Monday, June 30, 2014

ஊடகர் மீது கை வைக்காதீர்! ஊடகங்கள் மீது கண் வையுங்கள்!

ஊடகர் மீது கை வைக்காதீர்! ஊடகங்கள் மீது கண் வையுங்கள்!


தினமலர் நாளிதழ்ச் செய்தியாளர்

அருள்செல்வனைத் தாக்கியது

அருளற்ற செயல்!

dinamalar_paambupuri_Eswararkoil
  கிளர்ச்சிகள் என்பன மக்கள் குறைகளைத் தெரிவிக்கும் வாயில்கள் எனவும் அரசு அவற்றை அடக்கித் துன்புறுத்தாமல் மென்மையாகக் கையாண்டு குறைகளைப் போக்க வேண்டும் என்றும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் குறிப்பிடுவார். ஆனால், கிளர்ச்சிகள் என்றாலே அரசை அழிக்கும் ஆயுதமாகவும் கிளர்ச்சியாளர்கள் என்றாலே நாட்டின் பகைவர்கள் என்றும் கருதும் போக்கு எல்லா நாட்டிலும் உள்ளது வருந்தத்தக்கதே! இதனால், மக்களின் உற்ற தோழனாக இருக்க வேண்டிய காவல்துறை ஆளும்கட்சியின் அடிவருடிபோல் நடந்துகொண்டு மக்களுக்குத் தீங்கிழைத்து, அரசிற்கும் ஆளுங்கட்சிக்கும் களங்கமே ஏற்படுத்துகிறது.
  வன்முறையைக் கையாளும் போக்கிற்கு, அடைக்கலம் நாடிவந்த ஈழத்தமிழர்களிடமும் தமிழ்ஈழம் தொடர்பான உணர்வாளர்களிடமும் தமிழ்வழிக்கல்வி முதலான தமிழ்த் தேசியப் போராட்டங்களில் ஈடுபடுவோர்களிடமும் விலைவாசி உயர்வு போன்றவற்றை எதிர்த்துப் போராடும் மக்கள் அமைப்புகளிடமும் தாங்கள் உயிர்த்திருப்பதற்கு அடையாளமாகப் போராடும் எதிர்க்கட்சிக்காரர்களிடமும் நடந்துகொள்ளும் முறைகளே நல்ல சான்றுகளாகும்.
  மக்களின் உணர்வுகளை அரசிடம் தெரிவிக்கும் பாலமாகக் காவல்துறை நடந்துகொள்ள வேண்டுமே தவிர, கைத்தடிகளை மக்கள் உடலில் நடமாட விடுவதும் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கும் இடங்களாக மக்கள் உடல்களை மாற்றி உயிரைப் பறிப்பதுமாக இருக்கக் கூடாது.
  அண்மையில்   திருவாரூர் மாவட்டத்தில் அரங்கேறிய காவல்துறையினரின் ஒடுக்குமுறைத் தாக்குதலை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
dinamalar_arulselvan03
திருவாரூர் மாவட்டம், பேரளம்பாக்கத்தில் உள்ள திருபாம்புரத்தில், பாம்புபுர ஈசுவரர் கோவில் உள்ளது. இதைத்தான் தமிழ்க்கொலைஞர்கள் ‘சேடபுரீசுவரர்’(சேஷபுரீஸ்வரர்) என மாற்றியுள்ளனர். இங்குள்ள இறைவியின் பெயர் வண்டார்குழலி. இப்பெயரைப் ‘பிரமராம்பிகை’ என மாற்றியும் நிலைக்கவில்லை. பாடுபுகழ் பெற்ற இக்கோயிலில் செய்தியாளர் ஒருவர் பாடாய்ப்படுத்தப்பட்டுள்ளார்.
dinamalar_arulselvan02இக்கோயிலில் ஆனி 9, 2045 / சூன் 23, 2014 அன்று நடைபெற்ற (இராகு, கேது பெயர்ச்சி)விழா ஒன்றில், நடைபெற்ற தாக்குதல்பற்றிக் கண்டனத்துடன் குறிப்பிட விரும்புகிறோம். இறைப்படிமத்தின் ஒப்பனை அழகைப் படம் பிடித்த ‘தினமலர்’ நாளிதழ்ச் செய்தியாளர் அருள்செல்வனை அங்குள்ள காவல்துறையினர் கடுமையாகத் தாக்கி உள்ளனர். ஒளிப்படங்களும் காட்சிப்படங்களும் எடுத்த ஊடகத்தினர் பிறரை விட்டு விட்டு, செய்தியாளர் அருள்செல்வனிடம் மட்டும் காவல்துறையினர் அருளின்றி நடந்துகொண்டது ஏன் எனத் தெரியவில்லை. அங்கிருந்து அப்புறப்படுத்தல் அல்லது படப்பொறியைப் பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கடுமையாகத் தாக்கி உள்ளமை காட்சிப்படத்தில் தெளிவாகத் தெரிகின்றது. மக்கள் முன்னிலையில் மக்களுக்காகத் தகவல் தொண்டாற்றும் செய்தியாளரைத் தாக்கும் துணிவு காவல்துறையினருக்கு எவ்வாறு வந்தது? அந்தdinamalar_arulselvan04 இடத்திற்குப் பிற இடங்களில் இருந்து வந்த காவல்துறையினரும் தாக்குதலைத் தடுக்காமல் தங்கள் பங்கிற்கு