Monday, January 28, 2013

செம்மொழிச் செயலாக்கம் குறித்த வினா-விடைகள் 6/6

செம்மொழிச் செயலாக்கம் குறித்த வினா-விடைகள் 5/6

செம்மொழிச் செயலாக்கம் குறித்த வினா-விடைகள் 4/6

செம்மொழிச் செயலாக்கம் குறித்த வினா-விடைகள் 3/6

செம்மொழிச் செயலாக்கம் குறித்த வினா-விடைகள் 2/6

செம்மொழிச் செயலாக்கம் குறித்த வினா-விடைகள் 1/6

Sunday, January 27, 2013

இனிதே இலக்கியம் - 4 : முத்தொழில் ஆற்றுநரே தலைவர் - Inidhea Ilakkiyam 4

 இனிதே இலக்கியம்! 4

 
முத்தொழில் ஆற்றுநரே தலைவர்
உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,
அலகி லா விளை யாட்டுடை யார், அவர்
தலைவர்!  அன்னவர்க் கேசரண்  நாங்களே!
கவிப்பேரரசர் கம்பர் தம்முடைய இராமகாவியத்தில் எழுதிய தற்சிறப்புப்பாயிரம்.
உலகங்கள் யாவற்றையும் தாம் உள்ளவாறு படைத்தலும் அவ்வுலகங்களில் உள்ள அனைத்து வகை உயிர்களையும் நிலைபெறச்செய்து காத்தலும் அவற்றை நீக்க வேண்டிய  நேரத்தில் நீக்கி அழித்தலும் ஆகிய மூன்று தொழில்களையும் இடைவிடாமல்(நீங்கலா) அளவற்ற(அலகுஇலா) திருவிளை யாடல்களாகப் புரிபவர் யாரோ, அவரே எங்கள் தலைவர்! அவரிடமே நாங்கள் அடைக்கலமாகிறோம்! 
என்கிறார் கம்பர்.
குறிப்பிட்ட கடவுள் எனக் குறிக்காமையால் கடவுள் நம்பிக்கை உள்ளவர் யாவருமே தத்தம் கடவுளை வணங்கும் வகையில்  பொதுவாக அமைந்த பாடல்களுள் இதுவும் ஒன்று.
உலகம் முதலான பொதுவான சொற்களால் முதல் பாடலைத் தொடங்குதல் தமிழ் மரபு. அதற்கிணங்கக் கம்பர்  உலகம் என்னும் சொல்லுடன் தம் படைப்பைத்  தொடங்கி உள்ளார்.
உலகம் என்றோ உலகம் முழுமை என்றோ கூறாமல் அனைத்து உலகங்களையும் எனக் கம்பர் குறிப்பிட்டுள்ளது,  இப்புவி உலகம் தவிர வேறு பிற உலகங்கள் உள்ளன என்னும் இன்றைய அறிவியல் கருத்தைப் பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதன் தொடர்ச்சியை உணர்த்துகிறது.
(8ஆம் வகுப்பு  மனப்பாடப்பகுதி)
- இலக்குவனார் திருவள்ளுவன்
 

Saturday, January 26, 2013

இனிதே இலக்கியம் 3 விண்போல் பொதுவான கடவுள் Inidhea Ilakkiyam 3



இனிதே இலக்கியம்  3 விண்போல் பொதுவான கடவுள்
- இலக்குவனார் திருவள்ளுவன்

முத்தே பவளமே மொய்த்த பசும் பொன் சுடரே
சித்தே என் உள்ளத் தெளிவே பராபரமே.
கண்ணே   கருத்தே   என்கற்பகமே  கண்நிறைந்த
விண்ணே  ஆனந்த  வியப்பே  பராபரமே.

   எக்கடவுளரை வணங்குவோரும் போற்றி வழிபட உதவும் தமிழ்ப்பாடல்களுள் தாயுமானவரின் இப்பாடலும் ஒன்று.  தாயுமானவர் திருப்பாடலில் உள்ள  பராபரக்கண்ணி என்னும் தலைப்பில் இடம் பெற்ற பாடல் இது.
  விலைமதிப்பற்ற முத்தாகவும் பவளமாகவும்  பொன்னொளியாகவும் உள்ளத்தின் தெளிவாகவும் இருக்கின்ற  எல்லாவற்றிலும் மேலான பரம்பொருளே! நற்பார்வையை நல்கும் கண்ணாகவும் பிறரை ஈர்க்கக்கூடிய கருத்தாகவும் கேட்டன வழங்கும் கற்பக மரமாகவும்  கண்ணுள் நிறைந்த விண்ணாகவும் களிப்பு தரும்  வியப்பாகவும் காட்சி தரும் பரம்பொருளே! உன் அருள்வேண்டிப் போற்றுகின்றேன்! அருள்தருவாயாக!
  இப்பாடல் மூலம் கிடைத்தற்கரிய பொருளாகவும் விரிந்த விண்ணாகவும் விந்தையாகவும் எல்லாம் அருள்பவனாகவும் கடவுள் உள்ளதாகக் குறிப்பிடுகின்றார் தாயுமானவர். விண் அனைவருக்கும் பொது என்பதுபோல்  கடவுளும் அனைவருக்கும் பொதுவானவன் என்பதை உணர்த்துகின்றார்.
(8 ஆம் வகுப்பு மனப்பாடப்பாடல் பகுதி)

