     “2-ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளது எவ்வாறு இருந்த போதிலும் அரசியலமைப்புச் சட்டத்தின் 346-ஆவது 347-ஆவது பிரிவுகள் ஏற்பாடுகளுக்கு ஊறு இன்றி, 4-ஆவது பிரிவின் படிக்கான அறிவிக்கையின் மூலம் அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்படும் அலுவல்முறைக் காரியம் எதைக் குறித்தேனும் மாநில அரசு வேறுவிதமாகக் கட்டளையிடுகின்ற வரையில், இந்தச் சட்டத்தொடக்கத்திற்கு முன்பு ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வந்த அலுவல் முறைக் காரியங்கள் எல்லவற்றிற்கும் அம்மொழியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.”
இதில் குறிப்பிட்டுள்ள 4-ஆவது பிரிவு (விதி 4 ) என்ன கூறுகிறது?
     “மாநில அரசு அவ்வப்போது வெளியிடுகின்ற அறிவிக்கையின் மூலமாக அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்படுகிற அலுவல்முறைக் காரியங்களுக்குத் தமிழ் பயன்படுத்த வேண்டும் என்று கட்டளையிடலாம்”
     ஆகத் ‘தமிழ்நாட்டில் ஆங்கிலமே தொடர்ந்து பயன்படுத்த முடியும்’ ‘அவ்வப்போது தமிழ் பயன்படுத்த வேண்டும் எனக் கட்டளையிடலாம்’ என ஆங்கிலத்தை நிலைப்படுத்தித் தமிழுக்குத் தவணைமுறை வாய்ப்பு தந்துள்ள இந்தச் சட்டத்தை வைத்துக் கொண்டுதான் நாம் ஆகாயக் கோட்டை கட்டுகின்றோம். முதல் கோணல் முற்றும் கோணலை உருவாக்கி விட்டது.
     சரி. ‘இன்று முதல் தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழி’ எனப் புதிய சட்டம் பிறப்பித்தால் நம் கனவு நனவாகுமா? விதிவிலக்குகளில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் நம்மால் அப்போதும் கனவுதான் காண இயலும்.
(இனியும் காண்போம்)
- இலக்குவனார் திருவள்ளுவன்
- அகரமுதல 67 நாள் மாசி10, 2046 / பிப்பிரவரி 22, 2015
 

Followers

Blog Archive