மேலும் கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதனால், விழாவில் பங்குகொண்ட அமைச்சர் காமராசிற்கோ, அரசிற்கோ, முதல்வருக்கோ, ஆளுங்கட்சிக்கோ என்ன நற்பெயர் வாங்கித் தந்துவிட்டதாக அவர்கள் எண்ணுகின்றார்கள் எனப் புரியவில்லை. யாருக்கேனும் அடிபட்டால் தங்கள் ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய காவல்துறையினர், வதைத்துத் துன்புறுத்தப்பட்டு நினைவிழந்த செய்தியாளர் அருள்செல்வனை அழைக்க வந்த அவசர மருத்துவ ஊர்தியையும் வரவிடாமல் செய்துள்ளனர்; அதனால் வாடகை ஊர்தி மூலமே அங்கு வந்திருந்த செய்தியாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
செய்தியாளர் அருள்செல்வனுக்கு வேண்டிய மருத்துவ உதவியையும் இழப்பீட்டையும் அரசு அளிக்க வேண்டும்.
 dinamalar_arulselvan01
இதுபோன்ற தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளியிட முதல்வர் முனைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊடகம் அரசின் நான்காம் தூணாக விளங்குகின்றது. மக்கள் குறைகளை அரசிற்குத் தெரிவித்தும் அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்கியும் சிறந்த பாலமாக விளங்குவது ஊடகத்துறையே! ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது, முறைகேடுகளைத் தடுக்க முனைவது, கலை இலக்கியங்களை வளர்ப்பது, கல்வி வளர்ச்சிக்கு உதவுவது, திறமையாளர்களை ஊக்குவிப்பது, அருவினை புரிந்தோரைப் பாராட்டுவது என எண்ணிலடங்காப்பணிகளை ஆற்றுவது ஊடகமே!
அதே நேரம், ‘ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருச்சாளியாக்கி, பெருச்சாளியைப் பெருமாளாக்குவதும்’ ஊடகமே! அரசியலாளர்கள், கலைஞர்கள் முதலானவர்களின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் ஊடகத்தின் செயல்பாடுகளே அடிப்படையாக அமைந்து விடுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
பண்பாட்டுடன் செய்திகளை வெளியிடவும் உண்மைச்செய்திகளை உள்ளபடியே தெரிவிக்கவும் தமிழ்மொழிக் கொலை புரிவதைத் தடுத்து நிறுத்தவும் மொழி, இனப்பற்றாளர்களை வன்முறையாளர்களாகத் திரிப்பதைக் கைவிடவும் வாய்மையையும் தூய்மையையும் கண்களாகக் கொண்டு செயல்படவும் ஊடகங்களை அரசு ஆற்றுப்படுத்த வேண்டும்.
  ஊடகர் மீது கை வைப்பதால் அரசிற்குப் பொல்லாப் பெயரே விளையும். ஊடகங்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் அரசிற்கு அழிவுதான் வரும். ஆனால், ஊடகங்கள் மீது மேற்குறித்த செயல்பாடுகளுக்காக அரசு கண்டிப்பாக நடந்துகொண்டால் மக்களுக்கு நன்மையே விளையும். இதனால் அரசிற்கு நிலைத்த நற்பெயரே பெருகும்.
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். (திருக்குறள் 562)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் மெய்யுரையைக் காவல்துறையினர் தம் நெறியாகக் கொண்டொழுகி மக்கள் நலம்பேண வேண்டுகிறோம்.
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். (திருக்குறள் 546)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் நெறியுரையை அரசு பின்பற்றி, அரசின் ஏவலனாக இல்லாமல் மக்கள் காவலனாக ஒவ்வொரு காவல்துறையினரும் நடந்து கொள்ள ஆவன செயய வேண்டும்.
அல்லல்படுத்தும் அழிவுமுறை ஒழிக!
இன்னல் நீக்கும் இனியமுறை ஓங்குக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை                                                                                       http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png