Friday, January 25, 2013

இனிதே இலக்கியம் 2 . போற்றி! போற்றி! inidhea ilakkiyam



இனிதே இலக்கியம்  2
போற்றி! போற்றி!
- இலக்குவனார் திருவள்ளுவன்
பண்ணினை இயற்கை  வைத்த
பண்பனே போற்றி போற்றி
பெண்மையில் தாய்மை வைத்த
பெரியனே போற்றி போற்றி
வண்மையை உயிரில் வைத்த
வள்ளலே போற்றி போற்றி
உண்மையில் இருக்கை வைத்த
உறவனே போற்றி போற்றி
  இறைவனைப் பொதுவான பண்புகள் அடிப்படையில் போற்றும் தமிழ்ப்பாடல்கள் எச்சமயத்தவரும் எக்கடவுளை வணங்குவோரும் ஏற்கும் சிறப்பினைப் பெற்றுள்ளன. அந்த வகையில் தமிழ்த்தென்றல் திரு.வி.. எனப்படும் திரு.வி.கல்ணயாண சுந்தரனாரால்  எழுதப்பெற்ற பொதுமை வேட்டல் என்னும் நூலில்  இருந்து எடுக்கப்பட்ட பாடல் இது.
   இயற்கையோடு இயைந்ததாக இசையை அமைத்த பண்பாளரே போற்றி! பெண்மையின் சிறப்பாகத் தாய்மையை வைத்த பெரியோய் போற்றி!  வள்ளல் தன்மையை உயிரினங்களிடம் வைத்த வள்ளலே போற்றி! உண்மையை உள்ளத்தில் தங்க வைத்த  உறவாளரே போற்றி! உன்னை வணங்குகின்றேன்.
   இயற்கையில் இருந்து இசை உருவான உண்மையையும் தாய்மையின் சிறப்பையும் எல்லா உயிரினங்களிடமும் வள்ளல் தன்மை என்பது இருக்கும் என்பதால் நாம் கொடைச்சிறப்புடன் வாழ வேண்டும் என்ற வலியுறுத்தலையும் உள்ளத்தில் உண்மை உடையவர்களுடன் இறைவன் உறவாக இருப்பான் என்பதால் நாம் உண்மையுடனே எப்பொழுதும் வாழ வேண்டும் என்ற இலக்கினையும் 
தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்  நமக்குத் தெளிவாக்குகிறார்.
(7 ஆம் வகுப்பு மனப்பாடப் பகுதிப் பாடல்)
 

இனிதே இலக்கியம் 1 எங்கும் கலந்துள்ள இறைவன் inithea ilakkiyam



இனிதே இலக்கியம் 1

எங்கும் கலந்துள்ள இறைவன்

கண்ணில் கலந்தான்; கருத்தில் கலந்தான்-என்
எண்ணில் கலந்தே இருகின்றான்;-பண்ணில்
கலந்தான்;என் பாட்டில் கலந்தான் -உயிரில்
கலந்தான் கருணை கலந்து.

  எல்லாச் சமயத்தவரும் ஏற்கும் வண்ணம் பொதுநோக்கான இறைநெறிப்பாடல்கள் தமிழில்தான மிகுதியாக உள்ளன. இப்பாடலும்  அனைவரும் பாடுவதற்குரிய பொதுநிலைச் சிறப்பு உடையது.
  இறைவன்,  அருட்பார்வை உடைய கண்ணில் கலந்திருக்கின்றான்; நற்செயல்களுக்கு அடிப்படையான நல்ல கருத்துகளில் கலந்திருக்கின்றான்;  பிறர் நலம் பேணக்கூடிய உயர்ந்த எண்ணத்தில் கலந்திருக்கின்றான்; இசையாகிய பண்ணிலும் பாட்டிலும் கலந்திருக்கின்றான்;  அருள்உணர்வுடன் நம் உயிரிலும் கலந்துள்ளான்.
  எல்லா இடங்களிலும் கலந்து இணைந்துள்ள இறைவனை வள்ளலார் இவ்வாறு வாழ்த்துகிறார். 
  எனவே, நமக்கு அருள் பார்வையும் நற்செயலும் உயர் எண்ணமும் நல்லிசையும் தேவை என்பதை  வள்ளலார் உணர்த்துகின்றார்.
   திருவருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்பெறும் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவில் இருந்து இப்பாடல் எடுக்கப்பட்டு உள்ளது. 6-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு மனப்பாடப் பகுதியாகவும் உள்ளது.

- இலக்குவனார் திருவள்ளுவன்

Followers

Blog Archive