ஆனி 15, 2045 / சூன் 29, 2014
 

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 83-100: இலக்குவனார் திருவள்ளுவன்

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 83-100: இலக்குவனார் திருவள்ளுவன்



thamizh06
83. தமிழியல் வழக்கினன் றணப்புமிகப் பெருக்கி
- பெருங்கதை: 4. வத்தவ காண்டம்: 17. விரிசிகை வதுவை : 67

84. எடுக்கும் மாக் கதை இன் தமிழ்ச் செய்யுள் ஆய்
நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திட(த்)
- பெரியபுராணம்: பாயிரம் 3    
85. பாட்டு இயல் தமிழ் உரை பயின்ற எல்லையுள்,
கோட்டு உயர் பனிவரைக் குன்றின் உச்சியில்
பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 2. திரு நாட்டுச் சிறப்பு:1

86. நற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம்புகழ் திருநாடு என்றும்
      – பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 2. திரு நாட்டுச் சிறப்பு: 35
87. இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்
அந்தம் இல் புகழ் ஆலால சுந்தரன்
சுந்தரத் திருத் தொண்டத் தொகைத் தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம்
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 4 திருக்கூட்டச் சிறப்பு : 11
     periyapuraanam+cover01
88. ‘மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம் பெற்றனை;
நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண் மேல் நம்மைச்
சொல் தமிழ் பாடுக’ என்றார் தூமறை பாடும் வாயார்.
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 70
89. சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன் தனை ‘இன்னும்
பல் ஆறு உலகினில் நம் புகழ் பாடு’ என்று உறு பரிவில்
நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன்
எல்லா உலகு உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான்.
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம் : 76
90. அந்நிலை ஆரூரன் உணர்ந்து ‘அரு மறையோய்! உன் அடி என்
சென்னியில் வைத்தனை’ என்னத் ‘திசை அறியா வகை செய்தது
என்னுடைய மூப்புக் காண்’ என்று அருள, அதற்கு இசைந்து
தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன்
– பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்5. தடுத்தாட்கொண்ட புராணம்: 86
91. பரம் பொருளைப் பணிந்து தாள் பரவிப் போய்ப் பணிந்தவர்க்கு
வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 91

92. இருக்கோலம் இடும் பெருமான் எதிர் நின்றும் எழுந்து அருள
வெருக் கோள் உற்றது நீங்க ஆரூர் மேல் செல விரும்பிப்
பெருக்கு ஓதம் சூழ் புறவப் பெரும் பதியை வணங்கிப் போய்த்
திருக் கோலக்கா இறைஞ்சிச் செந்தமிழ் மாலைகள் பாடி.
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 114
93. தேன் ஆர்க்கும் மலர்ச் சோலைத் திருப் புன்கூர் நம்பர் பால்
ஆனாப் பேர் அன்பு மிக, அடி பணிந்து தமிழ் பாடி
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 115  

  1. நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார்.
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம் : 125
  95. அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக
முன்பு முறைமை யினால் வணங்கி, முடிவு இலாக் காதல் முதிர ஓங்கி,
நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி, நாயகன் சேவடி எய்தப் பெற்ற
இன்ப வெள்ளத்து இடை மூழ்கி நின்றே, இன்னிசை வண்தமிழ் மாலை பாட.
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 126    

96. மை வளர் கண்டர் அருளினாலே வண்தமிழ் நாவலர் தம் பெருமான்
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 130  

97. பிறந்தது எங்கள் பிரான் மலயத்து இடை,
சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில்,
புறம் பணைத் தடம் பொங்கு அழல் வீசிட
மறம் பயின்றது எங்கோ? தமிழ் மாருதம்!
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 167  
98. தன்னை ஆள் உடைய பிரான் சரண் ஆர விந்த மலர்
சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்துத் திருப் பதிகம்
பன்னு தமிழ்த் தொடை மாலை பல சாத்திப் பரவை எனும்
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 182

99. தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆகத் தமிழ் மாலைச்
செம் பொருளால் திருத் தொண்டத் தொகை ஆன திருப் பதிகம்,
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 202
100. உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த நம்பி
ஆரூரர் திருக் கூட்டத்தின் நடுவு அணைந்தார்;
தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே
எம்பிரான் தமர்கள் திருத் தொண்டு ஏத்தல் உறுகின்றேன்.
-பெரியபுராணம்: 1. திருமலைச் சருக்கம்: 5. தடுத்தாட்கொண்ட புராணம்: 203 
ilakkuvanar_thiruvalluvan+5

Wednesday, June 25, 2014

ஈழத்தமிழர்க்கு அனைத்து உரிமையும் வழங்குக! வேண்டா இரட்டை அளவுகோல்!

ஈழத்தமிழர்க்கு அனைத்து உரிமையும் வழங்குக! வேண்டா இரட்டை அளவுகோல்!

Nanthini01
ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள ஈழத்தமிழர்க்கான சிறப்பு முகாமில் உள்ள நந்தினி என்பவர் 12 ஆம்வகுப்பில் 1170 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவக் கல்விக்கான தகைவுமதிப்பெண் (cut off mark) 197.50 பெற்றுள்ளார். கலந்தாய்விற்கு விண்ணப்பித்தும் இவருக்கு அழைப்பு வரவில்லை. மருத்துவக்கல்விஇயக்கக அதிகாரிகள் ”இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். ‘இலங்கை அகதிகள் முகாமில்’ வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது” என்று தெரிவித்துள்ளனர்.
ஈழத்தமிழர்கள் நம்மிடம் அடைக்கலம் தேடி வந்தவர்கள். அடைக்கலமாக வந்தவர்களை நம் உயிரினும் மேலாகக் காக்க வேண்டும். இதற்கு நாம் சிலப்பதிகாரக் காப்பியத்தில் சான்று காணலாம். கௌந்தியடிகள் இடைச்சியர் தலைவி மாதரி என்பாரிடம் கோவலன், கண்ணகியை அடைக்கலமாக ஒப்படைக்கிறார். கோவலன் உயிர் பறிக்கப்பட்டான் என்று கேள்விப்பட்டவுடன் மாதரி, ”அடைக்கலப் பொருளை இழந்து கெட்டேன்” என அலறி, தீயுள் புகுந்து உயிரை விட்டாள். தமிழ்நெறிக்கு மாறாக நாம், காத்தோம்ப வேண்டிய ஈழத்தமிழர்களைப் படாதபாடு படுத்துகின்றோம்.
1990இல் இலங்கையிலிருந்து வந்து இம்முகாமில் சேர்க்கப்பெற்ற இராசா, அல்லி மலர் ஆகியோர் 1995 இல் திருமணம் செய்துகொண்டனர். அவர்களின் மூன்று மக்களில் ஒருவர்தான் நந்தினி. எனவே, அவர் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்ற முறையில் அனைத்து உரிமைகளும் பெறுவதற்கு உரியவர்.
1959 முதல் கடந்த 55 ஆண்டுகளாக இந்தியாவிற்குள் 150,000 திபேத்தியர்கள் அடைக்கலமாகக் குடிபுகுந்துள்ளனர். அவர்கள் முறையாகத் திரும்பும் வரை இந்தியாவில் எல்லா உதவிகளும் அளிப்பதாக நேரு உறுதியளித்ததற்கிணங்க அவர்களுக்கு எல்லா உதவிகளும் வழங்கப்படுகின்றன. அவர்களின் தலைவர் தலாய்லாமா, நிலப்புற அரசு  ( government in exile) அமைக்க இமாச்சலப் பிரதேசத்தில் இடமும் இயங்க உதவிகளும் அளிக்கப்பட்டுள்ளன.அவர் இங்கிருந்தபடியே Tibetan Parliament in Exile tibet-central-administration03 Tibetan-Government-In-Exile-2 Tibetan-Government-In-Exile-1-நிலப்புறத் திபேத்திய அரசை நடத்துவதற்கு இந்தியா எல்லாவகையிலும் ஒத்துழைப்பு நல்கி வருகிறது. தருமசாலாவில் நிலப்புறத் திபேத் அரசு இயங்கி அரசியல் நடவடிக்கைகளிலும் திபேத் மக்கள் முன்னேற்றத்திற்கான செயல்களிலும் ஈடுபட்டுவருகிறது.
1960இல் கருநாடக அரசாங்கம், 3000காணி (ஏக்கர்) நிலம் அவர்களின் முன்னேற்றத்திற்கு அளித்துள்ளது. இவ்வரசாங்கம் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் மாநிலத்தின் அன்சூர் அருகே உள்ள குருபுரா (Gurupura), கொள்ளேகல் அருகே உள்ள ஒடெரபால்ய (Oderapalya) வடக்குக் கன்னட மாவட்டத்தில் உள்ள முண்டகாடு (Mundgod) பிறபகுதிகளிலும் திபேத்தியர்கள் குடிபுகுந்து வாழ வழிவகைகள் செய்துள்ளன.
பிற மாநிலங்களும் திபேத்தியர் இயல்பான வாழ்வு வாழ உதவி வருகின்றன. இதில் குறிப்பிடத்தகந்தது, திபேத்தியருக்கான நிலப்புற அரசு அமைய உதவி வரும் இமாச்சலப்பிரதேசமாகும். இங்குள்ள பிர்(Bir) என்னும் பகுதியில் திபேத்தியர் குடியிருப்பு அமைத்துத் தந்துள்ளது. அது மட்டுமல்ல திபேத்தியர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவியும் வருகிறது.
இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும் (IGMC, Shimla) இராசேந்திரபிரசாத்து மருத்துவக் கல்லூரியிலும் (Dr.RPGMC, Tanda) ஆண்டுதோறும் திபேத்திய மாணவர் ஒவ்வொருவருக்கு இமாச்சல அரசு இடம் அளிக்கிறது. ஆண்டுதோறும் மாணாக்கர்க்குக் கல்வி உதவியும் குறிப்பாக, 10 மாணாக்கர்க்குத் தொழிற்கல்வியில் படிக்க உதவியும் செய்து வரும் திபேத்தியர் மத்தியப் பணியாட்சி(Central Tibetan Administration) இவ்விருவரின் கல்விக்கும் உதவி வருகிறது.
திசம்பர் 22, 2010 இல் தில்லி உயர்நீதி மன்றம் நம்கயல் தோல்கர் என்பாருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சுக்கும் (Namgyal Dolkar v. Ministry of External Affairs) ஏற்பட்ட வழக்கில் வழங்கிய தீர்ப்பு ஒன்றின்படி, 26.01.1950 இற்குப் பின் இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் – அவரது பெற்றோர் எந்நாட்டவராயினும் – பிறப்பால் இந்தியக் குடிமகனே. எனவே, அதற்கேற்ப முழு உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டாக வேண்டும். 1956 இற்கும் 1987இற்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த 35,000 திபேத்தியர்கள் இதனால் பயனுற்றனர்.
 இமாச்சல அரசு திபேத்தியருக்கு உதவி வருகையில் தமிழக அரசு ஈழத்தமிழர்க்கு எல்லா வகையிலும் உதவ வேண்டுமல்லவா? தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகள் 20, அரசுசார் நிறுவனக் கல்லூரி 1, பல் மருத்துவம், சித்த மருத்துவம் முதலான பிற மருத்துவக் கல்லூரிகள் 7 ஆக 28 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இமாச்சலப்பிரதேச அரசைப் பின்பற்றித் தமிழக அரசு 28 கல்லூரிகளிலும் ஒவ்வோர் இடம் ஈழத்தமிழர்க்கு என ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டில் 22 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசைப் பின்பற்றித் தனியாரும் ஒவ்வோர் ஈழத்தமிழ் மாணாக்கருக்கு இடம் அளிக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.
jayalalitha06
எதிலும் முன்மாதிரியாக இருக்க விரும்பும் தமிழக முதல்வர் இமாச்சலப்பிரதேச அரசைப் பின்பற்றியாவது இவ்வாறு நெறிப்படுத்தலாம் அல்லவா? மேலும், இவ்வாறு ஈழத்தமிழர்க்கு இடம் ஒதுக்குவது தமிழ்நாட்டரசிற்குப் புதியதன்று. தமிழ்நாட்டிலும் 2000 ஆம்ஆண்டுவரை மருத்துவப்படிப்பில் ஈழத்தமிழர்கள் இருபதின்மருக்கு இடம் வழங்கப்பட்டது. இடையில் நிறுத்தப்பட்டு விட்டது. மத்திய அரசுதான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
திபேத் தவிர, வங்காளத் தேசம், ஆப்கானித்தானம், பருமா எனப் பலநாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்துவந்தோர், இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால், இந்திய அரசு இவர்களுக்கு ஓர் அளவுகோல், ஈழத்தமிழர்களுக்கு ஓர் அளவுகோல் எனப்பாகுபாடு காட்டுகிறது.
திபேத்தியர்களுக்கு இலவசக் கல்விக்கான தனிப்பள்ளிகள், இலவச மருத்துவ வசதி, தனிப்பள்ளிகளில் பயில்வோருக்குக் கல்வி உதவித்தொகை வழங்கல் எனப் பல வகையிலும் உதவி வருகிறது. மத்தியத் திபேத்தியப் பள்ளிகள் 28, திபேத்தியச்சிறார் சிற்றூர்ப்பள்ளிகள் 18, திபேத்தியன் காப்பக நிறுவனப்(Tibetan Homes Foundation) பள்ளிகள் 3, சம்போத்தா திபேத்தியன்பள்ளிக் கழகத்தின் பள்ளிகள் 12, பனிஅரிமா நிறுவனப் (Snow Lion Foundation) பள்ளிகள் 12 எனக் கல்வித்துறை 73 திபேத்தியப் பள்ளிகளை நடத்துகிறது. (மழலைப்பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் இக்கணக்கில் அடங்கா.) 2,200 பேர் பணியாற்றும் இப்பள்ளிகளில் ஏறத்தாழ 24,000 மாணாக்கர் பயிலுகின்றனர். திபேத்தியர்கள் மருத்துவம், பொறியியல் படிக்கவும் உதவிவருகிறது.
ஆனால் தமிழ்நாட்டிலோ, அரசும் முறையாக உதவுவதில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தமிழ், தமிழர் நல அமைப்புகள், தனிப்பட்டோர், கலைத்துறையினர் என யாரும் ஈழத்தமிழர்களுக்கான சிறப்பு முகாம்களில் உதவுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் பெறக்கூடிய உதவிகள் கிடைக்காமல் போவதும் இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
 eezham-camps04 eezham-camps03 eezham-camps01 eezham-agitation02
வறுமை போன்ற எக்காரணங்களாலும் பிறநாடு புகாத, பதி எழு அறியாப் பண்பின் பழங்குடிச் சிறப்புடைய மக்கள் தமிழ் மக்கள். அதே நேரம், பிற நாட்டார் வருவதால், அரசிற்கு ஏற்படும் சுமையில் பங்கேற்பவர்கள் தமிழ் மக்கள்.
   பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
   இறையொருங்கு நேர்வது நாடு.(குறள் 733.) என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
வந்தாரை வரவேற்கும் தமிழ் மக்கள், தங்கள் சொந்த இனத்தவரை வரவேற்காச் சூழலை அரசு உருவாக்கலாமா?
மத்திய அரசு புலம் பெயர் மக்களிடையே தமிழர்க்கென ஓர் அளவு கோல் கொண்டு இரட்டை அளவுகோலைப்பயன்படுத்துகிறது. அதே நேரம், தமிழக அரசும் ஈழத்தமிழர்களிடையே இரட்டை அளவுகோலைப் பயன்படுத்தலாமா?.
தமிழ்ஈழ ஏற்பிற்கும் தமிழினப்படுகொலையாளிகள் தண்டிக்கப் படுவதற்கும் தமிழ் ஈழம் மலர்வதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கும் ஐ.நா.வை வலியுறுத்துவதற்கும் சட்டமன்றத்தில் தீர்மானங்கள்,   முதலான பல்வேறு முறைகளில் தமிழக முதல்வர் செல்வி செயலலிதா முனைப்பாக வலியுறுத்தி வருகிறார். இதனால் உலகத் தமிழர் உள்ளங்களிலும் மனித நேயர் மனங்களிலும் இடம் பெற்றுள்ளார்.
ஆனால், அவ்வாறு அமையும் தமிழ் ஈழத்தில் புலம் பெயர்ந்து இங்கு வந்த ஈழத்தமிழர்கள் நலமாக, வளமாக, நன்கு பயில்பவர்களாக, முறையாகக் கற்றவர்களாக, தொழிலில் தேர்ச்சி பெற்றவர்களாக மகிழ்ச்சியுடன் திரும்ப வேண்டுமல்லவா?
ஈழத் தமிழர்களை முகாம் என்ற   பெயரிலான கொட்டடியில் அடைத்துவிட்டு, அவர்களின் நலன்நாடித் தீர்மானங்கள் இயற்றுவதில் என்ன பயன்? புலம் பெயர்ந்து குடிபுகுநர் எங்கும் செல்வதற்கும் படிப்பதற்கும் உள்ள உரிமை மறுக்கப்பட்டு அவர்களின் வளர்ச்சியைக் குன்றச் செய்யலாமா?
கொலைகாரர்கள், கொலைகாரர்களை நடத்துவதுபோல், கெடுபிடி நடத்தி அவர்களைத் துன்புறுத்தலாமா?
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து மனம் கலங்கி அவர்களை அல்லல்பட வைக்கலாமா?
இருகரம் நீட்டி வரவேற்கும் என நம்பிக்கையுடன் வந்த அவர்களை இன்னலுக்கு ஆளாக்கலாமா?
வாணாள் சிறைத்தண்டனைவாசிகள்போல் அவர்களை நடத்தி வாட வைக்கலாமா?
வாழ்விழந்து வந்தவர்களின் வாழ்க்கையைப் பறிக்கலாமா?

எனவே, தமிழக அரசு இரட்டை அளவுகோலைக் கை விட வேண்டும்.
புலம்பெயர்ந்து குடி புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சியான அமைதியான வாழ்வு வாழ்வதற்குரிய எல்லா உதவிகளையும் ஆற்ற வேண்டும்.
ஈழத்தமிழர் கல்வி முன்னேற்ற வாரியம் அமைத்து அதன் மூலம் அனைத்து ஈழத்தமிழர்களும் எச்சிக்கலின்றியும் அனைத்துநிலைக் கல்வியிலும் சேரவும் தடங்கலின்றிப் படிக்கவும் உதவ வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழ்ஈழ நிலப்புற அரசு அமைய ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வரசு ஈழத்தமிழர்களுக்கு ஆற்றும் உதவிகளைத் தடுக்கக் கூடாது.
தொண்டார்வ நிறுவனங்கள், தனிப்பட்ட அமைப்புகள், தனிப்பட்டோர் ஒல்லும் வகை உதவிட முன்வருவதை ஏற்க வேண்டும்.
ஈழத்தமிழர்கள் தாயகம் திரும்பும் பொழுது நம்மை மதித்து மகிழ்ந்து செல்லும் வகையில் ஈழத்தமிழர்களை நம் குடிமக்களுக்கு இணையாக நடத்த வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் முதற்படியாக செல்வி நந்தினிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் தந்து படிப்பதற்கு எல்லா உதவிகளும் செய்ய வேண்டும்.
மத்திய அரசைத் துணிந்து தட்டிக்கேட்கும் உங்களை விட்டால் வேறு யார் இவர்களைக்காக்கப் போகிறார்கள் என்பதை நினைந்து
ஈழத்தமிழர்களுக்கு நன்றே செய்க! இன்றே செய்க! இன்னே செய்க!

நம்பிக்கையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/05/eezham-with-prapakaran011-395x560.jpg
இதழுரை
ஆனி 8, 2045 / சூன் 22, 2014
http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png


Followers

Blog Archive